Saturday, February 19, 2011

ஊர் திரும்புதல்

இந்த ஜனவரியில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைகளின் பொருட்டு அருகாமை நகரங்களுக்கு தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன். என் சிறுபிராயத்திலிருந்தே நகரங்கள் எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. நகரத்தில் கால் வைத்தவுடன் எப்போது என் ஊருக்கு திரும்புவது என்ற யோசனையை உடனேயேத் தொடங்கிவிடுவேன். என் பிறந்த மண்ணில் ஏதோவொரு சந்தோஷமும் சுதந்திரமும் கிடைப்பதாக உணர்ந்ததே இதற்கு காரணமாக இருக்கக் கூடும்.

ஒருவனுக்கு பிறந்த ஊர் என்பது வெரும் பிறந்த இடத்தை மட்டும் குறிக்கின்ற ஓர் இடம் மட்டுமே என நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் பிறந்த ஊர் என்பது நம் முன்னோர்களின் பன்பாட்டு கலாச்சாரங்களை தன் வழியாக அடுத்த தலைமுறைக்கு கடத்துகிற, செழுமைபடுத்துகிற ஓர் களமாகவே இருக்கிறது. தலைமுறைகளுக்கிடையிலான பிரச்சனைகளை அது தன் ஆடுகளத்தில் வைத்தே அனைவருக்குமான ஓர் தீர்வை கண்டுபிடிக்கிறது. அந்த ஒரு தீர்வோடு திருப்தி அடைந்துவிடாமல் தொடர்ந்து பல்வேறு வழிகளில் அதை மேலும் மேலும் செம்மை படுத்திக்கொண்டே இருக்கிறது.

நீங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ளவர்களோடு உரையாடத் தொடங்கிய அடுத்த சில நொடிகளில் அவர்கள் தங்களின் ஊரைப்பற்றிய பல கதைகளை கூறத்தொடங்குவர். நன்கு கவனித்தால் அக்கதைகளில் அவ்வூரின் வரலாறும் ஒரு சரடைப்போல பிணைந்தே இருப்பதை சுலபத்தில் உணர்ந்துவிட முடியும். அக்கதைகளின் வயதை ஒருபோதும் நம்மால் தீர்மானிக்கவே முடியாது. ஏனெனில் அவை பல தலைமுறைகளைக் கடந்தும் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றன.

மேலும் எல்லா ஊர்களிலும் காலத்தால் அழிக்கமுடியாத நிறைய தடயங்களை நாம் காணமுடியும். அவை குளங்களாக, தெருக்களாக, வீடுகளாக, கோவிலாகக் கூட இருக்கும். ஏன் சில இடங்களில் அவ்வூரின் வரலாற்றை அவ்வூரைச் சுற்றியுள்ள பாறைகளும் குன்றுகளும் இன்றளவும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இரட்டை சுனை, பாம்படிச்சான் பாறை, கோட்டிக் கல் என்று பாறைகளின் பல்வேறு உருவங்கள் இன்றளவும் என் ஊரின் வரலாற்றை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடத்திக்கொண்டே இருக்கின்றன. பச்ச புள்ளா குளம் என்று என் ஊரில் உள்ள ஓர் குளத்தின் கதையை நான் மிக விரிவாக புதுஎழுத்து எனும் சிறுபத்திரிக்கையில் எழுதியிருக்கிறேன்.
ஆனால் நாம் நவீனம் எனும் பேரால் கிராமங்களின் முகங்களை தொடர்ந்து சீரழித்து வருகிறோம். கொஞ்சமும் சுரணை இல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பாறை ஓவியங்களை சிதைத்துவிட்டு கல்குவாரிகள் நடத்த நம் அரசுகள் தொடர்ந்து அனுமதிகள் வழங்கிக்கொண்டிருப்பதன் பின் உள்ள அரசியலையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனக்கு நகரம் பெரும் மயானமென்றே தோன்றுகிறது. அது தன்னை நோக்கி வருகின்றவர்களை இழுத்து மென்று வெறும் சக்கையாக்கி கீழே துப்புகிறது. ஆகவேதான் நான் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்புகிறேன். பிறந்த குழந்தை தன் தாய் மடி தேடி ஓடி வருவதைப் போன்று ஒவ்வொருவரும் தன் பிறந்த ஊரைத் தேடி ஓடிவருவதன் நுட்பம் இதுவே. நிறைய நண்பர்கள் சொல்வதுபோல நகரம் வாழ்வதற்கான அனைத்து வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறது எனும் கூற்றை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. நிறைய வாசல்கள் இருக்கலாம். எண்ணற்ற வழிகள் இருக்கலாம். ஆனால் இருக்கவும் புழங்கவும் ஒரே ஒரு வீடு அவசியம் தானே? அந்த ஒரு வீடு தான் நம் பிறந்த ஊர். நகரத்தின் வாழ்க்கை பணத்தால் எப்படி பிணைக்கப் பட்டிருக்கிறதோ அதுபோல் பிறந்த ஊரில் நமது வாழ்வு அன்பை மையமாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

3 comments:

 1. நகர வாழ்வை, நகரத்தை வெறுத்தல் என்பது ஒரு பக்கமான குறுகிய பார்வை

  ReplyDelete
 2. என்னவளே
  முன்பெல்லாம் அமைதிதேடி
  நகர நரகத்திலிருந்து தப்பித்து
  கிராமம் நோக்கி செல்வேன்!

  அடடா
  இப்போது என்கிராமமும்
  தன்முகம் தொலைத்துவிட்டு
  நரகமாக அல்லவா மாறிவருகிறது!

  ReplyDelete
 3. This post published in Thinamani newspaper
  8.5.2018
  அருமை..👌👍

  ReplyDelete