Sunday, June 19, 2011

வெயில் நிரம்பிய ஆற்றின் பெருமூச்சின் தடங்கள்

கடந்த வாரத்தில் ஒருநாள் மதிய வெயிலையும் பொருட்படுத்தாது நானும் நண்பர் காளிதாசும் இருசக்கர வாகனத்தில் தானியங்கியில் பணம் எடுக்க திருக்கோயிலூருக்குச் சென்றோம். வெயில் நின்று காய்ந்து கொண்டிருந்தது. நாங்கள் அப்போது தென்பெண்ணை ஆற்றுப்பாலத்தைக் கடந்து கொண்டிருந்தோம். கோடை வெயிலால் ஆற்றில் மணல் தகித்துக் கொண்டிருந்தது.

கோடையின் வெக்கை என்னை கால் நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்தது.அப்போது நாங்கள் என் தந்தையின் ஆசிரியப் பணி காரணமாக திருக்கோவிலூர் அடுத்த காங்கியனூரில் வசித்துக்கொண்டிருந்தோம். அவர் அங்கிருந்த ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இப்போது கூட என் நினைவின் தொடக்கப்புள்ளி காங்கியனூரின் நிலக்காட்சிகளாகவே இருப்பதை உணரமுடிகிறது. சுமார் நான்கு ஆண்டுகள் காங்கியனூரிலும் மணலூர்பேட்டையிலுமாக வசித்தோம். இவ்விரு ஊர்களும் ஆற்றின் தாழ்வாரங்களாகவே இருந்தன. காங்கியனூரின் சீம எலந்தை, மணலூர்பேட்டையின் சுளுக்கு பிள்ளையார் கோவில் இரண்டையும், எப்போதும் என்னால் மறக்க இயலாது. ஒருவகையில் என் வளர்ச்சி கூட பெண்ணை ஆற்றோடு சம்பந்தப்பட்டதாகவே இருந்திருப்பதை இப்போது கூட என்னால் துல்லியமாக அறியமுடிகிறது.

பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் நண்பர்களுடன் ஆற்றில் தான் தவம் கிடப்பேன். நாங்கள் வசித்த வீட்டின் பின்புறம் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரின் சலசலப்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.சுடுமணலில் பாதம் பதிய நடந்த நினைவே என் ஞாபகத்தில் இல்லை. எப்போதும் பசுமையாகவே தன் கரைகளை வைத்ததிருந்த பெண்ணை ஆறே இப்போதும் என்னுள் தேங்கி இருக்கிறது.

இரண்டாவதோ மூன்றாவதோ நான் படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். அப்போது என் உடம்பு முழுக்க சிரங்கு பிடித்திருந்தது. என் அக்காவையும் என்னையும் அம்மா ஆற்றுக்கு அழைத்துச்செல்வாள்.அங்கு கையோடு கொண்டுவந்த சீயக்காய் பொடியைக் கொண்டு என் சிரங்குகளை பரபரவெனத் தேய்த்துவிட்டு ஆற்று நீரில் இறங்கி நிற்கச் சொல்வாள் அம்மா.நான் வலியால் துடிப்பேன். இரத்தம் வடியும் சிரங்குகளை மீன்கள் கொத்திச் செல்லும். ஒருவிதத்தில் இன்பமாகவும், வலியாகவும் இருக்கும். என் உடலெங்கும் பரவியிருந்த சிரங்குகளை அம்மா இப்படித்தான் ஆற்றினாள்.

அப்போது மணலூர்பேட்டை நூலகத்தில் நூலகராகப் பணிபுரிந்த திரு.ராமலிங்கம் என் தந்தைக்கு நண்பராக இருந்தார். நூலகத்தில் தினசரிகளும் இதழ்களும் பறக்காமல் இருக்க ஓடும் ஆற்று நீரில் கை நுழைத்து வழவழப்பான கூழாங்கற்களை எடுத்த நினைவின் ஈரம் இன்னும் என் விரல்களில் தேங்கிக் கிடக்கிறது. அப்போதெல்லாம் தண்ணீரில் கால் வைக்கவே பயந்து கொண்டு கரைமீதே கதியாக கிடப்பான் என் தம்பி.

அப்போதெல்லாம் அடிக்கடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் நாங்கள் அனைவரும் வீட்டுத் திண்ணையில் கூடுவோம். எங்களுக்கு ஆற்றைப்பற்றி எண்ணற்ற கதைகளை நாங்கள் வசித்த வீட்டின் உரிமையாளர் தேவகாந்தன் மாமா அவர்களின் அம்மா கூறக் கேட்டிருக்கிறோம்.

எப்போதும் பசுமையாகவே இருந்த நதி இன்று வரண்டு கிடக்கிறது. மழைபெய்தால் கூட நீர் வரத்து பொய்த்து விடுகிறது. கண்ணுக்கெட்டியதூரம் வரை ஒரே மணல் பரப்புதான். பார்க்கும் போது மனசு கிடந்து தவிக்கிறது.பழைய நினைவுகளில் இருந்து மீள அவ்வளவு சங்கடமாக இருந்தது. பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரில் காளியை வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு ஆற்றங்கரை ஓரம் இருந்த அரசமரத்தடியில் அமர்ந்தேன். பீர் வாங்கி வருவதாகச் சென்றான் அவன். கொஞ்ச நேரம் கழித்து அருகில் இருந்த அரசு மதுக்கடையில் பீர் இல்லை என்ற ஏமாற்றத்தோடு காளியும் பக்கத்தில் வந்து அமர்ந்தான். எங்கும் மணல் பரப்பாகவே இருக்கும் ஆற்றையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த ஜீவன்லீலா எனும் புத்தகம் என் மனதில் மெல்ல குமிழித்தொடங்கியது.
ஜீவன்லீலாவை எழுதியவர் காகா காலேல்கர் எனும் குஜராத்தி எழுத்தாளர். இதை அருவிகளின் லீலை எனும் துணைத் தலைப்புடன் தமிழில் மொழிபெயர்த்தவர் பி.எம். கிருஷ்ணசாமி. சாகித்ய அக்காதெமி இதை வெளியிட்டிருக்கிறது. 1971 ல் இதன் முதல் பதிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த புத்தகத்தை நான் சிதம்பரத்தில் ஓர் பழைய புத்தகக்கடையில் எதேச்சையாகப் பார்த்தேன். புத்தகம் மிகவும் நைந்திருந்தது. ஏடுகள் தொட்டால் ஒடிந்துவிடும் அளவிற்கு மக்கி இருந்தன. வீட்டிற்கு கொண்டு வந்து அட்டைபோட்டு என் நூலகத்தில் வைத்துவிட்டேன். உடனே எடுத்து படிக்க முடியவில்லை. பிறகொருநாள் ஜீவன் லீலாவை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். காகா காலேல்கரின் பாதங்களாக நான் மெல்ல உருமாறத் தொடங்கினேன். என் பாதங்களையும் காலேல்கரின் பாதங்களை நனைத்த நதியின் பிரவாகம் தீண்டிச் செல்வதை உணர முடிந்தது. அவரின் பயணம் கண்முன் காட்சியாக மெல்ல விரிவு கொண்டபடியே இருந்தது.

நாம் நிறைய பயணக் கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் ஜீவன் லீலா எனும் புத்தகம் முழுக்க முழுக்க நதிகளைத் தேடி மட்டுமே பயணித்த ஓர் எழுத்தாளரின் அனுபவக் கட்டுரையாக தன்னை விரித்துக் கொள்கிறது. அடிப்படையில் சுற்றுலா அல்லது பயணம் என்றதுமே நமக்கு கோயிலும் கோயில் சார்ந்த இடங்களுமே நினைவிற்கு வரும். நாம் அவ்வாறாகத் தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறோம். நமது மனமும் கூட ஆன்மீகத்தை ஒட்டியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்புத்தகம் நமக்கு வேறுவிதமான அனுபவத்தை கொடுக்கிறது. முழுக்க முழுக்க நதிகள் சார்ந்தே இவரின் பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. நதி எனும் ஒற்றைச் சொல்லே நமது மனதில் ஆயிரம் குமிழ்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் ஒரு நூல் முழுக்க நதியும், அதுசார்ந்த நிலப்பரப்பு, மக்களின் வாழ்க்கைமுறை, கலாசார அடையாளங்கள் அனைத்தையும் ஆசிரியர் தன் பயணத்தினூடே நம்மிடம் கைமாற்றுவதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. நூலை வாசித்து முடிக்கையில் ஒரு பெரிய நீர்ப் பிரவாகத்தை கடந்து விட்ட மனநிலையை அடைகிறோம்.
ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து நதிகள் குறித்தும் இந்நூலில் பதிவுகள் இறுக்கின்றன. தேர்ந்த புகைப்படக்காரரைப் போன்று நதிகளின் கதைகளை நுட்பமாக பதிவு செய்கிறார். ’தோழி மார்க்கண்டி’ எனும் முதல் கட்டுரை ஆகஸ்டு 1928 ல் எழுதப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுகளைத் தாண்டிய பதிவாக இருந்தாலும், இப்போதுதான் இது போன்ற நதிகளின் இருப்பை தெரிந்து கொள்ள முடிகிறது என்ற சங்கடம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ’கிருஷ்ணாவின் நினைவுகள்’ எனும் கட்டுரையில் கிருஷ்ணா நதி எப்படி அண்டை மாநிலங்களில் பார்க்கப்படுகிறது, எப்படி எல்லாம் கொண்டாடப்படுகிறது என்றெல்லாம் விவரிக்கிறார். கிருஷ்ணா நதியின் பின்புலத்தில் தன் வளர்ச்சி நிலைகளை உணர்த்தியும், தன்னுடைய இளமைக்காலத்தில் இருந்து இப்புத்தகம் எழுதும் வரையிலான நதி எவ்வாறெல்லாம் உருமாற்றம் அடைந்திருக்கிறது என்பதையெல்லாம் நுட்பத்துடன் விவரிக்கிறார்.

’வேதங்களை வளர்க்கும் துங்கபத்ரா’, ’இருகுலத்தொடர்புள்ள நர்மதை’, ’சிந்துவின் ஏக்கம்’, ’நதியின் மேல் ஒரு கால்வாய்’, ’சர்மண்வதீ’, ’பெண் நாகம் போன்ற தீஸ்தா, ’அர்ணவத்தின் அறைகூவல்’, ’நீலோத்ரி’ போன்ற கட்டுரைகள் வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. நதிகள் மீதான எழுத்தாளரின் ஆர்வமும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களும் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.
நூலை வாசிக்கும்போது குற்றவுணர்வு ஏற்படுவதை தவிற்க முடியவில்லை. நாம் நீர் நிலைகளை எப்படி பார்க்கிறோம்? அவற்றைப் பத்திரப் படுத்துகிறோமா? என்றெல்லாம் மனதில் யோசனை படர்வதை தடுக்க முடியவில்லை. ஆறுகளையும் ஏரிகளையும் தூர்த்து, அதன் மீது மருத்துவக் கல்லூரிகளையும், பேருந்து நிலையங்களையும் கட்டும் நமது நவீன அறிவியலின் கோரமான முகத்தின் மீது இப்புத்தகம் காரி உமிழ்கிறது.

நதியைத் தெய்வமாக, அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக, கலாசாரக் குறியீடாகப் பார்க்க இப்புத்தகம் நம்மைத் தூண்டுகிறது. பல உயர் தொழில் நுட்பங்களில் சிறந்து விளங்கும் நம்மை, நாம் தவறவிட்ட இயற்கை சார்ந்த பல படிப்பினைகளை கற்க இப்புத்தகம் தன் மென்மையான குரலால் நம்மை அழைத்துக்கொண்டே இருக்கிறது.

வானுயர்ந்து நிற்கும் கட்டங்களைப் பார்த்து மார்தட்டிக்கொள்ளும் நாம் எப்போதாவது வரண்டு கிடக்கும் நதியைப் பார்த்து சங்கடப்பட்டிருக்கிறோமா? அது ஏன் இப்படி இருக்கிறதென்று நம்மை நாமே ஒரு தடவையாவது கேட்டுக்கொண்டதுண்டா? நம்முடைய அக்கறைகள் எல்லாமே தங்களின் முகங்களை அதீத தொழில் நுட்பங்கள் பக்கம் திருப்பிக் கொண்டு பல காலங்கள் ஆகின்றன.

நமக்கு நெருக்கமான நபர்களின் மரணத்தை விடவும் ஒரு நதியின் மரணம் ஆகக் கொடுமையானதுதானே?

5 comments:

 1. என்னவளே
  பெருமழைக்காலம் தவிர்த்து
  பெரும்பாலும் நீரில்லாமல்
  வற்றியே கிடக்கிறது ஆறு!

  அடடா
  ஆற்றுத்திருவிழாவின் போது
  அணையைத் திறந்தால்
  அதுவே போதும் நமக்கு!

  ReplyDelete
 2. வணக்கம் தங்களிடம் இந்த புத்தகத்தின் PDF உள்ளதா

  ReplyDelete
 3. இருந்தால் தரவும் நகல் இருந்தால் கூட கொடுக்கவும்.. தொடர்பு 8754448281 மின்னஞ்சல் :gopalyamg1708@gmail.com

  ReplyDelete
 4. இருந்தால் தரவும் நகல் இருந்தால் கூட கொடுக்கவும்.. தொடர்பு 8754448281 மின்னஞ்சல் :gopalyamg1708@gmail.com

  ReplyDelete
 5. வணக்கம் தங்களிடம் இந்த புத்தகத்தின் PDF உள்ளதா

  ReplyDelete