Saturday, September 18, 2010

சாரிபோகும் கன்னிமார்கள்


பொழுது இருக்கும் போதே வீடு திரும்பி விடும் சண்முகத்தால் அன்று அவ்வாறு செய்ய முடியவில்லை. அரகண்டநல்லூர் கமிட்டியில் வேலை வளர்ந்து கொண்டே போனது, கமிட்டியை விட்டுக் கிளம்பும் போது இரவு பத்து மணியாகிவிட்டிருந்தது. பத்தரை மணி ரெயிலுக்காக கேட்டை முன்னமே சாத்திவிட்டிருந்தனர். ரயில் வந்து, கேட்டைத் திறக்க அரைமணி நேரத்திற்கு மேலானது. வண்டிக்காரனிடம் அவர் சொன்னார்.
"வண்டியை வேகமாக ஓட்டுடா.''

"வேகமா ஓட்றதுக்கு இது ஏரோப்பிளேன் பாருங்க'' என மெதுவாகக் கூறினான். காலம் காலமாக மாட்டு வண்டியையே பார்த்துக் கொண்டிருப்பதனால் வந்த கோபம். இருள் அடர்ந்திருந்தது. சாலையைப் பிரித்தறிய முடியவில்லை. இருபுறங்களிலும் புளிய மரங்கள் தொடர்ச்சியாக நின்றிருந்தன. கால்களை நீட்டி தோதாக அவர் அமர்ந்து கொண்டார். இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தவரை தூக்கம் மெல்ல சூழ்ந்து கொண்டபோது அவனிடம் கூறினார்.
"டேய் தூக்கம் வர்ற மாதிரி இருக்கு. பாத்து ஓட்டுடா.'' அவன் ஏதும் பதில் கூறாமல் வண்டியை ஓட்டினான். ஆவர் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். மாடுகள் மெதுவாக நடந்தன. சக்கரம் மேடு பள்ளங்களைக் கடக்கும் போது அதிக ஒலியெழுப்பின. தனிமையைப் போக்கிக் கொள்ள அவன் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான்.
பின்புறம் திரும்பி வண்டிக்குள்ளாக தூங்கிக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தான். பின் மாடுகளின் வாலை வேகமாகத் திருகினான். வண்டி வேகமெடுத்தது அரண்டடித்துக் கொண்டு தூக்கம் கலைந்தவராக எழுந்து பார்த்தார் அவர். எதுவுமே நடக்காதது மாதிரி அவன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். மீண்டும் படுத்துத் தூங்கிப் போனார் அவர்.
கோட்டிக்கல் அருகே ஆறேழு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். அவை ஏற்கனவே பழகிய பெண்களின் சாயலை ஓத்திருந்தன.
அவற்றின் அசைவுகளில் இயல்புக்கு மீறிய நளினத்தை உணர முடிந்தது. கொஞ்சிப்பூவின் வாசனை அவருள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றின் சிரிப்பும் வளையோசையும் அவருக்கு லேசான பயத்தை ஏற்படுத்தின போலும். தன்னை அவை என்ன செய்துவிடும் என்றும் நினைத்துக் கொண்டு பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டார்.
எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. கோட்டிக்கல் இருளில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கையில் தீவட்டிகளுடன் அவை வரிசையாகப் புறப்பட்டன. மெல்லிய பேச்சொலிகளைக் கேட்க முடிந்தது. சிறிது இடைவெளிவிட்டு அவர் பின் தொடர்ந்தார். செங்குறிச்சியார் வீட்டு நிலத்து வழியாக அவை மடவிளாகம் ஏரிக்கரையை அடைந்த போது அவர் மணியைப் பார்த்தார்.
ஏரிக்கரையை அடைந்ததும் அவருள் படர்ந்திருந்த பயத்தின் ரேகைகள் மறைந்துவிட்டிருந்தன. சிவன் கோயிலின் முகப்பு வெளிச்சம் தொலைவில் தெரிந்தது. கரை மேலிருந்து தெற்குத் தெரு வீடுகளை முழுவதுமாகக் காண முடிந்தது. மடவிளாகம் காலனி வழியாக அவை கீழிறங்கி வளமோட்டு பாறைக்குச் சென்றன.
பாறை இருட்டில் ஒரு கூடாரம் போல விரிந்திருந்தது. அருகில் இருந்த இலுப்பை மரம் சூழலின் விகாரத்தைக் கூட்டிக் காண்பித்தது. அவை பாறை மீதேறி சுற்றிலும் பார்த்தன.
அவற்றின் செயல்பாடுகளை மிக நுட்பமாக அவர் கவனித்துக் கொண்டார். பின் அவை கீழிறங்கி வண்டிப்பாட்டை வழியாக நடந்து வாசியம்மன் கோயில் நோக்கி நடந்தன. பாதை கரடுமுரடாக இருந்தது. இருபுறமும் கள்ளியும் ஆடாதொடையும் புதராக மண்டியிருந்தது. சிறிது தூரம் நடந்து அவை தென்னண்டை வீட்டு வாய்க்கால் வழியாக வாசியம்மன் கோயிலை அடைந்தன.
இலுப்பைப் பூக்களின் மணம் எங்கும் வியாபித்திருந்தது. பாறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. ஓட்டேரி பக்கம் பாறை நீண்டு சரிந்திருந்தது. ஆள்நடமாட்டம் இருக்கும் போதே கோயில் ஓர் அமானுஷ்யத் தன்மையோடு இருக்கும். யாருமற்ற இந்த இரவில் கேட்கவா வேண்டும் என்று அவருக்குள் கேட்டுக் கொண்டார். அவை கோயிலை வலம் வந்தன.
நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டன. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பின் வடக்கு நோக்கிச் சென்று ஓட்டேரி வழியாக நடக்க ஆரம்பித்தன. இங்கெல்லாம் ஏதற்கு அவை வந்து செல்கின்றன என்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன நடந்தாலும் இன்று கடைசிவரை அவற்றைப் பின்தொடர்வது என்று மனத்திற்குள் நினைத்தபடி பின் தொடர்ந்தார்.
அவற்றிற்கு பாதைகள் நன்கு பரிச்சையமாகி இருந்ததை உணர முடிந்தது. ஓட்டேரி காலனி வழியாக ஓட்டேரித் தெருவுக்குள் நுழைந்தன. அப்போது நாய்கள் பெருங்குரலெடுத்துக் குரைத்தன. தெருவில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். சிறு சலனமுமின்றி அவை வரிசையாக நடந்தன. கையில் பிடித்திருந்த தீவட்டிகள் அப்படியே எரிந்து கொண்டிருந்தன.
ஆச்சரியம் நீங்காமல் அவர் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவை வரசித்தி வினாயகர் கோயில் வழியாக நடந்து திருக்கோயிலூர் ரோட்டை அடைந்தன. சாலையில் நிசப்தம் கூடியிருந்தது. இரண்டாவது ஆட்டம் விட்டு மக்கள் சென்று விட்டிருந்தனர். இராமலிங்க சாமி மடத்தில் மட்டும் ஒரு சிறிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவை வடக்கு நோக்கி நடந்து பள்ளிக்கூடச் சந்தில் திரும்பி, வெள்ளக்குளத் தெருவில் நடக்க ஆரம்பித்தன.
வெள்ளக்குளம் நீரால் நிரம்பியிருந்தது. நீரில் பாசியேறி இருந்தது. தெருவில் கட்டப்பட்டிருந்த மாடுகள் கால்களை உதைத்து சப்தமெழுப்பின. நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன.



அய்யனார் கோயில் பூசாரி வீட்டருகே ஓர் உருவம் உட்கார்ந்திருப்பதை உணர முடிந்தது. நெருங்க நெருங்க அது ஊர்சாமுட்டு வைத்திக் கவுண்டர் என்பது தெரிந்தது. சிறுநீர் கழித்துவிட்டு அவர் எழுந்து திரும்பவும் அவை எதிர்படவும் சரியாக இருந்தது. பயத்தால் வெளிறி அவர் கீழே சரிந்தார்.
அவருக்கு உதறல் எடுத்தது, மூச்சு விடுவது சிரமமாக இருந்தது. கீழே விழுந்தவரைக் கடக்கும் போது குனிந்து பார்த்தார். பின் வேகவேகமாக நடந்தார்.
அவை வண்டிப் பாதையைக் கடந்து, மாந்தோப்பு வழியாக திருவண்ணாமலை ரோட்டை அடைந்தன. சாலையின் இருபுறமும் புளிய மரங்கள் தொடர்ச்சியாக இருந்தன. பகலைவிட இரவில்தான் மரங்கள் மிக நெருக்கத்தில் இருப்பதை உணர முடிகிறது. சிள்வண்டுகளின் இரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
அவை மேற்கு நோக்கி நடந்து பச்சபுள்ளா குளத்தை அடைந்தன. குளம் எந்த சலனமுமற்று மிக அமைதியாக இருந்தது. அவை தங்களது ஆடைகளைக் களைந்து குளத்திற்குள் இறங்கின. அசல் பெண்களைப் போன்றே இருந்தன.
அவற்றின் அழகும் வனப்பும் அவரைக் கிளர்ச்சியடையச் செய்தன. ஆனாலும் அவர் சுதாரித்துக் கொண்டார். அவை குளத்திற்குள்ளாக ஓங்காரமாக நீந்தின. சாதாரணமாக அதைப் போன்று யாராலும் நீந்த முடியாதென நினைத்துக் கொண்டே, அவை நீந்தும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒன்றன் பின் ஒன்றாக மஞ்சள் தேய்த்து உடல் முழுக்க மஞ்சளைப் பூசிக் குளித்தன. சிறிது நேரத்திற்கு பின் அவை கரையேறி ஆடைகளை ஊடுத்திக் கொண்டன. அவற்றின் முகங்கள் தீச்சுவாலைகள் போன்று பிரகாசமாக இருந்தன. பின் அவை மெல்ல நடந்து கோணமலைக்குச் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தன. இனிமேலும் அவற்றைப் பின் தொடர்வது ஆபத்தில் முடிந்துவிடலாம் என நினைத்தவர் திரும்பி வேக வேகமாக வீடு நோக்கி நடந்தார்.
சரிவில் வண்டி வேகமாக இறங்குவது போன்றிருந்த போது தான் அவருக்குத் தூக்கம் பிரிந்தது. விழித்தவர் பச்சபுள்ளா குளத்தைக் காணாது திகைத்தார். தான் எங்கிருக்கிறோம்; மணி என்ன என்ற யோசனை அவருக்குள்ளாக ஓடத்தொடங்கிய போது தான், அதுவரை அவர் கண்டு கொண்டிருந்த நீண்ட கனவிலிருந்து அவரால் விடுபட முடிந்தது. கடிகாரத்தைப் பார்த்தார். மணி மூணாக இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது.
பதற்றத்தால் உடல் நன்றாக வேர்த்து ஈரமாகயிருந்தது. எழுந்து அமர்ந்தபடி சுற்றும்முற்றும் பார்த்தார். வண்டி பில்ராம்பட்டு மேட்டைக் கடந்து கோட்டிக்கல் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. கோட்டிக்கல் இருளில் உருண்டு திரண்டிருந்தது. ஆள் நடமாட்டம் ஏதும் தென்படவில்லை. இருளில் அவர் ஆழ்ந்து பார்த்தார். புதர்களும் பாறைகளையும் தவிர வேறொன்றையும் அவரால் காண முடியவில்லை. ஒரு சில நாய்கள் படுத்துக்கிடந்தன. சிறு பறவைகளின் சப்தம் விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தது. வண்டியின் சக்கரங்கள் அதிக சப்தமெழுப்பிய போது அவர் அவனிடம் கூறினார்.
"டேய் வண்டிய செத்த நிறுத்துடா.'' வண்டி நின்றதும் அவர் இறங்கிக் கொண்டு வண்டிக்காரனை நெருங்கி வண்டியை ஓட்டிக் கொண்டு போகச் சொன்னார். அவர் அவ்வாறு கூறியதும் அவன் ஏதும் புரியாதவனாக அவரைப் பார்த்துக் கேட்டான்.
"நீங்க வரலயா?''
"நா ஏரிக்கரையால நடந்து வர்றேன்'' ஏனக் கூறியவர், ரோட்டிலிருந்து இறங்கி ஏரி நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நிலவொளியில் ஏரியின் விஸ்தீரணத்தை நன்கு உணரமுடிந்தது. ஏரிக்குள்ளாக இறங்கிய பிறகுதான் அவர் தனிமையை உணர்ந்தார். தனிமை அவருள் பயத்தை ஏற்படுத்த கன்னிமார்களின் கனவு அதை அடர்த்தியாக்கியது. பரந்து விரிந்து காணப்பட்ட தெற்கு கரை மீதிருந்த அரசமரத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. நீரின்றி பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது.



ஓங்கி வளர்ந்திருந்த கருவேல மரத்திலிருந்த சிள்வண்டுகளின் இரைச்சல் ஏரி முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது. பக்கத்து கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பங்களின் வரிசையை இருட்டில் பார்ப்பதற்கு ஒரு வலைக்கோட்டை போல ரம்மியமாகயிருந்தது. நடந்து நடந்து பாட்டை நன்கு தேய்ந்திருந்தது. திரும்பிப் பார்க்காமல் அவர் தேய்ந்த பாட்டை மீது வேக வேகமாக வீடு நோக்கி நடந்தார்.
பாதை நீண்டு கொண்டே இருந்தது. இருளின் தனிமை யாரோ பின் தொடர்ந்து வருவதைப் போன்ற உணர்வை அவருள் ஏற்படுத்தியது. அதனால் உடல் நடுக்கமுற்று வேர்க்கத் தொடங்கிய போது அவரது நடையில் வேகம் கூடியது. தான் தனியாக வந்திருக்கக் கூடாது என்று நினைத்தவர் பல இரவுகளில் அதே வழியாக வந்திருப்பதையும் நினைத்தபடியே வேகமாக நடக்கத் தொடங்கினார். நீண்ட பாம்பென நெளிந்து வளைந்து கிடந்தது பாதை. இடைவிடாத பூச்சிகளின் இரைச்சல் தனிமையின் அடர்த்தியைக் கூட்டிக் காட்டிய போது அவர் ஆயி குளத்தை நெருங்கியிருந்தார்.
குளத்திற்குள்ளிருந்து கால் அலம்பும் சப்தம் வர மீண்டும் அவரை பயம் பீடித்துக் கொண்டது. வேகமாக நடந்து குளத்தைக் கடக்க முயற்சித்தவரை பெயர் சொல்லி ஒரு குரல் அழைத்தது. ஆனால் அந்தக் குரல் ரொம்ப பரிச்சயமானவரின் குரலைப் போன்று இருந்ததால், அவருக்கு சற்றுத் தெம்பு வந்தது. மூச்சை நன்கு இழுத்துவிட்டபடி குளத்திற்குள்ளாகப் பார்த்துக் கேட்டார்.
"யாரது?''
சிறிய மௌனத்திற்கு பிறகு குரல் ஒலித்தது.
"என்னத் தெரியல?''

யோசிப்பு நீண்ட அமைதியை அவருள் ஏற்படுத்திய போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.
"டேய் பயந்தாங்கொள்ளி. நான்தான்டா கணேச மாமா.''
அவர் திரும்ப கேட்டார். இந்த முறை பயம் முற்றிலுமாக நீங்கிவிட்டிருந்தது.
"எந்த கணேச மாமா?''
"உனக்கு எத்தன கணேச மாமா இருக்காங்க. செங்குறிச்சாமூட்டு கணேச மாமான்னா தான் தொரைக்கு வௌங்குமோ?''
எனக் கேட்டுக்கொண்டே மெல்ல படியேறி வந்தார் அவர். இவருக்குப் பயமாகவும் இருந்தது. கரைக்கு வந்ததும் இவர் குனிந்து அவரின் கால்களைப் பார்த்தார். இவர் கால்களைப் பார்ப்பதை கவனித்துவிட்ட அவர் கேட்டார்.
"என்ன கால் இருக்குதா? இல்ல இன்னும் பேய் பிசாசுன்னுதான் நெனைச்சிக்கினு இருக்கியா?''
அவர் கேட்ட பிறகுதான் இவருக்கு இயல்பு திரும்பியது. இனி எந்தப் பயமும் இல்லை என்று நினைத்தவர், எட்டி குளத்திற்குள்ளாகப் பார்த்தார். குளத்தில் குட்டை போல் தேங்கியிருந்த நீரில் நிலவின் நகர்வு மங்கலாக ஒளிர்ந்தது. வீடு நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கிய போது அவரிடம் கேட்டார்.
"என்ன மாமா இந்நேரத்துல இங்க.''
"வயித்த கடுக்கற மாதிரி இருந்திச்சி அதான்'' என்று பேச்சை இழுத்தவர் இவரைப் பார்த்துக் கேட்டார்.
"நடு ராத்திரில பேயாட்டம் திரியரவன் நீ. இன்னாத்துக்கு பேய் அறஞ்சவனாட்டம் இருக்க. எப்ப இருந்து இந்தப் பயம்...'' இவர் மௌனமாகவே இருந்தார். அவர் அவ்வாறு கேட்டது இவருக்கு அசிங்கமாகவும் இருந்தது. தேவையில்லாமல் தான் ஏன் பயந்தோம் என்று யோசித்துப் பார்த்தவருக்கு, நீண்ட கனவு நினைவுக்கு வந்தது. உடனே மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. இவரின் மௌனத்தை கலைப்பவராக அவர் கேட்டார்.
"அப்படி என்னதான் யோசிக்கிற.''
சிறிது நேர அமைதிக்குப் பின், அவரிடம் தான் கண்ட கனவை ஒன்று விடாமல் விவரித்தார் இவர். சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அவர், இவரிடம் கேட்டார்.
"சாதா ஒரு கனவுக்காகவா யாராவது பயப்புடுவாங்க?''
இவர் இடைமறித்துக் கூறினார்.
"மாமா கனா மாதிரியே தெரியல. ஏதோ நெஜத்துல நடந்த மாதிரி தான் தோணுது.''
"சொம்மா பெனாத்தாதடா. வெறும் கனவுதான் அது.'' உரையாடல் நீண்டு கொண்டே வந்த போது சிவன் கோயில் சகடை நிறுத்தும் இடத்தை அடைந்து விட்டிருந்தனர். அப்போது அவர் கூறினார்.
"மனச போட்டு கொழப்பிக்காமா போயிப்படுடா''
இவர் தலையாட்டியபடியே நடுத்தெருவுக்கு செல்லும் பாதையில் திரும்ப, அவர் வீடு நோக்கி கிழக்குப் பக்கமாக சென்றார்.

தன்னை யாரோ தட்டியெழுப்புவதை உணர்ந்து கண்விழித்துப் பார்த்தபோது அவர் திண்ணையில் படுத்திருந்தார். தான் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்று அவருக்கு குழப்பமாக இருந்தது. கையில் காபி டம்ளருடன் நின்றிருந்த அவரது மனைவி அவரிடம் சொன்னாள். "ஏங்க ஊர்சாமுட்டு வைத்திக்கவுண்டர் செத்துட்டாராம்.''
அவள் கூறியதும் பதற்றம் கூடி அவரை ஒரு உலுக்கு உலுக்கியது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. நடுக்கம் மெல்ல உடல் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. நா வறண்டு பேச முடியாமல் போனது. முந்தின இரவு அரங்கேறிய சம்பவங்கள் தெளிவான காட்சிகளாக அவரது மனதில் புரளத் தொடங்கின. அவரிடம் தோன்றும் மாற்றங்களை அவரது மனைவி உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி விட்டோமோ என்று நினைத்துக் கொண்டவாறே கூறினாள்.
"ஏங்க இந்த காபியக் குடிங்க.''
அவர் மௌனமாக காபியை அருந்தத் தொடங்கினார். அவரது கைகளில் நடுக்கத்தின் மெல்லிய இழைகளை உணர முடிந்தது. காபியை குடித்து முடித்துவிட்டு அவளிடம் கேட்டார்.
"எப்படி செத்தாரு?''
"ராத்திரி ஒண்ணுக்கு போனவர, கன்னிமார்ங்க அறஞ்சிருக்கும்னு பேசிக்கிறாங்க.''
அவளின் பதில் அவரை மேலும் பீதியடையச் செய்தது. பார்வை மங்கிக் கொண்டு வந்தது. அதற்குமேல் அவரால் எதையும் பேசமுடியவில்லை. தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அன்றிலிருந்துதான் உறக்கம் பிடிக்காமல் உளறத் தொடங்கினார். அவருக்கு சித்தம் கலங்கிவிட்டதென ஊர் பேசிக் கொண்டது.

1 comment:

  1. கனவையும் நிஜத்தையும் இணைத்திருக்கும் விதம் நல்லாயிருக்குங்க

    ReplyDelete