அவள் வயிறு பெருத்துக்கொண்டே போனது. எந்த நிமிடமும்
அவள் பிரசவித்து விடலாம் என்று தோன்றியது அவருக்கு.
பிரசவ வலி எடுப்பதற்காக காத்திருக்கத் தொடங்கினார். காத்திருப்பு நீண்டு கொண்டே இருந்தது.
பிரசவவலி வருவதற்கான எந்த அறிகுறியும் அவளிடத்தில் காண முடியவில்லை. மருத்துவர் கூறிய
நாட்களும் கடந்தன. அவர் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார். எங்கேயும் நிலை கொள்ளாமல் அவர்
சிந்தனை அலைந்து கொண்டே இருந்தது.
ஒரு
வாரம் கழிந்த நிலையில் பெருமழை தொடங்கி விடாது பெய்து கொண்டிருந்தது.தெருக்களை அடைத்து
தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. தவளைச் சப்தம் விடாமல் கேட்கத் தொடங்கிய இரவு அவளுக்கு
வலி கண்டது. வலி பொறுக்கமுடியாமல் துடித்தாள். தெருக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார்.
வானம் பிளந்து கொண்டு மழை ஊற்றிக்கொண்டிருந்தது. தெருத்திண்ணையில் மோதி சிக்கிக் கொண்டிருந்தது
நைந்து பிய்ந்து போன பாய். காலால் அதைத் தள்ளி விட்டார். நீரின் போக்கில் அது அடித்துச் சென்றது.
தெருக்கோடியில் இருந்த கோவில் இருளில் பூதாகரமானத்
தோற்றத்தோடு நின்று கொண்டிருந்தது. தோட்டத்து காட்டுவா மரத்தில் இருந்த கோட்டான் ஒரு
முறை கத்தி அடங்கியது. வெள்ளம் உயர்ந்து கொண்டே இருந்தது. பயம் மெல்ல கவியத் தொடங்கிய
போது அவர் தெருக்கதவை அடித்துச் சாத்திவிட்டு கூடத்திற்கு வந்தார். வலி பொறுக்கமுடியாமல்
அவள் கத்திக் கொண்டிருந்தாள். அவர் பின் பக்க கதவைத் திறந்து கொண்டு, குப்பு அக்காவை
அழைக்க அவள் வீடு நோக்கி நடத்தார். இடுப்பளவு வெள்ளத்தில் நடந்து செல்வதே அவருக்கு
சவாலாக இருந்தது. அவர் மனம் முழுக்க வீட்டிலேயே கிடந்தது.
குப்பக்காவை அழைத்துக் கொண்டு திரும்புகையில் இடுப்பளவைத்
தாண்டி தண்ணீர் வந்து விட்டிருந்தது. சாளாவரத்தின் வழியாக அவர் வீட்டின் கூடத்திலும்
தண்ணீர் மட்டம் உயரத் தொடங்கியது. குளிர் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. குப்பக்கா
ஜானகியின் அருகில் சென்று அமர்ந்தாள். ஜானகியின் கால்களை நீட்டி பிடித்துக் கொண்டாள்.
வலி பொறுத்துக்க தாயி என்று சொல்லிக் கொண்டே ஜானகியின் அடிவயிற்றை நீவி விட்டாள். பற்களை
கடித்துக் கொண்டு தன்னால் முடிந்த மட்டும் உந்தித் தள்ளினாள். கரிய உருண்டை வடிவில்
இரத்தப் பிசுபிசுப்புடன் ஒரு உருவம் கீழே வந்து விழந்தது. அதைப் பார்த்த குப்பக்காவிற்கு
வேர்த்து போனது. அவர் அருகில் வந்து பார்த்தார். பந்து போல இருந்த அது பாறாங்கல்லைப் போன்றிருந்தது. அதை தொட்டுப்
பார்த்தார். இரத்த பிசுபிசுப்பு கைகளில் அப்பிக் கொண்டது. கவிச்சை வாசனை ஈரக்காற்றில்
கலந்து ஒருவித அசூயையை ஏற்படுத்தியது. சிறிது
நேரத்தில் மீண்டும் அவளுக்கு வலி எடுக்கத் தொடங்கியது. குப்பக்கா அதீத எதிர்பார்ப்புடன்
ஜானகியின் வயிற்றை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.
மீண்டும் பெருங்குரலெடுத்து கத்தியபடி பெரிய கரிய
பாறாங்கல்லை பிரசவித்து தள்ளினாள். பார்த்துக் கொண்டருந்த இவருவரின் அடிவயிற்றையும்
பயம் கவ்வத் தொடங்கியது. எதுவும் புரியாமல் அவர் குப்பக்காவை மலங்க மலங்க பார்த்துக்
கொண்டிருந்தார். மறுபடியும் சிறிது நேரத்திற்குள்ளாக இன்னொரு கரிய பாறாங்கல்லை பிரசவித்து
தள்ளினாள். பயத்தினால் அவர்களுக்கு உடம்பு நடுங்கத் தொடங்கியது. தொடர்ந்து அவள் கற்களை
பிரசவித்துக் கொண்டே இருந்தாள். கூடம் முழுக்க கற்கள் நிரம்பிக் குன்றுகளைப்போல காட்சி
அளித்தது. அவள் தொடர்ந்து கற்களை பிரசவித்துக்கொண்டே இருந்தாள். தெரு நடைக்கு செல்லும்
வழிகளிலும் கற்கள் குவிந்து வழியை அடைத்துக் கொண்டன. அவள் பிரசவிப்பது தொடர்ந்து கொண்டே
இருந்தது. கற்கள் குவிந்தபடி இருந்தன.
கூடம் முழுக்க கற்கள் குவிந்து இடத்தை அடைத்துக்
கொண்டிருந்தன. இறுதியாக கற்கள் அவர்கள் இருவரையும் அழுத்தத் தொடங்கின. குப்பக்காவை
ஒரு பெரிய கல் அழுத்த அவள் வாய் வழியாக ரத்தம் பொங்கி வழிந்தது.அதற்குள் இன்னொரு கல்
அவள் முகத்தை மோதிச் சிதைத்தது. சதைகள் பிய்ந்து தொங்கின. அவருக்கு உடம்பில் நடுக்கம்
அதிகரித்தது. மூச்சை நன்றாக இழுத்து விட்டபோது அவரது பாதத்தில் ஒரு பெருங்கல் வந்து
விழுந்தது. பாதம் நசுங்கி அவர் கீழே சரிந்தார். மேலும் இரு கற்கள் அவர் முகத்திலும்
வயிற்றிலும் விழுந்தன. வாயில் ரத்தம் பீரிட்டு பொங்கி நய்ந்து தொங்கிய சதைகளின் உடாக
சொட்டு சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது. நாசித் துவாரங்கள் சிதைந்த நிலையில் வாயைத்
திறந்து காற்றை இழுத்தார். அப்படியே இன்னொரு கல் இறங்கி வாயை அடைத்து நின்றது.
“அய்யோ
என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று கத்திக் கொண்டே அருகில் படுத்திருந்த தன்
மனைவியைப் பிடித்து கீழே தள்ளினார். அவள் பயத்தில் அலறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. “என்ன ஆச்சு?” என்றாள். “ஒரு கெட்ட கனவு” என்றார். “தண்ணி குடிச்சிட்டு எதையும் நெனச்சி பாக்காம தூங்குங்க”
என்று சொல்லிவிட்டு ஒருக்களித்து படுத்துக் கொண்டாள். ஆண் குழந்தைக்கான சூத்திரத்தை
தான் கண்டு பிடித்ததற்கும் இக்கனவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடுமோ என்று யோசித்து
பார்த்தார். அந்த யோசனை அவரை மெல்ல புரட்டிப்போடத் தொடங்கியது. தன்
பழைய நினைவுகளில் இருந்து ஒவ்வொரு துருப்புச்சீட்டாக அவர் வெளியே எடுக்கத்தொடங்கினார்.
திருவாளர்
அங்கமுத்து வந்தடைந்திருக்கக்கூடிய இடம் ஒரு நாளில் அவருக்கு சாத்தியப்பட்டதில்லை. அதற்காக அவர் செலவிட்ட நேரத்தை வெற்று மனம் கொண்டு ஒருவர் கற்பனை
செய்துகூட பார்க்க முடியாது.பத்தாண்டு கால
தொடர் உழைப்பை அதற்காக ஒப்புக் கொடுத்திருக்கிறார்.
இடையறாத பயணங்கள், நீண்ட உரையாடல்கள் மற்றும்
நேர் சந்திப்புகள்; நினைக்கவே மலைப்பானவை. ஆண்குழந்தைகளை மட்டுமே கருத்தரிக்கச் செய்யும் சூத்திரத்தை
கண்டுபிடிப்பதில் இவைதாம் அவருக்கு உறுதுணையாக
இருந்தன . ஒரு கட்டத்தில் கண்டாச்சிபுரம் நகரத்தின் அழுத்தமான அடையாளமாக அவர் இப்படித்தான் மாறிப்போனார்.
அவருக்கு முதல் குழந்தையே பெண்ணாக பிறந்தது. அப்போது
அது குறித்து அவர் வருத்தப்படவில்லை. ஆனால்
அவர் மனைவி ஜானகி இரண்டாம் முறை கருத்தரித்தபோது
எல்லோரையும் போல என்ன குழந்தையாக இருக்கும்
என்ற ஆவல் அவரையும் தொற்றிக்கொண்டது. “ஆணா இருந்தா இருக்கட்டும் இல்லனா வயித்த கழுவி,
கூட்டிட்டு வாடா” என்றாள் அவருடைய அம்மா. அதுவும்
ஒரு காரணமாக இருக்கலாம். ஜானகிக்கு
அது பற்றியெல்லாம் எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை. கணவன் சொல்லே வேதவாக்கு என்று அமைதியாகப் போகும் குணவதி அவள்.
அன்று
திங்கள் கிழமை; பிரதோஷம். விடிய காலையில் எழுந்து
முதல் பேருந்தில் பயணித்து கோவில் நகரத்தை அடைந்தபோது மணி பத்தரையாகியிருந்தது. நகர் மத்தியில் பிரசித்தி பெற்ற அம்மருத்துவமனையை
கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. பரந்து விரிந்திருந்தது
மருத்துவமனை. நவீன தொழில் நுட்பத்தின் வேர்
ஒவ்வொரு அங்குலத்திலும் படர்ந்திருந்தது.தன் மனைவியின் பெயரை அங்கிருந்த பணியாளரிடம்
பதிந்துவிட்டு தங்களின் முறைக்காக காத்திருந்தனர்.
சிறிது
நேர காத்திருப்புக்கு பிறகு “யாருமா ஜானகி?” என்று உரத்த குரலில் கேட்டாள் ஒல்லியாக இருந்த பெண் பணியாளர். தன் மனைவியை
அழைத்துக்கொண்டு அவர் உள்ளே நுழைந்தார். மருத்துவர் பார்ப்பதற்கு லட்சுமிகடாட்சமாக இருந்தார். “சொல்லுங்க என்ன பிரச்சனை” என்று மென்மையாக கேட்டார். ஆங்கில தொனி அவ்வார்த்தைகளில் குழைந்திருந்தது. அவள் பேச
எத்தனிப்பதற்குள் அங்கமுத்து பேசினார். “இவளுக்கு பீரியட் தள்ளி போகுது. ஏற்கனவே ஒரு பெண்
குழந்தை இருக்கு. அதான்” என்று வார்த்தைகள்
அதற்குமேல் வெளிப்பட்டு விடாமல் பார்த்துக்
கொண்டார். மருத்துவர் சுலபத்தில் புரிந்துகொண்டார். நேரடியாகவே கேட்டார். “வயித்துல இருக்கறது ஆணா பொண்ணானு தெரிஞ்சிக்கனும். இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே
அவரை ஊடுருவிப் பார்த்தார். ஆமாம் என்பதுபோல
அவர் தலையாட்டினார். “கருவுல இருப்பது ஆணா பொண்ணானு பார்த்து சொல்லவே
கூடாது” என்று மருத்துவர் கூறினார். அதைக்கேட்டு அவர் முகம் சுருங்கிப்போனது. “ நீ அந்த ஹாஸ்பிடல் போ டா. அவங்க கரக்டா பாத்து சொல்லிடுவாங்க ” என்று உடன் பணியாற்றும் சிவபாலன் உறுதியாக சொல்லியிருந்தார்.
அது அவருக்கு நினைவில் வந்து சென்றது.
“நீங்க தான் பெரிய மனசு பண்ணனும்மா” என்று சொல்லிக்கொண்டே
மருத்துவரை பரிதாபமாகப் பார்த்தார். அவர் சொல்வதைக் கேட்டு தலையாட்டிக்கொண்டே ஜானகிக்கு இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார். மறுபடியும் அங்கமுத்துவே பேசினார். “உங்கள நம்பிதான் மா வந்திருக்கோம்”. இந்த முறை அவர்
குரல் மிக சன்னமாக ஒலித்தது. சுலபத்தில் மருத்துவரிடமிருந்து இசைவான பதிலை பெற முடியாது
என்று அவருக்கு புரிந்தது. கெஞ்ச வேண்டிய நேரத்தில் கெஞ்சுவதில் தவறில்லை என்றும் நினைத்தார்.
“சரி. சரி பார்த்து சொல்றேன். வெளியில தெரிஞ்சிடக்
கூடாது” என்று கடுமையாக எச்சரித்து அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
ஒரு கட்டிலில்
ஜானகியை படுக்க வைத்தார். ஸ்கேன் இயந்திரங்கள் இயங்கத்தொடங்கின. மருத்துவர் அவளை நுட்பமாக
பரிசோதிக்கத் தொடங்கினார். அங்கமுத்துவிற்கு படபடப்பாக இருந்தது. “ஓகே. எழுந்துக்குமா” என்று கூறிவிட்டு அருகில் இருந்த கை அலம்பும் பாத்திரத்தில் கைகளை கழுவி துண்டில் துடைத்துக் கொண்டார். மருத்துவர் தன் இருக்கையில் வந்து அமர்ந்தபோது ஆடைகளை
சரிசெய்தபடி ஜானகியும் வந்து கொண்டிருந்தாள். அவள் வரும் வரை காத்திருந்த மருத்துவர் “பெண் குழந்தைதான்மா” என்று கூறினாள். அதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கமுத்து
இடிந்து போனார். முகம் இருளடைந்தது. அந்த நொடி தன்னுடன் பணி புரியும் முருகானந்தத்தின் மீது ஆத்திரமாக வந்தது அவருக்கு. “என் பேச்சை கேட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்தா
ஆண் குழந்தை நிச்சயம்” என்று கூறி அவர்தான் அங்கமுத்துவை நாட்டு மருத்துவரிடம் அழைத்து சென்றார். மருத்துவர் தன் எதிரில் இருந்த மருந்துச் சீட்டில் எழுதத் தொடங்கியபோது அங்கமுத்துவின் மனதில் முன்னும்
பின்னுமாக அலைவுறத் தொடங்கின.
அஞ்சா
நாட்டு மருந்துகடை சாலையோரத்தில் ஒரு பெரிய புளிய மரத்தின் கீழ் இருந்தது. தார்பாயைக் கொண்டு தற்காலிக குடியிருப்பை உருவாக்கி இருந்தனர்.
ஒரு சிறிய மர ஸ்டூலில் தடித்த மீசையுடன் நடுத்தர
வயதுடைய ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் வரிசையாக கண்ணாடிப் பாத்திரங்களில் மூலிகைகள்
வைக்கப்பட்டிருந்தன. அவருக்கு சிறிது தள்ளி கல் உரலில் மூலிகைகளை
போட்டு கடப்பாறையால் இன்னொருவர் இடித்துக்கொண்டிருந்தார்.
மீசைக்காரருக்கு நேர் பின்னால் மூன்றாமவர்
அமர்ந்திருந்தார். இடிக்கப்பட்டு வரும் மூலிகைகளை சல்லடையில் போட்டு சலிப்பது அவர் பணி. கூட்டம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.முருகானந்தம்
அங்கமுத்துவை அழைத்துக் கொண்டு அங்கு சென்றபோது இருட்டத்தொடங்கியிருந்தது. அங்குபோய் நின்றதும் முருகானந்தத்திற்கு மூலிகை நெடி
தும்மலை ஏற்படுத்தியது. யார் தும்முவது என்று மீசைக்காரர் திரும்பி பார்த்தார்.
தன் காவிப் பற்களைக் காட்டி “வா பைனான்ஸ் சார்”
என்று அவருக்கு கேட்கும் விதமாக அழைத்தார்.
மூன்றாமவர் சலித்து முடித்துவிட்டு,
கூட்டத்தை அரை வட்ட வடிவில் ஒழுங்கு
செய்து கொண்டிருந்தார். தங்களுக்கு தோதான இடமாக பார்த்து இருவரும் நின்றனர். பெட்ரமாக்ஸ்
விளக்கை மீசைக்காரர் ஏற்றினார். சூழலை வேறுவிதமாக மாற்றிக் காட்டியது அவ்வொளி.
மீசைக்காரர்
தன்னுடைய கட்டைக் குரலில் பேசத் தொடங்கினார். “நல்லா காது
கொடுத்து கேளுங்க மக்களே. மாயமில்லை மந்திரமில்லை. கண்கட்டு வித்தையுமில்லை. நோய் புடிச்ச
வீட்டுக்கு வந்து எடுக்கற பில்லி சூன்யமும்
இல்லை” என்று தொடர்ச்சியாகப் பேசிவிட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து இரண்டு மிடர் அருந்தினார். தொண்டையை
செருமிக் கொண்டார். மீண்டும் கூட்டத்தைப் பார்த்து பேசத்தொடங்கினார். “என்னடா இவன் இதுவும் இல்ல அதுவும் இல்லனு சொல்றானு
பார்க்கறீங்க புரியுது. இது முழுக்க முழுக்க பழைய ஓலைச் சுவடிகள்ல இருந்து உருவான மருத்துவ
முறை. இங்க பாத்தீங்கனா இமய மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகை இருக்கு; அப்புறம்
நம்ம பழனிமலை; குற்றாலம் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகள் கொண்டுதான்
மருந்து செய்யறோம்” என்று நிறுத்திவிட்டு ஆழ்ந்து மூச்செடுத்தார். சிறிது நேர ஆசுவாசத்திற்கு
பிறகு மீண்டும் தொடர்ந்தார். “ இங்க நிக்கற பலபேருக்கு சொல்ல கூச்சப்படற வியாதிங்க
இருக்கலாம். வெளியில தெரிஞ்சா மானம் போயுடும். கவரி மானுக்கு ரோமம் போச்சுதுன்னா உசுரு
இல்ல. அதுமாதிரி மனுஷனுக்கு மானம். என்ன நான் சொல்றது சரிதானே” என்று கூட்டத்தைப் பார்த்து
கேட்டார். இப்படி திடீரென்று அவர் கேட்டதும் கூட்டம் அமைதியானது. அமைதியை களைக்கும் விதமாக அவரே தொடர்ந்தார். “தூக்கமின்மை, சொப்பன ஸ்கலிதம்,
சீக்கிரம் விந்து வெளியாதல், விரைப்பின்மை, ஆகியவற்றுக்கு மருந்து
உங்க கண்ணெதிரிலேயே தயார் பண்ணி தறோம். ஒருமுறை வாங்கிப் பாருங்க. எல்லா வியாதிகளும் குணமாவதை நீங்களே உணரலாம்” என்று சொல்லி
ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு திரவத்தை ஊற்றினார். அதன் வாசனை குமட்டிக்
கொண்டு வந்தது. கோழையைப்போல நீர்த்து வழு வழுப்பாக இருந்தது அது.அதை உள்ளங்கையில் ஊற்றி
அனைவருக்கும் காட்டிவிட்டு கீழே கொட்டினார்.
ஒரு திவலை கூட ஒட்டிக்கொள்ளாமல் அனைத்தும் கீழே விழுந்தது. அனைவரும் வைத்தக் கண் எடுக்காமல் அவர் செய்வதையே
பார்த்துக் கொண்டிருந்தனர். “இப்படி தண்ணி
மாதிரி இருக்கும் விந்தால எப்படி
குழந்தைய உருவாக்க முடியும்; எப்படி நீடிச்ச சந்தோஷத்தை கொடுக்க முடியும்” என்று கூறிக்கொண்டே வேறொரு கண்ணாடி பாத்திரத்தை திறந்து இரண்டு சிட்டிகை மூலிகைப் பொடியை எடுத்து அதில்
தூவினார். அடுத்த நொடி அத்திரவம் இளம் நுங்கைப்போல கொழ கொழவென்று திரளத் தொடங்கியது.
அவர் அதையும் உள்ளங்கையில் எடுத்து எல்லோரிடமும்
காட்டினார். பின்வரிசையில் இருந்தவர்கள் பார்ப்பதற்காக நெருக்கித்தள்ளினர். அவருக்கு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருந்தது. ஆழ்ந்த யோசனையில் அவர் இருந்தார். “சின்ன வயசுல
தெரியாம செஞ்ச தப்பால இப்ப அல்லல்படும் இளைஞர்களைப் பத்தி சொல்லபோறேன் கொஞ்ச நேரம் காது கொடுத்து கேளுங்க.
ராத்திரில பொண்டாட்டிய பாத்தவுடன் சினம் கொண்ட நாகம் போல நிக்கும் ஆண் குறி அடுத்த சில நொடியில புஸ்ஸூனு
காத்தெறங்கின பலூன் மாதிரி சிறுத்து
போய்டும்” என்று நிறுத்தி
“என்ன நான் சொல்றது நெஜமா இல்லையா” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார். அவர் அப்படி கேட்டதும் சிலர் தலையை தாழ்த்திக்கொண்டனர்.
தன்னையே எல்லோரும் பார்ப்பதாக அங்கமுத்துவிற்கு
தோன்றியது. மேலும் சிலர் பின்பக்கமாக நடந்து கூட்டத்தில் இருந்து நழுவிச் சென்றனர்.
எஞ்சியிருந்த கூட்டம் அமைதியாக இருந்தது.

மருத்துவர்
மென்மையாக கனைத்துக் கொண்டபோது அங்கமுத்து பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தார்.
பெண்குழந்தையை
கருவிலேயே கலைப்பது மிகவும் சுலபமான வேலை என
பேசித் திரிபவர்கள் மேல் அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இரண்டாவது பெண் குழந்தையை கலைக்க பெரும்பாடு படவேண்டியிருந்தது. இரண்டாவது
முறை கருத்தரித்தபோது கைகளை பிசைந்து கொண்டு
நின்றார். சிவபாலன்தான் இந்த மருத்துவமனையை சிபாரிசு செய்தார். என்ன குழந்தை
என்று தெரிந்துவிட்டது. அடுத்து எப்படி கலைப்பது என்ற கேள்வி விஸ்வரூபம் கொண்டு நின்றது.
“நீங்களே எதாவது பண்ணிடுங்க டாக்டர்” என்று கெஞ்சும் தொனியில் கேட்டார். அதற்கு அவர்,
“ என்ன வெளையாடுறீங்களா; நாலு மாச குழந்தையை கலைப்பது ஆபத்தானது. என்னால முடியாது”
என்று திட்டவட்டமாக கூறினாள். தலைக்கு மேலாக சுழன்று கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தார்.
மனதில் கலவரம் பரவத்தொடங்கியது. இந்தக் கருவை
கலைப்பதற்கு இன்னும் என்னென்ன சிரமங்களை சந்திக்க வேண்டுமோ என்று அவர் மனம் தொடர்ந்து
அசை போட்டுக்கொண்டே இருந்தது. வெறையூர் மருத்துவச்சியிடம் அழைத்துச் சென்றால் என்ன
என்று அவருக்கு தோன்றியது. வீட்டிற்கு வரும் வரை அவர் அது தொடர்பாகவே யோசித்துக்கொண்டிருந்தார்.


இதன் பிறகு ஆண்குழந்தைகள் மட்டுமே கருத்தரிக்கச்
செய்ய வேண்டும் என்பதற்காக அவர் பல்வேறு மருத்துவர்களைச்
சென்று சந்தித்தார். பயன் ஏதும் இல்லாமல் அச்சந்திப்புகள்
முடிந்தன. சித்தா யுனானி ஆயுர்வேதம் என மருத்துவ முறைகளை மாற்றிப் பார்த்தார். அவற்றிலும் திருப்திகரமாக அவர் உணரவில்லை. கரு உருவான
பிறகே கண்டு சொல்லும் தொழில்நுட்பத்தின் மீது அவருக்கு எரிச்சலாக வந்தது.அவருடைய கனவெல்லாம்
கரு உருவாகும் போதே அது ஆணின் கருவாக உருவாகவேண்டும் என்பதாக இருந்தது. தொடர்ந்து பின்னடைவைச்
சந்தித்தும் கூட அவர் மனம் சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டார்.
ஒரு கட்டத்திற்குமேல் தன் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படத் தொடங்கினார்.
ஒவ்வொரு முறையும் சூத்திரத்தின் வடிவம் மாறிக்கொண்டே
இருந்தது. அக்காலக் கட்டத்தில் அவர் பல்வேறு இடர்களைக் கடக்கவேண்டியிருந்தது. தன் வாழ்க்கையை
பணயம் வைத்து புது புது சூத்திரங்களை உருவாக்கிக்
கொண்டே இருந்தார்.நூறு சதவீதம் பொருத்தமான சூத்திரத்தை நோக்கி அவர் கவனம் குவிந்திருந்தது.

கார்த்திகை
முடிந்து மார்கழி தொடங்கியிருந்தது. பனி விலகாத ஒரு விடியலில் சூத்திரம் பூர்த்தியானதை
அவரால் உணர முடிந்தது.கலவியை முடித்துக் கொண்டு அவர் புரண்டு படுத்தார். எழுந்து குளித்துவிட்டு
சூரியோதையத் திசை நோக்கி விழுந்து வணங்கினார். பின் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து
சூத்திரத்திற்கு உயிரூட்டத் தொடங்கினார். சூத்திரம் மெல்ல விரிவு கொண்டபடி இருந்தது.
கோடை வெயில் அனல்போல தகித்த ஒருநாள் அவர் சூத்திரத்திற்கு
இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். எந்தெந்த நாட்களில்; எந்தெந்த நேரத்தில் கூட வேண்டும்; எந்த திசை நோக்கி படுக்க வேண்டும்;
ஆகிய மூன்று காரணிகள் தான் கரு, ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்கின்றன எனும் முடிவிற்கு வந்தார்.
அக்காரணிகளை உள்ளடக்கிய சூத்திரத்தை இறுதி செய்தபோது அவர் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.
இனி கரு உருவாகும் போதே அது ஆண் குழந்தையின் கருவாக இருக்கும் என்று வெளியுலகிற்கு
அறிவித்தார். புதிய சூத்திரத்தின் மூலம் தன்
மனைவியின் கருப்பையில் ஆண்குழந்தைக்கான ஒரு கருவை விதைத்து நவீன மருத்துவத்திற்கு நேரடியாகவே சவால் விட்டார்.
“ஆம்பள கொழந்தைதான் பொறக்கும்னு சொல்லி எங்கிட்ட
பணம் வாங்கி ஏமாத்திட்டான் தேவிடியா பையன்” என்று குடித்துவிட்டு அங்கமுத்து வீட்டிற்கு முன்பாக வந்து ம.க.போ.க கட்சியின் ஒன்றிய செயலாளர்
பழனிச்சாமி கத்திவிட்டு சென்ற மறுநாள் மருத்துவ துறையில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக
கடந்த ஆண்டுக்கான டாக்டர்.எஸ்.பி.ஜோஷி விருதுக்கு திருவாளர் அங்கமுத்து அவர்கள் பெயர்
பரிந்துரை செய்யப்பட்ட செய்தி அனைத்து தினசரிகளிலும் வெளியாகியிருந்தது.
No comments:
Post a Comment