Saturday, September 4, 2010

மண்ணில் வேர் பரப்பும் செடியே இறுதியில் கனி கொடுக்க வல்லது.


எவ்வளவு தான் நவீன முயற்சிகளை தொடக்க நிலை கல்வியில் கொண்டு வந்தாலும் கூட அவற்றின் வேகம் போதாததாகவே தோன்றுகிறது. கற்றல் எனும் சொல் இங்கு அடைவுத்திறன் எனும் செயலோடு இறுகப் பிணைக்கப்பட்டே உள்ளது. நல்ல அடைவுத்திறன் பெற்றால் தான் கற்றல் கற்பித்தல் முழுமை பெற்றதாக நாம் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம். அடைவுத்திறன் என்பது கூட இங்கு பெரிதும் மதிப்பெண் சார்ந்ததாகவே இருக்கின்றது. இந்த சோகம் ஒரே நாளில் கட்டமைக்கப்பட்டதில்லை. மக்களுக்கு மதிப்பெண் சார்ந்து அதீத மோகம் ஏற்பட நம்முடைய அரசுகளும் தொடர்ந்து காரணமாக இருந்திருக்கின்றன. இன்று கல்வி என்பது பெரும் லாபநோக்கோடு கூடிய வணிகமாகிவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ நாமும் அக்கன்னிகளில் பிணைக்கப்பட்டு இருக்கிறோம். ஒரு முறை பிணைக்கப்பட்டு விட்டால் அப்புறம் செக்கு மாடு கதிதான்.
இங்கு எல்லாமே அவசர கோலத்தில் நடக்கிறதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. நாம் விளம்பரங்களுக்கும் பிரம்மாண்டங்களுக்கும் நுட்பமாக பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். எளிமையான எதையும் நாம் யோசிப்பது கூடக்கிடையாது.அதீதங்கள் நிரம்பி வழிவதாக இருக்கின்றன நம் அன்றாட வாழ்க்கை. பிரம்மாண்டங்கள் தினிக்கப் பட்ட நிகழ்வுகள் இங்கே தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் அடுத்த நொடி அனைத்தும் இங்கே வெறும் செய்தியாக மலினப்படுத்தப்படும். அரசும் இன்ன பிற அதிகார வர்க்கமும் இவ்வாறான வேலைகளை தொடர்ந்து செய்து வருவதை நாம் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறான சிக்கலான சூழலில் தான் நாம் இன்றைய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளின் போதாமைகளை ஆராய வேண்டியிருக்கிறது.
பொதுவாகவே நமது அரசுகளுக்கு தீவிர கலை இலக்கிய ஆளுமைகள் குறித்து உயர்வான மதிப்பீடுகள் எந்த காலத்திலும் இருந்தது இல்லை. இரண்டாம் தரமான கலைஞர்களையே அவர்கள் தொடர்ந்து அருகில் வைத்துக்கொள்ள விருப்பப்படுவர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் இந்தப் போக்கு கிடையாது. தரமான படைப்பின் வழி உருவாகும் ஆளுமைகளே அங்கு போற்றப்படுவார்கள். சிவராம கரந்த், எனும் ஆளுமை கர்நாடக பாடத்திட்டம் உருவாக்கத்தில் துணை நிற்பதும், யூ.ஆர். அனந்தமூர்த்தி போன்றோர் தொடர்ந்து கல்விக்கான தளத்தில் இயங்குவதும் அங்கு சாத்தியப்பட்டது போன்று ஒருபோதும் இங்கு நடக்க வாய்ப்பில்லை. தொடக்கக்கல்வியையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் நாம் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். அவர்களோடு விவாதித்திருக்க வேண்டும். நம்முடைய பள்ளிக் கல்வி இன்றும் மெல்ல நடைபோட இதுவே பிரதானமான காரணம். இப்போதும் படைப்பாளிகள் கலைஞர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மேலும் படைப்பாளிகளை கௌரவிப்பது என்பது தமிழ் துணைப்பாட நூலில் அவரது ஓர் படைப்பை சேர்ப்பதாகவே இன்றும் நம்முடைய அரசுகள் கருதுவது தான் மிகப் பெரிய சோகம்.
இன்று நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கும் செயல்வழிக் கற்றல் முறையும், படைப்பாற்றல் கல்வி முறையும் கற்றல் கற்பித்தல் சார்ந்த முற்போக்கான செயல்பாடுகள்தான். அதற்காக அரசை நிச்சயம் பாராட்டலாம். ஆனால் இக்கல்வி முறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என்று கூடப் பார்ப்பதில்லை. ஆக இங்கிருந்தே ஆரம்பிக்கின்றன சமூக ஏற்றத் தாழ்வுகள். இங்கு அரசு சமச்சீர் கல்வித்திட்டம் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல், பொது அறிவு, போன்றவற்றுக்கு தனியான பாடப் புத்தகங்களை அவர்களாகவே வழங்கிக் கொண்டிருக்கின்றனர். கல்விக் கட்டணம் சார்பான பிரச்சனையில் தனியார் பள்ளிகள் ஒரு கட்டத்தில் அரசையே மிரட்டவும் செய்தனர். இத்தகையை மிரட்டும் சக்திகளின் பின்னால் யார் யாரெல்லாம் நின்று கொண்டிருக்கின்றனர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் என்ன செய்ய முடியும். நடக்கும் நாடகத்தில் அவர்களும் நடிகர்கள் தானே. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு ; “நான் அடிக்கற மாதிரி அடிக்கிறேன், நீ அழற மாதிரி அழு” கல்விக் கட்டணம் தொடர்பான அரசின் அணுகுமுறை இவ்வாறாகத்தான் இருந்தது என்பதை எல்லோரும் உணர்ந்தே இருக்கின்றனர்.
இவற்றையெல்லாம் தாண்டியே நம்மால் இன்றைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும்? அது எவற்றை உட்பொருளாக கொண்டிருக்க வேண்டும்? எவ்விதமான வளர்ச்சியை நோக்கி அது நடை போட வேண்டும் என்பன குறித்து யோசிக்க முடியும்.
உலகம் முழுக்க இன்று பள்ளிக்கல்வியில் அடுக்கடுக்கான புதுமைகள் தொடர்ந்து புகுத்தப்படுகின்றன. உலக நாடுகள் பள்ளிக் கல்விக்கு அளிக்கும் நிதியை ஒரு போதும் செலவாக கருதுவதில்லை. எதிர்கால வளர்ச்சிக்கான முதலீடாகவே அவை கொள்ளப்படுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சி; அடிப்படைக் கல்வி, உள்நாட்டு பாதுகாப்பு, சுகாதாரம், உணவு ஆகிய காரணிகளைக் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதை இவ்விடத்தில் புரிந்து கொள்வது சாலப் பொருந்தும்.
கல்வியாளர்களும் குழந்தை உளவியல் நிபுணர்களும் இன்று கற்றல் கற்பித்தல் எனும் செயல்பாடு, கேட்டல் பேசுதல் படித்தல் எழுதுதல் எனும் படிநிலைகளில் தான் அமையப் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நம்முடைய மனம் படிநிலைகளை புறந்தள்ளிவிட்டு குழந்தை எடுத்தவுடனேயே எழுதவும் படிக்கவும் வேண்டும் என்று துடியாகக் கிடந்து தவிக்கிறது.

இன்றும் தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகள் குறைந்தது எட்டு முதல் பத்து பாடக் குறிப்பேடுகள் (NOTES) எடுத்துச் செல்லும் அவலம் நடக்கிறது. அக்குழதைகள் பொதிமாடுகள் போல நடத்தப்படுவதை நமது ஆட்சியாளர்கள் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் அதிகபட்சமாக இவ்வாறு சுமப்பது தவறான செயல் என்று ஓர் அரசாணை வெளியிட்டு தங்களது பணியை முடித்துக்கொள்வர். இது சார்ந்து தொலைநோக்கோடு இயங்கவும் திட்டமிட்டவும் அவர்களுக்கு சிறிதும் நேரம் கிடையாது.
ஆனால் தொடக்க நிலைக் கல்வி தான் அதிகமும் அக்கரை எடுக்கப்பட வேண்டிய துறையாகும். எந்த ஒரு நாடு தொடக்கக் கல்விக்கு தொடர் கவனத்தை அளிக்கிறதோ, அந்நாடே அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும். மேலும் தொடக்க நிலை கற்றல் கற்பித்தல் பெரிதும் குழந்தைகளின் மனநிலை சார்ந்தது என்பதால் அதிக கவனம் கொள்ளப்படவேண்டிய துறையாகவும் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இன்றைய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் அவசியம் கீழ்காணும் அடிப்படையான திறன்கள் இணைக்கப்பட வேண்டும். மதீப்பீட்டிற்கு அழுத்தம் கொடுக்காமல் மாணவர்கள் தாங்களாகவே பங்குபெறும் விதத்தில் அவை செயற்படுத்தப்பட வேண்டும். அச் செயல்பாடுகளை ஒரு வசதிக்காக அடிப்படை கற்றல் செயல்கள் என்றும் அழைக்கலாம்.
முதலில் குழந்தைகளுக்கு புறஉலகை கவனிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். அத்தகைய கவனித்தலில் இருந்துதான் முதன் முதலாக கற்றல் அடுத்த நிலைக்கு விரிவடைகிறது. அதற்கடுத்த நிலையில் இசையும் வண்ணமும் அவர்களுக்கு கற்றலின் அடுத்த கதவைத் திறந்து வைக்கின்றன. ஆனால் நாம் விளையாட்டிற்கு கூட அவர்களுக்கு மேற்கண்டவற்றை அளிப்பது கிடையாது. இவ்வாறு சூழலை கவனிப்பதை தான் நவீன அறிவு உற்றுநோக்குல் என்று குறிப்பிடுகிறது.
இதற்கடுத்த நிலையில் கதை கூறுதல், கதை கேட்டல் எனும் நம் பாரம்பர்ய முறையை பயன்படுத்தலாம். கதையை கூறுவதன் மூலம் மாணவர்களது படைப்பாக்கத் திறனை நிச்சயம் மேம்படுத்திட முடியும். கதை கூறுவதில் உலக நாடுகளில் முக்கியமான இருவகைகள் கையாளப்படுகின்றன. அவை சுதந்திரமான கதை கூறல், கட்டுப்படுத்தப்பட்ட கதை கூறல் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருவகையான கூறல் முறைகளையும் நாம் ஆரம்பக் கட்டத்தில் பயன்படுத்த முடியும். கட்டுப்படுத்தப்பட்ட கதை கூறல் முறை மாணவர்களின் சிந்தனை, கற்பனையை ஒரு புள்ளியை நோக்கி குவிக்க உதவும். ஆனால் சுதந்திரமான கதை கூறுதல் அவர்களுக்கு சிறகு தந்து கற்பனை உலகில் தன் போக்கில் சுதந்திரமாக பறந்து திரியும் வாய்ப்பை தருகிறது.
மேலை நாடுகள் இன்று கதை கூறுவதை ஓர் சிறந்த கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் கதை சொல்வதையே மரபாக கொண்ட நாம் அதிலிருந்து விலகி நடக்க ஆரம்பித்து விட்டோம். நம் வீட்டு பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களைப்போன்று தொலைக்காட்சிகளை தங்கள் நண்பர்களாக்கிக் கொண்டு வாழக்கற்றுக் கொண்டு விட்டனர்.
இதற்கடுத்த நிலையில் போலச் செய்தல் எனும் உடல் மொழிப் பயன்பாட்டை வடிவமைப்பதில் கவனம் கொள்ள வேண்டும். இது குறித்து கல்வி, உளவியல், அரங்கக்கலை வல்லுனர்கள் நிறைய விவாதித்தும் சிந்தித்தும் உள்ளனர். அவர்கள் அறிமுகப் படுத்தியது தான் “magic if” எனும் முறை. மாணவர்களுக்கு ஒரு சூழலைச் சொல்லி அதற்கு ஏற்றாற்போல் இயங்கச் செய்தல். உதாரணமாக, அடர்ந்த காடு, குறுக்கே ஒரு ஓடை ஓடுகிறது. அதன் அருகே ஒரு புலி படுத்துக்கிடக்கிறது. வழி நெடுகிலும் முட்கள் பரவிக்கிடக்கின்றன என காட்சியைச் சொல்லி, இவ்வாறு இருந்தால் (if) நீ எவ்வாறு அதற்கு ஏற்ப நடப்பாய் (reactions) என்று பழக்குவது தான் இம்முறை. மேலை நாடுகளில் கற்பித்தல் நுட்பங்களில் இது பிரதான இடம் வகிக்கிறது.
இதன் தொடர்ச்சியாகத்தான் பாத்திரங்களின் பொருள் உணர்ந்து நடிப்பது, குழுவாக நடிப்பது போன்ற படிநிலைகள் பயன்படுத்தப் பட வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் நடிப்பு என்பது கூட்டுத்திறன்களின் பயன்பாடு என்று கூறவும் இடமிருக்கிறது. நடிப்பு என்பது உடலும் மனமும் சேர்ந்து இயங்கி வெளிப்படுவதாகும். இதில் குழந்தைகள் அசைவுகள் (movements) மற்றும் உணர்ச்சிகள் (emotions) போன்றவற்றை பழகுகின்றனர். இதன் மூலம் சமூகத்தோடு பொருந்திப்போவதற்கான சில அடிப்படை திறன்களை மாணவர்கள் பெறுகின்றனர்.
மேற்கண்ட அடிப்படைச் செயல்களே இறுதியானவை என்று நான் நினைக்கவில்லை. அவ்வாறான ஒரு முடிவிற்கு வருவதே கூட அபத்தமென கருதுகிறேன். அடிப்படையில் கற்றல் என்பது தொடர்ந்து விரிவு செய்தபடியே தன்னை புதிப்பித்து கொள்ளும் செயல்பாடாகும். மேலும் கற்றல் என்பது எப்படி வேண்டுமென்றாலும் நிகழலாம் என்பதால் இன்னும் நிறைய உத்திகளை சேர்த்து அடிப்படை கற்றல் செயல்களை விரிவு செய்து கொண்டே செல்லலாம். அப்போது தான் கற்றலை இன்னும் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.
இறுதியாக, ஒரு குழந்தையின் வளர்ச்சி, அது பெறும் மதிப்பெண்களால் தீர்மானிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சியே முழு வளர்ச்சி என்பதை மக்கள் மனதில் கொண்டு சேர்க்க அனைத்து மட்டத்திலும் உடனடி மாற்றம் அவசியம் தேவைப்படுகிறது. இம்மாற்றம் நல்ல பல முற்போக்கான அடுத்த கட்ட நகர்வுக்கு அனேக வாசல்களைத் திறக்கப் பயன்படும். அடுத்ததாக எந்த செயல்வடிவமும் மேலிருந்து கீழ்நோக்கி வருவதாக இருக்கக்கூடாது. களத்திலிருந்து தருவிக்கப்பட்டதாக கீழிருந்துதான் செயல் வடிவங்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். மேலும் எது குறித்தும் ஆழ்ந்து யோசித்து நமக்குள் தெளிவுப்படுத்திக் கொண்ட பின்புதான் அவற்றை பொதுமையாக்க வேண்டும் என்ற முறையை கடைபிடிக்க வேண்டும். இவற்றை பின்பற்றினால் பொருள், கால விரயங்கள் தவிர்க்கப்பட்டு மனித ஆற்றல் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது என்ற உறுதியான இலக்கை அடையலாம். நல்ல இலக்குகளே தொலைநோக்கோடு பயனிக்கும் சாத்தியத்தை கொண்டிருக்கின்றன. அவ்வாறான இலக்குகளை தீர்மானிப்பதே இன்றைய காலகட்டத்தின் தலையாய பணியும் தேவையும் ஆகும். ஆனால் எப்போதுமே அதிகாரங்கள் உடனடி வெற்றிகளை மட்டுமே குறியாக கொண்டு இயங்குபவை. நம்முன் இருக்கும் பெரும் சவாலே பாதையைக் கண்டடைந்து செப்பனிட்டப்படியே முன்நகர்வதுதான். என்ன செய்தாலும் இறுதியில் ஊர் கூடித் தானே தேரை இழுக்க வேண்டியுள்ளது?

4 comments:

  1. உங்களுடைய கருத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன் காலபைரவன். கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற அ முத்துலிங்கத்தின் புத்தகத்தில் உங்களுடைய புலிப்பாணி சோதிடர் பற்றி பாவண்ணன் எழுதியிருந்தார். சென்ற ஆண்டு அந்தப் புத்தகத்தை வாங்கினேன். முதல் கதையை மட்டும் படித்தேன். சுதந்திரத்திற்கு முன் வந்த கதையை தேடித் தொகுத்த உங்களுடைய முயற்ச்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மீதிக் கதைகளைப் படிப்பதற்கான அவகாசம் தான் இன்னும் கிடைக்கவில்லை.

    ReplyDelete
  2. ரொம்ப சந்தோஷம் பிரபு. புலிப்பாணி ஜோதிடர் தொகுப்பில் இருக்கும் காக்கா கதையும் முழுக்க முழுக்க கற்பனைக் கதையே. தேடி வாசிக்கும் உங்களை பாராட்டுகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அன்புள்ள காலபைரவன்,

    தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

    //
    இறுதியாக, ஒரு குழந்தையின் வளர்ச்சி, அது பெறும் மதிப்பெண்களால் தீர்மானிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, ஒட்டு மொத்த ஆளுமை வளர்ச்சியே முழு வளர்ச்சி என்பதை மக்கள் மனதில் கொண்டு சேர்க்க அனைத்து மட்டத்திலும் உடனடி மாற்றம் அவசியம் தேவைப்படுகிற
    நல்ல இலக்குகளே தொலைநோக்கோடு பயனிக்கும் சாத்தியத்தை கொண்டிருக்கின்றன. அவ்வாறான இலக்குகளை தீர்மானிப்பதே இன்றைய காலகட்டத்தின் தலையாய பணியும் தேவையும் ஆகும்.
    //
    இதில் பெற்றோர்களின் பங்கையும் பார்க்க வேண்டும். பல பெற்றோர்கள் மதிப்பெண் மோகத்தில் உள்ளார்கள், வெற்றி என்பது மட்டுமே குறிக்கோள். நான் நேரில் கண்ட வரையில் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக இருக்குமாறு ஆசிரியர்களிடம் கூறி இருக்கிறார்கள். இது படிப்பில் மட்டும் அல்ல 'ரியாலிட்டி ஷோ' எனப்படும் கூத்துக்களிலும் இது தான் நடக்கிறது.
    இந்த நிலையில் மாணவர்களின் மனநிலை எப்படி இருக்க முடியும். ஒரு மொத்த ஆளுமையின் வளர்ச்சி என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் சிறு சிறு தோல்விகளையும் தாங்கும் மனப்பாங்கு மாணவர்களிடம் வருவதில்லை.

    இவ்வாறான கல்விச்சூழலில் தான் ஒரு பெண் ஆங்கிலம் அறியவில்லை என்பதற்காக அண்ணா பல்கலைகழகத்தில் கேலி செய்யப்படுகிறாள். என்ன விதமான கல்வி இது.

    //
    அடிப்படையில் கற்றல் என்பது தொடர்ந்து விரிவு செய்தபடியே தன்னை புதிப்பித்து கொள்ளும் செயல்பாடாகும்.
    //

    நிச்சயமாக. கற்றலுக்கு முடிவு ஏது?

    Ajay

    ReplyDelete
  4. மிகவும் சரியாகச் சொன்னீர்கள் அஜய். இன்றைய கல்வி முறை சார்ந்து எனக்கு நிறைய ஐயங்களும் பதற்றமும் கூடிக்கொண்டே இருக்கின்றன அஜய்.

    ReplyDelete