Thursday, September 2, 2010

நதியைப் புணர்ந்தவள்


கனவிலும் நினைவிலும்
பொங்கிப் பாயும் நதியின் பிரவாகத்தை
தன் கருவில் சுமக்கும் ஓர் யுவதி,
அந்நதி
தன்னை விட்டு விலகிச் செல்வதாக
தெரிவித்த அன்றிலிருந்துதான்
தெங்கும் தாழையும் பூத்துக்கிடந்த
இந்நிலப்பரப்பு
என்றென்றைக்குமாக
வறண்டுபோக ஆரம்பித்தது.

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும்
மேற்கிலிருந்து கிழக்காகவும்
கருநாரைகள் பறந்து செல்லும்
எல்லா நாட்களிலும்
தகிக்கும் மணல் மூடிக்கிடந்த
நதி போன திசையெங்கும்
நடந்தலைந்தாள் அவள்

கடுங்கோடையை அடுத்த
மழைக்காலத்திற்கு
காத்திருக்கத்தான் வேண்டும்
சில காலம்

நொச்சியும் தும்பையும்
பூத்தால்
ரொம்ப சந்தோஷம்

எது எப்படி இருந்தாலும்
நதியைப் புணர்ந்தவள்
நமக்கு முக்கியம்.

1 comment: