Tuesday, November 16, 2010

கேள்வியும் பதிலும்-1


மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடமிருந்து என் எழுத்து சார்ந்து எண்ணற்ற கடிதங்கள் வருகின்றன. அக்கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் அளிப்பது நடைமுறை சாத்திய மற்றதாகும். கீழ்காணும் நேர்கானல் பகுதி ஓரளவிற்கு பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
- இசபெல் ஆலன்டே.

கே : வெளிப்படுத்திக்கொள்வதற்கான வேறு தளங்களில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அல்லது கதை கூறல் தளத்திலேயே தொடர்ந்து இயங்கலாம் என்று எண்ணுகிறீர்களா?

ப : இளம் வயதுகளில் நாடகங்கள் எழுதியும் அதை விரும்பியும் இருக்கிறேன் ; ஒரு குழுவாக இயங்குவதில் ஆர்வம் கொண்டவள் நான். என் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது, நான் சிறுவர் கதைகள் எழுதவும் முயற்சித்திருக்கிறேன் ; ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களுக்கு கதை கூறுவேன். அற்புதமான அப்பயிற்சியை நான் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டேன். 2001 ல் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக,’ தி சிட்டி ஆப் த பீஸ்ட்ஸ்’ எனும் நாவலை எழுதினேன். அது ’பிளேயா அண்டு ஜேன்ஸ், ஸ்பெயின்’ எனும் நிறுவனத்தால் வெளியிடப் பட இருக்கிறதுது. பல ஆண்டு நான் நகைச்சுவைகளையும் எழுதியிருக்கிறேன். அனைத்து வடிவங்களையும்விட நகைச்சுவை தான் மிகவும் கடினமானது என நினைக்கிறேன். கவிதை எழுத நான் ஒரு போதும் முயன்றதில்லை. இனிமேலும் செய்வேன் என்ற எண்ணமும் கிடையாது.

கே : நீங்கள் ஸ்பானிஷ் மொழியில் தான் எழுதுகிறீர்களா?

ப : புனைவுகளை நான் ஸ்பானிஷில் தான் எழுதுகிறேன். ஏனெனில் என் மொழியில் தான் என்னால் செய்ய இயலுகிறது. அதுதான் இயல்பான செயலாக எனக்கு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உலகம் முழுக்க எனக்கு ஆகச் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் வாய்த்திருக்கிறார்கள்.

கே : உங்கள் மொழிபெயர்ப்பாளரோடு இணக்கமாக பணியாற்றுவீர்களா? உங்களின் அனேக புத்தகங்களை ’மார்கரெட் சாயர்ஸ் பேதென்’ தான் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் என நான் அறிந்திருக்கிறேன்.

ப : மார்கரெட்டும் நானும் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம். மன பொருத்தத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம் எனவும் நான் நம்புகிறேன். அவள் வியக்கத்தக்க பணியை செய்கிறாள். அவளைச் சரிபார்ப்பது என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. வேறு பல மொழிகளில் எப்படியிருப்பினும், யார் மொழிப்பெயர்ப்பு செய்கிறார்கள் என்பதே எனக்கு தெரியாது. பதிப்பாளர்களே அதிலும் அக்கறை எடுக்கிறார்கள்.

கே : புனைவு எழுத்து குறித்து, உண்மையை கூறுவது தொடர்பாக, பொய் உரைத்தல் குறித்து, முழுமை பெறாத சில யதார்த்தங்கள் பற்றி, மற்றும் இவை அனைத்தும் எவ்வாறு சேர்ந்து அல்லது ஒன்றையொன்று எதிர்த்து இயங்குகின்றன என விரிவாக கூற முடியுமா?

ப : புனைவின் முதல் பொய், வாழ்வின் நிகழ்வுகளை படைப்பாளி வரிசைப் படுத்துவதாக இருக்கிறது. அது காலக்கிரமமாகவோ அல்லது படைப்பாளி தெரிவு செய்யும் எந்த வரிசையாகவோ இருக்கலாம். ஒரு எழுத்தாளராக, நீங்கள் ஒரு முழுமையில் இருந்து சில பகுதிகளை தேர்ந்தெடுக்கிறீர்கள் ; தேர்ந்தெடுத்த பகுதியின் முக்கியத்துவம் மற்றும் எஞ்சியப் பகுதியின் முக்கியமின்மையை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். அவற்றைப் பற்றி உங்கள் பார்வையை ஒட்டி நீங்கள் எழுதுவீர்கள். வாழ்க்கை அப்படிப்பட்ட தல்ல. எல்லாம் ஏக காலத்தில், தொடர்ந்தும் மற்றும் நீங்கள் எந்த தெரிவும் மேற்கொள்ள முடியாத வகையில் நடக்கின்றன. நீங்கள் எஜமான் இல்லை ; வாழ்வு தான் எஜமானன். புனைவு என்பதே பொய் தான் என ஒரு எழுத்தாளராக எப்போது நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களோ, அப்போது நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம் ; எதையும் உங்களால் செய்ய முடியும். பிறகு அப்புள்ளியைக் கொண்ட வட்டங்களில் நீங்கள் நடக்கத் தொடங்கலாம் . வட்டம் பெரிதாக, நீங்கள் அதிகப்படியான உண்மையை பெறலாம்.


நன்றி: www.isabelalande.com
தமிழில்:காலபைரவன்

3 comments:

 1. இசபெல் ஆலண்டேவின் 'The House Of the Spirits' நன்றாக இருந்தது. ஆனால் Marquez நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.
  Ajay

  ReplyDelete
 2. நானும் அதுபோல உணர்ந்திருக்கிறேன் அஜய்.

  ReplyDelete
 3. என்னவளே
  பிறமொழி தெரிந்தும்
  பிள்ளைகளின் திறமை
  வளராதது ஏன்? என்றேன்

  அடடா
  ஆறாவது அறிவுக்கு
  இன்னொரு பெயர் உண்டு
  அது தாய்மொழி! என்கிறாய்

  ReplyDelete