இரவு
விளக்கின் நீல நிற வெளிச்சம் அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்
இருந்தனர். மின் விசிறி மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. காற்றின் போக்கிற்கேற்ப சுவரில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியின் தாட்கள்
அசைந்து கொண்டிருந்தன. அதிதி மட்டும் உறக்கம் வராமல் நெளிந்து கொண்டிருந்தாள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பக்கத்தில்
உறங்கிக் கொண்டிருந்தவர்களை போர்வைக்குள்ளிருந்து கவனித்தாள். உறங்கிக்கொண்டிருந்தவர்கள்
மீது நீல வண்ணம் கவிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.
அவ் வெளிச்சம் அவளுக்கு தந்தையின் நினைவை தூண்டியது.
அதை தொடர்ந்து அவரின் குறட்டை சப்தத்தின் ஊடாக அவள் எண்ணம் பயணப்பட்டது. அவரை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஆத்திரம் பொங்கி
வன்மமாக கிளைக்கத் தொடங்கியது. அக்காவை மட்டும்
ஏன் அவருக்கு பிடித்துப்போகிறது என்று யோசித்துப் பார்த்தாள். எதுவும் பிடிபடவில்லை.
ஆழ்ந்து மூச்சை இழுத்து மெதுவாக வெளியிட்டாள். இந்த மூச்சு பயிற்சிகூட அவர் கற்றுக்கொடுத்ததுதான்.
மனதை ஒருமுகப்படுத்தி சுவாசத்தில் சிந்தனையை
குவித்தாள். அது நிலை கொள்ளாமல் அடிபட்ட நாகம்போல சீறிக்கொண்டிருந்தது. அவள் அடிமனதில்
தேங்கியிருந்த அப்பாவின் சித்திரங்கள் ஒவ்வொன்றாக மேலெழும்பத் தொடங்கின.
பனிக்காலம் தொடங்கிய ஒருநாள் அப்பா தல்லாகுளம் சந்தையில்
இருந்து மூன்று முயல்கள் வாங்கி வந்திருந்தார். சனி ஞாயிறு வந்துவிட்டால் போதும். சுற்று
வட்டாரத்தில் எங்கு சந்தை நடக்கிறது; அங்கு என்னென்ன கிடைக்குமென்பதெல்லாம் அவருக்கு
அத்துபடி. கின்னி கோழி பிரியர். அவர் கை பக்குவத்தில் செய்து தரும் மாமிசத்தின் ருசி
அலாதியானது. அன்று கோழி வகையினங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியில்லை. முயல் தேரும்போல
தோன்றியது. வாங்கிவிட்டார். உடன் சென்ற ஆறுமுகம் ஆசிரியருக்கும் துருவத்தார் வீட்டு
ராஜா அண்ணனுக்கும் வரும் போது வேட்டவலத்தில் காடை வாங்கித் தந்தார். முயல் ஒவ்வொன்றும்
ஒரு நிறத்தில் இருந்தன. புசுபுசுவென்று இருந்தது வெள்ளை முயல்; சாம்பல் நிற முயல் பருத்திருந்தது.
சற்று நோஞ்சானாக இருந்தது கறுப்பு. முயல் வேண்டும் என்று முதலில் கேட்டவள் அதிதி தான்.
“இன்னைக்காவது ஏமாத்தாம வாங்கியாந்திட்டயே
தேங்ஸ் டாட்” என்றாள். அவர் அமைதியாக இருந்தார். வீட்டுபாடம் எழுதிக்கொண்டிருந்த அக்கா
ஓடிவந்து, “எனக்கு வெள்ளை கலர் முயல்” என்றாள்.
அதற்கு அவர் சிரித்துக்கொண்டே சரி என்பதுபோல தலையாட்டினார். தன் அக்காவை ஏற இறங்க பார்த்தாள் அதிதி. சமயலறையில் இருந்துகொண்டே அம்மா “எனக்கு என்றாள்?”. “அம்மா நீ சாம்பல் கலர் எடுத்துக்கோ” என்றாள் துடுக்காக. “அப்ப அதிதிக்கு கறுப்பு தான்” என்றார் அதுவரை அமைதியாக
இருந்த அவர். தன் விருப்பத்தைக் கேட்காமல் அவர்களாகவே பிரித்துக் கொண்டது இவளுக்கு கொஞ்சமும்
பிடிக்கவில்லை. “எனக்கு முயலும் வேணாம் ஒரு
மயிரும் வேணாம்” என்றாள் ஆத்திரம் பொங்க. ”இப்படி பேசக்கூடாதுனு எத்தன தடவை சொல்றது?”
என்று அம்மா கத்தினாள். அவள் குரல் இவளை ஒடுங்கச் செய்தது. எதுவும் பேசாமல் படுக்கை அறைக்கு
சென்றாள். தலையணையில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள். தன்னை கலக்காமல் மூவரும் முடிவெடுத்ததை தாங்கிக்கொள்ள முடியாமல்
தேம்பித் தேம்பி அழுதாள். கண்களில் நீர் பெருகி தலையணை நனைந்தது. ஆத்திரம் பெரு நெருப்பைப்போல
அவள் மனதில் கனன்று கொண்டிருந்தது.
சுவர்க்கடிகாரம் பதினோறு முறை மெல்லிய ஒலி எழுப்பி அடங்கியது.
அப்பா வாங்கி வந்த வெளிநாட்டுக் கடிகாரம். வெளிநாட்டு பொருள் என்றால் கூடுதலாகக் கொடுத்துகூட
வாங்கும் ரகம் அவர். அம்மாவும் திட்டிப் பார்த்து ஓய்ந்துவிட்டாள். அதையெல்லாம் அவர்
பொருட்படுத்தியதே இல்லை. கடிகாரச் சத்தம் அறையில் எதிரொலித்தபடியே இருந்தது. அதன் ஒலி
இப்போதெல்லாம் அவளுக்கு நாராசமாய் கேட்டது.
போர்வையை விலக்கி பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தாள். அவள் ஆழ்ந்த
தூக்கத்தில் இருந்தாள். எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்தாள். மீண்டும்
போர்வையை முகம் வரை இழுத்துவிட்டுக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். நீல நிற வெளிச்சம்
அவளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. புரண்டு படுத்தாள் உறக்கம் பிடிக்காமல். பழைய
நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தது அவள் மனம்.
அன்று
ஞாயிற்றுக்கிழமை. மீன்கார பெண் தெருவில் இருந்தபடியே சப்தம் போட்டு கூப்பிட்டாள். “வாத்தியார் வீட்டம்மா மீன் வாங்கலையா?”. உள்ளே இருந்தபடியே
வேண்டாம் என்பதுபோல அம்மா கையசைத்தாள். “நீங்க
அப்படிதான் சொல்வீங்க. பாள்தார் பேத்திய கூப்பிடுங்க” என்று அவள் மீண்டும் சத்தம்போட்டு
அழைத்தாள். கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த
அதிதி நிமிர்ந்து மீன்காரியைப் பார்த்தாள். திரும்பி அம்மாவைப் பார்த்தாள். “என்னடி அப்படி பாக்கற?” என்று கேட்டாள். “உன் அக்காவதான் அப்பிடி சொல்றாங்க” என்று சொல்லிவிட்டு
வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். முயல்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுத்தம்
செய்து கொண்டிருந்த அப்பாவிடம் சென்றாள். சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவர் காதுகள் முயலின் காதுகளை ஒத்திருந்தன. ஒருநொடிப் பொழுதில் தன் தந்தையை முயலாக கற்பனை செய்து பார்த்தாள். காதுகளைப் பிடித்து தூக்கி
இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். அதை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். பின் மெதுவாக, “அக்காவ ஏன் பாள்தார் பேத்தினு சொல்றாங்க?” என்று
கேட்டாள். “நம்ம வீட்டுக்கு பாளையத்தார் வீடுனு
பேரு. அதால அப்படி கூப்பிடறாங்க” என்று தன் வேலையை செய்து கொண்டே அவர் கூறினார். “என்னையும் அப்படிதான் கூப்பிடுவாங்களா?” என்று சட்டென்று
கேட்டாள். இல்லை என்பது போல அவர் தலையாட்டினார்.
“ஏன்?”
“நீதான் இங்க பொறக்கலையே”
“அப்புறம் எங்க பொறந்தேன்?” அவள் குரல் கம்மியிருந்தது.
“உன்னை தல்லாகுளம் சந்தையில தவிட்டுக்கு இல்ல வாங்கியாந்தேன்”.
அதைக் கேட்ட அவளுக்கு தூக்கிவாரிப்
போட்டது. “என்னது தவிட்டுக்கா?” என்று புரியாமல் கேட்டாள். ஆமாம் என்பதுபோல தலையாட்டி
“நெல்குத்தி கெடச்ச கருக்கா தவுட்டை அப்படியே
ஆவூர் சந்தையில வித்து உன்ன வாங்கியாந்தேன்.சும்மா இல்ல.”
அவரை
ஊடுருவிப்பார்த்தாள். அவருடைய வார்த்தைகள் முள்ளாகி அவளை தைத்தன. கண்கள் நீர் கோர்த்துக்கொள்ளத்
தொடங்கின. எந்த நேரமும் வெடித்து அழுதுவிடுவாள் போல இருந்தது. “உண்மைதானா?” என்று கேட்டாள். அவர் மையமாக தலையாட்டினார்.
அதன்
பின் வேறெதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் போல இருந்தது அவளுக்கு. சட்டென்று
புறப்பட்டு சென்றாள். அவளுக்கு மனம் சங்கடமாக இருந்தது. வழக்கமாக தெருவே கதியென்று
கிடப்பவள் மாடிப்படியில் அமர்ந்து எதிர்வீட்டு முருங்கை மரத்தையே வெறித்து பார்த்துக்
கொண்டிருந்தாள்.
மதியம் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாள். வேண்டாம் என்று மறுத்து
விட்டாள். வழக்கமான பதில்தான் என்று நினைத்துக் கொண்டாள். தவிட்டிற்கா வாங்கி வந்தீர்கள்
என்று அவளிடம் கேட்கலாமா என்று நினைத்தாள். அப்பா கூறியதையே அவளும் ஆமோதித்தால் என்ன
செய்வது என்று யோசித்தாள். உடம்பு சிலிர்த்துக்
கொண்டது. மனம் நடுங்குவதை முதன் முதலாக அப்போதுதான் இவள் உணர்ந்தாள். வீடு அன்னியமாக தோன்றியது. இவ்வளவு
நேரம் கடந்தும்கூட தன்னை யாரும் வந்து சமாதானம் செய்யவில்லை; இதுவே அக்காவாக இருந்தால்
அப்பா இப்படி இருப்பாரா? எனும் சிந்தனை மனதிற்குள்
ஓடிக் கொண்டே இருந்தது. அது இவளுக்கு மேலும் வலியை தந்தது. பெரியவள் எதிர்வீட்டு பையன்களோடு
கூட்டாஞ்சோறு செய்து கொண்டிருந்தாள். உண்மையில் தன்னை தவிட்டுக்கு தான் வாங்கிவந்தாரோ;
அதனால் தான் இப்படி நடத்துகிறார்களா என்றும் யோசித்தாள். அனைவரும் அவரவர் வேலையில்
மூழ்கி இருந்தனர். ஒருவரும் தன்னை பொருட்படுத்தாமல் இயங்கிக் கொண்டிருந்தது இவளுக்கு மேலும் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்தது.
அம்மாவும் இப்படி நடந்து கொள்வாள் என்று இவளால்
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தெருவில் விளையாடி விட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்கு
ஓடிவந்த பெரியவள், “ அதிதி விளையாட வரல?” என்று கேட்டாள். இவள் அமைதியாக எதிர் வீட்டு சுவரையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.
ஒரு அணில் மதில் சுவரில் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தது.
சாதாரணமாக இரவு பத்து பத்தரை ஆகிவிடும் இவள் படுப்பதற்கு.
சுட்டி டிவி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தூங்கிவிட்டாள் என்று நினைத்து அனைத்துவிடமுடியாது.
அவ்வளவுதான். அழுகை பீரிட்டெழும். தூங்குவதற்கு முன்பு கண்டிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை
அவசியம். அதன் பின் தான் தூங்க முயற்சி நடக்கும். ஆனால் அன்று எட்டு மணிக்கே படுக்கைக்கு
சென்று விட்டாள். சாப்பிட தேடும் போது தான் இவள் படுத்துவிட்டது அம்மாவிற்கு தெரியவந்தது.
ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்று புரிந்து போனது. அருகில் சென்று சீண்டி எழுப்பினாள்.
அவள் புரண்டு படுத்தாள். “ராத்திரில வெறும்
வயித்தோட படுக்க கூடாது மா. எழுந்திரிச்சி சாப்ட்டு படுமா” என்று அவளை சாந்தப்படுத்திப்
பார்த்தாள். “எனக்கு பசிக்கல” என்று சுருக்கமாக
பதில் வந்தது. “வாடி மா அம்மு இல்ல” என்று
அவளை அப்படியே துாக்கினாள். அவள் மேலும் வீம்போடு அப்படியே சரிந்தாள். “என்னதான் மா உன் கோபத்துக்கு காரணம்?” என்றாள்.
“ம்… போயி உன் புருஷனை கேளு” என்றாள் வெடுக்கென்று.
“அவுரு ஒரு கூறு கெட்ட மனுஷன். நீ சொல்லுடி
செல்லம்” என்று வார்த்தையில் தேனைக் குழைத்தாள். “என்னை தான் தவுட்டுக்கு வாங்கியாந்தீங்களாமே அப்புறம்
எதுக்கு சாப்பிட கூப்பிடறீங்க?” என்று பொறிந்தாள். அவள் கோபத்திற்கான காரணம் புரிந்து
போனது. “அவுருக்கு புத்தி கெட்டு போச்சிமா…
அதான் இப்படி பேசறாரு” என்று பதில் சொன்னாள். அவளைத் துாக்கிக் கொண்டு கூடத்திற்கு
வந்தாள். சாப்பிடவைக்கத்தான் ரொம்பவும் மெனக்கெட
வேண்டியிருந்தது.
இரவு படுக்கை விரிப்புகளை போட்டவாறே, “ஏங்க அவள சும்மா சும்மா சீண்டிகினே இருக்கீங்க?”
என்று அம்மா கேட்டாள். அவர் மென்மையாக சிரித்தார். “பாப்பா பேச்சு பழம் விடுங்க” என்று அவரிடம் சிணுங்கினாள்.
“அதிதி” என்று அவர் அழைத்தார். கண்களை மூடி அமைதியாக படுத்திருந்தாள்.
தன்னை அவர் அவ்வாறு அழைப்பதை இவள் விரும்பவில்லை. தன் பெயரின் மென்மையை அந்த குரல்
சிதைப்பதாக உணர்ந்தாள். ஒரு பவுர்ணமி நாளில், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றபோது
தன் பெயர் தொடர்பாக அவருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றது இவள் நினைவிற்கு வந்தது. “அக்காவுக்கு யார் பேர் வச்சா?” என்று கேட்டாள்.
“நான் தான்”
”எதுக்கு அந்த பேர் வச்ச?”
“நித்ய சைதன்ய யதி எனும் ஞானியுடைய பேரு அது. அதால
வச்சேன்.”
“பையன் பொறந்திருந்தா
என்ன பேர் வச்சிருப்ப?”
“நகுலன்”
“இரண்டு பெயரையும் நீதான் செலக்ட் பண்ணி வச்சிருந்தியா?”
ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டினார்.
பல்லி தன் தலையை உயர்த்தி தாழ்த்துவதுபோல இருந்தது அவர் அசைவு. திரும்பவும் இவளே பேசினாள்.
“எனக்கு யாரு வைச்சா?”
“அவர் சிறிது நேரம் யோசித்து அஜயன் பாலா அங்கிள்
வச்சாரு.”
“அவரு ஏன் வச்சாரு?”
“நீ பொறந்த அன்னக்கி அவரு இங்க வந்திருந்தாரு. அதால
அவர் வச்சார்”
“உங்களுக்கு வைக்கனம்னு தோனலையா?”.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று
புரியாமல் அமைதியாக இருந்தார்.
“என் பேருக்கு என்ன அர்த்தம்?”
“விருந்தாளி னு அர்த்தம்”
என்று சொல்லிவிட்டு இவளைப் பார்த்து கண் சிமிட்டி
சிரித்தார். அந்தச் சிரிப்பு இவளை மேலும் எரிச்சலூட்டியது. எல்லாவற்றையும் முடிச்சுப்
போட்டு அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தது இவள் மனம். அக்காவிற்கு பெயர் வைக்க தெரிந்த
அப்பாவிற்கு தனக்கு ஒரு பெயர் வைக்க முடியாதா என்று மனதிற்குள் ஒவ்வொரு வார்த்தைகளாக
உருட்டிக் கொண்டிருந்தாள். “தவிட்டுக்கு வாங்கியதால்
தான் அதிதினு பேர் வச்சிங்களா?” என்று அவரைப் பார்த்து வெடுக்கென்று கேட்டாள். பதில்
சொல்லாமல் சிரித்தார். அதில் ஒளிந்திருந்த கள்ளத்தனம் மேலும் அவளை சிறுத்து போகச் செய்தது.
உண்மையில் தான் ஒரு விருந்தாளி தானோ என்று
அவள் தன்னைத் தானே மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொண்டாள்.
அவளுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்
போல இருந்தபோது அவள் எழுந்து கொண்டாள். கழிப்பறைக்குச்
சென்று வந்தாள். நீல நிற வெளிச்சம் உறுத்திக்கொண்டே இருந்தது. அதை அணைத்து விட்டு வந்து
படுத்தாள். சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிக்க எழுந்தவர் மறுபடியும் விளக்கை எரியச்
செய்தார். அந்த செயல் மேலும் அவர் மீதான ஆத்திரத்தை கூட்டியது. மனம் பிடிபடாமல் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. நினைவுகள்
ஒரு இரப்பர் பந்தைபோல மனதை எண்ணிப்பார்த்தாள். நீர்க்குமிழிபோல மேலெழும்பிக் கொண்டிருந்த
எண்ணங்களை அமைதிப்படுத்த முயற்சித்துப் பார்த்தாள். ஒரு பயனும் ஏற்படவில்லை. மிகச்சரியாக
கடந்த பொங்கல் பண்டிகைக்கு துணிமணிகள் வாங்கச் சென்ற நாளில் வந்து நின்றது நினைவின்
குறிமுள்.
அன்று, காலை உணவை முடித்துக்கொண்டு விழுப்புரம் கிளம்புவதாக
திட்டம். மதியம் தலப்பாகட்டு பிரியாணி என்பதும் தீர்மானமாகியிருந்தது. எல்லோரும் கலந்து
பேசி எடுக்கப்பட்டதுதான். ஆனால் காலை நடைபயிற்சிக்கு
சென்ற அவர் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அப்படியே மீன் வாங்க வேட்டவலம் சென்றுவிட்டார்.
திரும்பி வரும்போது மணி பத்தை தொட்டிருந்தது. கொடுவாவும் சங்கராவும்தான் கிடைத்தன.
பையை சமையல் மேடையில் வைத்துவிட்டு நேரே குளிக்கச்
சென்றுவிட்டார். எல்லோரும் குளித்துவிட்டிருப்பார்கள் என்ற எண்ணத்தில் சுடுநீர் கருவியின்
பொத்தானை அணைத்துவிட்டு குளித்து முடித்தார். அவர் தலைவாரிக் கொண்டிருக்கையில் தெருவில்
விளையாடிக்கொண்டிருந்த அதிதி வேகமாக வந்து
குளியலறைக்குச் சென்றாள். சுடுநீர் குழாயை திறந்தாள். குளிர்ந்த நீர் சீறிப்பாய்ந்து
பாத்திரத்தை நிரப்பியது. அங்கிருந்தே கத்தினாள்.
“அம்மா ஜில் தண்ணியா வருது”. இவள் ஓடிச்சென்று
பார்த்தாள். பொத்தான் அணைக்கப்பட்டிருந்தது. “ஏங்க நீங்களா நிறுத்தினீங்க?” என்று கேட்டாள். அவர்
ஆமாம் என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தார். “நீங்கபாட்டுகினு ஏன் நிறுத்தினீங்க, கேட்டுட்டு
செய்யக்கூடாதா?” என்றாள். “மணி பத்துக்கு மேல
ஆச்சேனு நிறுத்தினேன்” என்றார். அவர்களின் உரையாடலை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தவள்
குளிர்ந்த நீரை ஜக்கில் மொண்டு மேலுக்கு ஊற்றிக்கொண்டாள். “பச்சத் தண்ணியில குளிக்காதமா. செத்த பொரு. ஸ்டவ்ல
வச்சி தறேன்” என்று அம்மா அவளிடம் கெஞ்சிப்
பார்த்தாள். அவள் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தண்ணீரை மொண்டு மேலுக்கு ஊற்றிக்கொண்டே இருந்தாள். அவள் உடம்பு குளிரில் நடுங்கியது.
பற்கள் கிட்டிக் கொண்டன. எதையும் காட்டிக் கொள்ளாமல் குளித்து முடித்து கூடத்திற்கு வந்து துவட்டத் தொடங்கினாள்.
உடை மாற்றிக் கொண்டு சமையல்கட்டில் இருந்த அம்மாவிடம் சென்றாள்.
பாலித்தீன் பையில் இருந்த மீன்களைப் பார்த்தாள். முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது.
“இந்த மீன்தான் வாங்கியாந்திருக்காரா” என்று அழுத்தமாக கேட்டாள்.
அம்மா சுதாரித்து பதில் சொல்வதற்குள் “எறா இல்லையாமா?” என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது.
இறால் மீனின் நிறம் இவளுக்கு மிகவும் பிடிக்கும். குழம்பின் மனத்தை
தன் நாசிவழியாக இழுத்து அனுபவித்தாள். குழம்பில்
சிறியதும் பெரியதுமாக வட்ட வட்டமாக அவை கிடக்கும். அவற்றை தட்டின் ஓரத்தில் வரிசைக்கிரமமாக எடுத்து
அடுக்கிப் பார்ப்பாள். பின் ஒவ்வொன்றாக எடுத்து ருசித்து சாப்பிடுவாள்.
”என்ன மீனு வாங்கியாந்திருக்காரு உன் புருஷன்?”
அப்பா என்று சொல்லாமல் உன் புருஷன்
என்றது அவளுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. வெளிகாட்டிக்கொள்ளாமல் “கொடுவாவும்
சங்கராவும்” என்று சொன்னாள்.
அதற்கு மேல் மீன் சம்பந்தமாக
எதுவும் கேட்க வேண்டாம் என்று பட்டது. சலிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். “அதி இதுக்குலாம் கோவிச்சிக்க கூடாதுமா” என்றால்
அவள். இவள் கூடத்திற்கு வந்து தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்தாள்.
“அடுத்த வாரம் கண்டிப்பா வாங்கியாரச் சொல்றேன்மா
வா வந்து இட்லி சாப்பிடு” என்று அவள் திரும்பவும் அழைத்தாள்.
“எனக்கு பசிக்கல” எனும் வார்த்தைகள் பதிலாக வந்தன.
அவர் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை சட்டென்று புரிந்து கொள்ள முடியாது.
“நீ பேசாம கம்பியூட்டரையே கட்டிகினு இருந்திருக்கலாம் பா” என்று பெரியவள் அவரைப் பார்த்து
கிண்டலாகச் சொன்னாள். “சரியா சொன்னடி” என்றாள் அம்மா. அவர் வந்து
தன்னை சமாதானம் செய்யமாட்டாரா என்று ஒருகணம் நினைத்துப் பார்த்தாள். சிறு சலனமுமின்றி
அவர் பணியில் மூழ்கிக் கிடந்தார். தன்னை அனைவரும் அலட்சியம் செய்வதாக நினைத்துக்கொண்டு
எழுந்து தெருவுக்கு சென்றாள். பெரியவளின் தொடர்ச்சியான இருமல் சப்தம் அவள் நினைவுகளை
துண்டித்தது. “சைதன்யா எழுந்து தலக்காணிய உயரமா
போட்டு படுமா” என்று அம்மா எழுப்பினாள். கடிகாரச் சப்தம் தெளிவாக கேட்டது. தெரு முக்கில்
நாய் குரைத்துக்கொண்டு இருந்தது.
போர்வையை இழுத்து முழுக்க போர்த்திக் கொண்டாள். அப்படியும்
குளிர் அதிகமாக இருந்தது. மின் விசிறியின் வேகத்தை குறைக்கலாமா என்றும் நினைத்தாள். “அக்கா செவுத்தோரம் படுத்திருக்கா ஃபேனை நிறுத்தனா
அவளை கொசு கடிக்கும். நல்லா போத்திகினு படு” என்று அப்பா எப்போதோ அதட்டியது நினைவிற்கு
வந்து தொலைத்தது. கேட்டு எதுவும் ஆகப்போவதில்லை
என்று அமைதியாக இருந்துவிட்டாள். அவரை நினைக்க நினைக்க எரிச்சலாக இருந்தது. “தூக்கம் வரலனா ஒன்னு ரண்டு மூனு… எண்ணிக்கொண்டே
இரு. தூக்கம் தன்னால வந்துடும்” என்பது தூக்கத்திற்கான அம்மாவின் மந்திரம். மனதிற்குள்
மெதுவாக எண்ணத் தொடங்கினாள். அப்படியே துங்கியும் போனாள்.
நள்ளிரவு
கடந்திருக்கக் கூடும். எங்கும் ஒரே நிசப்தம். நீல நிற வெளிச்சம் மேலும் அறையை அடர்த்தியாக்கிக்
கொண்டிருந்தது. போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தாள் அதிதி. தூங்கிக் கொண்டிருந்த
மூவரையும் பார்த்தாள். குறட்டை விட்டு துங்கிக் கொண்டிருந்தார் அவர். குறட்டை சத்தம்
அவளை பலநாட்கள் தூங்கவிடாமல் இம்சை செய்திருக்கிறது. தன் தலையணையை நகர்த்தி அடியில்
ஒலித்து வைத்திருந்த கத்தியையும் தலையணையையும் எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றாள்.
அவளின் நிழல் எதிரில் இருந்த சுவற்றின் மீது சன்னமாக படிந்திருந்தது. மனதை திடப்படுத்திக்
கொண்டு கீழே தோதாக அமர்ந்தாள். தலையணையை எடுத்து அவர் முகத்தின் மேல் வைத்து ஏறி கால்களை
இருபக்கமும் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். சுதாரித்து எழுந்திருப்பதற்கு வாய்ப்பே
அளிக்காமல் கத்தியால் தன் வலுகொண்ட மட்டும்
அவர் கழுத்தை அறுத்தாள். ஆழமாக கத்தி பாய்ந்திருந்தது. குரல்வளை துண்டிக்கப்பட்ட நிலையில்
கூச்சலிட முடியாமல் கால்களால் உதைத்தார். ரத்தம் பீறிட்டு கிளம்பியது. என்ன நடக்கிறது
என்று அவர் உணர்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ரத்தம் பீறிட்டு
சுவற்றில் தெரித்தது. கோடு கோடாக வழிந்து தரை முழுக்கப்பரவியது. அவரின் அசைவுகள் மெல்ல
அடங்கிக் கொண்டிருந்தன. தலையணையை அப்புறப் படுத்திவிட்டு பார்த்தாள். அவரின் உஷ்ணம்
அதில் பொதிந்திருந்தது. கண்கள் தன்னையே உற்றுப் பார்ப்பது போல இருந்தன அவளுக்கு. நிலைத்த
பார்வை நடுக்கத்தை ஏற்படுத்தியது. கோரைப்பாயை தாண்டி ரத்தம் அடர்த்தியாக உறைந்து கிடந்தது.
விபரீதம் தெரியாமல் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். எழுந்து அவள் தன் இடத்திற்கு சென்று படுத்துக்கொண்டாள்.
அக்காவின்
சிறுநீர் தொப்பலாக இவளை நனைக்கத் தொடங்கியது. கனவு அறுபட்டு உறக்கம் கலைந்து திடுக்கிட்டு
எழுந்தாள். உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவை பார்த்தாள்.
அவளையும் மீறி கேவிக் கேவி அழுதாள். சப்தம் கேட்டு அலறி அடித்து எழுந்த அம்மா, “அதிதி என்னமா?” என்று கேட்டாள் இவளுக்கு என்ன சொல்வதென்று
தெரியவில்லை.பயத்தில் நாக்கு குழறியது. வார்த்தைகள் வராமல் அழுதபடியே இருந்தாள். சப்தம்
கேட்டு அவரும் எழுந்து கொண்டார். பயத்தினால் முகம் வெளிரிப்போய் இருந்தது. அழுகை நின்ற
பாடில்லை. “கண்ட எடத்துக்கு போவாதனா கேக்கறியா?
எதையாவது பாத்து பயந்திருப்ப” என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு பூஜை அறைக்கு
சென்றாள். கொஞ்சம் விபூதியை எடுத்து வந்து அவள் நெற்றியில் பூசினாள்.
குடிக்க
தண்ணீர் கொடுத்தாள். வாங்கி இரண்டு மிடர் அருந்திவிட்டு நீல நிற விளக்கையே வெறித்துப்
பார்த்துக் கொண்டிருந்தாள். கனவின் நிகழ்வுகள் திரும்பத் திரும்ப அவள் மனதில் புரண்டுகொண்டே
இருந்தன. பயத்தினால் பேச்சே எழவில்லை. அப்பா எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு
வந்தார். மீண்டும் படுத்து குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார். “அம்மா நான் அப்பா கிட்ட போய் படுத்துக்கட்டுமா?
என்று கேட்டாள். “ஏம்மா? இங்கேயே படு” என்றாள்.
“ பயமா
இருக்கு” என்றாள்.
“சரி போய் படுத்துக்கோ”
எழுந்து சென்று நன்றாக
உறங்கிக் கொண்டிருந்த அப்பாவின் அருகில் படுத்தாள். அவர் மீது கால்களைத் தூக்கிப் போட்டுக்
கொண்டாள். அவரும் அவளை தன்பக்கமாக இழுத்து
குளிருக்கு அடக்கமாக போர்த்தி விட்டார். மறுபடியும் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.
அவரின் கழுத்தை மெதுவாக தடவிப்பார்த்தாள் சிறிது
நேரம் அமைதியாக இருந்தாள். பின் கண்களை மூடிக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்று மனதிற்குள்
எண்ணத் தொடங்கினாள்
No comments:
Post a Comment