Wednesday, December 1, 2010

நூலக வார விழா


கடந்த 22.11.2010 அன்று எங்கள் ஊர் கிளை நூலகத்தில் நூலக வாரவிழா நடைபெற்றது. விழாவில் புத்தக கண்காட்சியை நண்பரும் எழுத்தாளருமான கவிஞர் கண்டராதித்தன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமதி லதா அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தேவசேனாபதி,அண்ணாமலை,எத்திராஜ் மற்றும் குப்புசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர் கண்டராதித்தன் நூலகத்தின் பயன் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பத்திரிக்கை முகவர் திரு.சேகர், திருமதி. இராசாமணி அம்மாள், ஆசிரியர் அரங்கநாதன், உரக்கடை ஆறுமுகம், ஆசிரியர் எத்திராஜ், கோ.குப்புசாமி ஆகிய புரவலர்கட்கு பட்டயம் வழங்கி கௌரவிக்கப் பட்டது.

விழாவினை வாசகர் வட்டத்தலைவர் திரு.கணபதி ஏற்பாடு செய்திருந்தார். விழா இறுதியில் நூலகர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

குறிப்பு:
தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி. பாலசுப்ரமணியன், தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் திரு க.பொன்முடி ஆகியோர் இந்நூலகத்தின் முன்னாள் வாசகர்களே.

மேலும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இன்றைய பதிவாளர் பேரசிரியர் அ. கார்த்திகேயன் அவர்களின் இளம் பிராயம் முழுக்க இந்நூலகத்தில் தான் கழிந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கவிஞர் கண்டராதித்தனையும் காலபைரவனாகிய என்னையும் தமிழ் படைப்புலகிற்கு கொடுத்து ஒருதாயைப்போல சந்தோஷத்தை விரிவு செய்து கொண்டிருக்கிறது இந்நூலகம்.

ஆர்மீனியச் சிறுகதைகள் , அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் மற்றும் புதுமைப்பித்தன் கதைகள் ஆகிய நூல்களை எடுத்து பொழுது போவது தெரியாமல் நூலகமே கதி என்று கிடந்து படித்த நாட்கள் இப்போதும் தன் பச்சயத்தை இழக்காமல் அப்படியே இருக்கின்றன என் நினைவில்.