Tuesday, September 7, 2010

சற்றைக்கு கொஞ்சம் முன்னர் தான் அது நிகழ்ந்திருக்க வேண்டும்


அவர் திடீரென மறைந்து விட்டதாக
செய்தி வருகிறது

மரணம் அப்படியொன்றும்
திடீரென வந்துவிடுவதில்லை
நள்ளிரவில்
நாயின் அழுகை
சாக்குருவியின் சிறகசைப்பு
கோட்டானின் கூவல்
வழியாக
நிச்சயப்படுத்துகிறது
அது தன் வருகையை

அது தங்கள் வீட்டையே
வட்டமடித்தாகக் கூறி அழும்
பெண்களின் அழுகை
அதன் வருகையை இன்னும்
அடர்த்தியாக்குகின்றது

அந்த ஊருக்கு
குறிப்பிட்ட அந்த தெருவுக்கு
பின் அந்த வீட்டுக்கு
பல ஒத்திகைகளுடன்
வந்து சேர்கின்ற அது
ஒருவரை நெருங்கி விட்டதென்பதை
அவர்
உத்திரத்தைப் பார்த்து விடும் இறுதி மூச்சு
உறுதி செய்கிறது.


உரிய நேரத்திற்காக அது
மிக நிதானமாக ஆனால் கவனமாக
காத்திருக்கிறது
கடைசியில்
அந்த நபர் இறந்துவிடுகிறார்

ஒரு பூவைப்போல
அங்கே மெதுவாகப் பிறந்துவிட்டிருக்கிறது
மரணம்

No comments:

Post a Comment