Friday, October 7, 2011

விஷம் தோய்ந்த நெடுங்கனவின் நகம்




கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் படுக்கையில் இருந்து எழுந்தார். விளக்கை எடுத்துக் கொண்டு தெருக் கதவைப் போய் திறந்தார். வாசலில் தன் மகள் நிற்பதைக் கண்டதும் அவரை பயம் கவ்வத் தொடங்கியது. வெகு நாட்கள் பட்டினி கிடந்து இளைத்து போய் கன்னங்களில் குழிவிழுந்து தோல் சுருக்கத்தோடு இருந்தாள் அவள். ஆடைகள் அழுக்கேறி பழுப்பு நிறமாக மாறிவிட்டிருந்தன. ”உள்ள வான்னு சொல்ல மாட்டீங்களா அப்பா?” என்று அவள் கேட்டாள். இவர் பேசாமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.அங்கு நின்றபடியே தன் மனைவியை சத்தம் போட்டு கூப்பிட்டார். ”ஏன் இப்படி கத்தறீங்க?” என்று கேட்டுக் கொண்டு சேலையை சரி செய்து கொண்டே வந்தாள். வாசலில் நின்று கொண்டிருக்கும் தன் மகளைப் பார்த்து பீதியில் வாயடைத்துப் போனாள். உடல் மெல்ல நடுங்கத் தொடங்கியதும் அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. இருவரையும் உதட்டில் சிரிப்பு வழிய அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். கனிவான அவளின் சிரிப்பு இவர்களை மிகவும் சஞ்சலம் செய்து கொண்டிருந்தது. அவளின் பார்வையில் நிரம்பியிருந்த வெளிச்சம் வழிந்து அந்த இடத்தை அடைத்துக் கொண்டிருந்த இருள் விலகாத விடியலை ஒளியூட்டிக் கொண்டிருந்தது. தெரு முக்கில் இருந்த சில நாய்கள் உடலை சிலுப்பிக் கொண்டு அங்கிருந்து வடக்கு நோக்கி ஓடின. பதற்றம் இவர்கள் உடலை சிலிர்க்க வைத்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இவர்களுக்கு புரியவில்லை. மறுபடியும் ”என்னை உள்ள கூப்பிட மாட்டீங்களா?” என்று இவர்களைப் பார்த்து பாவமாகக் கேட்டாள். அவள் குரல் இவளை என்னவோ செய்வதுபோல இருந்தது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டே அவளை உள்ளே அழைத்தாள். அவள் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தாள். வரும் போதே சாணம் உதிர்ந்திருந்த மண் சுவரை கை விரல்களால் தடவிக் கொண்டே வந்தாள். அவளைப் பின் தொடர்ந்து அவர் வந்தார். கூடத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கைப் பார்த்து விட்டு மென்மையாக சிரித்தாள்.பின் தோட்டத்திற்கு சென்றாள். தோட்ட கதவு சாத்தியிருந்தது. பின்னால் நிற்கும் அம்மாவை திரும்பிப் பார்த்தாள். அம்மா வந்து கதவைத் திறந்ததும் நடந்து சென்று அங்கு போடப்பட்டிருந்த உரலின் மீது அமர்ந்து கொண்டாள். அங்கு உட்கார்ந்த படியே கீழே குனிந்து தெரு வாசலைப் பார்த்தாள். அவள் அப்படி பார்ப்பதை கவனித்த இவருக்கு, உடலெங்கும் பயத்தின் ரேகைகள் பரவத்தொடங்கியது. அவள் பார்வையில் அப்படி ஒர் வெளிச்சம் இருந்தது. அதுவே அவரை மிகவும் சங்கடப் படுத்தியது. பின் நிமிர்ந்து தன் அம்மாவைப் பார்த்து ”அம்மா எனக்கு அங்க பிடிக்கலமா. நா இங்கயே உங்க பேச்ச கேட்டுகுனு ஒழுங்கா இருந்திடறேன்மா” என்று சொன்னாள். அவள் இவ்வாறு சொல்லக் கேட்டதும் இவளுக்கு பயம் கூடத் தொடங்கியது. நடுக்கம் அதிகரிக்க மறுபடியும் உடம்பு வேர்த்துக் கொட்டியது. இவள் திரும்பி தன் கணவரைப் பார்த்தாள். அவர் அங்கிருந்தபடியே இவளை கூப்பிட்டார். அருகில் வந்தவுடன் ”சட்டுபுட்டுனு அனுப்புற வேலையைப் பாருடி” என்று கூறினார். எப்படிச் சொல்லி அவளை அனுப்புவது என்று இவள் யோசித்தவாறே தோட்டத்திற்கு வந்தாள். ”நீ இங்க வரக்கூடாது மா” என்று அவளிடம் கூறினாள். அவள் ஏன் என்பது போல தலையுயர்த்திப் பார்த்தாள். அப்புறம் தலையை குனிந்து கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். சற்று நேரம் கடந்த நிலையில் அழுது கொண்டே ”எப்படிமா அப்பாவுக்கு என்ன கெணத்துல தள்ள மனசு வந்திச்சி?” என்று கேட்டாள். அவள் கேள்விக்கு சட்டென்று இவளால் பதில் கூற முடியவில்லை. மனசு சங்கடமாக இருந்தது. அழுக்கு படிந்து சிக்குப் பிடித்திருந்த அவளது தலை முடி மேலும் இவளுள் பயத்தை அதிகப்படுத்தியது. ”நீ இங்க இருக்க கூடாது மா. உனக்கு என்ன வேணும்னு கேளு. அம்மா உனக்கு தறேன். எடுத்துகிட்டுபோ. உன்ன அங்க தேடுவாங்க. சீக்கிரமே கிளம்புனா தான் பொழுதோட போக முடியும்” என்று படபடப்பாக பேசினாள். “உங்க கூடவே இருந்திடறேனே மா” என்று அவள் தொடர்ந்து கெஞ்சினாள். ஆனால் அவளுக்கு எந்த பதிலையும் இவளால் கூற முடியவில்லை. இருவரும் பேசாமல் இருந்தனர். அவர் கூடத்தில் இருமிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. ”உனக்கு என்ன வேணும்?” என்று அவளைப் பார்த்து இவள் மீண்டும் கேட்டாள். எப்படியும் தன்னை அனுப்பிவிடுவார்கள் என்று உணர்ந்தவள் ”சோளப்பொறி வறுத்துக் கொடுமா” என்று அழுது கொண்டே சொன்னாள். அந்த அதிகாலையில் அடுப்பில் வாணலை வைத்தாள். பழங்கலத்தில் இருந்து சோளத்தை எடுத்து வாணலியில் போட்டாள். அதில் உப்புத்தண்ணீரைத் தெளித்து வறுக்கத்தொடங்கினாள். சூட்டில் சோளங்கள் வெடித்துச் சிதறின. டப் டப் என அவை வெடித்து பொறியாக மாறுவதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். வறுத்த சோளப்பொறியை ஒரு துணியில் கட்டி அவளிடம் கொடுத்தாள். அதை வாங்கும் போது அவள் பார்வை இவளைத் துளைத் தெடுத்தது. தோட்டத்து கதவைச் சாத்திக் கொண்டு இவளை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். அவர் ஏதும் அவளிடம் பேசாமல் தெருக் கதவை நோக்கி நடந்தார். அவள் நடுவில் நடக்க இவள் பின் தொடர்ந்தாள். தெருக் கதவிற்கு உள் பக்கமாக இவள் நின்று கொண்டாள். அவள் வாசற் படியைத் தாண்டும் போது திரும்பி இவளைப் பார்த்தாள். பின் ஏதும் பேசாது முன்னால் சென்று கொண்டிருக்கும் தந்தையைப் பின் தொடர்ந்து நடந்தாள். அம்மா அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஊர் எல்லையைத் தாண்ட ஆரம்பித்ததும் அம்மா தனக்கு துணியில் கட்டிக் கொடுத்த சோளப்பொறியை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தொடர்ச்சியாக தன் தாயின் நினைவாக கீழே போட்டுக் கொண்டே தன் தந்தையை பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவள் போட்டுச் சென்ற சோளப்பொறி ஒரு கோடாக நீண்டு கொண்டே இருந்தது. தனக்கும் தன் தாயுக்குமான உறவின் நீட்சியாக அவளுக்கு தோன்றியது அது. பகல் பொழுது முழுக்க நடந்து ஊர் எல்லையில் இருந்த அடர்ந்த காட்டிற்கு அந்தப்பக்கம் அவளை விட்டு விட்டு அவர் திரும்பும் போது சூரியன் மெல்ல மேற்கில் சாய்ந்து கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்காமல் நடந்தார். அவர் நடக்க நடக்கப் பாதை நீண்டு கொண்டே இருந்தது. தனியே நடக்க பயமாகவும் இருந்தது. வழி நெடுகிலும் ஆங்காங்கே கறுத்து நின்று கொண்டிருந்த ஒங்கி உயர்ந்த பனை மரங்கள் இவருள் பயத்தின் விதைகளைக் தூவத் தொடங்கின. பனை மரங்களும் வேக வேகமாக கூடவே நடப்பதைப் போன்று உணர்ந்தவர் மேலும் நடையைத் துரிதப் படுத்தினார். சூரிய வெளிச்சம் முற்றிலுமாக நீங்கி நன்றாக இருட்டத் தொடங்கியிருந்தது. பறவைகள் கூட்டம் கூட்டமாக தங்கள் கூடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன.


“என்ன பெனாத்திகினு இருக்கீங்க?” என்று இவள் அவரைச் சீண்டி கேட்டதும் அவர் அரண்டு எழுந்தார். கண்களைக் கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.கனவு திடீரென துண்டிக்கப்பட்டு எழுப்பப்பட்டதால் அவருக்கு ஒருவித பதற்றம் ஏற்பட்டது.மலங்க மலங்க இவளைப் பார்த்தார். குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் இவள். அதை வாங்கிக் குடித்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டார். உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். பழைய நினைவுகள் அவர் மனதில் மெல்ல குமிழிடத் தொடங்கின.
மழை விடாது பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து இடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தெருவை அடைத்துக் கொண்டு மழைவெள்ளம் ஒடிக் கொண்டிருந்தது. கழனியில் இருந்து கொண்டு வந்திருந்த முருங்கைக் கீரையை கேழ்வரகு மாவில் உருவிப் போட்டு பிசைந்து அடை தட்டிக் கொண்டிருந்தாள் அகிலாண்டம். கூரையில் ஆங்காங்கே மழைநீர் ஊறி இறங்கிக் கொண்டிருந்தது. படுக்கும் இடம் நனைந்து விடாதபடி நீர் ஒழுகும் இடங்களில் எல்லாம் சிறிய பாத்திரங்களை வைத்தார் ஆறுமுகம். பாத்திரத்தில் தண்ணீர் விழும் ஒலி அறை முழுக்க வியாபித்திருந்தது. மண்ணென்ணெய் விளக்கு சிட்டம் கட்டிக் கொண்டு எரிந்து கொண்டிருந்தது. இவர்கள் பெண் தெருத் திண்ணையில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள். இடி இடிக்கும் போதெல்லாம் அவள் மழைத்துளிகளுக்கு இடையில் கைகளை நீட்டி விரல்களால் சிறியதும் பெரியதுமாக வட்டங்களை போட்டுக்கொண்டிருந்தாள். பின் சிறிது நேரம் மழையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். கூரையில் இருந்து ஊற்றும் மழைநீரை உள்ளங்கையில் பிடித்து அதைப்பார்த்துக் கொண்டே இருப்பாள். பின் இடி இடிக்கும் வானத்தைப் பார்த்து ஓங்கிச் சிரிக்கத்தொடங்குவாள். அப்புறம் எதையோ நினைத்துக்கொண்டவளைபோல சிரிப்பதை நிறுத்திவிட்டு கால்களை தூக்கி மடித்துக் கொண்டு திண்ணையில் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்தாள். உள்ளே ஒழுகும் மழைநீரால் சாணமிட்டு மெழுகிய மண்தரை மெல்ல கரைய ஆரம்பித்திருந்தது. அடையை சுட்டு அவருக்கொன்றும் திண்ணையில் அமர்ந்திருந்த அவளுக்கொன்றும் கொடுத்தாள். நடக்க முடியாத அளவிற்கு மண்தரை சொத சொதவென்று இருந்தது. ஒரு தட்டில் வைத்து அடையைக் தன் மகள் கையில் கொடுக்கும் போது இவளுக்கு சங்கடமாக இருந்தது. ”மூள வளர்ச்சி இல்லாதத நமக்குனு வச்சி எழுதிட்டானே” என அவளைப் பார்த்து சொல்லிக்கொண்டே மனதில் கடவுளை நொந்து கொண்டாள். அவர் உள்ளே பொவிந்து பொவிந்து இருமும் சப்தம் கேட்டது. உள்ளே சென்று தண்ணீர் மொண்டு கொடுத்தாள். மழைவிடுவதற்கான சிறு அறிகுறிகூடத் தென்படவில்லை. வானம் வெளிவாங்காமல் இருந்தது. தோட்டத்தில் கட்டியிருந்த மாடுகள் குளிர் தாங்காமல் கத்திக் கொண்டிருந்தன.



நன்கு ஊறியிருந்த தரையில் முதலில் உர சாக்குகளைப் போட்டு அதன் மீது பாயைப் போட்டாள். அவர் தனியாக சுவர் ஒரம் தன் படுக்கையை விரித்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். இவள் விளக்கை எடுத்துக் கொண்டு தெருவிற்கு சென்று திண்ணையில் அமர்ந்திருந்த தன் மகளை அழைத்துக் கொண்டு வந்து படுக்க வைத்தாள். பின் கித்தானை எடுத்து தலையில் போட்டுக் கொண்டு தோட்டத்திற்கு சென்றாள். மாடுகளை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டினாள். நனையாத மணிலா கொடிகளை அள்ளி மாடுகளுக்கு அருகில் போட்டாள். பின் சிறுநீர் கழித்து விட்டு தோட்டக்கதவைச் சாத்திவிட்டு வந்து பாயில் உட்கார்நது கொண்டாள். மண்ணென்ணெய் விளக்கில் இருந்து எழும் புகையும் நாற்றமும் அறை முழுக்க அடைந்து கிடந்தது. சுவாசிக்கும் போது மண்ணெண்ணெய் வாசமே காற்றில் நிரம்பி இருந்தது. வேலையில் ஆழ்ந்து கிடக்கும் போது இவர்களுக்கு அவளைப் பற்றிய கஷ்டம் அவ்வளவாகத் தோன்றியதில்லை. இரவில் படுக்கப்போகும் சமயத்தில் அவளைப் பற்றிய கவலை பெரியதாகத் தோன்றி இவர்களை அரித்தெடுக்கத் துவங்கும். ஒரு சில நாட்களாக அந்தக் கவலையின் மடங்கு கூடத் தொடங்கி இருந்தது. மனநிலை சரியில்லாத அந்தப் பெண் தன் வயிற்றில் மறுபடியும் ஒரு சிசுவை சுமந்து கொண்டிருந்ததை ஒரு பௌர்ணமி நாளின் அதிகாலையில் அறிந்த போது மனதில் மிகவும் கடுமையான வலியை அவள் அம்மா உணர்ந்தாள். ”எந்த பாவிப் பய இப்படி பன்னானோ ஐயோ எனக்கு என்ன பன்றதுனே தெரியலையே” என பிதற்றிய படியே அழத்தொடங்கினாள். இதைக் கேள்விப்பட்ட நொடியில் அவரும் நொடிந்து போனார். எவ்வளவோ அடித்து கேட்டுப் பார்த்தார்கள். இவர்கள் என்ன கேட்க வருகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடியாதபடி அவள் அமர்ந்து கொண்டிருந்தாள். அதன்பிறகான ஒவ்வொரு நாளையும் இவர்கள் கடத்துவதற்கு பெரிதும் சிரமப்படவேண்டியிருந்தது. எவ்வளவு நாட்களுக்கு இதை இப்படியே மூடி மறைத்து விட முடியும் என்று யோசித்த படியே இவள் ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டாள். சொல்ல முடியாத பாரம் அழுத்துவது போல உணர்ந்தவள் மீண்டும் சிறுநீர் கழிக்க தோட்டத்திற்கு சென்றாள். வெளியில் மழை பெய்தபடியே இருந்தது.



விளக்கின் ஒளி அளவை குறைத்து வைத்தாள். கால்களை நீட்டி சுவரில் தலை சாய்த்து அண்ணாந்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ”ஏன் தூக்கம் வரலியா?”என்று அவள் கேட்டாள். ”எங்க கண்ண மூட முடியுது? பாவி மவ தலையில பாறாங்கல்லை இல்லை தூக்கிப் போட்டுட்டு தூங்கறா?” என அழாதக் குறையாக அவர் பதில் சொன்னார். என்ன செய்யலாம் என்று இவர்கள் ஒவ்வொரு நாளும் உறங்கப் போகும் முன் தீவிரமாக யோசிப்பார்கள்.ஆனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் உறங்கிப் போவார்கள். ”நாம இருக்கற வரைக்கும் பாத்துக்கலாம்னு நெனைச் சிருந்தேன் இப்படி வவுத்துல வாங்கிட்டு வந்து நிக்கறாளே. நா என்ன பண்ணுவேன்” என தலையில் அடித்துக் கொண்டு தேம்ப ஆரம்பிப்பாள். எந்த சலனமும் அற்று அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பாள். உதவிக்கு யாரையும் கலந்து செய்ய முடியாத நிலை. வெளியில் தெரிந்தால் அதை ஊதி பெரிசு பன்னும் மனிதர்கள். நாளாக நாளாக மனம் கனத்து இருவருக்குமே நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. வெளியில் தவளைச் சத்தம் கேட்கத் தொடங்கியதும் மழையின் சீற்றம் அடங்கி இருப்பதைப் போல இருந்தது. தெருவில் மழைநீரின் சல சலப்பு சற்று அடங்கி இருந்தது. அவர் எழுந்து சிறுநீர் கழிக்க தோட்டத்திற்கு சென்றார்.


கடந்த முறை மருத்துவச்சியிடம் அழைத்துச் சென்றபோதே கூனிக்குறுக வேண்டியிருந்தது. நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி அசிங்கமாகக் கேட்டாள். கருக் கலைப்பு செய்து செய்து அவள் மனசு கெட்டி தட்டி போய்விட்டதைப் போல நடந்து கொண்டாள். எருக்கஞ் செடியின் கட்டையை பால்வழிய வழிய எடுத்து அவள் பிறப்புறுப்பில் செருகும் போது நெஞ்சே நின்று விடும் போல இருந்தது. அவள் வலியால் துடித்தாள். அலறல் சத்தம் வீடு முழுக்கக் கேட்டது. கட்டையை செருகிவிட்டு வந்து கை அலம்பிய பின் கணக்குப் போட்டு காசு வாங்கிக் கொண்டாள். ”எம்மா நாளக்கி இவள நீங்க இப்படியே பாத்துப்பீங்க? இன்னும் கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் வவுத்துல வாங்கினு வந்து நின்னா என்ன செய்வ?” என்று பணத்தை எண்ணிக் கொண்டே இவளிடம் கேட்டாள். அவள் வாசலில் வலியால் உருண்டு புரண்டு துடித்தாள். மருத்துவச்சி இவளை அருகில் அழைத்து ”பேசாம சாப்பாட்ல எதாவது வச்சி கொடுத்திடுங்க. இல்ல கொளத்துல கிணத்துல அமுக்கிடுங்க பாரம் கொறையும்” என்று சொன்னாள் அவள் பேச்சைக் கேட்டு இவள் துடித்துப் போனாள். எப்படி மனம் வந்து இப்படி பேச முடிகிறது என்று நினைத்தாள். எந்நேரமும் நாம் எப்படி அவளுடனேயே இருக்க முடியும்? இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நம்மால் இருக்க முடியும் என்று யோசித்தவளுக்கு மருத்துவச்சியின் யோசனை சரி என்றே பட்டது. காலம் முழுக்க வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதை விட ஒரே நாளில் அழுது தீர்த்துவிடுவது சரி என்றே அவளுக்கும் தோன்றியது. ஐயோ அப்படி செய்வது மாபாதக செயல் என்றும் அடுத்த நொடி அவள் மனது நினைத்தது. ஊசலாடிக் கொண்டே இருந்த மனதையும் அவளால் புறந்தள்ள முடியாமல் தவித்தாள்.


அவர் அடித்தொண்டையை செருமிக்கொண்டு இருமவும் இவள் நினைவுகள் கலைந்து இயல்பு நிலைக்கு மீளவும் சரியாக இருந்தது. அவருக்கு குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். தண்ணீர் குடித்துவிட்டு அவர் படுத்துக் கொண்டார். இவளும் படுத்துக்கொண்டு கண்களை மூடினாள். ஆனால் நெடு நேரத்திற்கு இவளுக்கு உறக்கம் வரவே இல்லை.புரண்டு புரண்டு படுத்தாள்.


அன்று ஒரு பவுர்ணமி இரவாக இருந்தது. அவர் தோட்டத்து வாயிற்படியில் அமர்ந்து கொண்டிருந்தார். இவள் கூழ் ஆக்க மாவு இடித்துக் கொண்டிருந்தாள். ”வேற வழியே இல்லையா?” என்று மீண்டும் இவளைப் பார்த்துக் கேட்டார். ”மருத்துவச்சி இந்த மொற முடியாதுனு சொல்லிட்டா. நீங்களே எதாவது பண்ணிக்கிங்கனு கையை விரிச்சிட்டா” என்று பதில் சொன்னாள். அதைக்கேட்டு ”ஐயோ ஆண்டவா எப்படி எங்கையால அவள சாகடிப்பது? என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார். இவளுக்கும் அழுகை பீறிட்டுக் கிளம்பியது. இது எதுவும் புரியாமல் அவள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். மாட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த மாடு கால்களை உதைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தது. இவள் மாவை எடுத்து முறத்தில் போட்டு புடைத்துக் கொண்டிருந்தாள். அவருக்கு அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு சாராயக்கடை நோக்கிச் சென்றார்.


அவர் திரும்பி வரும் போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவியை அழைத்து ”மொசக் கொட்டையும் கருவாட்டையும் போட்டு கொழம்பு வை” என்று சொல்லிவிட்டு திண்ணையில் படுத்துக் கொண்டார். சாராய நெடி குப்பென்று அடித்தது அவர் மீது. இவளுக்கு மனசு பாரமாகவே இருந்தது. கருவாட்டை எடுத்து நீரில் ஊற வைத்தாள். மொச்சையை வாணலியில் போட்டு வறுத்துவிட்டு கருவாட்டுக் குழம்பு வைக்கும் சட்டியைக் கழுவி அடுப்பில் வைத்தாள்.


அவர் புரண்டு படுத்தபோது கருவாட்டுக் குழம்பின் வாசம் அவரது மூக்கைத் துளைத்தது. எழுந்து மறுபடியும் சாராயக் கடைக்குச் சென்றார் இவள் சாதம் குழம்பு ஆகியவற்றை எடுத்து சாப்பிடத் தோதாக தோட்டத்தில் வைத்தாள். இரண்டு தட்டுகளை கழுவி வைத்துவிட்டு கதவோரம் உட்கார்ந்து கொண்டாள். சற்று நேரத்திற்குள் அவர் தள்ளாடிக் கொண்டே நடந்து வந்தார். கை அளம்பிக் கொண்டு உட்கார்ந்தார்.அவருக்கு சாப்பாடு போட்டு விட்டு தெருவிற்குச் சென்று மகளையும் சாப்பிட அழைத்து வந்தாள். தட்டு நிறைய சாதத்தைப் போட்டு மொச்சைக் கொட்டையையும் கருவாட்டையும் அள்ளி தட்டில் போட்டாள். அவள் பிசைந்து கொண்டே இருந்தாள். சாதம் தரையில் சிந்தியது. அதை பொருட்படுத்தாதவளாக தட்டில் இருந்து ஒரு கருவாட்டை முகத்துக்கு நேராகத் தூக்கிப் பார்த்தாள். அவளின் செய்கைகள் இவளுக்கு அழுகையை வரவழைத்தது. கன்னத்தில் வழிந்த நீரை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். கையில் பிடித்திருந்த கருவாட்டை அவள் வாயில் போட்டு மென்றாள். இருவரும் அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தனர். தோட்டத்தில் இருந்த தென்னை மரம் காற்றின் போக்கில் சாய்ந்து ஆடிக்கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்ததும் இவளிடம் எதுவும் பேசாமல் மகளை அழைத்துக் கொண்டு தோட்டத்து வழியாக கழனி நோக்கிச் செல்லத் தொடங்கினார். இவர்களுக்கு முன்பாக கருத்த நாகமென நீண்டிருந்தது பாதை.


அதன் பிறகான நாட்களில் அவர் சாராயக்கடையே கதி எனக் கிடந்தார். தன் மகள் குறித்த சிந்தனை அவரை இயங்க விடாமல் செய்துகொண்டிருந்தது. அன்றும் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கதவைத் தட்டும் போது நள்ளிரவு தாண்டி இருந்தது. தெருவில் நாய்கள் குரைக்கத் தொடங்கின. தனியாக வீட்டில் தூங்கப் பயந்து துணைக்கு கௌரிப் பாட்டியை கூட்டிக் கொண்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த அகிலாண்டம் எழுந்து கதவைத் திறந்தாள். அவர் மிதியடியை கழட்டி நடையில் விட்டு விட்டு வீட்டிற்குள் சென்றார். ”சாப்பிட எடுத்து வைக்கட்டுமா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டாள். அவர் வேண்டாம் என்பது போல தலையாட்டி குளித்து விட்டு வந்து படுத்துக் கொண்டார். சுலபத்தில் அவருக்கு உறக்கம் வரவில்லை. இவளும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தாள். ஆனால் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. மண்ணெண்னெய் விளக்கின் வெளிச்சம் சூழலை மேலும் நெருக்கடி மிக்கதாக மாற்றிக் கொண்டிருந்தது.நடந்து வந்த களைப்பு மெல்ல அவரை தூக்கத்தில் ஆழ்த்தியது. இவள் அவருக்கு முன்பாகவே உறங்க ஆரம்பித்திருந்தாள். நினைவின் துல்லியத்துடன் கனவு தன் சிமிழ் திறந்து அவரை உள்ளிழுத்துக் கொண்டது. அவரும் தன்னை அதற்கு ஒப்புக்கொடுத்தார்.

ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்த போது கதவு தட்டும் சத்தம் அவருக்கு கேட்டது. ”அம்மா.... அம்மா” என்ற குரலும் மெதுவாக கேட்டுக் கொண்டே இருந்தது. மனப் பிரேமையாக இருக்கும் என நினைத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பித்தார். ஆனால் கதவு தட்டும் சத்தம் தொடாந்து கொண்டே இருந்தது. ”ஏங்க யாரோ கதவு தட்றாங்க.... போயி பாருங்க” என்று அவரிடம் சொன்னாள். கதவு தட்டும் சத்தம் இவர்கள் மனதில் மெல்ல பதற்றத்தை ஏற்படுத்தியது. தன்னைச் சுற்றி பயத்தின் நிழல் படருவதை மறுபடியும் உணர்ந்தாள். உடலில் நடுக்கம் ஏற்பட்டு வியர்க்கத் தொடங்கியது அவளுக்கு. அவர் விளக்கை எடுத்துக் கொண்டு தெருக் கதவைத் திறக்கச் சென்றார். கைகள் மெல்ல நடுங்குவதை உணர்ந்தவர் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்தார். அவர் நினைத்தது போலவே அவள் நின்று கொண்டிருந்தாள். அதே சிரிப்பு. முந்தின் நாள் அதிகாலை எப்படி பார்த்தாரோ அப்படியே இருந்தாள். நடப்தெல்லாம் வெறும் கனவுதானோ என்று தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். அதற்குள் இவளும் உள்ளிருந்து தெரு வாசலுக்கு வந்தாள். அங்கே அவள் நிற்பதைக் கண்டாள். மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. சத்தம் கேட்டு கௌரிப் பாட்டியும் வந்துவிட்டாள். இவள் வெளியில் நிற்பதைக் கண்ட பாட்டி ”அந்த சனியன பிஞ்சுபோன தொடப்பகட்டையால அடிச்சி வெறட்டு. இல்லனா தெனத்துக்கும் வந்து இம்ச பண்ணும்” என்று வேகமாக ஆறுமுகத்திடம் சொன்னாள். பேய் பிடித்தவள் போல பேசிய பாட்டியை கண்ட இவளுக்கு மேலும் பயம் அதிகரிக்கத் தொடங்கியது. அவர் ஏதும் பேசாது அமைதியாக நின்று கொண்டிருந்தார். இவள் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. ”நீ ஏம்மா அழற?” என்று அவள் தன் தாயைப் பார்த்து பிரியம் கசியக் கேட்டாள். அந்தக் குரல் இவளை அடி ஆழம் வரைச் சென்று தாக்கியதை உணர முடிந்தது. ”ஏன்டா பேசாம நிக்கிற.பிஞ்ச செருப்ப எடுத்து நாலு சாத்து சாத்து. சனியன் இனி இந்த தெசைக்கே வறாது” என்று மறுபடியும் ஆறுமுத்திடம் சொன்னாள் பாட்டி. ஆறுமுகம் உள்ளே வந்து அறுந்த செறுப்பை எடுத்துக் கொண்டு தெருவிற்கு வந்தார். அவர் அடித்து விடுவாரோ என்று இவள் பயந்தாள். அடித்து விடக் கூடாதே என்றும் உடனே கடவுளை வேண்டத்தொடங்கினாள். அவள் எதிரில் செருப்பைக் கொண்டு வந்து காண்பித்தவர் வேறெதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். செருப்பை பார்த்த நொடியில் அவள் தலை குனிந்து திரும்பி ”இதுக்காகத்தான என்ன இப்படி ஆக்கிட்டிங்க?” என்று தன் வயிற்றைத் தடவிக் காட்டி கேட்டாள். அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ”அம்மா வலி தாங்க முடியிலயே” என்று தாயைப் பார்த்து கதறினாள். எதுவும் செய்யக் கூடாது என்பது போல பாட்டி தலையை ஆட்டினாள். அவள் வலியால் துடித்துக் கொண்டே இருந்தாள். பெருங்குரல் எடுத்து அவள் கத்தியது எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒருக்கட்டத்தில் வலிபொறுக்க முடியாமல் தன் பிறப்புறுப்பில் கையை விட்டு வெளியே உருவி எடுத்தாள். கறுப்பாக பெரிய கூழாங்கல் போல அது இருந்தது. உதிரநாற்றமும் கவிச்சை வாசனையும் சூழலெங்கும் பரவியது. அவள் பிறப்புறுப்பில் இருந்து கூழாங்கல் போல ஒன்று வந்து விழுவதை இவர்கள் நடுக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் ஆசுவாசம் அடைவதற்குள் மீண்டும் அவள் வயிறு உப்பத்தொடங்கியது. மறுபடியும் அவள் வலியால் அலறித்துடித்தாள். அவள் அலறித்துடிப்பதைக் கண்டு இவர்களுக்கு பயமாக இருந்தது. மறுபடியும் அவள் தன் கையை பிறப்புறுப்பில் விட்டு இன்னொரு கூழாங்கல்லை உருவிப் போட்டாள். அதைத்தொடர்ந்து பெரும் உதிரப்போக்கு அவளுக்கு ஏற்பட்டது. சிரிது நேரத்தில் மீண்டும் வயிறு பெருக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வலி எடுக்க பெரும் சத்தத்தோடு கத்தினாள்.தொடர்ந்து அவள் கூழாங்கற்களை பிரசவித்து தள்ளிக்கொண்டே இருந்தாள். நேரம் ஆக ஆக அந்த இடம் ஒரு குன்றைப் போல காட்சி அளித்தது. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ என்று இவர்கள் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர். பேச நா எழாமல் நடுங்கியபடியே நின்று கொண்டிருந்தனர். எதுவும் செய்யத்தோன்றாமல் அவளைப் பார்த்து கைகூப்பி வணங்கி ”இதுக்கு மேல எங்களால தாங்க முடியாது தாயி” என்று இவள் கண்ணில் நீர்வழிய கூறினாள். தனக்கு முன்னால் குருதி தோய்ந்து கிடந்த கூழாங்கல் குவியலைப் பார்க்கப் பார்க்க இவருக்கு தலைசுற்றத் தொடங்கியது. மயக்கம் வருவது போல உணர்ந்தவர் அப்படியே தரையில் அமர்ந்தார். தாயின் கண்ணீருக்கு அவள் கட்டுப்பட்டாள். பின் மெல்ல திரும்பி அம்மாவைப் பார்த்து, “ மேலலாம் ஒரே கவிச்ச நாத்தமா இருக்குமா. மாத்துக்கு கட்டிக்க ஏதாவது துணி இருந்தா கொடுமா” என்று கைகளை நீட்டி கேட்டாள். ”எதுவும் கொடுக்காத அப்புறம் இந்த சனியன் திரும்ப வரும்” என்று இவளைப் பார்த்து பாட்டி சொன்னாள். ஆனால் இவளால் பாட்டியின் பேச்சை கேட்க முடியவில்லை. தெருவில் நின்று கைகளை நீட்டி அவள் கேட்டது பாட்டிக்கு சாதகமாக இவளை இயங்கவிடாமல் செய்தது. உள்ளே சென்று இரண்டு பழைய சேலையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவள் அதை வாங்கிக் கொண்டு தன்னைச்சுற்றிக் கிடந்த கூழாங்கற்களை இரண்டு கைகளாலும் அள்ளிக்கொண்டு எதுவும் பேசாமல் தெருவைப் பார்த்து நடக்கத் தொடங்கினாள். நாய்கள் ஊளையிட்டு அழத் தொடங்கின. பாட்டி உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வந்து வாசலில் தெளித்து விட்டு அனைவரையும் உள்ளுக்கு கூப்பிட்டாள். தெருவிளக்கின் கீழே சில நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன.


தெற்குப் பக்கம் இருந்த சந்தில் சேவல் தொடர்ந்து கூவிக்கொண்டே இருந்தபோது கனவு அறுந்து அவர் தூக்கம் கலைந்து எழுந்தார். அதிகாலை கனவு பலிக்கும் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறார். அதானால் பதற்றமாக இருந்தது அவருக்கு.படுக்கையில் இருந்து எழுந்து முகம் கழுவிக் கொண்டு தேனீர் குடிக்க சிவன் கோவில் அருகில் இருந்த கடைக்கு புறப்பட்டார். வாசலுக்கு வந்து நான்கு புறமும் பார்த்தார். பாட்டி தண்ணீர் தெளித்ததற்கான சிறு சுவடுகூட இல்லாமல் இருந்தது தெரு வாசல். துல்லியத்துடன் விரிந்த கனவில் பாட்டி கடைசியாக வாசலுக்கு தண்ணீர் தெளித்த காட்சி மீண்டும் அவர் மனதில் தோன்றி மறைந்தது. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு தேநீர் கடை நோக்கி நடக்கத்தொடங்கினார்.
அன்று பகல் முழுக்க அவர் குடித்துவிட்டு வந்து தூங்கிக் கொண்டிருந்தார். முந்தின இரண்டு நாட்கள் ஏற்படுத்திய களைப்பும் மதுவின் போதையும் அவரை சாப்பிடக் கூட எழ விடாமல் அடித்துப் போட்டது.இவளும் சாப்பிட அவரை எழுப்பவில்லை. இரண்டு நாட்கள் துவைக்காமல் இருந்த துணிகளை துவைத்துப் போட்டாள். கூழ் ஆக்க உரலில் கம்பு இடித்து பானையில் போட்டு புளிக்கவைத்தாள். சாணம் எடுத்து வந்து தோட்டத்தில் இருந்து தெரு வாசல் வரை ஒரே சீராக மெழுகினாள். வேலை நீண்டு கொண்டே இருந்தது. தோட்டத்தில் மாடுகள் கத்திக் கொண்டிருந்தன. அங்கு சென்று போரில் இருந்து மணிலா கொடிகளை பிடுங்கி மாடுகளுக்குப் போட்டு விட்டு வந்து குளித்தாள். பின் சாப்பிட்டாள். மனம் அமைதி இன்றி தவிப்பதாக உணர்ந்தவள் பாட்டியுடன் தெருத் திண்ணையில் தாயம் விளையாட ஆரம்பித்தாள்.பொழுது மெல்ல சாய ஆரம்பித்த போது மேய்ச்சலுக்குப் போன மாடுகள் தெருவில் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் ஒசை எழுப்பிக் கொண்டே சென்றன. தூக்கம் கலைந்து எழுந்த அவர் தோட்டத்திற்கு சென்று முகம் கழுவிக் கொண்டு தெருவில் வந்து நின்றார். தெருவில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். இடுப்பில் சுருட்டி வைத்திருந்த பீடிக் கட்டை எடுத்து அதிலிருந்து ஒரு பீடியை உருவி பற்றவைத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.


தள்ளாடிக் கொண்டே அவர் வீடு திரும்பும் போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. தோட்டத்திற்கு சென்று கை கால் அலம்பிக் கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தார். இவள் வைக்க வைக்க அவர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். கண்கள் விரிய இவள் அவரைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தாள். சாப்பிட்டுவிட்டு எழுந்து கை அலம்பிக் கொண்டு தெருவிற்குச் சென்று சிறிது நேரம் நடந்தார். பின் வந்து பாயில் படுத்துக் கொண்டார். அவளும் பாட்டியும் சாப்பிட்டு விட்டு படுக்க போகும் முன்பே அவர் தூங்கி விட்டிருந்தார். ஆழ்ந்த உறக்கம் அவருள் கனவின் விதைகளைத் தூவியது.


தெருவில் நாய்கள் ஊளையிட்டுக் கொண்டு இருந்தன. ”ஏங்க கதவு தட்ற சத்தம் கேக்கறமாதிரி இருக்குங்க” என்று அவரை இவள் தட்டி எழுப்பும் போது உறக்கம் கலைந்து பாட்டியும் எழுந்து உட்கார்ந்தாள். “அம்மா... அம்மா” எனறு அவள் குரல் துல்லியமாகக் கேட்டதை இவள் உணர்ந்தாள். வேதனையாகவும் இருந்தது இவளுக்கு. ”கதவ தெறக்காத அது பாட்டுகினு கத்திட்டு போயிடும்” என்று பாட்டி இவளிடம் சொன்னாள். அவர் போதையின் பிடியில் சிக்குண்டிருந்தார். நன்றாக குறட்டை விட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.இவள் பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள். பாட்டி ”எதையும் காதுல வாங்காம படுடி” என்று இவளை அதட்டினாள். இவள் பாட்டியின் பேச்சை கேட்டுக்கொண்டே அசைந்தாடி எரிந்துகொண்டிருக்கும் விளக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வெளியில் இருந்து ”அம்மா.. அம்மா” என்று கூப்பிடும் சத்தமும் அதைத் தொடர்ந்து கதவு தட்டும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது. ”இன்னிக்கும் போயி கதவ தெறந்து பேச்சு குடுத்தனா அந்த சனியன் நாளைக்கும் வந்து நிக்கும்” என்று பாட்டி சொன்னாள். நாளையும் வரும் என்று பாட்டி சொன்னதால் இவள் கதவைத் திறக்காமல் அமைதியாக படுத்துக் கொண்டே மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கதவு தட்டும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. தெருவில் நாய்களும் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தன.
ஒரு கட்டத்தில் அவள் கதவு தட்டுவதை நிறுத்தினாள். இனி இவர்கள் திறக்க மாட்டார்கள் என்று அவளுக்கு புரிந்துவிட்டிருந்து. முதன் முதலாக தன் பெற்றோர்கள் மீது அவளுக்கு கோபம் வந்தது. இவ்வளவு நேரம் தட்டியும் வந்து என்ன என்று கேட்காத இவர்களை சபிக்கத் தொடங்கினாள். அவள் வாயில் இருந்து கெட்ட வார்த்தைகள் பெருகிக் கொண்டிருந்தன. நாய்கள் குரைத்துக்கொண்டிருப்பதை அப்போது தான் திரும்பிப் பார்த்தாள். ஒற்றை விரலை எடுத்து தன் உதட்டின் மீது வைத்து நாய்களைப் பார்த்தாள். அவை அனைத்தும் அடுத்த நொடியே வாலைக் குழைத்துக்கொண்டு அவளைச் சுற்றிச் சுற்றி வந்தன. நேற்று தன்னிடம் கனிவோடு நடந்து கொண்ட தன் தாயின் மேல் அவளுக்கு லேசான பரிவும் ஏற்பட்டு மறைந்தது. ஆனால் தந்தை மீதான கோபம் மெல்ல திரட்சியடையத் தொடங்கின. கடைசியாக ஒரு முறை கதவைத் தட்டினாள். யாரும் வந்து திறக்கவில்லை.சிறிது நேரம் கதவின் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். அந்நொடியில் அவள் தன் தந்தையை பழிவாங்க துடித்தாள்.முகம் சிவந்து கண்களில் குரூரம் பரவத் தொடங்கியது.


மொத்த கோபமும் தன் தந்தை மீது திரண்டது அவளுக்கு. மூச்சை நன்றாக இழுத்து விட்டு விஷம் ஏறி நீலம் பாரித்திருந்த தனது விரல் நகங்களைப் பார்த்தாள். அனைத்து நகங்களும் மிகவும் கூர்மையாக இருந்தன. மிகவும் நிதானமாக அனைத்து நகங்களையும் பற்களால் கடித்து எடுத்தாள். வாயிற் படி அருகே சென்றவள் கீழே குனிந்து வாயிற்படி மீதும் அதன் கீழே தரையிலும் இரண்டு நகங்களை செருகி வைத்தாள். பின் வாசலுக்கு வந்து அங்கு நீண்டிருந்த நடைபாதையெங்கும் மீதமிருந்த நகங்களைச் செருகினாள். கூரிய ஊசியைப் போன்று நீல வண்ணத்தில் மின்னிக் கொண்டிருந்தன நகங்கள். அந்நகங்களைப் பார்த்து விஷமேறி இருந்த தன் கோரைப்பற்கள் தெரிய முதல் முறையாக சிரித்தாள். பின் அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். தன் முன் நீண்டிருந்த பாதையைப் பார்த்தாள். தெருவோர வேப்ப மரத்திலிருந்து ஒரு ஆந்தை சிறகை படபடவென அடித்தபடி அவளைக் கடந்து சென்ற போது அவள் வாசலைத் தாண்டி பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கி இருந்தாள். வாலைக் குழைத்தபடி நாய்கள் அவளைப் பின் தொடர்ந்து ஒடிக்கொண்டிருந்தன. வெப்பாலையும் பனைகளுமாக உயர்ந்திருந்த சுடுகாட்டுப் பாதையில் இறங்கி நடந்தபோது நாய்கள் அங்கேயே நின்றுவிட்டன. அவள் திரும்பி நாய்களைப் பார்த்தாள். அவற்றின் கண்கள் இருளில் தீப் பிழம்பு போல ஒளிர்ந்து கொண்டிருந்தன. பின் மீண்டும் பாதையைப் பார்த்தபடியே நடக்கத் தொடங்கினாள். நாய்கள் மறுபடியும் ஊருக்குள் வரும் பாதையில் திரும்பிக் கொண்டிருந்தன.


சருவத்தில் சாணியைக் கரைத்துக்கொண்டு இவள் தெரு வாசலுக்கு வந்தபோது ஒரளவுக்கு விடிந்து விட்டிருந்தது. இவளைப் பின் தொடர்ந்து வேட்டியை சரிசெய்து கொண்டு வெளியே வந்தார். தேனீர் குடிக்க எண்ணி தெருவிற்கு வந்தபோது வழிப்பாட்டையில் செருகப்பட்டிருந்த ஒரு நகம் அவர் காலில் குத்தியது. கீழே குனிந்து நகத்தை பிடுங்கினார். பிடுங்கியதும் ரத்தம் பெருக்கெடுத்தது. நகத்தை வீசி எறிந்து விட்டு நடக்கத் தொடங்கினார். இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் தலை சுற்றுவது போல உணர்ந்தார். நாக்கு குழறத் தொடங்கியது. நெஞ்சு அடைப்பது போல உணர்ந்தவர் மெல்ல வீட்டிற்கு திரும்பி நடந்தார். சற்றுமுன் சாணம் மெழுகிக் கொண்டிருந்த தன் மனைவி வாயில் நுரைதள்ள வாயற்படியிலேயே விழுந்து கிடப்பதைப் பார்த்தார். சப்த நாடியும் ஒடுங்க கீழே சரிந்தார். மீதமிருந்த நகங்கள் விடியலின் வெளிச்சத்தில் இன்னும் கூடுதலாக மின்னிக் கொண்டிருந்தன.


”ஏங்க என்ன ஆச்சு? என்று இவள் அவரைக் கேட்டபோது அவர் உடம்பு வேர்த்து நனைந்திருந்தது. உடம்பு நடுங்கிக் கொண்டு இருந்த அவரால் வாயைத் திறந்து பேச முடியவில்லை. அவள் விழிகள் தெரு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தது. வாசல் வெறிச்சோடி காணப்பட்டது. மீண்டும் கண்களை சுழற்றி பாட்டியைப் பார்த்தார். அவளையும் காணோம். இதுவரை தான் கண்டது கனவுதான் என்பதை உறுதியாக நம்பமுடியாமல் இவளைப் பார்ந்தார். அவரின் நிலை இவளை மேலும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. சொம்பில இருந்த தண்ணீரை கையில் ஊற்றி வேகமாக அவர் முகத்தில் அடித்தாள். தண்ணீரின் குளுமை அவரை மெல்ல இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது. வழக்கமாக தன் மகள் படுத்துக் கொண்டு இருக்கும் இடத்தை பார்த்தார். அவள் இல்லாம் வெறும் மண் தரை மட்டுமே நீண்டு கிடந்தது. வெறுமையான அந்த இடத்தை பார்க்க பார்க்க அவருக்கு மனது கணக்கத் தொடங்கியது. பயத்தில் சுவாசம் தாறுமாறாக மாறத் தொடங்கியது. அந்த நொடியில் தன்னை மிகவும் குரூரமாக அவர் உணர்ந்தார். அவர் கண்களில் இருந்து மாலை மாலையாக கண்ணீர் இறங்கி கன்னத்தை ஈரமாக்கியது. அவர் சிறிது நேரத்தில் தேம்பி அழ ஆரம்பித்தார். அவர் தேம்பி அழுவதை பார்த்த இவளுக்கும் அழுகை பீறிட்டுக் கிளம்பியது. உடைந்து அழத் தொடங்கினாள் இவள். காற்றின் போக்கில் விளக்கின் சுடர் அலைந்து கொண்டிருந்தது. அவர் சுடரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். தன் கனவில் வந்த காட்சிகள் மீண்டும் அவரது மனதில் தோன்றத் தொடங்கின. ”அம்மா... அம்மா” எனும் கெஞ்சலுடன்கூடிய சன்னமான அவள் குரலை மீண்டும் துல்லியமாகக் கேட்ட மாத்திரத்தில் மீண்டும் குலுங்கிக் குலுங்கி கைகளைக் கூப்பிக் கொண்டு யாரிடமோ மன்னிப்பு கேட்பது போல உடைந்து அழத் தொடங்கினார். அழுது அழுது அவர் கண்கள் சிவந்தன. தொண்டை அடைத்துக்கொண்டு குரல் கிரீச்சிடத் தொடங்கியது.

மூக்கை அடைப்பது போல உணர்ந்தார். மூக்கைச் சிந்த விரல்களை மூக்கிற்கு அருகில் கொண்டு சென்றார். அவர் விரல்களில் தேங்கி இருந்த கருவாட்டுக் குழம்பின் வாசனை பெருகி அறையெங்கும் நிரம்பியது. மறுடியும் கண்களில் நீர் திரள அவர் அழத் தொடங்கினார். தோட்டத்தில் கட்டியிருந்த மாடுகள் கால்களை உதைத்துக் கொண்டு ”மா மா” என கத்திக் கொண்டே இருந்தன.

2 comments:

  1. கதை இதயத்தை கனமாக்குகிறது!

    ReplyDelete
  2. என்னவளே
    இனிமையானது எது?
    கொடுமையானது எது?
    விடைசொல் என்று கேட்டேன்

    அடடா
    இரண்டுக்கும் விடை தனிமை!
    நாமே தேர்ந்தெடுத்த தனிமை!
    பிறர் பரிசாக கொடுத்த தனிமை!

    ReplyDelete