Sunday, November 14, 2010

இருவருக்கும் இடையில் நின்ற சொல்


பெற்றோர்களின் இருப்பு என்பது குழந்தைகளின் நம்பிக்கை சார்ந்ததாக எப்போதும் இருக்கிறது. தங்களின் பெற்றோர்கள் எவ்வளவு தான் மோசமானவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் பாதுகாப்பு குழந்தைகளுக்கு அவசியமானதாகவே இருக்கிறது. கடந்த செப்டம்பர் 20 அன்று என் தந்தை ஓய்வு பெறுவதற்கு பத்து நாட்கள் முன்பாகவே அவர் பணியாற்றிக் கொண்டிருந்த பள்ளியில் அகால மரணம் அடைந்தார். எந்தக் கட்டத்திலும் அவர் என்னை படி என்றோ இந்த வேலைக்கு செல் என்றோ ஒருபோதும் கூறியது கிடையாது.இந்தக் காரணத்துக்காகவே அவரை நான் அதிகம் நேசித்தேன். அவர் கடைசி வரை ஒரு சிறந்த தந்தையாக இருக்க முயற்சித்து பெரிதும் அதில் பின்னடைவையே சந்திக்க வேண்டியிருந்தது. காரணம் கடைசி பத்தாண்டுகளாக அவரைத் தொற்றிக் கொண்ட குடிப்பழக்கமும் காரணமாக இருந்திருக்கக் கூடும். அவருக்கு தன் வாழ்க்கை சார்ந்த பல சம்பவங்களை மறக்கவேண்டியிருந்தது. குடிப்பழக்கத்தை அவர் ஒரு கருவியாகவே பயன்படுத்திக் கொண்டார். இருபதுகளில் அவருக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் இருந்தது. அது என் தாயின் மரணம் வரைக்கும் தொடர்ந்தது. கடுமையாகப் போராடி அந்தப் பழக்கத்திலிருந்து அவரை வெளிக்கொண்டுவந்தேன். என் தாய் இறந்த ஆறு மாதத்தில் கொடுமையான புற்றுநோய் தாக்குதலுக்கு ஆட்பட்டு என் தந்தை வழி பாட்டி இறக்க நேர்ந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு துயரங்களில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு அவர் சுருட்டுப் பழக்கத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். தொன்னூறுகளில் அவருக்கு தன் குடும்பம் சார்ந்து நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.அப்போது அவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்திருந்தது. அதன் பிறகே அவர் குடிப்பழக்கம் நோக்கி மெல்ல திரும்பினார். பின்னர் கடைசி வரை அவரால் அதிலிருந்து நிரந்தரமாக விடுபட முடியவில்லை. ஆனால் அவர் அதிலிருந்து மீள தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருந்தார். அவரும் ஒருவித சந்தோஷத்தோடே தன்னை மரணத்திற்கு தின்னக் கொடுத்தார் .
எனக்கும் அவருக்குமான உறவுமுறை ஒரு கட்டத்திற்கு மேல் மெல்ல சிக்கலாகத்தொடங்கியது. இருவருக்கும் இடையிலானா உரையாடல்களில் அதீதமான எச்சரிக்கை உணர்வு தொற்றிக்கொண்ட்து. இதனால் வார்த்தைகளின் பிரயோகம் அளவோடும் சொற்பமாகவும் இருந்தன. ஆனால் எங்களுக்கு இடையிலான பிரியம் தொடர்ந்து அதிகரித்தும் வலுவடைந்தும் வந்தது. இனி பேசிக்கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது கூட இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அலாதியான பிரியமும் அன்பும் கொண்டிருந்தோம். என் தாயின் மரணத்திற்கு பிறகு அவர் சிரித்து நான் பார்த்ததில்லை. அவருடைய பணம் மட்டுமே பிரதானமென மாறிப்போன காலகட்டத்தில் அவர் ஒரு நடைபிணம் போல வாழ்ந்தார். அக்கால கட்டத்தில் அவர் கைமீறி எல்லாம் நடந்தது. ஒரு கட்டத்தில் என் சித்தியால் நானும் என் சகோதரனும் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டோம். அப்போது ஒரு நகைக் கடையில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். இந்தச் சிக்கலான காலத்தில் நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் நேசித்த பெண்ணுக்கு அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் நான் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வரநேர்ந்தது. என் தம்பி எனக்கு பெரிதும் உதவியாக இருந்தான். பண உதவி என் தந்தையிடம் இருந்து கிடைத்தது. வீட்டை விட்டு வந்ததும் எனக்கும் என் தந்தைக்குமான உரையாடல் முழுவதுமாக நின்று விட்டிருந்தது.

(தொடரும்...)

3 comments:

  1. சுவாரசியமான பதிவு.. ஆனால் நண்பரே சிறிய வேண்டு கோள், பதியும் போது பதிவினை பந்தி பந்தியாக பிரித்து எழுதினீர்கள் என்றால் வாசிப்பதற்கு இன்னும் இலகுவாக இருக்கும்.. முயற்சித்துப் பார்க்கலாமே..

    ReplyDelete
  2. நிச்சயம் அடுத்த முறை அவ்வாரே செய்கிறேன் நண்பரே.

    ReplyDelete