Saturday, October 8, 2011

சலனத்தின் விழிகள்தொன்னூறுகளின் ஆரம்பத்தில் புதுவை சங்கரதாஸ் நாடகப்பள்ளியில், ஷிபு இயக்கிய மாக்பத் நாடகத் தயாரிப்பின் போதுதான் முதன் முதலாக அடூர் கோபால கிருஷ்ணன் எனும் பெயரை கேள்விப்படுகிறேன். ஷிபு தான் அடூர் மீதான என் தேடலை தீவிரப் படுத்தியவர் என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. அப்போது ஒரு முறை உடன் படித்த சாலைப்புதூர் ரவிச்சந்திரனுடன் திருப்பூருக்கு சென்றிருந்தேன். ரவிக்கு திருப்பூர் அருகே தனிப்பட்டதொரு வேலை இருந்ததால் என்னை மட்டும் அவருடைய நண்பரின் அறையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று ஓர் ஆங்கில தினசரியில் முழுப்பக்கத்திற்கு அடூரின் புகைப்படத்துடன் அவரது திரைப்படங்கள் குறித்த மிக நீண்ட கட்டுரை வெளியாகி இருந்தது. அக்கட்டுரையை திரும்பத் திரும்ப வாசித்தேன். தீவிர சினிமா தொடர்பாக அப்போது என் சிந்தனை உருக்கூடி இருக்கவில்லை. பல இடங்களை அர்த்தப்படுத்திக் கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது.

பின் 1995 ல் ஜூலை மாதம் என்று நினைக்கிறேன். திருச்சூர் நாடகப்பள்ளியில் சேர எண்ணி, அங்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அங்கு அப்போது படித்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் (பெயர் மறந்து விட்டது. ஆனால் அவர் சென்னை தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் பட்டயம் பெற்றவர் என்று கூறியது நினைவிருக்கிறது) தன்னுடைய பேச்சில் அடூரைப் பற்றிய நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டே அர்னாட்ட கராவில் இருந்து திருச்சூருக்கு நடத்தியே கூட்டிக்கொண்டு வந்தார். அடூர் தொடர்பான உரையாடல், இரு இடங்களுக்குமான தொலைவை எங்களின் நினைவிலிருந்து முற்றிலுமாக துடைத்துவிட்டிருந்த்து.

காலபோக்கில் அடூரின் சித்திரம் மெல்ல என்னுள் தன்னை மேலும் மேலும் நுட்பமாக விரிவு செய்தபடியே இருந்தது. அவர் தொடர்பாக தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன். இணையம் சாத்தியப்பட்ட பின்பு எண்ணற்ற பதிவுகளை ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. ஆனாலும் இதுவரையில் அவரது நான்கு படங்களை மட்டுமே பார்க்க முடிந்திருக்கிறது. அவரின் நிழல்குத்து படத்தின் குறுந்தகட்டை பெங்களுரூ மல்லேஸ்வரத்தில் நீண்ட தேடலுக்கு பின்பே கண்டடைந்தேன். நிழலைப் போல நம்மை தொடர்ந்து கொண்டிருக்கும் மரணத்தின் வலி ஏற்படுத்தும் வெளியை கடக்க அப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்திருக்கிறேன். அவரது எஞ்சிய படங்களின் குறுந்தகடுகளை இன்று வரையும் தேடிக் கொண்டே இருக்கிறேன்.பெரும் விருட்சமாக என் சிந்தனையில் வியாபித்திருக்கும் அடூர் எப்படி என்னை இந்தளவிற்கு பாதித்தார் என்பதற்கு மிகச் சரியான ஒரு காரணமும் என்னிடம் இல்லை. அத்திரைப்பட மேதையின் எழுத்துக்களையும், அவரைப்பற்றி பிறர் எழுதியவற்றையும் வாசித்தே நான் அவர் பால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். மேலும் ஷிபு போன்றவர்கள் என்னை மேலும் அடூர் நோக்கி நகர்த்தி இருக்கக்கூடும். தமிழில் அவரைப்பற்றி அரிதாகவே வந்திருக்கின்றன. அதுவும் இரண்டாயிரத்தின் மத்தியில் இருந்தே இது சாத்தியப் பட்டிருக்கிறது. அந்த வகையில் அடூர் குறித்து காத்திரமான மூன்று புத்தகங்களை நம்மால் அடையாளப்படுத்த முடியும். அவற்றில் ’சினிமாவின் உலகம்’, ’சினிமா அனுபவம்’ எனும் இரு நூல்கள் அடூரால் எழுதப்பட்டு முறையே இயக்குனர் மீரா கதிரவன் கவிஞர் சுகுமாரன் ஆகியோரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவை. மூன்றாவது அக்பர் கக்கட்டில் எனும் மலையாள எழுத்தாளர் எழுதிய ’அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை’ எனும் நூல். இது குளைச்சல் மு.யூசுபினால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. வெவ்வேறு கால இடைவெளிகளில் இம்மூன்று புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன். இப்புத்தகங்களை வாசிப்பதின் மூலமாக ஒருவர் அடூரின் கலை மேன்மையை நிச்சயமாக விரிவாக்கிக் கொள்ள முடியும் என திடமாக நம்பமுடிகிறது.

***************

திரைப்படம் என்பது அடிப்படையில் இயக்குநரின் ஊடகமாகும். திரைப்பட கலையை இயக்குநர்கள் கைக்கொள்ளும்போதுதான் அது தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு விரிவு கொள்கிறது என்பதை அடூரின் கட்டுரைகளில் இருந்து நன்கு உணரமுடிகிறது. புத்தகத்தின் உள் அடுக்குகளில் திரைப்பட உருவாக்கத்தில் பங்கு கொள்ளும் பிற துறைகளைப் பற்றி அடூர் விரிவாக பதிவு செய்திருக்கிறார். முதல் கட்டுரையான ”இயக்குநரின் கலையில்”, ஓர் இயக்குனரின் பன்முகப்பட்ட ஆளுமைகளையும், நவீன திரைப்படங்களின் ஆகச் சிறந்த இயக்குனர்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ’ஆலன் ரெனே’, ’யான் னெமக்கின்’, ’கோடாட்’, ’ஃபெலினி’, ’டிசிகா’ மற்றும் ’யஹுஜிரோ ஓஸு’ ஆகியோர்களின் சிறந்த திரைப்படங்கள் குறித்து ஓர் குறிப்பையும் நமக்கு அளிப்பதன் மூலம் திரைக்கலை நுட்பம் உருக்கொள்வதற்கு பாடுபட்டவர்களையும் அடையாளப் படுத்துகிறார்.

’திரைப்பட இலக்கியம்’ எனும் அத்தியாயத்தில் திரைப்பட இலக்கியம், திரைப்படம் சார்ந்த இலக்கியம் ஆகியவற்றை பற்றி நுட்பமான குரலில் பேசுகிறார். “உன்னதமான இலக்கியத்தினுடைய ஊடகமும், உன்னதமான திரைப்படத்தினுடைய ஊடகமும் வெவ்வேறானவை என்பதற்கும், மேலாக, அவை வெவ்வேறு விதமான இரண்டு இனத்தைச் சார்ந்தவைகளாகும்” என்று கூறும் அடூர் ”தரமான இலக்கியப் படைப்பாக உருக்கொண்ட திரைக்கதைகளிலிருந்து ஒரு தரம் வாய்ந்த திரைப்படம் உருவாகக் கூடிய சாத்தியம் மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறது” என்றும் விவரிக்கிறார்.


’திரைப்பட ஒலிச்சித்திரம்’ எனும் பகுதிக்கு அடுத்ததாக ’போரும் சினிமாவும்’ எனும் கட்டுரை இடம் பெற்றுள்ளது. இக் கட்டுரையில் யுத்தங்களால் பாதிக்கப்பட்டு திரைப்படக் கலையின் முகம் எவ்வாறு அடர்த்தியாகவும் பல உள் அடுக்குகள் கொண்ட்தாகவும் உருக்கொண்டது என்பதை பற்றி அடூர் விரிவாக எழுதுகிறார். யுத்தங்களால் ஏற்பட்ட பேரழிவுகளையும், துர்சொப்பனங்களையும் தங்களின் உள்ளடக்கங்களாகக் கொண்ட திரைப்படங்கள் உருவாக்கப்பட்ட விதத்தை நுட்பமாக பதிவு செய்யும் அடூர் ”நிச்சலனம்” என்பதே திரைப்படக் கலைக்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறுகிறார். மனிதன் கண்டுபிடித்த மிகப் பயங்கரமானதும், கொடூரமானதுமான யுத்தம் சலனத்திற்கும் செயல்பாட்டிற்கும் எல்லையற்ற சந்தர்ப்பங்களை உருவாக்கித் தருவதாகவும் குறிப்பிடுகிறார்.

’அறுபதுகளில் திரைப்படங்கள்’ எனும் பகுதியும் மிகுந்த அழுத்தம் கொடுத்து வாசிக்க வேண்டிய பகுதியாகும். புதிய அலை, சுதந்திர சினிமா போன்ற திரைப்பட வகைகளை விவரிக்கும் அடூர், பல நாட்டு திரைப்பட முயற்சிகள் குறித்தும் எளிமையாக விளக்குகிறார். அதிகபட்ச வணிகமயத்தோடு இயங்கிய அமெரிக்க திரைப்படத்துறை தான் மிகவும் துணிச்சலான பல பரிசோதனைகளை நடத்தின என்று சார்புகள் இன்றியும் எழுதுகிறார்.

1962 ல் தொடங்கப்பட்ட நியுயார்க் பிலிம் மேக்கர்ஸ் கோ ஆப்ரேடிவ், 1951 ல் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் உலகத்திரைப்பட விழா, 1960 ல் உருவான பிலிம் பைனான்ஸியர்ஸ் கார்பரேஷன், அதற்கு அடுத்த ஆண்டு பூனாவில் உருவான பிலிம் இன்ஸ்ட்யூட்ஸ் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளையும், அதன் பலனாக நிகழ்ந்த திரைப்பட முயற்சிகளையும் இப்புத்தகத்தின் வழி விரிவாக அறியமுடிகிறது. இதைத் தொடர்ந்து ’மக்களின் கலை’, ’கலையும் வியாபாரமும்’, ’இணை சினிமா?’ ஆகிய தலைப்பின் கீழ் உலக சினிமா குறித்த தன் பார்வைகளையும் விமர்சனங்களையும் நுட்பமாகவும் செரிவாகவும் தந்திருக்கிறார் அடூர். திரைப்படக் கலையில் ஏற்பட்ட தனித்துவம் மிக்க இயக்கங்களை மிக விரிந்த தளத்தில் பொருத்தி விவாதித்திருக்கிறார். அறுபதுகளில் உருவாகிவிட்டிருந்த திரைப்படத்தின் தொழில் நுட்பவியல் அறிவு கொண்ட புதிய தலைமுறை, அவர்களின் சீரிய முயற்சிகள், திரைப்பட வியாபரிகளின் வெற்றுக் கூச்சல், ஆகியன பற்றியும் அழுத்தமாக குறிப்பிடுகிறார் அடூர். உலகம் முழுவதும் ஏற்பட்ட அலைபோல இந்திய திரைக்கலை மீதும் சில பரிட்ச்சார்த்த சோதனைகள் நடத்திப் பார்க்ப்பட்டது. அவை இணை சினமா என்று அழைக்கப்பட்டது. ஆனால் அடூர் அதனை புதியவகை திரைப்படம் என்று அழைக்கவே விரும்புவதாக குறிப்பிடுகிறார். வெகுஜனத் திரைப்படங்களை, புதிய வகை திரைப்படங்கள் எவ்வாறு பாதித்திருக்கின்றன என்பது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்றாகவே இருப்பதாக கருதும் அடூர், புதிய பாணி கொண்ட திரைப்படங்களை ரசிப்பதற்கு பார்வையாளர்களுக்கு மேலும் அதிகமான திரைப்படக் கலாச்சாரம் இருந்ததே தான் தீரவேண்டும் என்று உறுதிபடக் கூறுகிறார் இதன் தொடர்ச்சியாக திரைப்பட இயக்கங்களின் தேவை சார்ந்தும், அவற்றின் பங்களிப்புகள் குறித்தும் இந்த இயலில் விவரிக்கிறார்.’மலையாளத் திரைப்படம் எதை நோக்கி?’ ’திரைப்பட இயக்கங்கள்’ ஆகிய இரு பகுதிகளிலும், மலையாள சினிமாவின் போக்குகள் பற்றிய பதிவுகளாக இருக்கின்றன. மலையாள மண்ணில் வேரூன்றிய திரைப்பட இயக்கங்களும், அவற்றின் தாக்கங்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட இயக்கங்களினால் உலகளவில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இந்தியாவில் மும்பைத் திரைப்பட இயக்கம், போன்ற இயக்கங்கள் வரிசையாக தொடங்கப்பட்டன. கேரளாவில் சித்ரலேகா திரைப்பட இயக்கம் தொடங்கப்பட்டு வலுவான இயக்கமாக செயல்பட்டு மலையாள திரைப்பட முயற்சியை செம்மை படுத்தியது. திரைப்பட இயக்கங்களின் உதவியால் திரை விமர்சனங்களையும் ஒருங்கே வளர்ந்தெடுக்க முடிந்த்தையும் பதிவு செய்திருக்கிறார் அடூர்.

நூலின் கடைசி இரண்டு கட்டுரைகள் ’காட்சி இணைப்பு’ மற்றும் ’நடிப்பின் எல்லைகள்’ ஆகும். இரண்டுமே மிக முக்கியமான அழுத்தமான பதிவுகள். திரைப்பட கலையின் மிக நுட்பமான துறையாக இன்றளவும் இருந்து வருவது ’பிலிம் எடிட்டிங்’ ஆகும். படத் தொகுப்பை பற்றிய பல அறிய தகவல்களை இக்கட்டுரை முழுக்க தருகிறார் அடூர். பல சிறந்த உலகத் திரைப்படங்கள் மற்றும் உன்னத இயக்குனர்களையும் கொண்டு படத்தொகுப்பு எனும் கலையின் நுட்பத்தை அதன் முழுஅளவில் நம்மிடம் விஸ்தரித்துக் காட்டிவிடுகிறார். நடிப்பின் எல்லைகள் எனும் கட்டுரையும் தன்னளவில் ஒர் செறிவான கட்டுரையாகவே விளங்குகிறது. நடிப்பின் சாத்தியங்களையும், அது சார்ந்து திரைப்படம் எவ்வாறு காட்சிகளாக பகுக்கப்படுகிறது என்பதையும் மிக நுணுக்கமாக விவரிக்கிறார். திரைப்படத் தொழில் நுட்பத்தோடு எவ்வாறு ஒரு தேர்ந்த நடிகன் தன்னைப் பொருத்திக்கொள்கிறான் என்பதையும், எவ்வாறு அவன் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறான் என்பதையும் தெளிவாக விவரிக்கிறார். மொத்தமாக உலக சினிமாவின் போக்குகளை அடூரின் இந்த ’சினிமாவின் உலகம்’ எனும் புத்தகம் விரிவாக அலசுகிறது. திரைப்படம் சார்ந்து முன்நகர விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் சரியான வாசலைத் திறக்க உதவும் என்று உறுதியாக கூறமுடியும்.

***********************************************************
சினிமாவின் உலகம் : மூலம்- அடூர் கோபாலகிருஷ்ணன். தமிழில்- மீரா கதிரவன், கனவுப்பட்டறை வெளியீடு, சென்னை.


-தொடரும்

2 comments:

 1. என்னவளே
  நடக்கையில் உரையாடுவது
  இரு இடங்களுக்கு இடையே
  இடைவெளியை பாதியாக்குகிறது!

  அடடா
  சண்டையில் உரையாடுவது
  இரு மனங்களுக்கு இடையே
  இடைவெளியை இரட்டிப்பாக்குகிறது!

  ReplyDelete