Monday, July 4, 2016

இது நியாமாரே?

கடந்த சில மாதங்களாக முன்பெப்போதை விடவும் இலக்கிய உலகில் குரு மகா சன்னிதானங்களும் மடாதிபதிகளும் பீடாதிபதிகளும் அதிகரித்துவிட்டதை நன்றாக உணரமுடிகிறது.எந்த இதழை புரட்டினாலும் பட்டியல்கள்தான் பிரதான இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. முற்றிலுமாக விமர்சனப் பார்வை மங்கிய தமிழ்ச் சூழலில் இதுபோன்ற பட்டியல்கள் எத்துனை நாட்களுக்கு தங்களின் சுவாசத்தை தக்க வைத்திருக்க முடியும் என்பது அப்பட்டியல்களை சதா உதிர்த்துக் கொண்டிருக்கும் பிதாமகர்களுக்கே தெரியும்.
இது ஒரு புறம் இருக்க, எழுத வந்த இருநூறு நாட்களுக்குள் தனிப்பட்ட உரையாடலில்,  “அவர்லாம் அவுட்டேட்டட் ரைட்டர்ங்க” என நாக்கூசாமல் இலக்கிய உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றுகூட அறிந்துகொள்ளாமல் பேசுவது தடித்தனம் இல்லையா?. தொடர்ந்து இயங்குபவர்கள்தான்  எழுத்தாளர்கள் எனும் மொன்னையான அளவுகோலை ஏந்தித் திரிபவர்களுக்கு அயன்புரம் சத்தியநாராயணன்களும் மணலூர்பேட்டை பாரதிமுருகன்களும்தான் இளைய பீடாதிபதிகளாக இருந்து  கடமையாற்ற கிடைப்பர்.
அனைத்துப் பட்டியல்களுக்கும் பின்புறம் ஒளிந்து கொண்டு தலையை சொறிந்தபடி அதிகாரத்தின் தடித்த காலணிகளை நக்கிக் கொண்டிருக்கிற சிற்சில விழிகளை தவிர்க்கமுடிவதில்லை. விஷமத்தனமான அவ்விழிகளில் அனைத்தையும் கற்றுத் துறைபோகிய பாசாங்கின் ஒளியை தரிசித்துவிடமுடிகிறது. இதுபோன்ற விழிகளுக்கு எழுத்தில் தீவிரம்கூடிய ஒரே ஒரு படைப்பாளிகூட அகப்படமாட்டான். அவன் எப்போதும் பனிவரகு போன்றவன். ஊழிக்காலத்தில் தான் பனிவரகின் இருப்பு தெரிய வரும். ஒருவகையில் அவன் சேற்றுக்கடியில் அலைந்து கொண்டிருக்கும் நாட்டு மீன்களான குறவை, கெலுத்தி,விரால்களைப் போன்றவன். எவ்வளவு நவீன வலைகள் வந்தாலும் அவற்றை சுலபத்தில் பிடித்துவிட முடியாது. அப்படியே பிடிபட்டாலும்கூட நீங்கள் களிப்படைவதற்கு முன்பாக வலைகளை கடித்து மறுபடியும் சுதந்திரம் நோக்கித் துல்லிக் குதித்திடக் கூடியவன். ஆனால் உங்களின் இளைய சன்னிதானமாக அறிவிக்கப்படுபவர்கள் கலப்பின ரக  தங்க நிற மீன், போட்லாக் கெண்டை போன்றவர்கள். எளிய வலையில் சிக்கிக்கொள்பவர்கள். சிக்கி இறப்பது மட்டுமே அவர்களுக்கு பணிக்கப்பட்டிருக்கும் வேலைத் திட்டமாகும்.
முனை மழுங்கி, தர அளவுகள் தேய்ந்து இற்றுப்போன அளவுகோல்களை வைத்திருப்பது குருமகா சன்னிதானங்களுக்கும் பீடாதிபதிகளுக்கும் அழகல்ல; தகுதியும் அல்ல. மேம்போக்கான வாசகனுக்கு வேண்டுமானால் அத்தகைய அளவுகோல்கள் பெரும் கிளர்ச்சியை அளிக்கக்கூடும். ஆனால் நுட்பமான வாசகன் உங்கள் அளவீடுகளை புரந்தள்ளிவிட்டு முன்நகர்ந்தபடியே இருப்பான். எல்லாக் காலத்திலும் படைப்புச் செயல் அகவிழி சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.
முகநூல் வழி இலக்கிய உலகத்தில் துண்டை போட்டு இடம் பிடித்தவர்களுக்கு சிறுபத்திரிக்கை சார்ந்த உலகம் ஒன்று இருப்பதும் அதன் தீவிரத்தன்மையும் புரியாமல், காலில் மிதிபட்டுக் கொண்டிருக்கும் பட்டியல்களை எடுத்து பூஜை புனஸ்காரங்கள் செய்வதை தவிர்த்து வேறு மார்க்கம் இல்லை. எந்திரங்கள் மென்று துப்பும் உற்பத்தி பொருளாக படைப்பை அனுகும் கணவான்கள் மீது தக்க தருணத்தில் காலமே வலிய வந்து தன் இருளை பாய்ச்சும். நண்பன் ராஜகோபால் என்னிடம் அடிக்கடி இவ்வாறு சொல்வான்: “ சிறுபத்திரிக்கை எனும் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய கடைசி தலைமுறை நாமதாண்டா”. இப்போது யோசித்துப் பார்த்தாலும் அவன் வார்த்தைகளில் இருக்கும் சத்தியத்தை உணர முடிகிறது.
குருமகா சன்னிதானங்களுக்கும் பீடாதிபதிகளுக்கும் முன்பாக வைக்க என்னிடம் ஒரு விண்ணப்பம் இருக்கிறது. அவை, உங்கள் பட்டியல் சார்ந்த தரவுகளை மேலும் பூடகமாக்குங்கள். அதில் பாசாங்கின் நுட்பத்தைப் பூசி பளபளப்பாக்க முடியுமா என்று பாருங்கள்.அப்போதுதான்  அரிப்பெடுக்கையில் சொரிந்துவிடக் கூடிய இளைய பீடாதிபதிகளை உற்பத்தி செய்திட முடியும்.  ஆனால் இந்த ஆபாசம் நிறைந்த அரசியலைப் பற்றிய எந்த அக்கறையுமின்றி  காத்திரமான படைப்பாளி எப்போதும் முன்னகர்ந்தபடியே இருப்பான். காலம் எப்போதும் அவன் பாதையை துலக்கமாக்கிக் கொண்டே முன் செல்லும்.   


No comments:

Post a Comment