Wednesday, October 12, 2016

நினைவுகளை வெட்டி வேர் பறித்தல்

என்னுடைய ஊரான கண்டாச்சிபுரத்தின் ஊடாகத்தான் தேசிய நெடுஞ்சாலை 234 செல்கிறது. அதன் விரிவாக்கப் பணிகளுக்காக சாலையின் இருபுறத்திலும் ஓங்கி வளர்ந்திருந்த புளிய மரங்கள் வெட்டி பார வண்டிகளில் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இக்கட்டுரை வெளியாகும் நாளில் எங்கள் ஊர் சாலையின் இருபுறத்திலும் மரங்கள் இருந்ததற்கான சிறிய தடயம் கூட இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கும். அனைத்தும் மிக நுட்பமாகவும் உள்ளார்ந்த ஒழுங்கோடும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி நிகழ்த்தப்படுகின்றன.
                மாணவப் பருவத்தில்  பள்ளிகூடம் விட்டதும் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு புளியந்தழையை கூட்டி வாரிக்கொண்டு வந்ததில் இருந்து தொடங்குகின்றது மரங்களுக்கும்  எனக்குமான உறவு. அப்போது என் பெரியப்பாவிடம் கேட்டிருக்கிறேன்.  “இந்த மரங்களை கூட அசோகர் தான் நட்டிருப்பாரா?” அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “ அவரு நடறப்ப நானா கூட இருந்தேன்?” என்று கேட்டு  சிரித்தார். அதற்கான அர்த்தம் எனக்கு விளங்கவே இல்லை.
                                சாலையின் ஒரு திருப்பத்தில் பெரிய அரச மரம் கிளை பரப்பி வானை அளந்து கொண்டிருக்கிறது.  இன்னும் அது வெட்டப் படவில்லை. வெட்டப்பட வேண்டுமென்பதற்கான குறியீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏழாவது படித்துக்கொண்டிருந்த போது அதில் ஏறி கையில் துணியை சுற்றிக் கொண்டு பொந்துக்குள் கையை விட்டு கிளி பிடித்திருக்கிறேன். கிளியோடு வந்து அப்பாவின் வசவுகளையும் அடியையும் வாங்கி இருக்கிறேன்.  “பொந்துக்குள்ள கைய விடுறயே பாம்பு கீம்பு இருந்து கடிச்சா என்னடா ஆவறது?” என்று என் பாட்டி அலுத்துக்கொண்டாள். நாமா மரம் ஏறி கிளி பிடித்திருக்கிறோம் என்று அம்மரத்தைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும்  நினைத்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.  இன்று  யாராவது மரம் ஏறி கிளி பிடிக்கச் சொன்னால் மரம் ஏறுவதற்கு  தைரியம் இல்லை. அப்படியே மரம் ஏறினாலும் பொந்துக்குள் கையை விடும் தைரியம் கொஞ்சமும் இல்லை. அது ஒரு காலம். வயது கூட கூட நரை விழுவது போல பயத்தின் ரேகைகள் நம் மனம் முழுக்க பரவத் தொடங்கிவிடுகின்றன.
                முதல் சாலை விபத்தை  நான் அந்த அரசமத்தின் கீழ்தான் கண்டேன். அன்றைய கவிச்சை  நாற்றம் இன்றும் மனதில் அப்படியே அப்பிக்கிடக்கிறது. புளிய மரங்களின் கீழே ஆங்காங்கே போடப்பட்டிருக்கும்  கல்திட்டைகளின் மீது அமர்ந்து நாளிதழ்கள் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறோம். புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்ட போது எங்களுக்கு இப்புளிய மரங்களே புகலிமாக இருந்திருக்கின்றன. காலப்போக்கில் வளர்ந்து பெரியவர்களானதும்  பிரியத்திற்குரியவர்களிடம் அலைபேசியில்  பேச தோதான இடமாக இம் மரத்தடிகளே இடங்கொடுத்தன. நாங்கள் அவற்றிலிருந்து கடந்து வந்துவிட்ட பிறகு எங்களுக்கு அடுத்த  தலைமுறை அவ்வேலைகளை தொடர்கின்றனர். பள்ளி பருவத்தில் புளிய மரங்களின் கீழ் அமர்ந்து படித்திருக்கிறோம். வகுப்பறைகள்  சிறைச்சாலைகள் போலத் தோன்றும்போதெல்லாம் மரங்களிடமே தஞ்சம் அடைந்திருக்கிறோம். அம்மரத்தையொட்டி உள்ள பாறையில் படுத்து ஓய்வெடுத்திருக்கிறோம். வளர்ந்து பெரியவர்களானதும் மது அருந்த தன் நிழலைத் தந்திருக்கிறது அது. அவ்வாறு  களித்திருந்த வேலையில்தான்  என் நண்பர்களில் ஒருவன் அம்மரத்திற்கு போதை மரம் என்று பெயரிட்டான்.


                பல்லாண்டுகளாக ஊரின் அடையாளமாக நின்றிருந்த மரங்களை கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி வீழ்த்தும் எந்திரங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. . அப்போதெல்லாம் ஒரு மரத்தை வெட்டிச் சாய்ப்பதென்பது பெரிய யுத்தம் போல இருக்கும். ஆனால் இன்று அப்படி இல்லை. பிராய்லர் கறிகடைகளில் கோழியின் தலையை அருத்து தள்ளுவதைப்போல மரங்களை அறுத்து தள்ளிக் கொண்டே செல்கின்றனர். சட்டென்று மரம் துண்டுகளாக்கப்பட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்படுகின்றன. இக்காட்சிகளை பார்த்துவிட்டுமனசே சரியில்லடா” என்று நண்பனிடம் சொன்னேன்.  .  அதற்கு அவன் பதில் சொன்னான்:  “நீ தானே தரை மார்க்கமாகவே இந்தியாவை சுத்தி பாக்கனும்னு சொல்ற. உன்னை மாதிரியே இன்னும் எவ்ளோ பேர் நினைப்பாங்க. இப்பவே வாகனப் பெருக்கம் அதிகமாயிடுச்சி. அப்புறம் சாலையை பெரிசாக்கித்தானே ஆகனும்?”. அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு விளங்கவில்லை. ஆன்மாவைத் தொலைத்துவிட்டு தான் நாம் ஒவ்வொரு வளர்சிக்கும் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம்  மட்டும்   மனதில்  அலைந்து  கொண்டே இருக்கிறது.1 comment:

  1. I reciprocate the same. A moving emotional account of your childhood reminds me ours.

    ReplyDelete