Sunday, March 6, 2011

முறுக்காத்தி


எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.தெருவில் போட்டிருந்த ஷாமியானாப் பந்தலில் எரிந்து கொண்டிருந்த குழல்விளக்கைச் சுற்றி நிறைய சிறு பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.ஈசானத் திக்கில் மேகம் திரண்டிருந்தது.தெருத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த சித்தாத்தூர் பண்டாரம் சேங்கிட்டியை எடுத்து அடித்தான். அதிலிருந்து பீரிட்டெழுந்த ஒலி சாவு வீட்டின் துக்கத்தை மேலும் கூட்டிக் காட்டியது.சேங்கிட்டியை கீழே வைத்துவிட்டு சங்கை எடுத்து வாயில் வைத்து ஊதினான்.தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த சங்கொலி வீடு முழுக்க பட்டு எதிரொலித்தது.அந்த சங்கொலி அனைவர் மனதிலும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.தெருவிலும் திண்ணையிலும் சிலர் அமர்ந்திருந்தனர்.நாட்டாக்காரர் வீட்டோரம் ஆறுமுகமும் அவரது மாமனாரும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். காளி அனைவருக்கும் தேனீர் கொடுத்துக் கொண்டிருந்தான். பண்டாரம் சங்கு ஊதுவதை நிறுத்திவிட்டு தேவாரம் பாட ஆரம்பித்தான்.

கூடத்தில் கிழக்கு பார்த்தவாறு ஐந்து முழு வாழை இலை போடப்பட்டிருந்தது.நடப்பிற்கு வந்திருந்த உறவினர்கள் கொண்டுவந்திருந்த இனிப்பு கார பலகாரங்களை இலைகளில் எடுத்து வைத்தனர். “நேரம் ஆவுதில்ல சட்டுபுட்டுனு படைக்கர வேலய பாருங்க” என்று துணுராமுட்டு பாட்டி கூறினாள். அதற்கு காவேரி பெரியம்மா, “போயி மொதல்ல பார்வதியை கூட்டிட்டு வாங்க” என்றாள்.சென்னகுனத்திலிருந்து வந்த கலா அக்கா போய் பார்வதியை அழைத்து வந்தாள்.அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தன. கை நிறைய கண்ணாடி வளையலும் தலை நிறைய பூவும் வைத்திருந்தார்கள். குங்குமம் கொண்டு நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருந்தனர். அவளைப் பார்ப்பதற்கு நாடகங்களில் வரும் அம்மனை பார்ப்பதைப் போல இருந்தது. தெரு நடையில் ஒப்பாரி வைத்து அழும் பெண்களையும் தெருவில் அமர்ந்திருப்பவர்களையும் காவேரி பெரியம்மா சென்று படைக்க அழைத்தாள். படையல்களுக்கு முன் புறம் மூன்று இடங்களில் கற்பூரத்தை வைத்து காவேரி பெரியம்மா கொளுத்தினாள். அவளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த கொளாப்பர் வீட்டு மாமா, “சொந்தகாரங்களாம் வந்து விழுந்து கும்புடுங்க” என்று சொன்னார். முருகனின் புகைப்படத்தருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த பார்வதியை காவேரி பெரியம்மா, “முருகன் எங்கயும் போயிடலடி அவன் சாமியா மாரி நம்மோடத்தான் இருக்கிறான். வா வந்து உழுந்து கும்புடு” என்றாள். வேறு சிலரும் அவளைப் பார்த்து ,” அதயே நெனச்சிக்குனு இருந்தா எப்புடிமா? உம் புள்ளைகளுக்கு நீதான ஆறுதல் சொல்லனும். வா வந்து உழுந்து கும்புடு” என்றனர். அவள் எழுந்து வந்து விழுந்து வணங்கும் போது அவளையும் மீறி அழுகை வந்தது.உடைந்து அழுதாள். அருகிலிருந்தவர்களும் ஆத்திரம் தாளாமல் அழுதனர். படையல் அனைத்தயும் ஒன்றாக்கி ஒரு சருவத்தில் போட்டு அகிலாண்டம் பெரியம்மா அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பிடி அள்ளிக்கொடுத்தாள். சிலர் வேண்டாமென மறுத்தனர்.தெருவில் சேங்கிட்டி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

மதுரை அருகே, சிலைமானில் ஒரு தனியார் பஞ்சு மில்லில் மேற்பார்வையாளராக இருக்கும் முருகன் பணிமுடிந்து, ராமேஸ்வரம் பரமக்குடி theethதேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது மணல் லாரியில் அடிப்பட்டு அங்கேயே உயிர்பிரிந்த போது லேசாகத் தூறத் தொடங்கி இருந்தது.தகவல் பரவிய சிறிது நேரத்திற்குள் கூட்டம் கூடிவிட்டது. விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த தேனீர் கடைக்காரர் மில்லுக்கு தகவல் தெரிவிக்க, மில் மேனேஜர் மதுரை எஸ்.எஸ்.காலணியில் இருக்கும் முருகனின் மாமா ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தார்.தகவலை கேட்டவுடன் முருகனின் மாமாவிற்கு உடல் நடுங்கத் தொடங்கியது .நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவர் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சிலைமான் நோக்கி புறப்பட்டார்.
சிலைமான் காவல் நிலையத்திலிருந்து உதவி ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் வந்துவிட்டிருந்தனர். முருகனின் முகத்தைத் தவிர, உடலின் மற்ற பகுதிகள் சக்கரத்தில் சிக்கி மிகவும் நைந்திருந்தன.ஆறுமுகம் அங்கு வரவும் பக்கத்து ஊர்களில் பணி புரியும் அவரது நண்பர்கள் அங்கு வரவும் சரியாக இருந்தது. லாரியின் அடியில் சிக்கி நிலைகுத்தி இருக்கும் முருகனின் விழிகளை பார்த்தவுடன் ”டேய் முருகா” எனக்கூறி அவர் வெடித்து அழுதார். போலிஸார் சாலைப் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். சிலர் பிரேதத்தை அப்புறப்படுத்தி ஆம்புலன்சில் ஏற்ற முயன்று கொண்டிருந்தனர். அதைப் பார்க்க பார்க்க அவருக்கு குமட்டிக் கொண்டு வந்தது.நண்பர்கள் அவரை கைத்தாங்களாக அழைத்து வந்து டீ கடை பெஞ்சில் அமர வைத்தனர். அவரைச் சுற்றியும் கூட்டம் கூடத்தொடங்கியது.சிறிது நேரம் முருகன் சடலத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பின் நண்பர்களில் இருவரை அழைத்து தன் குடும்பத்தையும் முருகனின் குடும்பத்தையும் ’ஊரில் சிவகாமி பாட்டி இறந்துவிட்டார்’ என்று சொல்லி கண்டாச்சிபுரத்திற்கு அழைத்துச் செல்லக் கூறிவிட்டு கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்தார். இந்த தகவலை அவர்களிடம் ஊருக்கு போகும் வரை தெரிவிக்க வேண்டாம் என்றும் சொன்னார். பிரேதத்தை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் மதுரை நோக்கி சென்றதும் கூட்டம் மெல்ல களையத்தொடங்கியது. ஊருக்கு தகவலை சொல்ல நினைத்து தனது மாமனாரை தொடர்பு கொண்டான். எதிர் முனையில் தொடர்பு கிடைத்ததும்,” மாமா முருகன் ஆக்ஸிடண்ட்ல செத்துட்டான் “ எனக்கூறி கதறி கதறி அழுதார். எதிர் முனையில் ஏற்பட்ட ஓலம் மேலும் இவரை நிலைகுலையச் செய்தது. கட்டுக் கடங்காமல் இவர் அழுவதைப் பார்த்த நண்பர் ஒருவர் கைபேசியை வாங்கி தகவலை சொன்னார். ”உங்கள் மகளும் மருமகளும் மதுரையில் இருந்து புறப்பட்டு விட்டனர் இன்னும் அவர்களுக்கு தகவல் சொல்லவில்லை. அங்கு வந்த பின் சொல்லிக்கலாம்” என்று கூறி தொலைபேசியை அனைத்தான்.


கண்டாச்சிபுரத்திலிருந்து அடிக்கடி காளிதான் இவரை தொடர்பு கொண்டிருந்தான். அவனது பேச்சு இவருக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நண்பர்கள் சிலர் அவரோடு உடன் இருந்தனர். ஐதராபாத்தில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவனை தான் தான் வலுக்கட்டாயமாக மதுரைக்கு அழைத்து வந்து சாகடித்து விட்டோம் என்று நினைத்தபோது அவருக்கு மீண்டும் அழுகை பீரீட்டது. ”என்னடா ஆறா?” என்றனர் நண்பர்கள். ”அவனை நான் தாண்டா மதுரைக்கு கூட்டிவந்து சாகடிச்சிட்டேன்” என்று கூறி மீண்டும் கதறி அழுதார். அவரை தேற்றுவதற்கு வழி தெரியாமல் அவர் நண்பர்கள் விழித்தனர்.
யார் யாரையோ தொடர்பு கொண்டு பிரேத பரிசோதனையை துரிதப் படுத்த சிபாரிசு செய்யும் படி வேண்டினார். மருத்துவமனை நிர்வாகம் எதற்கும் அசைந்து கொடுக்காமல் தன்போக்கில் நத்தையைப் போன்று ஊர்ந்து கொண்டிருந்தது.மறுநாள் மதியம் 12 மணி அளவில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் அவரிடம் தரப்பட்டது. கூடவே பாலித்தின் கவரில் வைத்து முருகன் வைத்திருந்த கொஞ்சம் பணம், அவன் அணிந்திருந்த நெலிந்த ஒரு மோதிரம் மற்றும் அனைத்து வைக்கப் பட்டிருந்த அவனுடைய கைபேசி ஆகியவற்றை காவலர் ஒருவர் கொடுத்தார். ஆறுமுகம் மதுரையை விட்டு கிளம்பும் போது மணி ஒன்றாகி விட்டிருந்தது. எப்போதும் மழை வரக்கூடும் என்பது போல வானம் மேக மூட்டமாகவே இருந்தது. துவறங்குறிச்சியை தாண்டியபோது வாகன ஓட்டுனர் தேனீர் அருந்த இறங்கிச் சென்றார். இவர் பாலித்தின் கவரில் இருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தார். அதை ஆன் செய்தார். ஆறு பேர் முருகனை அழைத்திருந்தனர்.அழைப்புகள் ஒவ்வொன்றாகப் பார்த்தார். பின் குறுஞ்செய்திகளைப் பார்த்தார்.நான்கு குறுஞ்செய்திகள் வந்திருந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தார். தமிழ் வார்த்தைகள் அப்படியே ஆங்கிலத்தில் ஒலிபெயர்ப்பு செய்யப் பட்டிருந்ததால் குறுஞ்செய்திகளை அவரால் சுலபத்தில் படிக்க முடியவில்லை. மெல்ல எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தார்.

குறுஞ்செய்தி -1
செல்லமே நீ எனக்கு தினமும் வேண்டுமடா. ஒவ்வொரு நாளும் நீ வருவாய் என்ற எதிர்பார்ப்பில் தெருவைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன். உண்மையில் என் தெரு வளர்ந்து நீண்டுகொண்டே இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. காமத்தை உணரக் கற்றுக் கொடுத்தவனுக்கு என் முத்தங்கள். -கவிதா

குறுஞ்செய்தி : 2
நாளை அவர் வியாபார நிமித்தமாக வெளியூர் செல்லுகிறார். எனக்காக நாளை வரமுடியுமா? நீ தீண்டத் துடிக்கிறது என் தேகம். உன் ஒப்புதலை உன் பிரியத்தின் மொழியால் உடனே சொல் செல்லமே.
-உன் அன்பு சாந்தி.

குறுஞ்செய்தி : 3
யாருக்கோ அனுப்ப வேண்டிய குறுஞ்செய்தியை எனக்கு அனுப்பி இருக்கிறாய்? யார் அந்த சாந்தி? எனக்கு குழப்பமாக உள்ளது. என்னை குழப்பத்தில் இருந்து விடுவி செல்லமே.
-கவிதா

குறுஞ்செய்தி : 4
இன்று மாலை நான்கு மணிக்குமேல் தான் புறப்படுகிறார். மில்லில் இருந்து முன்னமே கிளம்பி அதற்கேற்றார் போல் வாடா செல்லம். I miss u da . நாளை நேராக வீட்டிற்கு வந்துவிடாதே. நான் அழைத்த பிறகு வா.
-உன் அன்பு சாந்தி

குறுஞ்செய்திகளை வாசிக்க வாசிக்க அவருக்கு தலை சுற்றியது. மனம் கணக்கச் செய்தது. நாக்கு வறண்டது போல இருந்ததால் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் பருகினார்.மீண்டும் அவர் மனத்திரையில் சக்கரத்தில் சிக்கியிருந்த முருகனின் கண்கள் தோன்றி மறைந்தன. கைபேசியில் இருந்த அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் ஒன்றுவிடாமல் அழித்து அதை பாலித்தின் கவரிலேயே போட்டு வைத்தார். ஓட்டுனர் வந்து வாகனத்தை இயக்கி புறப்படும் போது இவரிடம் கேட்டார்: “ சார் ஏதாச்சும் கொஞ்சமாவது சாப்பிடுங்க. எவ்ளோ நேரம் தான் இப்படியே இருப்பீங்க?”. அவர் கைகளை ஆட்டி வேண்டாம் எனக்கூறி போகச் சொன்னார்.

”படைக்க கூப்பிடுறாங்க எந்திரிங்க” என்று மனைவி அவரைச் சீண்டி கூப்பிட்டதும்,சற்று கண் அயர்ந்தவர் தூக்கம் களைந்து கண்களை கசக்கிக் கொண்டு நினைவுகளில் இருந்து மீண்டு வீட்டிற்குள் சென்றார். பண்டாரம் சேங்கிட்டியை வேகமாக அடித்துக்கொண்டிருந்தான். முருகனின் மூன்று வயது மகள் பண்டாரத்தின் அருகில் இருந்த சங்கையே பார்த்துக்கொண்டிருந்தாள். கைநிறைய வளையல்களோடும், நெற்றி நிறைய குங்குமமும் வைத்துக்கொண்டு பார்வதி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் பார்வை சுவற்றை வெரித்தப்படி இருந்தது. காவேரி பெரியம்மா மீண்டும் சூடம் ஏற்றச் சொன்னாள். மறுபடியும் எல்லோரும் கீழே விழுந்து வணங்கினர்.

இரவு மணி மூன்றாக கொஞ்ச நேரமே இருந்தது. யாரும் தூங்கக்கூடாது என்று மணி அத்தை கூறியதால், நடப்பிற்கு வந்தவர்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ”பால் சொம்ப எங்க காணோம்?” என்று காவேரி பெரியம்மா கேட்டாள். ”தே இருக்குது அண்ணி” என்று சொல்லிக்கொண்டே தெருவில் அமர்ந்திருந்த காளி எழுந்து வந்து எடுத்துக்கொடுத்தான். தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த பார்வதியை அவனால் அந்தக் கோலத்தில் பார்க்க முடியவில்லை. “உன்ன வெறும் நெற்றியோடும் கூந்தலில் பூ இல்லாமலும் எப்படித்தான் பார்க்கப் போகிறேனோ” என்று அவளுக்கு தான் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்திருப்பாளா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். வேறு யாராவது பார்த்திருப்பார்களோ என்றும் நினைத்து கலவரப் பட்டது அவனது மனம். ”இன்னும் கொஞ்சம் பால ஊத்த சொல்லுடி, தாலியை கழட்டி அதுலதான போடனும்” என்று காவேரி பெரியம்மா கூறினாள். தாலி சரடு என்றதும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு காளியுடனான முதல் புணர்ச்சியின் சித்திரம் மிகத் துள்ளியமாக பார்வதியின் மனத்திரையில் விரியத்தொடங்கியது. இச்சூழலில் அவன் குறித்த எண்ணத்தை தவிர்க்க அவள் பெரிதும் சிரமப்பட்டாள்.ஆனால் அவளால் நினைக்காமலும் இருக்க முடியவில்லை. முருகனின் புகைப் படத்திற்கு அருகில் ஏற்றி வைக்கப் பட்டிருந்த ஊதுபத்தியின் வாசனை அவளுடைய ஞாபக அடுக்குகளை மெல்ல கலைத்துப் போட்டது.
திருமணம் முடிந்து அவள் கண்டாச்சிபுரம் வந்தபோது கல்லூரி படிப்பு முடித்துவிட்டு, ஒரு தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக இருந்தான் காளி . எந்நேரமும் புன்னகை கொப்பளித்துக் கொண்டிருக்கும் முகம். யாராக இருந்தாலும் கூச்சமின்றி பேசிவிடும் துணிச்சல். இந்த ஊருக்கு வந்த அன்றே, பல நாள் பழகியதைப் போன்று இவளிடம் பேசினான். படிக்க தினசரிகளும், கதைப்புத்தகங்களும் கொடுத்து புதிய இடம், புதிய மனிதர்கள் என்பதை அவள் உணராத மாதிரி பார்த்துக்கொண்டான்.திருமணம் முடிந்த பத்தாம் நாள் ஜவுளித் தொழில் நுட்பத்தில் புதிய பயிற்சிக்காக முருகன் ஆறு மாதம் நொய்டாவிற்கு அனுப்பப் பட்டான். ஊரில் தங்கி இருந்த அடுத்த ஆறு மாதங்களில் காளியை அவளுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. முருகன் மதுரைக்கு சென்ற பின் அவளுக்கு ஏற்பட்ட தனிமையை தன் குறும்பும் சிரிப்பும் கொப்பளிக்கும் உரையாடல்கள் மூலம் காளி தான் இட்டு நிரப்பினான்.

பயிற்சி முடிந்து திரும்பிய முருகனை மதுரையில் குடும்பம் வைக்கச் சென்றபோது காளியும் உடன் சென்றான். ஒரு வாரம் கழித்தே ஊருக்கு திரும்பினான். மூன்றாம் நாள் அவர்களை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போனார் ஆறுமுகம். முருகனுக்கு பக்கத்திலேயே வந்தாலும் காளியின் மீது பார்வையை ஓடவிட்டபடியே இருந்தாள் பார்வதி . இவனுக்கும் அவளை அடிக்கடி பார்ப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கவே செய்தது. அவளுக்கும் அது சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்கடுத்த நாட்களில் அவர்கள் வைகை அணை, திருப்பரங் குன்றம் ஆகிய இடங்களுக்கு சென்றனர். முருகனை விட காளியிடம் தான் அவள் அதிகமாக பேசினாள். முருகனுக்கோ ஆறுமுகத்துக்கோ அவர்களின் நடவடிக்கை மீது எந்த சந்தேகமும் எழவில்லை. மறுநாள் அங்கிருந்து காளி புறப்பட்ட போது அவளது விழிகளில் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத துக்கம் அப்பிக் கிடந்ததை அவனால் உணர முடிந்தது. அப்போதிலிருந்தே அன்பின் கொடி அவர்கள் இருவரையும் சுற்றி படர ஆரம்பித்திருந்தது.

அவர்களுக்கு இடையிலான தூரத்தை கைபேசி இல்லாமல் ஆக்கியது. அவர்களின் நட்பு தொடர் விசாரிப்புகள் மூலம் தொடர்ந்து தனது கிளைகளை பரப்பிய படியே இருந்தது. தொலைபேசி உரையாடல் வழி இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்க ஆரம்பித்திருந்தனர். குறுஞ்செய்திகள் மூலம் அவர்களது நேசம் காதலாக மாறியது. எப்போதிலிருந்து என்று அவர்களுக்கே தெரியாமல் மெல்ல அவர்களுக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்து முடிந்திருந்தது.
எப்போதாவது அவள் ஊருக்கு வரும்போது,விழுப்புரத்திற்கு வந்து அவளை அழைத்துச் செல்லும்படி முருகன் இவனுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிப்பான். இவன் விழுப்புரம் சென்று அவள் கொண்டுவந்த உடமைகளை எடுத்துக்கொண்டு அவளையும் அழைத்து வருவான்.இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அவர்களிடையே இருந்த இடைவெளியை மெல்ல குறைக்கச் செய்தது. மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்த போது, அவனுள் காமத்தின் நாக்கு துடிக்கத் தொடங்கியது. அவளாளும் அவனது உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் அவளுக்கு ஒருவித பயம் இருந்தது. யாருக்காவது தெரிந்தால் என்ன நடக்கும் என்ற காட்சி அவளது மனத்திரையில் விரிவுகொண்டது. அதனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். தன்னுடைய இந்த அவஸ்தையை அவள் உணர்கிறாளா இல்லையா என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது.

அந்த வருட பொங்கலுக்கு ஊருக்கு முருகனோடு வந்தாள். அவள் ஊருக்கு வருவதற்குள்ளாகவே தன் குறுஞ்செய்திகள் மூலம் அவளை திக்கு முக்காடச் செய்தான் காளி.மற்றவர்களைப் போல அவளுக்கோ காளிக்கோ பண்டிகை கொண்டாட்டம் உவப்பாக இல்லை. பொழுது நீண்டு கொண்டே செல்வதாகப்பட்டது காளிக்கு. ”செல்லமே தொடர்ந்து அலைக்கழிக்காதே. காத்திருப்பின் வலி உனக்கும் புரியும் தானே? பிறகேன் என்னை அமைதியால் கொல்கிறாய்?உன்னை எனக்கு கொடுக்க விரும்பினால் இம்முறை கொடுத்துவிட்டு செல். இல்லை எனில் நீயும் நானும் நிரந்தரமாகப் பிரிவோம். இந்த முடிவில் எதை தேர்ந்தெடுத்தாலும் நான் கட்டுப் படுகிறேன் ” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினான். அந்தக் குறுஞ்செய்தி அவளுக்கு கலவரத்தை ஏற்படுத்தியது. நிரந்தரமாகப் பிரிவோம் என்றால் என்ன அர்த்தம் என்று அவள் தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டாள். மனம் படபடப்புடனேயே இருந்தது. எந்த வேலையிலும் ஈடுபாட்டுடன் அவளால் ஒன்ற முடியவில்லை. மற்றவர்களுடன் பேசவும் அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஒருவித சங்கடத்துடனேயே அவனுக்கு அவள் ”இம்முறை நிச்சயம் தருகிறேன்.நான் கொண்டுள்ள அன்பை தயவு செய்து சந்தேகிக்காதே. உன்னைப் போல நான் தனியானவளாக இருந்தால் என்றோ என்னை உனக்கு அற்பணித்திருப்பேன் செல்லமே. புரிந்து கொள். சரியான தருணத்தில் நிச்சயம் உன்னை அழைப்பேன். தயவு செய்து பிரிவு பற்றி மறுபடி பேசாதே” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். அவளின் குறுஞ்செய்தி அவனுள் மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அக்குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தான்.
அன்று இரவு அனைவரும் உறங்கி விட்டிருந்தனர். காளி கைபேசியை வழக்கம் போல பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளிடம் இருந்து அழைப்பு வந்து துண்டிக்கப்பட்டபோது அவனுள் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. இவன் ”எங்க இருக்க செல்லமே” என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.”வீட்டில் தான் இருக்கிறேன். நீ எங்க இருக்கே? என் அன்பை நிரூபிக்க நான் எங்க வரட்டும் செல்லமே?” என அவள் அனுப்பி இருந்தாள்.அச்செய்தியை படித்தவுடன் பட படப்பாக இருந்த்து அவனுக்கு. அந்தரத்தில் பறப்பது போலவும் உணர்ந்தான். இவனது மனத்திரையில் தோதான இடம் எதுவாக இருக்கும் எனும் சித்திரம் மெல்ல விரிவடைந்தது. ஒவ்வொரு இடமாக யோசித்து யோசித்து நிராகரித்தப்படி வந்தவன் அவள் வீட்டிற்கு பின்புறம் உள்ள ”தொட்டி கழனிக்கு வா” என்று செய்தி அனுப்பினான்.

தொட்டி கழனிக்கு செல்லும் பாதை நிலவொளியில் மங்களாகத் தெரிந்தது. இவன் அவள் வீட்டைப் பார்த்தபடியே, தெருவில் இருந்து இறங்கி, தொட்டி கழனிக்கு செல்லும் ஒற்றை அடி பாதையில் ஏறி வடக்கு நோக்கி நடந்தான். அவள் வருகிறாளா என்று அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி நடந்து தொட்டி கழனியின் மோட்டார் கொட்டகையை அடைந்தபோதுதான், அவள் தொட்டி கழனி ஒற்றை அடிப் பாதையில் ஏறிக்கொண்டடிருந்தாள். தவளைகள் தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தது. இந்நேரத்திற்கு இங்கு யாரும் வந்துவிடக் கூடாது என்று அவன் பல சாமிகளை வேண்டிக்கொண்டான். இருந்தும் அவனுள் பதற்றம் கூடிக்கொண்டே இருந்தது. ஆனால் இனம்புரியாத ஓர் சந்தோஷத்தையும் அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
மோட்டார் கொட்டகையின் கீழ் அருகம் புல் தம தமவென்று வளர்ந்திருந்தது. அதன் மீது இருவரும் அமர்ந்த போது நிலவு அவர்களுக்கு கிழக்கு திசையிலிருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. சிறிது நேர மௌனத்திற்கு பின் ”ஏன் காளி இப்படி ஆன” என்று கேட்டாள். அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். மூச்சு காற்றில் உஷ்ணம் கூடியிருந்ததை இருவரும் உணர்ந்தனர். ”பதில் சொல்ல மாட்டீயா?” என்று அவளே மறுபடியும் கேட்டாள். ”எனக்கு நீ வேணும்”, என்று மட்டும் சொல்லிவிட்டு நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். நேரம் கடந்து கொண்டிருந்தது. தெருவிளக்கின் கீழ்படுத்திருந்த நாயின் குரைப்பொலி கேட்டு அடங்கிய போது அவள், ”நான் தான வேணும் எடுத்துக்க காளி” என்று கூறி அவனது தலையை வருடிக் கொடுத்தாள். தவளைச் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களின் நிர்வாணத்தின் மீது நிலவொளி மெல்ல ஊர்ந்து சென்றது. கிறக்கத்தின் உச்சத்தில் இருந்த போது அவன் உனக்கு ”நா தாளி கட்டி எங்கூட வச்சிக்கிடட்டா? ”என்று கேட்டான். அவள் அவனை ஊடுருவிப் பார்த்தாள். ”லூசா நீ” என்று அவனது காதோரம் சிணுங்கலாகக் கூறினாள்.மீண்டும் அவன் ”என்னை மாமான்னு ஒரு தடவை கூப்பிடு” என்று கூறிய படியே வேகத்தோடு இயங்க அவள் தாலி சரடு இவன் கழுத்தில் எப்படியோ மாட்டிக் கொண்டது. ”ஐ இது கூட நல்லாதான் இருக்கு” என்று சொல்லி அந்நேரத்திலும் அவளை சீண்டினான்.மறுபடியும் தெரு நாயின் குரைப்பொலி கேட்டபோது அவள் எழுந்து, ”இப்ப திருப்தி தான காளி” என்று கேட்டாள். அவன் புன்சிரிப்பை பதிலாகத் தந்தான். ஆடைகளை உடுத்திக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக சற்று இடைவெளி விட்டு நடத்து சென்றனர். ”டேய் சேகரு கொழுந்தன் சேலை எடுத்துகினு வந்துட்டீயா?” என்று காவேரி பெரியம்மா கேட்ட போது நினைவு அறுபட்டவளாக பார்வதி மெல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். ஆனாலும் அவளது உடம்பு மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது.

தாலி வாங்கும் சடங்குகள் மெல்ல நிகழ ஆரம்பித்தன. காவேரி பெரியம்மாவே முன்நின்று அனைத்தையும் செய்தாள். பால் சொம்பை கேட்டு பக்கத்தில் வைத்துக்கொண்டாள். மீண்டும் பார்வதியுடன் சேர்ந்து கைகளை கோர்த்துக் கொண்டு வட்டமாக அமர்ந்து அனைவரும் அழத் தொடங்கினர். தாலி வாங்குவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டாரம் எழுந்து சென்று அக்கம் பக்கத்து வீடுகளின் கதைவைத் தட்டி, பெண்களை அழைத்து வந்தான். சுமங்களிகள் வந்து கூடத்தில் அமர்ந்தனர். மெல்ல அவளின் கூந்தலில் இருந்த பூவை எடுத்தனர். பின் கையில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தனர். எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அவள் முகம் இறுகிக் காணப்பட்டது. அவள் அனைத்தையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவளது மாங்கல்யத்தை கழற்றி அருகில் இருந்த பால் சொம்பில் போட்டனர். அவளுடைய சின்ன அண்ணி மட்டும் அதைப் பார்க்கச் சகிக்காமல் விசும்பிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து இவளுக்கும் கண்களில் நீர் திரண்டது. பின் அவளுக்கு தலைக்கு ஊற்ற அழைத்துச் சென்றனர்.

தலைக்குளித்து வந்தபின் பிறந்த வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வந்து அவளுக்கு சேலை போட்டனர். அதில் ஒன்றை அணிந்து கொண்டு வினாயகர் கோயிலுக்கு செல்லும் போது காளிதான் பெட்ரோமாக்ஸ் விளக்கை எடுத்துக் கொண்டு முன்னாள் சென்றான்.கோயிலிலும் அவனே படைத்தான்.குறைந்த வெளிச்சத்தில் அவளைப் பார்க்க விகாரமாக இருந்த்து. ”அவனுக்கு விதி முடிஞ்சுபோச்சி அல்ப ஆயுசுல போய்ட்டான். அதுக்கு இவள ஏன் இப்படி அலங்கோலமாக்கனும்” என்று தனக்குள்ளேயே முனகிக் கொண்டான். பின் வீட்டிற்கு திரும்பியதும் வெளியே வைக்கப்பட்டிருந்த நெருப்பையும் உலக்கையையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தாண்டினாள். பிறகு புதுவீட்டிலிருந்து பிடித்து வரப்பட்ட பசுமாட்டை கழுவி பொட்டிட்டு கற்பூரம் கொளுத்தி, அரிசியும் வாழைப் பழமும் கொடுத்துவிட்டு நிமிர்த்து நின்றவளைப் பார்த்து காவேரி பெரியம்மா மாட்டு வாலை மெல்ல கடிக்கச் சொன்னாள். அவளும் அவ்வாறே செய்துவிட்டு வீட்டிற்குள் நுழைத்தாள். வீட்டோரம் கன்றுக்குட்டியை பிடித்தபடி நின்றிருந்த காளி, ”இந்த சடங்கெல்லாம் இன்னா மயித்துக்கு செய்றாங்களோ?” என்று பக்கத்தில் நின்றிருந்த ராசமாணிக்கம் பெரியப்பாவிடம் கேட்டான். ”போடா மரமண்டை ,உனக்கு மசுரு தெரியும்” என்று அவனை அதட்டினார். பண்டாரம் சேங்கிட்டியையும் சங்கையும் ஒரு பையில் போட்டு தோளில் மாட்டிக் கொண்டு புறப்பட்டான்.தெருவில் போடப்பட்டிருந்த சேர்களில் உறவினர்கள் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தனர்.கசப்புத் தலை முழுகி, திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று வந்த அன்று உறவினர்கள் அனைவரும் தங்களின் ஊர்களுக்கு புறப்பட்டனர்.

முருகனின் மரணத்திலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அவளுக்கு ஆறேழு மாதங்களுக்கு மேல் ஆனது. அதன் பிறகான ஒரு பௌர்ணமி இரவில் காளியை தன் வீட்டு தோட்டத்து புளிய மரத்திற்கு வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினாள் பார்வதி. எதற்கு வரச் சொல்கிறாள் என்ற சந்தேகத்துடனேயே சிறிது நேரத்தில் காளியும் வந்து சேர்ந்தான்.அவனுக்கு அவளின் நெருக்கமும் தேவையாகவே இருந்தது. இந்நிலையில் எப்படி அவளிடம் கேட்பது என்று அமைதியாக இருந்து விட்டான்.அவளே கூப்பிடவும் இவனுள் மீண்டும் காமத்தின் மொட்டு அவிழத்தொடங்கியது. நிலவொளி புளிய மரத்தின் கிளைகள் ஊடாக பாய்ந்து தரையில் பட்டு சிதறிக்கொண்டிருந்தது. இருளில் மறைவாக நின்று கொண்டு காளியிடம் பேசினாள். காளியும் தோதாக நின்று கொண்டான். அவனைப் பார்த்து “காளி உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்றாள். அவன் சரி என்பது போல தலை அசைத்தான். “ஓடி ஓடி இத்தன நாளா நீ செஞ்ச வேலைக்கு நா எப்படி கைமாறு செய்யபோறன்னு தெரியல காளி” என்றாள் அவள். துடித்துக் கொண்டிருக்கும் காமத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, ”இப்ப எதுக்கு அதப்பத்தி பேசுற. பொருமையா பேசிக்கலாம்” என்று கூறினான். மறுபடியும் அவள் காளியிடம் கேட்டாள்: “ நா ஒன்னு கேட்டா தப்பா நெனச்சிக்க மாட்டியே?” . “பரவாயில்ல கேளு“ என்றான் இவன். என்ன கேட்கப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு அவனிடம் இருந்தது. அவள் தலை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள். பின் குரலைத்தாழ்த்திக் கொண்டு, “நாம எங்காவது போயி கல்யாணம் பன்னிக்கலாமா காளி?” என்று கேட்டாள். இவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. அதுவரை அவனுள் திரண்டிருந்த காமத்தின் உஷ்ணம் பட்டென்று ஜில்லிட்டுப்போனது அவனுக்கு. மீளமுடியாத ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான். இந்தப் பொறியில் எதன் பொருட்டும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அவனுள் துளிர்விடத்தொடங்கியது. பதற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வழக்கமான புன்னகையுடன், “ அதுக்கு சான்ஸ்சே இல்ல” என்றான். சட்டென்று அவன் இவ்வாறு கூறியதும் துவண்டு போனாள். தலை சுற்றுவது போல இருந்தது அவளுக்கு.நான்கு திசையிலும் வெள்ளம் சூழ்ந்த ஓர் தீவில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தாளவள். அவன் கண்களை முதன்முதலாக ஊடுருவிப் பார்த்தாள்.அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சங்கடப்பட்டான் அவன். அதற்கு மேல் பேச்சை தொடர விரும்பாமல் வானத்தையே உற்றுப் பார்த்தாள்.”அதுக்கு சான்ஸ்சே இல்ல” என்று அவன் கூறிய போது வெளிப்பட்ட அப்புன்னகையை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தாள்.அது அவனுடைய வழக்கமான புன்னகையாக இல்லை. இனி அவனால் அப்படிப்பட்ட ஒரு புன்னகையை தனக்கு வழங்கவே முடியாது என எண்ணி பெரு மூச்சு விட்டாள்.

புயல் மையங்கொண்டு பருவமழை வலுத்த மறுநாளில் இருந்து அவள் நினைத்தது போலவே காளி அங்கு வருவதை தவிர்க்க ஆரம்பித்திருந்தான். வீதியில் பெருக்கெடுத்தோடும் மழை வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். கையில் காகித்த்தை வைத்துக் கொண்டு, “அம்மா கப்பல் செஞ்சி குடுமா” என்று அவள் குழந்தை அழுதுகொண்டிருந்தது.

3 comments:

 1. என்னவளே
  நீ நினைத்ததைப்போல
  நான் இல்லாத ஏக்கத்தை
  எப்படித்தான் தாங்குகிறாயோ?

  அடடா
  மீண்டும் நிகழமுடியா
  இறந்தகாலம் வெளிப்படுகிறது
  நீண்ட உன் பெருமூச்சினில்!

  ReplyDelete
 2. Innum valikkira maathiri climax kuduthirukkalaam....semma....

  ReplyDelete