Thursday, September 16, 2010

நவீனத்துவத்தின் கோமாளி - 2


நான், எழுத்தாளர் அசதா, கவிஞர் கண்டராதித்தன் மூவரும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது சந்தித்து உரையாடுவது வழக்கம். அவ்வாராணதொரு தருணத்தில் எங்கள் உரையாடல் நடிகர் வடிவேலு மீது குவிந்தது. அப்போது நான், “கடும் மனநெருக்கடியில் இருந்த காலகட்டங்களில் வடிவேலு தன் நகைச்சுவை நடிப்பு மூலம் ஒரு அண்ணனைப்போன்று என்னை மெல்ல, அதிலிருந்து விடுவித்தார்” என்று சொன்னேன். இதையே அசதாவும், “மனநெருக்கடி மிகுந்திருந்த காலகட்டங்களில் இளையராஜா மற்றும் வடிவேலுவின் உதவியில்லாமல் என்னால் ஒருபோதும் மீண்டிருக்கவே முடியாது” என்று கூறினார். இதே வார்த்தைகளில் கூறினாரா என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் மேற்கண்ட அர்த்தத்தில் தான் சொன்னார் என்று என்னால் உறுதிபடுத்திட முடியும்.

கடந்த 2008 ஜனவரி மாதத்திலிருந்து ஓராண்டுக்கு கடும் மனநெருக்கடியில் நான் உழல வேண்டியிருந்தது. சிலரின் பொருட்டு அம் மனநெருக்கடியை நானே வலிந்து வாங்கிக் கொண்டேன். இதுவரையிலான என் வாழ்நாட்களில் அதுபோன்றதொரு காலகட்டத்தை சந்தித்தது கிடையாது. தீவிர மனநெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்வதில் மருந்து மாத்திரைகளின் பங்கு ஒரு எல்லை வரை மட்டுமே பயன்பட்டது. அதையும் தாண்டி அநேக இரவுகளில் தொலைக்காட்சியில் மாறிமாறிப் பார்த்த வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மூலமே நான் மெல்ல இயல்புநிலைக்கு திரும்ப நேர்ந்தது. மேற்கண்ட நிகழ்வுகளை கூறுவதன் மூலம் யாருடைய இடத்தையும் வலுவாக நிருவி விடமுடியும் என்றும் நான் கருதவில்லை. எவ்வித உள்நோக்கமும் இன்றியே எழுதுகிறேன். ஆக வடிவேலுவின் நகைக்சுவை நடிப்பு, கடுமையான கால கட்டங்களில் இருந்து நான் மேலேறி வருவதற்கான ஏணியாக இருந்திருக்கிறது என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

என்னுடைய நண்பர்கள் வட்டத்திற்கும் கூட வடிவேல் மிகவும் நெருக்கமானவராகவே இருந்து கொண்டிருக்கிறார். ஆவணங்கள் தட்டச்சு செய்து கொடுக்கும் என் நண்பர் குமாரிடம் வடிவேலு நடித்த நகைச்சுவை காட்சியின் ஒரு சிறு கீற்றை மட்டும் சொன்னால் போதும், அடுத்த நொடி அவர் வடிவேலுவின் நகைச்சுவை சூழலில் சிக்கி, தன்னையும் மறந்து வடிவேலு நடித்த படங்களில் இருந்து ஒவ்வொரு காட்சியாக கூறிக்கொண்டே செல்வார். அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்போம். ஒரு கட்டத்தில் அவர் நாய் சேகராகவே மாறிவிடுவார். பிறகொரு தருணத்தில் அவருள் இருந்து சினேக் பாபு எழுந்து வருவதை காணமுடியும். இப்படியாக எங்கள் நட்பு வட்டத்திலேயே தீப்பொறி திருமுகம், கைப்புள்ள, ஏட்டு ஏகாம்பரம் போன்ற அடைமொழிகளோடு நண்பர்கள் இருக்கிறார்கள். மேற்கண்ட நிகழ்வுகள் மூலமே சமூகத்தில் வடிவேலு எனும் நடிகர் எந்தளவிற்கு ஊடுறுவி இருக்கிறார் என்பதை நாம் உணர முடியும். வடிவேலுவின் எந்த செயல் அவரை இந்த இடம் நோக்கி அழைத்து வந்தது என்பதை அறியும் முன்பாக நாம் நகைச்சுவை நடிப்பின் வகைகளைப் புரிந்து கொள்வதன் மூலம் நாம் இன்னும் தெளிவான சித்திரங்களை பெறமுடியும்.

உலகம் முழுவதும் நகைச்சுவை நடிப்பு இருபெரும் பிரிவுகளாகவே பிரிக்கப்பட்டுள்ளது. அவை ‘ஸ்லாப்ஸ்டிக் காமெடி’ (slapstic comedy) ‘ஸ்டேன்ட் அப் காமெடி’ (stand up comedy) என்பன ஆகும். (இரு வகைகளையும் தமிழ்படுத்த நினைத்து, என் போதாமையினால் அப்படியே ஒலிபெயர்ப்பு செய்ய நேர்ந்துவிட்டது) மேற்கண்ட இருவகைகள் தவிற, இன்னும் சில வகைகள் இருப்பதாக அரங்க மற்றும் திரைக்கலை அறிஞர்கள் கூறினாலும், அவற்றைப் பற்றிய விரிவான தகவல்கள் இல்லை. எனவே மேற்கண்ட இருவகைகளை மட்டுமே நான் எடுத்துக்கொள்கிறேன்.

ஸ்லாப்ஸ் டிக் வகை நடிப்பென்பது, நடிகனின் உடல் அசைவுகள், மற்றும் உணர்ச்சிகள் சார்ந்து இயங்குவது. ஒரு நடிகனுக்கு உடலே பிரதானம். உடல் மொழி மூலமே அவன் தொடர்ச்சியாக பிம்பங்களை உருவாக்கிச் செல்ல முடியும். ஆக உடல் மொழியைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுபவை இவ்வகை நடிப்பு. மௌனப் படக் காலந்தொட்டு தன்னை விரிவு செய்தபடியே இருக்கிறது இந்நடிப்பு வகை. ஸ்லாப்ஸ்டிக் வகை நடிப்பிற்கு மிகச் சரியான உதாரணம் திரைமேதை சார்லி சாப்ளின் தான். நகைச்சுவை நடிப்பிற்கு அதிக அழுத்தத்தையும், குவியத்தையும் ஏற்படுத்தியவரும் அவரே. தமிழ் திரை உலகில் இம்முறையை வெகு சிலரே பயன்படுத்துகின்றனர். இவ்வகை நடிப்பை வெளிப்படுத்த கடும் உழைப்பை கொடுத்தாக வேண்டியிருப்பதே இதற்கு காரணமாகும்.




ஸ்டேன்ட் அப் வகை நடிப்பு என்பது ஒரு நகைச்சுவை துணுக்கைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைப்பதாகும். பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் இவ்வகையைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. ‘ஜெயிக்க போவது யாரு’ ‘சிரிக்கலாம் வாங்க’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவ்வகைக்கு சிறந்த உதாரணங்கள். தெரிந்தோ தெரியாமலோ நமது நடிகர்கள் இவ்வகை நடிப்பை மட்டும் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் நாம் இவ்வகை நகைச்சுவை நடிப்பை அனுபவிக்க முடியாது. சலிப்பாக உணர வேண்டியிருக்கும். இவ்வாறான காலகட்டத்தில் தான் நடிகர் வடிவேலுவின் திரைப்பிரவேசம் நிகழ்கிறது. அவரும் ஒரு கட்டம் வரை தொடர்ந்து ஒரே மாதிரி நடிப்பை உற்பத்தி செய்பவராகவே இருந்தார். ஆனால் காலம் அவருக்கு எது நடிப்பு என்பதை சரியான தருணத்தில் உணர்த்தியது. அங்கிருந்து தான் வடிவேலுவின் விஸ்வரூபம் உருக்கொள்ளத் தொடங்கியது. தனக்கெதிரே தூக்கி எரியப்பட்ட நிகழ்த்துகலையின் மாயக்கயிற்றை இறுகப் பற்றிக் கொண்ட வடிவேலு, அதன் பிறகே காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை நடிப்புகளை வழங்கினார்.

நாகேஷிற்கு பின்பான காலகட்டத்தில் நகைச்சுவை நடிகரின் தேவை தமிழ் திரையுலகில் மிகவும் குறை அர்த்தத்தோடு புரிந்து கொள்ளப்பட்டது. இழித்தும் பழித்தும் பேசுவது, எட்டி உதைப்பது, என்று நகைச்சுவை பாத்திரம் தன்னை மெல்ல குறுக்கி கொள்ளத்தொடங்கியது. திரைப்படத்தோடு ஒட்டாமல் நகைச்சுவைக்கென்று ஒரு தனிப்பாதை(track) ஏற்படுத்தப்பட்டது. நகைச்சுவை பகுதிக்கு மட்டுமே எழுத நம் கோடம்பாக்கத்தில் ஆட்கள் உருவானார்கள். அதன் பின் சிலகாலம் காலச் சக்கரம் அவர்களையும் சுமந்து கொண்டு ஓடியது. நாளடைவில் இந்த முறை மெல்ல சலிப்படைய ஆரம்பித்தது. கற்பனை வரட்சியால் நமது நகைச்சுவை பகுதியை மட்டும் எழுதுபவர்கள் (comedy track writers) ஒரே மாதிரியாக எழுதி எழுதி சலித்துப் போனார்கள். உண்மையில் வடிவேலுவின் வெற்றிக்கான விதை அங்குதான் ஊன்றப்பட்டது என யூகிக்க இடமிருக்கிறது.

வடிவேலுவும் திரும்ப திரும்ப ஒரே மாதிரி நடிக்கவில்லையா, அவருக்கென்றே தனியான பாதை (track) எழுதப்படவில்லையா என்ற கேள்வி நம்முன் தோன்றாமல் இல்லை. திரும்பத் திரும்ப சலிப்பை ஏற்படுத்தக்கூடிய வடிவேலுவின் நகைச்சுவை நடிப்புகள் பார்வையாளர்களால் தயவுதாட்சன்யமின்றி நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’யைப் பார்த்து அதன் சரடு போன்றே பின்னப்பட்ட ‘இந்திரலோகத்தில் ந அழகப்பன்’ எனும் திரைப்படம் மக்களால் அதிரடியாக நிராகரிக்கப்பட்டது. ஆக ஒரு நடிகனின் நடிப்பு தொடர்ந்து பல்வேறு தளங்களில் பயணிப்பதாகவும், உள்ளார்ந்த வளர்ச்சியோடு கூடிய அழகியலைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை நம்மால் உணர முடிகிறது.

ஆனால் வடிவேலுவின் ஒரு சில பாத்திரங்கள் ஒருபோதும் நம்மால் மறக்கவோ கடந்து சென்றுவிடவோ முடியாத வகையில் உருவாக்கப்பட்டிருப்பதை உற்றுநோக்கிப் புரிந்து கொள்ளலாம். ‘கைப்புள்ள, நாய் சேகர், தீப்பொறி திருமுகம், சினேக் பாபு’ போன்ற பாத்திரங்கள் காலத்தால் அழிக்க முடியாததாகும். இந்த இடத்தில் நாம் நடிகர் விவேக்கின் நடிப்பு பாணியையும் ஒப்பிட்டு உற்றுநோக்கி சில தெளிவுகளை பெற முடியும். வடிவேலுவிற்கு முன்பாக விவேக் தான் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து முன்னிலையில் ஓடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்குமேல் விவேக்கின் நடிப்பு சலிப்பை ஏற்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் உடல் மொழியின் போதாமையே. விவேக் பெரிதும் உரையாடல்கள் வழியே நகைச்சுவை பாத்திரங்களை கட்டமைத்து வந்தார். விவேக்கின் போதாமையினால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனதாக்கிக் கொண்டு எந்த ஆரவாரமுமில்லாமல் வடிவேலு தொடர்ந்து ஓட ஆரம்பித்தார். “தலைநகரம்” படத்தில் பிரகாஷ்ராஜ் முன் நின்றபடி வடிவேலு, “பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மட்டம் வீக்கு”, என்று கால்கள் நடுங்க சிறுநீர் கழித்தபடி பேசும் உரையாடலை நான் ரசிப்பது போலவே ரசித்து என் மகளும் சிரிக்கிறாள். “சார் கிணத்த காணோம்” என்று புலம்பியபடியே புகார் செய்ய வரும் வெள்ளந்தியான வடிவேலுவின் நகைச்சுவை பகுதியையும் என் மகள் ஆர்வத்தோடு, எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் பார்த்து, விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அறிவு தளத்தில் மட்டுமே இயங்கி வந்த விவேக் இந்த இடத்தில் தான் தன் ஒட்டத்தை மெல்ல இழந்தாரோ என்றும் தோன்றுகிறது.
-தொடரும்

6 comments:

  1. கண்டிப்பாக உங்கள் கருத்தை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்கு நாம் வடிவேலுவை மட்டுமே பொறுப்பாக்க முடியாது இல்லையா?

    ReplyDelete
  2. எல்லோரையும் சென்றடைகிறது அவரின் நகைச்சுவை என்பது மிகச் சரியே

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு கால பைரவன்.

    வடிவேலு, விவேக் தொடர்பாக எனது இன்னொரு அவதானம் என்னவென்றால், விவேக் போன்றவர்கள் திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகளில் தம்மை அறிவு ஜீவிகளாகக் காட்டிக் கொண்டு, பிறரைக் கேலி செய்து நடிப்பர். அதே போல வடிவே நகைச்சுவைக் காட்சிகளில் தன்னை முட்டாள்த்தனமானவராகக் காட்டிக் கொண்டு நடிப்பார். விவேக் ஒரு கட்டத்துக்குப் பின்னர் ரசிகர்களின் ஆதரவை இழக்க, வடிவேல் தொடர்ச்சியான ஆதரவை மக்கள் மத்தியில் தக்கவைத்துக் கொள்ள இதுவும் ஒரு முக்கியமான உளவியல் காரணம். பெரும்பான்மை மக்களுக்கு தம்மிடம் ஒருவன் முட்டாளாவது பிடிக்கும், அதே நேரம் தம்மை முட்டள் என்று சொல்லி புத்தி சொல்வது எரிச்சல் மூட்டும். (அதே நேரம் விவேக் புத்தி சொல்கிறேன் என்றா பெயரிலும், பகுத்தறிவுக் கருத்துக்களைச் சொல்கிறேன் என்ற பெயரிலும் சாதாரண மக்களின் நம்பிக்கைகளைக் கேலி செய்துவிட்டு, தன்னளவில் முழுக்க முழுக்க ஆத்திகராக, வாஸ்து போன்ற மூட நம்பிக்கைகளை நம்புபவராக, சாதி வெறி பிடித்தவராக இருந்தார் என்பது வேறு விடயம்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி பூங்குழலி.அவ்வாறு அனைவரையும் சென்றடைவதுதான் அவரது வெற்றியை உறுதி செய்கிறது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. உங்களின் கணிப்பு மிகச் சரியே அருண்மொழிவர்மன்.
    இதன் தொடர்ச்சியாக அவற்றை எல்லாம் எழுத விருக்கிறேன். தன்னை யார் முதலில் பகடி செய்துகொள்கிறானோ அவனால் தான் பிறரை சிரிக்க வைக்கமுடியும் என எண்ணுகிறேன்

    ReplyDelete
  6. அருண்மொழிவர்மன் சொல்லியதை அப்படியே ஆமோதிக்கிறேன்.. வடிவேலுவின் கதாபத்திரங்கள் இவர் நம்மில் ஒருவர் என்ற உணர்வைத் தரக்க்கூடியவை.. மாறாக விவேக் தன்னை வெகுசனத்திடம் இருந்து வேறுபடுத்தி, தான் ஒரு அறிவாளி என்பதாக நிறுவ முயன்றதால்தான் தோற்றார்.. வடிவேலுவும் தற்போது தேக்கம் அடைந்திருக்கிறார் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்..

    ReplyDelete