Saturday, November 13, 2010

இன்னும் அந்த உஷ்ணம் அவளோடு இருக்கிறது


எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.தெருவில் போட்டிருந்த ஷாமியானாப் பந்தலில் எரிந்து கொண்டிருந்த குழல்விளக்கைச் சுற்றி நிறைய சிறு பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.ஈசானத் திக்கில் மேகம் திரண்டிருந்தது.தெருத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த சித்தாத்தூர் பண்டாரம் சேங்கிட்டியை எடுத்து அடித்தான். அதிலிருந்து பீரிட்டெழுந்த ஒலி சாவு வீட்டின் துக்கத்தை மேலும் கூட்டிக் காட்டியது.சேங்கிட்டியை கீழே வைத்துவிட்டு சங்கை எடுத்து வாயில் வைத்து ஊதினான்.தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த சங்கொலி வீடு முழுக்க பட்டு எதிரொலித்தது.அந்த சங்கொலி அனைவர் மனதிலும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.தெருவிலும் திண்னையிலும் சிலர் அமர்ந்திருந்தனர். ஒரு சிறுவன் அனைவருக்கும் தேனீர் கொடுத்துக் கொண்டிருந்தான். பண்டாரம் சங்கு ஊதுவதை நிருத்திவிட்டு தேவாரம் பாட ஆரம்பித்தான்.
கூடத்தில் கிழக்கு பார்த்தவாறு ஐந்து முழு வாழை இலை போடப்பட்டிருந்தது.நடப்பிற்கு வந்திருந்த உறவினர்கள் கொண்டுவந்திருந்த இனிப்பு கார பலகாரங்களை இலைகளில் எடுத்து வைத்தனர். “நேரம் ஆவுதில்ல சட்டுபுட்டுனு படைக்கர வேலய பாருங்க” என்று துணுராமுட்டு பாட்டி கூறினாள். அதற்கு காவேரி பெரியம்மா, “போயி மொதல்ல பார்வதியை கூட்டிட்டு வாங்க” என்றாள்.சென்னகுனத்திலிருந்து வந்த கலா அக்கா போய் பார்வதியை அழைத்து வந்தாள்.அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தன. கை நிறைய கண்ணாடி வளையலும் தலை நிறைய பூவும் வைத்திருந்தார்கள். குங்குமம் கொண்டு நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருந்தனர். அவளைப் பார்ப்பதற்கு நாடகங்களில் வரும் அம்மனை பார்ப்பதைப் போல இருந்தது. தெரு நடையில் ஒப்பாரி வைத்து அழும் பெண்களையும் தெருவில் அமர்ந்திருப்பவர்களையும் காவேரி பெரியம்மா சென்று படைக்க அழைத்தாள். படையள்களுக்கு முன் புறம் மூன்று இடங்களில் கற்பூரத்தை வைத்து காவேரி பெரியம்மா கொளுத்தினாள். அவளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த கொளாப்பர் வீட்டு மாமா, “சொந்தகாரங்களாம் வந்து விழுந்து கும்புடுங்க” என்று சொன்னார். முருகனின் புகைப்படத்தருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த பார்வதியை காவேரி பெரியம்மா, “முருகன் எங்கயும் போயிடலடி அவன் சாமியா மாரி நம்மோடத்தான் இருக்கிறான். வா வந்து உழுந்து கும்புடு” என்றாள். வேறு சிலரும் அவளைப் பார்த்து ,” அதயே நெனச்சிக்குனு இருந்தா எப்புடிமா? உம் புள்ளைகளுக்கு நீதான ஆருதல் சொல்லனும். வா வந்து உழுந்து கும்புடு”. அவள் எழுந்து வந்து விழுந்து வணங்கும் போது அவளையும் மீறி அழுகை வந்தது.உடைந்து அழுதாள். அருகிலிருந்தவர்களும் ஆத்திரம் தாளாமல் அழுதனர். படையல் அனைத்தயும் ஒன்றாக்கி ஒரு சருவத்தில் போட்டு அகிலாண்டம் பெரியம்மா அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பிடி அள்ளிக்கொடுத்தாள். சிலர் வேண்டாமென மறுத்தனர்.தெருவில் சேங்கிட்டி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

(தொடரும்...)

1 comment:

  1. நல்லாயிருக்கு... தொடருங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete