Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts
Thursday, September 9, 2010
பரிசு
எல்லையற்ற
கருணை நிரம்பிய
இவ்வுலகில்தான்
ஒரு தற்கொலையை மேற்கொண்டு
சிறு முத்தத்தை
சமப்படுத்த வேண்டியிருக்கிறது
Wednesday, September 8, 2010
எதையும் எதிர்கொள்ளத் தயாராயிருப்போம்
ஒரு நல்ல ஆசிரியரைப் போல
கைதேர்ந்த ஓர் வைத்தியரைப் போல
நுட்பமான ஓர் விஞ்ஞானியைப் போல
நடுநிலை தவறாத ஒரு நீதிபதியைப் போல
தன் வேலையை
மிகக் கச்சிதமாகவும்
பச்சாதாபங்களுக்கு அப்பாற்பட்டும்
செய்து முடிக்கின்ற
மரணத்தை
ஏன்
தவறாகப் புரிந்துகொள்கிறோம்.
நாம்?
Tuesday, September 7, 2010
சற்றைக்கு கொஞ்சம் முன்னர் தான் அது நிகழ்ந்திருக்க வேண்டும்
அவர் திடீரென மறைந்து விட்டதாக
செய்தி வருகிறது
மரணம் அப்படியொன்றும்
திடீரென வந்துவிடுவதில்லை
நள்ளிரவில்
நாயின் அழுகை
சாக்குருவியின் சிறகசைப்பு
கோட்டானின் கூவல்
வழியாக
நிச்சயப்படுத்துகிறது
அது தன் வருகையை
அது தங்கள் வீட்டையே
வட்டமடித்தாகக் கூறி அழும்
பெண்களின் அழுகை
அதன் வருகையை இன்னும்
அடர்த்தியாக்குகின்றது
அந்த ஊருக்கு
குறிப்பிட்ட அந்த தெருவுக்கு
பின் அந்த வீட்டுக்கு
பல ஒத்திகைகளுடன்
வந்து சேர்கின்ற அது
ஒருவரை நெருங்கி விட்டதென்பதை
அவர்
உத்திரத்தைப் பார்த்து விடும் இறுதி மூச்சு
உறுதி செய்கிறது.
உரிய நேரத்திற்காக அது
மிக நிதானமாக ஆனால் கவனமாக
காத்திருக்கிறது
கடைசியில்
அந்த நபர் இறந்துவிடுகிறார்
ஒரு பூவைப்போல
அங்கே மெதுவாகப் பிறந்துவிட்டிருக்கிறது
மரணம்
Subscribe to:
Posts (Atom)