Friday, October 8, 2010

உயிர்த்தெழல்


அடர்ந்தோங்கிய வனம் அது. விண்ணை முட்டும் அளவிற்கு மரங்கள் ஓங்கி உயர்ந்திருந்தன. நண்பகலில் கூட அடர்ந்த இருள் பரவிக் கிடந்தது. சூரிய வெளிச்சத்தைக் கொண்டுதான் ஓரளவு திசைகளை அறிந்து கொள்ள முடிந்தது. காட்டின் ஊடே பெரிய காட்டாறு ஓடிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு குன்றும் மலைகளுமாகத் தெரிந்தாலும் மலையைத் தாண்டி உள் நுழைந்து விட்டால் வனத்தின் விஸ்தீரணத்தை உணர்ந்து கொள்ள முடியும். மனித நடமாட்டம் அற்றிருந்ததால் உயினங்கள் அனைத்தும் சுதந்திரமாக வனத்தை வலம் வந்து கொண்டிருந்தன.

வனத்தின் தலைவராக இருந்த சிங்கம் அனைத்தையும் ஓர் ஒழுங்கின் கீழ் நடத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையில் எவ்வித சிக்கலுமின்றி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தன. அந்த வனத்திற்கு ஒரு நரி வந்து சேரும் வரை அனைத்தும் அமைதியாகவே இருந்தது. நரிக்கு எப்போதுமே தந்திரம் அதிகம். அதுவும் அது ஒரு கிழட்டு நரிவேறு. வந்ததும் அது தன் வேலையைத் துவங்க ஆரம்பித்தது. சிங்கத்திற்கு அளிக்கப்படும் மரியாதையைக் கண்டு பொறாமை கொண்டது.

சிங்கம் எதையும் வேண்டிப் பெறுவதில்லை என்றாலும் கூட பிற மிருகங்கள் தானே வலிய வந்து சிங்கத்தை வணங்குவதை முறையாகக் கொண்டிருந்தன. நாளாக நாளாக நரிக்கு பொறாமையின் அளவு பெருகிக் கொண்டே இருந்தது. சுலபத்தில் அதை நரியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சிங்கத்தை விட தந்திரத்திலும் வயதிலும் தான் தான் மூத்தவன் என்று நினைத்த அதற்கு இன்னும் ஆத்திரம் கூடியது. எப்படியும் தான் வனத்தின் ஆஸ்தான இடத்தை அடைந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியது.

மறுநாளில் இருந்து நரியின் நடை மாறிவிட்டிருந்தது. அது தோள்பட்டையை உயர்த்தி, கைகளை வீசி வீசி எம்பி எம்பி நடக்க ஆரம்பித்தது. மிகவும் தனித்துவமானவன் என்று தன்னை பிரஸ்தாபித்துக் கொள்ள அது மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அது அவ்வாறு நடந்து செல்வதைக் கண்ட முயல், மரக்கிளையில் அமர்ந்திருந்த குருவியிடம் ‘‘நரிக்கு மூலம் வந்துடுச்சா.... இல்ல கால்ல ஆணியான்னு தெரியல. எம்பி எம்பி நடந்து போவுது’’ என்று கூறியது.

முயல் கூறியதைத் தொடர்ந்து குருவி நரியைத் திரும்பிப் பார்த்து ஓங்கிச் சிரித்தது. நரியின் நடையைப் பார்த்து அவை விழுந்து விழுந்து சிரித்தன. தனக்கு அளிக்கப்படும் கௌரவமாக நினைத்துக் கொண்ட நரி இன்னும் கூடுதலாக தோள்பட்டைகளை உயர்த்தியபடி நடக்க ஆரம்பித்தது.

சில நாட்கள் கழிந்த நிலையில், நரியின் நடை உடை பாவனைகளில் மயங்கிய ஒரு ஓநாய் நரியின் சினேகிதத்திற்காக காத்துக் கிடந்தது. அதை உடனடியாகப் பார்ப்பதைத் தவிர்த்து ரொம்பவும் பிகுசெய்வதன் மூலம் தான் இந்த வனத்தின் மிகப்பெரிய சக்தி என்பதை நிறுவரி நரி முயற்சித்தது. ஓநாய்க்கு நரியின் மீதான மரியாதை மேலும் கூடியது. அதை சந்திக்கவே இத்தனை நாட்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அது எவ்வளவு சக்திவாய்ந்தது என எண்ணி புளகாங்கிதம் அடைந்தது. திடீரென ஒருநாள் ஓநாயை வரச்சொல்லி நரி சந்தித்தது. ஓநாய்க்கு நரியை சந்தித்து விட்டதில் ஒரே சந்தோசம். நரியைப் பார்த்து பலவித வார்த்தைகளால் அதன் புகழ்பாடியது. நரிக்கு ஒரே உற்சாகம். சந்தோஷம் பீறிட இன்றிலிருந்து நீ தான் என் காரியதரிசி என்று ஓநாயிடம் கூறியது. ஓநாய்க்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் மிகுந்த பணிவுடன் நரியிடம் திரும்பக் கேட்டது.

‘‘ஆமா, காரியதரிசினா என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘இதுகூட தெரியாத மக்கா இருக்கியே. காரியதரிசினா, என்னோட வேலைகளை ஒழுங்குபடுத்தரவன்னு அர்த்தம். ஒன்ன வச்சிக்கினு நான் எப்படித்தான் சமாளிக்கப் போறனோ?’’

நரி அலுத்துக் கொண்டது. இருந்தாலும் தன்னுடைய அணிக்கு வந்த முதல் நபர் என்பதால் அதிகம் கடிந்து கொள்ளவில்லை. நரிக்கு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தது அலுப்பாக இருந்த போது அது, ஓநாயை அழைத்துக் கொண்டு வனத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பியது. அப்போது ‘‘எனக்கு சரிசமமா நடந்து வரக் கூடாது. என் பின்னாடி தான் வரணும் புரியுதா?’’ என ஓநாயிடம் கூறியது.

ஓநாய் மிகவும் கீழ்ப்படிந்த நிலையில் தலைதாழ்த்தி கூறியது ‘‘அப்படியே செய்றேன்’’.

ஒன்றன் பின் ஒன்றாக நடக்க ஆரம்பித்தன. வழியில் அவற்றால் எந்த விலங்குகளையும் காணமுடியவில்லை. ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் மட்டும் குரங்குகளும் பறவைகளும் அமர்ந்து கொண்டு அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தன. குரங்குகளும் பறவைகளும் தன்னைப் பார்ப்பதை அறிந்த நரிக்கு மீண்டும் தோள்பட்டை ஏறிக் கொண்டது. வனத்தின் அதிபதி போல இருந்தது அதன் நடை. ஓநாய்க்கு அதை பின்தொடர்வதில் ஒரு கௌரவம்.

தனது தலையைக் கோதிக் கொண்டு அதுவும் நரி போலவே நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் நரிக்கு சோர்வாக இருந்த போது, ஆலமரத்தின் கீழிருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டது. ஓநாய் அதற்கும் கீழாக உட்கார எண்ணி பின் வேண்டாம் என நினைத்து நின்று கொண்டே இருந்தது. அப்போது ஓநாயைப் பார்த்து ‘‘டேய் நாம ரெண்டு பேர் மட்டும் இருந்தா போதுமா? காட்ட நம்ம கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர...’’ என்று கேட்டது நரி.

‘‘எனக்கென்ன தலைவரே தெரியும். நீங்க என்ன செய்யச் சொல்றீங்களோ அதை செய்யறதுக்கு தான நான் இருக்கிறேன்’’. ஓநாய் நரியைப் பார்த்து கூறியது.

தன்னை தலைவன் என்று ஓநாய் சொன்னதில் நரி மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது. கம்பீரமும் தனி மிடுக்கும் கூடியது. இம்மாபெரும் அடர்ந்த வனத்தின் தன்னிகரற்ற தலைவனாக அது தன்னை எண்ணி உள்ளூர மகிழ்ச்சி அடைந்தது. அப்பாறையின் மீது சிறிது நேரம் கம்பீரமாக அமர்ந்து அப்படியும் இப்படியும் திரும்பி ஓங்கி குரலெழுப்பியது. பின் ஓநாயிடம் கேட்டது. ‘‘டேய் என்ன பாக்க எப்படி இருக்கு?’’ ‘‘அசப்புல ஒரு ராஜா மாதிரியே இருக்கீங்க’’ ஓநாய் மிகுந்த சந்தோஷத்தோடு கூறியது.

‘‘இன்னும் நெறைய பேரு சேர்ந்தாதான நாம அந்த சிங்கத்த தீத்துக்கட்ட முடியும்’’ நரியும் மிகுந்த உற்சாகமடைந்தபடி ஓநாயிடம் கூறியது. நரி பேசப்பேச அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஓநாய் ‘‘அதுக்கு நான் என்ன செய்யனும்?’’ என்று பணிவுடன் கேட்டது.

“முந்திரிக் கொட்ட மாதிரி அவசரப்படாத. நா சொல்றத மொதல்ல கேளு.’’ ‘‘நாம மொதல்ல ரகசியமா ஒரு கூட்டத்தை கூட்டணும். அதுக்கு நீ தான் எல்லார் கிட்டயும் போயி என்னப்பத்தி எடுத்து சொல்லணும் புரிஞ்சுதா?’’ என நரி மிக அமைதியாகவும் காத்திரமாகவும் பேசியது. தன் தலைவரது பேச்சை மிக கவனமாகக் கேட்டுக் கொண்டது ஓநாய். பின் இருவரும் நடந்து அதனதன் இடங்களை அடைந்தன.

நரியின் தந்திரம் அரசல் புரசலாக சிங்கத்தை அடைந்தது. சிங்கம் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்நரியின் நடமாட்டத்தை தனது ஒற்றர்கள் மூலம் கண்காணிக்கத் தொடங்கியது. இதற்குள்ளாக வனத்தில் வனவிழா கொண்டாட்டம் வேறு தொடங்கியது. சிங்கத்தின் தலைமையில் விழாவிற்கான அனைத்து வேலைகளும் நடந்தன. நரிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. தானே வலிய வந்து நரி வேலை செய்தாலும் கூட அதை பொருட்படுத்தாமல் சிங்கத்தின் பெருமையையே அனைத்தும் பேசிக் கொண்டிருந்தன. அதனால் சிங்கத்தின் மீதான வெறுப்பு தீராத பகையாகவும் வன்மமாகவும் உருக்கொண்டது நரிக்கு. ஆகவே மிகுந்த கோபத்தோடு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றது. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிங்கம் எதையும் காணாதது போல காட்டிக் கொண்டது.

கோபத்தோடு சென்ற நரி உடனடியாக தனது தூதுவன் மூலம் ஓநாயை வரச்சொன்னது. ஏதோ பிரச்சினை என்று உணர்ந்து கொண்ட ஓநாய் வேகவேகமாக நரியின் இருப்பிடத்தை அடைந்தது. மிகுந்த சினத்தோடு இருந்த நரியைப் பார்த்த ஓநாய்க்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அது தன்னிடம் என்ன கேட்கப் போகிறதோ என்ற பயத்தில் ஓநாய் மெல்ல நடுங்க ஆரம்பித்த போது நரி பேச ஆரம்பித்தது.

‘‘நம்முடைய குழுவில் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள்?’’

நரியின் கேள்வி ஓநாயை கலவரப்படுத்தியது. மிகுந்த தயக்கத்துடன் அது கூறியது. ‘‘மூன்று பேர்் தலைவரே’’

ஓநாயின் பதில் நரிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்தன. இதைப் பார்த்த ஓநாய்க்கு மூச்சு முட்டியது. என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் அதை பீடித்துக் கொண்டது. ஆனாலும் உற்ற தோழனாக இருக்கும் ஓநாயையும் பகைத்துக் கொண்டால் என்னாவது என்று நரி யோசித்தபடியே கேட்டது.

‘‘அந்த மூணு பேர் யார் யாரு?’’

‘‘ஒரு வெளவால் ஒரு குரங்கு அப்புறம் ஒரு காக்கா’’ என்று மிகுந்த தயக்கத்துடன் ஓநாய்.

ஓநாய் கூறிய பட்டியல் நரிக்கு கவலையை ஏற்படுத்தியது. இருந்தாலும் முதன்முதலாக வந்தவர்களை ஏன் வேண்டாம் என்று சொல்வது என்று எதுவும் பேசாமல் இருந்தது. சிறிது நேர மௌனத்திற்கு பின் ‘‘அதுக்கு மேல யாரும் நம்ம கூட சேர விரும்பலயா?’’ என்று கேட்டது.

‘‘அப்படிலாம் ஒண்ணும் இல்ல தலைவரே. எப்படி செயல்படறோம்னு பார்த்துட்டு அப்புறமா சேர்ரம்னு சொல்றாங்க’’ அவசர அவசரமாக ஓநாய் பதில் அளித்தது.

இதைக் கேட்ட நரிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தன்னுடைய செயல்பாட்டை மற்றவர்களுக்கு எப்படியும் நிரூபித்துக் காட்டிவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டது. அதற்கான வேலைகளில் உடனுக்குடன் இறங்கிவிட வேண்டும் என்று நினைத்த அதன் மனதில் சிங்கத்தின் பிம்பம் ஒரு விஷச் செடியைப் போன்று மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது.

‘‘நம்முடைய சகாக்களை சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்’’ பல்வேறு சிந்தனைகளுடன் அது ஓநாயிடம் கூறியது. தனது இருப்பிடத்திற்கு சென்றது. உணவு உண்டபின் அதற்கு களைப்பாக இருந்தது. கண்கள் செருக ஆரம்பித்தன. தான் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போன்றும் ஓநாய், வெளவால், குரங்கு மற்றும் காகம் ஆகியன கீழே இருக்கையில் அமர்ந்திருப்பது போன்றும் நினைத்துக் கொண்டிருந்த நரியை தூக்கம் மெல்ல தழுவரி ஆரம்பித்தது.

பொழுது விடிந்தும் விடியாததுமாக இருந்தது. இருள் சூழ்ந்து கிடந்த அக்காலையில் நரி பல்துலக்கிக் கொண்டிருந்தபோது ஓநாய் அம்மூவரையும் அழைத்துக் கொண்டு வந்தது. சிறிது நேரத்திற்குள்ளாக நரி அவர்களை சந்திக்க தயார் நிலையில் வர, ஓநாயுடன் சேர்ந்து அம்மூன்றும் எழுந்து நின்று வணங்கின. உட்காருங்கள் என்று அவற்றைப் பார்த்து நரி கூறியதும் ‘‘ஒவ்வொருவரும் தலைவரிடம் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்’’ என்று ஓநாய் அம்மூன்றிடமும் கூறியது.

அதைக் கேட்ட அம்மூன்றும் மிகப்பணிவுடன் தலைதாழ்த்தி, நரியின் புகழ்பாடி தங்களை அறிமுகம் செய்து கொண்டன. ‘‘தலைவருக்கு வணக்கம், எம்பேரு வெளவால்’’
‘‘தலைவருக்கு வணக்கம், எம்பேரு குரங்கு’’
‘‘தலைவருக்கு வணக்கம், எம்பேரு காக்கா’’

ஒவ்வொன்றும் இவ்வளவு தாழ்மையுடன் நடந்து கொள்வதைக் கண்ட நரி மிகுந்த சந்தோஷம் அடைந்தது. கால்மேல் கால் போட்டு சிங்கத்தைப் போல கர்ஜிப்பதாக நினைத்து ஊளையிட்டது. கம்பீரமாக அண்ணாந்து வானத்தைப் பார்த்தது. அம்மூன்றையும் இரண்டு மூன்று முறைகள் பார்வையாலேயே நோட்டம் விட்டது. அம்மூன்றும் தங்களுடன் தலைவர் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாரா என ஏங்கிய போது நரி பேச ஆரம்பித்தது.

‘‘உங்க கிட்ட ஓநாய் எல்லாத்தையும் சொல்லியிருக்கும்னு நெனைக்கிறேன்’’எனக் கூறி ஓநாயைப் பார்த்தது. ஓநாயும் ஆமோதிப்பது போல தலை அசைத்தது. பின் மீண்டும் நரி பேச ஆரம்பித்தது.

‘‘இந்த காட்ல சிங்கத்தின் எதேச்சதிகார ராஜ்ஜியம் நடக்கிறது. எவ்ளோ நாளக்கித்தான் நாம அடங்கி நடப்பது. நமக்குன்னு சுய கௌரவம் இருக்கு. எத்தன நாளக்கி சிங்கத்துக்கிட்ட கேட்டு கேட்டு எல்லாத்தையும் செய்யணும். அதனால நாமலே சுயமா முடிவெடுக்க நாம போராடி ஆவனும். அதுக்கு உங்க உதவி தேவைப்படுது என்ன புரிஞ்சுதா?’’

நரிப் பேசப் பேச அவை நான்கும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. அவை கவனிப்பதை கண்ட நரி தன் பேச்சின் சாதுர்யத்தை எண்ணி மகிழ்ந்தது. பின் அவற்றிடம் மீண்டும் பேசியது. ‘‘நாம என்னன்ன வழிகள்ல சிங்கத்தை எதிர்க்கலாம்னு உங்களுக்கு தோன்றதையும் சொல்லலாம்’’.

அவை மிகுந்த சந்தோஷம் அடைந்தன. தங்களின் அபிப்ராயத்தைக் கூட கேட்கிறாரே என நரியை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டன. ஒவ்வொன்றும் வெகுநேரம் யோசித்த பின் நரியிடம் தங்களது யோசனைகளை கூறத் தொடங்கின. முதலில் வெளவால் நரியிடம் பேசத் தொடங்கியது.

‘‘நம்மள பாத்து சிங்கம் என்ன செய்யணும்னு நெனைக்கிறீங்க?’’ அதற்கு நரி உற்சாகத்தோடு கூறியது.

‘‘இது என்ன கேள்வி. நம்ள பாத்து பயந்து ஓடணும். நம்ளுக்கு அடங்கி நடக்கணும்’’. நரி அவ்வாறு கூறியவுடன், வெளவால் புன்னகையுடன் சொன்னது. ‘‘ஒருத்தங்கள அடிபணிய வைக்கிறது ரொம்ப சுலபம்’’. அதன் முகத்தில் ஒரு பொலிவு தென்பட்டது.

‘‘அதெப்படி?’’

‘‘நீங்க இங்கிலீஷ் கத்துக்கணும்’’

‘‘நா இங்கிலீஷ் கத்துகறதால எப்படி சிங்கத்தை அடக்க முடியும்?’’ எதுவும் புரியாமல் நரி கேட்டது.

‘‘இன்னிக்கி ஊரு ஒலகத்துல எல்லாம் இங்கிலீஷ் காட்டிதான் மத்தவங்கள பயமுறுத்துறாங்க’’.

‘‘நிஜமாவே இங்கிலீஷ்னா எல்லோரும் பயப்படுவாங்களா?’’ என்று கேட்ட நரிக்கு வெளவால் துடிப்புடன் சொன்னது.

‘‘நீங்க இங்கிலீஷ்ல பேசிப்பாருங்க... அப்புறம் புரிஞ்சுக்குவிங்க’’

‘‘எல்லாம் சரிதான். யார்கிட்ட போயி கத்துக்கிடறது?’’

‘‘அது ஒரு கஷ்டமே கெடையாது. இன்னைக்கு டவுண்ல நெறைய ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் நடத்துறாங்க. அங்க போயிட்டா போதும்’’ என்று வெளவால் கூறக்கூற நரி தன்னை வேறுமாதிரி கற்பிதம் செய்து செய்து பார்த்துக் கொண்டது. நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதாகவும், தன்னைப் பார்த்து சிங்கம் பயந்தடித்து ஓடுவதாகவும் நினைத்துப் பார்த்தபோது, அதற்கு சிரிப்பு பீறிட்டெழுந்தது. இந்த யோசனையை கூறிய வெளவாலை அருகில் அழைத்து வெகுவாக பாராட்டியதுடன் அனைவருக்கும் உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிறிது நேரத்திற்கு பின் அது குரங்கை அழைத்து சொன்னது.

‘‘குரங்காரே உமது ஐடியாவை கூறும்’’

நரிக்கு கும்மாளம் வந்து விட்டால் அது வார்த்தைகளில் தெரிந்து விடும். எப்படியும் தன்னால் சிங்கத்தை வீழ்த்திவிட முடியும் என நரி நினைத்துக் கொண்டிருக்கும் போதே குரங்கு எழுந்து தன்னுடைய யோசனையைக்கூற ஆரம்பித்தது.

‘‘இங்கிலீஷ் படிக்கிறதால எதுவும் செய்துட முடியும்னு எனக்கு தோணல’’ குரங்கு இவ்வாறு கூறியதும் வெளவாலுக்கு ஆத்திரம் வந்தது. கோபத்துடன் அது குரங்கைப் பார்த்துக் கேட்டது.

‘‘பின்ன எப்படி சிங்கத்த அடக்கிட முடியும்னு நெனைக்கிற?’’

நரிக்கும் ஆவலாய் இருந்தது. வெளவாலின் யோசனையைவிட, குரங்கின் யோசனை சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்தது. அதனால் குரங்கை சீக்கிரம் கூறுமாறு கேட்டுக் கொண்டது. நரியே தன்னை கூறுமாறு அவசரப்படுத்துவதை குரங்கு பெருமையாக நினைத்தபடி சொல்லத் தொடங்கியது.

‘‘நீங்க இங்ககிலீஷ் கத்துக்கறத விட துப்பாக்கிச்சுட கத்துக்கிட்டா ரொம்ப வசதியா இருக்கும்’’. புரிந்தும் புரியாததுமாக நரி திரும்பக் கேட்டது.

‘‘எப்படி?’’

சற்று நேரம் ஆழ்ந்து யோசித்த குரங்கு பின் பேசத் தொடங்கியது.

‘‘நீங்க இங்கிலீஷ்ல பேசறத பார்த்துட்டு, சிங்கமும் இங்கிலீஷ் பேச கத்துக்கிட்டா என்ன பண்ணுவீங்க?’’ குரங்கின் இந்த கேள்வியில் அர்த்தம் இருப்பதாக நரி உணர்ந்தது. அதன் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் நரி கூறியது.

‘‘எனக்கு ஒன்னும் தோணல நீயே சொல்லிடு’’.

குரங்கு குதூகலத்தோடு கூறியது.

‘‘இங்லீஷ் அது இதுன்னு சொல்லி எதுக்கு பிரச்சினையை வளக்கணும், பேசாம துப்பாக்கி சுடக்கத்துக்கிட்டீங்கனா சிங்கத்த ஒரே அடியா அடிச்சி தூக்கிடலாம் இல்ல’’ குரங்கு கூறி முடித்ததும் நரிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதை அடி பணிய வைப்பதைவிட ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுவது புத்திசாலித்தனமென்று யோசித்தது. வெளவால் தன் யோசனை நிராகரிக்கப்படுமோ என்ற ஐயத்தில் இருந்தது. காகம் எதுவும் பேசாமல் ஆழ்ந்த யோசனையில் நரியையே பார்த்துக் கொண்டிருந்த போது மீண்டும் நரி கேட்டது.

‘‘துப்பாக்கி சுட எங்க கத்துக்குடுக்கிறாங்க?’’ ‘‘அதப்பத்தி நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க பக்கத்து டவுன்ல கத்துக்குடுக்கிறாங்க’’ நரியின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட குரங்கு சொன்னது.

நரிக்கு சந்தோஷமாக இருந்தாலும், ஒரு சந்தேகம் எழுந்தது. அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டி அது குரங்கிடம் பேசியது. ‘‘துப்பாக்கி வச்சிகினு இருக்கிறது தப்பு இல்லையா?’’ இதைக் கேட்ட குரங்கு விழுந்து சிரித்தது. ஒருவித அலட்சியத்துடன் நரியைப் பார்த்துக் கூறியது.

‘‘இது கூட தெரியாம இருக்கீங்களே அரசாங்கத்துக்கு தெரியாம வச்சிருந்தா தான் தப்பு. நாம லைசன்ஸ் வாங்கிதான வச்சிக்கப் போறோம். எந்தப் பிரச்சினையும் வந்துடாது’’.




குரங்கின் பதில் நரிக்கு மிகவும் தெம்பாக இருந்தது. துப்பாக்கியைக் கொண்டு சிங்கத்தை நேருக்கு நேராக நின்று சுட்டு வீழ்த்துவதாகவும், சிங்கம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வீழ்ந்து இறப்பதாகவும் கற்பனை செய்து மகிழ்ந்தபோது அதன் கண்கள் மினுங்கின. மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. அதன் மகிழ்ச்சி அதன் உடலில் தெரியும்படி மிகவும் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருந்தது. பரந்துபட்ட அவ்வனத்திற்கு தான் தான் அரசன் எனவும், தனது ஆளுகைக்கு உட்பட்டது தான் அனைத்தும் எனவும் எண்ணிக் கொண்ட நரி மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தபடி காக்கையை அழைத்தது.

காகம் சுற்றும் முற்றும் பார்த்தபடி எழுந்து நரியைப் பார்த்து தலை தாழ்த்தி மீண்டுமொரு முறை வணக்கம் தெரிவித்து தேர்ந்த ஒரு அரசியல் தலைவரைப் போன்று பேச ஆரம்பித்தது. அதன் பீடிகைகளைப் பார்த்த மற்ற அனைத்தும் சற்று கலக்கம் கொண்டன. தங்களுடைய யோசனைகளை நரி நிராகரித்து விடக்கூடும் எனவும் யோசித்தன. காகம் தனது தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கியது.

‘‘நரியாரே நான் இந்த விஷயத்தில் கொஞ்சம் தொலைநோக்கோட சிந்திக்க விரும்புகிறேன். இங்கிலீஷ் கத்துக்கிறது, அப்புறம் துப்பாக்கி சுடறது இதுலாம் ஒரு கால கட்டத்துக்கு வேணா பிரயோஜனமா இருக்கலாம். ஆனா காலத்துக்கும் பயன்படுமா?’’ எனக் கேட்டு அது நரியையும் மற்ற அனைத்தையும் பார்த்தது.

அவற்றிற்கு காகத்தின் பேச்சு புரியாமல் இருந்தது. இது நம்மோடு தானே இருக்கிறது. ஆனால் ஏதேதோ புதுவிஷயங்கள் நிறைய சொல்கிறதே, எங்கு படித்திருக்கும் என எண்ணிக் கொண்டன. நரிக்கு ஒரே ஆவலாக இருந்தது.

வெளவால், குரங்கைக் காட்டிலும் காகம் கொஞ்சம் புத்திசாலி என நினைத்தது. இதன் யோசனை நிச்சயம் மிக உயர்ந்ததாக இருக்குமென நினைத்து யோசனையை உடனடியாகக் கூற காகத்தை அவசரப்படுத்தியது.

‘‘என் யோசனை உங்களுக்கு உதவாதது போலத் தெரியலாம். ஆனா அது தான் சாத்தியமான வழி. நம்மை வலுவாக ஊன்றிக் கொள்ள அது தான் கை கொடுக்கும்’’ என பீடிகையுடன் கூறக்கூற, பொறுக்கமாட்டாமல் நரி சீக்கிரம் கூறுமாறு அவசரப்படுத்தியது. காகம் மீண்டும் தன் தொண்டையை செருமிக் கொண்டபடி பேசத் தொடங்கியது.

‘‘நாம ஒரு அரசியல் கட்சிய உடனடியா தொடங்கணும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தொடங்கணும் அத எல்லார்க்கிட்டயும் உடனே கொண்டு போவணும். நமக்குன்னு ஒரு கொடி, கொள்கை, எல்லாத்தையும் வடிவமைக்கணும் வர தேர்தலுக்குள்ள நாம எல்லார்க்கிட்டயும் ரீச்சாகிட்டா நம்மள அசைக்க அப்புறம் யாராலும் முடியாது’’ என்று வேகவேகமாக கூறிவிட்டு காகம் ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது.

அவை மூன்றும் இப்போது காகத்தை உண்மையிலேயே ஒரு புத்திசாலியாக நினைத்துப் பார்த்தன. நரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதன் மனத்திற்குள் பல்வேறு சிந்தனைகள் எழுந்து மறைந்தன. தான் மெல்ல மெல்ல பெரிய தலைவராக உருவாகிக் கொண்டு வருவதாக நினைத்தது. காகத்தின் யோசனை தன்னுடைய வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்துமென நரி நினைத்தபடியே காகத்தின் பேச்சை கேட்க ஆரம்பித்தது.

‘‘கட்சி ஆரம்பிச்ச உடனேயே ஒரு டிவி சேனல் ஒண்ணு ஆரம்பிக்கனும். அப்பதான் நம்ம கொள்கைகளை மக்கள்கிட்ட சுலபமா கொண்டு போகமுடியும்’’ என காகம் கூறியதும் அனைத்தும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.

யாரும் கூறாத, யாருமே யோசித்திராத யோசனையைக் கூறியதில் காகம் கொஞ்சம் கர்வப்படத்தான் செய்தது. இது செயல் வடிவம் பெற்றால் நிச்சயம் தனக்கான பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், யாராலும் நிராகரிக்கப்பட முடியாததாகவும் இருக்கும் என்று காகம் நினைத்தபடி நரி உள்ளிட்ட மற்ற அனைத்தையும் பார்த்துக் கேட்டது.

‘‘என் யோசனையில் ஏதாவது டவுட்னா கேக்கலாம்’’.

காகத்தின் போக்கு நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளவாலோ குரங்கோ இது மாதிரி திறந்த மனதுடன் விவாதிக்கும் திறனற்றவை என நரி நினைத்தது. காகத்தின் அதீதமான படிப்பும் அதன் பரந்து பட்ட அறிவும் தான் இதற்கு காரணமாக இருக்குமென்று நினைத்தது. இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நினைத்து காகத்திடம் கேட்டது. ‘‘கட்சிலாம் நடத்த ரொம்ப பணம் தேவைப்படுமே அதுக்கு நாம எங்கபோறது?’’

நரியின் கேள்விக்கு மிகவும் அலட்சியத்துடன் பதில் கூறியது காகம்.

‘‘கட்சி ஆரம்பிக்கிறது மட்டும்தான் நம்மோட வேலை? அதபத்திலாம் நீங்க கவலைப்படாதீங்க பணம் தானாக வரும்’’ காகம் இவ்வாறு கூறியதும் நரி குறுக்கிட்டு, ‘‘அப்ப நம்ம கொள்கை என்னாவது’’ என்று கேட்டது.

காகம் நரியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டது. தன்னை எதுவும் செய்துவிட முடியாது எனும் தோரணையில் ‘‘என்ன இதுகூட தெரியாம இருக்கீங்களே. கொள்கைலாம் நமக்கில்லை. அது மத்தவங்களுக்காக சொல்லறது அதப் போயி பெருசா பேசிகினு இருக்கிறீங்களே’’ என காகம் பதில் அளித்தது.

தங்களின் யோசனைகள் எடுபடாது எனும் விதமாக வெளவாலும், குரங்கும் அமர்ந்து கொண்டிருந்தன. வெகு நேரம் உட்கார்ந்திருப்பது அவற்றை சோர்வடையச் செய்தன. இருந்தும் எதுவும் செய்துவிடமுடியவில்லை. ஓநாய் மிகவும் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தது.

‘‘கொள்கையைப் பத்தி நான் கவலைப்படல ஆனா மத்தவங்க அதப்பத்தி கேப்பாங்கன்னு தான் பாக்கறேன்’’

‘‘பொது வாழ்க்கைன்னு வந்துட்டா எதப்பத்தியும் கண்டுக்ககூடாது. மத்தவங்க கருத்துக்கு காதுகுடுத்தம்னா நம்மால எதுவும் செய்ய முடியாது’’.

காகத்தின் கறாரான பேச்சு நரிக்கு புதுவித தெம்பை அளித்தது. தான் மட்டும் எவ்வளவு நேரம் பேசாமல் இருப்பது என்று ஓநாய் நினைத்தது. தன் கருத்தையும் பதியும் விதமாக அது நரியிடம் கேட்டது.

‘‘நம்மள கட்சி ஆரம்பிக்கணும்னு சொல்றாரு. அப்படியே ஆரம்பிக்கரும்னு வச்சிக்குங்க. மத்தவங்க நம்ம திட்டங்கள தெரிஞ்சுக்கிட்டு நம்பள பத்தி மத்தவங்க கிட்ட தாருமாறா ஏதாவது சொல்லிட மாட்டாங்களா?’’

‘‘எந்த திட்டத்த?’’

எதுவும் விளங்காததைப் போல நரி கேட்டது.

‘‘அதான் நீங்க இங்லீஷ் கத்துக்கப்போறது அப்புறம் துப்பாக்கி சுடப்பழகிக்கறது’’.

ஓநாயின் கேள்வியிலும் நியாயம் இருப்பதாக உணர்ந்தது நரி. அதற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. நரி ஒன்றும் புரியாமல் விழிப்பதை பார்த்த காகம் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு பேசத் தொடங்கியது.

‘‘மத்தவங்க நம்மள பேசிடுவாங்கன்னு கவலைப்பட வேணாம். வளர்னுனா அப்படி பேசிதான் ஆகணும். அப்படி பேசறவங்க எல்லாருமே கண்டிப்பா இங்கிலீஷ் படிச்சிருப்பாங்க. அவங்க படிக்கலைன்னா கூட அவங்களோட பசங்கள படிக்க வைப்பாங்க. மொழியச் சொல்லி அரசியல் பண்றதலாம் ஒரு தந்திரம். அத நாம்பளும் கத்துக்கிடனும். அதவிட்டுட்டு ஏதாவது சொல்லிடுவாங்கனு பயப்படறது நம்மோட வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பயன்படாது.’’

காகம் இவ்வளவு விஷங்களை எங்கு தான் தெரிந்து கொண்டதோ என்று நினைத்து நரி நினைத்து ஆச்சரியப்பட்டது. மற்ற அனைத்தும் காகத்திற்கு தெரிந்த இவ்வளவு விஷயங்கள் தங்களுக்கு எப்படி தெரியாமல் போனது என நினைத்து தங்களை நொந்து கொண்டன. அவை அனைத்தும் காகத்தின் மீது மரியாதையையும் பொறாமையையும் கொண்டன. நரி எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்துவிட்டு காகத்திடம் கேட்டது.

‘‘நாம பவர் சென்ட்ரா மாற எவ்வளவு நாள் ஆவும்’’

‘‘கட்சி ஆரம்பிச்ச உடனே மேலெடத்துக்கு போயிடணும்னு நெனைக்கக் கூடாது. அடிமட்டத்த மொதல்ல ஸ்ட்ராங் பன்னனும். அப்புறம் தன்னால மேல போயிடலாம்’’ என காகம் கூறியது.

காகத்தின் தொலைநோக்கான பார்வையை நரி மிகவும் ரசித்தது. ஆனாலும் அது காகத்திடம் கேட்டது. ‘‘எல்லாம் சரிதான். நாம மேலிடத்த அடையிறதுக்கே ரொம்பகாலம் ஆனாக்கா, இந்த சிங்கத்த எப்படி அடக்கறது?’’

‘‘ஒங்களுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியமாட்டுது. உங்க வளர்ச்சிய கண்டு தன்னால அந்த சிங்கம் ஓடிடும். இந்த காடே உங்க காலடியில கிடக்கும்னு சொல்றேன். நீங்க இன்னான்னா அந்த சிங்கத்த உடாம புடிச்சிகினு இருக்கீங்க’’. காகம் மிகவும் உமையுடன் சொன்னது.

காகத்தின் பேச்சு நரியை மேலும் மேலும் கிறங்கடித்தது. எல்லாம் நடந்துவிட்டால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தது. தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டது. மெல்ல மெல்ல மெல்ல ஒரு அரசனுக்கான கம்பீரம் அதை தழுவரி ஆரம்பித்தது. தான் எப்போது அந்த பதவியை அடையமுடியும் என்ற ஆவல் அதற்கு எழுந்த போது அது காகத்திடம் கேட்டது. நரியின் அவசரத்தை உணர்ந்த காகம் சற்று விரிவாகவும் பொறுமையாகவும் பேச ஆரம்பித்தது.

‘‘ஒவ்வொரு ஊரா போயி நம்ம கொள்கைகளை பரப்ப வேண்டியது தான். நாம எப்படி கொள்கைய பரப்பரோம்னு டிவியில, பத்திரிக்கையில தெனம் தெனம் காட்டணும். அப்புறம் எல்லாத்த எதிர்த்தும் போராட்டம் நடத்தணும். ஜெயிலுக்கு போவணும். இதலாம் செஞ்சா தன்னால பெரிய ஆளா ஆயிடலாம். நம்மள மீறி எந்த சக்தியும் எதுவும் செய்துட முடியாது.’’

காகம் தனது திட்டங்களை மிகவும் துல்லியமாக எடுத்து வைக்க மற்றவைகள் பிரமை பிடித்தவைகள் போல, ஏதும் செய்ய முடியாமல் அமர்ந்து கொண்டிருந்தன. நரிக்கு கொஞ்சம் மலைப்பாகவும் இருந்தது. எப்படி இதையெல்லாம் எதிர்கொண்டு நாம் முன்னேறப் போகிறோம் என்று தோன்றியது. காகம் தன்னோடு இருந்தால் எதையும் சாதித்து விடமுடியும் என்றும், நினைத்து தன்னை தேற்றிக் கொண்டது. இன்னும் காகத்திடம் அனேக விஷயங்கள் இருப்பதை உணர்ந்த நரி காகத்திடம் கேட்டது.

‘‘போராட்டம்னு சொல்றியே.... அத பத்தி சொல்லேன்’’



போராட்டம் என்றால் என்ன என்று கூட விளக்க வேண்டியிருக்கும் தனது நிலையை எண்ணி காகத்திற்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் என்ன செய்துவிட முடியும் என்றும் யோசித்தது. ஆகவே தனது விதியை நொந்தபடியே கூற ஆரம்பித்தது. ‘‘இப்ப சினிமா படங்களுக்கு தமிழ் பேரு வச்சா வரி விலக்குன்னு சொல்றாங்க. அது எதுத்தும் நாம போராட்டம் நடத்தணும்’’

நரிக்கு ஏதும் விளங்கவில்லை. ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அதனால் காகத்திடம் கேட்டது. ‘‘அது நல்ல விஷயம் தானே, அத எதுத்து எதுக்கு போராட்டம் நடத்தணும்?’’

‘‘தமிழ் பேரு வச்சாக்கா வரி விலக்குன்னு தான சொல்லறாங்க. அப்ப ஏன் தமிழ் பேரு வச்சி வெளிவர செலபடங்களுக்கு வவிலக்கு கொடுக்க மாட்றாங்க?’’

‘‘அப்படி எந்த படத்துக்கு விலக்கு கொடுக்கலன்னு சொல்ற’’

‘‘அவளோட இரவுகள், மன்மத கனவுகள், அந்தரங்க அற்புதங்கள்-னு நிறைய படத்த அரசாங்கம் கண்டுக்கறதேயில்லை. அத தட்டிக் கேட்டு தான் நாம போராடணும்’’

காகம் படங்களின் பெயர்களைக் கூறக்கூற நரி முகத்தை ஒரு மாதிரி சுருக்கிக் கொண்ட காகத்திடம் கேட்டது. நீ சொல்ற படங்கள்லாம் ரொம்ப மோசமான படங்களாச்சே. அதுக்குப் போயி எப்படி வரி விலக்கு தர்றது?’’

‘‘அப்ப வரி விலக்கு கொடுக்கிற படங்கள்லாம் நல்ல கருத்துள்ள படங்கன்னு சொல்றீங்களா?’’ காகம் எதிர்த்து கேட்டது.

நரிக்கு ஒன்றும் புரியவில்லை. காகம் என்ன சொல்ல வருகிறது என்பதையும் உணரமுடியவில்லை. அதனால் அது காகத்திடம் கேட்டது.

‘‘கடைசியா நீ என்ன தான் சொல்ல வர்ற?’’

‘‘நான் ஒண்ணும் சொல்ல வர்றல. எவ்ளோ மட்டமா படம் எடுக்க முடியுமோ அவ்ளோ மட்டமா எடுத்துட்டு தமிழ்ல பேரு வச்சிட்டா அது நம்ம மொழிக்கு பெருமையைச் சேர்த்திடுமா, இல்ல நம்ம கலாச்சாரத்ததான் தூக்கி நிறுத்திடுமான்னு எனக்கு புரியல.’’

காகத்தின் பதில் நரிக்கு புரிதலை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் காகத்தின் வாதத்தில் ஏதோ ஓர் உண்மையும் வலுவும் இருப்பதாக உணர்ந்தது. ஆகவே காகத்திடம் சொன்னது.

‘‘சரி இந்த போராட்டத்த நாம நடத்துவோம்’’ என்று கூறி நரி அவற்றை பார்த்தது. அவை நரியின் பேச்சை ஆமோதிப்பது போல தலையசைத்தன. சிறிது நேரம் அவை அனைத்தும் மௌனமாக இருந்தன. பின் தொடர்ச்சியான உரையாடல் அவை அனைத்தையும் சோர்வடையச் செய்ததை உணர்ந்த நரி அவற்றிடம் கூறியது.

‘‘ரொம்ப அசதியா இருக்கிறதால நம்ம பேச்ச இத்தோட முடிச்சிக்கலாம் நாளைக்கி மீண்டும் தொடங்கலாம்.’’

நரி பேசி முடித்தவுடன் அனைத்தும் நரிக்கு வணக்கம் கூறிவிட்டு வெளியே கிளம்பின. அவை கிளம்பி சென்ற பிறகு நரி உள்ளுக்குள்ளாக சென்றது. அப்போது தனது வாசலில் விபரீதமான குலை நடுங்கச் செய்யும் விதமான சப்தத்தைக் கேட்டது. நரி தனது கவனத்தை கூர்மையாக்கிக் கொண்டு என்ன சத்தம் என்று மெல்ல எட்டிப் பார்த்தது. அவ்வளவுதான் வெளியில் பதுங்கியிருந்த சிங்கம் சற்றும் எதிர்பாராத வகையில் நரியின் மீது வேகத்தோடு பாயவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நரி அலறி அடித்துக் கொண்டு எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. தான் கண்டு கொண்டிருந்த சுவாரசியமிக்க அக்கனவைக்கூட காணவிடாமல் அச்சிங்கம் தன் தூக்கத்தைக் கெடுத்துவிட்டதே என்று சிங்கத்தின் மீது சினம் கொண்டது நரி. எப்படியும் அச்சிங்கத்தை அழித்தே தீர்வது என்றும் தனது மனத்தில் கருவிக் கொண்டு கண்களைக் கசக்கிக் கொண்டது.

உடனடியாக ஓநாயை வரச்சொல்லி நரி ஆள் அனுப்பியது. வெளவால், குரங்கு மற்றும் காகத்துடன் ஓநாய் நரியின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியின் கண்களில் பதற்றத்தை காண முடிந்தது. அதைக் கண்ட ஓநாய்க்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பயத்துடனேயே நரியிடம் பேச்சுக் கொடுத்தது.

‘‘தலைவரே நம்ம கூட்டாளிகளை கூட்டாந்திருக்கேன். என்ன செய்யனம்ணு கட்டளை இடுங்க’’.

ஓநாயின் பேச்சு நரிக்கு தெம்பைத் தந்தது. அது ஓநாயுடன் வந்தவைகளைப் பார்த்தபடியே ‘‘இந்த சிங்கத்தோட தொல்லைய தாங்க முடியல. கனவுல கூட நிம்மதியாவுட மாட்டுது. அத ஒழிச்சுக் கட்டியே ஆவணும். அதுவும் சீக்கிரமாவே அது கதய முடிச்சுடனும், அதற்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க’’ என்று படபடப்பாக பேசியது.

அதன் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க அது அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. நரி தங்களிடம் இவ்வாறு கேட்டுக் கொண்டதும் அவை அனைத்தும் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தன. நல்ல யோசனையாக கூற வேண்டுமே என்ற பயம் அவற்றிடம் தெரிந்தன. ‘‘என்ன ஐடியா ஏதாச்சும் சிக்கிச்சா?’’ சிறிது நேரம் கடந்த நிலையில் நரி மீண்டும் கேட்டது.

அவை அனைத்தும் மிகவும் அமைதியாக இருந்தன. அவற்றின் முகங்களில் பயத்தின் ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தன. தங்களை நரி ஏதாவது செய்துவிடுமோ என்றும் அவை அஞ்சின. ஓநாய் மெல்ல எழுந்து மனதை திடப்படுத்திக் கொண்டு நரியிடம் பேசியது.

‘‘தலைவரே உடன்தடனா ஐடியா கேட்டா எப்படி, இவங்க எல்லாருமே புதுசு. இரண்டு மூணு நாளு கொடுத்துப் பாப்பம். அப்பதான அவங்களால சரியா யோசிக்க முடியும்’’.

ஓநாயின் பதில் நரியை கொஞ்சம் சாந்தப்படுத்தவே செய்தது. இருந்தாலும் அதற்கு சிங்கத்தை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அடிமனதில் நெருடிக் கொண்டே இருந்தது. ஆகவே அது ஓநாயிடம் கேட்டது.

‘‘இப்ப எதுவும் செய்ய முடியாதா?’’

மீண்டும் அவை அனைத்தும் ஆழந்து யோசிக்க ஆரம்பித்தன. தங்களுக்குள் கலந்து பேசிக் கொண்டன. தங்களது எண்ணங்களை ஓநாயிடம் தெரிவித்தன. அவை கூறியவற்றை ஓநாய், நரியிடம் கூறியது.

‘‘நிம்மதியா தூங்கக் கூட விடாத சிங்கத்தின் செயலை கண்டிச்சி உருவபொம்மை எரிப்பு போராட்டமும் ஒரு கண்டன கூட்டமும் நடத்தலாம்’’.

ஓநாயின் இந்தத் திட்டம் நரிக்கு உவப்பாக இருந்தது. சிங்கத்தின் எதேச்சாதிகாரத்திற்கு இதன்மூலம் ஓர் பாடத்தை புகட்டி விடலாம் என்று எண்ணியது. குறைந்தபட்சம் அதன் கவனத்தை ஈர்ப்பதாகவும், தன்னுடைய வலிமையை புரிய வைப்பதாகவும் அக்கூட்டம் இருக்கும் என அது யோசித்து மகிழ்ந்தது. மிகவும் சந்தோஷத்துடன் அது ஓநாயிடம் கேட்டது.

‘‘போராட்டத்த எங்கு, எப்ப நடத்தறது, உருவ பொம்மைய யார் செய்றது?’’

‘‘நாளன்னிக்கு நடத்தலாம். அதுக்குள்ள உருவ பொம்மய செஞ்சிடணும். விழுப்புரம் பக்கத்துல அகரம் சித்தாமூர்ல இருக்காரு ஒருத்தர் அச்சு அசலா அப்படியே செஞ்சிடுவார்’’ என ஓநாய் கூறியது.

ஓநாய் கூறியதும் நரி அவசர அவசரமாக கூறியது.

அப்படின்னா அவர உடனே அழச்சிட்டு வர ஏற்பாடு செய்.

நரியின் ஆணைக்கிணங்க, அகரம் சித்தாமூர்லிருந்து உருவ பொம்மை செய்பவர் வரவழைக்கப்பட்டார். அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு, சிங்கத்தின் உருவ பொம்மையை தயார் செய்வதில் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டன. அவர் செய்யச் செய்ய நரி சிலவற்றை சுட்டிக்காட்டி சரி செய்தபடியே இருந்தது. பிடரியின் அளவு, பற்களின் கூர்மை, வாலின் நீளம், உடல்வாகு அனைத்தையும் கன கச்சிதமாகவும் நுட்பமாகவும் செய்யச் சொல்லி மேற்பார்வை செய்தது.

நிஜ சிங்கத்தைப் போல அவ்வளவு தத்ரூபமாக அது உருவாக ஆரம்பித்தது. அவை மூன்றும் ஓடியாடி வேலை செய்தது. ஓநாய் அவருடன் கூடவே இருந்து அவருக்கு தேவையான வேலைகளை பார்த்துக் கொண்டது. நள்ளிரவில் பலவித வண்ணங்களை குழைத்து அவர் மெருகேற்றிக் கொண்டிருந்தார். இறுதியாக கண்களில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த போது நரி ஓநாயிடம் கேட்டது.

‘‘அசல் சிங்கம் மாதிரியே இருக்கில்ல’’

அதை ஆமோதிப்பது போல ஓநாய் தலையாட்டியது. இதை செய்தவர் தான் அழைத்து வந்தவர் என்பதில் ஓநாய் பெருமைப்பட்டுக் கொண்டது. அன்று மதியம் அனைத்து வேலைகளும் பூர்த்தியடைந்தது. ஒரு நிஜ சிங்கம் எவ்வாறு நின்று கொண்டிருக்குமோ அதைப் போல நின்று கொண்டிருந்தது. நரி அதைச் செய்தவரை தடபுடலாக கௌரவித்து வழி அனுப்பி வைத்தது. பின் அவை சாப்பாட்டை முடித்துக் கொண்டு மறுநாள் போராட்டத்திற்கு ஆயத்தமாகின.

அவை நான்கும் சிங்கத்தின் உருவபொம்மையை மிகவும் கஷ்டப்பட்டு வனத்தின் மையப்பகுதிக்கு கொண்டு சென்றன. கண்டன முழக்கங்கள் எழுதப்பட்ட தட்டிகளை ஆங்காங்கே நட்டு போராட்டத்தை உருவாக்கின. ஒலி பெருக்கிகள், போராட்டத்திற்கு வரவேண்டியவர்கள் மற்றும் முக்கிய வேலைகளை ஒழுங்கு செய்யும் பணியை ஓநாய் கவனித்துக் கொண்டிருந்தது. நாளை பேச வேண்டிய முக்கிய குறிப்புகளை நரி தயார் செய்து கொண்டிருந்தது. மறுநாள் விடியலை அவை அனைத்தும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. எதற்கும் உறக்கம் வரவேயில்லை.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு அவை போராட்ட களத்திற்கு சென்றன. கண்டன கோஷங்களைத் தாங்கிய தட்டிகளும் பேனர்களும் போராட்டத்தின் தீவிரத்தை அதிகப்படுத்திக் காட்டின. அச்சூழலை கண்ட நரி மிகவும் சந்தோஷம் கொண்டு உணர்ச்சி பீறிட ‘‘போராட்டத்தை ஆரம்பிச்சிடலாமா’’ என்று கேட்டது. நரியின் கேள்வியை கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அவை அனைத்தும் ஆரம்பிச்சிடலாம் என கோரசாக கூறின. அவை நான்கும் சிங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பின.

‘‘ஒழிக... ஒழிக’’ என்றது ஓநாய்.

‘‘சிங்கத்தின் அராஜகம் ஒழிக’’ மற்ற அனைத்தும் கூறின.

தொடர்ந்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியது. சிங்கத்தை தவிர மற்ற விலங்குகள் அப்போராட்டத்தைக் காண ஆங்காங்கே திரண்டன. எந்த பிரச்சினை வந்தாலும் எதிர் கொள்ளும் துணிவுடனேயே நரி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தது. அப்போது ஓநாய் சிங்கத்தின் அராஜகத்தை கண்டிக்கும் விதமாக, அதன் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தை இப்போது நமது தலைவர் அவர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று கூறியதும் சூழலை ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

உடனே நரியின் கையில் ஒரு தீவட்டி கொடுக்கப்பட்டது. ஒரு பெரிய வீரனைப் போல தீவட்டியை ஏந்திச் சென்று, அவ்வுருவ பொம்மைக்கு தீ வைக்க நெருங்கிய நரிக்கு சிங்கத்தின் கண்களைப் பார்க்க பயமாக இருந்தது. உண்மையில் இது நிஜ சிங்கம் தானோ என்று அது அஞ்சியது. ஆனாலும் தைரியத்தை வர வைத்துக் கொண்டு அதற்கு தீ வைக்க, தீயின் சூடு தாங்காமல் அவ்வுருவ பொம்மை வனமே அதிரும்படி கர்ஜித்தது. தனது கால்களை தரையில் உதைத்தபடி நரியை நோக்கி சீறிப்பாய்ந்தது. அங்கு திரண்டிருந்த ஓநாய் உள்ளிட்ட அனைத்திற்கும் ஒன்றும் புரியவில்லை.

அவை அவ்வுருவபொம்மையையே உற்றுப் பார்த்தன. அதன் கண்கள் தீப்பிழம்பென துடித்துக் கொண்டிருந்தன. நடப்பது கனவா நிஜமா என்று கூட யோசிக்க அவற்றிற்கு அவகாசம் இல்லாமல் இருந்தது. பொம்மை உயிர் பெற்றதைக் கண்ட வெளவால், குரங்கு மற்றும் காகம் அனைத்தும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கையிலேந்திக் கொண்டிருந்த தீவட்டியுடன் காட்டிற்குள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. அப்போதும் கூட அதற்குள் ஒரு கேள்வி எழுந்தது. ‘‘எப்படி பொம்ம சிங்கம், நிஜ சிங்கமா மாறிச்சி’’.

பின்குறிப்பு:

1. இக்கதை சிங்கத்தின் அரசியலை தூக்கி நிறுத்த முயற்சிக்கவில்லை. மாறாக சிங்கத்தின் அரசியலை எதிர்கொள்ள களமிறங்கும் அனைத்தும் சிங்கமாக மாறுவதன் பின்னணியில் நிகழும் நுண்ணரசியலையே பேச விரும்புகிறது.

2. மேலும் கதையில் வரும் சில சம்பவங்கள் நிஜ நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன. அவ்வாறான சூழலில் வாழ நேர்ந்தமைக்கான துக்கம் அடர்த்தியாக நம்மீது கவிவதையும் தவிர்க்க முடியவில்லை.

No comments:

Post a Comment