Showing posts with label நவீன புனைவு. Show all posts
Showing posts with label நவீன புனைவு. Show all posts

Tuesday, October 18, 2016

ஆண் குழந்தையை மட்டும் கருத்தரிக்கச் செய்யும் சூத்திரதாரியின் கதை

அவள் வயிறு பெருத்துக்கொண்டே போனது. எந்த நிமிடமும்  அவள் பிரசவித்து விடலாம் என்று தோன்றியது அவருக்கு. பிரசவ வலி எடுப்பதற்காக காத்திருக்கத் தொடங்கினார். காத்திருப்பு நீண்டு கொண்டே இருந்தது. பிரசவவலி வருவதற்கான எந்த அறிகுறியும் அவளிடத்தில் காண முடியவில்லை. மருத்துவர் கூறிய நாட்களும் கடந்தன. அவர் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார். எங்கேயும் நிலை கொள்ளாமல் அவர் சிந்தனை அலைந்து கொண்டே இருந்தது.
        ஒரு வாரம் கழிந்த நிலையில் பெருமழை தொடங்கி விடாது பெய்து கொண்டிருந்தது.தெருக்களை அடைத்து தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. தவளைச் சப்தம் விடாமல் கேட்கத் தொடங்கிய இரவு அவளுக்கு வலி கண்டது. வலி பொறுக்கமுடியாமல் துடித்தாள். தெருக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார். வானம் பிளந்து கொண்டு மழை ஊற்றிக்கொண்டிருந்தது. தெருத்திண்ணையில் மோதி சிக்கிக் கொண்டிருந்தது நைந்து பிய்ந்து போன பாய். காலால் அதைத் தள்ளி விட்டார். நீரின் போக்கில்  அது அடித்துச் சென்றது.
தெருக்கோடியில் இருந்த கோவில் இருளில் பூதாகரமானத் தோற்றத்தோடு நின்று கொண்டிருந்தது. தோட்டத்து காட்டுவா மரத்தில் இருந்த கோட்டான் ஒரு முறை கத்தி அடங்கியது. வெள்ளம் உயர்ந்து கொண்டே இருந்தது. பயம் மெல்ல கவியத் தொடங்கிய போது அவர் தெருக்கதவை அடித்துச் சாத்திவிட்டு கூடத்திற்கு வந்தார். வலி பொறுக்கமுடியாமல் அவள் கத்திக் கொண்டிருந்தாள். அவர் பின் பக்க கதவைத் திறந்து கொண்டு, குப்பு அக்காவை அழைக்க அவள் வீடு நோக்கி நடத்தார். இடுப்பளவு வெள்ளத்தில் நடந்து செல்வதே அவருக்கு சவாலாக இருந்தது. அவர் மனம் முழுக்க வீட்டிலேயே கிடந்தது.

குப்பக்காவை அழைத்துக் கொண்டு திரும்புகையில் இடுப்பளவைத் தாண்டி தண்ணீர் வந்து விட்டிருந்தது. சாளாவரத்தின் வழியாக அவர் வீட்டின் கூடத்திலும் தண்ணீர் மட்டம் உயரத் தொடங்கியது. குளிர் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. குப்பக்கா ஜானகியின் அருகில் சென்று அமர்ந்தாள். ஜானகியின் கால்களை நீட்டி பிடித்துக் கொண்டாள். வலி பொறுத்துக்க தாயி என்று சொல்லிக் கொண்டே ஜானகியின் அடிவயிற்றை நீவி விட்டாள். பற்களை கடித்துக் கொண்டு தன்னால் முடிந்த மட்டும் உந்தித் தள்ளினாள். கரிய உருண்டை வடிவில் இரத்தப் பிசுபிசுப்புடன் ஒரு உருவம் கீழே வந்து விழந்தது. அதைப் பார்த்த குப்பக்காவிற்கு வேர்த்து போனது. அவர் அருகில் வந்து பார்த்தார். பந்து போல  இருந்த அது பாறாங்கல்லைப் போன்றிருந்தது. அதை தொட்டுப் பார்த்தார். இரத்த பிசுபிசுப்பு கைகளில் அப்பிக் கொண்டது. கவிச்சை வாசனை ஈரக்காற்றில் கலந்து ஒருவித அசூயையை  ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் மீண்டும் அவளுக்கு வலி எடுக்கத் தொடங்கியது. குப்பக்கா அதீத எதிர்பார்ப்புடன் ஜானகியின் வயிற்றை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் பெருங்குரலெடுத்து கத்தியபடி பெரிய கரிய பாறாங்கல்லை பிரசவித்து தள்ளினாள். பார்த்துக் கொண்டருந்த இவருவரின் அடிவயிற்றையும் பயம் கவ்வத் தொடங்கியது. எதுவும் புரியாமல் அவர் குப்பக்காவை மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் சிறிது நேரத்திற்குள்ளாக இன்னொரு கரிய பாறாங்கல்லை பிரசவித்து தள்ளினாள். பயத்தினால் அவர்களுக்கு உடம்பு நடுங்கத் தொடங்கியது. தொடர்ந்து அவள் கற்களை பிரசவித்துக் கொண்டே இருந்தாள். கூடம் முழுக்க கற்கள் நிரம்பிக் குன்றுகளைப்போல காட்சி அளித்தது. அவள் தொடர்ந்து கற்களை பிரசவித்துக்கொண்டே இருந்தாள். தெரு நடைக்கு செல்லும் வழிகளிலும் கற்கள் குவிந்து வழியை அடைத்துக் கொண்டன. அவள் பிரசவிப்பது தொடர்ந்து கொண்டே இருந்தது. கற்கள் குவிந்தபடி இருந்தன.

கூடம் முழுக்க கற்கள் குவிந்து இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. இறுதியாக கற்கள் அவர்கள் இருவரையும் அழுத்தத் தொடங்கின. குப்பக்காவை ஒரு பெரிய கல் அழுத்த அவள் வாய் வழியாக ரத்தம் பொங்கி வழிந்தது.அதற்குள் இன்னொரு கல் அவள் முகத்தை மோதிச் சிதைத்தது. சதைகள் பிய்ந்து தொங்கின. அவருக்கு உடம்பில் நடுக்கம் அதிகரித்தது. மூச்சை நன்றாக இழுத்து விட்டபோது அவரது பாதத்தில் ஒரு பெருங்கல் வந்து விழுந்தது. பாதம் நசுங்கி அவர் கீழே சரிந்தார். மேலும் இரு கற்கள் அவர் முகத்திலும் வயிற்றிலும் விழுந்தன. வாயில் ரத்தம் பீரிட்டு பொங்கி நய்ந்து தொங்கிய சதைகளின் உடாக சொட்டு சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது. நாசித் துவாரங்கள் சிதைந்த நிலையில் வாயைத் திறந்து காற்றை இழுத்தார். அப்படியே இன்னொரு கல் இறங்கி வாயை அடைத்து நின்றது.

 “அய்யோ என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று கத்திக் கொண்டே அருகில் படுத்திருந்த தன் மனைவியைப் பிடித்து கீழே தள்ளினார். அவள் பயத்தில் அலறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.  “என்ன ஆச்சு?” என்றாள்.  “ஒரு கெட்ட கனவு” என்றார்.  “தண்ணி குடிச்சிட்டு எதையும் நெனச்சி பாக்காம தூங்குங்க” என்று சொல்லிவிட்டு ஒருக்களித்து படுத்துக் கொண்டாள். ஆண் குழந்தைக்கான சூத்திரத்தை தான் கண்டு பிடித்ததற்கும் இக்கனவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடுமோ என்று யோசித்து பார்த்தார். அந்த யோசனை அவரை மெல்ல புரட்டிப்போடத் தொடங்கியது. தன் பழைய நினைவுகளில் இருந்து ஒவ்வொரு துருப்புச்சீட்டாக அவர் வெளியே எடுக்கத்தொடங்கினார்.


திருவாளர் அங்கமுத்து வந்தடைந்திருக்கக்கூடிய இடம் ஒரு நாளில் அவருக்கு  சாத்தியப்பட்டதில்லை. அதற்காக  அவர் செலவிட்ட நேரத்தை வெற்று மனம் கொண்டு  ஒருவர்  கற்பனை செய்துகூட  பார்க்க முடியாது.பத்தாண்டு கால தொடர் உழைப்பை  அதற்காக ஒப்புக் கொடுத்திருக்கிறார். இடையறாத பயணங்கள், நீண்ட உரையாடல்கள்  மற்றும் நேர் சந்திப்புகள்;  நினைக்கவே மலைப்பானவை.  ஆண்குழந்தைகளை மட்டுமே கருத்தரிக்கச் செய்யும் சூத்திரத்தை கண்டுபிடிப்பதில் இவைதாம்  அவருக்கு உறுதுணையாக இருந்தன . ஒரு கட்டத்தில் கண்டாச்சிபுரம் நகரத்தின் அழுத்தமான அடையாளமாக  அவர் இப்படித்தான் மாறிப்போனார்.

 அவருக்கு முதல் குழந்தையே பெண்ணாக பிறந்தது. அப்போது அது குறித்து அவர் வருத்தப்படவில்லை.  ஆனால் அவர் மனைவி ஜானகி இரண்டாம் முறை கருத்தரித்தபோது  எல்லோரையும் போல  என்ன குழந்தையாக இருக்கும் என்ற ஆவல் அவரையும் தொற்றிக்கொண்டது.   “ஆணா இருந்தா இருக்கட்டும் இல்லனா வயித்த கழுவி, கூட்டிட்டு வாடா” என்றாள் அவருடைய  அம்மா. அதுவும்  ஒரு காரணமாக இருக்கலாம்.  ஜானகிக்கு  அது பற்றியெல்லாம் எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை.  கணவன் சொல்லே வேதவாக்கு  என்று அமைதியாகப் போகும் குணவதி அவள்.

அன்று திங்கள் கிழமை; பிரதோஷம்.  விடிய காலையில் எழுந்து முதல் பேருந்தில் பயணித்து கோவில் நகரத்தை அடைந்தபோது மணி பத்தரையாகியிருந்தது.  நகர் மத்தியில் பிரசித்தி பெற்ற அம்மருத்துவமனையை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. பரந்து விரிந்திருந்தது மருத்துவமனை. நவீன தொழில் நுட்பத்தின்   வேர் ஒவ்வொரு அங்குலத்திலும் படர்ந்திருந்தது.தன் மனைவியின் பெயரை அங்கிருந்த பணியாளரிடம் பதிந்துவிட்டு தங்களின் முறைக்காக  காத்திருந்தனர்.

சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு   “யாருமா ஜானகி?” என்று உரத்த குரலில்  கேட்டாள் ஒல்லியாக இருந்த பெண் பணியாளர். தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவர் உள்ளே நுழைந்தார். மருத்துவர் பார்ப்பதற்கு  லட்சுமிகடாட்சமாக இருந்தார்.  “சொல்லுங்க என்ன பிரச்சனை”  என்று மென்மையாக கேட்டார். ஆங்கில  தொனி அவ்வார்த்தைகளில் குழைந்திருந்தது. அவள் பேச எத்தனிப்பதற்குள்  அங்கமுத்து பேசினார்.  “இவளுக்கு பீரியட் தள்ளி போகுது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கு.  அதான்” என்று  வார்த்தைகள்  அதற்குமேல்  வெளிப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டார். மருத்துவர் சுலபத்தில் புரிந்துகொண்டார்.  நேரடியாகவே கேட்டார்.  “வயித்துல இருக்கறது ஆணா பொண்ணானு  தெரிஞ்சிக்கனும். இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே அவரை ஊடுருவிப் பார்த்தார்.  ஆமாம் என்பதுபோல அவர் தலையாட்டினார்.   “கருவுல இருப்பது ஆணா பொண்ணானு பார்த்து சொல்லவே கூடாது”  என்று மருத்துவர்  கூறினார். அதைக்கேட்டு அவர்  முகம் சுருங்கிப்போனது.  “ நீ அந்த ஹாஸ்பிடல்   போ டா.    அவங்க கரக்டா பாத்து சொல்லிடுவாங்க ” என்று  உடன் பணியாற்றும் சிவபாலன் உறுதியாக சொல்லியிருந்தார். அது அவருக்கு நினைவில் வந்து சென்றது. 

 “நீங்க தான் பெரிய மனசு பண்ணனும்மா” என்று சொல்லிக்கொண்டே மருத்துவரை  பரிதாபமாகப் பார்த்தார்.  அவர் சொல்வதைக் கேட்டு தலையாட்டிக்கொண்டே  ஜானகிக்கு  இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்.  மறுபடியும் அங்கமுத்துவே பேசினார்.  “உங்கள நம்பிதான் மா வந்திருக்கோம்”. இந்த முறை அவர் குரல் மிக சன்னமாக ஒலித்தது. சுலபத்தில் மருத்துவரிடமிருந்து இசைவான பதிலை பெற முடியாது என்று அவருக்கு புரிந்தது. கெஞ்ச வேண்டிய நேரத்தில் கெஞ்சுவதில் தவறில்லை என்றும் நினைத்தார்.    “சரி. சரி பார்த்து சொல்றேன். வெளியில தெரிஞ்சிடக் கூடாது” என்று  கடுமையாக எச்சரித்து   அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

  ஒரு கட்டிலில் ஜானகியை படுக்க வைத்தார். ஸ்கேன் இயந்திரங்கள் இயங்கத்தொடங்கின. மருத்துவர் அவளை நுட்பமாக பரிசோதிக்கத் தொடங்கினார். அங்கமுத்துவிற்கு படபடப்பாக இருந்தது.   “ஓகே. எழுந்துக்குமா”  என்று கூறிவிட்டு  அருகில் இருந்த கை அலம்பும் பாத்திரத்தில்  கைகளை கழுவி  துண்டில் துடைத்துக் கொண்டார்.  மருத்துவர் தன் இருக்கையில் வந்து அமர்ந்தபோது ஆடைகளை  சரிசெய்தபடி ஜானகியும் வந்து கொண்டிருந்தாள்.  அவள் வரும்  வரை காத்திருந்த  மருத்துவர்  “பெண் குழந்தைதான்மா”  என்று கூறினாள். அதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கமுத்து இடிந்து போனார். முகம் இருளடைந்தது. அந்த நொடி தன்னுடன் பணி புரியும்  முருகானந்தத்தின் மீது  ஆத்திரமாக வந்தது அவருக்கு.  “என் பேச்சை கேட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்தா ஆண் குழந்தை நிச்சயம்” என்று கூறி அவர்தான் அங்கமுத்துவை நாட்டு மருத்துவரிடம்  அழைத்து சென்றார். மருத்துவர்  தன் எதிரில் இருந்த  மருந்துச் சீட்டில்  எழுதத் தொடங்கியபோது அங்கமுத்துவின் மனதில் முன்னும் பின்னுமாக அலைவுறத் தொடங்கின.

அஞ்சா நாட்டு மருந்துகடை சாலையோரத்தில் ஒரு பெரிய புளிய மரத்தின் கீழ்  இருந்தது. தார்பாயைக்   கொண்டு தற்காலிக குடியிருப்பை உருவாக்கி இருந்தனர். ஒரு சிறிய மர ஸ்டூலில் தடித்த மீசையுடன்   நடுத்தர வயதுடைய ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் வரிசையாக கண்ணாடிப்  பாத்திரங்களில்  மூலிகைகள்  வைக்கப்பட்டிருந்தன. அவருக்கு சிறிது தள்ளி கல் உரலில்  மூலிகைகளை  போட்டு கடப்பாறையால்  இன்னொருவர் இடித்துக்கொண்டிருந்தார். மீசைக்காரருக்கு நேர் பின்னால்   மூன்றாமவர் அமர்ந்திருந்தார். இடிக்கப்பட்டு வரும் மூலிகைகளை  சல்லடையில் போட்டு சலிப்பது அவர் பணி.  கூட்டம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.முருகானந்தம் அங்கமுத்துவை அழைத்துக் கொண்டு  அங்கு சென்றபோது  இருட்டத்தொடங்கியிருந்தது.   அங்குபோய் நின்றதும்   முருகானந்தத்திற்கு   மூலிகை நெடி  தும்மலை ஏற்படுத்தியது. யார் தும்முவது என்று மீசைக்காரர் திரும்பி பார்த்தார். தன் காவிப் பற்களைக் காட்டி  “வா பைனான்ஸ் சார்” என்று அவருக்கு கேட்கும் விதமாக அழைத்தார்.  மூன்றாமவர் சலித்து முடித்துவிட்டு,  கூட்டத்தை அரை வட்ட வடிவில்  ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். தங்களுக்கு தோதான இடமாக பார்த்து இருவரும் நின்றனர். பெட்ரமாக்ஸ் விளக்கை மீசைக்காரர் ஏற்றினார். சூழலை வேறுவிதமாக மாற்றிக் காட்டியது அவ்வொளி. 
மீசைக்காரர் தன்னுடைய கட்டைக் குரலில் பேசத் தொடங்கினார்.   “நல்லா காது கொடுத்து கேளுங்க மக்களே. மாயமில்லை மந்திரமில்லை. கண்கட்டு வித்தையுமில்லை. நோய் புடிச்ச வீட்டுக்கு வந்து எடுக்கற  பில்லி சூன்யமும் இல்லை” என்று தொடர்ச்சியாகப் பேசிவிட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த  தண்ணீரை எடுத்து இரண்டு மிடர் அருந்தினார். தொண்டையை செருமிக் கொண்டார். மீண்டும் கூட்டத்தைப் பார்த்து பேசத்தொடங்கினார்.  “என்னடா இவன் இதுவும் இல்ல அதுவும் இல்லனு சொல்றானு பார்க்கறீங்க புரியுது. இது முழுக்க முழுக்க பழைய ஓலைச் சுவடிகள்ல இருந்து உருவான மருத்துவ முறை. இங்க பாத்தீங்கனா இமய மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகை இருக்கு; அப்புறம் நம்ம பழனிமலை; குற்றாலம் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகள் கொண்டுதான் மருந்து செய்யறோம்” என்று நிறுத்திவிட்டு ஆழ்ந்து மூச்செடுத்தார். சிறிது நேர ஆசுவாசத்திற்கு பிறகு மீண்டும் தொடர்ந்தார். “ இங்க நிக்கற பலபேருக்கு சொல்ல கூச்சப்படற வியாதிங்க இருக்கலாம். வெளியில தெரிஞ்சா மானம் போயுடும். கவரி மானுக்கு ரோமம் போச்சுதுன்னா உசுரு இல்ல. அதுமாதிரி மனுஷனுக்கு மானம். என்ன நான் சொல்றது சரிதானே” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார். இப்படி திடீரென்று அவர் கேட்டதும் கூட்டம் அமைதியானது.  அமைதியை களைக்கும் விதமாக  அவரே தொடர்ந்தார். “தூக்கமின்மை, சொப்பன ஸ்கலிதம், சீக்கிரம் விந்து வெளியாதல், விரைப்பின்மை, ஆகியவற்றுக்கு   மருந்து உங்க கண்ணெதிரிலேயே தயார் பண்ணி தறோம். ஒருமுறை வாங்கிப் பாருங்க. எல்லா  வியாதிகளும் குணமாவதை நீங்களே உணரலாம்” என்று சொல்லி ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு திரவத்தை ஊற்றினார். அதன் வாசனை குமட்டிக் கொண்டு வந்தது. கோழையைப்போல நீர்த்து வழு வழுப்பாக இருந்தது அது.அதை உள்ளங்கையில் ஊற்றி அனைவருக்கும் காட்டிவிட்டு  கீழே கொட்டினார். ஒரு திவலை கூட ஒட்டிக்கொள்ளாமல் அனைத்தும் கீழே விழுந்தது.  அனைவரும் வைத்தக் கண் எடுக்காமல் அவர் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.  “இப்படி தண்ணி மாதிரி  இருக்கும் விந்தால  எப்படி  குழந்தைய உருவாக்க முடியும்; எப்படி நீடிச்ச சந்தோஷத்தை கொடுக்க முடியும்” என்று  கூறிக்கொண்டே வேறொரு கண்ணாடி பாத்திரத்தை திறந்து  இரண்டு சிட்டிகை மூலிகைப் பொடியை எடுத்து அதில் தூவினார். அடுத்த நொடி அத்திரவம் இளம் நுங்கைப்போல கொழ கொழவென்று திரளத் தொடங்கியது. அவர் அதையும் உள்ளங்கையில் எடுத்து  எல்லோரிடமும் காட்டினார். பின்வரிசையில் இருந்தவர்கள் பார்ப்பதற்காக நெருக்கித்தள்ளினர்.   அவருக்கு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருந்தது.  ஆழ்ந்த யோசனையில் அவர் இருந்தார்.  “சின்ன வயசுல  தெரியாம செஞ்ச தப்பால இப்ப அல்லல்படும் இளைஞர்களைப்  பத்தி சொல்லபோறேன் கொஞ்ச நேரம் காது கொடுத்து கேளுங்க. ராத்திரில பொண்டாட்டிய பாத்தவுடன் சினம் கொண்ட நாகம் போல நிக்கும்  ஆண் குறி அடுத்த சில  நொடியில   புஸ்ஸூனு  காத்தெறங்கின பலூன் மாதிரி சிறுத்து  போய்டும்”  என்று  நிறுத்தி  “என்ன நான் சொல்றது நெஜமா இல்லையா” என்று கூட்டத்தைப் பார்த்து  கேட்டார்.  அவர் அப்படி கேட்டதும் சிலர் தலையை தாழ்த்திக்கொண்டனர்.  தன்னையே எல்லோரும் பார்ப்பதாக அங்கமுத்துவிற்கு தோன்றியது. மேலும் சிலர் பின்பக்கமாக நடந்து கூட்டத்தில் இருந்து நழுவிச் சென்றனர்.  எஞ்சியிருந்த கூட்டம் அமைதியாக இருந்தது.

   “உங்களுக்கு சொல்ல சங்கடமா இருக்கலாம்  ஆனா நெறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு” என்று சொல்லிகொண்டே ஒரு சூட்கேசை திறந்து பச்சை நிற ஃபைலை எடுத்து விரித்தார்.  அதில் ஒரு பக்கத்தை பிரித்து ஒரு புகைப்படத்தை  எடுத்து  கூட்டத்திடம் காட்டினார். கூட்டத்தில் இருந்தவர்கள் புகைப்படத்தைப் பார்க்க முண்டியடித்தனர். மீசைக்காரர் சப்தமாக பேசத் தொடங்கினார்.  “இவர் அம்பா சமுத்திரத்தில் பெரிய டாக்டர். இவருக்கும் இதே பிரச்சனை. பார்க்காத வைத்தியம் இல்லை. கடைசியாதான் நம்ப கிட்ட வந்தார். ஒரே மண்டலம் தான் மருந்து சாப்டார். அப்புறம்  அவருடையது கெஜகோல் மாதிரி நின்னுச்சி”  என்று பேசினார். வார்த்தைகள் அவர் வாயில் இருந்து சரளமாக வந்து கொண்டே இருந்தன.  அங்கமுத்துவிற்கு உள்ளுக்குள் நடுக்கமாக  இருந்தது. உற்று அந்த ஃபைலில்  இருந்த புகைப்படத்தையும் அதன் கீழ் அச்சாகியிருந்த விவரங்களையும் படிக்க முயற்சித்தார். குறைந்த வெளிச்சத்தில் அவை மங்கலாக தெரிந்தன.  மீசைக்காரர் வேறொரு  கண்ணாடி பாத்திரத்தில் இருந்த மூலிகையை  எடுத்துக்காட்டி  “இத ஒரு வேளை;  ஒரே வேளை சாப்டு பாருங்க .  உங்களதும் இரும்பு ராடு கணக்கா நிக்கும்” என்று  முஷ்டியை மடக்கி காண்பித்தார். முருகானந்தத்திற்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார். இவருக்கு அந்த மருந்தை சாப்பிட்டு பார்க்கவேண்டும் போல இருந்தது. “நீங்க வெளிய இதே மருந்த வாங்க  பல ஆயிரங்கள்  கொடுக்க வேண்டியிருக்கலாம். ஆனா நாங்க  வெறும் சில நூறு  ரூபாய்க்கே தறோம் வேணுங்கிறவங்க வந்து வாங்கிக்கலாம்” என்று கோர்வையாக பேசிக்கொண்டிருந்தார். பலர் முண்டியடித்துக் கொண்டு வாங்க  அவசரம் காட்டினர். முருகானந்தம்  மீசைக்காரர் அருகில்  சென்றார். குனிந்து காதில்  சொன்னார்.   “அவர் என்  நண்பர். ஏற்கனவே  இரண்டு பெண்குழந்தை இருக்கு.  ஆண் குழந்தை வேணும்னு  நினைக்கிறார். நான் தான்  இங்க கூட்டியாந்தேன்”  என்று கூறினார். அவர் மீசையைத் தடவி விட்டுக்கொண்டார். ஆழ்ந்து யோசித்தார்.   “கொஞ்ச நேரம் இருங்க சார் ஒரு மருந்து ரெடி பண்ணி தறேன்  சாப்டு பாக்கட்டும்” என்று சொல்லிவிட்டு  ஒரு சிறிய சில்வர் பாத்திரத்தை எடுத்தார். அதில் பனை வெள்ளத்தை தூளாக்கி  போட்டார்.   தனக்கெதிரே இருந்த கண்ணாடி பாத்திரத்தில் இருந்து சில மூலிகைப் பொடிகளை  எடுத்து அதில் கொட்டினார். கொஞ்சம் மயிலிறகை எடுத்து தீயில் காட்டினார். நெருப்பில் பொசுங்கும் நாற்றம் எங்கும் பரவியது. இவர் மூக்கைப் பொத்திக்கொண்டார்.  பின் அதன் சாம்பலை சில்வர் பாத்திரத்தில் தட்டிவிட்டார்.  அருகில் இருந்த ஒரு கண்ணாடி சீசாவை எடுத்தார். அதில் முக்கால் அளவிற்கு தேன் இருப்பதை பார்க்க முடிந்தது. மூடியைத் திறந்துகொண்டே இவரை அழைத்தார்.  “உங்க நாக்க நீட்டுங்க சார்” என்று சொல்லி இரண்டு சொட்டு மலைத்தேனை நாவில் விட்டார்.  “எப்படி இருக்குனு சுவைச்சி பார்த்து சொல்லுங்க” என்றார். அவர் நன்றாக சுவைத்து சாப்பிட்டார்.   “இனிக்குது” என்றார்.  “நல்லா இனிக்குதா இல்ல லேசா இனிக்குதா” என்று அடுத்த கேள்வியை போட்டார். அவர் அப்படி கேட்டதும் இவருக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. நன்றாக யோசித்து பார்த்துவிட்டு  “லேசாதான் இனிக்குது” என்றார்.மீசைக்காரர் விடுவதாக இல்லை.  “இனிப்புகூடவே லைட்டா தொவுக்கரமாதிரி இருந்துச்சா?” என்று கேட்டார். இவர்  “ஆமாம்” என்பது போல தலையாட்டினார். மீண்டும் அவர் கேட்டார்.  “சிறுங்கசப்பா இருந்துச்சா”.  “இது என்னடா ரோதனையா போச்சி” என்று தனக்குள்ளாக புலம்பிக்கொண்டே நாவில் எஞ்சியிருந்த சுவையை மீண்டும் உருக்கூட்டினார். சிறுங்கசப்பாக இருந்ததுபோல தோன்றியது.  “சிறுங்கசப்பாக இருந்தது” என்று இவர் சொன்னவுடன் மீசைக்காரர் குலுங்கி குலுங்கி சிரித்தார். அவர் சிரிப்பதைப் பார்த்து அவரது உதவியாளர்களும் சிரித்தனர். முருகானந்தத்திற்கும் சிரிப்பு வந்தது. ஆனால் கட்டுப் படுத்திக் கொண்டார்.  எல்லோரும் சிரிப்பதைக் கண்டு இவருக்கு ஒருமாதிரியாக இருந்தது.  “ஏன் சிரிக்கிறீங்க” என்று புரியாமல் கேட்டார். அவர் சிரித்துக்கொண்டே  “தேன் எங்கயாவது கசக்குமா சார்?” என்று அவர் திருப்பிக்கேட்டார். அவர் அப்படி கேட்டதும் அங்கமுத்துவிற்கு சுருக்கென்று தைத்தது.  சிலநொடிகளில் தன்னை நொருங்கச் செய்த மீசைக்காரரை ஒருவித கோபத்தோடு பார்த்தார். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  அங்கமுத்து சங்கடப்படுவதை உணர்ந்த முருகானந்தம்  “நேரம் ஆவுது கொஞ்சம் சுருக்கா முடிங்க” என்று அவசரப் படுத்தினார்.  முருகானந்தம் அப்படி சொன்னதும் மீசைக்காரர்    தேனை அப்பாத்திரத்தில் ஊற்றினார்.  பேசிக்கொண்டே கையால்  அழுத்தமாக  அவற்றை ஒன்றுகூட்டி பிசைந்தார். அவை பாகு பதத்திற்கு வந்தபோது  வேறொரு சீசாவில் இருந்து  மூலிகை பொடியை இரண்டு சிட்டிகை அளவிற்கு சேர்த்தார்.  பாகுபோல இருந்த  அவை இறுகி லேகியமாக திரண்டு வந்தது. சிறிதளவு எடுத்து வாயில் போட்டு  சுவைத்துப்  பார்த்தார். பின் நெல்லிக்காய் அளவிற்கு சிறு சிறு  உருண்டைகளாக உருட்டி  ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு அவரிடம் கொடுத்தார்.  அங்கமுத்துவை அருகில் அழைத்து   “மாத விலக்கான ஆறாவது நாளில் இருந்து ஒரு மண்டலம் உள்ளுக்கு சாப்பிடச் சொல்லுங்க. ஒற்றைப்படை நாட்கள்ல மட்டும் கூடுங்க” என்று சொன்னார். முருகானந்தம் அவரிடம்  “எவ்ளோ?” என்று கேட்டார்.விரல்களை உயர்த்தி ஐநூறு என்று கூறினார். அங்கமுத்து  நானூறு ரூபாயை எடுத்து முருகானந்தத்திடம் கொடுத்தார்.  அவர் பணத்தை  வாங்கி எண்ணிப்பார்த்தார்.  “ ஃபைனான்ஸ்கார்ரா இருந்துகினு நூறை புடிச்சிகினு கொடுக்கறீயே சார்” என்றார்.  “இருக்கட்டம். அடுத்த மொற வரப்ப  பாத்துக்கலாம்” என்று சொன்னார். அவர் சரி  சார் என்று தலை ஆட்டினார்.  லேகியம் இருந்த கண்ணாடி சீசாவை எடுத்துக் கொண்டு நடக்கத்தொடங்கினர்.

மருத்துவர் மென்மையாக கனைத்துக் கொண்டபோது அங்கமுத்து பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தார்.
பெண்குழந்தையை கருவிலேயே  கலைப்பது மிகவும் சுலபமான வேலை என பேசித் திரிபவர்கள் மேல் அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இரண்டாவது  பெண் குழந்தையை  கலைக்க பெரும்பாடு படவேண்டியிருந்தது. இரண்டாவது முறை  கருத்தரித்தபோது கைகளை பிசைந்து கொண்டு நின்றார்.  சிவபாலன்தான்  இந்த மருத்துவமனையை சிபாரிசு செய்தார்.    என்ன குழந்தை என்று தெரிந்துவிட்டது. அடுத்து எப்படி கலைப்பது என்ற கேள்வி விஸ்வரூபம் கொண்டு நின்றது. “நீங்களே எதாவது பண்ணிடுங்க டாக்டர்” என்று கெஞ்சும் தொனியில் கேட்டார். அதற்கு அவர், “ என்ன வெளையாடுறீங்களா; நாலு மாச குழந்தையை கலைப்பது ஆபத்தானது. என்னால முடியாது” என்று திட்டவட்டமாக கூறினாள். தலைக்கு மேலாக சுழன்று கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தார். மனதில் கலவரம் பரவத்தொடங்கியது.  இந்தக் கருவை கலைப்பதற்கு இன்னும் என்னென்ன சிரமங்களை சந்திக்க வேண்டுமோ என்று அவர் மனம் தொடர்ந்து அசை போட்டுக்கொண்டே இருந்தது. வெறையூர் மருத்துவச்சியிடம் அழைத்துச் சென்றால் என்ன என்று அவருக்கு தோன்றியது. வீட்டிற்கு வரும் வரை அவர் அது தொடர்பாகவே யோசித்துக்கொண்டிருந்தார்.

அதே வாரத்தில் அமாவாசை கழித்து வந்த ஞாயிறன்று  தன் மனைவியை  அழைத்துக் கொண்டு வெறையூருக்கு சென்றார். சாதாரணமாகவே அங்கமுத்து  ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது வழக்கம். அதுவும் இதுபோன்ற விஷயங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய ஒருபோதும் விரும்பியதில்லை. நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்துப்பார்த்தார். செட்டியார் வீட்டு செல்வமும்  ஆறுதலாக பேசியது அங்கமுத்துவிற்கு தெம்பாக இருந்தது. “வெறையூருக்கு கூட்டிட்டு போ. வேலை கச்சிதமா முடிஞ்சிடும்” என்று சொன்னார்.    மருத்துவச்சி வீட்டை அடைந்தபோது  திண்ணையில் ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தனர்.  அங்கிருந்தவர்கள் அங்கமுத்துவையும்  அவர் மனைவியையும் உற்றுப் பார்த்தனர். அவர்களின் பார்வை இவருக்கு அருவருப்பாக இருந்தது. நத்தையைபோல காலம்  மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.  இவர்கள் முறை வந்ததும் எழுந்து உள்ளே சென்றார். மருத்துவச்சி எதிரில் உட்காருமாறு சைகை செய்தாள். இருவரும் எதிரில் அமர்ந்தனர்.  “எத்தனை மாசம் ஆவுது?” என்று ஜானகியிடம்  கேட்டாள். அங்கமுத்து விரல்களை உயர்த்தி நான்கு என்று காட்டினார்.   “நாளு மாசம் ஆயிட்டுதா ” என்று இழுத்தாள். அங்கமுத்துவிற்கு அடிமனதில்  திக்கென்று இருந்தது. சரி பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு தன் உதவியாளரிடம்  திரும்பி,  “எவ்ளோ ஆவும்னு சொல்லிட்டியா”  என்று  கேட்டாள். அந்தப் பணிப்பெண் சரி என்பது போல தலை ஆட்டினாள்.  சிறிய சில்வர் பாத்திரத்தில்  மூன்று விரல் கணத்தில் ரகம் வாரியாக எருக்கம் கழிகள் சீவி அடுக்கப்பட்டிருந்தன. உலர்ந்து போகாதபடிக்கு வெள்ளை ஈரத்துணியால் போர்த்தப்பட்டிருந்தது. மற்றொரு சிறிய பாத்திரத்தில்   இருந்த எருக்கம் பால்  தோய்ந்து போயிருந்தது.  இவர் அதை உற்றுப்பார்த்தார். எருக்கம் கட்டைகளின் மீது  பால் துளிர்த்து உலர்ந்து போயிருந்தது. அதிலிருந்து ஒன்றை எடுத்து  உருட்டிப் பார்த்தார்.

மறைப்பிற்கு பின்புறம் போடப்பட்டிருந்த விசுப்பலகையில் சென்று அவளை படுத்துக்கொள்ளச் சொன்னாள். அவளைத் தொடர்ந்து  மருத்துவச்சியும் சென்றாள். விசுப்பலகையின் மீது மல்லாந்து படுத்தாள். ஜானகியின் ஆடைகளை சுருட்டி  தொடைகளுக்கு மேலாக மடித்துவிட்டாள்.இரண்டு கைகளாலும் வயிற்றை தடவிப்பார்த்து சோதித்தாள்.பின் எருக்கங்கட்டையை உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து  மேலே தூக்கி கிழக்கு திசை நோக்கி கும்பிட்டாள். ஜானகி மேற்கூரையை  வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு  மருத்துவச்சி அக்கட்டையை ஜானகியுடைய பிறப்புறுப்பில் செருகத்தொடங்கினாள். வலி பொறுக்க முடியாமல்   “அம்மா வலி உசுர போகுதே” என்று கத்தினாள்.ஜானகியின்  கதறலை  காதில் வாங்கிகொள்ளாமல்   மெதுவாக உள்ளே செலுத்திக்கொண்டிருந்தாள்.  எருக்கம்பால் உள்ளுருப்புகளில் பட்டு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.அவள் தொடைகள்  நடுங்க ஆரம்பித்தன. பிறப்புறுப்புக்குள் நெருப்பை வாரிக் கொட்டியதைப்போல துடித்தாள் .”செத்த பொருத்துக்க  தாயி;  முடிஞ்சிடுச்சி”  என்று கூறிக்கொண்டே அக்கட்டையை முழுவதுமாக செருகி முடித்தாள். இடுப்பு மடிப்பில் முடிந்து வைத்திருந்த  விபூதியை எடுத்து மந்தரித்து ஜானகியின்  நெற்றியில் பூசினாள்.  “மெதுவா எழுந்து நில்லுமா” என்று சொன்னாள். ஜானகிக்கு  உடல் முழுக்க உஷ்ணம் அதிகரிக்கத் தொடங்கியது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. அரை மயக்க நிலையில் தள்ளாடியபடியே  வெளித்திண்னைக்கு வந்தாள். கைத்தாங்கலாக அவளை பிடித்து உட்கார வைத்தார். கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு அப்படியே தூணில் சாய்ந்து கண்களை  மூடிக்கொண்டாள். உள்ளே அலறல் சப்தம் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது. நேரம் கடந்து கொண்டிருந்தது.  அவளுக்கு வயிறை பிசைவது போல இருந்தது. சிறிது நேரத்திற்குள் துணி பிழிவதுபோல  வயிற்றை முறுக்க ஆரம்பித்தது.  வலியால் மறுபடியும் முனகினாள். பற்களைக் கடித்து மூச்சை இழுத்து விட்டாள். வயிற்றினுள் பெரிய நெருப்புகோளம் ஒன்று திரண்டு கீழ் நோக்கி சரிந்து  கொண்டிருந்தது.அவள் வயிறை  தடவிக்கொண்டே வலியால் துடித்தாள். திரண்டுவந்த அக்கோளம்  உடைந்து வெளியேறிய போது அவள் அம்மா என்று வீரிட்டு கத்தினாள். தொடைகளில் உதிரம் வழிந்து நசநசத்தது.கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது. உடம்பை இப்படியும் அப்படியுமாக அசைத்தாள். உதிரப்போக்கு தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது. வீட்டில் இருந்து கொண்டுவந்திருந்த பழைய துணிகளை அதன்மீது போட்டார். திட்டு திட்டாக உதிரம் திரிந்து உறையத் தொடங்கியது. அவள் அப்படியே திண்ணையின் சுவரில் சாய்ந்தாள். பிறப்புறுப்பில் செருகப்பட்ட கட்டை வழுக்கி கீழே விழுந்தது.  துணியை எடுத்து அவளுடைய உடம்பை துடைத்துவிட்டார். கவிச்சை நெடி அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.  “ மூலக் கடைக்கி போயி பாலும் பன்னும் வாங்கியாந்து குடுபா” என்று மருத்துவச்சி அவரிடம் சொன்னாள். அவர்  சிறிய சொம்பை எடுத்துக்கொண்டு  நடக்கத் தொடங்கினார். ரத்தம் தோய்ந்திருந்த  இடத்தில் ஈக்கள் மொய்க்கத் தொடங்கின.


 இதன் பிறகு ஆண்குழந்தைகள் மட்டுமே கருத்தரிக்கச் செய்ய  வேண்டும் என்பதற்காக அவர் பல்வேறு மருத்துவர்களைச் சென்று சந்தித்தார். பயன் ஏதும் இல்லாமல்  அச்சந்திப்புகள் முடிந்தன. சித்தா யுனானி ஆயுர்வேதம் என மருத்துவ முறைகளை மாற்றிப் பார்த்தார்.  அவற்றிலும் திருப்திகரமாக அவர் உணரவில்லை. கரு உருவான பிறகே கண்டு சொல்லும் தொழில்நுட்பத்தின் மீது அவருக்கு எரிச்சலாக வந்தது.அவருடைய கனவெல்லாம் கரு உருவாகும் போதே அது ஆணின் கருவாக உருவாகவேண்டும் என்பதாக இருந்தது. தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தும் கூட அவர் மனம் சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டார்.
 ஒரு கட்டத்திற்குமேல் தன் சொந்த  அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படத் தொடங்கினார். ஒவ்வொரு முறையும்  சூத்திரத்தின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. அக்காலக் கட்டத்தில் அவர் பல்வேறு இடர்களைக் கடக்கவேண்டியிருந்தது. தன் வாழ்க்கையை பணயம் வைத்து புது புது சூத்திரங்களை  உருவாக்கிக் கொண்டே இருந்தார்.நூறு சதவீதம் பொருத்தமான சூத்திரத்தை நோக்கி அவர் கவனம் குவிந்திருந்தது.
பெண் குழந்தைகள் இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அவருக்கு மேலும் எரிச்சலையே ஏற்படுத்தின. “மூதேவிங்க எனக்குனு  வந்து வாச்சிருக்கு பாரு” என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டார்.  அக்குழந்தைகளின் ஒரு அங்குல வளர்ச்சிகூட அவருக்கு ஆண் குழந்தையின் தீவிரத்தைக் கூட்டிக்கொண்டே இருந்தது.

கார்த்திகை முடிந்து மார்கழி தொடங்கியிருந்தது. பனி விலகாத ஒரு விடியலில் சூத்திரம் பூர்த்தியானதை அவரால் உணர முடிந்தது.கலவியை முடித்துக் கொண்டு அவர் புரண்டு படுத்தார். எழுந்து குளித்துவிட்டு சூரியோதையத் திசை நோக்கி விழுந்து வணங்கினார். பின் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சூத்திரத்திற்கு உயிரூட்டத் தொடங்கினார். சூத்திரம் மெல்ல விரிவு கொண்டபடி இருந்தது. 
 கோடை வெயில் அனல்போல தகித்த ஒருநாள் அவர் சூத்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். எந்தெந்த நாட்களில்; எந்தெந்த நேரத்தில்  கூட வேண்டும்; எந்த திசை நோக்கி படுக்க வேண்டும்; ஆகிய மூன்று காரணிகள் தான்  கரு, ஆணா பெண்ணா  என்பதை தீர்மானிக்கின்றன எனும் முடிவிற்கு வந்தார். அக்காரணிகளை உள்ளடக்கிய சூத்திரத்தை இறுதி செய்தபோது அவர் மனம் சந்தோஷத்தில் திளைத்தது. இனி கரு உருவாகும் போதே அது ஆண் குழந்தையின் கருவாக இருக்கும் என்று வெளியுலகிற்கு அறிவித்தார். புதிய சூத்திரத்தின் மூலம் தன்  மனைவியின் கருப்பையில் ஆண்குழந்தைக்கான ஒரு கருவை விதைத்து  நவீன மருத்துவத்திற்கு நேரடியாகவே சவால் விட்டார்.


  “ஆம்பள கொழந்தைதான் பொறக்கும்னு சொல்லி எங்கிட்ட பணம் வாங்கி ஏமாத்திட்டான் தேவிடியா பையன்” என்று குடித்துவிட்டு அங்கமுத்து வீட்டிற்கு  முன்பாக வந்து ம.க.போ.க கட்சியின் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கத்திவிட்டு சென்ற மறுநாள் மருத்துவ துறையில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக கடந்த ஆண்டுக்கான டாக்டர்.எஸ்.பி.ஜோஷி விருதுக்கு திருவாளர் அங்கமுத்து அவர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட செய்தி அனைத்து தினசரிகளிலும் வெளியாகியிருந்தது.















 

அதிதி

இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம் அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின் விசிறி மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. காற்றின் போக்கிற்கேற்ப  சுவரில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியின் தாட்கள் அசைந்து கொண்டிருந்தன. அதிதி மட்டும் உறக்கம் வராமல் நெளிந்து கொண்டிருந்தாள்.  போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை போர்வைக்குள்ளிருந்து கவனித்தாள். உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது நீல வண்ணம் கவிந்து  ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.  அவ் வெளிச்சம் அவளுக்கு தந்தையின் நினைவை தூண்டியது. அதை தொடர்ந்து அவரின் குறட்டை சப்தத்தின் ஊடாக அவள் எண்ணம் பயணப்பட்டது.  அவரை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஆத்திரம் பொங்கி வன்மமாக கிளைக்கத் தொடங்கியது.  அக்காவை மட்டும் ஏன் அவருக்கு பிடித்துப்போகிறது என்று யோசித்துப் பார்த்தாள். எதுவும் பிடிபடவில்லை. ஆழ்ந்து மூச்சை இழுத்து மெதுவாக வெளியிட்டாள். இந்த மூச்சு பயிற்சிகூட அவர் கற்றுக்கொடுத்ததுதான். மனதை ஒருமுகப்படுத்தி  சுவாசத்தில் சிந்தனையை குவித்தாள். அது நிலை கொள்ளாமல் அடிபட்ட நாகம்போல சீறிக்கொண்டிருந்தது. அவள் அடிமனதில் தேங்கியிருந்த அப்பாவின் சித்திரங்கள் ஒவ்வொன்றாக மேலெழும்பத் தொடங்கின.

                பனிக்காலம் தொடங்கிய ஒருநாள் அப்பா தல்லாகுளம் சந்தையில் இருந்து மூன்று முயல்கள் வாங்கி வந்திருந்தார். சனி ஞாயிறு வந்துவிட்டால் போதும். சுற்று வட்டாரத்தில் எங்கு சந்தை நடக்கிறது; அங்கு என்னென்ன கிடைக்குமென்பதெல்லாம் அவருக்கு அத்துபடி. கின்னி கோழி பிரியர். அவர் கை பக்குவத்தில் செய்து தரும் மாமிசத்தின் ருசி அலாதியானது. அன்று கோழி வகையினங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியில்லை. முயல் தேரும்போல தோன்றியது. வாங்கிவிட்டார். உடன் சென்ற ஆறுமுகம் ஆசிரியருக்கும் துருவத்தார் வீட்டு ராஜா அண்ணனுக்கும் வரும் போது வேட்டவலத்தில் காடை வாங்கித் தந்தார். முயல் ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் இருந்தன. புசுபுசுவென்று இருந்தது வெள்ளை முயல்; சாம்பல் நிற முயல் பருத்திருந்தது. சற்று நோஞ்சானாக இருந்தது கறுப்பு. முயல் வேண்டும் என்று முதலில் கேட்டவள் அதிதி தான்.  “இன்னைக்காவது ஏமாத்தாம வாங்கியாந்திட்டயே தேங்ஸ் டாட்” என்றாள். அவர் அமைதியாக இருந்தார். வீட்டுபாடம் எழுதிக்கொண்டிருந்த அக்கா ஓடிவந்து,  “எனக்கு வெள்ளை கலர் முயல்” என்றாள். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே சரி என்பதுபோல தலையாட்டினார். தன் அக்காவை  ஏற இறங்க பார்த்தாள் அதிதி.  சமயலறையில் இருந்துகொண்டே  அம்மா  “எனக்கு என்றாள்?”.  “அம்மா நீ  சாம்பல் கலர் எடுத்துக்கோ” என்றாள் துடுக்காக.  “அப்ப அதிதிக்கு கறுப்பு தான்” என்றார் அதுவரை அமைதியாக இருந்த அவர். தன் விருப்பத்தைக் கேட்காமல்  அவர்களாகவே பிரித்துக் கொண்டது இவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.  “எனக்கு முயலும் வேணாம் ஒரு மயிரும் வேணாம்” என்றாள் ஆத்திரம் பொங்க. ”இப்படி பேசக்கூடாதுனு எத்தன தடவை சொல்றது?” என்று அம்மா கத்தினாள். அவள் குரல்  இவளை  ஒடுங்கச் செய்தது. எதுவும் பேசாமல் படுக்கை அறைக்கு சென்றாள். தலையணையில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள். தன்னை கலக்காமல்   மூவரும் முடிவெடுத்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள். கண்களில் நீர் பெருகி தலையணை நனைந்தது. ஆத்திரம் பெரு நெருப்பைப்போல அவள் மனதில் கனன்று கொண்டிருந்தது.

                சுவர்க்கடிகாரம் பதினோறு முறை மெல்லிய ஒலி எழுப்பி அடங்கியது. அப்பா வாங்கி வந்த வெளிநாட்டுக் கடிகாரம். வெளிநாட்டு பொருள் என்றால் கூடுதலாகக் கொடுத்துகூட வாங்கும் ரகம் அவர். அம்மாவும் திட்டிப் பார்த்து ஓய்ந்துவிட்டாள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தியதே இல்லை. கடிகாரச் சத்தம் அறையில் எதிரொலித்தபடியே இருந்தது. அதன் ஒலி இப்போதெல்லாம்  அவளுக்கு நாராசமாய் கேட்டது. போர்வையை விலக்கி பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தாள். அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்தாள். மீண்டும் போர்வையை முகம் வரை இழுத்துவிட்டுக் கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். நீல நிற வெளிச்சம் அவளை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. புரண்டு படுத்தாள் உறக்கம் பிடிக்காமல். பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தது அவள் மனம்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மீன்கார பெண் தெருவில் இருந்தபடியே சப்தம் போட்டு கூப்பிட்டாள்.  “வாத்தியார் வீட்டம்மா மீன் வாங்கலையா?”. உள்ளே இருந்தபடியே வேண்டாம் என்பதுபோல அம்மா கையசைத்தாள்.  “நீங்க அப்படிதான் சொல்வீங்க. பாள்தார் பேத்திய கூப்பிடுங்க” என்று அவள் மீண்டும் சத்தம்போட்டு  அழைத்தாள். கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்த அதிதி நிமிர்ந்து மீன்காரியைப் பார்த்தாள். திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.  “என்னடி அப்படி பாக்கற?” என்று கேட்டாள்.  “உன் அக்காவதான் அப்பிடி சொல்றாங்க” என்று சொல்லிவிட்டு வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள். முயல்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த அப்பாவிடம் சென்றாள். சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவர் காதுகள் முயலின் காதுகளை ஒத்திருந்தன. ஒருநொடிப் பொழுதில் தன் தந்தையை முயலாக  கற்பனை செய்து பார்த்தாள். காதுகளைப் பிடித்து தூக்கி இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். அதை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.  பின் மெதுவாக,  “அக்காவ ஏன் பாள்தார் பேத்தினு சொல்றாங்க?” என்று கேட்டாள்.  “நம்ம வீட்டுக்கு பாளையத்தார் வீடுனு பேரு. அதால அப்படி கூப்பிடறாங்க” என்று தன் வேலையை செய்து கொண்டே அவர் கூறினார்.  “என்னையும் அப்படிதான் கூப்பிடுவாங்களா?” என்று சட்டென்று கேட்டாள். இல்லை என்பது போல அவர் தலையாட்டினார்.
 “ஏன்?”
 “நீதான் இங்க பொறக்கலையே”
 “அப்புறம் எங்க பொறந்தேன்?” அவள் குரல் கம்மியிருந்தது.
 “உன்னை தல்லாகுளம் சந்தையில தவிட்டுக்கு இல்ல வாங்கியாந்தேன்”.
அதைக் கேட்ட அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. “என்னது தவிட்டுக்கா?” என்று புரியாமல் கேட்டாள். ஆமாம் என்பதுபோல தலையாட்டி  “நெல்குத்தி கெடச்ச கருக்கா தவுட்டை அப்படியே ஆவூர் சந்தையில வித்து உன்ன வாங்கியாந்தேன்.சும்மா இல்ல.”
அவரை ஊடுருவிப்பார்த்தாள். அவருடைய வார்த்தைகள் முள்ளாகி அவளை தைத்தன. கண்கள் நீர் கோர்த்துக்கொள்ளத் தொடங்கின. எந்த நேரமும் வெடித்து அழுதுவிடுவாள் போல இருந்தது.  “உண்மைதானா?” என்று கேட்டாள். அவர் மையமாக தலையாட்டினார்.
அதன் பின் வேறெதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் போல இருந்தது அவளுக்கு. சட்டென்று புறப்பட்டு சென்றாள். அவளுக்கு மனம் சங்கடமாக இருந்தது. வழக்கமாக தெருவே கதியென்று கிடப்பவள் மாடிப்படியில் அமர்ந்து எதிர்வீட்டு முருங்கை மரத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
                மதியம் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாள். வேண்டாம் என்று மறுத்து விட்டாள். வழக்கமான பதில்தான் என்று நினைத்துக் கொண்டாள். தவிட்டிற்கா வாங்கி வந்தீர்கள் என்று அவளிடம் கேட்கலாமா என்று நினைத்தாள். அப்பா கூறியதையே அவளும் ஆமோதித்தால் என்ன செய்வது  என்று யோசித்தாள்.  உடம்பு  சிலிர்த்துக் கொண்டது. மனம் நடுங்குவதை முதன் முதலாக அப்போதுதான்  இவள் உணர்ந்தாள். வீடு அன்னியமாக தோன்றியது. இவ்வளவு நேரம் கடந்தும்கூட தன்னை யாரும் வந்து சமாதானம் செய்யவில்லை; இதுவே அக்காவாக இருந்தால் அப்பா இப்படி இருப்பாரா? எனும்  சிந்தனை மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அது இவளுக்கு மேலும் வலியை தந்தது. பெரியவள் எதிர்வீட்டு பையன்களோடு கூட்டாஞ்சோறு செய்து கொண்டிருந்தாள். உண்மையில் தன்னை தவிட்டுக்கு தான் வாங்கிவந்தாரோ; அதனால் தான் இப்படி நடத்துகிறார்களா என்றும் யோசித்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தனர். ஒருவரும் தன்னை பொருட்படுத்தாமல் இயங்கிக் கொண்டிருந்தது  இவளுக்கு மேலும் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்தது.  அம்மாவும் இப்படி நடந்து கொள்வாள் என்று இவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தெருவில் விளையாடி விட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்கு ஓடிவந்த பெரியவள், “ அதிதி விளையாட வரல?” என்று கேட்டாள். இவள் அமைதியாக  எதிர் வீட்டு சுவரையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். ஒரு அணில் மதில் சுவரில் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தது.
                சாதாரணமாக இரவு பத்து பத்தரை ஆகிவிடும் இவள் படுப்பதற்கு. சுட்டி டிவி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். தூங்கிவிட்டாள் என்று நினைத்து அனைத்துவிடமுடியாது. அவ்வளவுதான். அழுகை பீரிட்டெழும். தூங்குவதற்கு முன்பு கண்டிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை அவசியம். அதன் பின் தான் தூங்க முயற்சி நடக்கும். ஆனால் அன்று எட்டு மணிக்கே படுக்கைக்கு சென்று விட்டாள். சாப்பிட தேடும் போது தான் இவள் படுத்துவிட்டது அம்மாவிற்கு தெரியவந்தது. ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்று புரிந்து போனது. அருகில் சென்று சீண்டி எழுப்பினாள். அவள் புரண்டு படுத்தாள்.  “ராத்திரில வெறும் வயித்தோட படுக்க கூடாது மா. எழுந்திரிச்சி சாப்ட்டு படுமா” என்று அவளை சாந்தப்படுத்திப் பார்த்தாள்.  “எனக்கு பசிக்கல” என்று சுருக்கமாக பதில் வந்தது.  “வாடி மா அம்மு இல்ல” என்று அவளை அப்படியே துாக்கினாள். அவள் மேலும் வீம்போடு அப்படியே சரிந்தாள்.  “என்னதான் மா உன் கோபத்துக்கு காரணம்?” என்றாள்.  “ம்… போயி உன் புருஷனை கேளு” என்றாள் வெடுக்கென்று.  “அவுரு ஒரு கூறு கெட்ட மனுஷன். நீ சொல்லுடி செல்லம்” என்று வார்த்தையில் தேனைக் குழைத்தாள்.  “என்னை தான் தவுட்டுக்கு வாங்கியாந்தீங்களாமே அப்புறம் எதுக்கு சாப்பிட கூப்பிடறீங்க?” என்று பொறிந்தாள். அவள் கோபத்திற்கான காரணம் புரிந்து போனது.  “அவுருக்கு புத்தி கெட்டு போச்சிமா… அதான் இப்படி பேசறாரு” என்று பதில் சொன்னாள். அவளைத் துாக்கிக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். சாப்பிடவைக்கத்தான்  ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது.
                இரவு படுக்கை விரிப்புகளை போட்டவாறே,  “ஏங்க அவள சும்மா சும்மா சீண்டிகினே இருக்கீங்க?” என்று அம்மா கேட்டாள். அவர் மென்மையாக சிரித்தார்.  “பாப்பா பேச்சு பழம் விடுங்க” என்று அவரிடம் சிணுங்கினாள்.  “அதிதி”  என்று அவர் அழைத்தார். கண்களை மூடி அமைதியாக படுத்திருந்தாள். தன்னை அவர் அவ்வாறு அழைப்பதை இவள் விரும்பவில்லை. தன் பெயரின் மென்மையை அந்த குரல் சிதைப்பதாக உணர்ந்தாள். ஒரு பவுர்ணமி நாளில், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றபோது தன் பெயர் தொடர்பாக அவருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றது இவள் நினைவிற்கு வந்தது.  “அக்காவுக்கு யார் பேர் வச்சா?” என்று கேட்டாள்.
 “நான் தான்”
”எதுக்கு அந்த பேர் வச்ச?”
 “நித்ய சைதன்ய யதி எனும் ஞானியுடைய பேரு அது. அதால வச்சேன்.”
  “பையன் பொறந்திருந்தா என்ன பேர் வச்சிருப்ப?”
 “நகுலன்”
 “இரண்டு பெயரையும் நீதான் செலக்ட் பண்ணி வச்சிருந்தியா?”
ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டினார். பல்லி தன் தலையை உயர்த்தி தாழ்த்துவதுபோல இருந்தது அவர் அசைவு. திரும்பவும் இவளே பேசினாள்.
 “எனக்கு யாரு வைச்சா?”
 “அவர் சிறிது நேரம் யோசித்து அஜயன் பாலா அங்கிள் வச்சாரு.”
 “அவரு ஏன் வச்சாரு?”
 “நீ பொறந்த அன்னக்கி அவரு இங்க வந்திருந்தாரு. அதால அவர் வச்சார்”
 “உங்களுக்கு வைக்கனம்னு தோனலையா?”.
அதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல்  அமைதியாக இருந்தார்.
 “என் பேருக்கு  என்ன அர்த்தம்?”
 “விருந்தாளி னு அர்த்தம்”
 என்று சொல்லிவிட்டு இவளைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தார். அந்தச் சிரிப்பு இவளை மேலும் எரிச்சலூட்டியது. எல்லாவற்றையும் முடிச்சுப் போட்டு அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தது இவள் மனம். அக்காவிற்கு பெயர் வைக்க தெரிந்த அப்பாவிற்கு தனக்கு ஒரு பெயர் வைக்க முடியாதா என்று மனதிற்குள் ஒவ்வொரு வார்த்தைகளாக உருட்டிக் கொண்டிருந்தாள்.  “தவிட்டுக்கு வாங்கியதால் தான் அதிதினு பேர் வச்சிங்களா?” என்று அவரைப் பார்த்து வெடுக்கென்று கேட்டாள். பதில் சொல்லாமல் சிரித்தார். அதில் ஒளிந்திருந்த கள்ளத்தனம் மேலும் அவளை சிறுத்து போகச் செய்தது.  உண்மையில் தான் ஒரு விருந்தாளி தானோ என்று அவள் தன்னைத் தானே மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொண்டாள்.
அவளுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தபோது அவள் எழுந்து கொண்டாள்.  கழிப்பறைக்குச் சென்று வந்தாள். நீல நிற வெளிச்சம் உறுத்திக்கொண்டே இருந்தது. அதை அணைத்து விட்டு வந்து படுத்தாள். சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிக்க எழுந்தவர் மறுபடியும் விளக்கை எரியச் செய்தார். அந்த செயல் மேலும் அவர் மீதான ஆத்திரத்தை கூட்டியது.  மனம் பிடிபடாமல் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. நினைவுகள் ஒரு இரப்பர் பந்தைபோல மனதை எண்ணிப்பார்த்தாள். நீர்க்குமிழிபோல மேலெழும்பிக் கொண்டிருந்த எண்ணங்களை அமைதிப்படுத்த முயற்சித்துப் பார்த்தாள். ஒரு பயனும் ஏற்படவில்லை. மிகச்சரியாக கடந்த பொங்கல் பண்டிகைக்கு துணிமணிகள் வாங்கச் சென்ற நாளில் வந்து நின்றது நினைவின் குறிமுள்.
                அன்று, காலை உணவை முடித்துக்கொண்டு விழுப்புரம் கிளம்புவதாக திட்டம். மதியம் தலப்பாகட்டு பிரியாணி என்பதும் தீர்மானமாகியிருந்தது. எல்லோரும் கலந்து பேசி எடுக்கப்பட்டதுதான்.  ஆனால் காலை நடைபயிற்சிக்கு சென்ற அவர் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அப்படியே மீன் வாங்க வேட்டவலம் சென்றுவிட்டார். திரும்பி வரும்போது மணி பத்தை தொட்டிருந்தது. கொடுவாவும் சங்கராவும்தான் கிடைத்தன. பையை  சமையல் மேடையில் வைத்துவிட்டு நேரே குளிக்கச் சென்றுவிட்டார். எல்லோரும் குளித்துவிட்டிருப்பார்கள் என்ற எண்ணத்தில் சுடுநீர் கருவியின் பொத்தானை அணைத்துவிட்டு குளித்து முடித்தார். அவர் தலைவாரிக் கொண்டிருக்கையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த  அதிதி வேகமாக வந்து குளியலறைக்குச் சென்றாள். சுடுநீர் குழாயை திறந்தாள். குளிர்ந்த நீர் சீறிப்பாய்ந்து  பாத்திரத்தை நிரப்பியது. அங்கிருந்தே கத்தினாள்.  “அம்மா ஜில் தண்ணியா வருது”. இவள் ஓடிச்சென்று பார்த்தாள். பொத்தான் அணைக்கப்பட்டிருந்தது.  “ஏங்க நீங்களா நிறுத்தினீங்க?” என்று கேட்டாள். அவர் ஆமாம் என்று சொல்லிக்கொண்டே சாப்பிட அமர்ந்தார்.  “நீங்கபாட்டுகினு ஏன் நிறுத்தினீங்க, கேட்டுட்டு செய்யக்கூடாதா?” என்றாள்.  “மணி பத்துக்கு மேல ஆச்சேனு நிறுத்தினேன்” என்றார். அவர்களின் உரையாடலை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தவள் குளிர்ந்த நீரை ஜக்கில் மொண்டு மேலுக்கு ஊற்றிக்கொண்டாள்.  “பச்சத் தண்ணியில குளிக்காதமா. செத்த பொரு. ஸ்டவ்ல வச்சி தறேன்”  என்று அம்மா அவளிடம் கெஞ்சிப் பார்த்தாள். அவள் பேசுவதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தண்ணீரை மொண்டு மேலுக்கு  ஊற்றிக்கொண்டே இருந்தாள். அவள் உடம்பு குளிரில் நடுங்கியது. பற்கள் கிட்டிக் கொண்டன. எதையும் காட்டிக் கொள்ளாமல் குளித்து முடித்து  கூடத்திற்கு வந்து துவட்டத் தொடங்கினாள்.
                உடை மாற்றிக் கொண்டு சமையல்கட்டில் இருந்த அம்மாவிடம் சென்றாள். பாலித்தீன் பையில் இருந்த மீன்களைப் பார்த்தாள். முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது.  “இந்த மீன்தான்  வாங்கியாந்திருக்காரா” என்று அழுத்தமாக கேட்டாள். அம்மா சுதாரித்து பதில் சொல்வதற்குள் “எறா இல்லையாமா?” என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது.  இறால் மீனின்  நிறம் இவளுக்கு மிகவும் பிடிக்கும். குழம்பின் மனத்தை தன் நாசிவழியாக இழுத்து அனுபவித்தாள்.  குழம்பில் சிறியதும் பெரியதுமாக வட்ட வட்டமாக அவை கிடக்கும்.  அவற்றை தட்டின் ஓரத்தில் வரிசைக்கிரமமாக எடுத்து அடுக்கிப் பார்ப்பாள். பின் ஒவ்வொன்றாக எடுத்து  ருசித்து சாப்பிடுவாள்.
 ”என்ன மீனு வாங்கியாந்திருக்காரு உன் புருஷன்?”
அப்பா என்று சொல்லாமல் உன் புருஷன் என்றது அவளுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. வெளிகாட்டிக்கொள்ளாமல்   “கொடுவாவும் சங்கராவும்” என்று சொன்னாள்.
அதற்கு மேல் மீன் சம்பந்தமாக எதுவும் கேட்க வேண்டாம் என்று பட்டது. சலிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.  “அதி இதுக்குலாம் கோவிச்சிக்க கூடாதுமா” என்றால் அவள். இவள் கூடத்திற்கு வந்து தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்தாள்.
 “அடுத்த வாரம் கண்டிப்பா வாங்கியாரச் சொல்றேன்மா வா வந்து இட்லி சாப்பிடு” என்று அவள் திரும்பவும் அழைத்தாள்.
 “எனக்கு பசிக்கல” எனும் வார்த்தைகள் பதிலாக வந்தன. அவர் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை சட்டென்று புரிந்து கொள்ள முடியாது. “நீ பேசாம கம்பியூட்டரையே கட்டிகினு இருந்திருக்கலாம் பா” என்று பெரியவள் அவரைப் பார்த்து கிண்டலாகச் சொன்னாள். “சரியா சொன்னடி” என்றாள் அம்மா.  அவர்  வந்து தன்னை  சமாதானம் செய்யமாட்டாரா  என்று ஒருகணம் நினைத்துப் பார்த்தாள். சிறு சலனமுமின்றி அவர் பணியில் மூழ்கிக் கிடந்தார். தன்னை அனைவரும் அலட்சியம் செய்வதாக நினைத்துக்கொண்டு எழுந்து தெருவுக்கு சென்றாள். பெரியவளின் தொடர்ச்சியான இருமல் சப்தம் அவள் நினைவுகளை துண்டித்தது.  “சைதன்யா எழுந்து தலக்காணிய உயரமா போட்டு படுமா” என்று அம்மா எழுப்பினாள். கடிகாரச் சப்தம் தெளிவாக கேட்டது. தெரு முக்கில் நாய் குரைத்துக்கொண்டு இருந்தது. 

 போர்வையை இழுத்து முழுக்க போர்த்திக் கொண்டாள். அப்படியும் குளிர் அதிகமாக இருந்தது. மின் விசிறியின் வேகத்தை குறைக்கலாமா என்றும் நினைத்தாள்.  “அக்கா செவுத்தோரம் படுத்திருக்கா ஃபேனை நிறுத்தனா அவளை கொசு கடிக்கும். நல்லா போத்திகினு படு” என்று அப்பா எப்போதோ அதட்டியது நினைவிற்கு வந்து தொலைத்தது.  கேட்டு எதுவும் ஆகப்போவதில்லை என்று அமைதியாக இருந்துவிட்டாள். அவரை நினைக்க நினைக்க எரிச்சலாக இருந்தது.  “தூக்கம் வரலனா ஒன்னு ரண்டு மூனு… எண்ணிக்கொண்டே இரு. தூக்கம் தன்னால வந்துடும்” என்பது தூக்கத்திற்கான அம்மாவின் மந்திரம். மனதிற்குள் மெதுவாக எண்ணத் தொடங்கினாள். அப்படியே துங்கியும் போனாள்.

நள்ளிரவு கடந்திருக்கக் கூடும். எங்கும் ஒரே நிசப்தம். நீல நிற வெளிச்சம் மேலும் அறையை அடர்த்தியாக்கிக் கொண்டிருந்தது. போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தாள் அதிதி. தூங்கிக் கொண்டிருந்த மூவரையும் பார்த்தாள். குறட்டை விட்டு துங்கிக் கொண்டிருந்தார் அவர். குறட்டை சத்தம் அவளை பலநாட்கள் தூங்கவிடாமல் இம்சை செய்திருக்கிறது. தன் தலையணையை நகர்த்தி அடியில் ஒலித்து வைத்திருந்த கத்தியையும் தலையணையையும் எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றாள். அவளின் நிழல் எதிரில் இருந்த சுவற்றின் மீது சன்னமாக படிந்திருந்தது. மனதை திடப்படுத்திக் கொண்டு கீழே தோதாக அமர்ந்தாள். தலையணையை எடுத்து அவர் முகத்தின் மேல் வைத்து ஏறி கால்களை இருபக்கமும் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். சுதாரித்து எழுந்திருப்பதற்கு வாய்ப்பே அளிக்காமல்  கத்தியால் தன் வலுகொண்ட மட்டும் அவர் கழுத்தை அறுத்தாள். ஆழமாக கத்தி பாய்ந்திருந்தது. குரல்வளை துண்டிக்கப்பட்ட நிலையில் கூச்சலிட முடியாமல் கால்களால் உதைத்தார். ரத்தம் பீறிட்டு கிளம்பியது. என்ன நடக்கிறது என்று அவர் உணர்வதற்கு முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. ரத்தம் பீறிட்டு சுவற்றில் தெரித்தது. கோடு கோடாக வழிந்து தரை முழுக்கப்பரவியது. அவரின் அசைவுகள் மெல்ல அடங்கிக் கொண்டிருந்தன. தலையணையை அப்புறப் படுத்திவிட்டு பார்த்தாள். அவரின் உஷ்ணம் அதில் பொதிந்திருந்தது. கண்கள் தன்னையே உற்றுப் பார்ப்பது போல இருந்தன அவளுக்கு. நிலைத்த பார்வை நடுக்கத்தை ஏற்படுத்தியது. கோரைப்பாயை தாண்டி ரத்தம் அடர்த்தியாக உறைந்து கிடந்தது. விபரீதம் தெரியாமல் இருவரும்  உறங்கிக் கொண்டிருந்தனர்.  எழுந்து அவள் தன் இடத்திற்கு சென்று படுத்துக்கொண்டாள்.

அக்காவின் சிறுநீர் தொப்பலாக இவளை நனைக்கத் தொடங்கியது. கனவு அறுபட்டு உறக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்தாள். உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. உறங்கிக் கொண்டிருக்கும் அப்பாவை பார்த்தாள். அவளையும் மீறி கேவிக் கேவி அழுதாள். சப்தம் கேட்டு அலறி அடித்து எழுந்த அம்மா,  “அதிதி என்னமா?” என்று கேட்டாள் இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.பயத்தில் நாக்கு குழறியது. வார்த்தைகள் வராமல் அழுதபடியே இருந்தாள். சப்தம் கேட்டு அவரும் எழுந்து கொண்டார். பயத்தினால் முகம் வெளிரிப்போய் இருந்தது. அழுகை நின்ற பாடில்லை.  “கண்ட எடத்துக்கு போவாதனா கேக்கறியா? எதையாவது பாத்து பயந்திருப்ப” என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு பூஜை அறைக்கு சென்றாள். கொஞ்சம் விபூதியை எடுத்து வந்து அவள் நெற்றியில் பூசினாள்.

குடிக்க தண்ணீர் கொடுத்தாள். வாங்கி இரண்டு மிடர் அருந்திவிட்டு நீல நிற விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கனவின் நிகழ்வுகள் திரும்பத் திரும்ப அவள் மனதில் புரண்டுகொண்டே இருந்தன. பயத்தினால் பேச்சே எழவில்லை. அப்பா எழுந்து சென்று சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். மீண்டும் படுத்து குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.  “அம்மா நான் அப்பா கிட்ட போய் படுத்துக்கட்டுமா? என்று கேட்டாள்.  “ஏம்மா? இங்கேயே படு” என்றாள்.

“ பயமா இருக்கு” என்றாள்.
 “சரி போய் படுத்துக்கோ”
எழுந்து சென்று நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அப்பாவின் அருகில் படுத்தாள். அவர் மீது கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டாள். அவரும் அவளை தன்பக்கமாக  இழுத்து குளிருக்கு அடக்கமாக போர்த்தி விட்டார். மறுபடியும் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார். அவரின் கழுத்தை மெதுவாக தடவிப்பார்த்தாள்  சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பின் கண்களை மூடிக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்று மனதிற்குள் எண்ணத் தொடங்கினாள்









Sunday, June 16, 2013

கனவுகளை விற்பனை செய்பவனின் நினைவுக் குறிப்புகள்




ஏன் இந்த வேலையைத் தோ்ந்தெடுத்தோம் என்று முதன்முதலாக நினைக்கவேண்டியிருந்தது சோமுவுக்கு. கனவுகளை உருவாக்கும் திரவத்தை விற்பனை செய்யும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி பணியில் சோ்ந்த ஆறே மாதத்தில் எப்படி தன்னால் உயா் அதிகாரிகளிடத்தில் நல்ல பெயரை தக்க வைத்துகொள்ள முடிந்தது என்று எப்படி யோசித்துப்பார்த்தாலும் அவனுக்கு விளங்கவில்லை. எந்த் சிக்கலும் இல்லாமல் சென்றுகொண்டிருந்த விற்பனை பிரதிநிதி வேலையில் கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த காளிதாஸ் ரூபத்தில் அவனுக்கு பிரச்சனை எழத் தொடங்கியது.

வேலையில் சேர்ந்த புதிதில் நிறுவனத்தின் மீது நம்பிக்கை எழாமலேயே பணி செய்யத் தொடங்கினான். கனவுகளை விற்பனை செய்யக்கூடிய ஒரு நிறுவனம் உலகத்தில் இருக்குமா என்றுகூட தொடக்கத்தில் யோசித்திருக்கிறான். நேர்முகத்தேர்வுக்கு செல்லும் முன்பு அந்நிறுவனத்தின் பின்புலத்தை வலைதளத்தில் தேடி அறிந்தபோது அவனுக்கு தலைசுற்றியது. கனவுகளைத் தோற்றுவிக்கக்கூடிய திரவத்தை வகை வகையாகப் பிரித்து. பட்டியலிட்டு தகுந்த விலை நிர்ணயம் செய்து ஒழுங்கு செய்திருந்ததைக் கண்டு ஆச்சா்யம் கொண்டான். பயனாளிகளிடம் குப்பியில் அடைத்திருக்கும் கனவுகளை உருவாக்கும் வண்ண வண்ண திரவங்களை எப்படி விற்பது; எப்படி அருந்தச் சொல்லி கனவுகளை உருவாக்கிக்காண்பிப்பது என்பனவற்றை விரிவாகப் படித்துப் பார்த்தான். புதிய உலகத்திற்குள் உலவுவதுபோல இருந்த அவனுக்கு இந்த உலகம் இன்னும் என்னவெல்லாம் உற்பத்தி செய்யப்போகிறதோ என்ற ஐயமும் ஏற்பட்டது.




ஒருவன் காணும் கனவை எப்படி இந்த திரவத்தால் தீா்மானிக்க முடிகிறது; இதனுள் என்னவெல்லாம் கலந்திருக்கிறது. கனவுத் தன்மையை இந்த திரவத்திற்குள் யார் யாரெல்லாம் ஏற்றியிருக்கிறார்கள் என்பனவற்றை யோசிக்க யோசிக்க அவனுள் ஆச்சரியத்தின் பிடி இறுகத்தொடங்கியது.
ஆச்சரியமும் மயக்கமும் ஏற்படுத்தக்கூடிய இந்த வேலையில் சோ்வதென்று தீா்மானித்து விண்ணப்பித்தான். பின் எழுத்துத்தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்று நிறுவனத்தின் மூலம் வாரணாசியில் அளிக்கப்படும் பயிற்சிக்கு சென்றான். நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பயிற்சிக்காக வந்திருப்பவர்களிடமிருந்து அவன் ஒதுங்கியே இருந்தான். கனவு என்பது உண்மையில் என்ன; அது எத்தனைவகைகளாக இருக்கிறது; மனிதர்கள் எவ்விதமான கனவுகளைக் காண விரும்புகிறார்கள் என்னும் தலைப்புகளில் காலை பாடவேளைகளில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. மாலை வகுப்புகள் பொதுவாக செய்முறை வகுப்புகளாகவே இருந்தன. பல்வேறு மூலிகைகள் மற்றும் தாவரங்களின் வேர்களில் இருந்து எப்படி கனவுகளை உற்பத்தி செய்யக்கூடிய அத்திரவம் தயார் செய்யப்படுகிறது என்று கற்றுக்கொடுக்கப்பட்டது. பயிற்சியின் ஒவ்வொரு நாளிலும் அவனுக்கு ஆச்சரியத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. பயிற்சி முடித்து ஆறுவார காலம் தொழில் பழகுனர் பயிற்சிக்காக அவன் கோவாவில் அமைந்திருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டான். இறுதியில் அவன் விரும்பியபடி தமிழ்நாட்டிற்கே பணி செய்ய அனுப்பப்பட்டான்.
வானம் மேகமூட்டமாக இருந்த அன்று வியாபார நிமித்தமாக அவன் கண்டாச்சிபுரம் வீரப்பாண்டி சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான். கனவுகளை உருவாக்க கூடிய கண்ணாடி குப்பிகள் அடங்கிய பையை தன் தோள்பட்டையில் மாட்டியிருந்தான். சாலையின் இருபுறத்திலும் காடு அடா்ந்து கிடந்தது. மழைவருவதுபோல இருந்ததால் அவன் காட்டு ஐயனார் கோவில் எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக உட்கார்ந்தான். காலையில் இருந்து சுற்றியும் ஒரு குப்பியைக் கூட விற்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு ஏற்பட்டது. தோளில் மாட்டியிருந்த பையை கழற்றி திறந்து, கண்ணாடி குப்பிகளை எடுத்து முகத்துக்கு நேராக வைத்து பார்த்தான். குப்பிகளுக்குள் கனவின் திரவம் நுரைத்துக் கொண்டிருந்தது. வெளியில் லேசாகத் தூறத் தொடங்கியிருந்தது. இதுநாள் வரை இத்திரவத்தை அருந்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியதில்லை. மழையின் நிமித்தம் அதை அருந்தி கனவு காண வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.எந்த கனவைக் கண்டால் இப்போதைக்கு சந்தோஷமாக இருக்கும் என்றும் யோசித்துப்பார்த்தான். விலைப்பட்டியலை எடுத்துப் படித்துப் பார்த்தான். காதல் எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்த திரவங்களின் குறிப்புகளை வாசித்துப்பார்த்தான். அடர் பச்சை நிறத்தில் இருந்த குப்பியை எடுத்தான். அதன் கூடவே இருந்த கையேட்டையும் எடுத்து படித்துவிட்டு பதினைந்து நிமிடங்கள் வரை கனவை உண்டுபன்னும் அளவிற்கான திரவத்தை மிகுந்த கவனத்துடன் அருந்தினான். தன்னுடன் ஏழாவது வகுப்பில் படித்த பூங்குழலியைப் பற்றிய கனவுகளுக்காக கண்களை மூடினான். நாவில் பட்ட திரவம் சுவை அரும்புகள் மூலம் அவனுள் பூங்குழலி குறித்த சித்திரத்தை வரையத் தொடங்கியது.
ஏ.எம்.பி சார் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த போது பக்கத்து வகுப்பில் ஜி.எஸ் சார் சிவக்குமாரை போட்டு அடித்துக் கொண்டிருந்தார். தூரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவா்கள் கால் பந்தை உருட்டிக் கொண்டிருந்தனா். தன் முத்து முத்தான கையெழுத்தினால் ஆசிரியா் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்தார். நசீராவும் பூங்குழலியும் தங்கள் புத்தகப்பையில் கையைவிட்டு என்னவோ செய்து கொண்டிருந்தனா். சிறிது நேரத்தில் ஆரஞ்சு பழ வாசனை வகுப்பெங்கும் நிரம்பியது. அதை உணா்ந்த ஆசிரியா் திரும்பி இவா்களைப் பார்த்தார். அருகில் வந்தவர், இருவர் முதுகிலும் ஓங்கியறைந்தார். “இதுதான் ஆரஞ்சி பழம் சாப்பிடற நேரமா?” என்று கத்தியபடியே மீண்டும் கரும்பலகை நோக்கி சென்றார். இருவா் கண்களிலும் நீா் கோர்த்துக்கொண்டதை இவன் பார்த்தான். பூங்குழலியைப் பார்க்க அவனுக்கு சங்கடமாக இருந்தது. தன் அத்தை வீட்டுக்கு பால் வாங்க வந்த அவளை மாட்டுக் கொட்டகையில் வைத்து இறுக்கி அணைத்து முத்தமிட, அவள் திமிறியோடினாள். அடுத்த பாடவேளைக்கான மணி அடித்தது.

மழைச்சாரல் அதிகமாக மண்டபத்திற்குள் வந்தபோது இவன் கனவு கலைந்து புரண்டு படுத்தான். சிறிது நேரத்திற்கு முன் கனவில் வந்த பூங்குழலியின் முகம் அவன் மனத்திரையில் முழுநிலவைப்போல மிதந்தபடியே இருந்தது. வெளியே எட்டிப்பார்த்தான். மழை அடா்த்தியாகப் பெய்து கொண்டிருந்தது. மீண்டும் பையைத்திறந்து பச்சை நிறத் திரவத்தை எடுத்து சிறிது அருந்திவிட்டு மீண்டும் கீழே படுத்து கண்களை மூடிக்கொண்டான். பூங்குழலியின் சித்திரம் மீண்டும் அவனுள் கூடத் தொடங்கியது.

ஆலமரத்தின் கீழ் இருந்த மிதிவண்டி நிறுத்துமிடத்தில் இவன் அமா்ந்திருந்தான். உயிரியல் ஆய்வுக் கூடத்திற்கு பின்புறம் கோணலூரார் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தார். பெயர் சொல்லி தன்னை யாரோ கூப்பிடுவதாக உணர்ந்தவன் திரும்பிப்பார்த்தான். அவள் இரண்டு ஐஸ்கிரீம்களை கைகளில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். தனக்குதான் தரப்போகிறாள் என்று நினைத்துக்கொண்டே அருகில் செல்ல அவள் மேற்குப் புறமாக நடந்து நசீராவிற்கு கொடுத்தாள். இவனுக்கு மனம் சங்கடமாக இருந்தது. இவன் கஷ்டப்படுவதை அவளும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். இவள் கூப்பிட்டிருக்காவிட்டால் தன்னை வேறு யார் கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைத்தடியே மீண்டும் ஆலமரத்தின் கீழ் உட்காரச் சென்றான்.
திரவத்தின் வீரியம் குறையத்தொடங்கியதும் கூரிய கத்தியைக் கொண்டு நுணுக்கமாக அறுப்பதைப் போன்று கனவு துண்டிக்கப்பட்டது. அவனுள் கிளா்ந்தபடியே இருந்த பூங்குழலியின் நினைவுகளால் அவன் மனம் பித்தேறிக் கிடந்தது. மறுபடியும் அத்திரவத்தை கொஞ்சம் அருந்தினான். மேகம் மெல்ல கலையத்தொடங்கி இருந்தது. மரங்களின் சலசலப்பு காடெங்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவனுள் மீண்டும் மெல்ல உருக்கூடத் தொடங்கியது பூங்குழலியின் நினைவுகள்.

வாணியச் செட்டியார் வீட்டு தெரு முக்கில் இவன் நின்று கொண்டிருந்தான். தன் ஆயா வீட்டிற்கு செல்வது போல வரும் அவள் இவனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே செல்வாள். அது போன்றதொரு நாளில் தான் செட்டியார் வீட்டு தோட்டத்தில் வைத்து அவளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தான். தோட்டத்து ஓட்டுவீட்டில் போட்டிருந்த கட்டில் மீது இருந்த தட்டில் கிடந்த எண்ணெய்ப் புண்ணாக்கை எடுத்து அவள் வாயில் வைத்து தினிக்க, வழக்கம் போல அவள் திமிறிக்கொண்டே ஓடினாள். மிதிவண்டியை எடுத்துக்கொண்டு இவன் சந்தப்பேட்டை தெரு வழியாக கிளம்பினான். அந்த வாரத்தின் திங்கட்கிழமை அவளை ஐயனார் கோயிலுக்கு வரச் சொல்லி இருந்தான். நெடுநேரம் கடந்தும் அவள் வரவில்லை. என்ன காரணம் என்றும் இவனுக்கு தெரியவில்லை. கோவிலுக்கு அவள் வராததை எண்ணி பொறுமை இழந்தவனாக வீட்டிற்கு திரும்பிவரும் வழியில் இரட்டைச் சுனைக்கருகில் பூங்குழலியின் அம்மாவும் பில்காவீட்டு ராமுவும் தனிமையில் பிணைந்து கிடப்பதை கண்டான். அதைக் கண்ட அவனுக்கு உடம்பெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. ஒருவித பதற்றத்தை அவன் உணரத் தொடங்கினான். மறுநாள் ஏன் கோவிலுக்கு வரவில்லை என்று இவன் கேட்டதற்கு “இந்தவாரம் நான் கோவிலுக்கு போறேன். அடுத்தவாரம் வேணா நீ போனு அம்மா சொன்னாங்க” என்று அவள் சொன்னாள். அந்த நொடியில் அவள் முகத்தைப் பார்ப்பதற்கு பாவமாக இருந்தது இவனுக்கு.





“தம்பி எழுந்திருங்க” என்று கோயில் பூசாரி இவனை எழுப்பவும் கனவு முழுமை பெறவும் சரியாக இருந்தது. கனவு அவனுள் அதீத பதற்றத்தை ஏற்படுத்தியிருந்ததை உணரமுடிந்தது. பூங்குழலியைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போது அவள் அம்மாவைப்பற்றிய நினைவுகள் ஏன் தன் கனவில் வரவேண்டும்; அதுவும் வேறொருவனுடன் படுத்துக்கிடக்கும் காட்சியையா காணவேண்டும் என்றும் யோசித்தான். அக்கனவில் இருந்து விடுபடமுடியாதவனாக முகம் வெளிறிக் காணப்பட்டான். ஏன் தான் மூன்றாம் முறை திரவத்தை அருந்தினோமோ என்று நினைத்தான். கனவில் புரளும் அவள் முகத்தை மறுபடியும் காண விரும்பி மீண்டும் அத்திரவத்தை அருந்த அது தன்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றுவிட்டதே என்று எண்ணிக்கொண்டே மண்டபத்திலிருந்து கீழிறங்கி வண்டி நோக்கி நடக்கத் தொடங்கினான்.

இவ்வளவு துல்லியத்துடன் இயங்கும் திரவம் எப்படி காளிதாசுக்கு மட்டும் வேறுவிதமாக இயங்கக்கூடும் என்று இவன் திரும்பத்திரும்ப யோசித்தபடியே இருந்தான். “கலா் கலா் தண்ணிய கொடுத்து யார யாமாத்த பாக்கற?” என்று கோபத்தோடு கேட்டுக்கொண்டே காளி இவனை மடக்கிப்பிடித்துக் கொண்டான். என்னென்வோ சொல்லிப்பார்த்தாலும் கூட அவன், இவனை விடுவதாக இல்லை. இவன் யார் யார்மீதோ சத்தியம் செய்துபார்த்தான். நாவில் பட்ட நொடியில் இருந்து கனவை வோ்விடத்தொடங்கும் திரவம் எப்படி வேறுவிதமான கனவுகளை அவனுள் கிளைக்கத் தொடங்குகிறது என்று புரியவில்லை. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இவன் “உனக்கு என்ன கனவு வருது?” எனக் கேட்டான். “அத குடிச்சா என் ஆளு கலா்கலரா வருவான்னு சொன்ன. எனக்கின்னா வருது தெரியுமா?” என்று கண்களை உருட்டிக் காட்டினான். மீண்டும் அவனே சொல்லத் தொடங்கினான்: “இதுல பத்து சொட்ட போட்டுகினு படுத்த கொஞ்ச நேரத்துல எங்க கோயில் வாசல்ல எப்பவும் படுத்து கெடக்கும் சாம்பமூர்த்தி,தெக்கவூட்டு கௌரி அக்காவை டி.வி.எஸ் பிப்டியில தள்ளிக்கினு போற மாதிரி தெனமும் வருது” என்று இவன் கூறி முடிப்பதற்குள் “யாரு டீக்கடை மூர்த்தியா?” என்று அவன் கேட்டான். அதற்கு இவன், “டீ கடை மூர்த்தியும் இல்லை பீக்கடை மூர்த்தியும் இல்லை. சாட்சாத் சனிமூல வீட்டு சாம்பமூர்த்திதான்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான். இவன் மேலும் குழப்பம் அடைந்தான். எப்படி இவன் கனவில் சாம்பமூர்த்தி, கௌரியுடன் இருசக்கரவாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சி தோன்றுகிறது என்று திரும்பத்திரும்ப தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். காளிதாஸின் முகமும் தீவிரத்துடனேயே இருந்தது. சுற்றி நின்று கொண்டிருந்தவா்கள் ஏதும் விளங்காமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனா். அத்திரவத்தை அருந்தி முதன்முதலாக தான் கண்ட கனவின் காட்சிகள் காளியின் மனதில் சுழலத்தொடங்கின. பேசுவதற்கு ஒன்றும் இல்லாது இருந்த மக்கள், சாம்பமூர்த்தியையும் கௌரியையும் இணைத்து பலவாறாக பேச த்தொடங்கினர்.
கண்ணாடிபுட்டியில் அடைக்கப்பட்டிருந்த திரவத்தை கையில் ஏந்தி சுழற்றிப் பார்த்தான் காளி. அது உள்ளே நுரைத்துக் கிடந்தது. அத்திரவத்தை அருந்துவதற்குள்ளாகவே அவனுக்கு தன் காதலியுடனான நினைவுகள் மனதில் பெருக்கெடுக்க ஆரம்பித்தன. “ஓய்வா இருந்தா ஒரு மிஸ்டுகால் கொடு” என்று அவள் அனுப்பும் குறுஞ்செய்தி அவன் மனத்திரையில் மின்னத்தொடங்கியதும் குப்பியின் மூடியைத் திறந்து பத்து சொட்டு அளவிற்கு வாயில் ஊற்றிக்கொண்டு கண்களை முடி படுத்துக்கொண்டான். சுவை நரம்புகள் அவனுள் கனவின் பாதையை கிளைக்கத் தொடங்கின.


அதிகாலை நான்கு மணிவாக்கில் தூக்கம் கலைந்து எழுந்த காளி கம்பத்தடியில் இருந்த தென்னை மரத்தின்கீழ் அமர்ந்து சிறுநீர் கழித்து கொண்டிருந்தான். மடத்திற்கு எதிரில் இருந்த வேப்பமரத்தை இருட்டில் பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது.சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளி கோவில் கோபுரத்தை வேறு நிறமாக்கி காட்டிக்கொண்டிருந்தது. தெற்குவீட்டு கௌரிஅக்கா இடுப்பில் குடத்துடன் சர்க்கார் கிணற்று பக்கமாக சென்று கொண்டிருந்தாள். அதேநேரம் பூட்டியிருந்த கோயில் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. யார் திறப்பது என்று காளி திரும்பிப் பார்த்தான். கதவைத்திறந்துகொண்டு உள்ளே இருந்து சனிமூலவீட்டு சாம்பமூர்த்தி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வெளியில் வந்தார். வந்தவர் நேராக கிணற்றடியில் இருந்த மடம் நோக்கிச் சென்றார். அங்கு நிறுத்தியிருந்த டிவிஎஸ் பிப்டியை காலால் உதைத்து கிளப்பி, ஏறி அமர்ந்து கிணற்றடி நோக்கிச் சென்றார். அவருக்காக காத்திருந்தது போலவே கௌரி அக்கா வண்டியின் பின்புறம் ஏறி அமர்ந்து சாம்பமூர்த்தியின் தோளில் கையை போட்டுக்கொண்டாள். வண்டி தெற்குமாட வீதி பக்கமாக பெருஞ்சீற்றத்துடன் புறப்பட்டுச் சென்றது. ஒரு புள்ளியாகி மறையும் வரை காளி உற்றுப்பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் நடப்பது கனவா நினைவா என்று புரியாமல் தன்னை கிள்ளிப்பார்த்துக் கொண்டான். இருசக்கர வாகனத்தை யார் அங்கு நிறுத்திவிட்டுச் சென்றிருப்பார்கள் என்றும் யோசித்துப்பார்த்தான். அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியாமல் மனம் குழம்ப ஆரம்பித்து, லேசாக வியர்க்கவும் தொடங்கியது.
“டேய் என்ன பெனாத்தற?” என்று அவன் அப்பா அவனைத்தட்டி எழுப்பியதும் அவன் கண்டு கொண்டிருந்த கனவு கலையத் தொடங்கியது.

அதன் பிறகு அவன் எத்தனையோ முறை அந்த திரவத்தை அருந்திப் பார்த்தான். திரும்பத் திரும்ப அதே துல்லியத்துடன் அந்த கனவு வந்து கொண்டே இருந்தது. தன் மனநிலை குறித்து அவன் பீதியடைந்தான். தனக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என்றும் அஞ்சினான். எப்படியாவது இதிலிருந்து வெளிவந்து விட வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அந்த கனவு அவனை பாடாய்ப்படுத்த ஆரம்பித்தது. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் அவன் தவித்தான். தன் புத்தக அலமாரியில் வைத்திருக்கும் அந்த பச்சை நிறத்திரவத்தைப் பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது. எடுத்து வெளியில் வீசிவிடலாமா என்றும் யோசித்தான். ஆனால் அதன் பிறகும் கௌரி அக்கா பலமுறை அவனைக் கடந்து தண்ணீர் எடுக்க சென்றுவருவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த கனவு தனக்கு என்ன உணர்த்த வருகிறது என்று அவனால் உணரமுடியவில்லை. எப்போதும் அவன் மனம் குழப்பத்தையே சுமக்கத் தொடங்க ஆரம்பித்தது, அந்த கனவினால் தனக்கு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்றும் அஞ்சினான். ஆனால் இவனைத் தவிர திரவத்தை உட்கொள்ளும் வேறு எவருக்கும் கனவு காண்பதில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படவில்லை. தங்கள் விருப்பத்திற்கேற்ப அவர்கள் தங்கள் கனவுகளை உற்பத்தி செய்து மனம் மகிழ்ந்து கொண்டிருந்தனர். மற்றவர்களைப் பார்க்கும் போது இவனுக்குப் பொறாமையாக இருந்தது.

காளியைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் சோமுவுக்கு நாகலட்சுமியின் நினைவு வந்துவிடுகிறது, எப்படியாவது இதுபோன்ற நினைவுகளை மறந்துவிட வேண்டும் என்று எத்தனையோ முறை இவன் யோசித்துமிருக்கிறான் .ஆனாலும் ஒவ்வொருமுறையும் அவளின் நினைவுகள் சங்கிலியின் அடுத்த கன்னியாக மாறி நீளவேச் செய்கிறது.
நாகலட்சுமியின் காதல் மிகத் தீவிரம் கொண்டதாக இருந்தது. ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் மீது அவள் காதல் விரிந்து படரத் தொடங்கியது. மணிக்கணக்கில் நீளும் அலைபேசி உரையாடல் வழியாக அவர்கள் தங்கள் நேசத்தை மேலும் வலிமை கொண்டதாக மாற்றிக் கொண்டிருந்தனர். பெற்றோர்களுக்கு விஷயம் தெரியவர எல்லாம் ரணகளத்தில் முடிந்தது,
எதுவுமே நடக்காதது போலவே நாகலட்சுமியின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. அவள் தந்தை அவளுக்கு எல்லாவிதமாகவும் எடுத்து சொல்லிப்பார்த்தார். அடித்து கூந்தலை கத்தரித்து அறையில் வைத்து அடைத்துப்பார்த்தார். ஆனால் தொடர்ந்து அவள், அவன் மீதான நேசத்தின் தீவிரத்தை கூட்டியபடியே இருந்தாள். “ பரம்பரை மானத்த வாங்கவந்திருக்கும் தேவிடியாவ சாப்பாட்டுல வெஷத்த வச்சி கொன்னுடு” என்று பலரும் அவரிடம் சொன்னார்கள். அது ஒன்றை மட்டும் செய்ய அவர் மனம் ஒப்பவில்லை.

தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கனவுகளைத் தீர்மானிக்கும் திரவத்தைப் பற்றிய விளம்பரம் அவரை சற்று ஆசுவாசப்படுத்தியது. தன் மகளின் மனதை மாற்றிவிடக்கூடிய சர்வரோக நிவாரணியாக அவ்விளம்பரத்தை அவர் உணர்ந்தார். கனவுகளின் மூலமாக மனதை மாற்றிவிடக்கூடிய அந்த திரவத்தை அடைய அவருக்கு முன்று நாட்கள் பிடித்தது.

மனதில் தேங்கிக் கிடக்கும் எத்தனை கடுமையான நினைவுகளையும் இந்த திரவத்தை தொடர்ந்து அருந்துவதன் மூலம் மனதில் இருந்து துடைத்தெறிந்து விடலாம் என்ற விற்பனை பிரதிநிதியின் வார்த்தைகள் அவருக்கு தெம்பாக இருந்தது. அது தொடர்பான அச்சிடப்பட்ட விளக்கக் குறிப்புகள், பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களை எல்லாம் வரிக்கு வரி அவர் படித்துப் பார்த்தார். அவர் முன் திரண்டிருந்த பிரச்சனையின் தீவிரம் படிப்படியாக கரையத் தொடங்கி இருந்தது.

“காதல் பற்றிய ஞாபகமே அவளுக்கு வரக்கூடாதுனா நீங்க இந்த குப்பியை வாங்கிட்டுபோங்க” என்று கடைப் பணியாளர் கூறினார். உரிய விலை கொடுத்து வாங்கி கையில் ஏந்தி அவர் அதைச் சுழற்றிப் பார்த்தார். நீல நிறத்தில் குப்பிக்குள் இருந்த திரவம் நுரைத்துக்கொண்டிருந்தது.


முதலில் அவளுக்கு வலுக்கட்டாயமாகவே அத்திரவத்தைப் புகட்ட வேண்டியிருந்தது. திரவம் அவள் நாவில் பட்ட சில நொடிகளுக்குப் பின் கருமை படர்ந்திருந்த அவளின் முகம் மெல்ல பொலிவு கூடத் தொடங்கியது. சோர்ந்து போயிருந்த அவளின் விழிகளில் பிரகாசம் படர்ந்தது மறுநாள் விடியலில் இருந்து அவள் எழுந்து நடமாடத் தொடங்கிளாள். அதைத் தொடர்ந்த நாட்களில் அவள் வழக்கம் போல கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினாள். பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத விரக்தியில் அந்த வாரத்தின் கடைசி நாளில் அவள் சித்தப்பா மகன், அவன் வீட்டு மாட்டு கொட்டகையில் தூக்கில் தொங்கி இறந்துபோனது கூட அவளை பாதித்துவிடாதபடி அத்திரவம் துள்ளியமாக வேலை செய்யத்தொடங்கியிருந்தது.
தன் சித்தப்பா மகன் காரியம் முடிந்த பதினாறாம் நாள் அவள் தலைக்கு குளித்து முகம் முழுக்க மஞ்சள் பூசிக்கொண்டு அடர் சிவப்பு நிறத்திலான சேலையை அணிந்து, பாப்பான் குளக்கரையில் இருந்த ஏழுகன்னிமார்கள் கோவிலுக்குச் சென்றுவந்தாள். அதன் பிறகு வீட்டில் அடிக்கடி விட்டத்தைப் பார்த்து நீண்ட சிரிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். வீட்டில் இருந்தவர்களை மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. அவள் மெல்ல மெல்ல தன்நிலை மறக்கத் தொடங்கினாள். அன்றாட செயல்களைச் செய்யக்கூட அவளை கட்டாயப் படுத்த வேண்டியிருந்தது.

அவள் கூந்தல் சிக்குபிடித்து துர்நாற்றம் வீசத் தொடங்கிய நாளில் அவர் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அதற்குமேல் அவளை வீட்டிற்குள் வைத்திருக்க யாரும் விரும்பவில்லை. அவள் வீட்டில் நிரந்தரமாக ஆந்தைகள் தங்கி பெரும் சப்தத்தோடு அழத்தொடங்கிய நாளில் அவள் வெளியே துரத்தப்பட்டாள். கைகால்களில் கிழிந்த துணிகளை கட்டிக்கொண்டு, சிக்கு பிடித்த கூந்தலோடு பலவண்ண மணிமாலைகளை கழுத்தில் அணிந்துகொண்டு அவள் ஊரின் அனைத்து தெருக்களிலும் அலைந்து கொண்டிருந்தாள்.
ஒரு மழைநாளின் பகல் பொழுதில் சிவன்கோயில் அருகில் இருந்த நந்தவனத்தில் வைத்து அவளை வடக்குவீட்டு மொட்டையன் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை தெரு மக்கள் சிலர் பார்க்கவும், அவன் விழுந்து அடித்துக் கொண்டு ஏரிப்பக்கமாக ஓடினான். அவளை இழுத்துச்சென்று கம்பத்தடியில் கட்டி பயங்கரமாக தாக்கினர். அவள் பெருங்குரல் எடுத்து அழுதாள். வலி பொறுக்க முடியாமல் மயங்கி கீழே சரிந்தவுடன் தான் கூட்டம் அவளை விட்டுச் சென்றது. அன்று ஊரை விட்டுச் சென்றவள்தான் அதன் பிறகு திரும்ப வரவேயில்லை.

வீட்டிற்கு வந்த பிறகும் கூட தன்னை நான்கு போ் முன்னிலையில் காளி அவமானப்படுத்தியதை சோமுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதுவுமே அவனுக்கு முழுமைபெறாமல் தெளிவின்றி தெரிந்தது. கனவுகளை உருவாக்கும் திரவத்தை விற்பனை செய்வதில் தன் பங்கு என்னவாக இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தான். நுட்பமான ஒருமாய வலையில் தான் சிக்குண்டு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அத்திரவத்தை குறித்து துள்ளியமான முடிவுக்கு அவன் வரமுடியாமல் தவித்தான். இவா்கள் இருவருக்கு மட்டும் திரவம் சரிவர செயல்படவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஒரு கண்டுபிடிப்பை நிராகரித்து விட முடியுமா என்றும் சிந்தித்தான். காளியின் வார்த்தைகள் அவனை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. வேலையைவிட்டே நின்றுவிடலாமா என்றும் கூட யோசித்தான்.

பயிற்சியின்போது வாரணாசியில் மட்டும் கனவை ஏற்படுத்தக்கூடிய அத்திரவம் எப்படி அனைவரிடத்திலும் நுட்பமாக வேலை செய்தது என்று நினைத்துப் பார்த்தான். எல்லாமே கண்கட்டு வித்தைதானோ என்ற ஐயமும் அவனுக்கு ஏற்பட்டது. பல அறிவியல் சோதனைகள் மூலம் அனைவரின் கனவுகளையும் பதிவு செய்து தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்ட பின்புதானே இக்கண்டுபிடிப்பு உலக சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் மேலும் இதுபோன்ற அரிய கண்டுப்பிடிப்புகளை எந்த ஆய்வுகளும் இன்றி மேம்போக்காக சந்தைக்கு கொண்டு வந்துவிட முடியுமா என்றும் அவனுக்குள் தாறுமாறாக சிந்தனைகள் ஓடத்தொடங்கின.
எண்ணவோட்டத்தை மாற்ற என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தான். ஒரு பயனும் ஏற்படவில்லை. திரும்ப திரும்ப அவன் இத்திரவத்தை பற்றியே யோசிக்க வேண்டியிருந்தது. அடிப்படையில் எல்லா கண்டுபிடிப்புகளுமே பொய்மையில் இருந்துதான் தோன்றுகிறதோ என்று யோசிக்கும் போதே அவனுக்கு பதற்றமாக இருந்தது.

தன்னை யாரோ தட்டி எழுப்புவதை உணா்ந்த சோமு தூக்கம் களைந்து எழுந்து பார்த்தான். முகத்தை கோபத்தோடு இறுக்கமாக வைத்துக்கொண்டு அவன் மனைவி அருகில் நின்று கொண்டிருந்தாள். என்ன என்பதுபோல அவன் அன்னாந்து அவளைப் பார்த்தான். மனநல மருத்துவரிடம் இவனை ஒவ்வொருமுறையும் அழைத்து செல்ல தான் படும் கஷ்டங்களை மனதில் நினைத்தபடி “டாக்டா் குடுத்த மாத்திரையை போட்டுகினு துங்குங்கனு எத்தன நாள் சொல்றது இப்படி ராத்திரி முழுக்க பெனாத்திகினே இருந்தா மத்தவங்க எப்படி தூங்க முடியும்?” என்று திட்டிக்கொண்டே மேசைமீதிருந்த மாத்திரைகளை எடுத்து அவனிடத்தில் கொடுத்தாள்.
தான் இதுவரை கண்டதெல்லாம் கனவுதானா என்று அவனுக்கு குழப்பாக இருந்தது. ஜன்னல் வழியாக வெளியில் எட்டிப் பார்த்தான் இருட்டாகவே இருந்தது. தெருநாய் குரைத்துக்கொண்டு இவன் வீட்டு சந்துப்பக்கமாக ஓடியது. மனக்குழப்பத்துடனேயே மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீா்குடித்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டான். அந்த நேரத்திலும் அவனுக்கு கனவை உருவாக்கக்கூடிய அந்த திரவத்தின் நினைவு வந்து அலைகழித்தது. பின் அந்த நினைவுகளோடே அவன் தூங்கியும் போனான்.



சில மாதங்கள் கடந்த நிலையில் வழக்கம்போல சோமு விடியற்காலை எழுந்து தேனீா் கடைக்குச் சென்றான். அங்கு அமா்ந்து தேனீா் அருந்திக் கொண்டே எதிரில் கிடந்த தினசரியை எடுத்து புரட்டினான். அதில் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த கீழ்கண்ட செய்திகளை படித்த சோமுவின் உடல் முழுக்க நடுக்கம் பரவியது. மயக்கம் வருவது போல உணர்ந்தவன் விசுப்பலகையை இறுகப்பற்றிக்கொண்டான். மீண்டும் பழைய நினைவுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அவனுள் புரளத்தொடங்கின. தெளிவாக உணரமுடியாதபடி மங்கிய நிலையிலேயே அனைத்தும் இருந்தன. உண்மையும் பொய்யும் ஒன்று தானோ என்று யோசித்தபடியே தன் பாதங்களுக்கு கீழ் இருந்த தரையை கால்களால் அழுத்திப்பார்த்தான். அப்போது அந்தச் சிமெண்ட் தரை நழுவத்தொடங்கியது.

செய்தி : 1
கடும் மின்வெட்டு, பஞ்சம், பசி, மற்றும் பட்டினி ஆகியவற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் உகாண்டாவில், அரசுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான போராட்டங்களையும் ஒடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு இலவசமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கனவை உருவாக்கக் கூடிய ஒருவகை திரவத்தை வீடு வீடாக சென்று வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

செய்தி : 2
கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த கௌரி வயது 37, காளிதாஸ் வயது 29 இருவரும் தலைவாசல் அருகே இரண்டு வாரங்களுக்கு முன்பு கண்டாச்சிபுரம் கோவிலில் காணாமல் போன பழமைவாய்ந்த ஈஸ்வரன் சிலையை விற்க முயற்சித்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

Wednesday, November 16, 2011

பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்


அவர்கள் ராஜா தியேட்டரில் இறங்கி சுபலட்சுமி ஒயின்ஸ் நோக்கி நடக்கத் தொடங்கிய போது லேசாக தூற ஆரம்பித்தது. காலையில் கிளம்பும் போதே வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. மழை நாளில் புதுவை மேலும் ரம்மியமாகத் தோன்றியது அவர்களுக்கு. புதுவை பேருந்து நிலையத்தில் கால் வைத்ததுமே விசுவால் அதீத குளிர்ச்சியை உணர முடிந்தது.கடற்கரை காற்று சில்லென வீசிக் கொண்டிருந்தது. மேகம் அடர்ந்து மழை வலுக்கும் போல இருந்தபோது அவர்கள் நடையை வேகப்படுத்தினர். மழையை பொருட்படுத்தாது ஒருவர் கைரிக்‌ஷாவில் அமர்ந்து புகைத்துக்கொண்டே அவர்களைக் கடந்து சென்றார். ரிக்‌ஷாவில் அமர்ந்திருப்பவரையும் அதை இழுப்பவரையும் கொஞ்சநேரம் ரமேஷ் பார்த்துக் கொண்டே நடந்தான். அவனுக்கு மனம் சங்கடமாக இருந்த்து. ஆனாலும் இதுபோன்ற சூழலில் கை ரிக்க்ஷாவில் பயணிப்பது சந்தோஷம் கூடியதாகத் தான் இருக்கும் என்று யோசித்துக் கொண்டே மதுக்கடையை ரமேஷும் விசுவும் அடைந்தபோது மழை வலுக்க ஆரம்பித்திருந்தது. கண்ணாடிக் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்து வழக்கமாக அமரும் இருக்கையை நோக்கிச் சென்றனர். ஏற்கனவே அங்கு இருவர் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மேசைக்குமாக விளக்கின் ஒளி மிகவும் துல்லியமாக அமைக்கப்பட்டிருந்தது.உள்ளிருந்து பார்ப்பவர்கள் அதை சிமெண்ட் கட்ட்டம் என்று சுலபத்தில் கூறிவிடமுடியாதபடி மூங்கிலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு நேர்த்தியாக மூங்கில் கொண்டு ஒரு குடிசை போல நிர்மானிக்கப்பட்டிருந்தது தான் அவர்களை தொடர்ந்து வருகை தருபவர்களாக மாற்றி இருக்கக்கூடும். வழக்கமாக அமரும் மேசையின் அருகிலேயே அவர்கள் தயங்கியபடி நின்று கொண்டிருந்தனர். மேசையின் மீதிருந்த இரண்டு கோப்பைகளிலும் தங்க நிறத்திலான திரவம் கொஞ்சம் நிரப்பப்பட்டிருந்தது. அதன் அருகில் குளிர்ந்த நீர். சிறிய ஐஸ் பெட்டியில் கொஞ்சம் ஐஸ் துண்டுகள் இருந்தன. ரிக்கி மார்ட்டின் முழு பாட்டில் நடுவில் வைக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு ஒரு பெண்ணை நினைவூட்டுவதாக இருந்தது. எதிர் எதிராக இரண்டு சில்வர் தட்டுகளில் அளவாக நறுக்கப்பட்ட வறுத்த மாட்டிறைச்சி வைக்கப்பட்டிருந்து. அதன் பக்கத்தில் இரண்டு சிறிய தட்டுகளில் முந்திரியும், பச்சைப் பட்டாணியும். இன்னொரு தட்டில் ஒரு இடுக்கியும், இரண்டு முள்கரண்டியும் வைக்கப்பட்டிருந்தது. மசாலா போட்டு தயாரிக்கப்பட்டிருந்த தட்டிலிருந்த பச்சைப்பட்டாணி இருவருக்கும் அங்கு சென்று முதல் முதலில் குடித்த நாளை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.


அவர்கள் முதல் முதலாக அங்கு குடிக்க வந்த அன்று வெயில் கடுமையாக வீசிக்கொண்டிருந்து. திருமணம் போன்ற விசேஷங்களில் தான் எடுத்த நிழற்படங்களை அச்சிட வழக்கமாக புதுவைக்கு வரும் ரமேஷ் எப்போதும் விசுவை உடன் அழைத்து வருவது வழக்கம். அப்போதெல்லாம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் ஏதாவது ஒரு மதுக்கடையில் மதுபுட்டிகள் வாங்கி நின்றபடியே குடித்துவிட்டு, அலங்கார் சலூனுக்கு பக்கத்தில் இருக்கும் வேலூர் பீப் பிரியாணிக்கடையில் சாப்பிட்டு விட்டு வண்டி ஏறிவிடுவார்கள். ஆனால் அன்று அவர்களுக்கு ஒரு உயர்தர மதுக்கூடத்திற்கு சென்று மது அருந்த வேண்டும் எனத் தோன்றியது. அதற்கு காரணம் அவர்களின் சாமியார் மாமா. ”டேய் குடிச்சா பிரசிரண்டு மாதிரி குடிக்கனும் டா” என்று அடிக்கடி இவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார் அவர்.அத்தை வீட்டு படிக்கூண்டில் எப்போதுமே விலையுயர்ந்த காலியான மதுபாட்டில்கள் கிடக்கும். இவர்கள் அந்த பாட்டில்களை எடுத்து அதன் வடிவமைப்பை பார்த்து ஆச்சர்யப்படுவர். ஒருநாள் இவர்களை படிக்கூண்டு அருகே கண்டா மாமா, “ என்னடா பாக்கறீங்க. எல்லாம் சீமச் சரக்குடா தம்பிகளா” எனச் சொல்லி கண்களைச் சிமிட்டினார். அவரிடமிருந்து வரும் ஜவ்வாது வாசனை இவர்களை ஒருவித கிறக்கத்தில் ஆழ்த்தியது. முதல் முறை கடையில் நுழைந்தவுடனேயே அங்கிருந்த பணியாளரிடம் ரமேஷ் “பக்காடி ஒயிட் ரம் இருக்கா?” என்று வெடுக்கென்று கேட்டு விட்டு, இவனைப் பார்த்துக் கண் சிமிட்டினான். அவன் கேட்டவிதம் பணியாளருக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. இருக்கையில் அமர்ந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்பே இருவரும் மதுக்கூடத்தை ஒரு நோட்டம் விட்டனர். ஜன்னல் திரைச்சீலைகள் காற்றில் புரள்வதை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல இருந்தது அவர்களுக்கு. எங்கிருந்து வருகிறது என அறிய முடியாத படி இன்னிசை பெருகி கூடமெங்கும் வழிந்து கொண்டிருந்தது. இப்படிகூட இசையை கேட்டு ரசிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டே பணியாளர் கொண்டு வந்து வைத்த மதுபாட்டிலை தூக்கிப் பார்த்தான் ரமேஷ். ரசனைகள் மீதெல்லாம் விசுவுக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. “எல்லாத்தையுமே உன்னால மட்டும் தாண்டா ரசிக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டே அவன் முதுகில் விசு செல்லமாக குத்துவான். பக்கத்து மேசையில் குடித்துக் கொண்டிருப்பவர்களின் லாவகத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் ரமேஷ். தான் குடிக்கும் போது அதே லாவகத்தை மிகவும் துல்லியமாக செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவர்களுக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த வேலைப்பாடுகள் கொண்ட அழகான கண்ணாடி கோப்பையையே பார்த்துக் கொண்டிருந்தனர். அது நாள்வரை அவர்கள் மது அருந்திய சூழலை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக்கொண்டனர். அவர்களுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. அந்நினைவுகளில் இருந்து மீள விசுவுக்கு உடனேயே குடிக்க வேண்டும்போல இருந்த்து. அழகிய கோப்பையில் நீர் போலவே இருந்த மதுவை ஊற்றினான். கண்ணாடி கோப்பையில் மது இருப்பதுபோலவே தெரியவில்லை. அதைப்பார்த்துக் கொண்டே, ”ங்கோத்தா பச்ச தண்ணி மாதிரி இல்ல இருக்கு” என ஆர்வமிகுதியில் சொன்னான். பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த குளிர்ந்த நீரை கோப்பையில் ஊற்றினான். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த குறுந்தாடிக்காரர் ஐஸ் துண்டை எடுத்து கோப்பையில் போட்டு கலக்குவதைப் பார்த்தனர். நான்கைந்து ஐஸ்துண்டுகளை அள்ளி கோப்பையில் ரமேஷ் போட்டான். கோப்பையினுள்ளே இருந்த மது வழிந்து கீழே சிந்திக்கொண்டிருந்த்து. அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்த விசு அவன் கோப்பையில் இருந்து வெளியில் வழியும் மதுவைப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே தலையில் தட்டிக்கொண்டான். எதிரில் இருப்பவர் இவர்களைப் பார்த்து சிரித்துக் விட்டு தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். அதைப் பார்த்த இவர்களுக்கு அசிங்கமாக இருந்தது. விசு இந்த முறை ஐஸ் துண்டை வெகு லாவகமாக எடுத்து தன் கோப்பையில் போட்டுவிட்டு அவனைப் பார்த்தான். அவன் நன்கு வறுக்கப்பட்டு அழகாக தட்டில் பரப்பப்பட்டிருந்த மாட்டிறைச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த முறை மிக தேர்ந்த குடிகாரனைப் போன்று மாறிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டே கோப்பையை எடுத்து கண்களை மூடி ஒரே மடக்கில் குடித்து கீழே வைத்தான். பின் ஒரு துண்டு மாட்டிறைச்சியை எடுத்து வாயில்போட்டு மெல்லத் தொடங்கினான். பக்கத்து இருக்கை குறுந்தாடிக்காரர் மதுக்கோப்பையை எடுத்துக்கொண்டு இவர்களின் இருக்கைக்கு அருகில் வந்து, இவர்களைப் பார்த்து சிரித்தபடியே இருக்கையில் அமர்ந்தார். இவர்கள் இருவரும் ஆஜானுபாகுவாக இருந்த அவரின் பூனைக்கண்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். அரைக்கால் சட்டையுடன்கூட மதுக்கூட்த்திற்கு வந்து மது அருந்த முடியும் என்று அவரைப் பார்த்த பின்பு இவர்கள் தெரிந்து கொண்டனர். முகத்தில் புன்னகையை படரவிட்டபடியே ”நீங்க தமிழ்நாடா?” என்று இவர்களைப் பார்த்துக்கேட்டார். இவர்கள் ஆமாம் என்பதுபோல தலையாட்டினர். “நா நெனைச்சேன்” என மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னார். இவர்களுக்கு அசிங்கமாக இருந்தது. மீண்டும் அவர் கோப்பையை எடுத்து ஒரு மிடரை பருகிவிட்டு அவர்களிடம் கேட்டார்: ”விஷத்தையா குடிக்கறீங்க?” அவர் வெடுக்கென இப்படி கேட்பார் என இவர்கள் நினைத்திருக்கவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அவர் அவர்களைப் பார்த்து, ”பொதுவா விஷத்தை தான் கண்ண மூடிக்கினு ஒரே மடக்கில் குடிப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா நீங்க என்னடா னா..” என்று இழுத்தார். தாங்கள் குடிக்கும் விதத்தை மறுபடியும் இவர்கள் நினைத்துப் பார்த்தனர். விஷம் போலத்தான் குடிக்கிறோம் என்று புரிந்தது. மதுவை மிடறு மிடறாகத் தான் அருந்த வேண்டும் என்று அப்போது அவர்களால் தெளிவாக உணரமுடிந்த்து. அவரைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் போல இருந்தது இவர்களுக்கு. கொஞ்ச நேரம் கழித்து கையை அசைத்தபடியே அவர் எழுந்து சென்றார். இவர்கள் முள்கரண்டியை எடுத்து, தட்டில் இருந்த கறியை குத்தி வாயில் போட்டு சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிடும் போது சத்தம் வரக்கூடாது என்பதில் ரமேஷ் மிகவும் கவனமாக இருந்த்தை உணரமுடிந்தது.

”ரமேஷ் சார் ஏன் நின்னுட்டு இருங்கீங்க?” என்று பணியாளர் கேட்டவுடன் தான் நினைவு திரும்பி இயல்பிற்கு வரமுடிந்தது இவனால். ”விசு சார் வரலியா?” என்று அவர் கேட்கவும் தான் இவனுக்கு தன்னுடன் இங்கு நின்று கொண்டிருந்த விசுவின் சிந்தனையே வந்தது. தெற்கு ஓரம் வைக்கப்பட்டிருந்த வாஷ் பேசினில் கையை அளம்பிவிட்டு அப்போது தான் விசு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். ”உங்களதான் சார் தேடிட்டு இருந்தேன்” என்று விசுவிடம் சொல்லிக்கொண்டே பக்கத்து இருக்கையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தவருக்கு சிகரெட் எடுத்துக் கொடுத்தான் பணியாள். பின் இவர்கள் பக்கம் திரும்பி ”சார் இந்த முறை மட்டும் அட்ஜஸ் பண்ணிக்கிங்க” என்று சொல்லிவிட்டு இவர்கள் அமர மேசையை தயார் செய்யத் தொடங்கினான். வெளியில் மழை வேகத்தோடு சுழன்று சுழன்று பெய்து கொண்டிருந்தது. மேசை தயார் ஆனதும் இவர்கள் அமர்ந்தனர். விசு தம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டு பணியாளரிடம் ”மவுண்ட் கேஸ்டில் இருந்தா ஒரு ஆப் கொடுங்களேன்” என்றான்.அவன் சரி என்பது போல தலையாட்டிவிட்டு, “ சார் சைட் டிஷ்” என்று கேட்டான். ”என்ன இருக்கு?” என்று ரமேஷ் கேட்டான். ”ஒயிட் போர்க் ரெடியா இருக்கு சார்” என்று அவன் கூறினான். ”நெறைய பெப்பர் போட்டு ஒரு பிளேட் கொண்டு வாங்க” என்று விசு அவரிடம் சொல்லிவிட்டு மேசையில் வைத்திருந்த விலைப்பட்டியலை புரட்ட்த்தொடங்கினான். புதுப் புது உணவு வகை மற்றும் அவற்றின் பெயர்களின் மீதும் அவனுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கவேசெய்தது. ரமேஷ் சிறிய கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த வறுத்த மணிலா பயிறை எடுத்து வாயில் போட்டு மெல்லத் தொடங்கினான். ஒவ்வொரு பக்கமாக புரட்டி புரட்டி விதவிதமான மதுவகையின் பெயர்களையும் உணவின் பெயர்களையும், ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருந்தான் விசு. அப்போது இவனுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தவன் மேசைமீதிருந்த மதுப் புட்டியை பார்த்தபடியே, “ ன் ங்கோத்தா எவ்ளோ அடிச்சாலும் ஏறமாட்டுகிது” என குழறி குழறி பேசிக்கொண்டிருந்தான். அவன் உலரலை கேட்ட விசுவின் நினைவுகள் பின்னோக்கிச் சுழலத் தொடங்கின.

மூலநோய் அவனை பாடாய் படுத்திய நாட்கள் அவை. மலம் கழிக்கவே அச்சப்பட்ட நாட்களாக இருந்தன. நண்பர்களுடன் வீரங்கிபுரம் ஏரிக்கு செல்லும் அவன் மலம் கழிக்க அமர்ந்தால் மீண்டும் எழுந்து வர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு அவன் சிரமப்படுவதைப் பார்க்கவே சங்கடமாக இருக்கும். மலம் கழித்து முடித்தவுடன் வெளிவரும் ரத்தத்தை முதல் முறை கண்டபோது அவனுக்கு பயமாக இருந்தது. நாளாக நாளாக அதற்கு அவன் பழகி கொண்டான். மலம் கழித்து முடித்து கால் கழுவும் போது அவன் எழுப்பும் சத்தம் சினம் கொண்ட நாகம் எழுப்பும் சத்தம் போலவே இருக்கும். பல கைவைத்தியங்கள் செய்து பார்த்தான். கற்றாழை சாப்பிட்டிருக்கிறான். படுக்கச் செல்லும் முன் வெந்தயப் பொடியை விழுங்கி இருக்கிறான். ஆங்கில மருத்துவர்கள் வழங்கிய பல மலமிலக்கிகளை எடுத்துக்கொண்டிருக்கிறான். இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் பழையபடியே மூலநோய் தன் முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கும். எப்போதும் அவன் பலவீனமாகவே இருக்கத் தொடங்கினான். சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லி அவனுக்கு சில மருத்துவர்களின் பெயர்களை கொடுத்தனர். ஆனால் மேலும் சிலர் அறுவைச் சிகிச்சை வேண்டாம் என்று கூறினர். என்னதான் அறுவைச் சிகிச்சை செய்தாலும் மறுபடியும் மறுபடியும் மூலம் வளரும் என்று அவனிடம் கூறினர். அதனால் அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள பயமாகவும் இருந்தது.

அவனுடைய நண்பர்கள் அவனை ‘மூலம்’ என்றே கூப்பிடத் தொடங்கி இருந்தனர். அவர்கள் அப்படி அழைப்பது ஆரம்பத்தில் அவனுக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது. தொடர்ந்து அவர்கள் அவ்வாறே கூப்பிடவும் இவனுக்கும் பழகிப்போனது. அன்றும் வழக்கம்போல அவர்கள் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது அவனைக் காட்டி ”என்னடா மூலம் இவ்ளோ சூடா டீ குடிக்கிது, பின்னாடி இருக்கிற ரெட் லைட் வெடிச்சிடப்போவுது” என தென்னரசு கிண்டலாகக் கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதை அருகில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த தாண்டவராயன் மாமா பார்த்துக் கொண்டிருந்தார். அன்று மாலை வீட்டுக்கு வந்தபோது ”ஏங்கா தம்பிய மூலம்னு கூப்பிடறாங்க?” என்று அவன் அம்மாவிடம் அவர் கேட்டார். அம்மா ஆரம்பத்திலிருந்தே கதையைத் தொடங்கி விலாவாரியாக சொல்லி முடித்தாள். அவர் அவனை ஏற இறங்கப்பார்த்தார். இதுதான் பிரச்சனையா என்று கேட்டபது போல் இருந்தது அவரது பார்வை. “நத்தை பஷ்பம் சாட்டிருக்கியா?” என்று அவர் அவனைப் பார்த்துக்கேட்டார். ”நத்தை பஷ்பம்னா என்ன?” என்று அவன் திரும்பக் கேட்டான். அவனுக்கு அது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அது குறித்த அறிவு அவனுக்கு இல்லை என இவர் உணர்ந்த பின் அவர் தோரணை சற்று மாற்றம் கொள்ளத் தொடங்கியது. தன்னை குரு ஸ்தானத்தில் இருத்திக் கொண்டு “அது ஒரு மருந்து தம்பி. நாட்டு மருந்து கடையில கெடைக்கும். வாங்கி சாப்பிட்டுபாரு மூலம் கையால புடிச்ச மாதிரி அப்படியே நிக்கும்” என்று நிறுத்தி தெளிவாக கூறினார். வலியில் இருந்து மீளப்போகிறோம் என்று நினைக்கவே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. ”எங்க கெடைக்கும்?” என்றான். ”எல்லா நாட்டு மருந்து கடையிலும் இருக்கும் தம்பி” என்றார் இவர். ”நம்ம தனகோட்டி செட்டியார் கடையில கெடைக்குமா?” என்று மறுபடியும் கேட்டான். அவர் கிடைக்காது எனும் விதமாக உதட்டைபிதுக்கி காண்பித்தார். அதன் பிறகு யாரிடம் பேசினாலும் நத்தைப் பஷ்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். யாரிடமிருந்தும் அவனுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மனம் சோர்வடையத் தொடங்கினான். ஆனாலும் எப்படியாவது நத்தைப் பஷ்பத்தை சாப்பிட்டே தீர்வது என்று தொடர்ந்து விசாரிக்கத் தொடங்கினான். ”இங்கலாம் எங்கேயும் கெடைக்காது டா விசு. வேலூர் பக்கத்துல ஆத்துவாம்பாடில ஒரு வீட்ல கொடுக்கறாங்க” என்று சொல்லிவிட்டு, “ நத்தை பஷ்பபத்துக்கு போயி எதுக்கு இம்புட்டு மெனக்கிடற பேசாம நத்தைய புடிச்சி வறுத்து கொடுக்கச்சொல்லி சாப்புடுறா. கையால புடிச்ச மாதிரி நிக்கும்” என்று சொல்லிவிட்டு அவனை ஊடுருவப் பார்த்தார். அவன் மனதில் நத்தைகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. அவை பாம்புக்கு தண்ணீர் கொண்டு செல்கின்றன என்று இளம் வயதில் அம்மா கூறியது இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. தனக்கு நத்தைகறி வேண்டும் என்று அவன் தன் தாய் வழிப் பாட்டியிடம் கூறினான். அவள் தான் எப்பொழுது பார்த்தாலும் வயலே கதியாக கிடப்பவள். “பார்வை வேற மசண்டலா இருக்கு. இந்த வயசுல என்னால எப்பிடா நத்தை புடிக்க முடியும்?” என்று இவனிடம் கேட்டாள். சிறிது நேரம் கழித்து அவளே ”போயி சித்திக்கிட்ட சொல்லுடா அவ புடிச்சிட்டு வந்து தருவா” என்று சொன்னாள். எப்படியாவது வலியில் இருந்து மீண்டால் போதும் என்று இருந்தது அவனுக்கு. சைக்கிளை எடுத்துக்கொண்டு வீரங்கிபுரத்தில் இருக்கும் தன் சித்தி வீட்டிற்கு சென்றான்.

இவன் சித்தி வீட்டை அடையும்போது அவள் குழம்பு கூட்டிக் கொண்டிருந்தாள். இவன் சைக்கிளை நிறுத்தவும் அவள் எழுந்து நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு இவனை வரவேற்கவும் சரியாக இருந்தது. குடிக்க தண்ணீர் கொடுத்தாள். உட்கார்வதற்கு தரையில் பாயை விரித்துப் போட்டாள். பாய், தலையணை மற்றும் போர்வைகள் இருந்த பரண் புகைபடிந்து கருப்பாக மாறி இருந்தது. “இப்ப தான் சித்தி வீட்டுக்கு உனக்கு வழி தெரியுதாக்கும்?” என்று இவனிடம் கேட்டாள். அவள் கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென்று இவனுக்கு தெரியவில்லை. அமைதியாக இருந்தான். அடுப்பில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ”சித்தப்பாவ எங்க காணோம்?” என்று கேட்டான். ”எங்க போயி இருக்கும், குடிக்கத்தான்” என்று அலுப்புடன் சொன்னாள். ஏன் கேட்டோம் என்று இருந்தது இவனுக்கு. தட்டில் அரிந்து வைத்திருந்த காய்கறிகளை எடுத்து குழும்புச் சட்டியில் போட்டு வதக்கத் தொடங்கினாள். தெருவில் நின்றிருந்த தென்னை காற்றின் போக்கிற்கேற்ப சாய்ந்து ஆடிக் கொண்டிருந்தது. ஒடிந்து விழுந்துவிடுமோ என்று அச்சமாக இருந்தது இவனுக்கு. நார்க் கட்டில் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டின் காலடியில் அதன் குட்டி படுத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சித்திக்கும் குழந்தை இல்லை எனும் நினைவு இவனுள் தோன்றியது. அடுப்படியில் இருந்த அவளைப் பார்த்தான். குழந்தை இல்லை எனும் துயரம் அவள் முகம் முழுக்க வரிவரியாக படர்ந்து கிடப்பதாகத் தோன்றியது அவனுக்கு. ”ஏன் சித்தி இன்னும் உனக்கு தம்பி பாப்பா பொறக்கல?” என்று சின்ன வயதில் இவன் கேட்டு அம்மாவிடம் அடிவாங்கியது ஞாபகத்திற்கு வந்து சென்றது. நார்க்கட்டிலை எடுத்துப்போட்டு இவன் அமர்ந்து கொண்டான். சமையல் செய்தபின் குளித்து விட்டு இவன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் அவள். அவள் மேலிருந்து கசிந்த சோப்பு வாசனை அவன் மூக்கை ஊடுறுவிச் சென்றது. இவன் தலையை வருடிக் கொண்டே ”அடிக்கடி வந்துட்டு போயேன்டா” என்று அவள் சொன்னாள். இவன் சரி என்பது போல தலையாட்டினான். ”சித்தி எனக்கு நத்தை வேணும்” என்று அவளைப் பார்த்துக்கொண்டே சொன்னான். ”இதுக்குதான் வந்தயா? நா என்னைதான் பாக்க வந்தயோனு நெனைச்சேன்டா” என்று கேட்டாள். அவள் அப்படி கேட்ட்து இவனுக்கு சங்கடமாக இருந்த்து. அவன் முகம் மாறுவதை உணர்ந்த இவள், “சும்மா சொன்னேன்டா கஷ்டப்படாத” என்று அவனிடம் சொன்னாள். காற்று சில்லென வீச ஆரம்பித்திருந்தது. “இன்னுமா அது சரியாவல?” என்று கேட்டுவிட்டு ”நத்தைய புடிச்சி வறுத்து தறேன். சாப்பிட்டுட்டு சரியானப் பெறவு போலாம்” என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவனுக்கு அங்கு தங்குவதென்றாலேயே எட்டியாக கசக்கும். எந்நேரமும் சிடுசிடுவென முகத்தை வைத்திருக்கும் சித்தப்பாவின் முகம் வேறு அவன் நினைவில் வந்து சென்றது. அவன் தயங்கியபடியே “நத்தைய புடிச்சி குடு சித்தி . வீட்டுக்கு போனா அம்மா செஞ்சி கொடுக்கும்” என்று அவளிடம் சொன்னதும், ”யாரு உங்கம்மா வா செஞ்சி கொடுக்கும்?” என்று அவள் நக்கலாக அவனிடம் கேட்டாள் . பின் அவனிடம் ”நானே பதமா செஞ்சி தறேன். ஒரு நாள் இருந்து சாட்டுட்டு போடா” என்று சொன்னாள். அவன் சரி என்பது போல தலையாட்டினான்.

தள்ளாடிக் கொண்டே சித்தப்பா வீடு திரும்பிய போது, இவன் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தான். அவர் யாரையோ கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே வந்தார். அடுப்படியில் அப்படியே அமர்ந்தார். கட்டிலை உற்றுப் பார்த்து விட்டு இவளைப் பார்த்தார். ”விசு வந்திருக்கான்” என்று பதில் சொல்லிவிட்டு சாப்பிடத் தட்டை எடுத்து வைத்தாள். அவர் மீது சாராய நெடி வீசிக் கொண்டிருந்தது. சாதத்தைப் போட்டு குழம்பை ஊற்ற குனிந்தவளுக்கு சாராய நெடி குப்பென்று அடித்தது. அவளுக்கு குமட்பிக் கொண்டு வருவது போல இருந்தது. கீழும் மேலுமாக சாதத்தை சிந்திக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். வாசலில் போடப்பட்டிருந்த பாயில் போய் படுத்துக் கொண்டான். இவள் சாப்பிட்டு பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். இரவு விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அசதியில் படுத்தவுடன் கண்கள் செருக ஆரம்பித்தன அவளுக்கு.
மறுநாள் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை அவள் முடித்த பின்பே விசு எழுந்தான். சிறிது நேரம் கட்டிலில் அப்படியே அமர்ந்து கொண்டிருந்தான். அவள் காபி போட்டு எடுத்து வந்து அவனுக்கு குடிக்கக்கொடுத்தாள். அவர் தேனீர் குடிக்க தெரு முக்கிற்கு சென்று விட்டிருந்தார். ”சித்தப்பாவை பாக்கவே முடியல” என்று அவளிடம் சிரித்துக் கொண்டே கூறினான். அவனுக்கு சாப்பாடு எடுத்துக் வைத்துவிட்டு ஆட்டை அவிழ்த்து கையில் பிடித்துக் கொண்டு கழனி நோக்கி நடக்க தொடங்கினாள். எப்போது இங்கு வந்தாலும் பகல் முழுக்க வீட்டில் தனியே அடைந்து கிடக்க வேண்டியது தான் என்று மனதுக்குள் முனகிக் கொண்டே எழுந்து குளிக்க சென்றான். அப்போது அவர் தேனீர் அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து டீசல் கேனையும், பெல்ட்டையும் எடுத்துக் கொண்டு கழனிக்கு புறப்பட்டார். இவனைப் பார்த்து ஒரு சிரிப்பு. அவ்வளவு தான் அவரிடமிருந்து வரும். வேறெதுவும் பேசமாட்டார் என்பது அவனுக்கும் தெரியும். ”அவுங்க வூட்டு ஜெனத்த மட்டும் உழுந்து உழுந்து கவனிக்கிறாங்க அந்த ஆளு” என்று சித்தி அம்மாவிடம் அடிக்கடி முறையிடுவாள். அவள் சொல்வதை அம்மா எப்போதும் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. ஆனால் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே இருப்பாள்.

பகல் முழுக்க தனியாளாக இவன் நேரத்தைக் கடத்த பெரிதும் சிரமப்பட்டான். தெருவில் மாடுகள் மேய்ந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அவள் வீட்டிற்கு வந்தாள். ஆட்டை வேம்படியில் கட்டினாள். அவசர அவசரமாக உலைவைத்து சாதம் வடித்தாள். கஞ்சித் தண்ணீரில் உப்பைப்போட்டு ஆற்றி இவனுக்கு குடிக்கக் கொடுத்தாள். அவளும் குடித்தாள். பின் கொண்டு வந்திருந்த நத்தைகளை சட்டியில் போட்டு நன்கு கொதிக்க வைத்து கறியை மட்டும் பிரித்தெடுத்துவிட்டு ஓட்டை அப்புறப்படுத்தினாள். காரம் அதிகம் இல்லாமல் சட்டியிலேயே வறுத்தெடுத்து தட்டில் வைத்தாள். நத்தைக்கறியின் மணம் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. அதுவரை நத்தையை சாப்பிட்டதில்லை என்பதால் எப்படி சாப்பிடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். வேலைகளை முடித்து குளித்து விட்டு அவள் வந்தபோது அவரும் வந்து விட்டிருந்தார். சாராயக் கடைக்கு போய்விட்டு அதற்குள்ளாகவா வந்துவிடமுடியும் என்று இவன் யோசித்தான். அவனுக்கு தட்டில் சாதத்தை போட்டு, நத்தை வறுவலை எடுத்து சாதத்தின் மீது போட்டாள். அவன் பிசைந்து உண்ணத் தொடங்கினான். “ஏங்க நத்த செஞ்சிக்கிறேன் சாப்பிடறீங்களா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டாள். வேண்டாம் என்பதுபோல அவர் தலை ஆட்டிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினார். சிரித்துக் கொண்டே அவனுக்கு வாஞ்சையுடன் சாப்பாடு எடுத்து வைக்கும் அவள் முகம் அவரை மிகவும் சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது. தன்னிடம் ஏன் அவள் அப்படி நடந்து கொள்வதில்லை என்று எண்ணிக் கொண்டே பெருமூச்சை வெளிப்படுத்தினார். “நத்தை நல்லா இருக்கா டா” என்று அவள் விசுவின் தலையை தடவிக்கொண்டே கேட்ட்து அவருள் சந்தேகத்தின் சரடில் முறுக்கையேற்றியது. அப்போது விசுவின் மீதும் ஏனோ அவருக்கு ஆத்திரம் பொங்கியது. சாராயக்கடை நோக்கிச் செல்லும் பாதையில் அவர் வேகமாக நடக்கத் தொடங்கினார்.

சாப்பிட்டு முடித்து கை அலம்பிக்கொண்டு இவன் கட்டிலில் அமர்ந்து கொண்டான். அவள் வேலைகளை முடித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். சாதத்தையும், குழம்பையும் பிசைந்து சாப்பிடத் தொடங்கினாள். மீதமிருந்த நத்தையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அவருக்கும் வைத்தாள். அளந்து அளந்து ருசியாக சாப்பாடு செய்திருக்கும் தன் சித்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவள் சாப்பிட்டு விட்டு, “நீ படுத்து தூங்குடா. எனக்கு அசதியா இருக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பாயை விரித்து படுத்துக்கொண்டாள். வெகு நேரம் கழித்து வந்த அவர் தட்டை எடுத்து சாதத்தைப் போட்டு குழம்பை ஊற்றினார். தொட்டுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா என்று பாத்திரங்களை திறந்து பார்த்தார். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் நத்தை வறுவல் இருந்தது. அதைப்பார்த்ததும் அவர் மனம் எரிச்சல் அடைந்தது. அவள் மீது ஆத்திரம் ஏற்பட்டது. ஒருவித சங்கடத்துடன் சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு வெளியில் போட்டிருந்த பாயில் படுத்துக்கொண்டார். இவன் தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டே இருந்தான். நிலவெளியில் தென்னை மரக் கீற்று அசைவது ரம்மியமாகத் தோன்றியது. பாயில் சிறிது நேரம் படுத்துக் கொண்டிருந்தவர் எழுந்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. தன்னை யாரோ தொடுவதாக உணர்ந்தவள் விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவள் அருகில் சென்று அவளை தன் பக்கம் இழுத்தார் அவர். அவர் பிடியில் இருந்து வலுக்கட்டாயமாக தன்னை விடுவித்துக் கொண்டிருந்தாள் அவள். அவர் விடாமல் அவளை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில், ”இன்னைக்கி வேணாம் போயி படுத்து தூங்கு” என்று எரிச்சலுடன் அவரைப் பார்த்து சொன்னாள். போதை மிகுதியால் அவனுக்கு ஆத்திரமாக இருந்த்து. வார்த்தைகள் தடித்தன. நாக்கு குழறிக் கொண்டிருந்தது. ”இன்னிக்கி ஏண்டி தேவிடியா வேண்டானு சொல்ற?” என்று ஆத்திரத்துடன் கேட்டார். அவர் வார்த்தைகள் ஈட்டியைப் போல அவள் நெஞ்சில் இறங்கின. அவள் வலியால் துடித்தாள். அவர் மேலும் மேலும் கெட்ட வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே இருந்தார். ”வாய மூடுடா குடிகார கம்னாட்டி” என்று அவரைப் பார்த்து சத்தம் போட்டு கத்தினாள். ”யாரடி குடிகாரன்னு சொல்ற தேவ்டியா?” என்று கத்திக் கொண்டே எழுந்து அவளை எட்டி உதைத்தார். அவள் அலரிக் கொண்டு கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த இவன் எழுந்து கதவருகே வந்து நின்றான். உள்ளே இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டான். உள்ளே செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் தவித்தான். கணவன் மனைவிக் கிடையில் நடக்கும் சண்டை. தானாக சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டான். உள்ளே அவர்குரல் உக்கிரத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது. ” என்னிது வேணாம்னா வேற எவனுதுடி கேக்குது உனக்கு? என்று திரும்பத் திரும்பக் கத்திக் கொண்டிருந்தர். அவள் விசும்பிக் கொண்டிருப்பதையும் அவனால் நன்கு கேட்க முடிந்தது. அவர் விடாமல் அசிங்கமாகவே பேசிக் கொண்டிருந்தார். ”எவன பாரு பல்ல இளிச்சிக்கினு நிக்க வேண்டியது” என்று அவர் வாயை இளித்துக்காட்டி சொன்ன போது, அவளும் தாங்க முடியாமல் ”போடா பொட்ட பையா” என்று சொல்லி அவர் முகத்தில் காரித் துப்பினாள். அவள் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவன் கோபம் மேலும் பீறிட்டெழுந்தது. தலைக்கேறிய போதையில் என்ன பேசுகிறோம் என்று தெறியாமலேயே அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன. ”என்னிக்காவது எனக்கு சோறு ஒழுங்கா போட்டிருக்கியா டீ. அக்கா பையனுக்கு மட்டும் கொழஞ்சி கொழஞ்சி போடுற. அவன் ஒனக்கு அக்கா பையனா இல்ல ஆம்படையான டீ” என்று கத்திக் கொண்டு அவளை அடிக்க கையை ஓங்கினார். அவள் குனிந்த வேறு பக்கம் சாய்ந்து கொண்டாள். இவர் போய் சுவரில் மோதிக் கொண்டார். சித்தப்பாவின் வார்த்தைகளை கேட்டதும் அவனுக்கு நெஞ்சு வெடித்து விடும்போல இருந்தது. உண்மையில் போதையில் தான் அப்படி பேசுகிறாரா என்று யோசித்தான். எப்படி சிந்தனையை மாற்றினாலும் மீண்டும் மீண்டும் அவ்வார்த்தைகளிலேயே அவன் மனம் அமிழ்ந்து கொண்டிருந்தது. ஒரு புழுவைப்போல அவன் நெளிந்து கொண்டிருந்த போது உள்ளிருந்து அவள் அழும் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

விடிய காலையிலேயே புறப்பட்டுத் தயாராக இருந்த விசுவிடம், ”ஏன்டா கால சாப்பாடு சாப்பிட்டு போலாமில்ல” என்று சித்தி கேட்டாள். ”பரவா இல்ல சித்தி” என்று சொல்லி அவன் புறப்படுவதிலேயே குறியாக இருந்தான். அங்கு அதற்குமேல் அவனால் இருக்க முடியவில்லை. சித்தியை பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருந்த்து. இரவு நடந்த சம்பவங்களும் பேச்சுகளும் தொடர்ந்து அவன் மனத் திரையில் அசைந்து கொண்டே இருந்தன. ”இன்னும் ரெண்டு வாரத்துக்கு வந்து நத்த கறி சாப்பிட்டு போடா மூலம் தழும்பே இல்லாம ஆறிடும்” என்று இவனிடம் சொன்னாள். அவன் எந்த உணர்வையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் ”சரி சித்தி” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினான்.

முள் கரண்டியை எடுத்து விசுவுக்கு எதிரில் இருந்த சில்வர் தட்டில் இரண்டு தட்டு தட்டினான் ரமேஷ். தட்டில் இருந்து எழுந்த ஒலியின் அதிர்வுகள் விசுவை பழைய நினைவுகளில் இருந்து மீளச் செய்தது.சித்தப்பாவின் நினைவில் இருந்து மீள அவன் மீதம் வைத்திருந்த மதுவை எடுத்து அருந்தினான்.இந்த நேரத்தில் ஏன் தான் சித்தப்பாவை நினைத்தோமோ என்று நொந்துகொண்டான் விசு. அவரின் அசிங்கமான பேச்சுகள் இவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. மிளகும் பூண்டும் போட்டு நன்கு வறுக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சித் துண்டை எடுத்து வாயில் போட்டு ருசித்து சாப்பிட்டுக் கொண்டே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அகன்றத் திரை தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினான். மாட்டிறைச்சியின் சுவை அவன் நாவெங்கும் பரவவும்,இவன் ரமேஷிடம் “இன்னும் கொஞ்சம் ஊத்துடா” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த படத்தைப் பார்க்கத் தொடங்கினான். அதில் வேக வைக்கப்பட்டிருந்த ஷுவை சாப்ளின் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கத்தியும் முள்கரண்டியும் கொண்டு சாப்ளின் ஷுவின் ஆணிகளை பிடுங்கி லாவகமாக சாப்பிடுவதை இவன் சிரித்த படி பார்த்துக் கொண்டே ரமேஷை சீண்டி படத்தைப் பார்க்கச் சொன்னான். அப்போது முள்கரண்டி கொண்டு ஷுவின் நாடாக்களை நூடுல்ஸைப் போல நுட்பத்துடன் எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார். சாப்ளின் முகபாவங்களை பார்த்து இவர்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். சாப்ளின் படத்தைப் பார்த்து இவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதைக் கண்ட குறுந்தாடிக்காரர் அவர்களிடம் ”அந்த நடிகர் யார் தெரியுமா?” என்று கேட்டார். ”சாப்ளின்” என்று சொல்லிவிட்டு “இதுகூடவா சார் எங்களுக்கு தெரியாது?” என்று விசு கேட்டான். ”என்ன படம்னு தெரியுமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே ”சொல்லிட்டீங்கன்னா டக்கீலா ஒரு புல் வாங்கித்தறேன்” என்றும் சொன்னார். “ஷக்கீலானா தெரியும்” என ரமேஷ் மெல்லிய குரலில் சொன்னான். தங்களுக்கு தெரியாதென தொடக்கத்திலேயே அவர்கள் உதட்டை பிதுக்கிக் காண்பித்தனர். அவர் தன் கோப்பையில் இருந்த மதுவை காலி செய்துவிட்டு ”கோல்ட் ரஷ்” என்று கூறிவிட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார். ”சும்மா கதை வுடராறோ?” என்று கிசுகிசு வென இவனிடம் சொன்னான் ரமேஷ். அதற்கு அவனைப் பார்த்துக் கொண்டே மெலியதாக சிரித்தான் விசு.

வெளியில் மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. மதுக் கூடம் முழுக்க கூட்டம் நிரம்பி இருந்தது. மெல்லிய ஒலி அளவில் வழிந்து கொண்டிருக்கும் கருவி இசைக்கேற்ப பக்கத்து இருக்கைகாரர் மேசையில் மெதுவாக தட்டிக் கொண்டிருந்தார். அவரைப் போல இசையையும் படங்களையும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டே ரமேஷ் எஞ்சியிருந்த மதுவை எடுத்து குடித்துவிட்டு வறுத்த முந்திரியை எடுத்து வாயில் போட்டு மென்றான். இசை பெருகி மழையின் குளுமையை அடர்த்தியாக்கிக் கொண்டிருந்தது. இவர்கள் மேலும் ஒரு அரை பாட்டில் மதுவுக்கு சொல்லி அனுப்பினர். மதுபாட்டில் கொண்டு வர சென்ற பணியாளரை மீண்டும் அழைத்த விசு ”சார் ரெண்டு அரை வேக்காடு” என்று சொன்னான். போதை மெல்ல அவர்களுக்குள் உருதிரண்டுக் கொண்டிருந்தது. அவர்கள் கண்கள் மேல் நோக்கி செருக ஆரம்பித்திருந்தன.அப்போது தொலைக்காட்சியில் பாண்டி ராம் சில்க்ஸ் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்த்து. அதில் நடித்திருந்த பெண்ணின் முகம் விசுவிற்கு அவன் அக்காவை நினவூட்டியது. ஆழ்ந்து யோசித்துக் கொண்டே தட்டில் இருந்த மாட்டிறைச்சியை முள்கரண்டியால் குத்தி எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டே வெகு நாட்களாக தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி ரமேஷிடம் கேட்கலாமா என்று யோசித்தான். இப்போதே கேட்டுவிடு. தள்ளிப் போடாதே என்று அவன் உட்கொண்டிருந்த மது எற்படுத்திய போதை அவனை தூண்டிக் கொண்டிருந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தான். அவன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். சீக்கிரம் கேள் என்று இவன் மனசு அடித்துக் கொண்டது. தன் எதிரே கோப்பையில் எஞ்சியிருந்த மதுவை எடுத்து மடக்கென குடித்து விட்டு ”ஏன்டா அக்காவையும் உன்னையும் பத்தி ஊர்ல பேசிக்கிறது உண்மையா?” என்று விசு அவனைப் பார்த்துக் கேட்டான். சட்டென இவன் அப்படி கேட்டதும் ரமேஷக்கு தூக்கி வாரிப்போட்டது. போதை படர்ந்திருந்த முகத்திலும் பயத்தின் ரேகைகள் துல்லியமாக தெரிந்தன. விசுவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவன் தலை கவிழ்ந்து இருந்தான். கணவனைப் பிரிந்து வீட்டிலேயே இருக்கும் தன் அக்காவின் மங்களகரமான முகம் விசுவின் மனதில் மறுபடியும் தோன்றி மறைந்தது. பணியாளர் மதுவையும், அரை வேக்காட்டையும் கொண்டு வந்து வைத்து விட்டு “வேற எதுவும் வேணுமா சார்?” என்று கீழே குனிந்து கேட்டார். ”தேவைனா கூப்பிடறோம்” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு பாட்டிலைத் திறந்து இருகோப்பையிலும் மதுவை ஊற்றிக் கொண்டிருக்கும் போது அவன் அழுது கொண்டிருப்பதைக் கண்டான். இவன் மனம் கணக்கத் தொடங்கியது. என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தான். இவன் கோப்பையில் இருந்த மதுவில் நீர் ஊற்றி ஐஸ் துண்டுகளை எடுத்து போட்டு கலக்கிக் கொண்டிருக்கும் போது அவன் தள்ளாட்டத்துடன் எழுந்து இவன் கைகளைப் பிடித்துக் கொண்டு ”என்ன மன்னிச்சிடு டா விசு” என்று அழுது கொண்டே கூறினான். அவன் கண்களில் இருந்து பெருக்கெடுத்த கண்ணீர் இவன் கைகளில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது. கைகளை பிடித்துக் கொண்டு அவன் அவ்வாறு சொன்னதும் இவனுக்கு மனம் ரணமாகி வலிக்கத் தொடங்கியது. இனம் புரியாத ஒரு சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டதாக நினைத்தான். மதுக் கூடத்தை விட்டு சட்டென கிளம்பிவிட வேண்டும் என்று தோன்றியது. அவன் கண்களில் நீர் வழிய தேம்பிக் கொண்டிருந்தான். அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மேசையை வெறித்துப் பார்த்த படி அழுது கொண்டிருந்தான். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் சிறிது நேரம் அப்படியே இருந்தனர். பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த இசை அவனுள் துக்கத்தின் அடர்த்தியைக் கூட்டிக் கொண்டிருந்த போது இவன் ”சரி எடுத்து குடிடா” என்று அவனிடம் சொன்னான். அவன் அமைதியாக இருந்தான். மீண்டும் இவனே ”சொல்றேன் இல்ல எடுத்து குடி டா” என்று அவனிடம் சொன்னான். மதுக்கோப்பையை எடுக்க அவன் கை நீட்டிய போது அவன் நடுங்கும் கரத்தை இவன் பார்த்தான். அவன் கோப்பையில் இருந்த மதுவை ஒரே மடக்கில் குடித்து விட்டு கீழே வைத்து விட்டு முள் கரண்டியால் ஒரு துண்டு மாட்டிறைச்சியை எடுத்து வாயில் போட்டு மென்றான். இவனை பார்க்க அவனுக்கு சங்கடமாக இருந்தது. பேசுவதற்கான எந்த சொற்களும் அவனிடம் இல்லாமல் இருந்தன. பாட்டிலில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து ஒரு மிடர் குடித்து விட்டு வைத்தான். வெளியில் மழையின் சட சடப்பு கொஞ்சம் மட்டுபட்டிருப்பதாகத் தோன்றிய போது விசு எழுந்து கழிப்பறை நோக்கிச் சென்றான். பாட்டிலில் இருந்த மதுவை எடுத்து தன் கோப்பையில் ஊற்றி கொஞ்சமாக நீர் ஊற்றி ரமேஷ் குடித்துவிட்டு கீழே வைக்கும்போது இவன் கழிப்பறையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். அதிகமாக மதுவை ஊற்றிக் குடித்ததால் அவன் வாய் குழறியபடியே பேசத் தொடங்கினன். இவன் வந்து எதிரில் அமர்ந்து தன் கோப்பையில் கொஞ்சம் மதுவை ஊற்றிக் கொண்டு அவனிடம் வேண்டுமா என்று கேட்டான். அவன் வேண்டும் என்பது போல தலையாட்டினான். அவனுக்கும் சிறிது ஊற்றிவிட்டு பாட்டிலில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து இரு கோப்பையிலும் ஊற்றினான். அவன் எடுத்து மடக்மடக்கென குடித்து கீழே வைக்கும்போது ”அக்கா தாண்டா கூட்டிச்சி.. நானா போகல” என்று வாய் குழறி குழறி பேசினான். அவன் சொல்லச் சொல்ல இவனது கரங்கள் நடுங்கத் தொடங்கின. கூரிய ஊசியைக் கொண்டு யாரோ தொடர்ந்து தன்னை குத்திக் கொண்டிருப்பதாக உணர்ந்தவன், கோப்பையில் இருந்த மதுவை எடுத்துக் ஒரே மடக்கில் குடித்தான். மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவன் அப்படியே மேசையில் சரிந்தான். வாயில் இருந்து ”அவுங்கதாண்டா என்ன கூப்டாங்க. நானா போவல” என்ற சொற்கள் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தன. அதற்கு மேல் இவனுக்கு குடிக்கத் தோன்றவில்லை. இசை, நடமாட்டங்கள், பேச்சொலி அனைத்தும் இவனுக்கு மேலும் தொந்தரவு கொடுப்பதாகவே இருந்தன. தலையை குனிந்து மேசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.அதீத போதையால் இவனுக்கு தலை சுற்றுவது போல உணர்ந்தான். கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான். பின்னனியில் இசை மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது. மழை முற்றிலுமாக நின்று விட்டிருந்தது. கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வருவதும் போவதுமாக இருந்தனர் சிலர். அக்கா அழைத்தால் இவனுக்கு எப்படி சம்மதிக்க மனது வந்த்து என்று யோசித்தவனுக்குள் கோபம் எரிமலையென உருக்கொள்ளத் தொடங்கியது. அக்காவைப் பற்றி நினைக்கவும் அருவருப்பாக இருந்தது அவனுக்கு. மொத்த கோபமும் எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் மீது திரும்பியது. தட்டில் கிடந்த முள்கரண்டியை எடுத்து ”தேவ்டியா பையா” என்று கத்திக்கொண்டே அவன் கழுத்தில் இரண்டு முறை குத்தினான். ரத்தம் பீறிட்டுக்கிளம்ப அவன் துடிதுடித்துக்கொண்டே கத்தியபடி கீழே சரிந்தான். கழுத்திலிருந்து ரத்தம் இறங்கி தரையில் பரவிக்கொண்டிருந்தது. அவன் பார்வை இவன் மீதே நிலைத்திருந்தது. ”ஒன்மோர் டிரிங்” என்று மேசையைத் தட்டி பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் தூரத்தில் நின்றிருந்த பணியாளரிடம் உரத்தக் குரலில் கேட்டபோதுதான் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்திருந்த விசு கண்களைத்திறந்து பார்த்தான். பதற்றத்தோடு தட்டில் கிடந்த முள்கரண்டியைப் பார்த்தான். பின் எதிர் இருக்கையில் சாய்ந்திருந்த ரமேஷை பார்த்தான். எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை என்று நினைத்தபடியே தன் குரூரமான நினைப்பை எண்ணி சங்கடப்பட்டான். முனகிக் கொண்டிருந்தவனையே இவன் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான். வெளிக்காட்டிக்கொள்ள முடியாத துயரம் ஒரு புழுவைப் போல இவன் மனதில் நெளிந்து கொண்டிருந்த போது பணியாளர் பில்லை எடுத்துக்கொண்டு முகத்தில் வழக்கமான புன்னகையே ஏந்தியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். மஞ்சள் பூசிய மெல்லிய சிரிப்புடன் கூடிய அக்காவின் முகம் இவன் மனதில் திரும்பத் திரும்ப தோன்றி மறைந்தது. ”டேய், கிளாஸ்ல இருக்கறத எடுத்து குடிச்சிட்டு கிளம்புடா. நேரமாவுது” என்று சொல்லிக்கொண்டே ரமேஷை விசு எழுப்பத் தொடங்கினான். அவன் அப்போதும் முனகிக் கொண்டே இருந்தான். ”அவுங்கதாண்டா.. அவுங்கதாண்டா....” எனும் வார்த்தை மிகத் துள்ளியமாக அப்போதும் கேட்டது.