Thursday, November 25, 2010

ஒருபோதும் நாங்கள் இவ்வாறு இருந்ததில்லை


இந்தாண்டு தீபத்திற்கு என் குழந்தைகளுக்கு எப்படியாவது சுற்றுவதற்கு கார்த்தி செய்து கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் தொடர் மழையின் காரணமாக செய்து தர முடியவில்லை. அண்ணாமலையார் தீபத்தன்று மதியத்திலிருந்தே என் குழந்தைகள் “கார்த்தி ....கார்த்தி” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தனர். மழை வேறு விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. தெருவில் அவரவர் வீடுகளில் மக்கள் தீபங்களை ஏற்றத்தொடங்கினர். யாராவது கார்த்தி சுற்றினால் அதை வைத்து இன்று ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணினேன்.ஆனால் சொல்லி வைத்ததுபோல தெருவில் ஒருவர்கூட கார்த்தி சுற்றவில்லை. கார்த்தி இல்லாத என் தெருவைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது எனக்கு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒருபோதும் இப்படி இருந்தது இல்லை. தீபத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதற்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம். கண்டிப்பாக தீபத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் பள்ளிக்கு செல்லாமல் கார்த்தி செய்வதற்கு தேவையான அடுப்புகரியை அரைக்கத் தொடங்குவோம்.அப்போது பெற்றோர்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கவே செய்தது. மணிலா தொலும்பு, பனம் புடுக்கை மற்றும் மரத்தூள் ஆகியவற்றை ஊர் எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டுவருவோம். அதன் பின்னரே கார்த்திக்கு தேவையான கரித்தூள் பொட்டலம் தயாராகும்.சீக்கிரத்தில் தீ பட்டு எரிந்து விடாத எருக்கை கழிகளைக் கொண்டு கரிப் பொட்டலத்தை வைக்க தோதாக கார்த்தியை செய்து முடிப்போம்.இதை செய்து முடித்தபின் நாங்கள் அடைந்த மனநிறைவை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. என் கிராமத்தில் கார்த்திக்கு கரி அரைக்கும் ஒரு சிறுவனைக்கூட காண முடியவில்லை. எல்லோரும் பள்ளிகளிலும் தொலைக்காட்சியிலும் தஞ்சமடைந்து கிடக்கின்றனர்.
என் பிள்ளைகளுக்கு எப்படியாவது இந்த கார்த்திகைக்கு கார்த்தியை ஏற்பாடு செய்வது எனத் தீர்மானமாக இருந்தேன். முதல் நாள் தொடர்மழையின் காரணமாக முடியவில்லை. ஆனாலும் பிள்ளைகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என எண்ணினேன். என் மனைவியிடம் ஒரு தேங்காயைக் கொண்டு வரச் சொல்லி, அதை உரித்து அம்மட்டைகளை இரண்டு மூன்றாகச் சேர்த்துக் கட்டி நெருப்பில் காட்டி அவர்களுக்கு சுற்ற கொடுத்தேன். அவர்களும் அதை சந்தோஷத்துடன் சுற்றினர். அதிலிருந்து வெளிப்பட்ட ஒன்றிரண்டு தீப் பொறிகளை கண்டு அவர்கள் சந்தோஷத்தில் துள்ளினர்.

மறுநாளும் மழை தொடர்ந்தது.ஆனாலும் இன்று அவர்களுக்கு ஒரு நிஜக் கார்த்தியைக் கொடுத்துவிட வேண்டும் என எண்ணினேன். பல நண்பர்களிடம் இது சம்பந்தமாக சொல்லியும் வைத்தேன். சிறிது நேரத்தில் ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, தனக்கு ஜம்பையில் இருந்து மூன்று கார்த்திகள் வருவதாகவும் அதில் ஒன்றை தருவதாகவும் கூறினார். சிறிது நேரம் காத்திருந்து கார்த்தியைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றி வீரனைப் போல வீட்டிற்கு வந்தேன். என் குழந்தைகளுக்கு இது தான் கார்த்தி என்று காட்டினேன். அவர்கள் அதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே இருந்தனர். அன்று முழுவதும் ஒரு குழந்தையை தடவிப் பார்ப்பது போல அதை தடவியபடியே இருந்தாள் என் இளைய மகள். மாலை நெருங்க நெருங்க அவர்களை குதூகலம் தொற்றிக் கொண்டது.

கார்த்திக்கு நெருப்பிட வேண்டும். ஆனால் இங்கு யார் வீட்டிலும் விறகு அடுப்பு இல்லை. என்ன செய்யலாம் என அனைவரும் தீவிரமாக யோசித்தோம். “ அப்பா கேஸ் அடுப்புல கொளுத்த முடியாதா?” என்று என் பெரிய மகள் கேட்டாள். “முடியாது மா” என்று சொல்லி, என் மனைவியிடம் கற்பூரத்தை கொண்டுவரச் செய்து, அதை ஐந்தாறு துண்டுகளாக்கி கார்த்தி பொட்டலத்தின் மீது வைத்து கொளுத்தி நெருப்பை கனியவைத்தேன். சுற்றுவதற்கு இப்போது கார்த்தி தயாராக இருந்தது.முதலில் நான் எடுத்து சுற்றிக் காட்டினேன். நீண்ட என் தெருவில் நான் மட்டும் தனித்து கார்த்தியை சுற்றிக் கொண்டிருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.
பின் குழந்தைகளை ஒவ்வொருவராக என் அருகில் நிற்க வைத்துக் கொண்டு கார்த்தியைச் சுற்றினேன்.அதிலிருந்து உதிர்ந்த பொறிகளை பார்த்து கைத்தட்டி சந்தோஷப் பட்டனர். அவர்கள் எதையோ சாதித்து விட்டதைப்போல உணர்ந்தனர். என்னுடைய இரண்டாவது மகள் கார்த்தியில் இருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு தீப்பொறியின் பின்னாலும் ஓடினாள். நாங்கள் சுற்றுவதை எதிர் வீட்டு நண்பர் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கார்த்தியை எடுத்துக் கொண்டு அவரிடம் சென்ற என் மூத்த மகள் “இந்தாங்க மாமா நீங்க சுத்துங்க பார்க்கலாம்” என்று சொன்னாள். அடுத்த ஆண்டு நிச்சயம் குழந்தைகளுக்கு கார்த்தி செய்யக் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எல்லோர் வீட்டிலும் தீபம் காற்றின் போக்கில் ஆடியபடி எரிந்துகொண்டிருந்தது.

5 comments:

  1. இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்களை/மகிழ்ச்சிகளை இந்த தலைமுறை இழந்திருக்கிறது.

    நல்ல முயற்சி. அடுத்த தடவை கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கவும் மகிழ்ச்சியாய் கொண்டாடவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி . நிச்சயம் என் பிள்ளைகளுக்கு கற்றுத்தருவேன் நண்பரே.

    ReplyDelete
  3. Really I feel lots of things....we are missing so many things..thanks very much for this post.

    Keep posting...,

    Naveen

    ReplyDelete
  4. பதிவு குறித்தான உங்களின் மறுமொழிகள் சந்தோஷத்தை அளிக்கிறது நண்பர்களே.

    ReplyDelete
  5. என்னவளே
    காஞ்சிபுரம் திருவானைக்காவல்
    திருக்காளத்தி சிதம்பரத்தைவிட
    திருவண்ணாமலைக்கே முதலிடம்!

    அடடா
    ஏன் என்று கேட்டால்
    தீதான் முதல் விஞ்ஞானம்
    அண்ணாமலையானுக்கு அரோகரா!

    ReplyDelete