Tuesday, October 19, 2010

ஈடுசெய்ய முடியாதவை எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன


தட்புருடமுகம் நோக்கி கிழக்கிருந்து வீசும்
குளிர்காற்று, வடக்கே வாமதேவம்,
கோரைப்பல் அகோரமுகம் தென்திசையில்,
கழுத்திலோர் கபால மாலை
சிசுவின் பிரேத குண்டலம் காதிலாட
ஒற்றைக் கால் தூக்கி
சேமிப்பின் களமுடைத்து
வார்த்தைகளைப் பிளந்தெறியும்
உன் நீள்குறியின் கூர்மை
ஏன் இன்னும் அதிர்கிறது.

மூளியான வார்த்தைகளின்
முகம் தேடி,
செங்கோட்டி யாழ் சுழிப்பில்
இசை பெருக்கிச் செல்கிறேன்

பாறைகளின் சிறு வெடிப்பில்
கள்ளிச் செடி முட்பரப்பில்
சிக்கியெழும் வார்த்தைகளின்
ஓலத்தை உறிஞ்சி
வீங்கி வெடிக்கட்டுமுன் தனங்கள்

துளிர்த்தெழும் வார்த்தைகளின்
சிரசுகளைத் திருகி ஒன்றாக்கி
ஓணான் கொடி கட்டி
யோனிக்குள் பதுக்கும்
நீ
மும்முக அரக்கிதானே

வன்மம் உள்ளிருத்திய உன் புன்னகை
நிச்சயம் தீனியாகாதென் குறிகளுக்கெனில்
நான் தேடிச்செல்லும்
ஒற்றைச் சொல்லுக்கீடாகுமா
உன் யோனியின் ஆழம்.

No comments:

Post a Comment