Tuesday, January 5, 2016

ஹே ராம்

பேருந்தில் உடன் பயணிக்கும் ஒருவர் தன்னை, “அயோத்தி ராமர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டால்  நீங்கள் எப்படி உணர்வீர்கள்?. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. உடல் முழுவதும் மெல்ல நடுக்கம் பரவியது. அவர் கூறியதிலிருந்து சுலபத்தில் மீள முடியவில்லை. “நீங்கள் கூறுவது உண்மைதானா? எனும்படி அவரை ஆழ்ந்து பார்த்தேன். தனது காவியேறிய பற்களைக் காட்டிச் சிரித்து, செல்லமாகக் கிள்ளிய போது தான் சுயநினைவுக்கு மீண்டேன். மட்டமான மதுவை அவர் அருந்தி இருக்கக் கூடும் என்பதை அவரிடமிருந்து வந்த நாற்றத்தை வைத்து ஓரளவு யூகிக்க முடிந்தது.

                பேருந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கோடைகால மாதலால் ஒரே உஷ்ணம். வேர்த்துக் கொட்டியது. உறவினர்களைப் பார்ப்பதன் பொருட்டு குஜராத் வந்து போக இதுதானா சரியான நேரம், என என்னையே நொந்து கொண்டேன். நடத்துனர் என் இருக்கை அருகே வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆகக்கூடும். ஆனால், இவர் கையில் பணத்தை வைத்துக் கொண்டு நடத்துனருக்காக காத்திருப்பதைக் கண்டு சிரிக்கத்தான் தோன்றியது. காந்தி நகர் மையப் பேருந்து நிலையத்திலிருந்து வெகு தூரம் கடந்து விட்டிருந்தோம். அவரது உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. குளித்து ரொம்ப நாள் ஆகியிருக்கலாம். ஒரு வேளை இராவண யுத்தம் முடிந்ததிலிருந்து கூட இருக்கலாம்.

                என் சிந்தனை சட்டென சீதையின் மேல் குவிந்தது .எவ்வளவு வாளிப்பான உடம்பு. இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டவள் எங்கு இருக்கிறாள்? அவ்வப்போது ஊடகங்களில் ராமர் பற்றிய செய்திகள் மட்டும்தானே வருகிறது? சீதை என்ன வானாள் என எனக்குள்ளேயே கேள்விக் கணைகளை ஏவிக் கொண்டேன்.

                கணைகள் எனும் போது ராமனது “வில்” வேறு ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. மெல்ல அவரைத் திரும்பிப்பார்த்தேன். கழுத்தில் ஒரு நைந்த ஜோல்னா பை மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. அவரது சட்டைப் பையில் கசங்கிய நிலையிலிருந்த புகையிலை பொட்டலத்தை நான் பார்த்ததை அவர் பார்த்திருக்கக் கூடும் மெல்லிய புன்னகையோடு அதை கையில் எடுத்து பாலித்தின் பையில் “ராமவிலாஸ் வாசனைப் புகையிலை” என இந்தியில் எழுதியிருந்ததை வாசித்துக் காட்டினார். நான் அதில் அச்சிடப்பட்டிருந்த நீலம் பாரித்த ராமனையும், சீதையையும், அவர்களுக்கு கீழே அமர்ந்திருந்த அனுமனையும் பார்க்க நேரிட்டது. நாடகத்திலும், திரைப்படத்திலும் பார்த்த நீலம் பூசிய ராமனைப் போன்ற மனிதர்களை நிஜ வாழ்க்கையில் சந்திக்காதது எனக்கு சிறுவயதுகளில் பெருத்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியது. மேலும், சிறுவயதில் எனக்கும் அந்த வண்ணத்தின் மீது தனியானதொரு ஈடுபாடும் வளர்ந்திருந்தது. அவரும் ஒருமுறை அப்படத்தை ஊன்றி கவனித்து விட்டு, என்னைப் பார்த்து மெல்லச் சிரித்தார்.

                அவரிடம் கேட்க எனக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. ஆனாலும், அவரைப்பற்றிய சந்தேகம் துளிர்விட்டபடியே இருந்தது. உண்மையில் அறிந்தவரை ராமன் எப்பேர்பட்ட வீரன். தோள் கண்டார் தோளே கண்டார் எனக் கூறுவார்களே, அதுவெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா? அவரைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. நீண்ட நாட்களாக பட்டினியால் வாடி, மார்பு சூம்பிக் கிடந்தது. பார்வை கூட மட்டுப்பட்டிருக்கக்கூடும். அவரிடம் எப்படிக் கேட்பது என்று புரியவில்லை. “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்” எனக் கேட்டால் “அயோத்தியிலிருந்து” என்று மட்டும் கூறும் அவர் வேறொன்றும் கூறுவதில்லை.
                பேருந்து  சாலையோர உணவு விடுதியில் நின்றது. பயணிகள் சாப்பிட, சிறுநீர், மற்றும் மலம் கழிக்க, இறங்கிக் கொண்டிருந்தனர். அவர் மட்டும் இறங்கவில்லை. பணம் இல்லாமல் இருக்குமோ என்று அவரைக் கேட்டேன்.  “அதுவெல்லாம் பிரச்சினையில்லை”, என்று கூறியபடி துண்டை எடுத்து கழுத்தைத் துடைத்துக்கொண்டார்.  “பின்னர் எதுதான் பிரச்சனை”, என்று கேட்டபோதுதான் ஏற்கனவே  குஜராத்தில் பாதிக்கப்பட்ட கதையைக் கூறத் தொடங்கிவிட்டார்:
                அன்றும் நல்ல வெயில். காந்தி நகர் பேருந்துநிலையத்தில் கால்வைக்கும்போதே உணர்ந்தேன், ஏதோ அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கிறதென. மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. என்னை இறக்கிவிட்ட பேருந்தைத் தவிர வேறொன்றும் அங்கு இல்லை. சாலைகளில் அங்குமிங்குமாக பேருந்து டயர்கள் எரிந்து கொண்டிருந்தன. காவலர்கள் ரோந்து சுற்றிக் கொண்டு வந்தனர். மனதில் மெல்ல பயம் ஊறியது. கால்கள் துவண்டன. அப்போது கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் என்னை சூழ்ந்து கொண்டது தலையில் காவித்துணி கட்டியிருந்தவன், “நீ யார்? என என்னைக் கேட்டான். அதே நேரம் சாலையில் ஒரு கும்பல் ஒரு பெண்ணை சூழ்ந்து கொண்டு தொந்தரவு செய்தபடி இருந்தது. அவள் ஈன சுரத்தில் கத்தியது என்னை குலைநடுங்க வைத்தது. சாலையென்றும் பாராமல் அவர்கள் அங்கேயே அந்தப் பெண்ணை புணரும் கோரத்தை நானும் பார்க்க வேண்டியிருந்தது. தொடர்ந்த புணர்ச்சியின் காரணமாக அவள் மூர்ச்சையானாள். அருகில் கிடந்த பர்தாவை எடுத்து அவள் யோனிக்குள் செருகிவிட்டு மறைந்தது அந்த கும்பல். பயத்தில் சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. இதைப் பார்த்த அவர்கள் கிண்டலும், கேலியுமாக சிரித்தனர். தலையில் காவித்துணி கட்டியிருந்தவன் என்னைப் பார்த்து இவ்வாறு கேட்டான்: நீ இந்துவா? முசல்மானா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் தான் ஓர் இந்துவாக எப்போதாவது உணர்ந்திருக்கிறோமா எனும்சிந்தனை என்னுள் ஓடியது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவன், “அவன் வேட்டிய அவுருங்கடா” என்றான். அவன் கூறி முடிக்கும்முன், நான் இவ்வளவு பரந்த உலகில் அம்மணமாக நின்றேன். ஒருவன் தன் கரங்களால் என் குறியைத் தூக்கிப் பார்த்து “சுன்னத் செய்யல, இவன் இந்துதான்” எனக் கூறி, என்  வேஷ்டியை எடுத்துக் கொடுத்தான். எனக்கு ஏதும் புரியவில்லை. இவ்வளவு சர்வசாதாரணமாக ஒருவனை நடத்த முடியுமென்பதை நான் அதுவரை கண்டதில்லை.
                சாலையில் வேறொரு கும்பலிடம் அகப்பட்ட ஒருவன் சத்தமாக  ‘ஹேராம்’எனச் சொல்லிச் செல்வது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எனக்காகவா இதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள், என நினைத்த போது கொஞ்ச நேரத்திற்கு முன்பு நான் அம்மணமாக நின்றிருந்த காட்சி மனதில் தோன்றி மறைந்தது.

                காவித்துணியைக் கட்டியிருந்தவன் என்னைப் பார்த்து கூறினான். “பார்த்து பதமாக போ”, “நம்மாளே எவனாவது போட்டுத் தள்ளிடப் போறான்”, என்று கூறி தன் காவித்துணியை என்னிடம் கொடுத்து தலையில் கட்டிச் செல்லுமாறு கூறினான். இன்னொருவன் என்னைச் சீண்டி அழைத்து, “ஏதாவது பிரச்சினைன்னா  ‘ஹேராம்’ என வேகமாக கத்தத் தொடங்கிவிடு. ஆபத்து வராது”, என்று கூறினான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் என்னை கடந்து சென்று விட்டார்கள். ஆசுவாசப் படுத்திக்கொள்ள நன்கு காற்றை உள்ளிழுத்து விட்டேன். அவர்கள் என்னையே  ‘ஹேராம்’ எனச்சொல்லச் சொன்னது எனக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. நான் உயிரோடு மீள்வேன் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அங்கு வன்புணர்ச்சிக்குஆளாக்கப்பட்ட அவள் நிச்சயம் இறந்திருக்கக் கூடும். அதிகமாகன  ஈக்கள் அவள் உடலெங்கும் மொய்த்துக் கொண்டிருந்தன. அருகில் செல்ல எனக்கு பயமாக இருந்தது. அவளைக் கடந்து செல்லும் ஒருசிலர் கூட ஏதும் காணாதது போல சென்று கொண்டிருந்தனர். ஒரு ரோந்து வாகனம் என்னை கடந்து சென்றபோது நான் அதை உதவிக்கு அழைத்தேன். அவர்கள் என்னை வண்டியில் ஏற்றிக்கொண்டனர். வண்டியில் காவித்துணி கட்டிய வேறொருவனை மீண்டும் பார்த்தபோது என்னுள் பயம் குமிழ் விட்டது. கொஞ்ச தூரம் சென்ற பின் ஒரு போலீஸ்காரனிடம் தான் இங்கு இறங்கிக் கொள்வதாக கூறி அவன் இறங்கி நடந்தான். காவலர்கள் என்னை பத்திரமாக பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
                இந்த சம்பவத்தை அவர் கூறி முடித்தபோது அவரது முகத்தைப் பார்த்தேன். பயம் முகமெங்கும் படர்ந்திருந்தது. கைகால்களில் ரோமங்கள் சிலிர்த்திருந்தன. நெடிய மூச்சை உள்ளிழுத்து விட்டார். தன் பையிலிருந்து புகையிலையை கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டி வாயில் அதக்கிக் கொண்டார். பேருந்து கிளம்பியது. அவரிடமிருந்து அதிகப்படியான கற்றாழை நாற்றம் வரத் தொடங்கியபோது என்னால் அவர் அருகில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. என் தலையை வெளிப்பக்கமாக திருப்பிக் கொண்டேன். சிறிது நேரத்தில் என்னை யாரோ தீண்டுவது போல இருந்தது. திரும்பிப் பார்த்து, அவர்தான் என்னை கூப்பிட்டது என்று தெரிந்துகொண்டு, “என்ன வேண்டும்” என்று கேட்டேன்.
                “குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும்” என்றார்.
                என் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுத்தேன். வேக வேகமாக அருந்தினார். “மெதுவாக குடியுங்கள்” என்றேன். தண்ணீரை மேலும், கீழும் சிந்தியபடி குடித்து முடித்து நன்றி கூறினார். எப்படி இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே என்றும், இந்த தள்ளாத வயதிலும்ஏன் இப்படி சுற்றித் திரிய வேண்டுமெனவும் எண்ணிக் கொண்டேன்.
                சிறிது இடைவெளி விட்டு நானே அவரிடம் பேசினேன்: “நீங்கள் ஏன் இப்படி இந்த வயதிலும் ஒண்டியாக கஷ்டப்படுகிறீர்கள்?
                “ரொம்ப காலமாக நான் தனியாகத்தான் இருக்கிறேன்” என்றார் அவர்.
                “ஏன்? என்றேன்.
                 “அது பெரிய கதை சார்” என்றவரின் மனதில் புகைப்படத்தின் துல்லியத்துடன் இலங்கையில் இருந்து சீதையை மீட்டு வந்த காட்சியும் அதன் பிறகான நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக குமிழிடத் தொடங்கின.
           தூரத்தில் கடல் சீற்றத்தோடு மேலெழும்பிச் சரிந்து கொண்டிருந்தது.ஓங்கி வளர்ந்திருந்த தென்னைகள் காற்றின் போக்கிற்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தன.சீதையை மீட்டு வந்த பின்பும் இனம் புரியாத வேதனையில் துடித்துக்கொண்டிருந்தது ராமரின் மனம். ராவணனின் தோட்டத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைப் பற்றி மக்கள்  என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை அவர் மனதை ஒரு முள்ளாக கீரிக் கொண்டிருந்தது. வானரப் படைகள் அவரைச் சுற்றி சூழ்ந்து நின்று கொண்டிருந்தன.
                சீதை தன் மனைவி மட்டும் அல்ல ; அவள் இந்த பரந்த பேரரசின் மகாராணியாகவும் அல்லவா இருக்கிறாள். அடுத்தவன் அரண்மனையில் அடைக்கப்பட்டு இருந்தவள் எப்படி மகாராணி பட்டத்தை சுமந்து கொண்டிருக்க முடியும் என்று யார் மனமாவது எண்ணினால் என்ன செய்வது எனும் யோசனையும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. காலம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.
                ஆனால் ராமர் மனம் பலவாராகக் குழம்பிக் கிடைப்பதை உணராமல் அரண்மனைக்குச் சென்று வாழ்க்கையை மீண்டும் புதியதாகத் தொடங்குவது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் சீதை. புல்லினங்கள் சடசடத்துக்கொண்டு திரிந்தன. வண்டின் ரீங்காரம் நெடுந்தொலைவிற்கு பரவியிருந்தது.
                தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட பர்னசாலைக்கு வந்ததிலிருந்தே ஏதோ சிந்தனையில் இருக்கும் ராமரைப் பார்த்தாள். அருகில் வந்து அவரின் கண்களை ஊடுருவினாள். அவர் முகம் கலவரம் அடைந்து காணப்பட்டது. எதுவும் விளங்காமல் அவரிடம் கேட்டாள் :   “யுத்தம் தான் ஜெயமாகிவிட்டதே இன்னும் என்னை யோசனை?” அவள் வார்த்தைகள் அவரின் செவியில் மோதியபோது தான் அவர் சீதையை திரும்பிப் பார்த்தார். தனது மனதை முள்ளாக அறுத்துக் கொண்டிருக்கும் கேள்வியை அவளுக்கு எப்படி புரியவைப்பது  என்று தெரியாமல் துடித்தார். அவர் ஏதோவொரு சங்கடத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருப்பதை புரிந்துகொண்டவளாக,  “என்னிடம் சொல்லாமல் மறைக்க உங்களிடம் எதுவும் இருக்கிறதா அன்பே?” என்று வார்த்தைகளில் அன்பை குழைத்தபடிக்  கேட்டாள்.
                இதற்குமேல் அவரால் மறைக்க முடியவில்லை அவர் மனத்திற்கும் தாங்கும் சக்தி இல்லாமல் இருந்தது. சீதையின் முகத்தை மீண்டும் உற்றுப் பார்த்தார். அவள் கண்களைப் பார்த்தார். சீதையை யாராவது ஐயப்பட்டு, மகாராணியாக இருக்கத் தகுதியற்றவள் என்று சொல்லி விடுவார்களோ என்று எண்ணியபோது மறுபடியும் அவருக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. அந்த நொடியில் சீதையை நிராகரிப்பதே சரியெனப் பட்டது அவருக்கு. தனது குல கௌரவத்திற்கு அகலாத வடுவாக பிறன் சிறையில் இருந்த சீதை இருந்துவிடுவாளோ என்று எண்ணித்துடித்தார்.
                என்ன தான் நினைக்கிறார் என்பது புரியாமல் அவள் அவரைப் பார்த்து, “போர்தான் முடிந்துவிட்ட்தே அப்புறமும் வில்லை சுமந்து கொண்டே தான் இருக்க வேண்டுமா?”  என்று கேட்டாள். வில்லை எடுத்து அருகில் சார்த்தி விட்டு சீதையைப் பார்த்து உரையாடத் தொடங்கினார்.
                 “பெண்களுக்கு பாதுகாப்பு எது தெரியுமா?”
                சட்டென்று  அவர் இப்படி கேட்டதும் அவளுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் விழித்தாள். ஆழ்ந்து யோசித்து  “பெண்ணுக்கு பாதுகாப்பு அவள் கணவன் தான்” என்றாள். அவள் கூறிய பதிலில் திருப்பதிவுறாமல் அவர் இல்லை என்பது போல தலையை ஆட்டினார்.
 “அப்ப தந்தைதான் பெண்ணுக்கு பாதுகாப்பா?” என்று கேட்டாள்.
தவறான பதில் என்பதுபோல உதட்டைப் பிதுக்கினார்.
சரியான பதில் எதுவாக இருக்கும் என்று ஆழ்ந்து யோசித்து அவரைப் பார்த்து சொன்னாள்: “ இப்ப சொல்லப்போற பதிலை கேட்டு என்னை கிண்டல் செய்ய மாட்டேன்னு சொல்லுங்க. நான் பதிலை சொல்றேன்”
 “நான் ஒன்னும் சொல்லமாட்டேன். பதிலை சொல்லு”.
 “பெண்ணுக்கு பாதுகாப்பு நாட்டை ஆளும் அரசன் தான்”
அவளின் பதிலைக்கேட்டு அவர் வெடித்துச் சிரித்தார். பின் அவளின் தலையை வருடிக்கொண்டே தன் மனதில் தயாராக வைத்திருந்த பதிலை ஒப்பிக்கத் தொடங்கினார்:

                 “உடுத்தியிருக்கும் உடையோ, இருக்கும் வீடோ, அரண்மனை வாசமோ அரண் போன்ற பாதுகாப்போ அல்ல. இவை அனைத்தையும் விட ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு அவளது நன்னடத்தையே .
                இப்போது ஏன் இதுபோன்ற பதிலைச் சொல்லவேண்டும் என்று விளங்காமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சீதை. சிறிய மான்குட்டி துள்ளிக்குதித்தபடி ஓடிவந்து அவர்களின் ஊடாக நுழைந்து ஓடியது.
                அவர் பார்வை தொலைவில் பதிந்திருந்தது. பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்து மூச்சுவிட்டபடி கிடக்கும் வில்லை அவள் பார்த்தபடி இருந்தாள். தன் மீதான எல்லையற்ற அன்பின் காரணமாகவே ராமர்  இதை செய்திருக்கிறார் என அவள் உணர்ந்தபோது சந்தோஷத்தின் கீற்றுகள் உடம்பு முழுக்க பரவியது. ஊசலாட்டத்தில் உழன்று கொண்டிருக்கும் ராமரின் மனதை என்ன செய்தும் சீதையால் அறியமுடியாமல் துயருற்றாள்.
                 “இப்படி இருப்பது உங்கள் சுபாவமல்லவே” என்று அவரைப் பார்த்துக் கேட்டாள்.
                சீதையின் மூலமாக தனது வம்சத்திற்கு இழிவு நேர்ந்து விடுமோ எனும் சிந்தனையே அவர் மனதை  அழுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் அவள் மீதான காதலும் அன்பும் அவருள் பெறுக்கெடுத்தபடியே இருந்தாலும் பிறர் அவளைப் பார்த்து விரல் நீட்டிவிடக்கூடாதே என்றும் துடித்தார். இதன் காரணமாக அவளை நிராகரித்துவிடுவதே சரி என்று இரண்டாம் முறையாக எண்ணினார்.
                சாந்தமே உருக்கொண்டு நிற்கும் சீதையை உற்றுப் பார்த்தார். அவள் கண்களில் கலங்கம் துளியும் இருக்கவில்லை. ஆனாலும் சந்திர வம்சம் எனும் பெரும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் தன் கையால் எதையும் செய்ய இயலாதபடி ராமர் அவளைப் பார்த்தார். அவளும் வெறுமையோடு அவரைப் பார்த்தாள். அப்போது ராமர் உறுதியாக சில சொற்களை அசரீரியைப்போல உதிர்த்தார்.  “மனமோ ஆசையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏங்குகிறது. ஆனால் மாற்றான் வீட்டில் தங்கிய பெண்ணை எந்த கௌரவமுள்ள மனிதன்தான் திருப்பி அழைத்துக்கொள்ள விரும்புவான்?”
                அச்சொற்கள் அவள் மனதை நொருங்கச் செய்தன. இதுவரை நடந்ததெல்லாம் வெரும் நாடகம் தானா? அன்பும் காதலும் பீரிட்டக் கணங்கள் எல்லாம் பொய்யோ? என நினைத்த சீதையின் உடல் நடுங்கத் தொடங்கியது. நீண்ட மூச்சை இழுத்து விட்டபடி அவர் உதடுகளா இதுபோன்ற வார்த்தைகளை உச்சரித்திருக்கும் என மறுபடியும் ஐயம் தீர அவரது கண்களை உற்றுப் பார்த்தாள். கடல்தாண்டி வந்தது. ராவணனுடன் போர் புரிந்தது ; லட்சோப லட்சம் பேரை கொன்று குவித்தது எல்லாம் திட்டமிட்ட நாடகத்தின் அடுத்தடுத்த காட்சிகள் தானோ? என பல்வேறு எண்ணங்கள் அவள் மனதில் சுழன்றபடி இருந்தனதிரும்பி ராமர் முகத்தைப் பார்த்தாள். அவ்வார்த்தைகளை ஆமோதிப்பது போல அவரின் பார்வைகள் இருந்தன. அவ்வார்த்தைகள் கூரிய முட்களைப் போன்று தன் இதயத்தை குத்திக் கிழிப்பதாக உணர்ந்து துடித்தாள். என்ன செய்வதென்று அவளுக்கு பிடிபடவில்லை. தன் மீதான காதலின் பொருட்டே எல்லாம் நடந்திருக்கின்றன எனும் மனக்கோட்டையை அவளே இடித்து நொருக்கினாள். அவள் மனதில் தொடர்ந்து முகிழ்ந்தபடியே இருந்த பல கேள்விகள் அவளை ஊடறுக்கவும் செய்தன. அவள் நிமிர்ந்து மீண்டும் ராமரைப் பார்த்தாள். விழிகளில் சாந்தம் திரும்பியிருப்பதை உற்றுக் கவனித்தவள். சந்திர குலத்தின் கௌரவத்திற்காக  தன்னை ரணமாக்கி விட்டாரோ என நினைத்தபடி நடுங்கிக் கொண்டிருக்கும் பாதங்களை நன்று ஊன்றிக் கொண்டாள்.
                                திருமணமான பொழுதில் உறக்கம் களைந்து எழுந்த காலையில் தன்னை வலிய இழுத்து உதட்டிலும், உள்ளங்கையிலும் முத்தமிட்ட அவரின் முகம் அவள் நினைவில் மின்னலென வந்து சென்றது. அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள். பார்க்க அருவருப்பாக இருந்தது அவளுக்கு. காதலும் காமமும் பீரிட்டு தன்னை வாரிஅனைத்துக்கொண்ட அந்த ராமனா இவன் என  யோசித்தவள், நிச்சயம் இருக்காது என்பது போல எண்ணித் தலையை  ஆட்டிக்கொண்டாள்.
                விருப்பத்திற்கு எதிராக, அநீதியாக ராவணன் இலங்கைக்கு கவர்ந்து சென்று, அங்கே சிறை வைத்தான் என்பதில் தன்னுடைய தவறு என்று ஏதாவது இருக்கிறதா? அதனுடன் சம்பந்தப்படுத்தி தன்னை தண்டிப்பது பேடித்தனமல்லவா என்றும் அவள் தனக்குள்ளாகவே குமுறினாள். கோபம் அவள் மனதில் எந்நேரமும் வெடித்து விடக்கூடிய எரிமலையைப் போல உருக்கொண்டிருந்தது.
                ராமர் அமைதியாக சிறு குன்றின் மீது  அமர்ந்து கொண்டிருந்தார். நடப்பதை எல்லாம் சற்று தொலைவில்  நின்று லஷ்மணன் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களின் நீடித்த அமைதி அவளுக்கு மேலும் மேலும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தின. என்ன தான் காதலையும் அன்பையும் குழைத்து தன்னை கிரங்கடித்திருந்தாலும், சந்தேகம் எனும் கொடிய விஷம் பரவி நீலம் பாரித்து கிடக்கும் ராமருடன் இனி வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று முடிவு செய்தவளாக லஷ்மணனைப் பார்த்து கடுங்கோபத்தோடு வார்த்தைகளை வீசினாள்.
                 “லஷ்மணா, சிதையை ஏற்பாடு செய். இக்கஷ்டங்களுக்கு அதுவே மருந்து. என்னைக் களங்கப்படுத்தும் பொய்யான குற்றச்சாட்டுகளால் அடிக்கப்பட்டும், நான் ஜீவித்திருக்க விரும்பவில்லை. உடனே சிதையை மூட்டு”.
          வார்த்தைகளை எறிந்தும்கூட அவளின் சினம் தீராமல் இருந்தது. சிதை நோக்கி நுட்பமாக தன்னை தள்ளிய ராமரின் சாமர்த்தியத்தை நினைத்து அவளுக்கு ஆத்திரம் பீரிட்டுக்கொண்டு வந்தது. எல்லா ஆண்களையும் போல இவரும் சராசரியானவர்தான் என்று யோசித்த கணத்தில் தன் உடலெங்கும் கம்பளிப்பூச்சி ஊர்வதைப்போல உணர்ந்தாள்.
                உஷ்னமேறிய வார்த்தைகள் லஷ்மணனை வாட்டின அவன் துடித்தான். தன் அண்ணன் முகத்தை திரும்பிப்  பார்த்தான். அதில் எந்த சலனத்தையும் அவனால் காணமுடியவில்லை.அவரின் அமைதி அவனுக்கும் எரிச்சலையே ஏற்படுத்தியது.  சிறிது நேரம் அமைதியாக இருந்தான். காலம் ஒரு நத்தையைப் போல மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு வார்த்தை கூட பரிமாரிக்கொள்ளபடாமல் இறுகிக்கிடந்தது சூழல்.
                உயிரோடு தன்னை புதைத்த மயானத்தைப்போல லஷ்மனன் தயார் செய்திருந்த  சிதை அவளுக்கு தோன்றியது. உள்ளே குமுறிக் கொண்டிருந்த கோபத்தை சிரிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் லஷ்மணனை தலையுயர்த்தி பார்த்தாள். அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். ராமரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவேயில்லை அவளுக்கு.
                கனன்று எரிந்து கொண்டிருக்கும் சிதை நோக்கி மெல்ல நடந்தாள். சிதையை நெருங்க நெருங்க அவளுக்கு ஆத்திரம் பீரிட்டு கிளம்பியது. சிரித்து பேசி வருடிக்கொடுத்து தன் கழுத்தை அறுப்பதுபோல அவள் உணர்ந்து துடித்தாள். தன் ரௌத்திரம் முழுவதையும் ஒன்று கூட்டி இடப்பக்கமாகத் திரும்பி காரித்துப்பினாள். சீதையின் வலதுபுறம் நின்று கொண்டிருந்த லஷ்மணனை அவளின் ஆத்திரம் கூனிக்குருகச் செய்தது. பின் அவள் மெல்ல நடந்து சிதையுனுள் புகுந்தாள். தீ நீண்டும் பரவியும் எரிந்து கொண்டிருந்தது.
 அவரின் சிந்தனையை களைக்கும் விதமாக நான் கேட்டேன்:  “அப்படி என்னதான் ஆழ்ந்த யோசனை?”. வறண்ட குரலில் என்னிடம் பேசினார்.
  “சீதைக்கும், எனக்கும் இல்லறத்தில் அவ்வப்போது பிரச்சனை எழுந்தபடி இருந்தது. ஒருவர் மீது ஒருவர் அடிக்கடி குற்றங்களைக் காண நேர்ந்தது. அவள் எனது இயலாமையை எப்போதும் சுட்டிக் காட்டியபடி இருந்தது , எனது ஆண்மையை உசுப்பேற்றியது. சண்டை வலுத்தது”.
 சீதையை தீயில் இறங்கச் சொன்ன பிறகு அவர்கள் இருவருக்கும் இடையில் உறவு அவ்வளவு சுமூகமாக இருந்திருக்காது என்பதை அவர் பேச்சிலிருந்து தெளிவாக உணர முடிந்தது.மறுபடியும் அவரே சுரத்தே இல்லாமல் உரையாடலைத் தொடர்ந்தார்.
                 “ஒரு நாள் திடீரென அவள் வீட்டை விட்டுக் கிளம்பிப்போய் விட்டாள். நான் தடுக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டேன்‘நீ இப்படி வீட்டை விட்டு போனால் ஊர், உலகம் நம்மைப் பற்றி என்ன பேசும் - யோசித்துப்பார்த்தாயா?
                அதற்கு அவள் கூறினாள்: “என்னை ஏன் பேசப்போகிறார்கள்; உன்னைத்தான் உதவாக்கரை  எனப்பேசுவார்கள் என்று கூறி ஒரு சிறிய பெட்டியுடன் வெளியில் சென்றவள்தான். அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து ஒரு கடிதம் எழுதி இருந்தாள்” என்று, தனது ஜோல்னா பையில் தேடி, ஒரு கடிதத்தை எடுத்து, என்னிடம் கொடுத்து, படிக்குமாறு கூறினார்
.
          மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் ராமச்சந்திர பிரபுவுக்கு.
                உங்களால் சீதா என பிரியமாக அழைக்கப்படும் ஜானகி எழுதிக் கொண்டது. தாங்கள் எப்படி உள்ளீர்கள்? இப்பவும் அதே போலத் தான் நடந்து கொள்கிறீர்களா? ஒரு வேகத்தில் தங்களை விட்டு பிரிந்து விட்டேன். இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு காலமும் நீங்கள் அதை நினைத்துப் பார்த்திருக்க முடியாதில்லையா? மிகவும் மென்மையாக நடத்தப்படுவதில் எந்தப் பெண்ணுக்குத்தான் உடன்பாடு இருக்க முடியும்? இல்லறத்திற்கு உதாரணமாய் வாழ்ந்தால் மட்டும் போதுமா? எனக்கென்று சுகதுக்கங்கள் உண்டென்பதை எப்படி மறந்து போனீர்கள்? யுகயுகமாக அவதார புருஷன் எனும் சுமையை எப்படி உஙகளால் மட்டும் சுமந்து வரமுடிகிறது?
கொஞ்சம் சத்தமாக படிங்க. காது மந்தமா இருக்கு” என்று என்னைப் பார்த்து சொன்னார். திரும்ப அந்த வரிகளை கேட்பதில் அவருக்கு என்ன சந்தோஷம் ஏற்பட்டுவிடும் என்பது புரியாமல் சத்தமாக வாசிக்கத்தொடங்கினேன்.
                என்னை நீங்கள் தீயில் இறங்கச் சொன்ன அன்றே நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தேன். இந்த ஆள் நமக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று. வந்து போகின்ற ஆட்களின் சந்தேகத்தை எல்லாம் போக்குவதற்கு நான் தானா உங்களுக்கு கிடைத்தேன்? காலம் காலமாக ஏன் எந்த  வண்ணாணும் உங்களை சந்தேகப்படவில்லை என்பதன் மர்மம்தான் புரியவில்லை.
                எனது படர்ந்த ஸ்தனங்கள் உங்களின் இதழ் சுவைப்பிற்காக மட்டுமே இருந்து விடவேண்டுமென நினைததிருந்தேன். காலம் எல்லாவற்றையும் மாற்றி போட்டு விடுகிறது. அந்த முடிவு எவ்வளவு மடத்தனமானது என இப்போது நான் அறிந்து கொள்ள முடிகிறது. நான் புதியதாக வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். இங்கே எந்தச் சுமைகளையும் நான் கட்டிக் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.
                                                                                                                 இப்படிக்கு
                                                                                                                      சீதை


கடிதம் முடிவு பெற்றிருந்த போது பார்த்தேன். அவர் கண்மூடி மௌனித்திருந்தார். நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அப்படியென்றால், சீதை எங்கிருக்கின்றாள் என்ற சிந்தனை தோன்றியது., சீதையை பல்வேறு ரூபங்களில், பல்வேறுபட்ட இடங்களில் வைத்து பொருத்திப் பார்த்து மனம் சந்தோஷப்பட்டது. எவ்வளவு மகோன்னத வாழ்வாக இருந்தாலும் மகிழ்ச்சியை துய்க்காமல் வாழ்ந்துவிட முடியுமா?
                அவர் சலனமற்று அமர்ந்திருந்தார். பேருந்தின் குலுங்களுக்கேற்ப இருவரும் குலுங்க வேண்டியிருந்தது. இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. மனம் கனத்து கிடந்தது. நாட்டில் அவரின் பொருட்டு நடக்கும் நிகழ்வுகளையும் பொருத்திப் பார்த்துக் கொண்டேன்.
அவர் இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது. தள்ளாடியபடியே நடந்து சென்றார்.  “சீக்கிரம் இறங்குயா சாவு கிராக்கி” என நடத்துனர் திட்டியபடியே அவரை இழுத்து வெளியில் விட்டார். அவர் போகும்போது கண்களைத்தாழ்த்தி என்னை பார்த்தது என்னவோபோல இருந்தது.
                நான் தமிழகத்துக்கு மாற்றலாகி வந்து ஆறேழு மாதங்களாகி இருக்குமென நினைக்கிறேன். என் முகவரியிட்ட கடிதம் ஒன்று அஞ்சலில் கிடைக்கப் பெற்றேன். பிரித்துப் பார்த்தேன். உத்திரப் பிரதேசத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து ஸ்ரீராமர் எழுதியிருந்தார். சில வினாடிகளுக்குள் அவருடன் பேருந்தில் பயணித்தது, அவருடனான உரையாடல்கள் எல்லாம் மனதில் மின்னி மறைந்தன.

                ஸ்ரீமான்  இளங்கோ அவர்களுக்கு
                ராமச்சந்திரபிரபு எழுதிக்கொண்டது நலமாக இருக்கிறீர்களா? நான் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிறுநீரகப் பிரச்சினை. கூடவே சாலேஸ்திரம் வேறு. டாக்டரின் பரிந்துரையின் பேரில் தினமும் நிறைய   மாத்திரைகளை விழுங்க வேண்டியுள்ளது. உங்கள் ஊரிலும் என்னைப் பற்றிய பல வீரதீர சாகசக் கதைகள் உண்டென்று நண்பர் மூலம் தெரிந்துகொண்டேன். உண்மை எவ்வளவு குரூரம் நிறைந்தது பார்த்தீர்களா?
                மேலும், நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருபராயின் ‘AMKARசோப்பு விளம்பரத்தில், குளியலறையில் இருந்து இடுப்பில் சுற்றப்பட்ட துண்டோடு, சோப்பைப் பற்றிக் கூறிக்கொண்டே வரும் பெண்ணாக நடித்திருப்பது சீதைதான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பிறகென்ன, நீங்கள் கடிதம் எழுதுங்கள்.
                                                                                                           ஆசிர்வாதங்களுடன்
                                                                                                                ராமசந்திரபிரபு


கடிதத்தை படித்து முடித்தவுடன் எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஏன் இந்த மனிதன் எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்ற கேள்வி எழுந்தது. அவர்பால் எந்தப் பரிவும் எனக்குத் தோன்றவில்லை. சீதையின் நினைவுகளால் மனம் நிரம்பிக் கிடந்தது. அவசரப்பட்டு அவருக்கு முகவரியை தந்திருக்கக் கூடாதெனவும் நொந்து கொண்டேன்.
                கூடத்திற்கு திரும்புகையில் தொலைக்காட்சியைப் பார்க்க வேண்டியிருந்தது. மிகச்சரியாக இடுப்பில் சுற்றப்பட்ட துண்டுடன் ஒரு பெண் கையில் சோப்பைப் பிடித்தபடி குளியலறையிலிருந்து வெளியில் வந்தாள்.
                நடப்பதெல்லாம் நிஜம்தானா என, என்னை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். வலிக்கத்தான் செய்தது.


No comments:

Post a Comment