Monday, January 16, 2012

என் ஊர்: கண்டாச்சிபுரம்




என் ஊர் அங்குராயநத்தம், மடவிளாகம், கண்டாச்சிபுரம் என மூன்று பகுதிகளாக பிரிந்திருந்தாலும் வெளியில் சொல்லிக் கொள்ளும்போது கண்டாச்சிபுரத்துக்காரன் என்று சொல்லிக் கொள்ளவதையே நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம்.கண்டராதித்த சோழபுரம் என்பதே நாளடைவில் மாறி கண்டாச்சிபுரம் என ஆகி விட்டது என்று இன்றளவும் பெரியவர்கள் பெருமைபடப் பேசிக் கொண்டிருப்பதை கேட்கமுடியும். இங்கிருக்கும் இராமநாதீஸ்வரர் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் ராமனால் உருவாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டதாக ஓர் ஐதீகமும் நிலவிக்கொண்டிருக்கிறது.



பெரிதும் என் பால்யம் அங்குராயநத்தம் சார்ந்ததாகவே இருக்கிறது. அங்கிருக்கும் கண்கொடுத்த விநாயகர் கோவிலும் சிவன் கோவிலுமே கதியாகக் கிடந்த நாட்கள் அவை. என் தாய்வழி தாத்தாவுடன் கழனிக்கு செல்லும் போதெல்லாம் பச்சை தென்னை மட்டையில் கிலுகிலுப்பை செய்து கொடுத்து நிலக்கடலை விளைச்சலுக்கு நடுவில் போடப்பட்டிருக்கும் பரண் மீது உட்கார வைத்துவிட்டு அவர் நிலத்தில் இறங்கி வேலை செய்வார். ஒவ்வொரு வெள்ளாமையிலும் ஊருக்கு தெற்கே நீண்டு கிடக்கும் வலமோட்டுப்பாறையில் தான் கதிர் அடிப்பு நடக்கும். தொடர்ச்சியாக மாடுகளைப்பூட்டி அறுத்த கம்பங்கதிர்களை அடிக்கும் காட்சி ஓர் ஓவியத்தைப்போல மனதில் அவ்வளவு துள்ளியமாக தேங்கிக் கிடக்கிறது.

என்னுடன் சேர்ந்து என் ஊரும் வளர்ந்திருக்கிறது என்பதை இப்போது உணரமுடிகிறது. தொடக்கப்பள்ளியில் பயின்ற நாட்களில் சத்துணவாக ஒன்றிய அலுவலகத்தில் சமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட கோதுமைச் சாதம் போடுவார்கள். அதை தூக்கு வாலியில் வாங்கிக் கொண்டு தாம்புக்கயிறை நீளமாக பிணைத்து பேருந்தாக எண்ணி அதற்குள் நின்றபடி முருகவேல் அண்ணா ஓட்ட, அவரைத் தொடர்ந்து திருநாவுக்கரசு மாமா, முருகதாஸ், சரணவன், ரவி அண்ணன்கள், பூங்கொடி, சுந்தரி, சுடர் அக்காக்கள் ஆகியோருடன் நானும் ஊரின் வடதிசையில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சுற்றுளா செல்வோம். மலையில் தனித்திருக்கும் முருகன் கோவிலை அடைந்து கொண்டுவந்திருந்த சாதத்தை வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பொழுது சாய வீடு திரும்புவோம், இன்று முருகன் கோயில் ஊருக்கு ஒதுக்கு புறமாக இல்லை. கோயிலைச் சுற்றி விரிந்திருந்த விளைநிலங்கள் முழுக்க இன்று கான்கிரீட் வீடுகள் உயர்ந்து நிற்கின்றன.அன்று என்னுடன் பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பான்மையோர் வேலையின் பொருட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

கோடை விடுமுறையில் வீட்டுத் தோட்டத்தில் பூவரச மரத்தில் எப்போதும் ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கும்.வெவ்வேறு ஊர்களில் இருந்து விடுமுறையைக் கழிக்க வரும் பெரியப்பா சித்தப்பா சகோதரர்களுடன் முறைவைத்து அதில் ஆடுவோம். ஆனந்தி,பூங்கொடி,சுந்தரி, சுடர், தெய்வாணை ஆகியோர் கூட்டாஞ்சோறு ஆக்குவர்.அம்பலவாணன்,ஞானம் மற்றும் திருநாவுக்கரசு மாமாக்களின் தலைமையில் சிலர் அரிதாரம் பூசிக்கொண்டு நாடகம் நடத்துவார்கள். ஏதோ காரணத்திற்காக ஒரு முறை நாடகம் நடந்து கொண்டிருந்தபோது என் தாத்தா ஒரு கோலை எடுத்துக் கொண்டு கோபத்தோடு கத்தியபடி இவர்களைத் தெறுத்த, சூரபத்மன், நாரதர், பெண்வேடம் போட்டவர்கள் என ஒருவர் பின் ஒருவராக இவர்கள் வேஷத்தை களைக்காமல் தெருத்தெருவாக ஓடிய அந்த காட்சி இன்றும் என் மனதில் பசுமை மாறாமல் அப்படியே கிடக்கிறது.

ஆடியும் சித்திரை மாதமும் வந்தால் போதும் விழாவிற்கு பஞ்சம் இருக்காது. பொன்னுரங்கம் ஜமாதான் நாடகம் போடுவார்கள். பொன்னுரங்கம் பெண் வேடம் போட்டு வந்தால் நிஜபெண்ணைப்போலவே இருக்கும். நாடகத்தைக் காண முன் கூட்டியே சென்று மேடை அருகில் பாயையோ, சாக்கையோ போட்டுவிட்டு, ஊறவைத்து அவித்த புளியங்கொட்டைகளை சாப்பிட்டுக் கொண்டே உறங்கிவிடுவோம். வழக்கம்போல அதிகாலையில் பாட்டி எங்களை எழுப்புவதோடு நாடகம் முடிவுக்கு வந்திருக்கும். மழைப்பொய்த்த ஆண்டுகளில் மழைவேண்டி முருகவேல் அண்ணன் தலைமையில் கொடும்பாவி இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறோம். குள்ளு வாத்தியார் மாமா வீட்டு கொடுக்காப்புளி மரத்தில் தெரியாமல் கொடுக்காப்புளி பறித்து மாட்டிக்கொண்டு திட்டும் அடியும் வாங்கி இருக்கிறோம்.

பால்யத்தின் எந்தவொரு மார்கழியின் அதிகாலைகளையும் இப்போதும் மறக்க முடியாமல் மனம் கிடந்து தவிக்கிறது. அதிகாலையில் சத்சங்கத்தினர் அருட்பா பாடிக்கொண்டு வருவர். டிசம்பர் பூ பூக்காத வீடுகளே ஊரில் இல்லை எனும் விதமாக பூப்பறித்துக் கொண்டிருக்கும் பணி படர்ந்த பெண்களின் கரங்கள் மனத் திரையில் குறுக்கும் நெடுக்குமாக இப்போதும் அலைந்துகொண்டிருக்கின்றன. கூந்தலில் நீர் சொட்டச் சொட்ட பூக்கோளமிடும் பேரழகிகள் வாழ்ந்த காலமது. சிமெண்ட் பாவிய தெருவில் சுண்ணாம்பு கட்டியால் கோலமிடும் இன்றைய யுவதிகளுக்கு தெரியுமா இழப்பின் சோகம்? தன்னோடு படித்த தோழியின் நினைவாக வகுப்பறையில் அவள் அமர்திருந்த இட்த்தில் ஒற்றைச் செம்பருத்தி வைத்து அழகுபார்த்த கவிஞர் கண்டராதித்தனின் மனம் இன்று எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது.

இப்போதைய என் ஊருக்கும் என் பால்யத்தில் தேங்கியிருக்கும் என் ஊருக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உருவாகி விட்டிருக்கிறது ஊரின் மத்தியில், பாப்பான் குளத்தருகே இருந்த பெரிய புளியந்தோப்பு அறவே இல்லை. பச்சப்புள்ளாகுளமும், சக்கரக்குளமும் நாகரீகம், வளர வளர தங்களை கொஞ்சம் கொஞ்சமாக தூர்த்துக்கொள்ளத் தொடங்கின. ஊரின் பிரதான தொழிலாக இருந்த நெசவுத்தொழில் கண்முன்பாகவே காணாமல் போன அவலமும் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.தெருக்களில் படுத்துக்கொண்டு கேட்ட கன்னிமார் கதைகளும், நல்ல தங்காள் கதைகளும் இன்று கேட்க முடியாதபடி வெகு தொலைவிற்கு சென்றுவிட்டன. திண்ணைகளும் தெருக்களும் இல்லாத ஊரை கதைகள் ஒருபோதும் விரும்புவதில்லை எனும் உண்மை இன்னும் நமக்கு உரைக்கவே இல்லை. பொரிமாவு, முறுக்கு , அதிரசம் என சாப்பிட்டு வளர்ந்த எங்களின் பிள்ளைகள் இன்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு அடிமையாகி இருப்பதிலிருந்து என் ஊரின் முகம் மாறி இருப்பதை நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. எவ்வளவுதான் ஊர் வளர்ந்து, நாகரீகமாக மாறி விட்டிருந்தாலும் கூட, பால்யத்தில் கேட்ட கிலுகிலுப்பை சத்தத்திற்கும் தோட்டத்து பூவரச மர ஊஞ்சலுக்கும் மார்கழி மாதத்து பூக்கோலத்திற்கும் ஏங்கவே செய்கிறது மனது.

**********************
நிழற்படங்கள்: கண்டராதித்தன்
( ஆனந்த விகடனின் இணைப்பான என் விகடனில் ”என் ஊர் அங்குராயநத்தம்” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் முழுவடிவம் இது)

7 comments:

  1. அன்பு காலபைரவன் நானும் கண்டாச்சிபுரம் தான்.மடவிளாகம் வளார்ந்தது 6 ஆம் வகுப்புவரை, பிறகு இன்று வரை சென்னையில் பதியன் செடியாக வாழ்ந்து வருகிறேன். பத்தர் வாத்தியார் பையன் நக்கீரன். தாங்கள் யார் என்றூ அறிய இயலவில்லை.
    நீங்கள் ஆடிய ஆட்டம் பாட்டம் அனைத்தும் நானும் அனுபவித்ததுதான்.உங்கள் எழுத்து என் பால்ய நினைவுகலை கிளர்ந்துவிட்டது. தொல்லை என நினைக்காவிட்டால், தொட்டரவும். நட்புடன் நக்கீரன். email: nakkeeran1964@gmail.com

    ReplyDelete
  2. அன்பினிய நக்கீரன் அண்ணா, நலமாக இருக்கிறீர்களா? நான் திருநாவுக்கரசு அவர்களின் தாய்மாமா மகன். உங்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து நாம் உரையாடுவோம்.

    ReplyDelete
  3. dear mama enaku tamila type panna varathu .. athanala nan english la type pandren.. thangalin "ennai patri" thogupu ennai migavum rasika vaithu vitathu... ithuvarai nan kathaigal, kavithaigalai thodarnthu padithathillai ,, ungalin intha thogupugalai partha piragu padipen endra nambika varugirathu....

    ReplyDelete
  4. mama mannikavum athu "ennai patri" thogupu alla " en oor kandachi puram" realy very nice

    ReplyDelete
  5. அன்புடன் காலபைரவன்,தங்களின் பதிலுக்கு நன்றி. தங்களின் படைப்பு கள் படிக்கவில்லை, திரு.,உங்கள் புத்தகங்களை தருவதக கூறிவுள்ளார். ஊர் நலமா? நன்பர்கள் நலமா?மீண்டும் சந்திக்கும் வரை... நட்புடன் நக்கீரன்.

    ReplyDelete
  6. என்னவளே
    எனது ஊர் எது? என்று
    என்னிடம் கேட்பவர்களிடம்
    என்ன பதிலை சொல்வேன் நான்?

    அடடா
    அம்மாவின் சொந்த ஊரையா?
    அப்பாவின் சொந்த ஊரையா?
    உத்தியோக நிமித்தமுள்ள இவ்வூரையா?

    ReplyDelete
  7. நீங்கள் அணுபவத்த அந்த தருணங்களும் அதை அசை போட்டு சுவைக்கின்ற இந்த நினைவுகளையும் நாங்கள் ருசித்து பார்த்ததில்லை

    ReplyDelete