Sunday, July 31, 2011

பாடம்
”டேய் வாங்கடா பஸ் ஆட்டம் ஆடலாம்” என்று காயத்ரி தன் நண்பர்களை அழைக்கும் போதே அவளது மனதில் இருந்த பஸ் வேகமெடுத்து உறுமலுடன் கோணமலைமீது ஏறிக்கொண்டிருந்தது. எப்போதும்போல ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த அவளது விழிகள் பாம்பென வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் நிலைத்திருந்தன. அவளின் கனவை சிதரடிக்கும் விதமாக , ”யார் யார்லாம் ஸ்கூல் ஆட்டம் வெளையாட வறீங்க?”, என ஷம்மு அவளுக்கு போட்டியாக கேட்டாள். தினமும் பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்ததும் இருவருக்கும் என்ன விளையாட்டு விளையாடுவது என்பதில் போட்டி ஆரம்பிக்கும். சிறிது நேர இழுபறிகளுக்குப் பிறகு இருவரும் ஸ்கூல் ஆட்டமே ஆடத் தொடங்குவர். அன்றும் அப்படியே ஸ்கூல் ஆட்டம் ஆட முடிவானது. தெருக்கதவின் பின்புறம் கரும்பலகையாக மாற, வீட்டின் கூடம் வகுப்பறையாக உருவெடுத்தது. யார் யார் மிஸ்ஸாக இருப்பது ; யார் யார் மாணவர்களாக இருப்பது எனும் அடுத்தப் போட்டி அவர்களுக்குள் ஏற்பட்டது. சிறிதும் தாமதிக்காமல் ஷம்மு காயத்ரியிடம் ”இன்னக்கி மட்டும் அக்கா மிஸ்ஸா இருக்கேன். நாளையல இருந்து நீயே இருடா செல்லம்” எனக் கெஞ்சினாள். இன்று எப்படியும் மிஸ்ஸாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த அபியின் நினைப்பில் மண்ணை அள்ளிப்போடுவதாக இருந்த்து ஷம்முவின் விருப்பம். மற்ற நண்பர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ”போக்கா.. நீ தெனமும் இப்படிதான் சொல்ற. ஒரு நாளாவது என்ன மிஸ்ஸா இருக்க வுடறயா?” என்று ஷம்முவிடம் காயத்ரி கேட்டாள். ஷம்முவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ”ப்ளீஸ்மா” என்று மறுபடியும் கெஞ்சினாள். வழக்கம் போல அரைமனதுடன் காயத்ரியும் மாணவியாக இருக்கச் சம்மதித்தாள். இவ்வளவு சீக்கிரத்தில் காயத்ரி ஷம்முவிடம் பணிந்ததை அபியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.ஒருவித ஏமாற்றத்தோடு அபி எல்லோருக்கும் கடைசியாகச் சென்று அமர்ந்து கொண்டாள். ஷம்முவின் முகத்தில் ஆசிரியை எனும் மிடுக்கு மெல்ல ஏறத் தொடங்கிய போது அவள் நடையிலும் மாற்றம் தென்பட்டது. கைகளை வீசி நடந்தபடி அவள் வகுப்பறைக்குள் நுழைந்தாள். காயத்ரி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் தங்கள் புத்தகப்பைகளை தோளில் மாட்டிக் கொண்டு மதிய உணவுப்பையை கைகளில் வைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தனர். மாணவர்கள் நுழைவதைக் கண்ட ஷம்மு, ”பெர்மிஷன் இல்லாம வரக்கூடாதுனு எத்தன முறை சொல்றது. இனிமே பெர்மிஷன் கேட்ட பிறகுதான் உள்ள வரனும் புரியுதா?” என அதட்டலுடன் கூறினாள். ஷம்மு அதற்குள் உள்ளே வந்திருப்பாள் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சலசலப்புகளுக்கிடையே மெல்ல வகுப்பறைச் சூழல் உருக்கூடத் தொடங்கி இருந்தது.

”மே ஐ கம் இன் மிஸ்” என்று எதிர்வீட்டு செந்தில் கேட்டான். நாற்காலியில் இருந்து எழுந்திருப்பதை போல பாவனை செய்தபடி ஷம்மு அவனைப் பார்த்து ”கெட் இன்” எனச் சொல்லி விட்டு அவனை நோக்கி நடந்து வெளியில் வந்தாள். ஒருவர் பின் ஒருவராக அனுமதி கேட்டுவிட்டு தங்கள் இடத்தில் சென்று அமர்ந்தனர். வெளியில் சென்ற ஷம்மு சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்குள் நுழைந்தாள். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று குட் மார்னிங் மிஸ் என்று கோரசாக கூறினர். தலையை மட்டும் ஆட்டிக்கொண்டே அவர்களைக் கடந்து தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள் ஷம்மு. மெல்ல திரும்பி கரும்பலகையைப் பார்த்தாள். அதில் ஏதும் எழுதப்படாமல் வெறுமையாக இருந்தது. முகத்தில் கோபத்தை வரவழைத்துக் கொண்டு, ”போர்டுல இன்னைய டேட்டையும் கிழமையையும் போடனும்னு எந்த நாய்க்காவது அறிவு இருந்திச்சா? எத்தனை தடவை சொல்றது. மொத வேலையா டேட் போடனும்னு” எனக் கத்தினாள் ஷம்மு. மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நடையில் துணி மடித்துக்கொண்டிருந்த அவள் அம்மா சுந்தரி, ” பிள்ளைகளை நாயின்னுலாம் சொல்லக்கூடாது மா” என்று ஷம்முவை பார்த்துக் கூறினாள். அதற்கு அவள் ”போ மா. உனக்கு எதுவும் தெரியாது. எங்க குள்ள மிஸ் இப்படிதான் திட்டுவாங்க. வேணும்னா காயத்ரிய கேட்டுப்பாரு”, என்று திட்ட வட்டமாக கூறினாள். தன் புத்தகப் பையில் கையை விட்டபடியே காயத்ரியும் ஆமோதிப்பவள் போல் தலையை மெல்ல ஆட்டினாள். காயத்ரியின் இந்த செயலை உதட்டைப் பிதுக்கி செந்தூர் பழித்துக் காண்பித்தான். அவன் பழித்துக்காட்டுவதைப் பார்த்த அபிக்கு சிரிப்பு பீரிட்ட்து. ஆனால் அவள் வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டாள். யார் போய் தேதி போடுவது என எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும்போதே வாத்தியார்வீட்டு கபில் எழுந்து போய் தேதியையும் கிழமையையும் போட்டுவிட்டு வந்து அமர்ந்தான். கால் மேல் கால் போட்டபடி தன் எதிரில் அமர்ந்திருக்கும் மாணவர்களைப் பார்த்து, ”யார் யார்லாம் ஹோம் ஒர்க்க செஞ்சிட்டு வந்திருக்கீங்க. கை தூக்குங்க பார்க்கலாம்” என ஷம்மு கேட்டாள். ஓரிருவர் மட்டுமே தூக்கினார்கள். மற்றவர்கள் தலையைக் குனிந்துகொண்டு அமைதியாக இருந்தனர். ” ஸ்கூல்ல அவசர அவசரமா என்ன பாத்து சம் போடுறவ நீ. இங்க வந்து எங்கள ஹோம் வொர்க் செஞ்சிட்டிங்களானு கேக்கறயா. எங்க போறாத நேரம்டா சாமி” என தலையில் அடித்துக் கொண்டாள் அபி. உண்மையில் ஷம்மு வீட்டில் இருக்கும் கேரம் போர்டும் வீடியோ கேமுமே இவர்களை அவளுக்கு அடங்கிப்போகச் செய்கின்றன. அப்புரம் புதுப்படம் வெளியான உடனேயே ஷம்மு வீட்டில் சி.டியில் பார்த்துவிட முடியும் என்பதும்தான் அபியை அவளுக்கு எதிராக இயங்கவிடாமல் செய்துவிடுகிறது. ஆனால் அவளுக்கு எதிராக நடந்துகொள்ள வேண்டி வரும்போதெல்லாம் இனி எந்த சலுகையையும் அவளிடமிருந்து பெறக்கூடாது என்றே நினைப்பாள். ஆனால் புதுப்பட சி.டியும் வீடியோ கேமும் ஒவ்வொரு முறையும் அவளை பேசவிடாமல் வாயைக்கட்டியே வைத்திருந்தன. செந்தில் இவளை தொடையில் தட்டி ”என்ன யோசனை?” என்று கேட்டான். அப்போது தான் அவள் நினைவுகளில் இருந்து மீண்டாள்.வீட்டுப்பாடம் செய்யாமல் வந்திருந்த அனைவரையும் எழுந்து வரிசையில் நிற்கும்படி கட்டளையிட்டாள் ஷம்மு.வகுப்புத் தலைவனைப் பார்த்து ”எங்கடா இங்கிருந்த கோல்” என்று அதட்டலுடன் கேட்டாள். பேகன் எழுந்து ”மிஸ் நான் போயி எடுத்துட்டு வரட்டா? ” என்று கேட்டான். “உன் வேலையைப் பாருடா முந்திரிக் கொட்டை” என்று சொல்லி அவனை உட்காரச் சொன்னாள். கோல் வந்தவுடன் வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு ஆளுக்கு இரண்டு இரண்டு அடிகள் கொடுத்தாள். வீட்டுப்பாடம் செய்யாததால் வரிசையில் கடைசியாக காயத்ரியும் அடிவாங்க நின்றிருந்தாள். அவள் முறை வந்தபோது “அக்கா வேகமா அடிக்காத. அப்புறம் நாளக்கி உன்ன மிஸ்கிட்ட மாட்டி விட்டுருவேன்” என்று ஷம்முவைப் பார்த்து சொன்னாள். அதற்கு ஷம்மு ”இப்ப மிஸ் ஆட்டம் தான ஆடறோம். இங்க நான் தான் மிஸ் அப்புறம் அக்கானு ஏன் கூப்பிடுற?” என்று கேட்டாள். காயத்ரி நாக்கை மெல்ல கடித்தபடி அடி வாங்க கையை நீட்டினாள். ஷம்மு முதல் அடியை கொடுத்தாள். காயத்ரி கைகளை உதறிக் கொண்டே ”போ நான் இந்த ஆட்டத்துக்கு வரல. நீ சும்மா மிஸ்தான. எதுக்கு வேகமா அடிக்கிற. நா வரல போ” எனக்கூறிக் கொண்டே புத்தகப் பைகளைத் தூக்கிக் கொண்டு வகுப்பறையை விட்டு வேகமாக வெளியேறினாள். கடைசியில் அமர்ந்திருந்த அபி, ”அக்கா சொன்னதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலை ஆட்னா இல்ல நல்லா வேணும் அவளுக்கு” என பேகனைச் சீண்டி சொன்னாள்.

கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் தொடர் பார்த்துக்கொண்டிருந்த தன் அம்மாவிடம் சென்று முறையிட்டாள் காயத்ரி. விளையாட்டிற்காக அடித்திருப்பாள் கோபப்படாமல் போய் விளையாடு என்று அம்மா எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தாள். கூடத்தில் இருவரும் மாறி மாறி பேசுவதைக் கேட்ட ஷம்முவும் உள்ளே வந்து காயத்ரியிடம் கெஞ்சினாள். எதற்கும் அவள் இறங்கி வருவதாகத் தெரியவில்லை.வேறு வழி தெரியாமல் கடைசி கட்டமாக காயத்ரியிடம், ”நீயும் மிஸ்ஸா இருக்கியா?” என்று ஷம்மு கேட்டாள். அதைக் கேட்ட காயத்ரியின் கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன. திடீரென ஷம்மு இப்படி கேட்பாள் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.முகம் முழுக்க புன்னகை பரவ தலையை சரி என இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். பின் சமயல் அறைக்கு சென்று விசுப்பலகையின் மேல் இருந்த குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு குடித்தாள். தோட்டத்திற்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தவள் காயத்ரியின் கைகளை பிடித்தவாறே, ”நீ சின்ன மிஸ். அக்கா பெரிய மிஸ் சரியா” என கூறி ஆட்காட்டி விரலை ஆட்டியபடி நடந்து சென்றாள். காயத்ரியும் தனக்கு முழுச்சம்மதம் என்பதுபோல வாய்முழுக்கச் சிரிப்புடன் அன்னாந்து அக்காவைப் பார்த்தாள்.


வகுப்பறைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. இருவரும் ஆளுக்கு சரி பாதியாக மாணவர்களை பிரித்துக்கொண்டனர். வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் காயத்ரி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு தன்னைப்பற்றிக் கூறத்தொடங்கினாள்: “ நான் புதுசா வந்திருக்க இங்கிலீஷ் மிஸ். யாரும் தப்பு பன்னா எனக்கு புடிக்காது. அப்புறம் பெரிய மிஸ்கிட்ட சொல்லி டி.சி குடுக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதையா இருங்க” சொல்லி முடித்துவிட்டு ஓரக்கண்ணால் அபியையும் பேகனையும் பார்த்தாள். அபி தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.கரும்பலகைக்கு காயத்ரி ஜன்னல் கதவைப் பயன்படுத்திக் கொண்டாள். கரும்பலகையை சுத்தம் செய்தபடியே, ”யாரும் பேசாதீங்க. மீறி பேசுனா பெரிய மிஸ்கிட்ட போய் சொல்லிடுவேன்” என மிரட்டினாள். அதற்கு செந்தூர், ”எதுக்கெடுத்தாலும் பெரிய மிஸ்தானா?” என செந்திலிடம் கிசுகிசுவென கேட்டான். கரும்பலகையில் ஆப்பிள், பனானா, கேரட் போன்ற வார்த்தைகளை எழுதிப்போட்டு விட்டு மாணவர்களைப் பார்த்து காயத்ரி சொன்னாள்: ”ஒவ்வொன்னையும் பத்துமுறை எழுதுங்க”. மாணவர்கள் சரி என்பது போல தலையாட்டினர். கொஞ்சநேரம் இப்படியும் அப்படியுமாக நடந்தவள் தன் வகுப்பறையைவிட்டு ஷம்மு இருந்த வகுப்பிற்கு சென்றாள். அவள் அருகில் அமர்ந்து, ”மிஸ் உங்க சாரி ரொம்ப அழகா இருக்கு. எங்க எடுத்தீங்க?” என்று கேட்டாள். ஷம்மு கொஞ்சமும் இதை எதிர்பார்க்கவில்லை. தன் தங்கையின் பாவனை அவளை சிலிர்க்கச் செய்தது. அவள் அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். அம்மாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் காயத்ரியிடம் என்ன என்பது போல கையை ஆட்டிக்கேட்டாள். அதற்கு காயத்ரி, “ இப்படி தாம்மா எங்க ஜெயந்தி மிஸ் கேப்பாங்க” என்றாள். இதைக் கேட்ட அம்மாவிற்கு சிரிப்பு வெடித்துக் கிளம்பியது. அவள் சிரிப்பதைப் பார்த்து இவர்களும் சிரித்தனர். ”அம்மா நீ உள்ள போ மா” என்று இருவரும் தன் தாயை போகச் சொன்னார்கள். அம்மா சென்று விட்டாளா என்று உறுதிசெய்து கொண்டு ”இதுவா மிஸ், இது கன்னிகா பரமேஸ்வரில எடுத்தது. காட்டன் கலந்தது. எங்க ஹஸ்பண்டுதான் வாங்கிக் கொடுத்தார்” என்று சேலையைத் தொட்டுக் காட்டுவது போல தன் சட்டையை தடவியபடியே ஷம்மு காயத்ரியிடம் கூறினாள். அதற்கு காயத்ரி ”எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிஸ்” என்று சொன்னாள். தங்களின் உரையாடல்கள் மூலமாக அவர்கள் தங்களின் வகுப்பறைகளை தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டே இருந்தனர். வகுப்பறையின் முகமும், அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது.இவர்களின் பாவனைகளை எல்லாம் ஜன்னல் வழியாக அம்மா பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒருக்கட்டத்தில் தெருத் திண்ணையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தன் கணவனை அழைத்து இவர்களின் சேட்டைகளைக் காட்டினாள். அவரும் ஜன்னல் கதவோரம் ஒளிந்துகொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரியாக பார்க்க முடியவில்லை என்பதால் தெருத் திண்ணைக்கே சென்றார்.அங்கிருந்து அவர்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. ”அப்புறம் உங்க பையன் நல்லா படிக்கறானா மிஸ்?” என்று காயத்ரி மறுபடியும் கேட்டாள். ”ஸ்கூல்ல இப்படி யார்டி பேசுவா?” என்று யோசித்தபடியே காயத்ரியிடம் ஷம்மு கேட்டாள். ”நம்ம அஞ்சாவது மிஸ்தான இப்படி கேட்பாங்க” என்று சொன்னாள். ஷம்மு ஆமாம் என்பது போல தலையில் லேசாக கொட்டிக்கொண்டே, ”எங்க மிஸ் படிக்கறான். எப்பா பாரு கிரிக்கெட்டுதான். என்ன பன்றதுனு தெரியல மிஸ்” என்று அலுத்துக்கொண்டு சொன்னாள். ”ஆமாம் மிஸ் என் பொண்ணு கூட வீட்டுக்கு வந்தானா, சுட்டி டி.வியே கதின்னு கெடக்கறா” என்று சலிப்பாக பேசினாள். இவர்களின் உரையாடல் வழி உருவாகும் வகுப்பறையின் சித்திரங்களை ரசித்தபடியே தெருத்திண்ணையில் அமர்ந்திருந்தார் தந்தை. காயத்ரி அடிக்கடி அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு குனிந்து கொண்டாள். அப்போது அவளது முகம் வெட்கத்தால் நிரம்பி இருந்தது. ”மிஸ் மிஸ்” என்று அழைத்தபடி காயத்ரியின் வகுப்பில் இருந்து ஒருவன் ஓடிவந்தான். ”என்னடா?” என்று அவனை கேட்டாள். ”நான் எழுதிட்டேன் மிஸ். நோட்புக்கை பைக்குள் வச்சிடவா?” என்று கேட்டான். ”அதுக்குள்ள முடிச்சிட்டியா. அப்ப அடிஷன் டேபிள தலைகீழா மூனு தடவ எழுது டா” என்று சாதாரணமாக அவனிடம் கூறினாள். அவனும் ”சரிங்க மிஸ்” எனக் கூறிக்கொண்டே வகுப்பறை நோக்கி ஓடினான். தன் சேலை முந்தானையால் விசிறிக்கொள்வதுபோல பாவனை செய்தபடியே, ”செத்த நேரம் சும்மா இருக்கவிட மாட்டுதுங்க மிஸ்” என வகுப்பறையில் இருந்த மாணவர்களைப் பார்த்துக் கூறினாள். அவளின் இந்த செய்கையைப் பார்த்து பெற்ரோர்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

”ஏம்மா இருட்ட ஆரம்பிச்சிடுச்சி. வந்து மொகம் கழுவிகினு ஹோம் வொர்க் செய்யுங்கள்” என்று அம்மா இவர்களை அழைக்கவும் மின்சாரம் நிற்கவும் சரியாக இருந்தது. “போச்சுடா கரண்ட்டுகார சாண்டாகுடிச்சவன் அதுக்குள்ள புடிங்கிட்டானா” என்று தேவகி அழுத்தம் திருத்தமாக சொன்னாள். அவள் பேச்சைக் கேட்ட பெற்றோர்கள் இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. இவர்கள் இருவரைத்தவிர மற்றவர்களுக்கு அந்தவார்த்தையின் அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. ”தேவகி யார் உனக்கு இப்படி பேச சொல்லிக் கொடுத்தா?” என்று ஷம்முவின் அம்மா அவளைப் பார்த்துக் கேட்டாள். அதற்கு மிகச்சாதரணமாக ”எப்ப கரண்ட் நின்னாலும் எங்க பாட்டி இப்படிதான் சொல்லும்” என்று சொன்னாள். ஷம்முவின் அம்மா தலையுயர்த்தி தன் கணவனைப் பார்த்தாள். அவர் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். ”இனிமே நீ இப்படி பேசக்கூடாது” என தேவகியை செல்லமாகத் தட்டிச் சொன்னாள். ”அப்ப பாட்டி மட்டும் சொல்லலாமா?” என்று அவள் திரும்பக் கேட்டாள். இவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அதற்குமேல் அதை வளர்த்த விரும்பாதவளாக ”இருட்டிடிச்சி பாருங்க. அவுங்கவுங்க வீட்டுக்குப் போங்க. தேடப்போறாங்க.” என அனைவரையும் பார்த்துச் சொன்னாள். அதற்கு காயத்ரி, ”தோ முடிச்சிடரோம் மா” என்று சொன்னாள். ஷம்மு தன் வகுப்பில் ஒருவனை அழைத்து வீட்டிற்கு விடும் மணியை அடிக்கச் சொன்னாள். அவனும் சைகையால் மணியை அடித்தான். மாணவர்கள் அனைவரும் எழுந்து மாலை வழிபாட்டிற்கு வரிசையில் நின்றனர். பெரிய மிஸ் எனும் ஸ்தானத்தில் அவர்களுக்கு எதிரில் நின்று ஷம்மு பேசினாள்: ”ஸ்கூல் தெரந்து இருபது நாள் ஆயிடுச்சி. பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி பீஸை சீக்கிரம் கட்டச் சொல்லுங்க. அப்பதான் நோட்புக், டை, பெல்ட் எல்லாம் தருவோம்” அவள் பேச்சிற்கு மாணவர்கள் அனைவரும் சரி எனும் விதமாக தலையாட்டினர். ”நேஷ்னல் ஆன்த்தம்” என்று சத்தமாக காயத்ரி சொன்னாள். மாணவர்கள் அனைவரும் நேராக நின்று நெஞ்சை நிமிர்த்தி தேசியகீதம் பாடினர். ”ஸ்கூல் டிஸ்பர்ஸ்” என்று மாணவர்களைப் பார்த்து காயத்ரி உரக்கச் சொன்னாள். ”பை பை மிஸ்.. தேங்க்யூ மிஸ்” என்று கூறிக்கொண்டே மாணவர்கள் கலைந்து சென்றனர். கூடம் வெறுமையாக காட்சி அளித்தது. ”ஏம்மா காபி கலக்கட்டுமா?” என்று அம்மா கேட்டதும் தான் இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.


தெருவில் நாய்கள் குரைத்துக்கொண்டு முருகன் கோயில் தெரு நோக்கி ஓடின. காபி குடித்துவிட்டு வீட்டுபாடம் செய்த பின் ஷம்முவும் காயத்ரியும் தெருவிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அபி தலைமையில் ஒரு குழுவும் ஷம்மு தலைமையில் ஒரு குழுவாகவும் பிரிந்து நிலாக்கும்பல் விளையாடினர். தெருவெங்கும் ஆங்காங்கே திட்டுதிட்டாக இருந்த நிழல்களில் எல்லாம் இரு அணியும் மாறி மாறி நிலாக்கும்பல் வைத்தனர். பின் இரு அணிகளும் மாறி மாறி எதிர் அணியின் நிலாக்கும்பல்களை கண்டுபிடித்து அழிக்கத்தொடங்கினர். அபி அணி எதிர்பார்க்க முடியாத இடங்களில் எல்லாம் நிலாக்கும்பல் வைத்திருந்தனர். ஷம்மு அணிக்கு அது பெரும் சவாலாக விளங்கியது. எல்லோரும் நிலாக்கும்பலை அழிக்க அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். எல்பர் வீட்டு பூவரசமரத்தடியில் பரவலாக இருட்டு கவிந்திருந்த்து. நிலாக்கும்பல் ஏதாவது வைத்திருக்கிறார்களா எனப் பார்க்க அபி அங்கு சென்றாள். மரத்தின் கீழே இருட்டில் யாரோ படுத்துக்கொண்டிருப்பது மங்கலாகத் தெரிந்தது. ஒருவித அச்சத்தோடே அருகில் சென்றாள். ஷம்மு மீது செந்தில் படுத்துக் கொண்டிருந்தான். இவள் வந்து நிற்பதை உணர்ந்த இருவரும் பயத்தில் அலண்டு அடித்துக் கொண்டு எழுந்து ஓடினர். ஆட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

வெகுநேரம் கழித்து அவர்களின் அம்மா தெரு வாசலுக்கு வந்து பார்த்தாள். நன்றாக இருட்டிவிட்டிருந்தது. ”ஷம்மு, காயத்ரி சாப்பிட வாங்க” என்று சப்தம் போட்டு கூப்பிட்டாள். மூன்றாவது வீட்டில் இருந்து தட தட வென காயத்ரி ஓடிவந்தாள். ஷம்மு அப்போது தான் தெரு திருப்பத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள். தான் பார்த்ததை அபி யாரிடமும் சொல்லிவிடக் கூடாதே என மனதிற்குள் வேண்டிக்கொண்டாள். அப்படியே அவள் சொன்னாளும் செந்தில் தான் தன்னை ”வா அப்பா அம்மா ஆட்டம் ஆடலாம்” என கூப்பிட்டான் என்று சொல்லிவிடுவது என்றும் மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.
ஷம்மு வீட்டிற்குள் நுழையும் போது தொலைக் காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. ”இந்த அப்பாவுக்கு எப்பவுமே நியூஸ்தான்” எனக் கூறிக்கொண்டே ரிமோட்டை தேடினாள். ரிமோட் அப்பாவின் மடியில் கிடந்தது. இந்த முறை ரிமோட்டை தரக்கூடாது என்ற பிடிவாதத்தில் அமர்ந்திருந்தார் அவர். ரிமோட்டை எடுக்க குனிந்தவள், ”அப்பா பிளீஸ் பா” என்று கெஞ்சலாகக் கேட்டாள். கீழே குனிந்து தன் அப்பாவிடம் பேசும் போது அவளுக்கு சட்டென பயம் தோன்றி மறைந்தது. அபி வந்து அங்குப் பார்த்ததை சொன்னால் அப்பாவின் முகம் எப்படி இருக்கும் என ஒருநொடி நினைத்துப் பார்த்தாள். மீண்டும் பயம் அவளைக் கவ்விக் கொண்டது. அவள் கெஞ்சலாக கேட்கவும் மறுப்பேதும் சொல்லாமல் அவரும் கொடுத்துவிட்டார். அவள் கைக்கு ரிமோட் வந்ததும் தடதடவென சேனல்கள் மாறின. அவள் விரல்கள் தொடர்ந்து ரிமோட்டை இயக்கியபடியே இருந்தது. போகோ சேனல் வந்ததும் ரிமோட்டை அருகில் வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தாள். ”இத்தனை வேகமாக இயக்க இதுகளுக்கு யார் தான் கத்து கொடுத்தாங்களோ” என்று சொல்லிக்கொண்டே அவரும் சாப்பிட அமர்ந்தார். ”ஆடிட்டு வந்து அப்படியே சாப்பிட ஒக்காறாதீங்கனு எத்தனை தடவ சொல்றது” என்று சமயலறையில் இருந்து அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்தது. காயத்ரியும் ஷம்முவும் உதட்டைப் பிதுக்கிக்கொண்டே கை கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.
சூடாக இருக்கும் நூடுல்ஸை அன்ன வெட்டியால் எடுத்து மூன்று தட்டிலும் வைத்தாள். ஒவ்வொருவருக்கும் முள் கரண்டி கொடுக்கப்பட்டது.மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்த ஷம்மு தட்டில் இருந்த நூடுல்சை கிளரி கிளரி சாப்பிட ஆரம்பித்தாள். ”இன்னாமா எப்பவும் நூடுல்ஸை வெள்ளையாவே செய்யற சாந்தி அத்த வூட்ல மட்டும் கலரா செய்றாங்க இல்ல” என்று காயத்ரி அம்மாவைப் பார்த்துக் அலுப்பாக கேட்டாள். ”சரி அடுத்த முறை கலரா செய்றேன்” என்று வழக்கமான தொனியில் அவளின் அம்மா கூற ”எப்பவும் இதே மாதிரி தான் சொல்ற. ஆனா செய்ய மாட்ற. போ நான் சாப்பிட மாட்டேன்” என்று வீம்பு பிடித்தாள். இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டே இருந்தனர். தன் பிடிவாதத்தை கொஞ்சமும் தளர்த்திக் கொள்ள காயத்ரி முயலவில்லை. காயத்ரி முரண்டு பிடித்து அழ ஆரம்பித்தாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த அவளின் அப்பாவிற்கு இவர்களின் சண்டை கோபத்தை ஏற்படுத்தியது. ”இப்ப சாப்ட போறியா இல்ல நீங்க உங்க மிஸ் பத்தி அடிச்ச கொட்டத்தை வந்து ஸ்கூல்ல சொல்லட்டுமா?” என்று காயத்ரியைப் பார்த்து சத்தமாகக் கேட்டுக்கொண்டே எதிரில் இருந்த சொம்பைத் தூக்கி தரையில் ஓங்கி அடித்தார். சொம்பு தரையில் மோதி பெருத்த சப்தத்தை ஏற்படுத்தியது.அவரின் கோபத்தை உணர்ந்த காயத்ரி சர்வமும் ஒடுங்கிப் போனாள். எதுவும் பேசாமல் தட்டில் இருந்ததை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள். பயந்துபோய் சாப்பிடும் காயத்ரியைப் பார்ப்பதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது அவருக்கு. தான் இந்தளவு கோபமாக அவளிடம் நடந்து கொண்டிருக்கக் கூடாதோ என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஷம்மு அமைதியாக சாப்பிட்டு விட்டு கை அலம்பிக் கொண்டு அறைக்குச் சென்று படுத்துவிட்டாள். அவர் சாப்பிட்டு விட்டு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு தெருவில் சிறிது நேரம் நடக்கச் சென்றார். காயத்ரி அமைதியாக தெருக் கதவோரம் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் அம்மா எவ்வளவோ பேச்சு கொடுத்தும் கூட அவள் ஏதும் பேசவில்லை. அடுத்தநாளுக்கு சமையில் செய்ய தேவையான கீரைகளை ஆய்ந்து வைத்துவிட்டு, தோட்டக் கதவை சாத்தினாள் அவள். அவர் உள்ளே வந்து ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு கூடத்தில் விரித்திருந்த பாயில் படுத்தார். காயத்ரியும் ஏதும் பேசாது ஷம்முவின் பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டாள். தூங்குவதற்கு முன் வழக்கமாக இருவரும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அன்று ஷம்முவும் காயத்ரியும் பேசிக்கொள்ளவே இல்லை. சிறிது நேரத்தில் ஷம்மு தூங்கிப் போனாள். காயத்ரிக்கு உறக்கம் வரவேயில்லை. மேற்கூரையில் சுழலும் மின்விசிறியையே பார்த்துக் கொண்டிருந்தாள். நாளை மிஸ்ஸிடம் அப்பா சொல்லிவிடுவாரோ என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் அவள் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. அவ்வாறு யோசிக்க யோசிக்க அவளை பயம் கவ்வத் தொடங்கியது. உடலில் மெல்ல நடுக்கமேற்பட்டதை உணர்ந்த அவளுக்கு அழ வேண்டும் போலவும் இருந்தது. ஜன்னலுக்கு அப்பாலிருந்து சில்வண்டின் ரீங்காரம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் காயத்ரி பயத்துடனேயே தூங்கிப் போனாள்.
”அடிக்காதிங்க மிஸ்... அடிக்காதிங்க மிஸ்... இனிமே அப்படி வெளையாட மாட்டேன் மிஸ். சத்தியமா ஸ்கூல் ஆட்டம் ஆடமாட்டேன் மிஸ்” என்று கைகளை உதறியபடியே அலறிக்கொண்டு காயத்ரி வெளியில் எழுந்து ஓடிவந்தாள். சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த காயத்ரியின் அம்மா விளக்கை போட்டாள். அவள் தந்தையும் உறக்கம் களைந்து எழுந்தார். ”அடிக்காதீங்க மிஸ்.. அடிக்காதீங்க மிஸ்” என பிதற்றிய படியே அழுது கொண்டிருக்கும் அவள் அருகில் சென்று தூக்கி ”சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்டா. அப்பா போயி மிஸ்கிட்ட சொல்வேனா?” என்று கொஞ்சினார். அவள் அவரைப் பார்க்காது அம்மாவையே பார்த்து தேம்பிக் கொண்டிருந்தாள். பயத்தால் சுவாசம் சீரற்று இருந்தது. அம்மா அவளை அழைத்துக் கொண்டு சாமி அறைக்கு சென்றாள். சாமிப்படத்திற்கு எதிரில் இருந்த விபூதி மடக்கில் இருந்த விபூதியை எடுத்து காயத்ரியின் நெற்றியில் இட்டாள். பின் குடிக்க தண்ணீர் கொடுத்து தன் பக்கத்திலேயே படுக்க வைத்துக் கொண்டாள். தாயின் சேலையை தன் விரல்களில் நன்றாக சுருட்டி பிடித்தபடியே காயத்ரியும் தூங்கிப் போனாள்.

”பால்.. பால்” எனும் பால்காரரின் குரல் கேட்டுதான் காயத்ரியின் அம்மா எழுந்து தெருக்கதவைத் திறந்தாள். நன்றாக விடிந்து விட்டிருந்தது. அவள் அப்பா எழுந்து சட்டையை அணிந்து கொண்டு செய்தித்தாள் வாங்க பேருந்து நிலையத்திற்கு சென்றார். காயத்ரியும் ஷம்முவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். தெருப் பெருக்கி கோளமிட்டபின் காபி கலந்து இருவருக்கும் குடிக்கக்கொடுத்தாள். தூக்கக் கலக்கத்திலேயே இருவரும் குடித்தனர். காபி குடித்ததும் ஷம்மு தாயிடம் சொல்லிக்கொண்டே கழிவறை நோக்கி ஓடினாள். ”நான் இன்னக்கி ஸ்கூல் போகல” என்று எழுந்திரிக்கும் போதே சினுங்க ஆரம்பித்தாள் காயத்ரி. ”மொதல்ல எழுந்து போயி தெருவுல வெளையாடுமா. ஸ்கூல் போறத பத்தி அப்புரம் பேசிக்கலாம்” என்று அவள் அம்மா சமாதானம் செய்யவும் எழுந்து தெருவிற்கு விளையாடச் சென்றாள். அம்மா சமையல் அறையில் மும்முரமாக இருந்தாள். ஒருபுறம் குக்கர் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குள் ஷம்மு குளித்துவிட்டு துவட்டிக் கொண்டே கூடத்திற்கு வந்தாள். அம்மா தெருவிற்குச் சென்று காயத்ரியை குளிக்கக் கூப்பிட்டாள். ”நா ஸ்கூல் போக மாட்டேன் போ” என்று கூறி கொண்டே குளிக்க முரண்டு பிடித்து உள்ளே வரமறுத்தாள் காயத்ரி. அம்மா எவ்வளவோ கெஞ்சி அவளை குளிக்க வைத்து சீருடைகளை அணிவித்து பள்ளிக்கு தயார் படுத்தினாள். அம்மா எடுத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெளியில் இருவரும் வந்தனர். அப்பா இருசக்கரவாகனத்தை உள்ளிருந்து வெளியில் தள்ளிக்கொண்டு வந்து, ”ஏறி உக்காருங்க. டைம் ஆவுது” என்று அவர்களைப் பார்த்துச் சொன்னார். ஷம்மு ஏறி அமர்ந்தாள். ஆனால் காயத்ரி ஏற மறுத்து அடம்பிடித்தாள். எவ்வளவோ சொல்லியும் அப்பாவுடன் தன்னால் போக முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள். ”நா ஸ்கூலுக்குப் போறேன். ஆனா அப்பா கூட வரக்கூடாது” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள். அவர் மெதுவாக வண்டியை சாய்த்து நிறுத்திவிட்டு காயத்ரியைப் பார்த்து ”நீ அம்மாவ கூட்டிட்டு போடா செல்லம்” என்று கூறினார். அப்போது அவர் மனதில் முந்தின இரவு கோபத்தோடு நடந்து கொண்ட அவரின் சித்திரம் தோன்றி மறைந்தது. ஷம்முவிற்கு அப்போது அப்பாவைப் பார்க்க பாவமாய் இருந்தது. அம்மா புத்தகப்பையை எடுத்துக்கொள்ள அவள் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு தன் அக்காவுடன் அன்று பள்ளிக்கு சென்றாள் காயத்ரி.காலைச் சூரிய ஒளி அவள் முகம் முழுக்கப் பட்டு எதிரொலித்துக்கொண்டிருந்தது.


அன்றிலிருந்து காயத்ரி, தன் அப்பா வீட்டில் இருக்கும்போது, மிஸ் ஆட்டம் ஆடுவதை கவனமாக தவிர்க்கத் தொடங்கினாள். அபிக்கும் அதன் பிறகு மிஸ் ஆவது ரொம்பச் சுலபமாக இருந்தது. செந்திலும் இவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை முற்றாக நிறுத்திவிட்டிருந்தான்.

2 comments:

 1. குழந்தைகளின் மனவியலை மிகவும் அற்புதமாக சிறுகதையாக மாற்றி இருக்கிறீர்கள். பெரியவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கதை. நன்றி.

  ReplyDelete
 2. என்னவளே
  எப்போதும் கணினி
  இடையிடையே தொலைக்காட்சி
  பாவம் இளந்தலைமுறை!

  அடடா
  பஸ் ஆட்டம் மிஸ் ஆட்டம்
  ஐஸ் ஆட்டம் கல் ஆட்டம்
  எவ்வளவு இழந்துவிட்டார்கள்?

  ReplyDelete