Saturday, September 4, 2010

திருவாளர் ‘ழா’ கடைசியாக வந்துகொண்டிருக்கிறார்


உங்களுக்கு
திருவாளர் ‘ழா’ வைத் தெரிந்திருக்க
நியாயம் இல்லை
சட்டென
அடையாளம் காணவும்
முடியாது அவரை

இருப்பினும்
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்
அவர் புகழை
ஆளுமையை
தலைமைப் பண்பை.

பார்த்த நொடியில் உங்கள்
குணத்தைக் கூறும்
வல்லமை அவரிடம்
அதிகம் உண்டு.

நாத்திகத்தின் பக்கம் நின்று
நகம் கடித்துக்கொண்டிருக்குமவர்
ஆத்திகத்தின் பக்கமிருக்கும்
உங்களின்
கடும்நோய் தீர்க்க
வேப்பிலை கொண்டு
அவ்வப்போது
பாடமும் அடிப்பார்.

அதீத துல்லியத்துடன்
ஆடையுடுத்துமவர்
தலைக்கவசத்துடன் தான்
எப்போதும்
நகர்வலம் வருவார்.


அவரது அடிப்பொடியொருவர்
கழுத்துப்பட்டையை
கையில் கொடுத்து
அணிந்தால் அழகாவீரெனச் சொன்னார்.

கழுத்துப்பட்டையை
கட்டும் முயற்சியில்
குரல்வளை அறுந்து
தன் இன்னுயிர் துறந்தார்
எல்லாம் தெரிந்த திருவாளர் ‘ழா’

இப்போது திருவாளர் ‘ழா’
பிணமாக
பின்னால் வந்து கொண்டிருக்க
தீச்சட்டியுடன்
முன்னேறிக்கொண்டிருக்கிறார்
‘ழா’ வாக மாறத் துடிக்கும்
நம்மில் ஒருவர்

2 comments:

  1. இந்த அரசியல் புரியல.... ஆனாலும் கவிதை ருசிக்கிறது....அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தமிழ்" மொழியைப்பற்றியும் தமிழன் ஆங்கிலம் படித்ததன் விளைவையும் பற்றிதான் கவிதை சொல்கிறது..
    அருமை.. :-)

    ReplyDelete