Friday, January 7, 2011

திரும்ப ஆட முடியாத ஆட்டத்தின் விதிகள்

சாந்தி கொலை சம்பந்தமான செங்கேணியின் வலுவானத் துப்பு சதாசிவத்தை நெருங்க காவல் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தன் நடமாட்டத்தை காவல்துறை உற்றுக் கவனித்துக்கொண்டிருப்பதை அறிந்த சதாசிவம் வெளியில் வருவதை முற்றிலுமாக குறைத்துக் கொண்டான். ஆனாலும் அவன் மீதான காவல் துறையின் பிடி இறுகிக்கொண்டே இருந்தது. திடீரென அன்று மாலை சித்தாத்தூர் பம்பைகரைக்கு போலீஸ் வாகனம் பெறும் சீற்றத்தோடு வந்த போது மக்கள் கழனி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பம்பையில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்து நிலத்தில் சிறுவர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர்.வாகனம் நேராக பம்பை கரையின் மேலேயே சென்று நின்றது. பாதை நெடுகிலும் சொத சொதவென்று இருந்தது. வாகனத்திலிருந்து இறங்கிய காவலர்கள் பூட்ஸ் கால்கள் தடதடக்க அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தனர். தகவல் அறிந்து ஊர் மக்கள் பம்பை கரையில் திரளத்தொடங்கினர். வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று விளங்காமல் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். சனி மூலையில் மேகம் திரண்டு வானம் இருட்டிக் கொண்டு வந்தது. காவல் ஆய்வாளர் தன் குரலை உயர்த்தி மைக்கில் பேசினார். “சதாசிவம் நீ இருக்கிற எடம் தெரிஞ்சி தான வந்திருக்கோம். மரியாதையா வந்து சரண்டர் ஆகிடு. இல்லனா விஷயம் ரொம்ப சீரிசாகிடும்”. ஆய்வாளர் இவ்வாறு சொன்ன பிறகுதான், சதாசிவம் அங்கு ஒளிந்திருப்பதே அவர்களுக்கு தெரிந்தது. “எப்ப இருந்து இங்க பதுங்கி இருக்கானோ பாவி” என பிலிவந்தி அக்கா தனக்குள் முனுமுனுத்துக் கொண்டாள்.அதற்குள் காவலர்கள் கரும்புத் தோட்டத்திற்குள் நுழைந்திருந்தனர். கரும்புத்தோட்டம் அடர்ந்தும் பரந்தும் இருந்தது. தன்னை காவலர்கள் நெருங்கிவிட்டதை அறிந்ததும் எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்று அவன் மனம் தாறுமாறாக யோசிக்கத்தொடங்கியது. மரணத்தின் பயம் அவன் விழிகளில் கவ்வத் தொடங்கியிருந்தது. தன்னை எப்படி நெருங்கினார்கள் என்று யோசித்துக் கொண்டே அங்கு மிங்குமாக ஓடினான். இந்த இக்கட்டில் இருந்து தப்பிவிட்டால் போதுமென்று தோன்றியது அவனுக்கு. சவரம் செய்யப்படாத முகம், அழுக்கடைந்த துணி, ஊத்தைப் பற்கள் இவையே அவனை இன்னும் மோசமானவனாக காட்டியது. தண்ணீரில் அடித்து வந்து சாகக் கிடந்தவளை வன்புணர்ச்சி செய்த பாவம் தான் தன்னைத் துரத்துகிறது என்று எண்ணிக்கொண்டே தலையில் அடித்துக் கொண்டான்.அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. மக்களில் பாதி பேர் காவலர்களுக்கு துணையாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். மீதிபேர் கரைமீது நின்று அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர். இனி ஏதும் செய்வதற்கில்லை என்று அவனது உள்மனம் அவனுக்கு உணர்த்தியபோது அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. தலை சுற்றுவதைப் போல உணர்ந்தவன் அப்படியே வாய்க்காலில் அமர்ந்தான். “எவ்வளவு பெரிய தவறைச் செய்திருக்கிறோம் சும்மாவா விடும்” என தனக்குள்ளாகவே கூறிக்கொண்டான். தன் இளம் மனைவியையும் குழந்தையையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். பின் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினான்.

ஏரிக்கரை முழுவதும் மக்கள் கூட்டம் தென்பட்டது. அவனை இரண்டு காவலர்கள் கிழக்கு வாய்க்கால் வழியாக அழைத்துக் கொண்டு பம்பைகரை மீது ஏறிக்கொண்டிருந்தனர். அவன் யாரையும் ஏரெடுத்தும் பார்க்காமல் தலையை தொங்கப் போட்டப்படியே வந்தான்.போலீஸ் வாகனம் அங்கேயே கொண்டு வரப்பட்டது. கரைமீது நின்றிருந்த சிலர் சதாசிவத்தை கண்மண் தெரியாமல் தாக்கத் தொடங்கினர். அவன் உதடு கிழிந்து ரத்தம் பெருக்கெடுத்தது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர். ஆய்வாளர் வந்து குரல் உயர்த்தி சொன்னபிறகே கூட்டம் அமைதியடையத் தொடங்கியது. சதாசிவத்தின் முகம் வீங்கி விகாரமாகத் தோன்றியது. அவனை வாகனத்தில் ஏறி அமருமாறு சைகை செய்தார் ஆய்வாளர். அவன் தாங்கித் தாங்கி நடந்து சென்று ஏறிப் பின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வண்டிக்குள் ஏறியதும் வாகனம் சீறி பாய்ந்தது. அப்போது ஏரிக்கரையில் நின்றிருந்த சிலர், “சார் அவனை கோயம்புத்தூரிலே போட்ட மாதிரி போட்டிருங்க” என்று கத்தினர். ஆய்வாளர் அதைக் கேட்டு புன்னகை செய்ய அவர்களைக் கடந்தது சென்றது வாகனம். மழையால் சேரும் சகதியுமான பாதையில் வாகனத்தின் சக்கரங்கள் ஒருவித சப்தத்தை எழுப்பிய படியே சென்று கொண்டிருந்தது.சட்டென தூக்கம் களைந்து எழுந்து உட்கார்ந்தான் முருகன். சதாசிவத்தை கைது செய்தபோது இருந்த அவனது மரணத்தின் பீதி படிந்த கண்கள் இவனை தூங்க விடாமல் செய்துகொண்டிருந்த்து. “கோயம்பத்தூர்ல போட்ட மாதிரியே அவனை போட்டுருங்க சார்” என்ற அன்று கேட்ட யாருடைய குரலோ இவனுள் கேட்டுக் கொண்டே இருந்தது. எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் வந்து படுத்துக் கொண்டான். சாந்தியின் நினைவுகள் இவன் மனதில் புரளத்தொடங்கின. அதனால் உறக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தான்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துக் கொண்டு போன சாந்திக்கு தலைப் பிரசவமாகி ஐந்து மாதமே முடிந்திருந்தது. மழை விட்ட பாடில்லை. எங்கு பார்த்தாலும் நீர்ப் பரப்பாகவே காட்சியளித்தது. கோணமலைக் காட்டிலிருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தின் சீற்றம் நான்கு நாட்களாகியும் தணியாமல் இருந்தது. வீரங்கிபுரம் ஏரி ஒரே இரவில் நிரம்பி கோடி இறங்கி இருகரைகள் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. கொஞ்சமும் வேகம் குறையாத வெள்ளம் மடவிளாகம் ஏரி, சித்தாத்தூர் பம்பை, காரணை ஏரிகளைக் கடந்து சென்னகுணத்தைச் சூழத்தொடங்கியபோது சாந்தி அடித்துக்கொண்டுபோன செய்தி ஆடுமேய்க்கும் சிறுவர்கள் மூலம் உருக்குள் பரவ சாந்தியைத்தேடும் படலம் முழுவீச்சில் தொடங்கியது. மாட்டாஸ்பத்திரி அருகே சாந்தி எடுத்துச் சென்றிருந்த அன்னகுண்டான் மட்டும் வேலம் புதரில் சிக்கிக் கொண்டிருந்தது. நான்கு ஊர் மக்களும் சல்லடை போட்டு தேடினர். யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவள் துவைக்க எடுத்துச் சென்ற துணிகள் மட்டும் வழி நெடுக தென்பட்டுக் கொண்டிருந்தன. மழை பெய்த படியே இருந்தது. தீயணைப்பு வீரர்களும் வழிநெடுக தேடினர். அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளுக்கு என்ன ஆகி இருக்குமோ என்று நினைத்த முருகனுக்கு அழுகை வந்தது. அவனுடைய சித்தப்பா அவனை தேற்றியபடி இருந்தார். வெள்ளத்தின் சீற்றம் குறைந்தால்தான் இனி ஏரியிலோ பம்பையிலோ இறங்கித் தேட முடியும் என்ற நிலையால் தேடுவதில் தொய்வு ஏற்பட்டது. அன்று மாலை மடவிளாகம் ஏரி உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தபோது, மக்களை மெல்ல பயம் கவ்வத் தொடங்கியது. சிவன் கோயிலிலும்,பள்ளிக்கூடத்திலும் மக்கள் பாதுகாப்பு கருதி தங்க வைக்கப்பட்டனர்.

தன்னுடைய கழனியில் இருந்த குடிலில் கண்கள் சிவந்திருக்க, உடல்களை முறுக்கியபடி அருள் வந்து ஆடிக் கொண்டிருந்தார் சண்முக சாமியார். வேம்பும் இலுப்பையும் சூழ இருந்தது குடில். “வேட்டவலம் சாமியார்கிட்ட போயி மை தடவிப்பார்த்துட்டு வரலாம்” என்று கௌரிசித்தி நான்கைந்து முறை சொன்னதும் தான் முருகன் சரி என்று ஒப்புக் கொண்டான். ஆடிக் கொண்டிருந்த சாமியார் வேப்பிலையை உருவி வாயில் போட்டு நர நரவென்று மென்று விழுங்கினார். வேம்பின் கசப்பு அவரின் குரலை மேலும் உக்கிர மாக்கத் தொடங்கியது. விழிகள் மேல் நோக்கி செருகிக் கிடந்தன.அருகில் அமர்ந்திருந்தவர்கள் விடாது பம்பை உடுக்கை அடித்துக் கொண்டிருந்தனர். சாமியார் மெல்ல கண்களை மூடினார். சிறிது நேரத்தில் அவரது உடல் குலுங்கத் தொடங்கியது. வலிப்பு கண்டவரைப் போல அவரது உடல் வெட்டிக் கொண்டது. கூடியிருந்தவர்கள் பயத்தால் அசையாது அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். பம்பை உடுக்கையின் உக்கிரம் குறையத் தொடங்கியதும் சாமியாரின் உடல் தளர சாமியார் பழைய நிலைக்கு வந்தார். மீண்டும் வேப்பிலையை உருவி வாயில் திணித்து மெல்லத் தொடங்கினார். முருகனும் கௌரியும் பயத்துடன் அவரை பார்த்துக்கொண்டே அவர் எதிரே அமர்ந்து கொண்டிருந்தனர். அவர் என்ன சொல்வாரோ என்ற பயம் அவர்கள் முகத்தில் கவிந்திருந்தது. மறுபடியும் கைகளை முறுக்கியபடி தலைக்கு மேலாக உயர்த்திய சாமியார் முருகனைப் பார்த்து பேசத் தொடங்கினார்: “முருகா உனக்கு இப்ப போறாத காலம் நடக்குது பா. உன்னைதான் காவு வாங்க அவன் துடிக்கிறான்”என்று சொல்லிக்கொண்டே அண்ணாந்து கையை நீட்டி கூரையைக் காட்டினார். பின் ஒரு சுருட்டை எடுத்து பற்றவைத்து பக்பக் என புகையை இழுத்து மோட்டு வளையைப் பார்த்து விட்டார். அதற்குள் பக்கத்தில் அமர்ந்திருந்த கௌரிசித்தி சாமியாரிடம் “ஏன் சாமி இப்படிலாம் நடக்குது? ஏதாவது தெய்வ குத்தமா?” எனக் கேட்டாள் . அதற்கு சாமியார் சற்று நேரம் யோசித்து “ஆமா.அவன் வீட்டுக்கு யாரோ செய்வெனை வச்சிருக்காங்க. அது இருக்கிற வரைக்கும் அவனால நிம்மதியா இருக்க முடியாது” என்று பரபரப்பாகக் கூறி மீண்டும் புகைக்கத் தொடங்கினார். கூட்டம் அவர் இழுத்துவிடும் புகையையே பார்த்துக் கொண்டிருந்தது சாமி கொஞ்ச நேரம் கண்களை மூடி அமைதியாக இருந்தார். “சாமி சாந்திக்கு ஒன்னும் ஆகி இருக்காதே?” என்று முருகன் அவரிடம் பயத்துடன் கேட்டான். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்தவர், கொஞ்சம் வேப்பிலையை உருவி வாயில் போட்டு மீண்டும் மெல்லத் தொடங்கினார். “முதல்ல உன் வீட்ல இருக்கற செய்வினையை எடுத்தால்தான் உன்னயே நீ காப்பாத்திக்க முடியும் பா” என்று முருகனிடம் கூறினார் சாமியார். “எப்ப சாமி அத எடுக்கலாம்?” என்று அவன் கேட்கவும் “வர வெள்ளிக் கிழமை எடுத்திடலாம்” என்று பதில் கூறினார். அவன் தயங்கியபடியே “சாமி போலீஸ்ல கேஸ் கொடுக்கட்டுங்களா?” என்று கேட்டான். “போலிஸ்காரனை நம்பரவன் இங்க எதுக்கு வரனும்” என்று சீறினார் அவர். அவரது சீற்றத்தைக் கண்டு முருகன் சங்கடப்பட்டான்.சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த இருவரும் அவரிடம் சொல்லிவிட்டு புறப்பட்ட போது யாரோ ஒரு பெண்மணி, சாமியாரிடம் தன் மகனுக்கு இந்த வருடமாவது மெடிக்கல் சீட் கிடைச்சிருமா என்று கேட்டுக் கொண்டிருந்தாள். அவளின் பேச்சொலி அடங்கியவுடன், சாமியாரின் சிரிப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது. சிரிப்பொலிக்கு அடுத்து அவரின் மந்திரச் சொற்கள் வெடித்துக் கிளம்பின. அதற்கேற்ப பம்பையும் உடுக்கையும் வேகமாக வாசிக்கப்பட்டது. “எதுக்கும் இன்னொரு முறை எப்ப வருவார்னு கேட்டுக்கட்டுமா?” என்று அவளிடம் கேட்டான். “போன்ல கேட்டுக்கலாம்” என்று அவள் கூறியதும் அவன் நடக்கத் தொடங்கினான்.


காரணைப் பெரிச்சானூர் ஏரிக் கரையோரம் ஆடாதொடை புதரில் சிக்கி இருந்த சாந்தியின் உடலை காவல் துறை கைப் பற்றிய போது அவள் அடித்துச் செல்லப்பட்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது. பூமாலையில் வைத்துக் கட்ட ஆடாதொடை இலை பறிக்கச் சென்ற பூக்காரர் ஏழுமலைதான் முதலில் பார்த்தவர். அவர் ஆய்வாளரிடம் அந்த இட்த்தை சுட்டிக் காட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்.தலையை ஆட்டியபடி அவர் கூர்ந்து ஏழுமலை சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். விஷயம் கேள்விப்பட்டு சுற்றியுள்ள கிராம மக்கள் அங்கே கூட ஆரம்பித்தனர். முருகன் அழுதபடியே தன் சித்தப்பாவுடன் அங்கு வந்தபோது கூட்டத்தைக் கலைக்க போலிஸ் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. புதரில் கிடந்த அவளின் உடலைச் சென்று பார்த்து தலையில் அடித்துக் கொண்டு அழுதான். அவன் அழுவதைக் கண்ட அவன் சித்தப்பாவிற்கும் அழுகை வந்தது. கூட்டம் அவனையே பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ஏற்றினர். அப்போது முருகன் அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதான். வண்டியில் ஏற்றப்பட்ட சாந்தியின் பிணத்தை பார்க்க கூட்டம் அலைமோதியதால், உடனடியாக ஆம்புலன்ஸை எடுக்க உதவி ஆய்வாளர் உத்தரவிட்டார்.

மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் முருகனிடம் வழங்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையை வாசிக்க வாசிக்க ஆய்வாளர் முகம் இறுக்க மடையத் தொடங்கியது. தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் அந்த அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார், “சாந்தியை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். பிறகே அவள் நீரில் முக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். சிதைந்த நிலையில் இருந்த அவள் பிறப்புறுப்பில் படித்திருந்த விந்தணுக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டிருக்கிறது” எனும் வரிகளில் அவரது பார்வை நிலைக் குத்தி நின்றது. தன் மனத்திரையில் சாந்தியின் புகாரை தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஒரு முறை ஓடவிட்டுப் பார்த்தார். ஏற்கனவே சந்தேக மரணம் என்று பதிவு செய்திருந்த்தை மாற்றி, கற்பழிப்பு மற்றும் கொலை எனும் பிரிவுகளின் கீழ் வழக்கை பதிவு செய்து தன் விசாரனையை தொடங்கினார். மெல்ல இந்த தகவல் முருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவன் அதைக் கேட்டு உடைந்து அழுதான். “சாந்திக்கு சாவு இப்படியா வரனும்?” என்று கௌரிசித்தியைப் பார்த்து அவன் தேம்பித் தேம்பி அழுதான். அவனை தேற்ற முடியாமல் அவளுக்கும் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

சாந்தியின் மரணம் குறித்து ஊர் பலவிதமாகப் பேசிக்கொண்டது. தொடர்மழை ஊரின் முகத்தை மாற்றிக்காட்டியது. எங்கு பார்த்தாலும் ஒரே நீர்க்காடாக விரிந்து கிடந்தது. தும்பிகள் பகல் முழுக்க பறந்து திரிந்து கொண்டிருந்தன. தவளைச் சத்தம் இரவுகளின் பரப்பை அதிகரித்துக்கொண்டிருந்தது. பல வித மனநெருக்கடிகளுடன் தான் சாந்தியின் சிதைக்கு முருகனால் நெருப்பிட முடிந்தது. பற்றி படரும் தீயின் கங்குகள் அவளைத் தின்னத் தொடங்கியதும் அவன் தேற்றுவார் இன்றி தேம்பித் தேம்பி அழுதான். கூட்டம் மெல்ல கலைந்து செல்ல ஆரம்பித்தது. திரும்பிப் பார்க்காமல் அவனை வரச்சொல்லி முன்னே நடந்து கொண்டிருந்தார் செட்டியார் வீட்டு செல்வம்.சுடுகாட்டு ஓடையில் நீரின் சலசலப்பு கேட்டுக் கொண்டே இருந்தது. சாலையின் ஓரமிருந்த புளியமரத்தின் கீழ் அமர்ந்து பண்டாரம், குழிவெட்டியவர்கள் ஆகியோர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
செங்கேணியின் மனமே அவனை கொல்லத் தொடங்கியது. நாற்றாங்காலில் மடைகளை வெட்டி தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்த அன்று, பம்பைக்கரையில் பார்த்தவற்றை அதற்கு மேல் செங்கேணியால் மனதில் வைத்திருக்க முடியவில்லை. சதாசிவமும் அவரது நண்பர்களும் ஒரு பெண்ணை அலங்கோலமாக மோட்டார் கொட்டகைக்குத் தூக்கிக்கொண்டு போனதை அடர்த்தியான மழைகளுக்கு ஊடாகவும் செங்கேணியால் நன்றாகப் பார்க்க முடிந்தது. அன்றே இதை யாரிடமாவது சொல்விடத்தான் நினைத்தார். எதற்கு வம்பு என்றுவிட்டு விட்டார். மேலும் சதாசிவத்தின் நண்பர்களால் தன் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்றும் யோசித்தார். தன் மனைவியிடம் மட்டும் சொன்னார். அதற்கு அவள், “உங்கள் வேலைய மட்டும் பாருங்க எங்கயும் போயி எதையும் சொல்லத் தேவையில்லை” என்று கூறி அவரை அடக்கினாள். மூன்று நாட்களுக்குப் பின் சாந்தி இறந்ததாகக் கேள்விப்பட்டவுடன் அவருக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. பதற்றம் தொற்றிக் கொள்ள, ஏதோவொரு சிக்கலில் தான் அகப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தார். அன்று அவருக்கு உறக்கம் பிடிக்கவேயில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே இருந்தார். இதை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நெஞ்சிற்குள்ளாகவே ஒளித்து வைத்திருக்க முடியும் என்று அவர் யோசித்த போது அவரது முகத்தில் இருள் படியத் தொடங்கியது. இனம் புரியாத பாரம் மனதை அழுத்துவதாக உணர்ந்தவருக்கு இதயம் வெடித்து விடும்போல இருந்தது. சுவாசம் தாறுமாறாக வெளிப்பட்டது. சிரமப்பட்டே அவர் மூச்சை இழுத்து விட்டார். பின் எழுந்து சமையலறைக்கு சென்று தண்ணீர் மொண்டு குடித்தார். தெருவிற்கு வந்து தெரு விளக்கு வெளிச்சத்தில் கொஞ்ச நேரம் நடந்தார். இதற்கு மேல் தன்னால் அன்று பார்த்ததை ஒரு நிமிடம் கூட மறைத்து வைக்க முடியாது என்று முடிவு செய்தவர் விடிந்ததும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் தனக்கு தெரிந்ததைச் சொல்லிவிட வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டார். மீண்டும் உள்ளே சென்று தண்ணீர் மொண்டு குடித்தார். மனம் லேசாகிவிட்ட்தாக உணர்ந்தவர் மூச்சை நன்றாக இழுத்துவிட்ட படி கட்டிலில் அமர்ந்தார். பின் மோட்டு வளையைப் பார்த்தபடியே படுத்தவர் கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனார்.


போலீஸ் தலை இட்ட பிறகு தான் வரவே முடியாது என்று திட்ட வட்டமாக கூறிய சாமியாரை சம்மதிக்க வைக்க கௌரி சித்தி கடும் முயற்சி எடுக்கவேண்டி இருந்தது. சித்தியின் இந்த நடவடிக்கை சித்தப்பாவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. “இந்த சாமியார் இல்லனா இன்னொருத்தன கூப்பிட வேண்டியது தானே?” என்று அவர் வெளிப்படையாகவே சித்தியைத் திட்டினார். “உங்களுக்கு ஒன்னும் தெரியாது சும்மா இருங்க” என்று அவரை அடக்கினாள் சித்தி. “எதுக்கெடுத்தாலும் சாமியார்கிட்ட ஓடரது எனக்கு சரியா படல” என சித்தப்பா சொல்லிக்கொண்டே துண்டை உதறிக்கொண்டு தெருவிற்கு வந்தார்.ஓரளவிற்கு மனம் இயல்பை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்த அன்று வெள்ளிக்கிழமையாகவும் இருந்தது.அன்று சாயுங்காலமே சாமியார் தன் உதவியாளருடன் முருகன் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, முருகன் தெருத் திண்ணையில் அமர்ந்தபடி தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பூஜைக்கு தேவையான வேலைகளை கௌரி சித்தி செய்து கொண்டிருந்தாள். உள்ளே சென்ற சாமியார் பூஜை அறையில், தான் கொண்டு வந்திருந்த பையை பிரித்து பூஜை சாமான்களை எடுத்து வைத்துக்கொண்டே சித்தியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார். அவளும் அவரோடு சிரித்துப் பேசினாள்.இதைப் பார்த்த சித்தப்பாவிற்கு கோபத்தால் முகம் சிவந்தது.
“எட்டு மணி ஆவுது. பூஜையை ஆரம்பிச்சிடலாமா?” என்று சாமியார் கௌரி சித்தியிடம் தான் கேட்டார். அவள் சரி என்பது போல தலையாட்டினாள். இதைப் பார்த்த சித்தப்பா அங்கு உட்காரப் பிடிக்காமல் தெருத் திண்ணைக்கு சென்று உட்கார்ந்து கொண்டார். பூஜை அறையில் முருகன், கௌரி சித்தி மற்றும் முருகனின் உறவினர்கள் ஒரு வித பீதியுடன் அமர்ந்து கொண்டிருந்தனர். ஊதுபத்தியின் வாசனை அறை முழுக்க வியாபித்திருந்தது. காவு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட சேவல் கொக்கரித்துக் கொண்டே இருந்தது. செங்கல்களை அடுக்கி அதில் உமியைக் கொட்டினார். அதன் மேல் ஆல், மா அரசங் குச்சிகளை ஒடித்து அடுக்கி சாமியார் யாகம் வளர்க்கத் தொடங்கினார். உடன் வந்தவர் சாமியின் குறிப்பறிந்து தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். கற்பூரத்தை கொளுத்தி யாகத்தில் இட்டு நெய் ஊற்றி மந்திரங்களை சொல்லத் தொடங்கினார். யாகத்தில் தீ நன்றாக துடித்தப்படி மேலெழுந்தது. அவர் நெய் ஊற்றிக் கொண்டே இருந்தார். அவரது உதவியாளர் உடுக்கையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். உடுக்கை ஒலி சூழலை அமானுஷ்யமாக மாற்றியது. யாகத்தில் ஏற்பட்ட புகையும் சேர்ந்து அறையை மேலும் இறுக்கமாக்கியது. உடுக்கை ஒலி பீரிட்டுக் கிளம்பிக் கொண்டே இருந்த போது சாமியார் தன் மார்பில் அடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். பின் அருகில் வைத்திருந்த வேப்பிலையை உருவி வாயிலிட்டு மெல்லத் தொடங்கினார். அமர்ந்து கொண்டிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் சிலைகளைப் போல இறுக்கத்துடன் இருந்தனர். அந்த அழுகையின் ஊடே சாமியார் முருகனிடம் பேசத் தொடங்கினார். “முருகா.. இந்த வீட்ல தீட்டு பட்டிருக்குப்பா. நா சொல்றது சரியா?” என்று அவர் கேட்டார். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் அவன். கௌரி சித்திதான் “ஆமா சாமி” என்றாள். “யாராலையும் அதை தடுத்து நிறுத்தி இருக்க முடியாது பா. உன் தலைக்கு வந்த ஆபத்துதான் அது. அவ கரு தரிச்ச நேரம் சரியில்லாத்தால அவள கொண்டுகுனு போய்டிச்சி” என அவர் கோர்வையாக சொல்ல மேலும் பதற்றம் அடைந்தான் முருகன். பயத்தில் அப்படியே உறைந்து இருந்தான். உடுக்கை அடிப்பவரைப் பார்த்து சேவல் மிரண்டு கொக்கரித்தது. “நா சாய்ந்தரம் வரப்பவே கட்டிச்சி. அந்தளவுக்கு சக்தி வாய்ந்த செய்வினய யாரோ வீட்ல வச்சிருக்காங்க. அது படுத்துர பாடுதான். பொருள் தங்காது. மன அமைதி இருக்காது. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கும். நான் சொல்றதுலாம் சரிதான?” என்று அவர் கேட்டதும் “ஆமாம் சாமி” என்று பயத்துடன் சொன்னான். “இன்னையோட உன்ன பிடிச்சிருந்த பீடை ஒழியப்போவுது. இனி ஒரு பயமும் இல்ல பா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உடுக்கையின் ஒலி அதிகரிக்கத் தொடங்கியது. வேப்பிலையை உருவி தின்றபடியே சாமியார் வேகமாக எழுந்து வெளியில் ஓடினார். தெரு வாசல் நோக்கி சென்றவர், அங்கிருந்து திரும்பி பின் வாசல் பக்கம் சென்றார். கூடவே அவரின் உதவியாளர் உடுக்கை அடித்தப்படி சென்றார். அங்கு அடுப்படிக்கு பக்கத்தில் தரையில் புதைக்கப்பட்டிருந்த அம்மிக்கல்லை ஓங்கி ஓங்கி காலால் உதைத்தார். கௌரி சித்திக்கு பயமாக இருந்தது. “இத பேத்து எடுங்கடா” என்று அருள் வந்து ஆடிக் கொண்டே சொன்னார்.நடப்பதை எல்லாம் ஒருவித பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் முருகன். அவன் மாமா கடப்பாறையின் உதவியுடன் அம்மியை அப்புறப்படுத்தினார். பின் அதன் கீழ் இருந்த சிமெண்ட்டை எடுத்ததும் மணல் கிடைத்தது. உடனே சாமியார் குனிந்து மணலை வேக வேகமாக அள்ளி மேலே வீசினார். அவரிடம் ஓர் உக்கிரம் தெரிந்தது. மிகவும் பரபரப்பாக இருந்தார்.
தோண்டிக் கொண்டே இருந்தவர்,எதையோ கூட்டிக் கூட்டி பிடிக்க முயன்றார். அது தப்பி ஓடச் செய்தது. இவர் அதைப் பிடிக்க பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அதை ஒரு கையால் அழுத்தி பிடித்துக் கொண்டே, “டேய் சேவல இங்க காட்டு” என்று கேட்டார். உதவியாளர் சேவலை அவரிடம் கொடுத்தார். அது கொக்கரித்துக் கொண்டே இருந்தது. சேவலை வாங்கியவர் அதன் குரல்வலையை கடித்து, அதில் இருந்து பீரிட்டெழுந்த ரத்தத்தை பள்ளத்தில் தெளித்தார். சேவல் துடித்துக் கொண்டிருந்தது. “த்தூ. சனியனே எங்கிட்டேயே உன் வேலையைக் காட்டுறயா?” என்று பள்ளத்திலிருந்து எடுத்த பொருளைப் பார்த்து கூறினார். அந்த சிறிய பொட்டலத்தைப் பிரித்தார். அது தாயத்து போன்று இருந்தது. அதை அனைவரிடமும் காட்டியவாறே “என்னமா ஓடுது.. பிடிக்க முடியல. கரகரனு சுத்துது.கொஞ்சம் அசந்தா போதும் என்னயே தீத்திரும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்த்து. காவு கொடுத்தப்புறம் தான் அமைதி யாச்சி” என்று சொல்லிவிட்டு மீண்டும் பூஜை அறையை நோக்கி நடந்தார். தன்னை மேலும் மேலும் பயம் சூழ்ந்தபடியே இருப்பதாக முருகன் குழம்பினான்.
மீண்டும் யாகத்திற்கு நெய் ஊற்றி தீயை வளர்த்தார். தோட்டத்திலிருந்து கொண்டு வந்திருந்த தாயத்தைப் பிரித்து காட்டினார். அதில் கொஞ்சம் தலைமுடி மண் ஆகியன இருந்தது. “தோ பார் இது உன் மனைவியின் தலைமுடி இது உன் காலடி மண்” என்று எடுத்து காண்பித்தார். முருகனுக்கு அவற்றைப் பார்த்ததும் மேலும் பயம் உடலெங்கும் பரவியது. சூழல் அவனுள் நடுக்கத்தை ஏற்படுத்தியது.அவன் உறவினர்களும் பயத்துடனே அமர்ந்திருந்தனர். பின் அந்த தாயத்தை எடுத்து யாகத் தீயில் போட்டார் சாமியார். “முருகன் காச எப்படிலாம் கரியாக்கறாங்க பாரு” என்று மெல்லிய குரலில் பக்கத்துவீட்டு சிவா அண்ணன் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “வாய மூடிக்கினு சும்மா இருங்க” என்று தன் கணவனை அடக்கினாள்.
மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது பூஜை முடிந்து கல்யாண பூசணிக்கு பொட்டிட்டு அதை முருகனை எடுத்துக்கொள்ளச் சொன்னார். அவனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு தும்பர மேட்டிற்கு சென்றார். தெரு நாய் பெருங்குரலெடுத்து கத்தியது. கல்யாண பூசணியை எடுத்துச் சென்று இலுப்பை மரத்தின் கீழ் வைத்துவிட்டு மஞ்சள் தூள், சிவப்பு ஆகியவற்றை போடச் சொன்னார். அதைப் பார்த்து மூன்றுமுறை துப்பச் சொன்னார். பின் கொஞ்சம் சில்லரைகளை எடுத்து அங்கே போடச் சொன்னார். அவர் சொன்னது போல திரும்பிப் பார்க்காமல் அவரை பின் தொடர்ந்து வீடு வந்து சேர்ந்தான். ஒரு எந்திரத்தைப் போல அவர் பேச்சுக்கு தான் கட்டுண்டு கிடந்ததை மறுபடியும் நினைத்துப் பார்த்தான். அவன் உடல் சிலிர்த்துக் கொண்டது. சாமியார் புறப்படும் போது கௌரியை வெளியில் அழைத்து என்னவோ சொன்னார். அவள் தலையை ஆட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்தாள். திண்ணையில் சாய்ந்து அமர்ந்திருந்த சித்தப்பா சாமியாருடனான அவளின் குழைவை ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.


சதாசிவத்தைப் கைது செய்த பிறகு மற்ற மூன்று பேரையும் பிடிக்க அவர்களுக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை. அவர்களில் இருவர் தாங்களாகவே முன் வந்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஒருவர் தானிப்பாடி அருகே நெடுஞ்சாலை சோதனையின் போது கைது செய்யப்பட்டு கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார். பின் சதாசிவம் உட்பட நான்கு பேரும் மூன்று நாட்கள் போலிஸ் காவலுக்கு அனுப்பப் பட்டனர். ஆரம்பத்தில் அவ்வாறு செல்லவே அவர்கள் மறுத்தனர். தங்களை என்கௌண்டர் செய்துவிடுவார்கள் என்ற பயமும் அவர்களிடம் இருந்தது. சுலபத்தில் அவர்களிடம் இருந்து வாக்கு மூலத்தை பெறமுடியவில்லை. பின் காவல் துறை வழக்கமான தங்களின் முகத்தைக் காட்டத் தொடங்கியது. நான்கு பேரும் நடுங்கிப் போனார்கள். வலி தாங்க முடியாமல் வாக்குமூலம் தந்துவிடுகிறோம் என்று கத்தத் தொடங்கியதும்தான் அடிப்பதை நிறுத்தினர். அதன் பிறகு விசாரணையில் அவர்களால் எந்த இடைஞ்சலும் நேரவில்லை. காவல் துறை விசாரனையின் முடிவில் தங்கள் குற்றத்தினை ஒப்புக் கொண்டு அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் விபரம்: “அன்னைக்கு மதியம்போல பம்பையில வலையக்கட்டி மீன் பிடிச்சிகினு இருந்தோம். தொடர் மழையால குளிர் அதிகமா இருந்தது. ராஜேஷ் தான் கண்டாச்சிபுரம் போய் பிராந்தியும் கோழிக்கறியும் வாங்கி வந்தான். நாலு பேரும் முட்ட குடித்து விட்டு மீண்டும் மீன் பிடிக்கத் தொடங்கினோம். பம்பைக்கு மேக்கால பக்கம் ஒரு பொம்பள ஆடைகள் களைஞ்ச நெலையில மயங்கிக் கிடந்துச்சி. செத்து கிடக்குதுனு கிட்டக போனம். ஆனா மூச்சி இருந்துச்சி. ஆடை களைஞ்ச நெலையோட அவள பாக்க ஒரு மாதிரி இருந்துச்சி. வண்டிக்காரமுட்டு மோட்டார் கொட்டாய்க்கு அவள தூக்கிகிணு போனம். தண்ணி நெறைய குடிச்சிருந்தது போல. செமகனம். காப்பாத்ததான் நெனச் சோம். சம்பத்துதான் அவள பர்ஸ்ட்ல செஞ்சான். வேண்டாம்னு சொல்லியும் அவன் கேக்கல. அவள் அப்போது லேசாக முனகினாள். குடிபோதை எங்களுக்கும் வெறிய ஏற்படுத்திச்சி. அப்புறம் நாங்க மாறி மாறி அவள செஞ்சோம். வலி தாங்காம. அவ கத்தினாள். சத்தமாவும் அவளால கத்த முடியல. வேணாம்டா.. வேணாம்டானு தொடர்ந்து சொல்லிக் கிட்டே இருந்திச்சி. போதையில எங்களாலா எதையும் யோசிக்க முடியல” என அவன் சொல்ல சொல்ல ஆய்வாளரின் மனதில் அந்த பயங்கரம் விரியத்தொடங்கியது. நான்கு பேரின் முகத்தையும் உற்றுப் பார்த்தார். தண்ணீர் குடித்துவிட்டு, “சரி சொல்லுங்க” என்று சொன்னார்.
மீண்டும் அவன் சொல்லத் தொடங்கினான்: “கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மறுபடியும் செஞ்சோம். அவ அழுது கெஞ்சினாள் எவ்வளவோ திமிறினாள். ஆனாலும் எங்கள மீற அவளுக்கு உடம்புல வலு இல்ல. அப்ப எங்களுக்கு போத தலைக்கேறி இருந்திச்சி. இவள இப்படியே விட்டா நமக்கு தான் பிரச்சனை. தூக்கினு போயி பம்பையில கெடாசிடலாம்னு ரகோத்துதான் ஐடியா குடுத்தான். பம்பைக்கு தூக்கினு போவும் போது அவள் முனறிக் கொண்டே வந்தாள். பம்பை கரையில படுக்க வச்சம். சட்டுனு நான் தான் அவள் தலையை தண்ணிக்குள்ள அமுக்கினேன். ஏன் அப்படி செஞ்சன்னு தெரியல. அவ கால் ரெண்டும் படபடனு அடிச்சிகினு இருந்திச்சி. ரொம்பவும் திமிறினா. வலுகொண்ட மட்டும் அழுத்தினேன். கொஞ்ச நேரத்துல அவ தல தொங்கிடுச்சி அப்படியே தூக்கி பம்பையில கெடாசிட்டு எதுவும் நடக்காதது போல வீட்டுக்கு போயிட்டம்” என்று சதாசிவம் நடந்ததை சொல்லிக்கொண்டே வந்தான். அவனையே பார்த்துக்கொண்டு மற்ற மூன்று பேரும் நின்று கொண்டிருந்தனர். காவலர் ஒருவர் அதை எழுதிக்கொண்டே வந்தார். அந்தரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியைப் பார்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர் “எழவெடுத்தவங்களா எல்லாம் தான் பண்ணீங்க.உயிரோடவாவது அவள விட்ருக்கலாம் இல்ல” என்று கேட்டார். அவர்கள் நால்வரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். தலை குனிந்து நின்றிருந்தவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டே ஆய்வாளர் தன் பையில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்தபோது ஒரு சிறுவன் அவருக்கு தேனீர் கொண்டு வந்தான். அச்சிறுவனைப் பார்த்ததும் சதாசிவத்திற்கு தன் குழந்தையின் ஞாபகம் வந்தது. கண்களில் நீர் திரள அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற மூவரும் சதாசிவத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். மனைவியின் முகம் அவன் மனத்திரையில் வந்துகொண்டே இருந்தபோது ஆய்வாளர் குடித்து முடித்த தேனீர் குவளையுடன் அந்தச் சிறுவன் படி இறங்கிக் கொண்டிருந்தான். வெளியில் வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது.
.
மழை ஓய்ந்து குளிர் காலம் தொடங்கியபோது சாந்தியின் நினைவுகள் அனைவரது எண்ணங்களிலும் தனது வண்ணத்தை மெல்ல இழக்கத் தொடங்கியது. ஆனாலும் முருகன் அதிலிருந்து வெளிவர முடியாமல் தனிமையிலேயே இருக்க ஆரம்பித்தான். எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபாடு கொள்ளாமல் திண்ணையே கதியாகக் கிடந்தான். எப்படியாவது அவனை தனிமைத் துயரில் இருந்து வெளியேற்றிவிட நினைத்த கௌரி சித்தி “ இன்னொரு முற சாமியாரப் போய் பார்த்துட்டு வரலாமா” என்று அவனிடம் கேட்டாள். அவரிடம் போகவேண்டும் என்று விரும்பாததால் அவன் உறுதியாக வேண்டாம் என்று மறுத்து விட்டான். மேலும் தன் சித்தியிடம் “ மாமாவ அமைதியா இருக்கச் சொல்லுங்க சித்தி. வெள்ளிக்கிழமை சந்தைக்கு நம்மூருக்கு வந்த சதாசிவத்தின் பொண்டாட்டிய அசிங்க அசிங்கமா திட்னாறாம்” என்று சொன்னான். கௌரி சித்தி எதுவும் பேசாமல் ஆழ்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “ அவன் அப்படி செஞ்சதுக்கு அந்த பொண்ணு என்ன செய்யும் பாவம்” என்று சொல்லிக் கொண்டே திண்ணையில் இருந்து இறங்கி தெருவிற்குச் சென்றான். இருநாய்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொண்டே அவனைக் கடந்து தெருவில் ஓடிக்கொண்டிருந்தன.

5 comments:

 1. நாவினால் வெளிவரும் வார்த்தை மனசை சஞ்சலப்படுத்துவது மட்டும் இல்லை. சில நேரம் ஆளைக்கூட இரக்கமில்லாமல் கொன்றுவிடுகிறதே. நல்ல (கதை அல்ல)வாழ்வு.
  நன்றி.

  nampuzhuthi.blogspot.com

  ReplyDelete
 2. மிக்க நன்றி டேனியல்.

  ReplyDelete
 3. விஸ்ட் :
  http://rajamelaiyur.blogspot.com/2011/08/2g.html

  ReplyDelete
 4. என்னவளே
  மதுவும் மாதுவும்தான்
  மனிதனைக் கெடுக்கும்
  போதை என்று சொன்னேன்

  அடடா
  அவைகளை விடவும்
  கொடுமையான போதை
  புகழ் போதை! என்கிறாய்

  ReplyDelete