Sunday, August 29, 2010

வேட்டை


மழைவிட்ட பின் அவர்கள், நெற்றி விளக்கு, சில்லாக்கோல், கைத் தடிகளுடன் புறப்பட்டனர். நன்கு ஊறியிருந்த தரை சொத சொதவென்று இருந்தது. தெருவில் மழைநீர் கிழக்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் கவனமாக பாதங்களை வைத்தனர். அப்படி இருந்தும் சேற்றுக்குள் கால்கள் உள்வாங்கின. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. எங்கும் இருள் வியாபித்திருந்தது. இடது தோல்பட்டையில் மாட்டியிருந்த பேட்டரியை கழற்றி வலது புறம் மாட்டியவாறே கணேசன், ராமசாமியைப் பார்த்து கேட்டான். “எந்த பக்கமா போலாம்?” வானத்தை அன்னாந்து பார்த்தபடி, “கோட்டி கல்லுக்கா போலாம்” என்றான் ராமசாமி. வெள்ளக்குளத் தெருவழியாக நடந்து, அவர்கள் ஐயர் வீட்டு சந்தை அடைந்தனர். பள்ளிகூடத்தில் நின்றிருந்த காட்டுவா மரம் இருட்டில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் ஓடிக்கொண்டிருந்த சாக்கடை தெருவை அடைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் மூக்கை அழுத்தி பிடித்துக்கொண்டே தெருவோரமாக நடந்தனர். கணேசனைப் பார்த்து, “எத்தினி பஞ்சாயத்து பிரசிரண்டு வந்தாலும் இத சரிபண்ண மாட்டாங்க” என்று அலுத்துக் கொண்டே நாப்பாளையத் தெருவழியாக நடந்து திருக்கோவிலூர் சாலையை பிடித்தனர். சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து கிடந்தன. மழைநீர் ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆண்டா செட்டிகுளத்தின் கரையில் இருந்த இலுப்பை மரத்திலிருந்து வந்த பூவின் வாசனை எங்கும் பரவியிருந்தது. இலுப்பை மரத்தைப் பார்த்ததும் ராமசாமிக்கு கோனார் வீட்டு தில்லைக்கோவிந்தனின் ஞாபகம் வந்தது. கொஞ்ச நேரம் இலுப்பை மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், ராமசாமியை சீண்டி, “தில்லைகோவிந்தன் மட்டும் உசுரோட இருந்திருந்தா வேட்டைக்கு நம்ம கூட வந்திருப்பாண்டா” என்று சொன்னவுடன், இவன் ஆண்டா செட்டி குளத்தையும், இலுப்பை மரத்தையும் மீண்டும் திரும்பி பார்த்தான். இலுப்பை மரத்தில் ஏறித்தான் அவர்கள் ஆண்டா செட்டிகுளத்திற்குள் குதிப்பார்கள். ஓரி பிடிப்பதில் தில்லைகோவிந்தன் கெட்டிக்காரன் இலுப்பை மரத்திலிருந்து குதித்து நீருக்குள்ளாகவே நீந்தி இந்த கரையிலிருந்து அந்த கரையை அடையும் அவனது சித்திரம் இவன் மனதில் மெல்ல விரியத் தொடங்கியது.
“ஏய் சத்தம் போடாதிங்க” என்று தில்லைகோவிந்தன் எச்சரித்தவுடன் கணேசனும் ராமசாமியும் அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையை உற்றுப்பார்த்தனர். நெற்றி விளக்கின் வெளிச்சம் பட, ஓடாமல் நின்று கொண்டிருந்தன இரண்டு முயல்கள்.அவற்றின் கண்களில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது நெற்றி விளக்கின் வெளிச்சம். வளர்த்தியான முயல்கள். தில்லைகோவிந்தன் வெளிச்சத்தை தொடர்ந்து பாய்ச்சிக் கொண்டே, “ராமசாமி நீ அடிடா” என்று சொன்னான். கணேசன் சுற்றும் முற்றும் பார்த்தான். நீண்ட தொலைவிற்கு புல்வெளி பரந்து கிடந்தது. அவை எங்கும் தப்பியோட முடியாதென மனதுக்குள்ளாகவே எண்ணிக்கொண்டு, “ம் அடி” என்று மெதுவாக ராமசாமியிடம் சொன்னான். ராமசாமி மெல்ல நெருங்கி, கையில் வைத்திருந்த தடியை உயர்த்தி தன் வலு கொண்ட மட்டும் ஓங்கி அடித்தான். ஒன்று மட்டும் அடிபட்டு சுருண்டு விழுந்தது. இன்னொன்று வெளிச்சத்தை நோக்கி ஓடியது. தயாராக இருந்த கணேசன் தன் தடியால் அதை குறிபார்த்து அடித்தான். அதுவும் துள்ளிக் குதித்தபடி வீழ்ந்தது. கீழே குனிந்து பார்த்தான். அதுவும் இறந்து விட்டிருந்தது. மூவரும் தடிகளை கீழே வைத்து விட்டு அருகிலிருந்த சிறிய பாறாங்கல்லின் மீது அமர்ந்தனர். முயலைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்த ராமசாமியைப் பார்த்து, “பீடி இருந்தா குடுடா” என்று கையை நீட்டினான் தில்லைகோவிந்தன். “எனக்கும்டா” என்று கணேசனும் கை நீட்டினான். ராமசாமி தன் கால்சட்டை பையில் வைத்திருந்த பீடிக்கட்டை எடுத்து ஆளுக்கொன்று உருவிக்கொடுத்து, தானும் ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். மூவரும் புகையை ஆழ்ந்து இழுத்து விட்டனர். வளையம் வளையமாக புகை மேலெழுவதை வெளிச்சத்தில் பார்த்தவாரே ராமசாமி, “எப்ப வேட்டைக்கி போனலும் அந்த சானியாமுட்டு ஆளு மட்டும், பெரிய பெரிய உருப்படியா அடிச்சி எடுத்துட்டு வர்றாருடா. எப்படி அவருக்கு மட்டும் சிக்குதுனு தெரியலயே” என்று ஆதங்கத்தோடு சொன்னான். அதற்கு தில்லைக்கோவிந்தன் புகையை வெளிவிட்டபடி, “உனக்கு அடுத்தவங்கள பாத்து பொறாமைபடறதே பொழப்பா போச்சு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கணேசன், ராமசாமியைப் பார்த்து “ரெண்டு மாசத்துக்கு முந்திகூட ஒரு பன்னிய அடிச்சி துட்டு பாத்தயே பத்தலையா” என்று கேட்டான். ராமசாமி அமைதியாக முயல்களைத் தூக்கி எவ்வளவு எடை தேரும் என்று கணித்துக் கொண்டிருந்தான். வீரங்கிபுரத்து ஏரிக்கரை அரசமரத்திலிருந்து காற்று சில்லென்று வீசியது. அவர்கள் தடிகளை எடுத்துக் கொண்டு, பச்சபுள்ளா குளம் வழியாக திருவண்ணாமலை சாலையில் ஏறினார்கள். பச்சபுள்ளா குளத்தில் பாதியளவு மழைநீர் தேங்கியிருந்தது. சாலை நெடுக நின்று கொண்டிருந்த புளிய மரங்களை இருட்டில் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதாக உணர்ந்தான் ராமசாமி. சில்வண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தொடர்மழையால் முட்டிச்செடியும் கொஞ்சிச் செடியும் பூக்க ஆரம்பித்திருந்தன. கொஞ்சிப் பூவின் வாசனை தில்லைக்கோவிந்தனுக்குள் ஒரு வித இனிப்பு பலகாரத்தின் சுவையை ஏற்படுத்திய போது அவன் ராமசாமியைப் பார்த்து, “செங்குறிச்சாமுட்டு பானு ஓட்டேரி தெரு சாமிக்கண்ணு கூட ஓடிடிச்சாமே? ” என்று கேட்டான். “அந்த கதயை ஏன் கேக்கற இத்தணைக்கும் நானும் சாமிக்கண்ணும் தான் அன்னிக்கு ஈசை புடிச்சிட்டு வந்து பாளத்தாமுட்டு திண்னையில படுத்தம். எப்பதான் போனாங்க. எப்படிதான் போனாங்கன்னு தெரியல. காலையில எழுந்தா ஊரே களேபரமா கெடக்கு. என்ன புடிச்சி உண்மைய சொல்லுடான்னு கேட்டா, நான் என்னத்த சொல்றது?” என்று அலுத்துக்கொண்டே சொன்ன ராமசாமி. கையில் பிடித்திருந்த முயல்களை கணேசனிடம் கொடுத்தான்.
“நீ தான சாமிக்கண்ணுகூட கடைசி வரைக்கும் இருந்த, அப்புறம் உனக்கு தெரியலனா எப்படி?” என்று மறுபடியும் கேட்டான் தில்லைக்கோவிந்தன். அதை ஆமோதிப்பது போன்று, “இவனுக்கு எல்லாம் தெரியும். திருடன் தெரியாத மாதிரி நடிக்கிறான்” என்றான் கணேசன். “அட ஏன்டா நீங்களே நம்ப மாட்றீங்க” என்று சொல்லி, சிறிது நேரம் மௌனமாக இருந்தான். சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் காய்ந்து தொங்கிய பனை ஓலை காற்றின் போக்கில் ஆடிக்கொண்டிருந்தது. சனி மூலையில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது. ஈரமேறி இருந்தது காற்று. அதன் சில்லிப்பு ராமசாமிக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த அவன், அவர்களிடம் மறுபடியும் சொல்லத் தொடங்கினான். “ராத்திரி பத்து பத்தரை இருக்கும். எங்க வூட்டான்ட வந்து சாமிக்கண்ணு கூட்டான். ஒரு கையில பெட்ரமாக்ஸ் வௌக்கும் இன்னொரு கையில தட்டுக்கூடையும் வச்சிகினுருந்தான். அப்பதான் மழை வுட்டிருந்தது. இப்பபோனா ஈச நெறைய கெடைக்கும்னு சொன்னான். அவன் பேச்ச கேட்டு மருந்து பொடியும் தட்டுக்கூடையும் எடுத்துக்குணு கல்லாங்குத்து வழியால நாங்க வாசியாத்தா கோயில் பக்கம் போனம். ஏரிக்கரை ஓரமா ரெண்டு மூனு புத்தும். இலுப்பை மரத்துங் கீழ ஒரு பெரிய புத்தும் இருந்திச்சி. பெரிய புத்த அவன் புடிச்சிகினான். புத்த சுத்தி சீர் பன்னி, பக்கத்துல பள்ளம் போட்டு பெட்ரமாக்ஸ் வௌக்க பக்கத்துல வச்சம்” என்று கூறி செருமிக்கொண்டான். தில்லைக் கோவிந்தன் தோலில் மாட்டிக் கொண்டிருந்த பேட்டரியை சரி செய்து கொண்டான். கணேசன் ராமசாமியைப் பார்த்து “இன்னும் மெயின் பாயிண்ட்டுக்கே வரலேயே” என்று எதையோ எதிர்ப்பார்ப்பவன் போலக் கேட்டான். சாலையோரத்து மரத்திலிருந்து மழைத் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக் கொண்டு ராமசாமி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். “கொண்டு போயிருந்த பையில இருந்த மருந்த எடுத்து புத்து கண்ணபாத்து ஊதனோம். அவ்ளோதான். எங்க தான் இருந்திச்சோ அவ்ளோ ஈசைங்க. வந்து தொபதொபனு அவனோட பள்ளத்துல விழ ஆரம்பிச்சிது. நாங்க ஒரு வெப்பால மரத்துக்கு கீழ போயி, பனமட்டய எடுத்து போட்டு உட்கார்ந்துட்டோம். அவன் இடுப்பு மடிப்புல வச்சிருந்த ஹான்சை எடுத்து வாயில் போட்டுகினு எங்கிட்ட கேட்டான். ” என்று நிறுத்தி பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தை பார்த்தான். ஆவல் தாங்காமல் கணேசன் “என்ன கேட்டான்?” என்றான். “சொல்லிக்கினு தான வரான், அதுக்குள்ள ஏன் பறக்கிற” என்று கணேசனைப் பார்த்து தில்லைக்கோவிந்தன் கேட்டான். செட்டியார் வீட்டு மோட்டார் கொட்டகையில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வயலுக்கு யாராவது நீர் பாய்ச்சுவார்கள் என்று மனதில எண்ணிக்கொண்டே அவர்களிடம் மீண்டும் கூறத் தொடங்கினான். குளுமையான காற்று வீசிக்கொண்டிருந்தது. “பான பத்தி நீ என்ன நெனக்கிற? என்றான். நா எந்த பானுன்னு கேட்டேன். ஆமாண்டா செங்குறிச்சாமூட்டு பானுன்னாதான் ஒனக்கு தெரியுமான்னு கேட்டான். அவளுக்கென்ன சூப்பரான பிகர் ஆச்சேன்னு சொன்னேன். அவன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே, ஆனா அத அவன் வெளிக்காட்டிகல. ஒனக்கு அவள ரொம்ப புடிக்குமான்னு வேற கேட்டான். ஏன்டா இதலாம் கேக்கறேன்னு கேக்கனும்னு தோனிச்சி. ஆனா கேக்கல. அவங்கிட்ட அவள ரொம்ப புடிக்கும்னு மட்டும் சொன்னேன். மறுபடி மறுபடி அவன் எங்கிட்ட கேள்வி மேலகேள்வி கேட்டுட்டே இருந்தான். அவகிட்ட ஒனக்கு எதுலாம் புடிக்கும்னு கேட்டான். அவ கலரு புடிக்கும் என்று சொல்லிக்கினு இருக்கும்போதே என் மனதில் கெம்பு கலர் தாவணி கட்டிக்கினு காதுல ஜிமிக்கியும், ஒத்த ஜடையும் போட்டுகினு அவ டியூஷன் வாதியார் கூட ஒன்னா கட்டல்ல கட்டிபுடிச்சிகினு படுத்திருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்திச்சி. ஆனா அதலாம் அவன்கிட்ட சொல்லல. அவன் எதுவும் பேசாமல் என் கண்களையே பார்த்துகினு இருந்தான். நான் அவனிடம் இதலாம் ஏங்கேக்கிற என்றேன். அவன் சும்மாதான்னு சொன்னான். அவள ஒனக்கு புடிக்குமானு நா திரும்ப கேக்க அவன் லேசா சிரிச்சி தலைய மட்டும் ஆட்னான். அப்ப ஜொலிச்ச அவனுடைய கண்கள் இப்பவும் எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு” என்று நிறுத்தி எச்சியை கூட்டி விழுங்கினான். முக்கியமான கட்டத்தில் அவன் நிறுத்தி விட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். முயலை தில்லை கோவிந்தனிடம் கொடுத்துவிட்டு, ராமசாமியிடம் ஒரு பீடியை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு, “வேற எதுவும் சாமிக்கண்ணு சொல்லலையா?” என்றான். லேசாக தூற ஆரம்பித்திருந்தது. சில்லு வண்டுகளின் சத்தம் அதிகரித்திருப்பதாக உணர்ந்த ராமசாமி அவர்களிடம் மீண்டும் சொன்னான். “வேற எதுவும் சொல்லலை. எனக்கு மட்டும் பானு ஞாபகமாவே இருந்துச்சி. அப்புறம் எழுந்து புத்துகிட்ட போனம். என் குழியில ஈசல் கொறச்சலா தான் விழுந்திருந்திச்சி. அவனுக்கு மூணு மரக்கா கிட்ட கெடைச்சிருக்கும். எனக்கு ஒருமாதிரியா இருந்திஞ்சி. இதுக்காடா இம்மா நேரம் காத்து கெடந்தோம்னு தோனிச்சி. சாமிக்கண்ணு எம் புட்டுகூடையை கொடுன்னு கேட்டான். எனக்கு ஏன்னு புரியல. நானும் கொடுத்தேன். அவன் குழியில கெடந்த மொத்த ஈசையையும் எங்கூடையில போட்டு நீ எடுத்துக்குனு போன்னு சொன்னான். உனக்குடான்னு கேட்டேன். நாளக்கி கெடைக்கறத நா எடுத்துக்குறேனு சொன்னான். அப்பறம் பெட்ரமாக்ஸ் விளக்க எடுத்துக்குனு வூட்டுக்கு வந்து ஈசையை வச்சிட்டு பாளத்தாமுட்டு தின்னையில போயி படுத்தோம். தூங்கரவரைக்கும் அவள பத்தி தொனதொனன்னு எங்கிட்ட கேட்டுகுனே இருந்தான். எப்ப தூங்கனமுன்னே தெரியல” என்று கூறிவிட்டு தில்லைக்கோவிந்தனிடம் “நான் செத்த நேரம் தூக்கியாரட்டா?” என்று கேட்டான். “நா கூட எதோ பலான பலான கதனு நெனச்சன் கடைசில சப்னு ஆயிடுச்சி” என்று கணேசன் அலுத்துக் கொண்டான்.அவர்கள் மாந்தோப்பு கொல்லை வழியாக ஊருக்குள் செல்லும் வண்டி பாட்டையில் இறங்கினர். செம்மண் பாதை மழை ஈரத்தினால் சொத சொதவென்றிருந்தது. மாந்தோப்பு கழனி முழுக்க வெறும் கரம்பாகவே இருந்தது.
மாந்தோப்பு கழனியின் தெற்கு பக்கமிருந்த சப்பாத்தி புதரிலிருந்து எதுவோ அவர்களைப் பார்த்தவுடன் வெளியில் ஓடிவந்தது. அவர்கள் சட்டென்று சுதாரித்துக்கொண்டு நெற்றி விளக்கை அதன் மீது பாய்ச்சினர். எதுவும் அவர்களுக்கு தட்டுபடவில்லை. தில்லைகோவிந்தன் கூர்ந்து பார்த்தான். “கண்டிப்பா எதுவோ, அங்கருந்து ஓடியாந்திச்சி” என்று அவர்களிடம் கணேசன் சொன்னான். மூவரும் அங்குலம் அங்குலமாகத் தேடினர். எதுவும் தென்படவில்லை. “பாத்துகுனு இருக்கும்போதே எங்கடா போயிருக்கும்?” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டே அருகில் கிடந்த சிறு பந்து போன்ற கல்மீது தில்லைகோவிந்தன் தன் காலை வைத்தான். பாதம் பட்ட உடன் கல் நகர்வது போன்று உணர்ந்தவன், காலை எடுத்துவிட்டு வெளிச்சத்தை அக்கல்லின்மீது அடித்தான். அதில் சிறு அசைவு தென்பட, கீழே குனிந்து கையில் வைத்திருந்த கைத்தடியால் சீண்டியபடியே அவர்களைப் பார்த்து, “பாத்திங்கலாடா, நம்ம கிட்டயே இது வேலைய காட்டுது” என்று சொல்லி அதைப் புறட்டி போட்டான். அவர்களும் அவனருகே வந்து குனிந்து அதைப்பார்த்தனர். “என்னன்னு தெரியுதா?” என்று தில்லைகோவிந்தன் ராமசாமியைப் பார்த்து கேட்க, அவன் “நலுங்கு” என்று மெல்லிய குரலில் பதில் சொன்னான். அதைப் பார்ப்பதற்கு பனை மரத்தின் மேற்பரப்பை போல சொரசொரப்பாக இருந்தது. வெளிச்சத்தை கண்டதும் பந்துபோல அது சுருட்டிக்கொள்வதை இவர்கள் சிறிது நேரம் ரசித்தபடி இருந்தனர். சனிமூலையில் மேகம் திரளத் தொடங்கியது. “மீண்டும் மழை வரும்போல இருக்குடா” என்று நலுங்கைப் பார்த்துக் கொண்டே கணேசன் அவர்களிடம் கூறினான். தில்லைகோவிந்தன் அன்னாந்து வானத்தைப் பார்த்த பின் அவர்களிடம் கேட்டான். “இத என்ன பன்றது?” என்று அவன் கேட்டு முடிக்கவும்,“இத இங்கயே உட்டுடலாம்டா. வெளியில தெரிஞ்சா பிரச்சனையாயிடும்” என்று கணேசன் சொன்னான். தில்லைக்கோவிந்தனிடமிருந்து முயல்களை வாங்கியபடியே, “கெடைக்காத சரக்கு கெடச்சிகிது. அதபோயி இங்கயே உட்டு வான்னு சொல்றயே” என்று கணேசனைப் பார்த்து சொன்னான். அதற்கு “அப்ப என்ன பன்லாம்னு சொல்ற?” என்று அவனைப் பார்த்து தில்லைக்கோவிந்தன் கேட்டான். காற்றில் மாமரங்கள் சலசலத்தன. சில்லுவண்டுகளின் சத்தம் ஓய்ந்திருந்தது. ராமசாமி ஒரு கையில் முயலை வைத்துக்கொண்டு, ஒரு கையால் பீடியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கணேசனைப் பார்த்து, “கொஞ்சம் பத்த வைடா” என்றான். கணேசனும் பற்றவைத்துக்கொண்டே “நேரமாவுது சட்னு என்ன பன்றதுன்னு யோசிங்க” என்றான். “இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? கறியாக்கிட வேண்டியது தான்” என்றான். தில்லை கோவிந்தன் ராமசாமியைப் பார்த்து, “இப்ப ஆவுர காரியமாடா இது. சீக்கிறத்துல இத சாக அடிக்க முடியாதே” என்றான். “உன்னால முடியாது தான். என்னால முடியாதுனு நா சொன்னனா” என்று சொல்லி கணேசனிடம் முயல்களை கொடுத்துவிட்டு, கைத்தடியால் அதை புரட்டிப் போட்டு தன் வலு கொண்டே மட்டும் ஓங்கி இரண்டு மூன்று தடவை அடித்தான். அவர்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே குனிந்து அதைப்புரட்டிப் பார்த்துவிட்டு “அதுங்கதை குளோஸ்” என்று சந்தோஷத்தோடு சொல்லி, “சரி சட்டுபுட்டுனு ஆவ வேண்டியத பாருங்க” என்று பக்கத்தில் கிடந்த துரிஞ்சி மிளாரை எடுத்து மடக்மடக்கென ஒடித்தான். தில்லைக்கோவிந்தன் விளக்கை நாளா திசையிலும் அடித்தான். அவனுக்கு வலது பக்கம் சப்பாத்தி கள்ளி காய்ந்து கிடந்தது. அதை எடுத்து வந்து அந்த மிளாரின் மீது போட்டு நெருப்பை பற்றவைத்தான். கையில் முயலை வைத்தபடி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். தவளைச் சத்தம் சட்டென அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீச, “டேய் மழவர மாதிரி இருக்கு சீக்கிரம்” என்று அவர்களை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான் கணேசன். சப்பாத்தி கள்ளியும் துரிஞ்சி மிளாரும் நன்கு கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. ராமசாமி நலுங்கைத் தூக்கி அதில் போட்டு, கையில் வைத்திருந்த தடியால் இப்படியும் அப்படியுமாக அதைத் திரும்பி திருப்பி நெருப்பில் வாட்டினான். “டேய் தீஞ்சிட போவுது போதும்” என்று தில்லைக்கோவிந்தன் சொன்னதும் அவன் நெருப்பிலிருந்து அதை எடுத்து தரையில் போட்டான். கணேசனுக்கு கால் வலிக்கத் தொடங்கியது. அவன் தரையில் அமர்ந்து கொண்டான். அவனைப் பார்த்து, “நல்லா சப்ளாங்கோல் போட்டு உக்காறதாண்டா நீ லாயிக்கி” என்று கிண்டலடித்தான் ராமசாமி. பின் தரையில் கிடந்த நலுங்கைத் தொட்டுப்பார்த்தான். சூடு குறைந்திருந்தது. மெல்ல அதன் மீதிருந்த ஓடுகளை பெயர்த்தெடுத்தான். அவை சுலபமாக வந்தன வெந்த கறியின் வாடை அவர்களின் மூக்கை துளைத்தது. கணேசனும் அருகில் வந்து பார்த்தான். ஒவ்வொரு ஓடுகளாக அகற்றிய பின் கணேசனைப் பார்த்து, “அந்த வரப்புல இருக்கிற தேக்கமரத்தில இருந்து கொஞ்சம் இலைங்கள பறிச்சிட்டு வாயேன்” என்று கையைக் காட்டிச் சொன்னான். அங்கு இரண்டு மூன்று தேக்கு மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. லேசாகத் தூறத் தொடங்கியது. அவன் இலை பறித்துக் கொண்டு சடுதியில் திரும்பினான். ஓடுகள் அகற்றப்பட்ட நலுங்கை மூன்று பாகமாக்கி மூன்று இலைகளிலும் வைத்து “எடுத்துக்குங்க” என்று சொன்னான் ராமசாமி. இலையில் இருந்ததை முகர்ந்து பார்த்த தில்லைக்கோவிந்தன் “எனக்கு இது மட்டும் போதும்டா. நீங்க ஆளுக்கொரு மொசல எடுத்துக்குங்க” என்றான். அதற்கு கணேசன் ராமசாமியைப் பார்த்து, “அப்ப நாளக்கி உங்காட்ல மழைதான். ஊட்ல வாங்கியாந்து வச்சிகினு சுதி கொறைய கொறைய ஊத்திகினு இறுப்ப?” என்று சொன்னான். தில்லைக்கோவிந்தன், கணேசனின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான். “இன்னாத்துகுடா இவன் இப்படி உழுந்து உழுந்து சிரிக்கறான்?” என்று தில்லைக்கோவிந்தைக் காட்டி கணேசனிடம் கேட்டான். வேகமாகத் தூற ஆரம்பித்தது. அவர்கள் நடையை துரிதப்படுத்தினர். பள்ளிக் கூடத்து முகுட்டை அடைந்ததும் தில்லைக்கோவிந்தன் வெள்ளக்குளத் தெருப்பக்கம் திரும்பி நடந்தான். அவர்கள் இருவரும் ராமலிங்கசாமி மடம் வழியாக ஓட்டேரி தெருவுக்குள் நுழைந்தனர்.மழை வலுத்தது. தவளைச் சத்தம் நாலா திசையிலும் கேட்டது. தில்லைக்கோவிந்தன் வீட்டிற்கு வந்து படலை திறக்க கையை தூக்கினான். படல் திறந்தே கிடந்தது. எப்போதும் சாத்தியே இருக்கும் படல் ஏன் திறந்து கிடக்கிறது என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். மழை பெய்து கொண்டிருந்ததால் சாத்த மறந்து அவள் தூங்கி இருக்கலாம் என்று யோசித்த படியே நடந்தான். சொத சொதவென்றிருந்த தரையில் பாதங்கள் புதைந்தன. கூரையில் இருந்து மழைநீர் ஒழுகிக் கொண்டிருந்தது. மாட்டு கொட்டகையில் மாடுகள் கால்களை தரையில் உதைத்துக்கொள்ளும் சத்தம் கேட்டது. கூரையில் இருந்து ஒழுகும் மழை நீரில் நணையாமல் சட்டென்று குனிந்து கையில் வைத்திருந்த கறியை திண்ணையில் வைத்தபோது அருகில் யாரோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கூர்ந்து கேட்டான். வீட்டினுள் இருந்து தான் குரல் வந்தது. இந்நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று யோசித்தபடியே மெல்ல நடந்த சாவி துவாரத்தின் வழியாகப் பார்த்தான். வேறொருவனுடன் தன் மனைவி அம்மனமாய் படுத்திருப்பதை பார்த்தவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. நா வரண்டு உடல் முழுக்க நடுக்கம் பரவியது. அவன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். வெளியே மழை அமைதியாக பெய்து கொண்டிருந்தது. சற்று நேரம் அடங்கியிருந்த பேச்சொலி மீண்டும் கேட்கத் தொடங்கியது. என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அவனுக்கு கேட்கத்தோன்றியது. “சரி நா கௌம்பட்டா” என்று ஆண் குரல் கேட்டது. யாருடைய குரல் என்று அவன் ஆழ்ந்து யோசித்தான். வண்டிகாரமுட்டு தொப்புளான் குரல்தான் அது என்று தெளிவாக தெரிந்தது. “எப்பவும் இப்படி தான் உன் வேல முடிஞ்சிடுச்சினா நீ பாட்டுக்கு கௌம்பிடுவ. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்று இவனுடைய மனைவி சினுங்கினாள். வளையல் சப்தம் நன்றாக கேட்டது. அவளின் பேச்சிக்கு தொப்பளான், “உன் வீட்டுக்காரன் வர நேரம். எதாவது பிரச்சனையாயிட போவுது” என்றான். “அந்தாளு இப்ப வற மாட்டாரு. இன்னொரு தடவ செய்யி” என்று அவனை இழுத்தாள். இவனது கால்கள் நடுங்கத் தொடங்கின. தன்னைப் பார்த்து எப்போதும் சிரிக்கும் அவளின் அந்த முகத்தை நினைவுகளின் அடுக்குகளில் இவன் கலைத்து கலைத்து தேடினான். அந்த முகம் மெல்ல விகாரமடையத் தொடங்கியது. இனி அவள் முகத்தில் முழிப்பதே பாவம் என்று யோசித்துக்கொண்டே கீழே இறங்கினான். கூரை அவனது தலையில் இடித்தது. அவன் சுவாசம் சீரற்று இருந்தது. இந்த உலகம் பொய்யானது என்று அவன் நினைத்தான். அவனது சிந்தனை யோட்டம் தாறுமாறாக இருந்தது. உள்ளே சிரிப்புத் சத்தம் கேட்டது. மழைசற்று அடங்கி லேசாக தூறிக் கொண்டிருந்தது. இவன் மாட்டு கொட்டகை நோக்கி நடந்தான். தண்ணீர் சேந்துவதற்காக வைத்திருந்த கயிறு ராட்டிணத்தை எடுத்து, ராட்டினைத்தை கழற்றி வைத்துவிட்டு மூலையில் கவிழ்த்து வைத்திருந்த நெல் அவிக்கும் அண்டாவைப்போட்டு கையிற்றைத் தூக்கி உத்திரத்தில் போட்டான். தான் வாழ்ந்த பதினைந்தாண்டு கால குடும்ப வாழ்க்கையை நினைத்தபடி கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு அண்டாவை எட்டி உதைத்தான். சுறுக்கு மெல்ல இறுகியது. அப்போது கூட உறங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தைகளை பற்றி அவனுக்கு எண்ணத்தோன்றவில்லை.
பேருந்து சத்தம் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது கணேசனுக்கு. கண்களை கசக்கிக்கொண்டான். எல்லாம் நேற்று நடந்ததைப் போன்று இருப்பதாக உணர்ந்தவன் மெல்ல பழைய நிலைக்கு திரும்பினான். தில்லைகோவிந்தன் மாட்டு கொட்டகையின் உத்திரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியே அவன் மனதில் கொஞ்ச நேரம் நிலைத்திருந்தது. மீண்டும் அவன் திரும்பி இலுப்பை மரத்தைப் பார்த்தான். பார்ப்பதற்கு பயமாகவே இருந்தது. மீண்டும் மீண்டும் அவனுக்கு தில்லைககோவிந்தனின் முகமே மனக் கண்முன் தோன்றிக் கொண்டிருந்தது. பேருந்து அவர்கள் இருவரையும் கடந்து செல்லும்போது தேங்கியிருந்த மழைநீர் இவர்கள் மீது தெரித்தது. “தேவிடியா பையன் எப்படி ஓட்றாம்பாரு” என்றான் ராமசாமி. “வேகமாக நடடா” என்று கணேசனைப் பார்த்து சொன்னான். கோனமலை பக்கமாக வானில் மின்னல் தோன்றி மறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. கணேசன் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு ராமசாமி “எல்லாம் பொய் மப்பு டா. மழை அவ்ளோதான்” என்று ஒருவித நம்பிக்கையுடன் சொன்னான்.
அவர்கள் இருவரும் ஆண்டாசெட்டி குளத்திற்கு எதிர்புறம் இருந்த சந்து வழியாக ஏரிக்கு செல்லும் பாதையில் இறங்கினர். சமீபத்திய மழையால் ஏரியில் ஓரளவிற்கு தண்ணீர் இருந்தது. மேலும் ஆங்காங்கே பள்ளங்களில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது. அவர்கள் மாட்டு வண்டிப்பாதையில் கவனமாக நடந்தனர். பாதையெங்கும் கருவேலமுட்கள் சிதறி கிடந்தன. மழையில் ஊறியிருந்த களிமண் பாதைநெடுகிலும் கொழ கொழப்பாக கிடந்தது. சற்று ஏமாந்தால் கூட, வழுக்கி விட்டு விடும். கணேசன் வானத்தைப் பார்த்தான். கோனமலை பக்கம் திரண்டிருந்த மேக கூட்டம் மெல்ல சனிமூலை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது.
அவர்கள் ஏரியைக்கடந்து சித்தாத்தூர் செல்லும் கூட்ரோடு சாலையைப் பிடித்து மேற்கு புறமாக நடந்து கோட்டிக்கல்லை அடைந்தனர். இருவரும் தங்களது நெற்றி விளக்குகளை எடுத்து அணிந்து கொண்டனர். கணசேன் பேட்டரியை தோலில் மாற்றிக்கொண்டே ராமசாமியைப் பார்த்து, “மழை பெஞ்சதால எங்க கால் வச்சாலும் சொத சொதன்னு இருக்கு” என்று சொன்னான். ஆமோதிப்பதுபோல இவனும் தலையாட்டினான். கோட்டிக்கல் பாறை இருளில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கார்த்திகை தீபத்தன்று அதன் மீது தீபமேற்றினால் சுற்றுவட்டத்தில் உள்ள ஊர்களில் இருப்பவர்கள் கூட காணலாம் அவ்வளவு உயரம். பக்கத்தில் இருந்த பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. கோட்டிக்கல்லின் எதிர்புறமும், பின்புறமும் இருந்த நிலங்கள் சமப்படுத்தப்பட்டு வீட்டு மனைகளாகி விற்பனைக்கு தயார்நிலையில் இருந்தன. எப்போதுமே கோட்டிக் கல் பகுதி வானம் பார்த்த பூமிதான். சாமையும் தினையும் தான் அதில் விளையும். ராமசாமியிடம் ஒரு பீடியை வாங்கி பற்றவைத்துக்கொண்டே “என்னடா ஒன்னையுமே காணம்?” என்று கேட்டான் கணேசன். “இப்பதான மழை உட்டுகிது. இனிமேதான் அதுக வெளியில வரும்” என்று இவன் கூறினான். “மழை எங்க வுட்டுது மீண்டும் வரும்போல இருக்குது” என்று மீண்டும் கணேசன் சொன்னான். வெகு தொலைவிற்கு கரம்பாகக் கிடந்த செம்மண் பூமி இவன் மனதை என்னவோ செய்தது. சிறுவயதுகளில் தீபாவளியன்று வீட்டில் செய்யும் பலகாரங்களை ஒரு தூக்குவாளியில் போட்டுக்கொண்டு நண்பர்களோடு அங்கு வந்து விளையாடி விட்டு சாப்பிடும் காட்சி கணேசனது மனதில் சில கணங்கள் வந்து சென்றது. இப்போது யாரும் அதுபோல வருவது கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் விழாக்காலங்களில் இங்கு வந்து மது அருந்துவதாக அவன் கேள்விபட்டிருக்கிறான். கோட்டிக்கல் பற்றித் தெரியாமலேயே ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது குறித்து எப்போதும் அவனுள் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. “ஏன்டா என்ன யோசிக்கிற?” என்று ராமசாமி கேட்டவுடன் அவன் இயல்பு நிலைக்கு திரும்பினான்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. ராமசாமி புகைத்துக்கொண்டே. “எம்மா நேரந்தான் கோட்டி கல்லையே சுத்திகினு கெடக்கறது? வா அந்த பக்கம் போவம்” என்று மாட்டாஸ்பத்திரி பக்கம் கையை நீட்டி சொன்னான். “கோட்டி கல்லுல கெடைக்காததா அங்க கெடச்சிடும்?” என்று திரும்ப கேட்டு, “சாதாரணமா இந்நேரத்துக்கு மூனு நாலு உருப்படிக ஆட்டுருக்கும்” என்று அலுப்புடன் சொன்னான். மெல்ல இருவரும் நடக்கத் தொடங்கினர். எதுவும் கிடைக்காததால் அவர்கள் சோர்வடைந்தனர். கால்களில் வலி தெரிந்தது. வழியில் இருந்த குற்றுச் செடிகளை கைதடியால் ஆட்டிப் பார்த்தனர். எதுவும் அகப்படவில்லை. சிவன் கோயில் விளக்கு வெளிச்சம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நரிமுட்டு வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. “இன்நேரத்திற்கு யார் பாசரது?” என்று ராமசாமியை கணேசன் கேட்டான். “நாத்து உட்டுருப்பாங்க. மழை வரமாதிரி இருக்குல்ல, அதால எறைப்பாங்க” என்று கூறினான். அவன் சொன்னதுபோல நரிமுட்டு மோட்டார் கொட்டகையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மோட்டார் கொட்டகை ஓரம் உயரமாக வளர்ந்து நின்று கொண்டிருந்த நீலகிரி மரங்கள் ஒடிந்து விழுவதுபோல காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. நடந்தபடியே அவர்கள் உற்றுப்பார்த்துக்கொண்டு வந்தனர். எதுவும் அகப்படவில்லை. ராமசாமி மீண்டும் இடுப்பு மடிப்பிலிருந்து ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். “டேய் எனக்கும் ரெண்டு இழுப்பு கொடுடா” என்று கேட்ட கணேசன் “நாம இன்னிக்கு வந்திருக்கக்கூடாது டா“” என்று அவனிடம் சொன்னான். அவர்கள் மாட்டாஸ் பத்திரியின் பின்புறமிருந்த பனந்தோப்பில் நுழைந்தனர். பனைமரங்களைப் பார்த்ததும் ராமசாமிக்கு தில்லைக்கோவிந்தனுடன் அங்க கள்குடித்தது ஞாபகத்திற்கு வந்தது. அப்போது அவர்கள் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். கள் சீசன் தொடங்கிவிட்டால் போதும் விடுமுறை நாட்களில் மூவரும் சாயந்திரம் அங்கு தான் இருப்பார்கள். விலைபேசி ஒரு பானையில் கல்லை எடுத்துக் கொண்டு, தொட்டுக்க வறுத்த கருவாட்டையும், அவித்த முட்டையையும் ராமசாமி வாங்கிக் கொண்டு வருவான். கணேசனும் தில்லைக்கோவிந்தனும் கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கும் ஒரு புளிய மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டிருப்பார்கள். கணேசன் மட்டும் எப்போதும் குடிக்க மாட்டான். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் வாங்கும் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குவான் “குடிக்காதவனுக்கு எதுக்குடா கருவாடும் முட்டையும்? எம்மாத்தரம் திண்ணாலும் வெடியாது டா ஒனக்கு” என்று திட்டுவான் ராமசாமி. “சரி போரான் விடுடா” என்பான் தில்லைகோவிந்தன். ஆளுக்கொரு மொந்தையில் கள்ளை ஊற்றிக் குடிக்கக் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது அவர்களுக்கு. அதுவரை பீடி அவர்கள் கைகளில் புகைந்து கொண்டே இருக்கும். அதீத போதை தலைக்கேறி கண்கள் சொறுக தொடங்கியதும் தள்ளாடியபடியே அவர்கள் நடக்கத் தொடங்குவர். போதையின் தள்ளாட்டத்தில் அவர்கள் பேசும் பேச்சுகளை மறுநாள் கணேசன் அவர்களிடம் சொல்லி கிண்டல் செய்வான். “இதுக்கு தாண்டா இவன குடிக்கற எடத்துக்கு கூட்டுகினு போகக்கூடாது. தின்றதோட இல்லாம நக்கலுவேற” என்று கணேசனைப் பார்த்து சொல்லுவான்.
“ஏய் மழை வரமாதிரி இருக்கு. வீட்டுக்கு போலாம்” என்று ஏமாற்றத்தோடு அவனைப்பார்த்து சொன்னவுடன் தான் பழைய நினைவுளில் இருந்து மெல்ல மீண்டான் ராமசாமி. அன்னாந்து வானத்தைப் பார்த்தான். வானம் இருட்டிக்கொண்டிருந்தது. தூரல் அதிகரிக்கத் தொடங்கிய போது ராமசாமி, “அடச்சே, வந்ததுக்கு நாச்சும் எதாவது கெடச்சிருக்கலாம்” என்று இவனைப் பார்த்து சொன்னான் . பனந்தோப்பு முழுக்க அவர்கள் அலசோ அலசென்று அலசினர். ஒரு சிறிய எலியைக் கூட காணவில்லை. அவர்களுக்கு சோர்வாக இருந்தது. கடுங்காலில் வலி அதிகரிக்க தொடங்கியது வீட்டிற்கு திரும்பிவிட முடிவு செய்து மாட்டாஸ்பத்திரி வழியாக நடந்து திருக்கோயிலூர் சாலையை அடைந்தனர். சாலையோரம் இருந்த ஓடையில் வீரங்கிபுரத்து ஏரியிலிருந்து மடவிளாகம் ஏரிக்கு மழைநீர் வந்து கொண்டிருந்தது. மழை வேகமாய் பெய்யத் தொடங்கியது. அவர்கள் நடையை துரிதப் படுத்தினர். சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் ஆண்டா செட்டி குளத்தை அடைந்த போது ஊரில் மின்சாரம் நின்றுபோயிருந்தது தெரிந்தது. “கொஞ்சம் மழவரக்கூடாதே சட்டுனு புடிங்குடுவனுவலே” என்று ராமசாமி கணேசனைப் பார்த்து சொன்னான். திரௌபதி அம்மன்கோயில் மேடையில் படுத்திருந்த நாய் அவர்களைப் பார்த்து குரைத்தது. டல்லா ஏயர் வீட்டு தெரு வந்ததும் ராமசாமி வடக்கே செல்லும் சந்து வழியாக திரும்பி வெள்ளகுளத்தெரு நோக்கி நடந்தான். கணேசன் ஏயர் வீட்டு பின்புறம் வழியாக பிரியும் செட்டியார் வீட்டு சந்து பக்கம் சென்றான். மழை நின்று பெய்து கொண்டிருந்தது.
தொப்பலாக நனைந்தபடியே அலமேலுவின் வீட்டு கதவைத் தட்டினான் ராமசாமி. இந்நேரத்துல யாராயிருக்கும் என்று யோசித்தபடியே கதவைத் திறந்தவள் இவனைப் பார்த்து திடுக்கிட்டாள். இவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். “சொல்லாம கொள்ளாம வரக்கூடாதுன்னு எத்தன மொற சொல்றது உங்கிட்ட” என்று அவனைப் பார்த்து கேட்டாள். அவன் மௌனமாக நின்று கொண்டிருந்தான். “என்ன நான் கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு அமைதியாக இருக்க. அவுரு இருந்திருந்தா இன்நேரம் என்னாயிருக்கும் தெரியுமா?” என்று பதட்டத்தோடு பேசினாள். அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி அமைதியாக நின்று கொண்டிருந்தான். அவன் கைலியிலிருந்து நீர் தரையில் சொட்டிக்கொண்டிருந்தது. குளிரில் அவனது உதடுகள் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. “”சரி வா. வந்து தொலை யாராவது பாத்துட போறாங்க” என்று அவனை உள்ளே அழைத்தாள். எதுவும் பேசாமல் அவன் உள்ளே வந்தான். துவட்டிக் கொள்ள துண்டை கொடுத்தாள். இவன் நெற்றி விளக்கையும். பேட்டரியையும் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு தலைதுவட்டத் தொடங்கினான்.
தோட்டத்திற்கு சென்று வந்தவள். “வேட்டைக்கு போயிட்டு வறியா?” என்றாள். இவன் ஆமாம் என்பதுபோல தலையாட்டினான். நெற்றி விளக்கு, பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்தை சுட்டிகாட்டி, “எங்க ஒன்னையும் கானோம்?” என்று கேட்டாள். அதற்கு அவன் “ஒன்னும் ஆப்புடல மழை வந்து கெடுத்திடுச்சி” என்றான். “அதான பாத்தன், ஏதாவது கெடச்சிருந்தா ஏன் இங்க வரப்போற, உன் வீட்டுக்கில்ல போயிருப்ப” என்று சொன்னாள். சுருக்கென்றது அவனுக்கு. “இப்பிடிலாம் பேசாத” என்று அவளை நெருங்கினான். “இதுக்கு மட்டும் தான் நானு உனக்கு வேணும்” என்று அவனை மீண்டும் சீண்டினாள். இருட்டு அவனுக்கு வசதியாக இருந்தது. அவளை இறுக அணைத்தான். உதட்டில் முத்தமிட்டான். “எப்படிதான் உன் பொன்டாட்டி இந்த கருமம்புடிச்ச நாத்தத்த சகிச்சிகிறாளோ?” என்று அவன் வாயிலிருந்த வந்த பீடி நாற்றத்தை உணர்ந்து கேட்டாள். அவன் அவளுடைய ஆடைகளை களைய ஆரம்பித்தான். வெளியில் மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment