Monday, September 13, 2010

சாலமிகுத்துப் பெயின்


நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் சேர்ந்து மாவரைத்துக் கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே இது எங்கே நிகழும்” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.-லூக்கா 17, வசனம் 34-37.

என்னை அதீத நுட்பத்துடன் அவள் நிராகரித்ததிலிருந்து இக்கதை தொடங்குகிறது. அல்லது அதற்கு முன்பாகவே கூட தொடங்கிவிடும் சாத்தியமும் இருக்கிறது. இது கதையாக எழுதப்பட வேண்டுமென்பதில் அவள் காட்டிய ஆர்வமே கணிப்பொறி விஞ்ஞானியான என்னை தீவிரத்துடன் எழுத வைப்பதாக உணருகிறேன். அவள் மீதான எனது பிரியத்தை குறைந்த பட்சம் தெரிவித்துவிட முடியும் என்ற ஆசையாகவும் இருக்கலாம். நிராகரிக்கப்பட்ட வெற்று மனத்திற்கு வருணணைகளில் ஆர்வமோ அக்கறையோ ஏற்படாதென்பதால் கதையின் மொழி மிகவும் வறட்சியானதொன்றாக மாற்றம் கொண்டிருப்பதை தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் ஓர் இளநிலை விஞ்ஞானியாக இருக்கும் எனக்கும், அவளுக்குமான உரையாடல் வெகு சாதாரணமாகத்தான் நடந்தேறியது. இப்போது நினைத்தாலும் கூட அதில் எந்த ஆச்சரியத்தையும் உணரமுடியவில்லை. என்னுடைய ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் அவளது அன்பு என்னை மேலும் ஓர் அங்குலமாவது நகர்த்தவே செய்திருக்கிறது. அது இந்த நிமிடம் வரையிலும் நீள்வதாகவே நான் நம்புகிறேன். அது எந்த அளவிற்கு தொடர சாத்தியமுள்ளதோ அதே அளவிற்கு மறுக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் எண்ணுகிறேன்.

அதிகப் பனிப்பொழிவு காணப்பட்ட ஓர் நாளின் முன்னிரவில் நான் அவளிடம் கேட்டேன்.“என்னை எப்படி உள்வாங்கிக் கொண்டிருக்க”நான் கேட்டு விட்டு அவளைப் பார்த்தேன் அந்த வினாடியில் அவள் மீது படர்ந்த பதற்றத்தை தெளிவாக உணரமுடிந்தது. இருவராலும் பேசிக்கொள்ள முடியாத சூழல். சமீப நாட்களாக மணித்துளிகள் இவ்வாறாகத்தான் கழிந்து கொண்டிருக்கின்றன. அதன் பிறகான இரண்டு மூன்று சந்திப்புகள் மிகவும் தட்டையாக நடந்தேறின. என் மீதான அவளது அபிப்ராயம் மெல்ல மாறியிருக்கக் கூடுமென நினைத்துக் கொண்டேன்.வேறொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அவளைக் கேட்டேன்.“நான் கேட்டதற்கு பதிலே இல்லையா”வெகு அலட்சியத்துடன், மிகுந்த பாதுகாப்போடும் அவள் கூறினாள்.“எப்பவும் போலத்தான் நான் உன்ன நெனச்சிகினு இருக்கேன்”“நா இது மாதிரியான பதிலை உங்கிட்ட இருந்து எதிர்பாக்கல” என்று நான் கூறியதும் அவளது விழிகளில் கோபத்தின் சாயைகள் மின்னத் தொடங்கின. நெடிய மூச்சை உள்ளிழுத்தபடி என்னை நோக்கிக் கேட்டாள்.“என்னை எப்படி நீ நெனச்சிகிட்ட”அவளின் இந்த கேள்வி என்னுள் கலவரத்தை ஏற்படுத்தியது. சொல்லப்படாத வார்த்தைகளும் புரிந்து கொள்ளப்படாத பிரியமும் என்னுள் அப்படியே தேங்கிக் கிடந்தன. கல்லெறிந்த குளத்தின் அதிர்வுகளைப் போல மெல்ல அவளது இருப்பும் இயக்கமும் எனது மனதில் கவியத் தொடங்கிய போது, நான் தூக்கத்தை இழக்கத் தொடங்கியிருந்தேன். நீண்ட இரவுகளையும் குட்டி பகல்களையும் கற்பனை செய்து பார்க்கத் தொடங்கினேன். என் மனதில் உள்ளதை அவளிடம் எப்படி சொல்வது என்ற குழப்பமும், சொன்னால் எப்படி அவள் எடுத்துக் கொள்வாள் எனும் ஐயமும் என்னை மெல்ல அரிக்கத் தொடங்கியிருந்தது. ஒரு பெண்ணிடம் தன் காதலை (சில நேரங்களில் இவ்வார்த்தை புனிதமானதாகவும், பல நேரங்களில் கலாசாரத்தை சீர்குலைப்பதாகவும் புரிந்து கொள்ளப்படுவதன் அர்த்தம்தான் இன்னும் விளங்கவில்லை) சொல்வதில் உள்ள சூழ்ச்சமங்கள் என்னிடம் சிறிது கூட கிடையாது.எனக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தாலும் கூட காதலைச் சொல்வதில் போதிய தேர்ச்சி இல்லை என்பதை உணர்ந்தே இருந்தேன். தேக்கி வைக்க தேக்கி வைக்க வேகம் கூடும்தானே? கடைசியில் அப்படித்தான் நடந்தது. நானும் சில உத்திகளை கையாண்டு பார்த்தேன். சமீபத்தில் வெளியான ஓர் கட்டுரையில், “அன்பு, பாசம், நட்பு, காதல் எனும் வகைகளில் உறவுகள் கிளைத்துக் கிடப்பதாகவும், அப்படி எனில் அவளுக்கும் எனக்குமான உறவுக்கு என்ன பெயர் என்று கேட்டு, ஆம் அதுவேதான் என்று முடிக்கபட்டிருக்கும். ஆழ்ந்து யோசித்தாலும் கூட அக்கட்டுரையை யார் எழுதியது என்பதை நினைவில் கொண்டுவர முடியவில்லை. இந்தக் கட்டுரையை அவளிடம் காட்டி கேட்டேன்.“எனக்கும் உனக்குமான உறவுக்கு என்ன பெயர்?”கட்டுரையை திரும்பத் திரும்ப வாசித்தவள் என்னிடம் கூறினாள்.“நான் நினைக்கும் வார்த்தை அதில் இல்லை”ஆச்சரியத்தோடு அவளிடம் கேட்டேன்.“என்ன வார்த்தை?”நான் முடிக்கும் முன்பாகவே மிகவும் இயல்பாகவும், குரலில் லேசான பதற்றத்துடனும் கூறினாள்.“சகோதரப் பாசம்”அவளின் வார்த்தையை ஓரளவு முன்கூட்டியே தீர்மானித்திருந்தேன். அக்கட்டுரையை என்னிடம் காட்டியவள் ஒருவிதத் தீவிரத்துடன் கேட்டாள்.“நீ இதில் எதுவாக என்னை உணர்கிறாய்?”நான் மிகவும் மெதுவான குரலில் கூறினேன்.“இந்த நான்காகவும் தான் உன்னை உணர்கிறேன்.”நான் கூறியதை கேட்டவுடன் அவளது முகம் இறுகிக்கொண்டது. அவளது கைகள் மெல்ல நடுங்கத் தொடங்கின. நெற்றிப் பொட்டில் ஒரு நரம்பு புடைத்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. உள்ளுக்குள் எச்சிலை கூட்டி விழுங்கியவன் முதன்முதலாக என்னை அலட்சியத்தோடு பார்த்தாள். அவளின் உக்கிரமான பார்வை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. அன்றிலிருந்து தான் எங்களின் உரையாடல்கள் தடைபடத் தொடங்கியிருந்தன என்ற முடிவுக்கு வரமுடிகிறது. அதன் பிறகான நாட்களில் ஒருவரை ஒருவர் சங்கடத்தோடு பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

குளிர்ந்த காற்று வீசிய ஒரு மாலைப் பொழுதில் அவளை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவள் எப்பதிலையும் கூறாததால் மீண்டும் அவளிடம் கேட்டேன்.“நான் உன்ன அந்த நான்கு வார்த்தைகளோடும் பொருத்திப் பார்க்கறதுல உனக்கு ஏதாச்சும் கஷ்டமா?” என்னுடைய நீண்ட கேள்வியை கூர்ந்து கேட்டவளின் முகம் சட்டென இறுக்கம் கொண்டது. உஷ்ணத்தோடு மூச்சை வெளிவிட்டபடி கூறினாள்.“உனக்கு புத்தி கெட்டு போச்சினு நெனைக்கிறேன்”“அதுலாம் ஒன்னும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்”“என்ன ஒன்னும் இல்ல. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிட்டப்புறம் எப்படி இன்னொரு காதல் வரும்? (கடைசி வரை அவள் காதல் எனும் வார்த்தையை பயன்படுத்தவே இல்லை) அப்ப உன் மனைவி மேல வச்சிகினு இருக்கிறதுக்கு என்ன பேரு?”தனக்கு கோர்வையாக பேசத்தெரியாதென்றவள் மிகவும் நிதானமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பேசினாள். அவள் என்னை அடித்திருந்தால் கூட இந்தளவு வருத்தமேற்பட்டிருக்காது. வார்த்தைகளுக்கு வலிமை அதிகமென்பதை, நாம் ப்ரியம் வைத்திருப்பவர்கள் உபயோகிக்கும் போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது. நான் பேச்சிலாழ்ந்தவனாக நின்று கொண்டிருந்தேன். மீண்டும் அவளே பேசினாள்.“ஒருத்தங்க மேல ஏற்கனவே வந்த காதல், ரெண்டாவது தடவ எப்படி வேறொருத்தவங்க மேல வரும்?”சட்டென அவளின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அன்பையும் பிரியத்தையும் சட்டென நம்மால் வரையறை செய்துவிட முடியும் என்றும் தோன்றவில்லை. அறிவியலை உணர்வு பூர்வமாகவும் அன்பை பரிசோதனை செய்ததன் மூலமும் பெறப்பட்ட அறிவின் வினைப்பயன் இது என்று சொல்லத் தோன்றியது. என் அமைதியை களைத்தவளாக மீண்டும் பேசினாள்.‘வாய்தொறந்து பே. இன்னும் என்னலாம் மனசுல வச்சிகினு இருக்கற?” நிறைய பேச வேண்டும் என்றாலும் ஒரு வார்த்தையைக் கூட என்னால உரு திறட்ட முடியவில்லை. நா உலர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது. மெல்ல என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவளிடம் பேசத் தொடங்கினேன். இருட்டு எங்கும் கவியத் தொடங்கியிருந்தது.‘காதல்ன்றது ஒரு உணர்ச்சி, கோபம், சிரிப்பு, அழுகை மாதிரி. தன் வாழ்நாளில் யாரும் ஒரே ஒரு தரம் மட்டும் அழறது கெடையாது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாம் கோபப்படுகிறோம். அது போலத்தான்’“உன்னை பேசி ஜெயிக்கறது கஷ்டம்டா. எல்லாத்துக்கும் உங்கிட்ட பதில் இருக்கும். இல்ல பேசி மழுப்பிடுவே.”“இதுல மழுப்பறதுக்கு என்ன இருக்கு?”“அப்ப காதல்ன்றது புனிதமானது கெடையாதா?”“காதல்ல போயி புனிதம், புனிதம் இல்லைன்னு பாக்கறது மடத்தனம். பசிக்குது சாப்பிடுறோம். அது போலத்தான். உணர்ச்சிகள்ல புனிதங்களுக்கு எடமே கிடையாது. அளவுகள் வேணும்னா மாறலாம்.”நான் பேசப் பேச அவள் என்னை கூர்ந்து பார்த்தாள். சிறிது நேரம் அமைதி நிலவியது. கொசுக்கள் மொய்க்கத் தொடங்கின. தெரு விளக்கு ஏற்றப்பட்டு விட்டிருந்தது. என் மனைவி சூடாக தேனீர் கொண்டு வரவும், அவள் விடைபெற்றுக் கொள்ளவும் சரியாக இருந்தது.விடுமுறை முடிந்த இரண்டொரு நாட்களின் அவள் ஊருக்கு புறப்பட்டாள். கணவனுடன் அவள் புறப்பட்டு போவதை அவளது அம்மாவும் அப்பாவும் வீதியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால் நானும் பார்த்தேன். நான் பார்ப்பதை அவளும் திரும்பிப் பார்க்க வேண்டி வந்தது. அழகிய ஒரு பறவையைப் போல என் பார்வையை விட்டு கடந்து சென்றாள்.
அதன் பிறகு நேரில் பார்க்கும் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. தொலைபேசியிலும், கைபேசியிலும் பேசிக்கொள்ள வேண்டியிருந்தது. என்னால் அவளைப் பார்க்காமலும், பேசாமலும் இருக்க முடியாது என்று தோன்றியது (அவளுக்கு அப்படி எந்த ஒரு கட்டாயமும் இல்லை என்பதை பிறகான உடையாடல்களில் தெரிந்து கொண்டேன். கதையின் முதல் பிரதியில் இருவராலும் பார்த்துக் கொள்ளாமலும் பேசிக்கொள்ளாமலும் இருக்க முடியாது என்றே எழுதியிருந்தேன்.அவ்வாறு நான் நினைத்ததே இல்லை என்று கூறிவிட்ட பிறகு மேற்கண்ட வரிகள் அர்த்த மற்றவைகளாகத் தோன்றின. உலகின் முதல் வலி எப்படித் தோன்றியிருக்கும் என உங்களால் யூகிக்க முடிகிறதா)அந்த வாரத்தின் வியாழன் காலை என நினைக்கிறேன். அலுவலகத்திலிருந்து அவளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். அப்போது அவள் கேட்டாள்.“அன்னக்கி அம்மா வீட்ல இருந்து எங்க வீட்டுக்கு போறப்ப நீ பாத்ததான?”“ஆமா”“எனக்கு எப்படி இருந்திச்சி தெரியுமா?”“எப்படி இருந்திச்சி?”“ஒரே எரிச்சலா இருந்திச்சி”முதன்முதலாக நானே என்னை அருவறுப்பாக உணர்ந்தேன். ஒரு புழுவைப் போல துடிதுடித்தேன். என்னை அறியாமலேயே கண்களில் நீர் திரண்டன. அதற்கு மேல் அவளுடன் என்னால் பேச இயலவில்லை. தொடர்பை துண்டித்தேன். அறை முழுக்க ஏசி வியாபித்திருந்தும் உடம்பு வியர்க்கத் தொடங்கியது.பிறகான கொஞ்ச நாட்கள் எந்த தொடர்புகளுமற்று இருந்தோம்.

அலுவலகத்தில் என் சொந்த முயற்சியில் புதியதொரு மென்பொருளை வடிவமைத்திருந்தேன். அந்த சந்தோஷத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி தொடர்பு கொண்டேன். வழக்கமான நலம் விசாரிப்புகள். பிறகு நீண்டதொரு மௌனம். நானே பேசினேன்.“புதுசா ஒரு சாப்ட்வேர் வடிவமைச்சிருக்கேன். உங்கிட்ட நான் முதல்ல தரணும்னு நெனைச்சிருக்கேன்;அத கொடுக்கும்போது உங்கிட்ட இருந்து ஒன்ன எதிர்பார்க்கிறேன்”“என்ன சொல்லு?”“என்னை சாந்தப்படுத்துகிற அழுத்தமான ஒரு முத்தம்”இதை எப்படி கூறினேன் என்று தெரியவில்லை. ஆனால் தெரிவித்து விட்டிருந்தேன். தொடர்பில் இருந்தாலும் அவள் எதுவும் பேசவில்லை. அவளது மூச்சுக் காற்றை மட்டுமே உணர முடிந்தது. சூழலின் அமைதியை களைத்தபடி நானே பேசினேன்.“ஏன் பேசாம இருக்கற”“என்னால் பேச முடியல. நீ ஏண்டா இப்படி ஆன”“இல்ல எனக்கு அது அவசியமா படுது. நீ செஞ்சுதான் ஆவணும்.”“நீயே ஏன் உனக்குள்ள ஆசைய வளர்த்துட்டு கஷ்டப்படுற”“நான் யாரையும் கஷ்டப்படுத்தல. வேற யாருகிட்டயும் போயி நா கேக்கல. உங்கிட்டத்தான் கேக்கறேன். உன்னால முடியும். அடுத்த முறை உன்னை சந்திக்கிறேன்னா அது இதுக்காகத்தான் இருக்கும்.”வேகவேகமாக பேசிவிட்டு நீர் அருந்தினேன். கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, எந்த நேரமும் வெடித்து அழுதுவிடுவேன் போல இருந்தது. அவள் எந்த பதிலும் பேசவில்லை. வைத்து விடட்டுமா என்று கேட்டேன். ‘ம்’ என்று மட்டும் சத்தம் வர, நான் தொலைபேசியை துண்டித்தேன். சிறிது நேரம் கழித்து அவள் தொடர்பு கொண்டாள்.“நீ சொல்ற எல்லாத்தையும் கேக்கறேன். அனா தொட்டுக்காம பழகிக்க முடியாதா? (அவளால் ‘தொட்டுக் கொள்ளாமல்’ என்று தமிழில் கூற முடியவில்லை. ‘டச்’ பண்ணிக்காம இருக்க முடியாதா என்றே கேட்டாள்)நான் அமைதியாக இருந்தேன். அவளே என்னை, “பேசு, பேசு” என்று கேட்டுக் கொண்டிருந்தாள். எதையும் கூறும் மனநிலையில் நான் இல்லை. ஆனாலும் அவள் என்னை விடுவதாக இல்லை. பேசச் சொல்லி அதிகப்படியான நெருக்கடியை கொடுத்தாள். நான் பேச ஆரம்பித்தேன்.“ஏன் தொட்டுக்கிட்டா என்ன ஆயிடும்”“என்னால முடியாதே”“ஏன்”“அவருக்குன்னு கொடுக்கிறதுக்கு எங்கிட்ட இது ஒண்ணுதான இருக்கு”இருவரும் அவர் அவர்களுக்கான நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தோம். மிகுந்த கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த ஆரம்பித்தவள் என்னிடம் கூறினாள்.“என் மூலமா எந்த பொருளையும் உனக்கு கொடுக்கக் கூடாதுன்னு நெனைக்கிறேன்”“ஏன்”“அது எந்த அளவு உன்ன தீவிரப்படுத்தும் என்று எனக்குத்தான் தெரியும்”“அதுலாம் ஒன்னும் பன்னாது”“உனக்கென்ன தெரியும். எனக்குத்தான் தெரியும்”அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.என் தீவிரத்தை எவ்வாறு அவளுக்கு உணர்த்துவது என்றும் புரியவில்லை. தீவிரத்தின் நெருக்கடியால் தான்ஏற்கனவே ஒரு முறை மரணத்தின் விளிம்பு வரை சென்றிருக்கிறேன் என்பதை எப்படி அவளுக்கு உணர்த்துவது. மரணத்தை தொட்டிருந்தாலும் கூட இந்த அலைபாய்தலுக்கு இடமில்லாமல் இருந்திருக்கும். என் யோசனையை தடைசெய்யும் விதமாக மீண்டும் அவளே பேசினாள்.“வேற எதையாவது கேட்டால் பரவாயில்லை”“உன்னைத் தவிர வேற எதையும் என்னை சமாதானப்படுத்த முடியாது” என்று நான் கோபத்தோடு கூறினேன். ‘“எனக்கும் உனக்கும் பொறுத்தமே வராதுடா”“அத நான்தான் தீர்மானிக்கனும்னு நெனைக்கிறேன்” என்று கூறி தொடர்பைத் துண்டித்தேன்.

இயல்புகள் அற்று பேச்சுக்கள் குறைந்திருந்த ஒரு நாள் மதியத்தில் என்னிடம் கூறினாள்.“நீ கேட்டது கிடைக்கும். ஆனா எப்பனு தெரியல. கண்டிப்பா நான் ஏமாத்த மாட்டேன்”நான் பதில் கூறாமல் இருந்தேன். அவள் என்னை சமாதானம் செய்வதாக நினைத்துக் கொண்டேன். கலகலப்புடன் பேசுவது முற்றாக நின்று விட்டிருந்தது.“எனக்கு பேச வரல”“நா ஒண்ணு சொன்னா கேப்பியா”“சொல்லு”“நீ கேட்டத நான் செய்யிறேன்னு சொல்லிட்டேன். அது மாதிரி நீயும் எனக்கு எதையாவது விட்டுக்கொடேன்.”“எதை விட்டுக் கொடுக்க”“நான் செய்யறேன்னு சொன்னதை விட்டு கொடுத்திடேன்”ஒருவரை முடிவை நோக்கி நகர்த்துவதில் உள்ள சாதுர்யத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் திறமையுடன் காய் நகர்த்துவதைக் கண்டு வியந்தபடி இருக்கும் போதே அவள் என்னிடம் கேட்டாள்.“அத விட்டுக் கொடுத்திட்டா, அதுக்கும் இதுக்கும் சரியாயிடும் இல்ல”“நாம என்ன கூட்டல் கழித்தல் கணக்கா போடறோம்”அவள் மௌனமாக இருந்தாள். மூச்சை இழுத்து விடுவதை கேட்க முடிந்தது. லேசாக இருமவும் செய்தவள் என்னிடம் பேசினாள்.“டைம் ஆவுதுல்ல எதனாச்சும் பேசு”“என்னால பேச முடியல”“ஏன்”“கஷ்டமா இருக்குது”“அப்ப வச்சிடட்டா”“உன் விருப்பம்”நான் கூறி முடித்ததும் அவள் தொலைபேசியை வைத்து விட்டாள். எனது இதயம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. எதுவும் தெளிவில்லாமல் தோன்றின. அலுவலக உதவியாளரை அழைத்து சூடாக தேனீர் கொண்டு வருமாறு பணித்தேன்.

பகல் பொழுதின் இருப்பு நீளத் தொடங்கி வெக்கையும் அனலும் வீசத் தொடங்கிய கடந்த மாதத்தின் இரண்டு நாட்களில் அவளுடைய நெடிய இரு உரையாடல்களை நடத்தியிருக்கிறேன். உக்கிரத்தோடு நடைபெற்ற அவ்வுரையாடல்கள் துக்கத்தையும் அழுகையையும் தாங்கிக் கொண்டிருந்தன. வார்த்தைகள் வலி மிக்கதாக மாறிவிட்டிருந்தன. வெகு சாதாரணமாக பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகள் கூட பதற்றத்தின் அளவை அதிகப்படுத்தின. இருவரும் மாறி மாறி அழுது கொண்டிருந்தோம். தாங்கி கொள்ள முடியாத ஒரு தருணத்தில் நான் அழத் தொடங்கிய போது அவள் பதற்றத்துடன் கூறினாள்.“அழாதடா. நீ அழறது என் உயிர குடிக்கிறமாதிரி இருக்குடா”அழுகையை, அவள் எவ்வளவுதான் கெஞ்சிக் கேட்டாலும் என்னால் நிறுத்திக் கொள்ள முடியாமல் தவித்தேன்.


இருவருக்குமான விவாதம் நீண்டபடியிருந்தது. அவளிடமிருந்து வந்த வார்த்தைகள் உஷ்னத்தை தாங்கியிருந்தன கேட்பவரை சிதைத்துவிடக் கூடிய வார்த்தைகள். அதுவரை நான் அவளை அத்தனை கோபத்துடன் எதிர் கொண்டதில்லை (என் ஒரு முகத்தைத்தான் பார்த்திருக்க. இன்னொரு முகத்த காட்ணா நீ தாங்கவே மாட்ட மேற்கண்ட வரியில், இன்னொரு முகத்த காட்னா நீ இருக்கவே மாட்ட என்றுதான் முதல் பிரதியில் எழுதினேன். ஆனால் அவள், தான் அப்படிச் சொல்லவில்லை என்று கூறி ‘தாங்க மாட்ட’ என்று வார்த்தையை மாற்றி எழுதுமாறு கூறினாள். ஒரு சின்ன சந்தோஷம்) அவள் வார்த்தைகள் என்னால் சுலபத்தில் செரித்துக்கொள்ள முடியாமல் இருந்தது. யாரை விடவும் அவளை நான் அதிகமாக காயப்படுத்தியிருக்கேன்.கொதி நீரை அள்ளி முகத்தில் தெளிப்பதுபோல சுடுசுடுவென முகத்தை காட்டுவதும் அடுத்த நாள், அவ்வாறு நடந்துகொண்டதற்காக அவளது மன்னிப்பைக் கோருவதும் வழக்கமாகிப் போனது.நிராகரிப்பின் வலியையும் தோல்வியின் வேதனையையும் தாங்கிக்கொள்ள இயலாதவனாக அவளிடம் கேட்டேன்.“என்னை ஏன் ஒரு புழுவைப் போல தூக்கி எறிஞ்சிட்ட”“யாரு நானா”“ஆமா, நீ தான் என்ன நிராகரிச்ச”“அது ஒன்னுமட்டும்தான வேணாம்னு சொன்னேன். உன்ன நிராகரிச்சுட்டேன்னு எப்பவாவது சொன்னனா?” என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் அதற்கு சமமான பதில்கள் அவளிடமிருந்து வந்தன. நான் அமைதியிழந் தவனாக நெளிந்தேன். காமம் என்பது ஓர் உடற்பயிற்சி மாதிரிதானே. நம்மை சாந்தப்படுத்திக் கொள்ள உதவும் ஒரு வழிமுறைதான் அது என்பதை எப்போது நாம் புரிந்து கொள்ளப் போகிறோம் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் என்னிடம் கூறினாள்.“நீ கேட்டத தான் தரன்னு சொல்லிட்டேனே. அப்புறம் உன்னை எப்படி நிராகரிச்சதாவும்”நான் மௌனமாக இருந்தேன். அவளே என்னிடம் பேசினாள். வாயைத் திறந்தால் அழுதுவிடும் நிலை எனக்கு.“எதனாச்சும் பேசு. மனசுல பூட்டி பூட்டி வச்சிகினு எவ்ளோ நாள் தான் இருக்கறது”“நான் நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். தோல்வி அடைந்திருக்கிறேன். தயவு செய்து என்னை பொருட்படுத்தாத” என கூறி முடிக்குமுன் அழுகை வெடித்துக் கிளம்பியது.“ப்ளீஸ் அழாதடா. நீ அழறது என் உயிரையே உலுக்குற மாதிரி இருக்கு. நா உன்ன நிராகரிக்கல, தோற்கடிக்கவும் இல்ல. நீ கேட்டத நான் கொடுத் துட்டேன். எனக்காக அத விட்டு கொடுன்னுதான் கேட்டேன். நீயும் விட்டு கொடுத்திட்ட. இதுல நீ எங்க தோத்த. நெஜமாகவே நீ தான் ஜெயிச்சிருக்க.”அவளின் இந்தப் பேச்சை எப்படி எடுத்துக்கொள்வது. தந்திரம் என்பதா? சாமர்த்தியத்தில் சேர்த்தியா ஒன்றும் விளங்கவில்லை. கால் பந்தாட்டத்தில் எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் பந்தை உருட்டிச் செல்லும் வீரனைப்போல மிகவும் சாதுர்யமாக அவள் காய்களை நகர்த்துவ தாகப்பட்டது.

எந்த கட்டத்திலும் எனக்கு வழிவிடாமல் அவள் முன்னகர்வதையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை நுணுக்கமாக உபயோகிப் பதில் தீவிரமாக செயல்பட்டாள். என் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதே மறந்து போனது. மீண்டும் அவளே நினைவூட்டும் விதமாக என்னிடம் பேசினாள்.“டேய் ஏன் மௌனமா இருக்க?”என்னால் அவளுக்கு உடனே எந்த பதிலையும் கூறமுடியவில்லை.“உன்ன திருப்தி படுத்தற எதுவும் எங்கிட்ட கெடையாது”“வேறெதாவது சொல்லு. நீயே உன்ன மலினப் படுத்திக்க வேணாம்”“அப்படி எந்த விதத்துல உன்ன பாதிச்சேன்”“சட்டுனு சொல்றதுக்கு அது ஒன்னும் வாய்ப்பாடு இல்ல”“ஆவுன்னா இது ஒன்ன சொல்லிடு”திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தோம். அவள் கவனத்தோட இருந்தாள். என்னிடம் இருக்கும் அவளை எப்படியாவது பத்திரமாக பிரித்துக் கொண்டு போய்விட வேண்டுமென்பதில் தீவிரத்துடன் இருந்தாள். அதற்கான எல்லா நுட்பங்களும் அவளிடம் இருந்தன.சில சந்தர்ப்ப சூழல்களால் அதன் பிறகு அதிகமாக பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லாமல் போனது. அது ஒரு விதத்தில் அவளை மகிழ்ச்சியடையச் செய்திருக்கக்கூடும்.

கதையின் முடிவை கீழ்கண்டவாறு எழுதுவதில் கொஞ்சம் வருத்தம்தான் ஆனாலும் இதைவிடவும் வலிநிறைந்த வரிகளைக் கொண்டு இக்கதையை நிச்சயம் என்னால் முடிக்க இயலாது.அடர்த்தியான சோகத்தையும் வலியையும் பொருக்க முடியாத ஒரு நாள் இரவில், மிகவும் சுலபமான வழியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருந்த என்னைப் பார்த்து கிடைக்கப் பெறாத சில முத்தங்களும் வெளிவராத சில வார்த்தைகளும் எள்ளி நகையாடிக் கொண்டிருப்பதை நன்கு உணர முடிந்தது.கதையை முடித்தபின் அவளுக்கு அனுப்பி வைத்தேன். நான் அனுப்பிய சில நாட்கள் கழித்து என்னைத் தொடர்பு கொண்டு பேசினாள்.“இந்த முடிவு கதைக்கு மட்டும்தானே”“ஆமா. அதுல என்ன சந்தேகம். கதையில வேற எதையாவது மாத்தனமா?”“இல்லை என்று இழுத்தவள், “நிச்சயமா இந்த முடிவு கதைக்கு மட்டும் தான” என்று மீண்டும் கேட்டாள்.“ஆமா” என்று மட்டுமே கூறினேன்.“நீ என் செல்லம்டா” என்று கூறி தொடர்பைத் துண்டித்தாள்.கதையின் முடிவு கதைக்கு மட்டுமேயானதாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாதென நினைக்கிறேன். முடிவை நோக்கி நகர்த்தப் பட்ட வலி மிகுந்த அத்தருணங்களையே மிகவும் முக்கியமென கருதுகிறேன். முதன் முதலாக சிறிதளவு தந்திரத்தோடு ஒரு முடிவெடுத்த போது, சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவ்வத் தொடங்கியிருந்தது.

1 comment: