Saturday, March 3, 2012

முதல் பிரவேசம்


என் முதல் புத்தகத்திற்கும் என் மூத்த மகளுக்கும் சம வயதே ஆகிறது. இருவரும் ஒரே ஆண்டில் சில மாதங்கள் முன்பின்னாக பிறந்தவர்கள். அதனால் தான் என் புத்தக அலமாரியில் என் முதல் புத்தகமான புலிப்பானி ஜோதிடரை பார்க்கும் போதெல்லாம் என் மூத்தமகளைப் பார்ப்பது போலவே இருக்கிறது.

‘நீங்க ரெண்டு பேரும் எழுதி நீங்களே பாராட்டிக்கிறீங்க. என்மொழியில எனக்கு புரியும்படி எழுதுங்க’ எனத் திமிர்த்தனத்துடன் அடிக்கடி எதிர்ப்படும் மொண்ணையான வார்த்தைகளை, தொடர்ச்சியான எழுத்துக்கள் மூலமே கடந்து வந்திருக்கிறேன். மூன்றாந்தர வியாபாரியின் மனநிலையில் திரியும் நபர்களுக்கு, இலக்கியம் என்பது ஒருபோதும் வியாபாரம் அல்ல என்று விளங்க வைக்க மேற்கொள்ளும் பிரயத்தனங்கள்கூட தேவையற்றது என்பதை உணர்ந்துகொள்ளவே சில ஆண்டுகள் செலவிடவேண்டியிருந்ததை ஒரு துர்கனவாகவே எண்ண வேண்டியிருக்கிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் மீதான இதுபோன்ற கீழான தாக்குதல்கள் பெரிதும் மனநோய் சார்ந்தது என்ற நிலையில் ஒரு புத்தகத்தின் வரவு அவர்களை பேச்சற்றவர்களாக மாற்றிவிடுகிறது. இதனால் தான் அனைத்து நிறுவனங்களுக்கும் எழுத்தாளர்களும் புத்தகங்களும் பீதியூட்டுபவைகளாகத் தோற்றமளிக்கின்றன.

எனக்கும் கண்டராதித்தனுக்குமான ராஜபாட்டையை நாங்களேதான் போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. எங்களை தாக்கிய கிண்டல்களையும் கேலிகளையும் பல நேரங்களில் நாங்கள் உதாசினப்படுத்தியே வந்திருக்கிறோம்.எனக்கு எப்போதும் முன்னத்தி ஏர் பிடிப்பவராக கண்டராதித்தனே இருந்து கொண்டிருக்கிறார். எந்த இலக்கியத் தொடர்புகளும் உருவாகாத நாட்களில் தன் சொந்தப் பணத்தை கொண்டு சல்லிகை வெளியீடாக தன் ‘கண்டராதித்தன் கவிதைகள்’ நூலை வெளிக்கொண்டு வந்தார். அவரின் மனதிடம் எப்போதும் எனக்கு வாய்த்ததில்லை. அதனாலேயே புத்தகம் போடும் எந்த திட்டமும் இல்லாமலேயே எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதைய என் சந்தோஷமெல்லாம் சில நல்ல கதைகளை நாமும் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே. எழுத நினைத்ததற்கும் எழுத ஆரம்பித்ததற்கும் இடையில் நான் என்னைத் தயார் படுத்திக் கொள்ள நிறைய ஆண்டுகளை செலவிட வேண்டியிருந்தது. நிறைய எழுதவேண்டும் என்று எப்போதுமே நினைத்தது இல்லை. மாறாக நிறைவாக எழுதிவிட வேண்டும் என்ற பதற்றமே எப்போதும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இந்த மனநிலை தான் படைப்புகளைத் தொடர்ந்து செப்பனிட்டுக் கொண்டே இருப்பவனாக என்னை வைத்திருக்கிறது.

வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த ஒருநாள் காலையில் எழுத்தாளர் கௌதமசித்தார்த்தன் என்னை தொலைபேசியில் அழைத்து உன்னதம் வெளியீடாக உங்கள் சிறுகதைகள் தொகுப்பை கொண்டு வரலாமா என்று கேட்டார். நான் அவருக்கு யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு நண்பர் தளவாய் சுந்தரத்திடம் இது குறித்து பேசினேன். அவர், சந்தியா பதிப்பகத்திலிருந்துகூட உங்க முகவரி, தொலைபேசி எண்ணை கேட்டார்கள் நான் கொடுத்திருக்கிறேன் என என்னிடம் தெரிவித்தார். இந்த தகவலை நான் கௌதம சித்தார்த்தனிடம் தெரிவித்தேன். அவரும் சந்தோஷப்பட்டார். சந்தியாவில் இருந்து புத்தகம் கொண்டு வரும் விஷயத்தை கண்டராதித்தனிடம் தெரிவித்த போது அவரும் தன் பங்கின் சந்தோஷத்தை ஒருநாள் மாலை என்னுடன் மதுக்கோப்பையை பகிர்ந்துகொண்டு வெளிப்படுத்தினார்.
அது வரை வெளியான எட்டு அல்லது ஒன்பது கதைகளைக்கூட நான் சேமித்து வைத்திருக்கவில்லை. சேமித்து வைக்கவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. நண்பர்கள் தளவாய் சுந்தரமும் ராஜகோபாலுமே என் கதைகளை கொடுத்து உதவினார்கள். மீள் சிறகுவில் வந்த கதையை சிரமம் எடுத்துக் கொண்டு நண்பர் தளவாய் சுந்தரம்தான் தொகுப்பில் சேர்த்துவிட உதவினார். தன் எழுத்துக்கள் மூலம் மட்டுமே ஓர் ஆளுமையாக நம்மிடையே தனித்துவத்தோடு இருந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் சி.மோகன் மேற்பார்வையில், ஓவியர் மருதுவின் தூரிகை நூலின் முகப்பு அட்டையை வடிவமைக்க என் முதல் தொகுப்பு உருப்பெற்றது. ஏதாவது சிறகுகள் துளிர்விட்டிருக்கிறதா என்று நானே என் முதுகை அடிக்கடி தடவிப் பார்த்துக்கொண்ட நாட்கள் அவை.

என் உடன் சென்னைக்கே வந்து பிழைத்திருத்தி உதவி செய்த என் தமிழ் ஆசிரியர் திரு.பால.நடராஜன் அவர்களின் பெரிய மனம் எப்போதும் என்னை சிலிர்ப்படையச் செய்வதாகவே இருக்கிறது. புத்தகத்திற்கு என்ன தலைப்பிடலாம் என்று நான் குழம்பிக்கிடந்த வேலையில் புலிப்பானி ஜோதிடர் தலைப்பே நன்றாகத்தானே இருக்கிறது அதையே வைக்கலாமே என்று கூறிய தோழமையின் குரல் இன்னும் என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நல்லதோ கெட்டதோ எது வந்தாலும் தனித்து வந்துவிடாது என்று சொல்வார்கள் அந்த வகையில் என் முதல் தொகுப்பு சில சந்தோஷங்களையும் கூடவே கொண்டு வந்தது. கடந்து செல்லும் காலம் வெறுமனே நம்மை கடந்து சென்று விடுவதில்லை. பல சாத்தியங்களை நமக்கு வழங்கிவிட்டே செல்கிறது. தொடர்ந்து தவறவிடுபவர்களாகவே நாம் இருந்துவிடுவது தான் நம்முடைய பிழை. அந்த வகையில் நிறைய தவறவிட்டிருக்கும் நான், ஒரு புத்தகத்தை முன்னிட்டு உடைபடும் தோழமையின் பிரிவை பிறகெப்போதும் ஒன்று கூட்ட முடியாதென்பதை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

என் முதல் தொகுப்பை என் தந்தைக்கும் உடன் படித்த உதயா எனும் தோழிக்கும் சமர்ப்பித்திருந்தேன். ஆனால் இருவருக்குமே அந்நூலை என்னால் அளிக்க முடியாத நிலை. தந்தையின் அதீத குடிப்பழக்கம் அவரிடமிருந்து என்னைப் பேசவிடாமல் பிரித்து வைத்திருந்தது. அவரிடம் பேசாமல் இருந்தாலும் கூட அவர் மீதான அன்பு எப்போதுமே தீர்ந்து போகக் கூடியதாக இருக்கவில்லை. என் முதல் தொகுப்பு வெளியான காலகட்டத்தில் என்னுடன் இருந்தவர்கள், இப்போது தொடர்பில் இல்லாமல் போனதற்கு நான் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. பலநேரங்களில் பேரன்பின் முகத்தைச் சிதைத்துவிட ஒரு சில அர்ப்பத்தனங்கள் மட்டுமே போதுமானதாகி விடுகிறது.

முதல் பிரதியை தொட்டு உணர்ந்த அந்த நிமிடத்தின் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள அம்மா இல்லாத சோகம் என்னில் துடித்தபடி மேலெழுந்தது. அப்போதைய என் மனவேதனையை கண்டராதித்தனின் அருகாமை ஓரளவிற்கு மட்டுப்படுத்தியது. நீண்ட நேரம் மருதுவின் அட்டைப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின் மெல்ல புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன். அந்த சாயுங்கால நேரத்தின் ரம்மியம் இப்போதும் அடிநெஞ்சில் அப்படியே தேங்கிக் கிடக்கிறது. கண்டராதித்தன் என் வாழ்க்கையின் சில முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார். அதில் நானும் அவரும் பச்சபுள்ளா குளத்தருகில் பரந்து கிளைபரப்பிக்கொண்டிருந்த வேம்பின் கீழ் இருந்த பாறையின் சரிவில் அமர்ந்து என் முதல் தொகுப்பு வந்த அஞ்சல் உறையைப் பிரித்த அந்த நிமிடத்திற்கு எப்போதும் பிரதானமான இடம் உண்டு. என் தொகுப்பும் நானும் இப்போதும் இருக்கிறோம். ஆனால் அந்த வேப்பமரமும் பாறையும் இப்போது அங்கே இல்லை.

ஒரு நல்ல புத்தகம் வெளியீட்டு விழாக்களை மதிப்புரைகளை கோருவதில்லை எனும் அறிவை என் முதல் புத்தகம் எனக்கு அளித்தது. எந்த முன்னெடுப்பையும் செய்யாமலேயே நூல் குறித்து பல நல்ல கருத்துகள் வெளி வர ஆரம்பித்தது. பல எழுத்தாளர்கள் நண்பர்கள் ஆனார்கள். அந்த வகையில் என் முதல் தொகுப்புதான் மீண்டும் தன்மூலமாக என்னைப் பிரசவித்துக் கொண்டதாக எண்ணத் தோன்றுகிறது.

2 comments:

  1. என்னவளே
    எல்லோருக்கும்
    முதல் படைப்பு
    மிகச் சிறப்பு! என்றேன்

    அடடா
    மூத்த மகளைத்தானே
    குறிப்பிடுகிறீர்கள் என்று
    இப்படியா கிண்டலடிப்பாய்?

    ReplyDelete
  2. Muthal pirasavam endru vaithirukkalam sir

    ReplyDelete