Saturday, February 9, 2013

நாட்பட்ட ரணத்தின் வலிகூடிய பிரதி


“நீதி என்பது அரசின் வன்முறை, வன்முறை என்பது மக்களின் நீதி “ எனும் வரிகள் ’ம்’ ஐ வாசித்து முடிக்கையில் மனதில் தோன்றுவதை உணரமுடிகிறது. தினம் தினம் அரசு மற்றும் இன்னபிற சக்திகளின் சுரண்டலால் மெல்ல தேய்ந்து வரும் வாழ்வு குறித்தான நம்பிக்கைகளுடனும், வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துடனும் இருக்குமொருவன் ‘ம்’ ஐ வாசிக்க நேர்கையில் ஏற்படும் அதிர்வுகளையும், பெரியதும் சிறியதுமாக பிரக்ஞையற்று வெளிவரும் பல்வேறு தட்டையான நாவல்களுக்கு மத்தியில் ‘ம்’ ஓர் கதைப் புத்தகம் என அடையாளப் படுத்தப் படுவதையும், முப்பது வருடங்களாக கொடிய யுத்தம், ஒரு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள், அய்ம்பதினாயிரம் அங்கவீனர்கள், இருபதாயிரம் விதவைகள்,. எல்லாக் கதைகளையும் கேட்டுக் கேட்டு ம் சொல்லிக் கொண்டேயிருக்கும் என் சனங்களுக்கு எனும் எழுத்தாளரின் ஆரம்ப வரிகளையும் அதனுள் பொதிந்திருக்கும் நாட்பட்ட ரணத்தின் வலியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிங்களப் பேரினவாதம், இயக்கப் பயங்கரவாதம், தமிழ்ச் சமூகத்திற்கிடையேயான சாதியச் சிக்கல்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது ஷோபாசக்தியின் எழுத்து. சமகால தமிழ் எழுத்துப்பரப்பில் இந்தளவிற்கு கேலியும் கிண்டலும் நிறைந்த, அதே சமயம் உள்ளார்ந்த பல சரடுகளைக் கொண்ட ஓர் கதைப்புத்தகம் வெளிவந்திருப்பதும், நூலில் பேசப்படும் நிகழ்வுகள் அனைத்தும் இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதுமே இந்நாவலுக்கான வாசிப்பின் அவசியத்தைப் பெற்று விடுகிறது. நமது பக்கத்து தேசத்தில் நடக்கும் இவ்வொடுக்கு முறைகளை நமது அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் தங்களது சொந்த லாபங்களுக்காக திரித்துக் கூறுகிறார்கள் என்பதையும் இந்நாவலை வாசிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது. பக்கத்தில் என்ன நடக்கிறதென்பதையே அறிந்து கொள்ள விரும்பாத அடுத்த தலைமுறையையும் உருவாக்கிவிட்ட மிகவும் சவுகரியமான நமது வாழ்க்கையை நோக்கியும் ஷோபாசக்தியின் விரல்கள் நீள்வதாகவே நான் உணர்கிறேன். அல்லது அந்த குற்ற உணர்ச்சி மெல்ல நம்மையும் பீதியடையச் செய்கிறது.

இதுவரை நாம் கேட்டும் கண்டும் வந்த செய்திகளையும் காட்சிகளையும் உடைத்து சுக்கு நூறாக்குகிறான் நேசகுமாரன். நமது செய்திகள் எந்தளவிற்கு சார்புத் தனமையுடையதாகவும், புனைவின் கவர்ச்சி நிரப்பியதாகவும் விளங்குகின்றன என்பதை நேசகுமாரனின் விவரிப்புகளில் இருந்து உணரமுடிகிறது. சிறையில் காட்டப்படும் திரைப்படம், துப்பாக்கிகளைக் குறித்த மூன்று கதைகள் மற்றும் நாவலின் முடிவில் வரும் பனிதேசத்தில் வாழ்ந்த ஒரு கிழவனின் கதை வழி எழுத்தாளர் கட்டமைக்கும் உணர்வுத்தளத்தின் மூலம் நாவலின் தொடர்ச்சியில் ஓர் இடைவெட்டை நிகழ்த்தி மிகவும் நெருக்கடியான கட்டங்களில் வெகுலாவகமாக தப்பிச்செல்லும் நமது சூழலின் மொண்ணைத் தனத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ஷோபாசக்திக்கு யாருடைய பதில்களும் பொருட்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை.

நாவலின் பிரதான அம்சமாக செயல்படுவது, பல்வேறுபட்ட சிறைச்சாலைகளே. நமது அறிவுத்தளத்திற்கு சிறிதும் எட்டியிராத சிறைச்சாலைகள், வெலிக்கடச்சிறைப் படு கொலைகள், மட்டக்களப்புச் சிறை உடைப்பு ஆகியவற்றை கூறிச்செல்லும் போதே சிறைகளில் நடக்கும் படுகொலைகளும் அழித்தொழிப்புகளும் நமது கண்முன் காட்சிகளாக விரிவடைகின்றன. ரத்தமும் சதையுமான நிகழ்ச்சிகள் ஷோபாசக்தியின் எழுத்தில் எவ்வித இடையூறுமில்லாமல் பதிவாகின்றன. இயக்கத்தில் உள்ள பொடியன்கள் கூட எந்தளவிற்கு ஒடுக்குமுறைகளை கை கொள்கிறார்கள் என்பதை எள்ளலுடன் சொல்லும் அதே வேளை, இயக்க பயங்கரவாதத்தையும் மிகவும் கறாராக விமர்ச்சிக்கவும் செய்கிறார். நான் தனிமனிதன், நீங்கள் ஒரு தனிமனிதன் என்றால் மன்னித்து விடுவேன். ஆனால் நாங்கள் இருவருமே தனி மனிதர்கள் அல்ல. உங்கள் தவறுக்கு நிச்சயமாக அமைப்பு தண்டனை வழங்கும். இல்லாவிட்டால் இயக்கம் நடத்த முடியாது. ஒத்துக்கொள்கிறீர்களா? இது நேசகுமாரன் கலைச்செல்வனிடம் கேட்பதாக வருகிறது. பிறகு, நேசகுமாரன் கலைச்செல்வனை பெல்ட்டால் அடிக்கிறான். இதைத் தொடர்ந்து நேசகுமாரன் கேட்கிறான். ”தோழர் நான் செய்வது சரிதானே?” மேற்கண்ட தண்டனை எதன் பொருட்டு அளிக்கப்படுகிறது தெரியுமா? கலைச்செல்வன் கள் குடித்ததற்காக. இதன் மூலம் எழுத்தாளர் மக்களுக்காகப் போராடும் இயக்கங்கள் எவ்வாறு தனிமனித சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதித்தெடுக்கின்றன என்பதை நுட்பமாகப் பதிவு செய்கிறார். இதைப்போன்றதொரு சித்திரம் நாவலின் கடைசியிலும் வருகிறது. புகலிடத்தில் அந்தநாடு எவ்வளவுதான் தனிமனித சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாப்பதாக இருந்தபோதிலும் நேசகுமாரனை ஒழுக்க விதிகளுக்கு உட்படுத்தி தண்டனை வழங்கும் இயக்கச் செயல்பாட்டையும் காணமுடிகிறது.

ஜெயவேவா எனும் ஒற்றை வார்த்தை எவ்வாறு சாவின் குறியீடாக மாறி சிறைமுழுக்க அலைகிறதென்பதையும், எவ்வாறு திட்டமிட்டு சிறையுடைப்பும், அழித்தொழிப்பும் நடத்தப் படுகின்றன, அதிகாரிகள் எவ்வளவு தூரம் தங்களது அதிகாரத்தின் கரங்களை நீட்டுகிறார்கள் என்பதையும் உணரமுடிகிறது. சிங்களப்பேரினவாத ராணுவம் கொடூரமான முறையில் தமிழ்கைதிகளை நடத்தும் விதத்தை தேர்ந்த திரைப்படக் கலைஞனைப்போல மிகக் கச்சிதமாக காட்சிப்படுத்துகிறார். ஒரு நாவலில் subtext ன் அவசியம் பற்றி நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். ஆனால் இந்நாவல் முழுக்க மிகக் கவனமாக இதைக் கையாளும் ஷோபாசக்தி, மேலும் புனைவெல்லையிலிருந்து வாசகனைக் கொடூரமும் வன்கொலைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் நோக்கி நகர்த்தவும் செய்கிறார்.
நீதி மன்றம், மற்றும் நீதிபதிகள் குறித்த மிகவும் கிண்டலான வர்ணனைகள் பிரதி முழுக்க விரவிக்கிடக்கிறது. வன்கொடுமைகளும் அழித்தொழிப்புகளும் எவ்வாறு நடந்தேறுகின்றன என்பதை அறியும்போது நமக்குள்ளும் மெல்ல அச்சம் பரவுகிறது. நாவல் முழுக்க நாம் நிறைய துர்மரணங்களையும் வன்கொலைகளையும் சந்தித்திருந்தாலும், பக்கிரியின் கொலை மட்டும் நம்மை பீதிகொள்ளச் செய்கிறது. அவரின் கொலை மூலம் பலரின் இயக்கம் தொடர்பான நம்பிக்கைகள் மீண்டுமொரு முறை சிதைக்கப்படுகிறது. ”இந்த மனிதன் இயக்கம் தொடங்கிய நாளன்று சிறைக்குச் சென்றவன், தன் தாய்நிலத்துக்கு திரும்பி வரும்போது இவனது இயக்கமே தடை செய்யப்பட்டு விட்டது” எனும் வரிகள் மூலம், நடந்துகொண்டிருக்கும் பயங்கர வாதச் செயல்களின் இறுதி இலக்கு என்ன என்று நமக்குப் புரிந்து விடுகிறது. நாவலில் பக்கிரிக்கு இணையான பாத்திரமாக சண்முகநாதனைச் சொல்லலாம். தனது இருப்பைத் தெரிவிக்க அவருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக கிராம நிர்வாக அதிகாரி அறிவித்து விடுகிறார். ஆனால் அவரோ பதினெட்டு வருடம் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார். மிகவும் நுட்பமான விவரணைகளால் விரிவாக அதை எழுதுகிறார் ஷோபாசக்தி. எந்த வெளிவுலகத் தொடர்புமே இல்லாதவரிடம், பிரபாகரன் எங்கே ஒளிந்திருக்கிறான் எனும் கேள்வி கேட்கப்படுகிறது. அந்நேரம் பிரபாகரன் வன்னிக்காட்டில் சர்வதேச செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார் என முடிக்கிறார். ஒரு தனி மனிதனது வாழ்க்கையில் சிங்கள அரசாங்கம் எந்தளவிற்கு அதிகாரத்தை செலுத்தியிருக்கிறதென்பதையும், அவனது இருப்பு எப்படி கேள்விக்குள்ளாக்கி இருக்கிறதென்பதையும் அவதானிக்க முடிகிறது.

ஒட்டுமொத்தமாக நாவலை வாசித்து முடிக்கையில் நமக்குள்ளும் யுத்தம் தொடர்பான பல கேள்விகள் எழுகின்றன. எல்லோரையும் அழித்தொழித்த பின்பு இந்த பூமி யாருக்கு பரிசளிக்கப்பட இருக்கிறது எனும் ஆதாரமான சிந்தனை மனதை அழுத்துகிறது. ஷோபாசக்தியின் மொழியாளுமை மற்றும் நாவலின் அச்சாக்கம் கச்சிதமாகக் கூடிவந்திருக்கிறது. நாவலின் வடிவமைப்பு புதுமையாக இருந்தபோதிலும் சில நேரங்களில் வாசிப்பிற்கு இடறலாகவும் அமைந்து விடுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி எவ்வித பின் விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் நடப்பு அரசியல் சார்ந்த அடக்குமுறைகளையும் பயங்கரவாதத்தையும் கேள்விக்குள்ளாக்குவதில் நாவலின் எதிர்வினைகளுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. விவாதிக்கவும் நிறைய திறப்புகளை கொண்டிருக்கிறது நாவல். வழக்கம்போல் நாம் என்ன எதிர்வினையாற்றப் போகிறோம் என்னும் சூட்சுமம் புரியாமல் காற்றில் அசைந்தபடி இருக்கிறது ’ம்’ எனும் பிரதி.

( உன்னதம் பத்திரிக்கையில் வெளியான மதிப்புரை இது. ஆண்டு நினைவில் இல்லை.)

2 comments:

 1. என்னவளே
  அரசனின் ஆணவ ஒலியும்
  அடிமையின் முனகல் ஒலியும்
  ஒன்று போலவா கேட்கும்?

  அடடா
  அரசன் சொல்லும் ”ம்” க்கும்
  அடிமை சொல்லும் “ம்” க்கும்
  எத்தனை வித்தியாசம்?

  ReplyDelete