ஏன் இந்த வேலையைத் தோ்ந்தெடுத்தோம் என்று முதன்முதலாக நினைக்கவேண்டியிருந்தது சோமுவுக்கு. கனவுகளை உருவாக்கும் திரவத்தை விற்பனை செய்யும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி பணியில் சோ்ந்த ஆறே மாதத்தில் எப்படி தன்னால் உயா் அதிகாரிகளிடத்தில் நல்ல பெயரை தக்க வைத்துகொள்ள முடிந்தது என்று எப்படி யோசித்துப்பார்த்தாலும் அவனுக்கு விளங்கவில்லை. எந்த் சிக்கலும் இல்லாமல் சென்றுகொண்டிருந்த விற்பனை பிரதிநிதி வேலையில் கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த காளிதாஸ் ரூபத்தில் அவனுக்கு பிரச்சனை எழத் தொடங்கியது.
வேலையில் சேர்ந்த புதிதில் நிறுவனத்தின் மீது நம்பிக்கை எழாமலேயே பணி செய்யத் தொடங்கினான். கனவுகளை விற்பனை செய்யக்கூடிய ஒரு நிறுவனம் உலகத்தில் இருக்குமா என்றுகூட தொடக்கத்தில் யோசித்திருக்கிறான். நேர்முகத்தேர்வுக்கு செல்லும் முன்பு அந்நிறுவனத்தின் பின்புலத்தை வலைதளத்தில் தேடி அறிந்தபோது அவனுக்கு தலைசுற்றியது. கனவுகளைத் தோற்றுவிக்கக்கூடிய திரவத்தை வகை வகையாகப் பிரித்து. பட்டியலிட்டு தகுந்த விலை நிர்ணயம் செய்து ஒழுங்கு செய்திருந்ததைக் கண்டு ஆச்சா்யம் கொண்டான். பயனாளிகளிடம் குப்பியில் அடைத்திருக்கும் கனவுகளை உருவாக்கும் வண்ண வண்ண திரவங்களை எப்படி விற்பது; எப்படி அருந்தச் சொல்லி கனவுகளை உருவாக்கிக்காண்பிப்பது என்பனவற்றை விரிவாகப் படித்துப் பார்த்தான். புதிய உலகத்திற்குள் உலவுவதுபோல இருந்த அவனுக்கு இந்த உலகம் இன்னும் என்னவெல்லாம் உற்பத்தி செய்யப்போகிறதோ என்ற ஐயமும் ஏற்பட்டது.
ஒருவன் காணும் கனவை எப்படி இந்த திரவத்தால் தீா்மானிக்க முடிகிறது; இதனுள் என்னவெல்லாம் கலந்திருக்கிறது. கனவுத் தன்மையை இந்த திரவத்திற்குள் யார் யாரெல்லாம் ஏற்றியிருக்கிறார்கள் என்பனவற்றை யோசிக்க யோசிக்க அவனுள் ஆச்சரியத்தின் பிடி இறுகத்தொடங்கியது.
ஆச்சரியமும் மயக்கமும் ஏற்படுத்தக்கூடிய இந்த வேலையில் சோ்வதென்று தீா்மானித்து விண்ணப்பித்தான். பின் எழுத்துத்தேர்விலும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்று நிறுவனத்தின் மூலம் வாரணாசியில் அளிக்கப்படும் பயிற்சிக்கு சென்றான். நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பயிற்சிக்காக வந்திருப்பவர்களிடமிருந்து அவன் ஒதுங்கியே இருந்தான். கனவு என்பது உண்மையில் என்ன; அது எத்தனைவகைகளாக இருக்கிறது; மனிதர்கள் எவ்விதமான கனவுகளைக் காண விரும்புகிறார்கள் என்னும் தலைப்புகளில் காலை பாடவேளைகளில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. மாலை வகுப்புகள் பொதுவாக செய்முறை வகுப்புகளாகவே இருந்தன. பல்வேறு மூலிகைகள் மற்றும் தாவரங்களின் வேர்களில் இருந்து எப்படி கனவுகளை உற்பத்தி செய்யக்கூடிய அத்திரவம் தயார் செய்யப்படுகிறது என்று கற்றுக்கொடுக்கப்பட்டது. பயிற்சியின் ஒவ்வொரு நாளிலும் அவனுக்கு ஆச்சரியத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. பயிற்சி முடித்து ஆறுவார காலம் தொழில் பழகுனர் பயிற்சிக்காக அவன் கோவாவில் அமைந்திருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டான். இறுதியில் அவன் விரும்பியபடி தமிழ்நாட்டிற்கே பணி செய்ய அனுப்பப்பட்டான்.
வானம் மேகமூட்டமாக இருந்த அன்று வியாபார நிமித்தமாக அவன் கண்டாச்சிபுரம் வீரப்பாண்டி சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான். கனவுகளை உருவாக்க கூடிய கண்ணாடி குப்பிகள் அடங்கிய பையை தன் தோள்பட்டையில் மாட்டியிருந்தான். சாலையின் இருபுறத்திலும் காடு அடா்ந்து கிடந்தது. மழைவருவதுபோல இருந்ததால் அவன் காட்டு ஐயனார் கோவில் எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக உட்கார்ந்தான். காலையில் இருந்து சுற்றியும் ஒரு குப்பியைக் கூட விற்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு ஏற்பட்டது. தோளில் மாட்டியிருந்த பையை கழற்றி திறந்து, கண்ணாடி குப்பிகளை எடுத்து முகத்துக்கு நேராக வைத்து பார்த்தான். குப்பிகளுக்குள் கனவின் திரவம் நுரைத்துக் கொண்டிருந்தது. வெளியில் லேசாகத் தூறத் தொடங்கியிருந்தது. இதுநாள் வரை இத்திரவத்தை அருந்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியதில்லை. மழையின் நிமித்தம் அதை அருந்தி கனவு காண வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.எந்த கனவைக் கண்டால் இப்போதைக்கு சந்தோஷமாக இருக்கும் என்றும் யோசித்துப்பார்த்தான். விலைப்பட்டியலை எடுத்துப் படித்துப் பார்த்தான். காதல் எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்த திரவங்களின் குறிப்புகளை வாசித்துப்பார்த்தான். அடர் பச்சை நிறத்தில் இருந்த குப்பியை எடுத்தான். அதன் கூடவே இருந்த கையேட்டையும் எடுத்து படித்துவிட்டு பதினைந்து நிமிடங்கள் வரை கனவை உண்டுபன்னும் அளவிற்கான திரவத்தை மிகுந்த கவனத்துடன் அருந்தினான். தன்னுடன் ஏழாவது வகுப்பில் படித்த பூங்குழலியைப் பற்றிய கனவுகளுக்காக கண்களை மூடினான். நாவில் பட்ட திரவம் சுவை அரும்புகள் மூலம் அவனுள் பூங்குழலி குறித்த சித்திரத்தை வரையத் தொடங்கியது.
ஏ.எம்.பி சார் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த போது பக்கத்து வகுப்பில் ஜி.எஸ் சார் சிவக்குமாரை போட்டு அடித்துக் கொண்டிருந்தார். தூரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவா்கள் கால் பந்தை உருட்டிக் கொண்டிருந்தனா். தன் முத்து முத்தான கையெழுத்தினால் ஆசிரியா் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்தார். நசீராவும் பூங்குழலியும் தங்கள் புத்தகப்பையில் கையைவிட்டு என்னவோ செய்து கொண்டிருந்தனா். சிறிது நேரத்தில் ஆரஞ்சு பழ வாசனை வகுப்பெங்கும் நிரம்பியது. அதை உணா்ந்த ஆசிரியா் திரும்பி இவா்களைப் பார்த்தார். அருகில் வந்தவர், இருவர் முதுகிலும் ஓங்கியறைந்தார். “இதுதான் ஆரஞ்சி பழம் சாப்பிடற நேரமா?” என்று கத்தியபடியே மீண்டும் கரும்பலகை நோக்கி சென்றார். இருவா் கண்களிலும் நீா் கோர்த்துக்கொண்டதை இவன் பார்த்தான். பூங்குழலியைப் பார்க்க அவனுக்கு சங்கடமாக இருந்தது. தன் அத்தை வீட்டுக்கு பால் வாங்க வந்த அவளை மாட்டுக் கொட்டகையில் வைத்து இறுக்கி அணைத்து முத்தமிட, அவள் திமிறியோடினாள். அடுத்த பாடவேளைக்கான மணி அடித்தது.
மழைச்சாரல் அதிகமாக மண்டபத்திற்குள் வந்தபோது இவன் கனவு கலைந்து புரண்டு படுத்தான். சிறிது நேரத்திற்கு முன் கனவில் வந்த பூங்குழலியின் முகம் அவன் மனத்திரையில் முழுநிலவைப்போல மிதந்தபடியே இருந்தது. வெளியே எட்டிப்பார்த்தான். மழை அடா்த்தியாகப் பெய்து கொண்டிருந்தது. மீண்டும் பையைத்திறந்து பச்சை நிறத் திரவத்தை எடுத்து சிறிது அருந்திவிட்டு மீண்டும் கீழே படுத்து கண்களை மூடிக்கொண்டான். பூங்குழலியின் சித்திரம் மீண்டும் அவனுள் கூடத் தொடங்கியது.
ஆலமரத்தின் கீழ் இருந்த மிதிவண்டி நிறுத்துமிடத்தில் இவன் அமா்ந்திருந்தான். உயிரியல் ஆய்வுக் கூடத்திற்கு பின்புறம் கோணலூரார் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தார். பெயர் சொல்லி தன்னை யாரோ கூப்பிடுவதாக உணர்ந்தவன் திரும்பிப்பார்த்தான். அவள் இரண்டு ஐஸ்கிரீம்களை கைகளில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். தனக்குதான் தரப்போகிறாள் என்று நினைத்துக்கொண்டே அருகில் செல்ல அவள் மேற்குப் புறமாக நடந்து நசீராவிற்கு கொடுத்தாள். இவனுக்கு மனம் சங்கடமாக இருந்தது. இவன் கஷ்டப்படுவதை அவளும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். இவள் கூப்பிட்டிருக்காவிட்டால் தன்னை வேறு யார் கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைத்தடியே மீண்டும் ஆலமரத்தின் கீழ் உட்காரச் சென்றான்.
திரவத்தின் வீரியம் குறையத்தொடங்கியதும் கூரிய கத்தியைக் கொண்டு நுணுக்கமாக அறுப்பதைப் போன்று கனவு துண்டிக்கப்பட்டது. அவனுள் கிளா்ந்தபடியே இருந்த பூங்குழலியின் நினைவுகளால் அவன் மனம் பித்தேறிக் கிடந்தது. மறுபடியும் அத்திரவத்தை கொஞ்சம் அருந்தினான். மேகம் மெல்ல கலையத்தொடங்கி இருந்தது. மரங்களின் சலசலப்பு காடெங்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவனுள் மீண்டும் மெல்ல உருக்கூடத் தொடங்கியது பூங்குழலியின் நினைவுகள்.
வாணியச் செட்டியார் வீட்டு தெரு முக்கில் இவன் நின்று கொண்டிருந்தான். தன் ஆயா வீட்டிற்கு செல்வது போல வரும் அவள் இவனுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே செல்வாள். அது போன்றதொரு நாளில் தான் செட்டியார் வீட்டு தோட்டத்தில் வைத்து அவளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தான். தோட்டத்து ஓட்டுவீட்டில் போட்டிருந்த கட்டில் மீது இருந்த தட்டில் கிடந்த எண்ணெய்ப் புண்ணாக்கை எடுத்து அவள் வாயில் வைத்து தினிக்க, வழக்கம் போல அவள் திமிறிக்கொண்டே ஓடினாள். மிதிவண்டியை எடுத்துக்கொண்டு இவன் சந்தப்பேட்டை தெரு வழியாக கிளம்பினான். அந்த வாரத்தின் திங்கட்கிழமை அவளை ஐயனார் கோயிலுக்கு வரச் சொல்லி இருந்தான். நெடுநேரம் கடந்தும் அவள் வரவில்லை. என்ன காரணம் என்றும் இவனுக்கு தெரியவில்லை. கோவிலுக்கு அவள் வராததை எண்ணி பொறுமை இழந்தவனாக வீட்டிற்கு திரும்பிவரும் வழியில் இரட்டைச் சுனைக்கருகில் பூங்குழலியின் அம்மாவும் பில்காவீட்டு ராமுவும் தனிமையில் பிணைந்து கிடப்பதை கண்டான். அதைக் கண்ட அவனுக்கு உடம்பெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. ஒருவித பதற்றத்தை அவன் உணரத் தொடங்கினான். மறுநாள் ஏன் கோவிலுக்கு வரவில்லை என்று இவன் கேட்டதற்கு “இந்தவாரம் நான் கோவிலுக்கு போறேன். அடுத்தவாரம் வேணா நீ போனு அம்மா சொன்னாங்க” என்று அவள் சொன்னாள். அந்த நொடியில் அவள் முகத்தைப் பார்ப்பதற்கு பாவமாக இருந்தது இவனுக்கு.
“தம்பி எழுந்திருங்க” என்று கோயில் பூசாரி இவனை எழுப்பவும் கனவு முழுமை பெறவும் சரியாக இருந்தது. கனவு அவனுள் அதீத பதற்றத்தை ஏற்படுத்தியிருந்ததை உணரமுடிந்தது. பூங்குழலியைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போது அவள் அம்மாவைப்பற்றிய நினைவுகள் ஏன் தன் கனவில் வரவேண்டும்; அதுவும் வேறொருவனுடன் படுத்துக்கிடக்கும் காட்சியையா காணவேண்டும் என்றும் யோசித்தான். அக்கனவில் இருந்து விடுபடமுடியாதவனாக முகம் வெளிறிக் காணப்பட்டான். ஏன் தான் மூன்றாம் முறை திரவத்தை அருந்தினோமோ என்று நினைத்தான். கனவில் புரளும் அவள் முகத்தை மறுபடியும் காண விரும்பி மீண்டும் அத்திரவத்தை அருந்த அது தன்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றுவிட்டதே என்று எண்ணிக்கொண்டே மண்டபத்திலிருந்து கீழிறங்கி வண்டி நோக்கி நடக்கத் தொடங்கினான்.
இவ்வளவு துல்லியத்துடன் இயங்கும் திரவம் எப்படி காளிதாசுக்கு மட்டும் வேறுவிதமாக இயங்கக்கூடும் என்று இவன் திரும்பத்திரும்ப யோசித்தபடியே இருந்தான். “கலா் கலா் தண்ணிய கொடுத்து யார யாமாத்த பாக்கற?” என்று கோபத்தோடு கேட்டுக்கொண்டே காளி இவனை மடக்கிப்பிடித்துக் கொண்டான். என்னென்வோ சொல்லிப்பார்த்தாலும் கூட அவன், இவனை விடுவதாக இல்லை. இவன் யார் யார்மீதோ சத்தியம் செய்துபார்த்தான். நாவில் பட்ட நொடியில் இருந்து கனவை வோ்விடத்தொடங்கும் திரவம் எப்படி வேறுவிதமான கனவுகளை அவனுள் கிளைக்கத் தொடங்குகிறது என்று புரியவில்லை. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இவன் “உனக்கு என்ன கனவு வருது?” எனக் கேட்டான். “அத குடிச்சா என் ஆளு கலா்கலரா வருவான்னு சொன்ன. எனக்கின்னா வருது தெரியுமா?” என்று கண்களை உருட்டிக் காட்டினான். மீண்டும் அவனே சொல்லத் தொடங்கினான்: “இதுல பத்து சொட்ட போட்டுகினு படுத்த கொஞ்ச நேரத்துல எங்க கோயில் வாசல்ல எப்பவும் படுத்து கெடக்கும் சாம்பமூர்த்தி,தெக்கவூட்டு கௌரி அக்காவை டி.வி.எஸ் பிப்டியில தள்ளிக்கினு போற மாதிரி தெனமும் வருது” என்று இவன் கூறி முடிப்பதற்குள் “யாரு டீக்கடை மூர்த்தியா?” என்று அவன் கேட்டான். அதற்கு இவன், “டீ கடை மூர்த்தியும் இல்லை பீக்கடை மூர்த்தியும் இல்லை. சாட்சாத் சனிமூல வீட்டு சாம்பமூர்த்திதான்” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான். இவன் மேலும் குழப்பம் அடைந்தான். எப்படி இவன் கனவில் சாம்பமூர்த்தி, கௌரியுடன் இருசக்கரவாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சி தோன்றுகிறது என்று திரும்பத்திரும்ப தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். காளிதாஸின் முகமும் தீவிரத்துடனேயே இருந்தது. சுற்றி நின்று கொண்டிருந்தவா்கள் ஏதும் விளங்காமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனா். அத்திரவத்தை அருந்தி முதன்முதலாக தான் கண்ட கனவின் காட்சிகள் காளியின் மனதில் சுழலத்தொடங்கின. பேசுவதற்கு ஒன்றும் இல்லாது இருந்த மக்கள், சாம்பமூர்த்தியையும் கௌரியையும் இணைத்து பலவாறாக பேச த்தொடங்கினர்.
கண்ணாடிபுட்டியில் அடைக்கப்பட்டிருந்த திரவத்தை கையில் ஏந்தி சுழற்றிப் பார்த்தான் காளி. அது உள்ளே நுரைத்துக் கிடந்தது. அத்திரவத்தை அருந்துவதற்குள்ளாகவே அவனுக்கு தன் காதலியுடனான நினைவுகள் மனதில் பெருக்கெடுக்க ஆரம்பித்தன. “ஓய்வா இருந்தா ஒரு மிஸ்டுகால் கொடு” என்று அவள் அனுப்பும் குறுஞ்செய்தி அவன் மனத்திரையில் மின்னத்தொடங்கியதும் குப்பியின் மூடியைத் திறந்து பத்து சொட்டு அளவிற்கு வாயில் ஊற்றிக்கொண்டு கண்களை முடி படுத்துக்கொண்டான். சுவை நரம்புகள் அவனுள் கனவின் பாதையை கிளைக்கத் தொடங்கின.
அதிகாலை நான்கு மணிவாக்கில் தூக்கம் கலைந்து எழுந்த காளி கம்பத்தடியில் இருந்த தென்னை மரத்தின்கீழ் அமர்ந்து சிறுநீர் கழித்து கொண்டிருந்தான். மடத்திற்கு எதிரில் இருந்த வேப்பமரத்தை இருட்டில் பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது.சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளி கோவில் கோபுரத்தை வேறு நிறமாக்கி காட்டிக்கொண்டிருந்தது. தெற்குவீட்டு கௌரிஅக்கா இடுப்பில் குடத்துடன் சர்க்கார் கிணற்று பக்கமாக சென்று கொண்டிருந்தாள். அதேநேரம் பூட்டியிருந்த கோயில் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. யார் திறப்பது என்று காளி திரும்பிப் பார்த்தான். கதவைத்திறந்துகொண்டு உள்ளே இருந்து சனிமூலவீட்டு சாம்பமூர்த்தி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே வெளியில் வந்தார். வந்தவர் நேராக கிணற்றடியில் இருந்த மடம் நோக்கிச் சென்றார். அங்கு நிறுத்தியிருந்த டிவிஎஸ் பிப்டியை காலால் உதைத்து கிளப்பி, ஏறி அமர்ந்து கிணற்றடி நோக்கிச் சென்றார். அவருக்காக காத்திருந்தது போலவே கௌரி அக்கா வண்டியின் பின்புறம் ஏறி அமர்ந்து சாம்பமூர்த்தியின் தோளில் கையை போட்டுக்கொண்டாள். வண்டி தெற்குமாட வீதி பக்கமாக பெருஞ்சீற்றத்துடன் புறப்பட்டுச் சென்றது. ஒரு புள்ளியாகி மறையும் வரை காளி உற்றுப்பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் நடப்பது கனவா நினைவா என்று புரியாமல் தன்னை கிள்ளிப்பார்த்துக் கொண்டான். இருசக்கர வாகனத்தை யார் அங்கு நிறுத்திவிட்டுச் சென்றிருப்பார்கள் என்றும் யோசித்துப்பார்த்தான். அவன் கண்களை அவனாலேயே நம்பமுடியாமல் மனம் குழம்ப ஆரம்பித்து, லேசாக வியர்க்கவும் தொடங்கியது.
“டேய் என்ன பெனாத்தற?” என்று அவன் அப்பா அவனைத்தட்டி எழுப்பியதும் அவன் கண்டு கொண்டிருந்த கனவு கலையத் தொடங்கியது.
அதன் பிறகு அவன் எத்தனையோ முறை அந்த திரவத்தை அருந்திப் பார்த்தான். திரும்பத் திரும்ப அதே துல்லியத்துடன் அந்த கனவு வந்து கொண்டே இருந்தது. தன் மனநிலை குறித்து அவன் பீதியடைந்தான். தனக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என்றும் அஞ்சினான். எப்படியாவது இதிலிருந்து வெளிவந்து விட வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அந்த கனவு அவனை பாடாய்ப்படுத்த ஆரம்பித்தது. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் அவன் தவித்தான். தன் புத்தக அலமாரியில் வைத்திருக்கும் அந்த பச்சை நிறத்திரவத்தைப் பார்க்கவே அவனுக்கு பயமாக இருந்தது. எடுத்து வெளியில் வீசிவிடலாமா என்றும் யோசித்தான். ஆனால் அதன் பிறகும் கௌரி அக்கா பலமுறை அவனைக் கடந்து தண்ணீர் எடுக்க சென்றுவருவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த கனவு தனக்கு என்ன உணர்த்த வருகிறது என்று அவனால் உணரமுடியவில்லை. எப்போதும் அவன் மனம் குழப்பத்தையே சுமக்கத் தொடங்க ஆரம்பித்தது, அந்த கனவினால் தனக்கு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்றும் அஞ்சினான். ஆனால் இவனைத் தவிர திரவத்தை உட்கொள்ளும் வேறு எவருக்கும் கனவு காண்பதில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படவில்லை. தங்கள் விருப்பத்திற்கேற்ப அவர்கள் தங்கள் கனவுகளை உற்பத்தி செய்து மனம் மகிழ்ந்து கொண்டிருந்தனர். மற்றவர்களைப் பார்க்கும் போது இவனுக்குப் பொறாமையாக இருந்தது.
காளியைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் சோமுவுக்கு நாகலட்சுமியின் நினைவு வந்துவிடுகிறது, எப்படியாவது இதுபோன்ற நினைவுகளை மறந்துவிட வேண்டும் என்று எத்தனையோ முறை இவன் யோசித்துமிருக்கிறான் .ஆனாலும் ஒவ்வொருமுறையும் அவளின் நினைவுகள் சங்கிலியின் அடுத்த கன்னியாக மாறி நீளவேச் செய்கிறது.
நாகலட்சுமியின் காதல் மிகத் தீவிரம் கொண்டதாக இருந்தது. ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் மீது அவள் காதல் விரிந்து படரத் தொடங்கியது. மணிக்கணக்கில் நீளும் அலைபேசி உரையாடல் வழியாக அவர்கள் தங்கள் நேசத்தை மேலும் வலிமை கொண்டதாக மாற்றிக் கொண்டிருந்தனர். பெற்றோர்களுக்கு விஷயம் தெரியவர எல்லாம் ரணகளத்தில் முடிந்தது,
எதுவுமே நடக்காதது போலவே நாகலட்சுமியின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. அவள் தந்தை அவளுக்கு எல்லாவிதமாகவும் எடுத்து சொல்லிப்பார்த்தார். அடித்து கூந்தலை கத்தரித்து அறையில் வைத்து அடைத்துப்பார்த்தார். ஆனால் தொடர்ந்து அவள், அவன் மீதான நேசத்தின் தீவிரத்தை கூட்டியபடியே இருந்தாள். “ பரம்பரை மானத்த வாங்கவந்திருக்கும் தேவிடியாவ சாப்பாட்டுல வெஷத்த வச்சி கொன்னுடு” என்று பலரும் அவரிடம் சொன்னார்கள். அது ஒன்றை மட்டும் செய்ய அவர் மனம் ஒப்பவில்லை.
தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கனவுகளைத் தீர்மானிக்கும் திரவத்தைப் பற்றிய விளம்பரம் அவரை சற்று ஆசுவாசப்படுத்தியது. தன் மகளின் மனதை மாற்றிவிடக்கூடிய சர்வரோக நிவாரணியாக அவ்விளம்பரத்தை அவர் உணர்ந்தார். கனவுகளின் மூலமாக மனதை மாற்றிவிடக்கூடிய அந்த திரவத்தை அடைய அவருக்கு முன்று நாட்கள் பிடித்தது.
மனதில் தேங்கிக் கிடக்கும் எத்தனை கடுமையான நினைவுகளையும் இந்த திரவத்தை தொடர்ந்து அருந்துவதன் மூலம் மனதில் இருந்து துடைத்தெறிந்து விடலாம் என்ற விற்பனை பிரதிநிதியின் வார்த்தைகள் அவருக்கு தெம்பாக இருந்தது. அது தொடர்பான அச்சிடப்பட்ட விளக்கக் குறிப்புகள், பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களை எல்லாம் வரிக்கு வரி அவர் படித்துப் பார்த்தார். அவர் முன் திரண்டிருந்த பிரச்சனையின் தீவிரம் படிப்படியாக கரையத் தொடங்கி இருந்தது.
“காதல் பற்றிய ஞாபகமே அவளுக்கு வரக்கூடாதுனா நீங்க இந்த குப்பியை வாங்கிட்டுபோங்க” என்று கடைப் பணியாளர் கூறினார். உரிய விலை கொடுத்து வாங்கி கையில் ஏந்தி அவர் அதைச் சுழற்றிப் பார்த்தார். நீல நிறத்தில் குப்பிக்குள் இருந்த திரவம் நுரைத்துக்கொண்டிருந்தது.
முதலில் அவளுக்கு வலுக்கட்டாயமாகவே அத்திரவத்தைப் புகட்ட வேண்டியிருந்தது. திரவம் அவள் நாவில் பட்ட சில நொடிகளுக்குப் பின் கருமை படர்ந்திருந்த அவளின் முகம் மெல்ல பொலிவு கூடத் தொடங்கியது. சோர்ந்து போயிருந்த அவளின் விழிகளில் பிரகாசம் படர்ந்தது மறுநாள் விடியலில் இருந்து அவள் எழுந்து நடமாடத் தொடங்கிளாள். அதைத் தொடர்ந்த நாட்களில் அவள் வழக்கம் போல கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினாள். பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத விரக்தியில் அந்த வாரத்தின் கடைசி நாளில் அவள் சித்தப்பா மகன், அவன் வீட்டு மாட்டு கொட்டகையில் தூக்கில் தொங்கி இறந்துபோனது கூட அவளை பாதித்துவிடாதபடி அத்திரவம் துள்ளியமாக வேலை செய்யத்தொடங்கியிருந்தது.
தன் சித்தப்பா மகன் காரியம் முடிந்த பதினாறாம் நாள் அவள் தலைக்கு குளித்து முகம் முழுக்க மஞ்சள் பூசிக்கொண்டு அடர் சிவப்பு நிறத்திலான சேலையை அணிந்து, பாப்பான் குளக்கரையில் இருந்த ஏழுகன்னிமார்கள் கோவிலுக்குச் சென்றுவந்தாள். அதன் பிறகு வீட்டில் அடிக்கடி விட்டத்தைப் பார்த்து நீண்ட சிரிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். வீட்டில் இருந்தவர்களை மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. அவள் மெல்ல மெல்ல தன்நிலை மறக்கத் தொடங்கினாள். அன்றாட செயல்களைச் செய்யக்கூட அவளை கட்டாயப் படுத்த வேண்டியிருந்தது.
அவள் கூந்தல் சிக்குபிடித்து துர்நாற்றம் வீசத் தொடங்கிய நாளில் அவர் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அதற்குமேல் அவளை வீட்டிற்குள் வைத்திருக்க யாரும் விரும்பவில்லை. அவள் வீட்டில் நிரந்தரமாக ஆந்தைகள் தங்கி பெரும் சப்தத்தோடு அழத்தொடங்கிய நாளில் அவள் வெளியே துரத்தப்பட்டாள். கைகால்களில் கிழிந்த துணிகளை கட்டிக்கொண்டு, சிக்கு பிடித்த கூந்தலோடு பலவண்ண மணிமாலைகளை கழுத்தில் அணிந்துகொண்டு அவள் ஊரின் அனைத்து தெருக்களிலும் அலைந்து கொண்டிருந்தாள்.
ஒரு மழைநாளின் பகல் பொழுதில் சிவன்கோயில் அருகில் இருந்த நந்தவனத்தில் வைத்து அவளை வடக்குவீட்டு மொட்டையன் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை தெரு மக்கள் சிலர் பார்க்கவும், அவன் விழுந்து அடித்துக் கொண்டு ஏரிப்பக்கமாக ஓடினான். அவளை இழுத்துச்சென்று கம்பத்தடியில் கட்டி பயங்கரமாக தாக்கினர். அவள் பெருங்குரல் எடுத்து அழுதாள். வலி பொறுக்க முடியாமல் மயங்கி கீழே சரிந்தவுடன் தான் கூட்டம் அவளை விட்டுச் சென்றது. அன்று ஊரை விட்டுச் சென்றவள்தான் அதன் பிறகு திரும்ப வரவேயில்லை.
வீட்டிற்கு வந்த பிறகும் கூட தன்னை நான்கு போ் முன்னிலையில் காளி அவமானப்படுத்தியதை சோமுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதுவுமே அவனுக்கு முழுமைபெறாமல் தெளிவின்றி தெரிந்தது. கனவுகளை உருவாக்கும் திரவத்தை விற்பனை செய்வதில் தன் பங்கு என்னவாக இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தான். நுட்பமான ஒருமாய வலையில் தான் சிக்குண்டு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அத்திரவத்தை குறித்து துள்ளியமான முடிவுக்கு அவன் வரமுடியாமல் தவித்தான். இவா்கள் இருவருக்கு மட்டும் திரவம் சரிவர செயல்படவில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஒரு கண்டுபிடிப்பை நிராகரித்து விட முடியுமா என்றும் சிந்தித்தான். காளியின் வார்த்தைகள் அவனை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. வேலையைவிட்டே நின்றுவிடலாமா என்றும் கூட யோசித்தான்.
பயிற்சியின்போது வாரணாசியில் மட்டும் கனவை ஏற்படுத்தக்கூடிய அத்திரவம் எப்படி அனைவரிடத்திலும் நுட்பமாக வேலை செய்தது என்று நினைத்துப் பார்த்தான். எல்லாமே கண்கட்டு வித்தைதானோ என்ற ஐயமும் அவனுக்கு ஏற்பட்டது. பல அறிவியல் சோதனைகள் மூலம் அனைவரின் கனவுகளையும் பதிவு செய்து தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்ட பின்புதானே இக்கண்டுபிடிப்பு உலக சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் மேலும் இதுபோன்ற அரிய கண்டுப்பிடிப்புகளை எந்த ஆய்வுகளும் இன்றி மேம்போக்காக சந்தைக்கு கொண்டு வந்துவிட முடியுமா என்றும் அவனுக்குள் தாறுமாறாக சிந்தனைகள் ஓடத்தொடங்கின.
எண்ணவோட்டத்தை மாற்ற என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தான். ஒரு பயனும் ஏற்படவில்லை. திரும்ப திரும்ப அவன் இத்திரவத்தை பற்றியே யோசிக்க வேண்டியிருந்தது. அடிப்படையில் எல்லா கண்டுபிடிப்புகளுமே பொய்மையில் இருந்துதான் தோன்றுகிறதோ என்று யோசிக்கும் போதே அவனுக்கு பதற்றமாக இருந்தது.
தன்னை யாரோ தட்டி எழுப்புவதை உணா்ந்த சோமு தூக்கம் களைந்து எழுந்து பார்த்தான். முகத்தை கோபத்தோடு இறுக்கமாக வைத்துக்கொண்டு அவன் மனைவி அருகில் நின்று கொண்டிருந்தாள். என்ன என்பதுபோல அவன் அன்னாந்து அவளைப் பார்த்தான். மனநல மருத்துவரிடம் இவனை ஒவ்வொருமுறையும் அழைத்து செல்ல தான் படும் கஷ்டங்களை மனதில் நினைத்தபடி “டாக்டா் குடுத்த மாத்திரையை போட்டுகினு துங்குங்கனு எத்தன நாள் சொல்றது இப்படி ராத்திரி முழுக்க பெனாத்திகினே இருந்தா மத்தவங்க எப்படி தூங்க முடியும்?” என்று திட்டிக்கொண்டே மேசைமீதிருந்த மாத்திரைகளை எடுத்து அவனிடத்தில் கொடுத்தாள்.
தான் இதுவரை கண்டதெல்லாம் கனவுதானா என்று அவனுக்கு குழப்பாக இருந்தது. ஜன்னல் வழியாக வெளியில் எட்டிப் பார்த்தான் இருட்டாகவே இருந்தது. தெருநாய் குரைத்துக்கொண்டு இவன் வீட்டு சந்துப்பக்கமாக ஓடியது. மனக்குழப்பத்துடனேயே மாத்திரைகளை வாயில் போட்டு தண்ணீா்குடித்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டான். அந்த நேரத்திலும் அவனுக்கு கனவை உருவாக்கக்கூடிய அந்த திரவத்தின் நினைவு வந்து அலைகழித்தது. பின் அந்த நினைவுகளோடே அவன் தூங்கியும் போனான்.
சில மாதங்கள் கடந்த நிலையில் வழக்கம்போல சோமு விடியற்காலை எழுந்து தேனீா் கடைக்குச் சென்றான். அங்கு அமா்ந்து தேனீா் அருந்திக் கொண்டே எதிரில் கிடந்த தினசரியை எடுத்து புரட்டினான். அதில் மூன்றாம் பக்கத்தில் வெளியாகியிருந்த கீழ்கண்ட செய்திகளை படித்த சோமுவின் உடல் முழுக்க நடுக்கம் பரவியது. மயக்கம் வருவது போல உணர்ந்தவன் விசுப்பலகையை இறுகப்பற்றிக்கொண்டான். மீண்டும் பழைய நினைவுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அவனுள் புரளத்தொடங்கின. தெளிவாக உணரமுடியாதபடி மங்கிய நிலையிலேயே அனைத்தும் இருந்தன. உண்மையும் பொய்யும் ஒன்று தானோ என்று யோசித்தபடியே தன் பாதங்களுக்கு கீழ் இருந்த தரையை கால்களால் அழுத்திப்பார்த்தான். அப்போது அந்தச் சிமெண்ட் தரை நழுவத்தொடங்கியது.
செய்தி : 1
கடும் மின்வெட்டு, பஞ்சம், பசி, மற்றும் பட்டினி ஆகியவற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் உகாண்டாவில், அரசுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான போராட்டங்களையும் ஒடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு இலவசமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கனவை உருவாக்கக் கூடிய ஒருவகை திரவத்தை வீடு வீடாக சென்று வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது.
செய்தி : 2
கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த கௌரி வயது 37, காளிதாஸ் வயது 29 இருவரும் தலைவாசல் அருகே இரண்டு வாரங்களுக்கு முன்பு கண்டாச்சிபுரம் கோவிலில் காணாமல் போன பழமைவாய்ந்த ஈஸ்வரன் சிலையை விற்க முயற்சித்தபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.
No comments:
Post a Comment