Thursday, October 14, 2010

ஞாபகத்தில் தேங்கிய வீடு


தன் வீட்டைக் கட்டிமுடித்த
திருப்தியில் உங்களை சிறுபுன்னகையோடு திரும்பிப்
பார்க்கிறாள்
சிறுமி சைதன்யா
சுவர் கோணலாக இருப்பதாக்கூறி நீங்கள் சிரிக்க
அவள் வாயிற்கதவை திறந்துவிட்டதாகக் கூறுகிறாள்
கை நுழைய முடியாத நுழைவாயிலைக்கொண்டு
என்ன செய்துவிட முடியுமென்கிறீர்கள்
உள்ளே நுழைந்து ஒளியேற்றிவிட்டேன் என்கிறாள்
ஒளிவெள்ளம் பெருகும் வீட்டை
தை மாத வெள்ளாமை கொண்டு நிரப்புவேனென்று
அவள் சூளுரைத்தபோது
ஈசானத்திக்கில் மேகம் திரண்டு மழை வலுக்கிறது

உங்களின் குற்றச்சாட்டுகள் பெருகிக்கொண்டே இருக்க
வீடுகளாக கட்டிக்கொண்டே இருக்கிறாள் அவள்
பின் அவளின் வேகம் உங்களை மௌனமாக்குகிறது
சடுதியில் எல்லா வீட்டிற்குள்ளும் நுழைத்து
திரும்புமவள் உங்களைப் பார்க்கிறாள்

பின் தலையுயர்த்தி ஈசானத்திக்கைப் பார்க்கிறாள்
குளிர்காற்றெடுக்க மின்னலும் இடியும் வலுக்கின்றன

என்ன நினைத்தாளோ தெரியவில்லை
தான் கட்டிய ஒவ்வொரு வீட்டையும்
வேகத்தோடு இடித்து தரைமட்டமாக்கி
தன் பாவாடையை உதறிக்கொண்டு கிளம்புகையில்
காற்றும் மழையும் சுழன்றடிக்கின்றன

இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது வெளிச்சம்
இடிபாடுகளுக்கிடையில்

வீடுகளிருந்த இடத்தை வெறித்துப்
பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

1 comment:

  1. சின்னதொரு வெறுமை கவிதையில் விரவிக் கிடக்கிறது... நல்லாயிருக்கு நண்பா

    ReplyDelete