Wednesday, October 12, 2011

சலனத்தின் விழிகள்


வித்தியாசமான கோணத்தில் அடூர் கோபாலகிருஷ்ணனைப் பற்றியும் அவரது திரைப்பட உலகம் சார்ந்தும் நுண்ணிய தகவல்களுடன் மலையாள எழுத்தாளர் அக்பர் கக்கட்டில் எழுதி இருக்கும் நூல் “அடூர் கோபாலகிருஷ்ணன்- இடம் பொருள் கலை”. இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் அடூரைப் பற்றிய தெளிவானதொரு சித்திரத்தை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அடூரின் வாழ்க்கை, அவர் இயக்கிய படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள திரைக்கதை நூல்கள், திரைப்படம் பற்றிய நூல்கள் ஆகிய தகவல்களோடு அடூர் பற்றி எழுதப்பட்டிருக்கும் நூல்கள் சார்ந்த தகவல்களும் முதல் அத்தியாயமாக வைக்கப்பட்டிருக்கிறது.

’கண்டறிந்தவை’ எனும் பகுதியில் “அடூரின் திரைப்படங்களில் வரும் பாத்திரங்கள் ஒருவகையில் நாம் அறிந்தவர்களாகவோ, பழகியவர்களாகவோத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களின் வேறுபட்ட ஆளுமைகளை படம் பிடித்து அடூர் நமக்கு காட்டுகிறார்” என்று கூறும் கக்கட்டில் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் சுருக்கமாகவும் மிகத் துள்ளியத்துடனும் பதிவு செய்கிறார். திரைச் சித்திரம் சார்ந்த எளிய சுருக்கங்களே நம்முன் அடூரின் படைப்பு தீவிரத்தை உணர்த்தி விடுகின்றன.

’கலையும் வாழ்வும்’ எனும் பகுதி அடூரின் நேர்காணலாக விரிவு கொள்கிறது. பால்ய காலத்தில் தொடங்கி திரைப்படக் கல்லூரி வாழ்க்கையில் முடிகிறது. இடையிடையே குடும்பம் பற்றியும் அவரின் திரைப்பட முயற்சிகள் சார்ந்த்துமான பல நினைவுகள் நேர்காணலெங்கும் பின்னிப் பிணைந்து செல்கின்றன. அடூரின் இந்நேர்காணல் அவரின் அனுபவங்களை நம்முடன் விரிந்த தளத்தில் நேரடியாக பகிர்ந்து கொள்வதாகவே அமைந்திருக்கிறது.

அடுத்த பகுதி ’உறவுகள் பயணங்கள்’ எனும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் அடூரைப் பாதித்த ஆளுமைகள் பற்றி அடூரே பல நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். அரவிந்தன், ஜான் ஆப்ரஹாம், மங்கட ரவிவர்மா ஆகியோரைப்பற்றி விரிவான சித்திரத்தை பதிவு செய்துள்ளார். மேற்கண்ட மூன்று ஆளுமைகளின் ஊடாகவும் நமக்கு பல்வேறு ஆளுமைகளை அறிமுகம் செய்து வைக்கிறார் அடூர். ஜான் ஆப்ரஹாம் பற்றிய பதிவு மிகவும் துல்லியமாகவும், நேர்மையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தில் நான் திரும்பத் திரும்ப வாசித்த பகுதியாகவும் இது இருந்தது.

’சித்ரலேகா முதல் நிழல்குத்து வரை’ எனும் பகுதியில் சித்ரலேகா பிலிம் கோவாப்பரேடிவ் சொசைட்டி தொடங்கியது முதல் அவரது திரைச் சித்திரங்கள் உருவாக்கப்பட்டது வரை அவருடன் நூல் ஆசிரியர் நிகழ்த்திய உரையாடல்களின் முழுத்தொகுப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடல் தொகுப்பில் திரைப்படத் தயாரிப்பு, இயக்கம், படத்தயாரிப்பில் உடன் பணிபுரிந்தவர்கள், தன் மகள் அஸ்வதி ஐ.பி.எஸ் அதிகாரியானது சம்பந்தமாக, தன் திரைப்படங்களின் பெயர்காரணம் குறித்துமான பல விளக்கங்களையும் நினைவுகளையும் கக்கட்டில் வழியாக அடூர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். உரையாடல் முழுக்க பல்வேறு தளங்களில் அடூரின் ஆளுமை விரிவு கொண்டபடியே இருக்கிறது. அவரின் அத்துனை திரைப்பட முயற்சி சார்ந்த விரிவான அனுபவங்களை உரையாடல் முழுவதும் நம்மால் உணரமுடிகிறது. ’இந்தியத் திரைப்படங்களின் நிகழ்காலம்’ எனும் உரையாடலும் கடைசி பகுதியாக சேர்க்கப்பட்டிருக்கிறது. அதில் இன்றைய இந்திய திரைப்படச் சூழல், அதன் போதாமைகள் குறித்தும் அடூரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நூலின் இறுதியில் இரண்டு பிற்சேர்க்கைகள் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மலையாள மண்ணின் முக்கிய ஆளுமைகளான சுகுமார் ஆழிக்கோடு, மம்மூட்டி, எம்.ஏ. பேபி, எஸ்.பாசுரசந்திரன், ஜெ.தேவிகா ஆகியோர் அடூரிடம் கேட்க எண்ணிய கேள்விகளும் அதற்கு அடூரின் பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது பிற்சேர்க்கையாக அடூரின் மகள் ஜி.அஸ்வதி தன் தந்தையைக் குறித்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு மகளுக்கு தன் தந்தையைப்பற்றி பெருமையாக கூறிக்கொள்ள இவ்வளவு விஷயங்கள் இருப்பதே முக்கியமானது தானே?

அடூரைப் பற்றிய இந்நூல் மிகவும் சுவராசியமாகவும் நுண்ணிய தகவல்களுடன் வித்தியாசமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. நூலை வாசித்து முடிக்கையில் அடூரின் சித்திரத்தை நம்மால் உருக்கூட்ட முடிவதே இந்நூலுக்கான போதிய அர்தத்தை தந்துவிடுகிறது.

**********************************
அடூர் கோபாலகிருஷ்ணன் :இடம் பொருள் கலை. மூலம்:அக்பர் கக்கட்டில், தமிழில் : குளச்சல் மு.யூசப், காலச்சுவடு பதிப்பக வெளியீடு


-தொடரும்

2 comments:

  1. என்னவளே
    பெற்றோர்க்கு பிள்ளைகளாக
    இருக்கும் வரை அவர்களையே
    நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

    அடடா
    நாம் பெற்றோரானதும்
    நம் பெற்றோர்களை
    மறந்து அல்லவா விடுகிறோம்?

    ReplyDelete