Wednesday, February 27, 2013

வாழ்வியலின் துல்லியம் கூடிய கதைகள்


தமிழ்ச் சிறுகதை பரப்பை வளர்த்தெடுத்ததில் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்கும் பணியும் தீவிரமானது. அவர்களில் மிகவும் குறிப்பிடப்படவேண்டிய படைப்பாளி எழுத்தாளர் கந்தர்வன். சமூக அவலங்களை பிரச்சார யுக்தியின்றி அழகியலோடு எள்ளலும் அங்கதமும் கலந்து வெளிப்படுத்தும் முறையை கந்தர்வன் தன் கதைகளில் நுட்பமாகக் கையாண்டுள்ளார். சிறு சங்கடமுமின்றி இவரது கதைமொழி விரிந்து, மனித வாழ்வினூடாகக் கிளர்ந்தெழும் பிணக்குகளையும் சிடுக்குகளையும் காட்சிப்படுத்துகிறது. கந்தர்வன் கதை கூறல், நமது மூதாதைகளிடமிருந்து பெறப்பட்ட கதை கூறலின் மரபு வழிபட்டதாகும். நவீன வாழ்க்கை நெருக்கடிகளில் சிக்கி காணாமல் போய்விட்ட கதை கூறும் தாத்தா பாட்டிகளின் பதிலியாக நின்று கந்தர்வன் தன் கதைகளைக் கூற ஆரம்பிக்கிறார்.

கந்தர்வன் கதைகளை ஒரு சேர மொத்தமாக வாசிக்கும்போது கவரும் அம்சம், அவரது எழுத்தில் தன்னெழுச்சியாகத் தோன்றும் காட்சிகளின் படிமங்கள்தான். உதாரணத்திற்கு ‘அமாவாசை ராத்திரியில் நாய் நரிகளின் மனசில் தெரியும் கடல் கடலாய்க் கொம்புகள்’ எனும் படிமம். இதைப்போன்ற கலாப்பூர்வமான எழுத்து முறையினால்தான் பிரச்சார நெடி தூக்கலாகவும் அழகியல் குறைந்தும் காணப்படும் பல முற்போக்கு இலக்கியவாதிகளிடமிருந்து கந்தர்வன் பிரிந்து தனித்து நிற்கிறார்.

அனைத்து முற்போக்கு எழுத்தாளர்களும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் சூழலின் நெருக்குதலால் ஏற்படும் விபரீதங்களையும் கதைப்படுத்தினாலும்கூட, கந்தர்வனின் விட்டேத்தியான பாசாங்கில்லாத நடை பிறரிடமிருந்து கதையை வேறொரு தளத்திற்கு நகர்த்தி வாசகனுக்குக் காட்சிப்படுத்துகிறது. இதற்குச் சிறந்த உதாரணமாக, ’கொம்பன்’ ’சீவன்’ கதைகளைக் கூறலாம். கொம்பன் கதையில் இயற்கையில் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிந்து களியாட்டம் போடும்மாடுகள், வீட்டு மாடுகளாக்கப்படும் போது அவைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கந்தர்வன் மிகவும் நேர்த்தியாக எழுதிச் செல்கிறார். அதன் இணைபிரதியாக இன்றைய இளைஞர்களின் வாழ்நிலை நம்முடைய மனதில் தொடர்ந்து வேறொரு கதையை நிகழ்த்திக் காட்டுகிறது. விதை நசுக்குதல் என்பதை நாம் அதன் விரிந்த தளத்தில் எதன் குறியீடாக வேண்டுமென்றாலும் பார்க்க வாய்ப்பிருக்கிறது. இன்றைய இளைஞர்களும் ஏதோவொரு விதத்தில் இச்சமூகத்தால் காயடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக சமூகத்தோடு பொருத்தப்படுபவர்களாகவே இருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனம். கந்தர்வன் உணர்த்த விழையும் சித்திரமும் அதுதான்.

தொகுப்பில் அடர்த்தியான பல கதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. பல கதைகளில் கொம்பன் கதையைப் போல் இணைபிரதியாக வேறொரு கதை நிகழ்ந்தபடியே இருக்கிறது. தகிக்கும் வெப்பத்தையும், பாலமென பிளந்து கிடக்கும் கரிசல் காட்டையும். தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் செல்லும் குழந்தைகளையும் அதன் உஷ்ணம் கொஞ்சம்கூட மாறாமல் எழுதிச் செல்கிறார் கந்தர்வன். தொகுப்பில் மிகவும் சிறந்த கதைகளென ’சீவன்’, ’சாசனம்’, ’துண்டு’, ‘தராசு’, ’அப்பாவும் மகனும்’ ஆகிய கதைகளைக் கூறலாம். இன்றளவும் சீவன் கதையின் இயங்கு தளம் மிகவும் நுட்பமாக நமது கிராமியச் சூழலோடு பின்னிப் பினைந்துள்ளது. அது நமது வாழ்வியலில் நம்பிக்கைகளை கறாராக கேள்விக்குள்ளாக்குகிறது. துண்டு கதையில் துண்டை ஒரு குறியீடாகக் கொண்டு சமகால அரசியலை அதன் சாதுர்யமான அடக்குமுறைகளை காட்சிப்படுத்துவதில் கந்தர்வன் வெற்றி பெற்றுள்ளார்.’சாசனம்’ கதையில் கொரமுட்டு புளியமரம் ஓர் குறியீடாக வருகிறது. அந்தப் புளியமரம் யாருக்குச் சொந்தமெனக் கூறாமல் கந்தர்வன் வாசகனுக்கு உணர்த்திவிடுகிறார். மேலும் கடந்த தலைமுறையும் இந்தத் தலைமுறையும் அடக்குமுறையின் அரசியலை எவ்வாறு பார்க்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

பொதுவாக கந்தர்வன் கதைகளை விளிம்புநிலை மக்களின் துயரங்கள், சக மனிதர்கள் தங்களுக்குள் மேற்கொள்ளும் வன்முறை ஆகியவற்றை அம்மக்களின் மொழியிலேயே அழகியலோடு வெளிப்படுத்தும் முயற்சி என்று புரிந்துகொள்ளலாம். அவர் கதைகளினூடாக நிகழ்த்திக் காட்டும், உணர்த்த எத்தனிக்கும் கருத்துகளின் முனைகள் சில இடங்களில் அதிக கூர்மையுடனும், சில இடங்களில் மிகவும் தட்டையாகவும் காட்சியளிக்கின்றன. ஆனாலும் அனேக கதைகளில் மிகத் துள்ளியத்துடன் வாழ்வியலை பதிவு செய்திருப்பதையும் மறுக்கமுடியாது. கந்தர்வன் பெரும் வீச்சென மொழியை அதன் இளகுத் தன்மையுடன் பயன்படுத்தி, தங்குதடையின்றி பல்வேறு சித்திரங்களை உருவாக்கிச் சென்றபடியே இருக்கிறார். கந்தர்வனின் எழுத்தில் எந்தளவிற்கு மொழி இளகிய வடிவில், வாசிக்கத் தோதான விதத்தில் இருக்கிறதோ அதே அளவிற்கு ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பூட்டக் கூடியவையாக மாற்றம் கொள்வதற்கான ஆபத்துமிருக்கிறது.

தமிழ்ச் சிறுகதைப் பரப்பை அறிந்துகொள்ள விரும்பும் யாரும் கந்தர்வனை விட்டுவிட்டு அம்முயற்சியில் முழுமை பெற முடியாது. மேலும் அவர் வாழ்ந்த காலகட்டத்து நெருக்கடிகளை ஒரு படைப்பாளி என்ற முறையில் அவர் எவ்வாறு எதிர்கொண்டுள்ளார் என்பதை அறிந்துகொள்ளவும் அவரது கதைகளை வாசிக்க வேண்டியத் தேவையிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தொகுப்பாக வாசிப்பது அவர் எழுத்து குறித்தான வேறொரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவும் உதவும். அந்த வகையில் இந்த தொகுப்பு முக்கியமானது.

கந்த்ர்வன் கதைகள்- தொகுப்பு : பவா செல்லத்துரை; வம்சி புக்ஸ், திருவண்ணாமலை


நன்றி: தீராநதி, செப்டம்பர் 2006

3 comments:

 1. என்னவளே
  நீ ஒரு குழந்தையைப் போல
  மூச்சு விடாமல் பேசுவது
  எத்தனை அழகு?

  அடடா
  சலிப்பூட்டும் படியான
  அதே கதைகளை மீண்டும்
  கேட்க வைக்கிறது காதல்!

  ReplyDelete
 2. நீ ஒரு குழந்தையைப் போல
  மூச்சு விடாமல் பேசுவது
  எத்தனை அழகு?
  அடடா !
  keep it up
  thanku
  latha

  ReplyDelete
 3. அழகான பதிவு.... தொடரட்டும் ...பகிர்வுக்கு நன்றி
  Joshva

  ReplyDelete