Wednesday, November 16, 2011

பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்


அவர்கள் ராஜா தியேட்டரில் இறங்கி சுபலட்சுமி ஒயின்ஸ் நோக்கி நடக்கத் தொடங்கிய போது லேசாக தூற ஆரம்பித்தது. காலையில் கிளம்பும் போதே வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. மழை நாளில் புதுவை மேலும் ரம்மியமாகத் தோன்றியது அவர்களுக்கு. புதுவை பேருந்து நிலையத்தில் கால் வைத்ததுமே விசுவால் அதீத குளிர்ச்சியை உணர முடிந்தது.கடற்கரை காற்று சில்லென வீசிக் கொண்டிருந்தது. மேகம் அடர்ந்து மழை வலுக்கும் போல இருந்தபோது அவர்கள் நடையை வேகப்படுத்தினர். மழையை பொருட்படுத்தாது ஒருவர் கைரிக்‌ஷாவில் அமர்ந்து புகைத்துக்கொண்டே அவர்களைக் கடந்து சென்றார். ரிக்‌ஷாவில் அமர்ந்திருப்பவரையும் அதை இழுப்பவரையும் கொஞ்சநேரம் ரமேஷ் பார்த்துக் கொண்டே நடந்தான். அவனுக்கு மனம் சங்கடமாக இருந்த்து. ஆனாலும் இதுபோன்ற சூழலில் கை ரிக்க்ஷாவில் பயணிப்பது சந்தோஷம் கூடியதாகத் தான் இருக்கும் என்று யோசித்துக் கொண்டே மதுக்கடையை ரமேஷும் விசுவும் அடைந்தபோது மழை வலுக்க ஆரம்பித்திருந்தது. கண்ணாடிக் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்து வழக்கமாக அமரும் இருக்கையை நோக்கிச் சென்றனர். ஏற்கனவே அங்கு இருவர் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மேசைக்குமாக விளக்கின் ஒளி மிகவும் துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தது.உள்ளிருந்து பார்ப்பவர்கள் அதை சிமெண்ட் கட்ட்டம் என்று சுலபத்தில் கூறிவிடமுடியாதபடி மூங்கிலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு நேர்த்தியாக மூங்கில் கொண்டு ஒரு குடிசை போல நிர்மானிக்கப்பட்டிருந்தது தான் அவர்களை தொடர்ந்து வருகை தருபவர்களாக மாற்றி இருக்கக்கூடும். வழக்கமாக அமரும் மேசையின் அருகிலேயே அவர்கள் தயங்கியபடி நின்று கொண்டிருந்தனர். மேசையின் மீதிருந்த இரண்டு கோப்பைகளிலும் தங்க நிறத்திலான திரவம் கொஞ்சம் நிரப்பப்பட்டிருந்தது. அதன் அருகில் குளிர்ந்த நீர். சிறிய ஐஸ் பெட்டியில் கொஞ்சம் ஐஸ் துண்டுகள் இருந்தன. ரிக்கி மார்ட்டின் முழு பாட்டில் நடுவில் வைக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு ஒரு பெண்ணை நினைவூட்டுவதாக இருந்தது. எதிர் எதிராக இரண்டு சில்வர் தட்டுகளில் அளவாக நறுக்கப்பட்ட வறுத்த மாட்டிறைச்சி வைக்கப்பட்டிருந்து. அதன் பக்கத்தில் இரண்டு சிறிய தட்டுகளில் முந்திரியும், பச்சைப் பட்டாணியும். இன்னொரு தட்டில் ஒரு இடுக்கியும், இரண்டு முள்கரண்டியும் வைக்கப்பட்டிருந்தது. மசாலா போட்டு தயாரிக்கப்பட்டிருந்த தட்டிலிருந்த பச்சைப்பட்டாணி இருவருக்கும் அங்கு சென்று முதல் முதலில் குடித்த நாளை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.


அவர்கள் முதல் முதலாக அங்கு குடிக்க வந்த அன்று வெயில் கடுமையாக வீசிக்கொண்டிருந்து. திருமணம் போன்ற விசேஷங்களில் தான் எடுத்த நிழற்படங்களை அச்சிட வழக்கமாக புதுவைக்கு வரும் ரமேஷ் எப்போதும் விசுவை உடன் அழைத்து வருவது வழக்கம். அப்போதெல்லாம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் ஏதாவது ஒரு மதுக்கடையில் மதுபுட்டிகள் வாங்கி நின்றபடியே குடித்துவிட்டு, அலங்கார் சலூனுக்கு பக்கத்தில் இருக்கும் வேலூர் பீப் பிரியாணிக்கடையில் சாப்பிட்டு விட்டு வண்டி ஏறிவிடுவார்கள். ஆனால் அன்று அவர்களுக்கு ஒரு உயர்தர மதுக்கூடத்திற்கு சென்று மது அருந்த வேண்டும் எனத் தோன்றியது. அதற்கு காரணம் அவர்களின் சாமியார் மாமா. ”டேய் குடிச்சா பிரசிரண்டு மாதிரி குடிக்கனும் டா” என்று அடிக்கடி இவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார் அவர்.அத்தை வீட்டு படிக்கூண்டில் எப்போதுமே விலையுயர்ந்த காலியான மதுபாட்டில்கள் கிடக்கும். இவர்கள் அந்த பாட்டில்களை எடுத்து அதன் வடிவமைப்பை பார்த்து ஆச்சர்யப்படுவர். ஒருநாள் இவர்களை படிக்கூண்டு அருகே கண்டா மாமா, “ என்னடா பாக்கறீங்க. எல்லாம் சீமச் சரக்குடா தம்பிகளா” எனச் சொல்லி கண்களைச் சிமிட்டினார். அவரிடமிருந்து வரும் ஜவ்வாது வாசனை இவர்களை ஒருவித கிறக்கத்தில் ஆழ்த்தியது. முதல் முறை கடையில் நுழைந்தவுடனேயே அங்கிருந்த பணியாளரிடம் ரமேஷ் “பக்காடி ஒயிட் ரம் இருக்கா?” என்று வெடுக்கென்று கேட்டு விட்டு, இவனைப் பார்த்துக் கண் சிமிட்டினான். அவன் கேட்டவிதம் பணியாளருக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. இருக்கையில் அமர்ந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்பே இருவரும் மதுக்கூடத்தை ஒரு நோட்டம் விட்டனர். ஜன்னல் திரைச்சீலைகள் காற்றில் புரள்வதை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருந்தது அவர்களுக்கு. எங்கிருந்து வருகிறது என அறிய முடியாத படி இன்னிசை பெருகி கூடமெங்கும் வழிந்து கொண்டிருந்தது. இப்படிகூட இசையை கேட்டு ரசிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டே பணியாளர் கொண்டு வந்து வைத்த மதுபாட்டிலை தூக்கிப் பார்த்தான் ரமேஷ். ரசனைகள் மீதெல்லாம் விசுவுக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. “எல்லாத்தையுமே உன்னால மட்டும் தாண்டா ரசிக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டே அவன் முதுகில் விசு செல்லமாக குத்துவான். பக்கத்து மேசையில் குடித்துக் கொண்டிருப்பவர்களின் லாவகத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் ரமேஷ். தான் குடிக்கும் போது அதே லாவகத்தை மிகவும் துல்லியமாக செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவர்களுக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த வேலைப்பாடுகள் கொண்ட அழகான கண்ணாடி கோப்பையையே பார்த்துக் கொண்டிருந்தனர். அது நாள்வரை அவர்கள் மது அருந்திய சூழலை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொண்டனர். அவர்களுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. அந்நினைவுகளில் இருந்து மீள விசுவுக்கு உடனேயே குடிக்க வேண்டும்போல இருந்த்து. அழகிய கோப்பையில் நீர் போலவே இருந்த மதுவை ஊற்றினான். கண்ணாடி கோப்பையில் மது இருப்பதுபோலவே தெரியவில்லை. அதைப்பார்த்துக் கொண்டே, ”ங்கோத்தா பச்ச தண்ணி மாதிரி இல்ல இருக்கு” என ஆர்வமிகுதியில் சொன்னான். பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த குளிர்ந்த நீரை கோப்பையில் ஊற்றினான். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த குறுந்தாடிக்காரர் ஐஸ் துண்டை எடுத்து கோப்பையில் போட்டு கலக்குவதைப் பார்த்தனர். நான்கைந்து ஐஸ்துண்டுகளை அள்ளி கோப்பையில் ரமேஷ் போட்டான். கோப்பையினுள்ளே இருந்த மது வழிந்து கீழே சிந்திக்கொண்டிருந்த்து. அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்த விசு அவன் கோப்பையில் இருந்து வெளியில் வழியும் மதுவைப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே தலையில் தட்டிக்கொண்டான். எதிரில் இருப்பவர் இவர்களைப் பார்த்து சிரித்துக் விட்டு தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். அதைப் பார்த்த இவர்களுக்கு அசிங்கமாக இருந்தது. விசு இந்த முறை ஐஸ் துண்டை வெகு லாவகமாக எடுத்து தன் கோப்பையில் போட்டுவிட்டு அவனைப் பார்த்தான். அவன் நன்கு வறுக்கப்பட்டு அழகாக தட்டில் பரப்பப்பட்டிருந்த மாட்டிறைச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த முறை மிக தேர்ந்த குடிகாரனைப் போன்று மாறிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டே கோப்பையை எடுத்து கண்களை மூடி ஒரே மடக்கில் குடித்து கீழே வைத்தான். பின் ஒரு துண்டு மாட்டிறைச்சியை எடுத்து வாயில்போட்டு மெல்லத் தொடங்கினான். பக்கத்து இருக்கை குறுந்தாடிக்காரர் மதுக்கோப்பையை எடுத்துக்கொண்டு இவர்களின் இருக்கைக்கு அருகில் வந்து, இவர்களைப் பார்த்து சிரித்தபடியே இருக்கையில் அமர்ந்தார். இவர்கள் இருவரும் ஆஜானுபாகுவாக இருந்த அவரின் பூனைக்கண்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். அரைக்கால் சட்டையுடன்கூட மதுக்கூட்த்திற்கு வந்து மது அருந்த முடியும் என்று அவரைப் பார்த்த பின்பு இவர்கள் தெரிந்து கொண்டனர். முகத்தில் புன்னகையை படரவிட்டபடியே ”நீங்க தமிழ்நாடா?” என்று இவர்களைப் பார்த்துக்கேட்டார். இவர்கள் ஆமாம் என்பதுபோல தலையாட்டினர். “நா நெனைச்சேன்” என மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னார். இவர்களுக்கு அசிங்கமாக இருந்தது. மீண்டும் அவர் கோப்பையை எடுத்து ஒரு மிடரை பருகிவிட்டு அவர்களிடம் கேட்டார்: ”விஷத்தையா குடிக்கறீங்க?” அவர் வெடுக்கென இப்படி கேட்பார் என இவர்கள் நினைத்திருக்கவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அவர் அவர்களைப் பார்த்து, ”பொதுவா விஷத்தை தான் கண்ண மூடிக்கினு ஒரே மடக்கில் குடிப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா நீங்க என்னடா னா..” என்று இழுத்தார். தாங்கள் குடிக்கும் விதத்தை மறுபடியும் இவர்கள் நினைத்துப் பார்த்தனர். விஷம் போலத்தான் குடிக்கிறோம் என்று புரிந்தது. மதுவை மிடறு மிடறாகத் தான் அருந்த வேண்டும் என்று அப்போது அவர்களால் தெளிவாக உணரமுடிந்த்து. அவரைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் போல இருந்தது இவர்களுக்கு. கொஞ்ச நேரம் கழித்து கையை அசைத்தபடியே அவர் எழுந்து சென்றார். இவர்கள் முள்கரண்டியை எடுத்து, தட்டில் இருந்த கறியை குத்தி வாயில் போட்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிடும் போது சத்தம் வரக்கூடாது என்பதில் ரமேஷ் மிகவும் கவனமாக இருந்த்தை உணரமுடிந்தது.

”ரமேஷ் சார் ஏன் நின்னுட்டு இருங்கீங்க?” என்று பணியாளர் கேட்டவுடன் தான் நினைவு திரும்பி இயல்பிற்கு வரமுடிந்தது இவனால். ”விசு சார் வரலியா?” என்று அவர் கேட்கவும் தான் இவனுக்கு தன்னுடன் இங்கு நின்று கொண்டிருந்த விசுவின் சிந்தனையே வந்தது. தெற்கு ஓரம் வைக்கப்பட்டிருந்த வாஷ் பேசினில் கையை அளம்பிவிட்டு அப்போது தான் விசு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். ”உங்களதான் சார் தேடிட்டு இருந்தேன்” என்று விசுவிடம் சொல்லிக்கொண்டே பக்கத்து இருக்கையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தவருக்கு சிகரெட் எடுத்துக் கொடுத்தான் பணியாள். பின் இவர்கள் பக்கம் திரும்பி ”சார் இந்த முறை மட்டும் அட்ஜஸ் பண்ணிக்கிங்க” என்று சொல்லிவிட்டு இவர்கள் அமர மேசையை தயார் செய்யத் தொடங்கினான். வெளியில் மழை வேகத்தோடு சுழன்று சுழன்று பெய்து கொண்டிருந்தது. மேசை தயார் ஆனதும் இவர்கள் அமர்ந்தனர். விசு தம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டு பணியாளரிடம் ”மவுண்ட் கேஸ்டில் இருந்தா ஒரு ஆப் கொடுங்களேன்” என்றான்.அவன் சரி என்பது போல தலையாட்டிவிட்டு, “ சார் சைட் டிஷ்” என்று கேட்டான். ”என்ன இருக்கு?” என்று ரமேஷ் கேட்டான். ”ஒயிட் போர்க் ரெடியா இருக்கு சார்” என்று அவன் கூறினான். ”நெறைய பெப்பர் போட்டு ஒரு பிளேட் கொண்டு வாங்க” என்று விசு அவரிடம் சொல்லிவிட்டு மேசையில் வைத்திருந்த விலைப்பட்டியலை புரட்ட்த்தொடங்கினான். புதுப் புது உணவு வகை மற்றும் அவற்றின் பெயர்களின் மீதும் அவனுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கவேசெய்தது. ரமேஷ் சிறிய கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த வறுத்த மணிலா பயிறை எடுத்து வாயில் போட்டு மெல்லத் தொடங்கினான். ஒவ்வொரு பக்கமாக புரட்டி புரட்டி விதவிதமான மதுவகையின் பெயர்களையும் உணவின் பெயர்களையும், ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்தான் விசு. அப்போது இவனுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தவன் மேசைமீதிருந்த மதுப் புட்டியை பார்த்தபடியே, “ ன் ங்கோத்தா எவ்ளோ அடிச்சாலும் ஏறமாட்டுகிது” என குழறி குழறி பேசிக்கொண்டிருந்தான். அவன் உலரலை கேட்ட விசுவின் நினைவுகள் பின்னோக்கிச் சுழலத் தொடங்கின.

மூலநோய் அவனை பாடாய் படுத்திய நாட்கள் அவை. மலம் கழிக்கவே அச்சப்பட்ட நாட்களாக இருந்தன. நண்பர்களுடன் வீரங்கிபுரம் ஏரிக்கு செல்லும் அவன் மலம் கழிக்க அமர்ந்தால் மீண்டும் எழுந்து வர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு அவன் சிரமப்படுவதைப் பார்க்கவே சங்கடமாக இருக்கும். மலம் கழித்து முடித்தவுடன் வெளிவரும் ரத்தத்தை முதல் முறை கண்டபோது அவனுக்கு பயமாக இருந்தது. நாளாக நாளாக அதற்கு அவன் பழகி கொண்டான். மலம் கழித்து முடித்து கால் கழுவும் போது அவன் எழுப்பும் சத்தம் சினம் கொண்ட நாகம் எழுப்பும் சத்தம் போலவே இருக்கும். பல கைவைத்தியங்கள் செய்து பார்த்தான். கற்றாழை சாப்பிட்டிருக்கிறான். படுக்கச் செல்லும் முன் வெந்தயப் பொடியை விழுங்கி இருக்கிறான். ஆங்கில மருத்துவர்கள் வழங்கிய பல மலமிலக்கிகளை எடுத்துக்கொண்டிருக்கிறான். இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் பழையபடியே மூலநோய் தன் முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கும். எப்போதும் அவன் பலவீனமாகவே இருக்கத் தொடங்கினான். சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லி அவனுக்கு சில மருத்துவர்களின் பெயர்களை கொடுத்தனர். ஆனால் மேலும் சிலர் அறுவைச் சிகிச்சை வேண்டாம் என்று கூறினர். என்னதான் அறுவைச் சிகிச்சை செய்தாலும் மறுபடியும் மறுபடியும் மூலம் வளரும் என்று அவனிடம் கூறினர். அதனால் அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள பயமாகவும் இருந்தது.

அவனுடைய நண்பர்கள் அவனை ‘மூலம்’ என்றே கூப்பிடத் தொடங்கி இருந்தனர். அவர்கள் அப்படி அழைப்பது ஆரம்பத்தில் அவனுக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது. தொடர்ந்து அவர்கள் அவ்வாறே கூப்பிடவும் இவனுக்கும் பழகிப்போனது. அன்றும் வழக்கம்போல அவர்கள் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது அவனைக் காட்டி ”என்னடா மூலம் இவ்ளோ சூடா டீ குடிக்கிது, பின்னாடி இருக்கிற ரெட் லைட் வெடிச்சிடப்போவுது” என தென்னரசு கிண்டலாகக் கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதை அருகில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த தாண்டவராயன் மாமா பார்த்துக் கொண்டிருந்தார். அன்று மாலை வீட்டுக்கு வந்தபோது ”ஏங்கா தம்பிய மூலம்னு கூப்பிடறாங்க?” என்று அவன் அம்மாவிடம் அவர் கேட்டார். அம்மா ஆரம்பத்திலிருந்தே கதையைத் தொடங்கி விலாவாரியாக சொல்லி முடித்தாள். அவர் அவனை ஏற இறங்கப்பார்த்தார். இதுதான் பிரச்சனையா என்று கேட்டபது போல் இருந்தது அவரது பார்வை. “நத்தை பஷ்பம் சாட்டிருக்கியா?” என்று அவர் அவனைப் பார்த்துக்கேட்டார். ”நத்தை பஷ்பம்னா என்ன?” என்று அவன் திரும்பக் கேட்டான். அவனுக்கு அது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அது குறித்த அறிவு அவனுக்கு இல்லை என இவர் உணர்ந்த பின் அவர் தோரணை சற்று மாற்றம் கொள்ளத் தொடங்கியது. தன்னை குரு ஸ்தானத்தில் இருத்திக் கொண்டு “அது ஒரு மருந்து தம்பி. நாட்டு மருந்து கடையில கெடைக்கும். வாங்கி சாப்பிட்டுபாரு மூலம் கையால புடிச்ச மாதிரி அப்படியே நிக்கும்” என்று நிறுத்தி தெளிவாக கூறினார். வலியில் இருந்து மீளப்போகிறோம் என்று நினைக்கவே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. ”எங்க கெடைக்கும்?” என்றான். ”எல்லா நாட்டு மருந்து கடையிலும் இருக்கும் தம்பி” என்றார் இவர். ”நம்ம தனகோட்டி செட்டியார் கடையில கெடைக்குமா?” என்று மறுபடியும் கேட்டான். அவர் கிடைக்காது எனும் விதமாக உதட்டைபிதுக்கி காண்பித்தார். அதன் பிறகு யாரிடம் பேசினாலும் நத்தைப் பஷ்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். யாரிடமிருந்தும் அவனுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மனம் சோர்வடையத் தொடங்கினான். ஆனாலும் எப்படியாவது நத்தைப் பஷ்பத்தை சாப்பிட்டே தீர்வது என்று தொடர்ந்து விசாரிக்கத் தொடங்கினான். ”இங்கலாம் எங்கேயும் கெடைக்காது டா விசு. வேலூர் பக்கத்துல ஆத்துவாம்பாடில ஒரு வீட்ல கொடுக்கறாங்க” என்று சொல்லிவிட்டு, “ நத்தை பஷ்பபத்துக்கு போயி எதுக்கு இம்புட்டு மெனக்கிடற பேசாம நத்தைய புடிச்சி வறுத்து கொடுக்கச்சொல்லி சாப்புடுறா. கையால புடிச்ச மாதிரி நிக்கும்” என்று சொல்லிவிட்டு அவனை ஊடுருவப் பார்த்தார். அவன் மனதில் நத்தைகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. அவை பாம்புக்கு தண்ணீர் கொண்டு செல்கின்றன என்று இளம் வயதில் அம்மா கூறியது இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. தனக்கு நத்தைகறி வேண்டும் என்று அவன் தன் தாய் வழிப் பாட்டியிடம் கூறினான். அவள் தான் எப்பொழுது பார்த்தாலும் வயலே கதியாக கிடப்பவள். “பார்வை வேற மசண்டலா இருக்கு. இந்த வயசுல என்னால எப்பிடா நத்தை புடிக்க முடியும்?” என்று இவனிடம் கேட்டாள். சிறிது நேரம் கழித்து அவளே ”போயி சித்திக்கிட்ட சொல்லுடா அவ புடிச்சிட்டு வந்து தருவா” என்று சொன்னாள். எப்படியாவது வலியில் இருந்து மீண்டால் போதும் என்று இருந்தது அவனுக்கு. சைக்கிளை எடுத்துக்கொண்டு வீரங்கிபுரத்தில் இருக்கும் தன் சித்தி வீட்டிற்கு சென்றான்.

இவன் சித்தி வீட்டை அடையும்போது அவள் குழம்பு கூட்டிக் கொண்டிருந்தாள். இவன் சைக்கிளை நிறுத்தவும் அவள் எழுந்து நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு இவனை வரவேற்கவும் சரியாக இருந்தது. குடிக்க தண்ணீர் கொடுத்தாள். உட்கார்வதற்கு தரையில் பாயை விரித்துப் போட்டாள். பாய், தலையணை மற்றும் போர்வைகள் இருந்த பரண் புகைபடிந்து கருப்பாக மாறி இருந்தது. “இப்ப தான் சித்தி வீட்டுக்கு உனக்கு வழி தெரியுதாக்கும்?” என்று இவனிடம் கேட்டாள். அவள் கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென்று இவனுக்கு தெரியவில்லை. அமைதியாக இருந்தான். அடுப்பில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ”சித்தப்பாவ எங்க காணோம்?” என்று கேட்டான். ”எங்க போயி இருக்கும், குடிக்கத்தான்” என்று அலுப்புடன் சொன்னாள். ஏன் கேட்டோம் என்று இருந்தது இவனுக்கு. தட்டில் அரிந்து வைத்திருந்த காய்கறிகளை எடுத்து குழும்புச் சட்டியில் போட்டு வதக்கத் தொடங்கினாள். தெருவில் நின்றிருந்த தென்னை காற்றின் போக்கிற்கேற்ப சாய்ந்து ஆடிக் கொண்டிருந்தது. ஒடிந்து விழுந்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது இவனுக்கு. நார்க் கட்டில் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டின் காலடியில் அதன் குட்டி படுத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சித்திக்கும் குழந்தை இல்லை எனும் நினைவு இவனுள் தோன்றியது. அடுப்படியில் இருந்த அவளைப் பார்த்தான். குழந்தை இல்லை எனும் துயரம் அவள் முகம் முழுக்க வரிவரியாக படர்ந்து கிடப்பதாகத் தோன்றியது அவனுக்கு. ”ஏன் சித்தி இன்னும் உனக்கு தம்பி பாப்பா பொறக்கல?” என்று சின்ன வயதில் இவன் கேட்டு அம்மாவிடம் அடிவாங்கியது ஞாபகத்திற்கு வந்து சென்றது. நார்க்கட்டிலை எடுத்துப்போட்டு இவன் அமர்ந்து கொண்டான். சமையல் செய்தபின் குளித்து விட்டு இவன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் அவள். அவள் மேலிருந்து கசிந்த சோப்பு வாசனை அவன் மூக்கை ஊடுறுவிச் சென்றது. இவன் தலையை வருடிக் கொண்டே ”அடிக்கடி வந்துட்டு போயேன்டா” என்று அவள் சொன்னாள். இவன் சரி என்பது போல தலையாட்டினான். ”சித்தி எனக்கு நத்தை வேணும்” என்று அவளைப் பார்த்துக்கொண்டே சொன்னான். ”இதுக்குதான் வந்தயா? நா என்னைதான் பாக்க வந்தயோனு நெனைச்சேன்டா” என்று கேட்டாள். அவள் அப்படி கேட்ட்து இவனுக்கு சங்கடமாக இருந்த்து. அவன் முகம் மாறுவதை உணர்ந்த இவள், “சும்மா சொன்னேன்டா கஷ்டப்படாத” என்று அவனிடம் சொன்னாள். காற்று சில்லென வீச ஆரம்பித்திருந்தது. “இன்னுமா அது சரியாவல?” என்று கேட்டுவிட்டு ”நத்தைய புடிச்சி வறுத்து தறேன். சாப்பிட்டுட்டு சரியானப் பெறவு போலாம்” என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவனுக்கு அங்கு தங்குவதென்றாலேயே எட்டியாக கசக்கும். எந்நேரமும் சிடுசிடுவென முகத்தை வைத்திருக்கும் சித்தப்பாவின் முகம் வேறு அவன் நினைவில் வந்து சென்றது. அவன் தயங்கியபடியே “நத்தைய புடிச்சி குடு சித்தி . வீட்டுக்கு போனா அம்மா செஞ்சி கொடுக்கும்” என்று அவளிடம் சொன்னதும், ”யாரு உங்கம்மா வா செஞ்சி கொடுக்கும்?” என்று அவள் நக்கலாக அவனிடம் கேட்டாள் . பின் அவனிடம் ”நானே பதமா செஞ்சி தறேன். ஒரு நாள் இருந்து சாட்டுட்டு போடா” என்று சொன்னாள். அவன் சரி என்பது போல தலையாட்டினான்.

தள்ளாடிக் கொண்டே சித்தப்பா வீடு திரும்பிய போது, இவன் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தான். அவர் யாரையோ கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே வந்தார். அடுப்படியில் அப்படியே அமர்ந்தார். கட்டிலை உற்றுப் பார்த்து விட்டு இவளைப் பார்த்தார். ”விசு வந்திருக்கான்” என்று பதில் சொல்லிவிட்டு சாப்பிடத் தட்டை எடுத்து வைத்தாள். அவர் மீது சாராய நெடி வீசிக் கொண்டிருந்தது. சாதத்தைப் போட்டு குழம்பை ஊற்ற குனிந்தவளுக்கு சாராய நெடி குப்பென்று அடித்தது. அவளுக்கு குமட்பிக் கொண்டு வருவது போல இருந்தது. கீழும் மேலுமாக சாதத்தை சிந்திக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். வாசலில் போடப்பட்டிருந்த பாயில் போய் படுத்துக் கொண்டான். இவள் சாப்பிட்டு பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். இரவு விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அசதியில் படுத்தவுடன் கண்கள் செருக ஆரம்பித்தன அவளுக்கு.
மறுநாள் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை அவள் முடித்த பின்பே விசு எழுந்தான். சிறிது நேரம் கட்டிலில் அப்படியே அமர்ந்து கொண்டிருந்தான். அவள் காபி போட்டு எடுத்து வந்து அவனுக்கு குடிக்கக்கொடுத்தாள். அவர் தேனீர் குடிக்க தெரு முக்கிற்கு சென்று விட்டிருந்தார். ”சித்தப்பாவை பாக்கவே முடியல” என்று அவளிடம் சிரித்துக் கொண்டே கூறினான். அவனுக்கு சாப்பாடு எடுத்துக் வைத்துவிட்டு ஆட்டை அவிழ்த்து கையில் பிடித்துக் கொண்டு கழனி நோக்கி நடக்க தொடங்கினாள். எப்போது இங்கு வந்தாலும் பகல் முழுக்க வீட்டில் தனியே அடைந்து கிடக்க வேண்டியது தான் என்று மனதுக்குள் முனகிக் கொண்டே எழுந்து குளிக்க சென்றான். அப்போது அவர் தேனீர் அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து டீசல் கேனையும், பெல்ட்டையும் எடுத்துக் கொண்டு கழனிக்கு புறப்பட்டார். இவனைப் பார்த்து ஒரு சிரிப்பு. அவ்வளவு தான் அவரிடமிருந்து வரும். வேறெதுவும் பேசமாட்டார் என்பது அவனுக்கும் தெரியும். ”அவுங்க வூட்டு ஜெனத்த மட்டும் உழுந்து உழுந்து கவனிக்கிறாங்க அந்த ஆளு” என்று சித்தி அம்மாவிடம் அடிக்கடி முறையிடுவாள். அவள் சொல்வதை அம்மா எப்போதும் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. ஆனால் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருப்பாள்.

பகல் முழுக்க தனியாளாக இவன் நேரத்தைக் கடத்த பெரிதும் சிரமப்பட்டான். தெருவில் மாடுகள் மேய்ந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அவள் வீட்டிற்கு வந்தாள். ஆட்டை வேம்படியில் கட்டினாள். அவசர அவசரமாக உலைவைத்து சாதம் வடித்தாள். கஞ்சித் தண்ணீரில் உப்பைப்போட்டு ஆற்றி இவனுக்கு குடிக்கக் கொடுத்தாள். அவளும் குடித்தாள். பின் கொண்டு வந்திருந்த நத்தைகளை சட்டியில் போட்டு நன்கு கொதிக்க வைத்து கறியை மட்டும் பிரித்தெடுத்துவிட்டு ஓட்டை அப்புறப்படுத்தினாள். காரம் அதிகம் இல்லாமல் சட்டியிலேயே வறுத்தெடுத்து தட்டில் வைத்தாள். நத்தைக்கறியின் மணம் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. அதுவரை நத்தையை சாப்பிட்டதில்லை என்பதால் எப்படி சாப்பிடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். வேலைகளை முடித்து குளித்து விட்டு அவள் வந்தபோது அவரும் வந்து விட்டிருந்தார். சாராயக் கடைக்கு போய்விட்டு அதற்குள்ளாகவா வந்துவிடமுடியும் என்று இவன் யோசித்தான். அவனுக்கு தட்டில் சாதத்தை போட்டு, நத்தை வறுவலை எடுத்து சாதத்தின் மீது போட்டாள். அவன் பிசைந்து உண்ணத் தொடங்கினான். “ஏங்க நத்த செஞ்சிக்கிறேன் சாப்பிடறீங்களா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டாள். வேண்டாம் என்பதுபோல அவர் தலை ஆட்டிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினார். சிரித்துக் கொண்டே அவனுக்கு வாஞ்சையுடன் சாப்பாடு எடுத்து வைக்கும் அவள் முகம் அவரை மிகவும் சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது. தன்னிடம் ஏன் அவள் அப்படி நடந்து கொள்வதில்லை என்று எண்ணிக் கொண்டே பெருமூச்சை வெளிப்படுத்தினார். “நத்தை நல்லா இருக்கா டா” என்று அவள் விசுவின் தலையை தடவிக்கொண்டே கேட்ட்து அவருள் சந்தேகத்தின் சரடில் முறுக்கையேற்றியது. அப்போது விசுவின் மீதும் ஏனோ அவருக்கு ஆத்திரம் பொங்கியது. சாராயக்கடை நோக்கிச் செல்லும் பாதையில் அவர் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

சாப்பிட்டு முடித்து கை அலம்பிக்கொண்டு இவன் கட்டிலில் அமர்ந்து கொண்டான். அவள் வேலைகளை முடித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். சாதத்தையும், குழம்பையும் பிசைந்து சாப்பிடத் தொடங்கினாள். மீதமிருந்த நத்தையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அவருக்கும் வைத்தாள். அளந்து அளந்து ருசியாக சாப்பாடு செய்திருக்கும் தன் சித்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவள் சாப்பிட்டு விட்டு, “நீ படுத்து தூங்குடா. எனக்கு அசதியா இருக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பாயை விரித்து படுத்துக்கொண்டாள். வெகு நேரம் கழித்து வந்த அவர் தட்டை எடுத்து சாதத்தைப் போட்டு குழம்பை ஊற்றினார். தொட்டுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்று பாத்திரங்களை திறந்து பார்த்தார். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் நத்தை வறுவல் இருந்தது. அதைப்பார்த்ததும் அவர் மனம் எரிச்சல் அடைந்தது. அவள் மீது ஆத்திரம் ஏற்பட்டது. ஒருவித சங்கடத்துடன் சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு வெளியில் போட்டிருந்த பாயில் படுத்துக்கொண்டார். இவன் தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டே இருந்தான். நிலவெளியில் தென்னை மரக் கீற்று அசைவது ரம்மியமாகத் தோன்றியது. பாயில் சிறிது நேரம் படுத்துக் கொண்டிருந்தவர் எழுந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. தன்னை யாரோ தொடுவதாக உணர்ந்தவள் விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவள் அருகில் சென்று அவளை தன் பக்கம் இழுத்தார் அவர். அவர் பிடியில் இருந்து வலுக்கட்டாயமாக தன்னை விடுவித்துக் கொண்டிருந்தாள் அவள். அவர் விடாமல் அவளை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், ”இன்னைக்கி வேணாம் போயி படுத்து தூங்கு” என்று எரிச்சலுடன் அவரைப் பார்த்து சொன்னாள். போதை மிகுதியால் அவனுக்கு ஆத்திரமாக இருந்த்து. வார்த்தைகள் தடித்தன. நாக்கு குழறிக் கொண்டிருந்தது. ”இன்னிக்கி ஏண்டி தேவிடியா வேண்டானு சொல்ற?” என்று ஆத்திரத்துடன் கேட்டார். அவர் வார்த்தைகள் ஈட்டியைப் போல அவள் நெஞ்சில் இறங்கின. அவள் வலியால் துடித்தாள். அவர் மேலும் மேலும் கெட்ட வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே இருந்தார். ”வாய மூடுடா குடிகார கம்னாட்டி” என்று அவரைப் பார்த்து சத்தம் போட்டு கத்தினாள். ”யாரடி குடிகாரன்னு சொல்ற தேவ்டியா?” என்று கத்திக் கொண்டே எழுந்து அவளை எட்டி உதைத்தார். அவள் அலரிக் கொண்டு கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த இவன் எழுந்து கதவருகே வந்து நின்றான். உள்ளே இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டான். உள்ளே செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் தவித்தான். கணவன் மனைவிக் கிடையில் நடக்கும் சண்டை. தானாக சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டான். உள்ளே அவர்குரல் உக்கிரத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது. ” என்னிது வேணாம்னா வேற எவனுதுடி கேக்குது உனக்கு? என்று திரும்பத் திரும்பக் கத்திக் கொண்டிருந்தர். அவள் விசும்பிக் கொண்டிருப்பதையும் அவனால் நன்கு கேட்க முடிந்தது. அவர் விடாமல் அசிங்கமாகவே பேசிக் கொண்டிருந்தார். ”எவன பாரு பல்ல இளிச்சிக்கினு நிக்க வேண்டியது” என்று அவர் வாயை இளித்துக்காட்டி சொன்ன போது, அவளும் தாங்க முடியாமல் ”போடா பொட்ட பையா” என்று சொல்லி அவர் முகத்தில் காரித் துப்பினாள். அவள் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவன் கோபம் மேலும் பீறிட்டெழுந்தது. தலைக்கேறிய போதையில் என்ன பேசுகிறோம் என்று தெறியாமலேயே அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன. ”என்னிக்காவது எனக்கு சோறு ஒழுங்கா போட்டிருக்கியா டீ. அக்கா பையனுக்கு மட்டும் கொழஞ்சி கொழஞ்சி போடுற. அவன் ஒனக்கு அக்கா பையனா இல்ல ஆம்படையான டீ” என்று கத்திக் கொண்டு அவளை அடிக்க கையை ஓங்கினார். அவள் குனிந்த வேறு பக்கம் சாய்ந்து கொண்டாள். இவர் போய் சுவரில் மோதிக் கொண்டார். சித்தப்பாவின் வார்த்தைகளை கேட்டதும் அவனுக்கு நெஞ்சு வெடித்து விடும்போல இருந்தது. உண்மையில் போதையில் தான் அப்படி பேசுகிறாரா என்று யோசித்தான். எப்படி சிந்தனையை மாற்றினாலும் மீண்டும் மீண்டும் அவ்வார்த்தைகளிலேயே அவன் மனம் அமிழ்ந்து கொண்டிருந்தது. ஒரு புழுவைப்போல அவன் நெளிந்து கொண்டிருந்த போது உள்ளிருந்து அவள் அழும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

விடிய காலையிலேயே புறப்பட்டுத் தயாராக இருந்த விசுவிடம், ”ஏன்டா கால சாப்பாடு சாப்பிட்டு போலாமில்ல” என்று சித்தி கேட்டாள். ”பரவா இல்ல சித்தி” என்று சொல்லி அவன் புறப்படுவதிலேயே குறியாக இருந்தான். அங்கு அதற்குமேல் அவனால் இருக்க முடியவில்லை. சித்தியை பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருந்த்து. இரவு நடந்த சம்பவங்களும் பேச்சுகளும் தொடர்ந்து அவன் மனத் திரையில் அசைந்து கொண்டே இருந்தன. ”இன்னும் ரெண்டு வாரத்துக்கு வந்து நத்த கறி சாப்பிட்டு போடா மூலம் தழும்பே இல்லாம ஆறிடும்” என்று இவனிடம் சொன்னாள். அவன் எந்த உணர்வையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் ”சரி சித்தி” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினான்.

முள் கரண்டியை எடுத்து விசுவுக்கு எதிரில் இருந்த சில்வர் தட்டில் இரண்டு தட்டு தட்டினான் ரமேஷ். தட்டில் இருந்து எழுந்த ஒலியின் அதிர்வுகள் விசுவை பழைய நினைவுகளில் இருந்து மீளச் செய்தது.சித்தப்பாவின் நினைவில் இருந்து மீள அவன் மீதம் வைத்திருந்த மதுவை எடுத்து அருந்தினான்.இந்த நேரத்தில் ஏன் தான் சித்தப்பாவை நினைத்தோமோ என்று நொந்துகொண்டான் விசு. அவரின் அசிங்கமான பேச்சுகள் இவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. மிளகும் பூண்டும் போட்டு நன்கு வறுக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சித் துண்டை எடுத்து வாயில் போட்டு ருசித்து சாப்பிட்டுக் கொண்டே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அகன்றத் திரை தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினான். மாட்டிறைச்சியின் சுவை அவன் நாவெங்கும் பரவவும்,இவன் ரமேஷிடம் “இன்னும் கொஞ்சம் ஊத்துடா” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த படத்தைப் பார்க்கத் தொடங்கினான். அதில் வேக வைக்கப்பட்டிருந்த ஷுவை சாப்ளின் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கத்தியும் முள்கரண்டியும் கொண்டு சாப்ளின் ஷுவின் ஆணிகளை பிடுங்கி லாவகமாக சாப்பிடுவதை இவன் சிரித்த படி பார்த்துக் கொண்டே ரமேஷை சீண்டி படத்தைப் பார்க்கச் சொன்னான். அப்போது முள்கரண்டி கொண்டு ஷுவின் நாடாக்களை நூடுல்ஸைப் போல நுட்பத்துடன் எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார். சாப்ளின் முகபாவங்களை பார்த்து இவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். சாப்ளின் படத்தைப் பார்த்து இவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதைக் கண்ட குறுந்தாடிக்காரர் அவர்களிடம் ”அந்த நடிகர் யார் தெரியுமா?” என்று கேட்டார். ”சாப்ளின்” என்று சொல்லிவிட்டு “இதுகூடவா சார் எங்களுக்கு தெரியாது?” என்று விசு கேட்டான். ”என்ன படம்னு தெரியுமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே ”சொல்லிட்டீங்கன்னா டக்கீலா ஒரு புல் வாங்கித்தறேன்” என்றும் சொன்னார். “ஷக்கீலானா தெரியும்” என ரமேஷ் மெல்லிய குரலில் சொன்னான். தங்களுக்கு தெரியாதென தொடக்கத்திலேயே அவர்கள் உதட்டை பிதுக்கிக் காண்பித்தனர். அவர் தன் கோப்பையில் இருந்த மதுவை காலி செய்துவிட்டு ”கோல்ட் ரஷ்” என்று கூறிவிட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார். ”சும்மா கதை வுடராறோ?” என்று கிசுகிசு வென இவனிடம் சொன்னான் ரமேஷ். அதற்கு அவனைப் பார்த்துக் கொண்டே மெலியதாக சிரித்தான் விசு.

வெளியில் மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. மதுக் கூடம் முழுக்க கூட்டம் நிரம்பி இருந்தது. மெல்லிய ஒலி அளவில் வழிந்து கொண்டிருக்கும் கருவி இசைக்கேற்ப பக்கத்து இருக்கைகாரர் மேசையில் மெதுவாக தட்டிக் கொண்டிருந்தார். அவரைப் போல இசையையும் படங்களையும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டே ரமேஷ் எஞ்சியிருந்த மதுவை எடுத்து குடித்துவிட்டு வறுத்த முந்திரியை எடுத்து வாயில் போட்டு மென்றான். இசை பெருகி மழையின் குளுமையை அடர்த்தியாக்கிக் கொண்டிருந்தது. இவர்கள் மேலும் ஒரு அரை பாட்டில் மதுவுக்கு சொல்லி அனுப்பினர். மதுபாட்டில் கொண்டு வர சென்ற பணியாளரை மீண்டும் அழைத்த விசு ”சார் ரெண்டு அரை வேக்காடு” என்று சொன்னான். போதை மெல்ல அவர்களுக்குள் உருதிரண்டுக் கொண்டிருந்தது. அவர்கள் கண்கள் மேல் நோக்கி செருக ஆரம்பித்திருந்தன.அப்போது தொலைக்காட்சியில் பாண்டி ராம் சில்க்ஸ் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்த்து. அதில் நடித்திருந்த பெண்ணின் முகம் விசுவிற்கு அவன் அக்காவை நினவூட்டியது. ஆழ்ந்து யோசித்துக் கொண்டே தட்டில் இருந்த மாட்டிறைச்சியை முள்கரண்டியால் குத்தி எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டே வெகு நாட்களாக தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி ரமேஷிடம் கேட்கலாமா என்று யோசித்தான். இப்போதே கேட்டுவிடு. தள்ளிப் போடாதே என்று அவன் உட்கொண்டிருந்த மது எற்படுத்திய போதை அவனை தூண்டிக் கொண்டிருந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தான். அவன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். சீக்கிரம் கேள் என்று இவன் மனசு அடித்துக் கொண்டது. தன் எதிரே கோப்பையில் எஞ்சியிருந்த மதுவை எடுத்து மடக்கென குடித்து விட்டு ”ஏன்டா அக்காவையும் உன்னையும் பத்தி ஊர்ல பேசிக்கிறது உண்மையா?” என்று விசு அவனைப் பார்த்துக் கேட்டான். சட்டென இவன் அப்படி கேட்டதும் ரமேஷக்கு தூக்கி வாரிப்போட்டது. போதை படர்ந்திருந்த முகத்திலும் பயத்தின் ரேகைகள் துல்லியமாக தெரிந்தன. விசுவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவன் தலை கவிழ்ந்து இருந்தான். கணவனைப் பிரிந்து வீட்டிலேயே இருக்கும் தன் அக்காவின் மங்களகரமான முகம் விசுவின் மனதில் மறுபடியும் தோன்றி மறைந்தது. பணியாளர் மதுவையும், அரை வேக்காட்டையும் கொண்டு வந்து வைத்து விட்டு “வேற எதுவும் வேணுமா சார்?” என்று கீழே குனிந்து கேட்டார். ”தேவைனா கூப்பிடறோம்” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு பாட்டிலைத் திறந்து இருகோப்பையிலும் மதுவை ஊற்றிக் கொண்டிருக்கும் போது அவன் அழுது கொண்டிருப்பதைக் கண்டான். இவன் மனம் கணக்கத் தொடங்கியது. என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். இவன் கோப்பையில் இருந்த மதுவில் நீர் ஊற்றி ஐஸ் துண்டுகளை எடுத்து போட்டு கலக்கிக் கொண்டிருக்கும் போது அவன் தள்ளாட்டத்துடன் எழுந்து இவன் கைகளைப் பிடித்துக் கொண்டு ”என்ன மன்னிச்சிடு டா விசு” என்று அழுது கொண்டே கூறினான். அவன் கண்களில் இருந்து பெருக்கெடுத்த கண்ணீர் இவன் கைகளில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது. கைகளை பிடித்துக் கொண்டு அவன் அவ்வாறு சொன்னதும் இவனுக்கு மனம் ரணமாகி வலிக்கத் தொடங்கியது. இனம் புரியாத ஒரு சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டதாக நினைத்தான். மதுக் கூடத்தை விட்டு சட்டென கிளம்பிவிட வேண்டும் என்று தோன்றியது. அவன் கண்களில் நீர் வழிய தேம்பிக் கொண்டிருந்தான். அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மேசையை வெறித்துப் பார்த்த படி அழுது கொண்டிருந்தான். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் சிறிது நேரம் அப்படியே இருந்தனர். பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த இசை அவனுள் துக்கத்தின் அடர்த்தியைக் கூட்டிக் கொண்டிருந்த போது இவன் ”சரி எடுத்து குடிடா” என்று அவனிடம் சொன்னான். அவன் அமைதியாக இருந்தான். மீண்டும் இவனே ”சொல்றேன் இல்ல எடுத்து குடி டா” என்று அவனிடம் சொன்னான். மதுக்கோப்பையை எடுக்க அவன் கை நீட்டிய போது அவன் நடுங்கும் கரத்தை இவன் பார்த்தான். அவன் கோப்பையில் இருந்த மதுவை ஒரே மடக்கில் குடித்து விட்டு கீழே வைத்து விட்டு முள் கரண்டியால் ஒரு துண்டு மாட்டிறைச்சியை எடுத்து வாயில் போட்டு மென்றான். இவனை பார்க்க அவனுக்கு சங்கடமாக இருந்தது. பேசுவதற்கான எந்த சொற்களும் அவனிடம் இல்லாமல் இருந்தன. பாட்டிலில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து ஒரு மிடர் குடித்து விட்டு வைத்தான். வெளியில் மழையின் சட சடப்பு கொஞ்சம் மட்டுபட்டிருப்பதாகத் தோன்றிய போது விசு எழுந்து கழிப்பறை நோக்கிச் சென்றான். பாட்டிலில் இருந்த மதுவை எடுத்து தன் கோப்பையில் ஊற்றி கொஞ்சமாக நீர் ஊற்றி ரமேஷ் குடித்துவிட்டு கீழே வைக்கும்போது இவன் கழிப்பறையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். அதிகமாக மதுவை ஊற்றிக் குடித்ததால் அவன் வாய் குழறியபடியே பேசத் தொடங்கினன். இவன் வந்து எதிரில் அமர்ந்து தன் கோப்பையில் கொஞ்சம் மதுவை ஊற்றிக் கொண்டு அவனிடம் வேண்டுமா என்று கேட்டான். அவன் வேண்டும் என்பது போல தலையாட்டினான். அவனுக்கும் சிறிது ஊற்றிவிட்டு பாட்டிலில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து இரு கோப்பையிலும் ஊற்றினான். அவன் எடுத்து மடக்மடக்கென குடித்து கீழே வைக்கும்போது ”அக்கா தாண்டா கூட்டிச்சி.. நானா போகல” என்று வாய் குழறி குழறி பேசினான். அவன் சொல்லச் சொல்ல இவனது கரங்கள் நடுங்கத் தொடங்கின. கூரிய ஊசியைக் கொண்டு யாரோ தொடர்ந்து தன்னை குத்திக் கொண்டிருப்பதாக உணர்ந்தவன், கோப்பையில் இருந்த மதுவை எடுத்துக் ஒரே மடக்கில் குடித்தான். மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவன் அப்படியே மேசையில் சரிந்தான். வாயில் இருந்து ”அவுங்கதாண்டா என்ன கூப்டாங்க. நானா போவல” என்ற சொற்கள் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தன. அதற்கு மேல் இவனுக்கு குடிக்கத் தோன்றவில்லை. இசை, நடமாட்டங்கள், பேச்சொலி அனைத்தும் இவனுக்கு மேலும் தொந்தரவு கொடுப்பதாகவே இருந்தன. தலையை குனிந்து மேசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.அதீத போதையால் இவனுக்கு தலை சுற்றுவது போல உணர்ந்தான். கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான். பின்னனியில் இசை மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது. மழை முற்றிலுமாக நின்று விட்டிருந்தது. கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வருவதும் போவதுமாக இருந்தனர் சிலர். அக்கா அழைத்தால் இவனுக்கு எப்படி சம்மதிக்க மனது வந்த்து என்று யோசித்தவனுக்குள் கோபம் எரிமலையென உருக்கொள்ளத் தொடங்கியது. அக்காவைப் பற்றி நினைக்கவும் அருவருப்பாக இருந்தது அவனுக்கு. மொத்த கோபமும் எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் மீது திரும்பியது. தட்டில் கிடந்த முள்கரண்டியை எடுத்து ”தேவ்டியா பையா” என்று கத்திக்கொண்டே அவன் கழுத்தில் இரண்டு முறை குத்தினான். ரத்தம் பீறிட்டுக்கிளம்ப அவன் துடிதுடித்துக்கொண்டே கத்தியபடி கீழே சரிந்தான். கழுத்திலிருந்து ரத்தம் இறங்கி தரையில் பரவிக்கொண்டிருந்தது. அவன் பார்வை இவன் மீதே நிலைத்திருந்தது. ”ஒன்மோர் டிரிங்” என்று மேசையைத் தட்டி பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் தூரத்தில் நின்றிருந்த பணியாளரிடம் உரத்தக் குரலில் கேட்டபோதுதான் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்திருந்த விசு கண்களைத்திறந்து பார்த்தான். பதற்றத்தோடு தட்டில் கிடந்த முள்கரண்டியைப் பார்த்தான். பின் எதிர் இருக்கையில் சாய்ந்திருந்த ரமேஷை பார்த்தான். எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை என்று நினைத்தபடியே தன் குரூரமான நினைப்பை எண்ணி சங்கடப்பட்டான். முனகிக் கொண்டிருந்தவனையே இவன் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். வெளிக்காட்டிக்கொள்ள முடியாத துயரம் ஒரு புழுவைப் போல இவன் மனதில் நெளிந்து கொண்டிருந்த போது பணியாளர் பில்லை எடுத்துக்கொண்டு முகத்தில் வழக்கமான புன்னகையே ஏந்தியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். மஞ்சள் பூசிய மெல்லிய சிரிப்புடன் கூடிய அக்காவின் முகம் இவன் மனதில் திரும்பத் திரும்ப தோன்றி மறைந்தது. ”டேய், கிளாஸ்ல இருக்கறத எடுத்து குடிச்சிட்டு கிளம்புடா. நேரமாவுது” என்று சொல்லிக்கொண்டே ரமேஷை விசு எழுப்பத் தொடங்கினான். அவன் அப்போதும் முனகிக் கொண்டே இருந்தான். ”அவுங்கதாண்டா.. அவுங்கதாண்டா....” எனும் வார்த்தை மிகத் துள்ளியமாக அப்போதும் கேட்டது.

2 comments:

 1. எனது நண்பர் ரசிகன் என்கிற விசு அவர்கள் ஒரு தொடர் பதிவை தொடரச்சொல்லி இருந்தார்.இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.
  1.காலபைரவன்
  2.அசதா
  3.பாலா
  4.சந்திரகௌரி
  உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள்.மழலை உலகம் இன்னும் விரியட்டும்.

  ReplyDelete
 2. என்னவளே
  நத்தை இறைச்சி தின்றால்
  மூலம் சரியாகுமென்பது
  உண்மையா? என்று கேட்டேன்

  அடடா
  எந்த இறைச்சியையும்
  தின்னாமல் விட்டாலே
  மூலம் சரியாகிவிடும்! என்கிறாய்

  ReplyDelete