Thursday, October 20, 2016

உட்கப் படாஅர் ஒளியிழப்பர்

மது இன்று கைக்கெட்டும் தூரத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறது. என்னுடைய பதின்ம வயதுகளில்  இதுபோல இருந்ததில்லை. அன்று சடங்குகளும், திருவிழாக்களும் அவற்றுக்கேயான அறங்களோடும், கேளிக்கைகளோடுமே நடந்தேறின. ஆனால் இன்று அப்படி இல்லை . சாவு வீடு என்றாலும் திருமண வீடு என்றாலும் இன்று மதுக்கோப்பைகளின் சப்தங்கள் இன்றி சாத்தியம் இல்லை. அனைத்து சடங்குகளும் மதுவின் கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அக்கண்ணிகளை அவிழ்த்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்ற பிரக்ஞை சிறுதும் இன்றி இளைஞர் சமுதாயம் திரையரங்க வாயில்களில் காத்துக் கிடக்கிறது.

        முதலில் ஒரு தாயைப்  போல நுழையும் மது, பின் நண்பனைப் போல தோளில் கைபோடுகிறது. அடுத்து காதலியைப் போல நாடி நரம்புகளையெல்லாம் முறுக்கேற்றுகிறது. இறுதியில் பேயுருக்கொண்டு முற்றிலும் அழித்து நாசமாக்கி  அமைதி கொள்கிறது.

        குடியினால் யவரும் இறப்பதில்லை எனும் வாதங்கள் முனை மழுங்கியன. அவற்றுக்கு எவ்வித அர்த்தங்களும் இருப்பதில்லை. குஷ்வந்த் சிங் குடித்துக் கொண்டே இருந்தாரே என ஏகடியம் பேசுவோர்களின்  பார்வைகள் கோளாறானவை. நானுமேகூட குடியால் நொடிந்த குடும்பத்தின் எச்சம்தான்.

        அறிவை மட்டுப்படுத்தி, நடத்தையை சிதைத்து, ஆளுமையை சீர்குலைத்துப் போடுகிற பெரும் காரியத்தை மது மெல்லச் செய்கிறது. “ சும்மா ஜாலிக்குதான் குடிக்கிறேன்”  எனும் வார்த்தைகளைச் சொல்லி மதுக்குவளையை எடுத்தவர்களுள்  மீண்டு வந்தது மிக மிகச் சொற்பமே.

        இன்றைய நடைமுறை வாழ்க்கையின் அனைத்து கனங்களும் மதுவைக் கொண்டு நிரப்பிக் கொள்ள தன்னுடைய சகல விதமான கதவுகளையும் திறந்தே வைத்திருக்கின்றன. இருள் விலகாத காலையில் எழுந்து, பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தம்ளர்களையும் , தண்ணீர் பாக்கெட்களையும் எவ்வித கூச்சமுமின்றி வாங்கிச் செல்லும் இன்றைய இளம் தலைமுறையை தினமும் பார்க்க முடிகிறது. இவர்கள் அனைவரும் மாணவப் பருவத்திலிருந்து நேரடியாக மதுவின் பிடிக்குள்  வந்து சேர்ந்திருப்பவர்கள். குடிப்பதற்கான அனேக காரணங்கள் இவர்கள் கைவசம் இருக்கின்றன.

        பெரும்பாலான வாகன விபத்துகள் , வன்புணர்ச்சிகள் எவற்றால்  நிகழ்கின்றன என ஆழ்ந்து யோசிக்கும் போது, சமூகத்தில் இன்று தாராளமாக சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்ற மதுக்கூடங்களின் வாயில்களில் அவ்வினாக்கள் தலைகவிழ்ந்து நிற்க வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். அடுத்து வரும் பத்தாண்டுகளில் தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோர் கணைய அழற்சி நோய்க்கு ஆட்படுவர் என அழுத்தமாக கூறும்  ஒரு ஆய்வை நாம் சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. அதன் பொருட்டு பொதுச் சுகாதாரத்திற்கு நம்முடைய அரசாங்கம் பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவ்வாய்வு கூறுகிறது.

ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமி உடல் நலத்தை பேணுவது படைப்பாளிக்கு ஏன் அவசியமானது என்பது குறித்து பல நேர்காணல்களில் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். மேலும் அவர் ஒரு மராத்தான் ஓட்டப்பந்தய வீரரும் கூட. அதைப்பற்றி அவர் ‘ What we Talk About When we Talk About Running ‘ எனும் தலைப்பில் சுவாரசியமான புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
        உடலை திடமாக பேணாத படைப்பாளர்களால் , தன் படைப்பு சார்ந்த சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வது இயலாத காரியம். இலக்கியம் சார்ந்த அரங்க செற்பாடுகள் பெரிதும் மதுவை மையமாகக் கொண்டே திட்டமிடப்படுகின்றன. இதுபோன்ற முகாம்களில் கடந்த பத்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளும் படியான சிறு உரையாடல் கூட நடைபெற்றதில்லை என்பது கண்கூடு. இலக்கியத்தின் ஏகலைவர்கள் என்று மார்தட்டிக் கொண்டு மேலும் கூடுதலான எடைகளைக் கொண்ட படைப்புகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஆகிருதிகளுக்கு உதவும் பொருட்டு பிரதி சார்ந்த விவாதங்களை முன்னெடுக்க சில இலக்கிய விமர்சன பிரதிநிதிகள் இருக்கின்றனர். பந்தல் கால் நடுவதில் இருந்து அவர்கள் கச்சிதமாக தங்களுக்கு இடப்பட்ட பணியை தொடங்குகின்றனர். அப்பணி நெடுகிலும் மதுப்போத்தல்கள் உருள்கிற சப்தம் பின்னணி இசையைப்போல தொடர்கிறது.        மதுவைத் துணைகொண்டு இன்றைய சூழலில் அறத்தோடு நிற்கமுடியுமா? உண்மையில் இப்புள்ளியில் இருந்து தான் நாம் யோசிக்கத் தொடங்க வேண்டும்.