Tuesday, July 1, 2014

வாய்க் கட்டு


பெங்களூர், கொம்பே கௌடா நகர் மரங்கள் சூழ அமைந்திருந்தது. பசுமையான சூழல்களுக்கு மத்தியில் இருக்கும் National Institute of Mental Health and Neuro Science எனும் இந்தியாவின் முதன்மையான மருத்துவ மனையின் சி பிளாக்கில், 148வது வார்டில் டாக்டர் வர்கீஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பில் அவர் அனுமதிக்கப் பட்டிருந்தார். சென்னை அடையாரில் உள்ள ஒரு பிரபல மனநல மருத்துவர்தான் “ நீங்க பெங்களூர் NIMHANS-கு போறது தான் நல்லதுனு தோனுது” என்று அவர்களை அங்கு அனுப்பி வைத்தார்.

அவருக்கு என்ன ஆயிற்று என்று புரியும் படியாக அதுவரை ஒருவரும் சொல்லவில்லை. முதலில் விழுப்புரத்தில் பார்த்த மருத்துவர் அவரை சோதித்துப் பார்த்துவிட்டு “ யார் சொல்றதையும் கேட்காதிங்க. உடனே வேலூர் பாகாயம் கூட்டிட்டு போங்க” என்று அனுப்பி வைத்தார். பாகாயத்தில் இருந்த மருத்துவர், ஒரு நாள் முழுக்க சோதித்துவிட்டு, சென்னைக்கு கொண்டுபோக சொல்லி கடிதம் கொடுத்தார். சென்னையில் ஒருவாரம் உள்நோயாளியாக தங்க வைத்தனர். ஈ.ஈ.ஜியில் ஆரம்பித்து மூளை தொடர்பாக என்னென்ன சோதனைகள் இருக்கிறதோ அத்தனை சோதனைகளும் எடுத்துப்பார்க்கப்பட்டது, மருத்துவர் இவருடைய மனைவியை அழைத்து “உங்க கணவர் சொல்றது எதுவும் நம்பும் படியாக இல்லை மா. ஆனால் அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். “அப்படி என்ன டாக்டர் அவர் சொல்றார்?” என பயத்துடன் அவள் கேட்டாள். “யானை பேசுது என்கிறார் மா” என அவர் பதிலளித்தார். “அடக்கடவுளே” என்று அவள் தலையில் கை வைத்து அழத்தொடங்கினாள். முடிந்தவரை அவரும் வைத்தியம் செய்து பார்த்தார்.மாத்திரைகளை மாற்றிப் பார்த்தார். அதன் வீர்யத்தை கூட்டியும் குறைத்தும் தொடர்ந்து கண்காணித்தார். எவ்வித முடிவுக்கும் வரமுடியாமல் தவித்தார். அவருடைய மனைவி மருத்துவரிடம் கேட்டாள். “ டாக்டர் வேற எங்கயாவது கூப்டுட்டுப் போலாமா?”. அதன் பிறகு தான் அவர் பெங்களூரில் இருக்கும் NIMHANS-கு பரிந்துரை செய்ய வேண்டியிருந்தது.

மொழி புரியாத ஊரில் அவருடைய மனைவி மனக்குழப்பத்தோடும் பயத்தோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள். தன் வாழ்க்கையே சூன்யமாகிவிடுமோ என்ற பயம் அவளை அலைகழித்துக் கொண்டிருந்தது. சரியான உணவும் தூக்கமும் இன்றி அவளும் மனநலம் குன்றியவளைப்போலவே காணப்பட்டாள். எப்போது அவருக்கு நினைவு திரும்பும்; மருத்துவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயத்துடனேயே ஒவ்வொரு நாளையும் அவள் கழித்துக் கொண்டிருந்தாள்.
டாக்டர் வர்கீஸ், அத்துறையின் தலைவர். காலை பதினோறு மணியளவில், முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்களுடன் வருவார். நோயாளிகளைச் சோதித்தப்படியே வகுப்பும் எடுக்கத்தொடங்குவார். உடன் வந்தவர்கள் அவர் சொல்ல சொல்ல குறிப்புகளை தங்கள் குறிப்பேடுகளில் எடுத்துக் கொள்வர். வார்டில் இருந்து அவர் திரும்பி வரும் வழியில் பார்வையில் படுவதுபோல அவள் நின்று கொண்டிருப்பாள். அவளைப் பார்த்து மெல்லியச்சிரிப்புடன், “பயப்படாதே பெண்ணே, உன் கணவருக்கு நினைவுகள் தொடர்ச்சியாக வராமல் பாதியிலேயே அறுந்து விடுகின்றன. அப்புறம் மருத்துவம் எதையெல்லாம் பொய்னு சொல்லுதோ அதை எல்லாம் மெய்னு சொல்றார். யானை பேசுது என்கிறார். நாங்க அதை நோய்னுதான புரிஞ்சிக்க முடியும். மந்திரத்தால விலங்கோட வாயைக் கட்றதுலாம் சுத்த ஏமாத்து வேலை. இதுலாம் ஒருவகையான மனநிலை பாதிப்புகள்தான். அவருக்கு சட்டென நினைவு போய்டறது தான் இப்ப இருக்க பெரிய சிக்கல். தொடர்ந்து மருந்து கொடுத்துட்டு வறோம். இன்னும் ரெண்டு மூன்று நாட்கள் போகட்டும்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். தன்னுடன் இவ்வளவு தெளிவாகவும் நிதானமாகவும் பேசிவிட்டுச் செல்லும் மருத்துவரையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தவாரத்தின் கடைசி நாளில் அவருக்கு நினைவு திரும்பியது. “யானை ..யானை” என்று மட்டுமே வார்த்தைகள் குழறிக்கொண்டு வந்தன. டாக்டர் வர்கீஸ் அவரின் காதோரம் சென்று கேட்டார். “எதாவது சொல்லனும்னு தோனுதா?” அவரது விழிகள் மெல்ல அசைந்தன. தொண்டைக் குழி ஏறி இறங்கியது. திரும்பவும் மருத்துவர் அவரிடம் கேட்டார். “உங்களுக்கு என்ன தோனுதோ அதைச் சொல்ல முயற்சி பன்னுஙக”. தை அமாவாசைக்கு படைத்துவிட்டு கிளம்பிய நினைவுகள் அவர் மனதில் குழம்பித் தெரிந்தன. கடும் பிரயத்தனத்திற்கு பிறகு அவர் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லத் தொடங்கினார். முதுநிலை மாணவர்கள் அவர் சொல்லச் சொல்ல குறிப்பெடுத்துக் கொள்ளத் தொடங்கினர்.

தை அமாவாசைக்கு படைத்துவிட்டு வீட்டிலிருந்து அவர்கள் கிளம்பும் போதே மணி ஒன்பதைக் கடந்து விட்டிருந்தது. வழக்கமாக பத்து நிமிட பயணத்தில் பள்ளிக்கூடத்தை அடைந்து விடலாம். சாலை விரிவாக்கத்திற்காக பழைய தார்சாலையைப் பெயர்த்துப் போட்டிருந்தனர். அதனால் பயண நேரம் முப்பது நிமிடங்களாக நீண்டிருந்தது. தன் மனைவியிடம் பின்புறக் கம்பியை இறுக்கமாக பிடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்திவிட்டு வாகனத்தை வேகமாக அவர் இயக்கினார். இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் நேரம் தவறாமையின் அவசியத்தை ஓர் சுற்றறிக்கையின் மூலம் தலைமை ஆசிரியர் மறைமுகமாக சக ஆசிரியர்களை எச்சரித்திருந்தார். அதனாலும் வாகனத்தின் வேகம் கூடியிருந்தது.
வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையேயான தூரம் பத்து கிலோமீட்டர். அதன் மத்தியில் இரண்டு கிலோ மீட்டர் சாலை மட்டும் காட்டிற்குள்ளாக நீண்டிருந்தது. அது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. வனத்துறை ஒப்புதல் கிடைக்கப் பெறாததாலேயே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிகள் பெயர்த்துப் போடப்பட்ட சாலை அதே நிலையிலேயே இருந்தது. வழி நெடுகிலும் முட்டிப் பூவின் வாசனை நிறைந்திருந்தது.

காட்டு ஐயனார் கோயில் தூரத்தில் தெரிந்தது. கோயிலைத் தாண்டினால் காட்டின் ஊடாக பயணம். சில்லென்று வீசும் காற்று காலையிலேயே அவருக்கு கிறக்கத்தை ஏற்படுத்துவதாகயிருந்தது. கௌதாரிகள் அலைந்து கொண்டிருக்கும் அச்சாலையின் இருபுறத்திலும் ஓங்கி வளர்ந்திருந்தன மரங்கள். கிளைகள் காற்றின் போக்கில் எந்நேரமும் ஒடிந்துவிழும்படி ஆடிக்கொண்டிருந்தன.மயில் மற்றும் மான்கள் வெகு சாதாரணமாக சாலையின் இருபுறமும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. தண்ணீர் குடிக்க தென்புறமிருந்து வடபுறமாக அவை கடந்து சென்று கொண்டிருந்தன. அவர் வழக்கம்போல தன் மனைவியிடம், “திடீர்னு ஒரு புலி வந்துட்டா என்ன பன்றது?” என்று கேட்டார். அதற்கு அவள், “இந்த காட்ல புலி இருக்க சான்சே இல்ல” என சிறிதும் யோசிக்காமலேயே பதில் கூறினாள். அவள் பதிலில் திருப்தியுறாமல், ஒருவேளை புலி வந்துவிட்டால் தற்காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதிலேயே அவர் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தது. காட்டின் இரைச்சல் அவருக்கு புலி குறித்த பீதியை அதிகப்படுத்த, வாகனம் அதீத வேகத்தில் சீரிப்பாய்ந்து கொண்டிருந்தது.
சுவர் முழுக்க பிரண்டையும் முடக்கத்தானும் கிளைத்து படர்ந்து கிடந்த காட்டு கோயிலைத் தாண்டும் போது மணி ஒன்பது இருபதைத் தொட்டிருந்தது. காட்டின் குளுமை காற்றில் பரவியிருந்தது. சில்வண்டுகளின் பேரிரைச்சல் ஒருவித கிளர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்துவதாக இருந்தது. ஆவாரை பூத்து ஆங்காங்கே மஞ்சள் திட்டுகளாக இருந்தன. சூரைப் பழங்கள் பழுத்து தரையில் உதிர்ந்து கொண்டிருந்தன.



தூரத்தில் சாலையின் நடுவே பெரிய பாறை போன்று ஏதோ ஒன்று மங்கலாக தெரிந்தது. மலையில் இருந்து யாராவது உருட்டி விட்டிருக்கலாம் என்று நினைத்தார். ஏற்கனவே சிலர் இதுபோல பாறைகளை உருட்டியும் விட்டிருக்கின்றனர். ஆனால் தூரம் குறைய, பாறை போன்றிருந்ததில் அசைவுகள் ஏற்படுவதை உணர முடிந்தது. அப்போது கூட அவர் உள்மனம் எச்சரிக்கவில்லை. பயணிக்கும்போது அவர் மனைவி சாலையின் முன்புறமாக பார்ப்பது கிடையாது. தூதுவளை, பிரண்டை, முடக்கத்தான் இலை என்பதாக மட்டுமே காடு அவளுள் திரண்டிருந்தது. தூரத்தில் மயில்கள் அகவுவதை நன்றாக கேட்க முடிந்தது.
புலியைப் பற்றி யோசித்துக்கொண்டு வந்த அவர் , சாலையில் நின்று கொண்டிருப்பது ஓர் யானையாக ஏன் இருக்கக் கூடாது என கொஞ்சமும் யோசித்திருக்கவில்லை. மிக அருகில் வந்த பின்புதான் அங்கே நின்று கொண்டிருப்பது யானை என்று அவர் புத்திக்கு உரைத்தது. சட்டென்று யானையைப் பார்த்ததும் அவருக்கு சப்த நாடியும் ஒடுங்கி உடம்பு நடுங்கத் தொடங்கியது. வண்டியின் ஓட்டத்தை நிறுத்தினார். அவர் மனைவி வண்டி ஏன் நிற்கிறது என்று அப்போது தான் திரும்பி முன்புறம் பார்த்தாள்.

முன்பெல்லாம் வழியில் இடையூறு ஏற்படுத்திய நாய், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு போன்றவற்றின் வாயைக்கட்டிய நினைவுகள் அவர் மனதில் குமிழிட்டன. இவ்வளவு பெரிய யானை தன் முன்பாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவருக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்தன. நாக்கு வரண்டு, பேச்சே எழவில்லை. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அதுவரை அழகிய ஓவியமென விரிந்திருந்த காடு சட்டென கர்ணகொடூரமாக காட்சியளித்தது. கரும்பாறையென நின்றிருந்த யானை அவர்களை நோக்கி மெல்ல நகர்வது தெளிவாக தெரிந்தது. பள்ளிக்குச் சென்றிருந்த பிள்ளைகளின் நினைவு எழ மேலும் பயம் அதிகரித்தது. அவர் சுவாசத்தின் தன்மை முற்றிலுமாக மாறியிருந்தது. எந்நேரமும் தான் மயக்கமுற்று கீழே விழக்கூடும் என்றே அவர் எண்ணினார். தாண்டவராயன் மாமாவை மனதில் நினைத்துக்கொண்டு அவர் யானையின் முன்பாக அமர்ந்து தரையில் விரலால் வட்டம் வரைந்தார். அதன் குறுக்கும் நெடுக்குமாக இரு கோடுகளை கிழித்தார். அக்கோடுகள் வட்டத்தைச் சந்திக்கும் இடத்தில் வெளிப்புறமாக இருக்கும்படி நான்கு சூலாயுதங்களை வரைந்தார். அனைத்திலும் ஓர் வேகமும் நுட்பமும் இருந்ததை உணர முடிந்தது. வட்டத்திலிருந்து பிடி மண்ணை அள்ளிக் கையில் வைத்துக் கொண்டு தன் மணிக்கட்டை சுழற்றி யானையைப் பார்த்து மந்திரங்களை உச்சரிக்கத்தொடங்கினார். பின் விரல்களை மடக்கி நெட்டி முறித்துக்கொண்டு எழுந்தார்.துதிக்கையை ஆட்டியபடி முன்னேறிக் கொண்டிருக்கும் யானையையே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். மந்திகள் சப்தமெழுப்பியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. பறவைகள் சிறகுகளை அடித்துக்கொண்டு வேறு இடங்களுக்குப் பறக்கத் தொடங்கின. எழுந்து சிறிது நேரம் அப்படியே நின்றார். யானையிடம் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. சிறிதளவேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கத்தானே வேண்டும் என்றும் அவர் நினைக்கத்தொடங்கினார். வாயைக் கட்டும் வித்தை யானையிடம் எடுபடவில்லையோ என அவர் யோசித்தார். அவருக்கு மீண்டும் தலை சுற்றத்தொடங்கியது. அவர்களை நெருங்க இன்னும் சில அடிகள் மட்டுமே யானைக்கு இருந்தது. யானையைப்பார்த்து தாண்டவராயன் மாமா கற்றுக்கொடுத்த மந்திரத்தை மீண்டும் உச்சரிக்கத்தொடங்கினார். குரலில் சிறு நடுக்கம் தென்பட்டது.

அவருக்கு மூச்சு வாங்கத்தொடங்கியது. வாக்கியங்கள் அறுந்து அறுந்து வெளிவந்தன. மறுபடியும் அவர் முதலில் இருந்தே சொல்லத் தொடங்கினார். அருகில் நின்றிருந்த நர்ஸிடம் அவருக்கு ஊசி போடுங்க எனும் விதமாக சைகையால் தெரிவித்தார். அவள் ஊசியை போட்டாள். உடனே அவருக்கு நாக்குழறியது. சிறிது நேரத்திற்குள் அவர் கண்கள் செருக ஆரம்பித்தன. மீண்டும் அவர் மயக்க நிலைக்கு சென்றார். இவ்வளவு நேரம் அவர் பேசிக் கொண்டிருந்ததே அவளுக்கு ஒருவித சந்தோஷத்தை அளித்தது. “அவருக்கு இப்ப எப்படிங்க டாக்டர் இருக்கு. நீங்களாவது சொல்லுங்க”. என்று கெஞ்சும் தொனியில் மருத்துவரிடம் கேட்டாள். “முன்னைக்கு இப்ப பரவா இல்லை மா. நினைவுகள் தொடர்பில்லாம அவருக்கு தோன்றுது. வாய்கட்டு.. வாய்கட்டு என்ற வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம் என்றும் தெரியவில்லை. அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ? அவர் சொல்ற எதுவும் நம்பும்படி இல்லையே மா” என்று அவர் சொன்னார். அவரிடம் மெல்லிய குரலில் அவள் பேசத்தொடங்கினாள்:

“ அவரு விலங்குங்க வாயலாம் கட்டுவார் சார்”
“எப்படி?” என்று புரியாமல் கண்களை குறுக்கிக் கொண்டு கேட்டார்.
“ மந்திரம் மூலமாதான் சார்”.
மருத்துவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. மந்திரத்தால் எப்படி வாயைக் கட்ட முடியும் என யோசித்தார். “புரியலையே மா. உனக்கு அது சம்பந்தமா எதாவது தெரிஞ்சா சொல்லுமா. மேற்கொண்டு வைத்தியம் பாக்க புரயோஜனமா இருக்கும்” என்று அவளிடம் கேட்டார். மருத்துவரின் பரிவு அவளுக்கு சந்தோஷத்தை அளித்தது. ஆழ்ந்து யோசித்தாள்.திருமணம் ஆகி வந்த புதிதில் அவர் மந்திரத்தை கற்றுக்கொண்டதை பற்றி தன்னிடம் கூறியதை மெதுவாக சொல்லத் தொடங்கினாள். அவள் வார்த்தைகளின் மூலம் அவரின் இளைமைக் காலம் துல்லியத்துடன் ஒரு கதை போல உருக்கூடத் தொடங்கியது.


அதுவொரு கோடை காலம். நன்றாக இருட்ட ஆரம்பித்திருந்தது. அவனுடைய அக்கா அழுதுகொண்டே வீட்டிற்குள் ஓடிவந்தாள். அவள் முகம் பயத்தில் வெளிறி இருந்தது. தோட்டத்தில் மாவு இடித்துக் கொண்டிருந்த அம்மா பதற்றத்தோடு உலக்கையை அப்படியே போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்று அக்காவை விசாரித்தாள். “நாய் கடிச்சிடிச்சிமா” என்று சொல்லி வலி தாங்காமல் அவள் தேம்பி அழுது கொண்டே இருந்தாள். “டேய் போய் தாண்டவராயன் மாமாவ கூட்டியாடா” என்று அவனிடம், அம்மா பதற்றத்துடன் சொன்னாள். ஒருவித பயத்துடன் அவன் செட்டியார் வீட்டு சந்துப்பக்கமாக நடந்து, வெள்ளக்குளத் தெருவுக்குள் நுழைந்தான். எங்கும் இருள் அப்பிக் கிடந்தது. குளம் தண்ணீர் இருப்பதற்கான சுவடே இல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு எங்கும் இருள் நிறைந்திருந்தது. குளக்கரை மேலிருந்த மாரியம்மன் கோயிலில் மட்டும் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நாய்கள் குரைத்துக் கொண்டே, டல்லா ஐயர் வீட்டுப்பக்கம் இறங்கி ஓடின. திரௌபதி அம்மன் கோயில் பகுதி முழுக்க நாய்களின் குரைப்பொலி எதிரொலித்துக் கொண்டு இருந்தது.

தெருத் திண்ணையில் அமர்ந்து நவுட்டுக்காரருடன் தாண்டவராயன் மாமா பேசிக் கொண்டிருந்தார். வேர்க்க விறுவிறுக்க வந்து எதிரில் நின்ற அவனைப் பார்த்து “என்ன டா?” என்று கேட்டார். அவன் நடந்ததைச் சொன்னான். துண்டை உதரித்தோலில் போட்டுக் கொண்டு அவர் வேகவேகமாக நடக்கத் தொடங்கினார். அவரது நடை, ஓட்டத்தை ஒத்திருந்தது. அவரது கைகள் காற்றை கிழித்துக் கொண்டு முன்னும் பின்னும் சென்று வந்தன. அதைப் பார்த்துக் கொண்டே அவரை பின் தொடர்ந்து அவன் ஓடினான்.
வீட்டை அடைந்தபோது அக்காவின் அழுகை கொஞ்சம் தணிந்திருந்தது. அக்காவை அழைத்து கடிப்பட்ட இடத்தை கூர்ந்து பார்த்தார். அம்மாவை அழைத்து, “அக்கா எதுவும் சாப்பாடு கொடுக்காத நா போய் பச்சிலை கொண்டு வந்திடறேன்” என்று சொல்லி விட்டு அவனை அழைத்தார். “டார்ச் லைட் எடுத்துகினு என் கூடவே வாடா” என்று சொல்லி, தும்பரமேடு நோக்கி நடக்கத் தொடங்கினார். பெரியாயி கோயில் சந்து வழியாக நுழைந்து, பாப்பான்குளம் வழியாக சென்று திருவண்ணாமலை சாலையை அடைந்து அப்படியே மேற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். சாலையின் இருபுறங்களிலும் இருந்த புளிய மரங்கள் இருளில் பார்ப்பதற்கு பயத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. தும்பரமேட்டுத் திருப்பத்தில் ஓங்கி வளர்ந்து பரந்திருந்தது அரசமரம். மயான அமைதி. மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தன. டார்ச் விளக்கின் வெளிச்சத்தில் அரச மரத்தின் கீழ் எதையோ கூர்ந்து தேடிக் கொண்டிருந்தார். அரச மரத்தின் வடக்கு பக்கமாக சென்றவர், வேலியோரம் சென்று கீழே குனிந்து தழைகளை பறித்துக்கொண்டு திரும்பி வந்தார். தன் வேட்டி மடிப்பில் பறித்ததை வைத்து இறுக்கிக் கட்டினார். அவனை அழைத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினார்.

அவன், மெதுவாக அவரிடம் பேச்சுக் கொடுத்தான். “என்ன மாமா பறிச்சீங்க?” அதற்கு அவர் “பச்சிலை டா” என்றார். “ஏன் நம்ம வீட்டான்டா இருக்காதா?” என்று திரும்பவும் கேட்டான். “அங்க இருக்கற மாதிரி இருந்தா இவ்ளோ தூரம் ஏன்டா வரனும்?” என்று திருப்பிக் கேட்டார். சிறிது நேரம் அவன் அமைதியாக பின் தொடர்ந்து நடந்தான். திருவண்ணாமலை சாலையில் இருந்து கீழிறங்கி புளியந்தோப்புக்குள் நுழைந்தபோது அவன் மறுபடியும் அவரிடம் பேச்சுக் கொடுத்தான். “அது என்ன இலை மாமா?” அவன் கேட்டு முடிப்பதற்குள் “அதலாம் வெளியே சொன்னா பச்சிலை வேலை செய்யாதுடா” என்று சொன்னார். பாப்பான் குளத் தெருவில் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஊராட்சி மன்றக் கட்டடத்தின் சந்து பக்கமாக ஓடியது. “எங்கிட்ட மட்டும் சொல்லுங்க மாமா. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்று அவரை நச்சரித்துக் கொண்டே அவன் வந்தான். அனிபா கடையை தாண்டும் போது தொந்தரவு தாங்காமல் “ஒரு நாள் சொல்றேன். அன்னக்கி வா டா” என்று கூறி வேகமாக நடந்து தச்சமுட்டு திருப்பத்தில் திரும்பி வீடு நோக்கி நடந்தார்.

அவர்கள் வீட்டை அடைந்த போது அக்கா தெருத் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். அழுதழுது அவளது கன்னம் வீங்கியிருந்தது. மாமா அவளுக்கு எதிராக வந்து அமர்ந்தார். இடுப்பு மடிப்பை அவிழ்த்து இலைகளை எடுத்து உள்ளங்கையில் வைத்து கட்டைவிரலால் கசக்கினார். அதிலிருந்து சாறு வழியத் தொடங்கியது. பின் அக்காவைப் பார்த்து, “வாய திற மா” என்று சொல்லி கசக்கிய இலைகளை அவள் வாயில் வைத்தார். “அப்படியே முழுங்கு மா” என்று சொல்லி கைகளை கழுவ உள்ளே சென்றார். அக்காவிற்கு குமட்டிக் கொண்டு வந்தது. சுலபத்தில் அவளால் விழுங்க முடியவில்லை. மாமா உள்ளேயிருந்து சொல்லிக் கொண்டே வந்தார். “முழுங்க கஷ்டமா தான் இருக்கும். கண்ண மூடிக்கினு டக்னு முழுங்கிடு ஒன்னும் தெரியாது”. அவர் சொன்ன பிறகு அவள் கண்களை இறுக்க மூடிக்கொண்டு படக்கென விழுங்கினாள். அம்மாவைப் பார்த்து, “ மூனுநாளுக்கு தாளிக்காம கொழம்பு வச்சி சாப்பாடு குடு கா” என்று சொல்லிவிட்டு, படியிறங்கியவர் அக்காவை பார்த்து கேட்டார். “எந்த நாய் மா கடிச்சது?” “ பக்கத்து வீட்டு ஜிம்மிதான் மாமா” என்று தெருவோரத்தில் படுத்துக்கிடந்த நாயை அக்கா காட்டினாள். நாக்கை வெளித் தள்ளிக் கொண்டு நீர் ஒழுக அது படுத்துக்கிடந்தது. மாமா அதன் அருகில் சென்ற போது அது எழுந்து ஓட ஆயத்தமானது. அவர் அதை வாஞ்சையோடு அழைத்து, தன்னை நோக்கித் திரும்ப வைத்தார். கீழே அமர்ந்து தரையில் விரலால் வட்டம் போட்டார். அதனுள் குறுக்கும் நெடுக்குமாக இரு கோடுகளை கிழித்தார். அதன் நான்கு முனைகளிலும் சூலாயுதத்தை வரைந்தார். வட்டத்தின் நடுவில் இருந்து மண்ணை அள்ளி கையில் வைத்துக் கொண்டு வலது கை மணிக்கட்டை அதன் முகத்திற்கு நேராக மூன்றுமுறை அப்படியும் இப்படியுமாக சுழற்றினார். அப்போது அவரது உதடுகள் எதையோ உச்சரித்துக் கொண்டிருப்பதை அவன் கூர்ந்து கவனித்தான். அவர் கையில் இருந்த மண்ணை நாய் மீது ஊதினார். மண் துகள்கள் நாயின் முகத்தில் மோதிச் சிதறின. இதையெல்லாம் மாமா ஒரு சில நொடிகளுக்குள்ளாக செய்து முடித்தார். அவ்வளவு வேகம். பின் நட்டை முறித்துக் கொண்டு எழுந்தபோது நாய் கால்களால் தரையை பரபர வென்று பிராண்டிக்கொண்டே வானத்தைப் பார்த்து ஊளையிடத் தொடங்கியது. அதன் குரல் வெளி வராமல் ஒடுங்கியது. தொண்டையில் எதுவோ அடைத்துக் கொண்டதைப்போல ஈன சுரத்தில் ஊளையிட்டுக் கொண்டிருந்தது. மாமா அதைக் காலால் எத்தினார். எதிர்ப்புத் தெரிவிக்காமல் அது அங்கிருந்து ஊளையிட்டுக் கொண்டே அகன்று சென்றது.

என்ன நடக்கிறதென்றே அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. மாமா என்ன சொன்னார்; எதனால் அந்த நாய் அப்படியே ஒடுங்கியது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. அவரிடமே கேட்டான். “நாய என்ன மாமா பன்னீங்க?” அவர் மிகச் சாதாரணமாகச் சொன்னார். “அது வாய கட்டிட்டேன் டா”. “புரியலையே மாமா” என்று திரும்பவும் அவரிடம் கேட்டான். “அதுக்கு வெறி புடுச்சிடுச்சிடா. அத விட்டு வச்சா வரவங்க போறவங்கள கடிச்சிகினே இருக்கும். அதான் வாய கட்டிட்டேன்” என்று விளக்கமாக சொல்லிக்கொண்டு வந்தார். “யார் வேணுமானாலும் அப்படி வாயக் கட்டலாமா மாமா?” என்று அவன் வெடுக் கென்று அவரை கேட்டான். “கட்டலாம்... கட்டலாம்.. அப்படிதான் எக்கு தப்பா எதாவது செஞ்சிட போற. நாய் புடுச்சி குதறி எடுத்துரும்” என்று பயமுறுத்தும்படி சொன்னார். பச்சிலை ரகசியத்தை எப்படியாவது அவரிடம் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தான். வாயைக்கட்டுவதைப் பார்த்ததும் என்ன செய்தாவது அதை முதலில் கற்றுக் கொண்டே தீர்வது எனும் வைராக்கியம் அவனை பற்றிக்கொண்டது. கண் கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அது சம்பந்தமாக அவரிடம் எதுவும் கேட்கவில்லை. சரியானதொரு நாளில் அவர் மீறிவிட முடியாதபடி அவரை சம்மதிக்க வைத்திட வேண்டும் என்று அவனுள் வெவ்வேறு வகையான திட்டங்கள் உருவாகிக் கொண்டே இருந்தன.
கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கியிருந்தது. ஒரு நாள் அவரிடம் “மாமா வாயக் கட்டும் வித்தையை சொல்லித்தாங்க” என்று கெஞ்சலுடன் கேட்டான். அவன் தொனியை அவர் ரசித்தார். “ அந்த மந்திரத்தை கத்துக் கொடுத்தா உங்க அக்காவ எனக்கு கட்டித்தருவியா?” என்று அவனிடம் கேட்டார். அவன் எவ்வித யோசனையும் இன்றி “சரி மாமா” என்று சொல்லி தலையை ஆட்டினான். அதற்கு மேலும் அவனைக் காக்க வைக்க முடியாது என்று உணர்ந்தார். “வர அமாவாசைக்கு வாடா” என்று சொல்லிவிட்டு மேலக்காடு நோக்கி நடந்து சென்றார்.

அமாவாசை அன்று காலையிலேயே குளித்துவிட்டு அவர் வீட்டிற்குச் சென்றான். வேலைகளை முடித்துவிட்டு அவர் கிளம்பும் போது மணி எட்டைத் தாண்டியிருந்தது. சிறு பித்தளை குடம், நந்தியாவட்டை பூ மற்றும் உடுக்கையை எடுத்துக் கொண்டு சீராப்பாளையம் நோக்கி நடக்கத் தொடங்கினார். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீராப்பாளையம் ஐயனாருக்கு அபிஷேகம் நடைபெறும். விசேஷ நாட்களில் மட்டும் இவர் முன்னின்று நடத்துவார். மற்ற நாட்களில் நல்லாப்பாளையத்திலிருந்து குள்ள பூசாரி வந்து விளக்கு போட்டு விட்டுச் செல்வார்.
பேருந்து நிறுத்தத்தை கடந்து நல்லாப்பாளையம் சாலையில் இறங்கி விறுவிறுவென நடக்கத் தொடங்கினார். எங்கு பார்த்தாலும் பச்சைக்கட்டி இருந்தது. சாலைக்கு மேற்கே இருந்த முருகன் கோவிலை அங்கிருந்தே வணங்கினார். இருளர்பாளையத்தை கடக்கும் போது சிலர் அவரை கையெடுத்துக் கும்பிட்டனர். பதிலுக்கு தலையாட்டுவதோடு சரி. எதுவும் பேசாமல் அவனும் அவரை பின் தொடர்ந்து கொண்டிருந்தான். மூச்சு வாங்கியது. உடல் வியர்த்து கசகசக்கத் தொடங்கியது.

சீராப்பாளையத்தை அடைந்து, சாலையில் இருந்து மேற்காக பிரியும் பாதையில் இறங்கினார். வயல்களின் ஊடாக செல்லும் ஒற்றையடி பாதையில் நடந்து இலுப்பை மரங்கள் சூழ்ந்த கோயிலை அடைந்தனர்.. அவனுக்கு சந்தோஷம் பீரிட்டுக் கிளம்பியது. அவர் அவனைக் கூப்பிட்டு “அந்த கெணத்துல போய் அப்படியே ஒரு முக்கு முக்கி எழுந்துவாடா” என்றார். அவரின் வார்த்தைகள் மந்திரத்தை போல அவனை ஆட்டுவித்தது. அவன் கிணற்றடிக்குப் போய், உள்ளே எட்டிப் பார்த்தான். சுற்றுக் கட்டு சரிந்து காணப்பட்டது. வாய்க்கட்டு வித்தையை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தபடி கிணற்றுக்குள் குதித்தான். கரையேறுவதற்கு சிரமமாக இருந்தது. படிகள் சில உடைந்திருந்தன. அவன் கரையேறி கோயிலுக்குள் வந்த போது அவர் ஐயனாரப்பனுக்கு அபிஷேகம் செய்து மலர்களைச் சாத்தி சூடம் கொளுத்த தயாராக இருந்தார். அவன் வந்ததும் விபூதியை எடுத்து நெற்றியில் பூசினார். ஏற்கனவே கொண்டுவந்திருந்த மாலையை அவன் கழுத்தில் அணிவித்து கிழக்கு திசை நோக்கி நிறுத்தினார். தலையில் இருந்து தண்ணீர் கால்கள் வழியாக வடிந்துகொண்டிருந்தது. அவனுக்கு இவற்றை எல்லாம் பார்க்க அமானுஷ்யமாக ஏதோ நடப்பதைப்போல இருந்தது. சூடம் கொளுத்தி படைத்தார். அவனுக்கும் சூடத்தை காட்டினார். அவன் தொட்டு வணங்கினான். நீர் விலவி விட்டு, அவனை அழைத்துக் கொண்டு, சுதை மண் சிலைகள் சூழ்ந்த இலுப்பை மரத்தடிக்கு சென்றார்.

வெயில் படாமல் அவ்விடத்தில் நிழல் கவிந்திருந்தது. உடைந்து சிதிலமாகிக்கிடந்த குதிரைச் சிலைகள் அவனுள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தின. தரையில் அமர்ந்த அவர், சர சரவென்று மண்ணில் விரலால் வட்டம் போட்டார். பின் அதனுள் குறுக்கும் நெடுக்குமாக இருகோடுகளை இழுத்தார். அக்கோடுகள் வட்டத்தை சந்திக்கும் இடத்தில் வெளிப்புறத்தில் நான்கு சூலாயுதங்களை வரைந்து முடித்தார். கொண்டு வந்திருந்த எலுமிச்சை பழத்தை அறுத்து சிவப்பு தடவி ஒவ்வொரு சூலாயுதத்தின் மீதும் வைத்தார். சட்டென்று அந்த இடம் உருமாறியிருந்ததை அவன் ஒருவித பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
வட்டத்திற்கு நடுவில் கொஞ்சம் மஞ்சளையும் சிவப்பையும் தூவினார். பித்தளை சொம்பை நடுவில் கவிழ்த்து வைத்தார். அதன் மீது சில நந்தியாவட்டை மலர்களை தூவினார். அதன் மீது மஞ்சள் பூசப்பட்டிருந்த சிறு பலகையை எடுத்து வைத்தார். சொம்பின் மீது நன்குபடியுமாறு அந்த பலகையை சரிப்படுத்தினார். கைகளைக் கழுவிக் கொண்டு, துணியில் சுற்றி வைத்திருந்த உடுக்கையை எடுத்தார். அவனை வட்டத்திற்கு அருகே அமர வைத்து, எதிராக உட்கார்ந்து, உடுக்கையை அடிக்கத் தொடங்கினார்.
தாண்டவராயன் மாமாவைப் பார்ப்பதற்கு வேறு யாரையோ பார்ப்பதுபோல இருந்தது அவனுக்கு. உடுக்கை ஒலி சூழ்ந்து நிறைந்தபோது அந்த இடம் மேலும் அமானுஷ்யமாக தோன்றியது. உடுக்கை அதிர அதிர, அவர் பெருங்குரலெடுத்து பாடத் தொடங்கினார். உடுக்கை ஒலியும் அவரின் குரலும் இழைந்து அவனுள் பயத்தின் அதிர்வுகளை ஏற்படுத்தின. ஒரு கட்டத்தில் மாமா கால்களைத்தூக்கி ஆடத் தொடங்கினார். ஆட்டம் உச்சத்தைத் தொட்ட போது அவனிடம் உரக்கப் பேசினார். “வட்டத்துக்குள்ள போய், சொம்புல இருக்கும் பலகை மேல, உள்ளங்கையை ஊனி கால்கள் தரையில் படாதபடி அப்படியே அந்தரத்துல உக்காருடா”. எதுவும் யோசிக்காமல் அவர் சொல்லியது போலவே வட்டத்துக்குள் சென்று சொம்பின் மீதிருந்த பலகையின் மீது உள்ளங்கைகளை ஊன்றிக் கொண்டு கால்களை மேலேத் தூக்கினான். நிலை தடுமாற, பலகை நழுவி கீழே விழுந்தான். “விடாத. திரும்பவும் செய். கவனத்த மாத்தாத புரியுதா?” என்றுக் கேட்டுக் கொண்டே, உடுக்கையை உக்கிரத்தோடு அடித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து அவன் மூன்றாவது முறையாகவும் கீழே விழுந்த போது, அருகில் சென்று அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். அவனுக்கு பொறி களங்கியது. “ம் விடாத செய்” எனச் சொல்லவும், இவன் மிகச் சரியாக பலகையின் மீது உள்ளங்கைகளை படிய ஊன்றினான். பின் தரையில் படாதவாறு கால்களை மேல் நோக்கித் தூக்கினான். உடலின் முழுபாரத்தையும் அவன் உள்ளங்கையில் உணர்ந்தான். அதுவும் சிறிது நேரம் தான். சிறிது நேரத்தில் ஆகாயத்தில் பறப்பது போல இருந்தது அவனுக்கு. பலகையின் மீது அவன் நிலைகொண்டதும், உடுக்கை அடிப்பதை நிறுத்திவிட்டு, “நா சொல்றத அப்படியே சொல்லுடா” என்று கூறினார். அவர் உதட்டசைவையே அவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவர் உதட்டசைவிலிருந்து வெளிப்படும் அனைத்து ஒலிகளையும் அச்சரம் பிசகாமல் அப்படியே திரும்ப ஒப்புவித்தான். மந்திரச் சொற்கள் அவரில் இருந்து புறப்பட்டு அவனை அடைந்து பின் காற்றில் கலந்து கொண்டிருந்தன. இடையிடையே ஓங்கார ஒலி அலைகள் எங்கும் எதிரொலித்துக் கொண்டு இருந்தன.

அவரிடமிருந்து புறப்பட்ட ஒலி அலைகள் அவனுள் முற்றாக இறங்கியபோது அவன் உடல் தளர்ந்து பலகை நழுவியது. கீழே அப்படியே சரிந்தான். உடல் உதரிக்கொண்டது. அவன் விழிகள் செறுகி கிடந்தன. மார்புக்கூடு வேகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. சொம்பில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் அடித்தார். அவன் மயக்கம் கலைந்து கண்களை திறந்து பார்த்தான். கண்களில் புதுவித வெளிச்சத்தை பார்க்க முடிந்தது. தரையில் படையலிட்டு, சூலாயுதம் நடப்பட்டிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றார். அவன் இடது பக்க தொடை மீதிருந்த ஆடையை விலக்கினார். தண்ணீர் தெளித்து துடைத்துவிட்டு தன் வலுகொண்ட மட்டும் ஓங்கி அங்கே அறைந்தார். வலியை உணர முடியாதளவிற்கு அந்த இடம் மறுக்கத் தொடங்கியது. உடனே தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நான்கு விரட்கடை அளவிற்கு மேலிருந்து கீழாக அழுத்தி கிழித்தார். ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அவன் அரை மயக்கத்தில், நடப்பதை எல்லாம் எவ்வித உணர்வுமின்றி பார்த்துக்கொண்டு இருந்தான். தன் இடுப்பு மடிப்பில் வைத்திருந்த கருப்பு மை போன்ற ஏதோவொன்றை எடுத்து, அறுத்த இடத்தில் வைத்தார். ரத்தம் பீரிட்டுக் கொண்டிருக்கும் இடத்தை விரல்களால் தடவினார். அவர் விரல் பட்டதும், கிழிப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்த அந்த இடம் எந்த சுவடும் இன்றி மூடிக்கொண்டது. வலியின் சிறு துளியைக்கூட அவன் உணரவில்லை. தன் தொடைகளை தடவிப் பார்த்தான். ரத்தம் வழிந்தோடியதற்கான சிறு தடயத்தைக் கூட உணர முடியவில்லை. அவர் அங்கே விபூதியை வாரிப்பூசினார். பின் எழுந்து கால்களை உதரினார். வேட்டியை அவிழ்த்து நன்றாக இறுக்கிக் கட்டிக்கொண்டார். அவனை கைப்பிடித்து தூக்கிவிட்டார். இருவரும் நெடுஞ்சான் கிடையாக ஐயனாரப்பனை விழுந்து வணங்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு நோக்கி நடக்க தொடங்கினர்.

அவள் கூறியதைக் கேட்ட மருத்துவரின் மனதில் திகில் படர்ந்தது. அதுநாள் வரை தான் கற்றறிந்த மனநலம் சார்ந்த மொத்த படிப்பிற்குமே நேரெதிராக அவள் பேச்சு இருப்பதாக அவர் எண்ணினார். மெல்லிய அளவில் அவரை ஆச்சரியத்தின் ரேகைகள் பற்றத் தொடங்கின. உண்மையிலேயே ஒரு விலங்கின் வாயைக்கட்டிவிட இயலுமா என்று அவருக்குள் சந்தேகத்தின் முடிச்சு இறுகிக் கொண்டே இருந்தது. அதீத குழப்பத்தோடு மருத்துவர் தன்னுடைய அறைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதன் பிறகான ஆறு நாட்கள் அவருக்கு நினைவு வருவதும் போவதுமாகவே கழிந்தன. அவரை மீட்டெடுக்க எவ்வளவோ முயன்று பார்த்தனர். எந்த பயனும் ஏற்படவில்லை. தொடர்ந்து மருந்துகள் அளிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. அதன் பிறகு ஒருவாரம் கழித்து மெல்ல நினைவு திரும்பியது. அவரிடம் மருத்துவர் கேட்டார். “நீங்க சொல்றதுலாம் நிஜம் இல்லனு உங்களுக்கு தெரியலயா? திரும்ப திரும்ப நீங்க மிருகத்தோட வாய கட்டிட முடியும்னு சொல்லிட்டிருக்கீங்க. நிஜத்துல அதுக்கான சாத்தியமே இல்லனு முதல்ல புரிஞ்சிக்க முயற்சி பன்னுங்க” என்று அவர் கூறியதும் அவர் மனத்திற்குள் பழைய நினைவுகளை உருக்கூட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் மனதில் யானைகள் அணிவகுக்கத் தொடங்கின. சிறியதும் பெரியதுமான கரிய யானைகள். அவர் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினார். எண்ண எண்ண யானைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து அவர் எண்ணிக் கொண்டே இருந்தார். திடீரென காட்டில் பார்த்த யானை அவரைத் துரத்த ஆரம்பித்தது. அவர் தலை தெறிக்க ஓடத் தொடங்கினார். சட்டென யானை துரத்துவதை நிறுத்தியது. அவருக்கு மூச்சு வாங்கத் தொடங்கியது. ஒவ்வொரு யானையாக மங்கி மறையத்தொடங்கின. மேலும் நினைவுகளை தொடர்ந்து ஒன்று கூட்ட முடியாமல் அவர் சோர்ந்து வீழ்ந்தார். கொஞ்ச நேரத்தில் நினைவு தப்பியும் போனது.

தன் துதிக்கையால் அவரைச் சுழற்றி தூக்கிக்கொண்டு நடந்தது யானை. அவர் உடம்பு நடுங்கத் தொடங்கியது. உடல் முழுக்க வியர்வை பெருக்கெடுத்து நசநசத்தது. எந்த நிமிடத்தில் தன்னை சாலையில் வீசி மிதிக்கப் போகிறதோ என்ற பயமே அவர் மனமெங்கும் வியாபித்திருந்தது. மனைவியைப் பார்த்தார்.அவள் என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்தில் தேம்பிக்கொண்டிருந்தாள்.

அவரைத் தூக்கிக் கொண்டு நடந்த யானை சற்றுத் தொலைவில் இருந்த பாறைக்கு அருகில் சென்று நின்றது. பாறையில் அடித்து கொல்ல முடிவெடுத்திருக்கிறதோ என்று பயந்து நடுங்கினார். உயிர் பிரியக்கூடிய அந்த நிமிடத்தை பீதியோடு நினைத்துக் கொண்டிருந்தார். “வலியில்லாம சாகடித்து விடு கடவுளே” என்று பெருங்குரலெடுத்து ஆண்டவனை வேண்டினார். தன் கண்களை அகல விரித்து அவரை கூர்மையாக பார்த்தது யானை. தன்னை சுழற்றி அடிக்க அது தயாராகிவிட்டதாக தோன்றியது. கண்களை இறுக மூடிக் கொண்டார். அதுவரை பலித்த வாய்க்கட்டு வித்தை யானையிடம் ஏன் செல்லுபடியாகவில்லை; தவறு ஏதாவது நேர்ந்துவிட்டதோ என்றும் யோசித்தார். நாய், குரங்கு போன்றவற்றின் வாயை கட்டியபோது அவை சட்டென ஆக்ரோஷத்தை இழக்க ஆரம்பித்தன. ஆனால் யானைக்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று புலம்பினார்.

“என்ன சொன்ன?” என்று தன்னை யாரோ கேட்கிறார்கள் என்பது அவருக்கு தெளிவாக கேட்டது. கண்களை திறந்து பார்த்தார். யாரும் இருப்பதாக தெரியவில்லை. குரல் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதும் புரியவில்லை. யானை அவரைப் பாறையின் மேல் இறக்கிவிட்டது. தும்பிக்கையால் அடிக்கப் போகிறதோ என்று நினைக்கும் போதே “என்ன சொன்ன?” என்று மறுபடியும் குரல் வந்தது. யானை பேசுவதை கேட்டதும் அவருக்கு பயம் அதிகரிக்கத் தொடங்கியது. எப்படி ஒரு யானையால் பேச முடியும் என்று மனம் குழம்பியது. தெருத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த பாண்டுரங்க வாத்தியாரை கோணார்வீட்டு மாடு பேசிக் கூட்டி போய் செட்டியார் வீட்டு கிணற்றில் அமுக்கி கொன்றதாக பாட்டி எப்போதோ சொன்னது, அப்போது நினைவுக்கு வந்து அவரை அலைக்கழிக்கத்தொடங்கியது. எதிரே நின்றிருந்த யானையை உற்றுப்பார்த்தார். எந்த சலனமும் இன்றி யானை நின்று கொண்டிருந்தது. “நான் பேசறது உனக்கு ஆச்சரியமா இருக்கா?” என்று தன் துதிக்கையை ஆட்டியபடியே கேட்டது. அவர் பயத்துடன் ஆமாம் என்பதுபோல தலையாட்டினார். திரும்பவும் அது பேசியது. “ஏன் ஓர் யானை பேசக்கூடாதா?” என்ன பதில் சொல்வதென்று அவருக்கு புரியவில்லை. அருகில் இருந்த ஆலமரத்தின் கிளையை முறித்து மடமடவென்று ஒடித்துத் தின்னத் தொடங்கியபோது, அவர் சற்று ஆசுவாசமடைந்தார். யானை தன்னை எதுவும் செய்யப்போவதில்லை என்ற ஒரு சிறு நம்பிக்கை அவருள் துளிர் விட்டது. பயத்தை மறைத்துக்கொண்டு சற்று அலட்சியத்துடன் “அப்ப நீ என்ன சாகடிக்கப் போறதில்லையா? ”என்று கேட்டார். “ கொஞ்ச நேரத்துக்கு முன்புவரை பயந்து நடுங்கிய உன் குரலில் லேசான திமிர்தனம் தெரியுதே. மனுஷங்களே இப்படிதானா?” எனத் திருப்பிக் கேட்டது. இந்த யானை பேசுகிறது. மனித உணர்வுகளை புரிந்து கொள்கிறது. உண்மையில் வாய்க்கட்டு தன் பணியை செய்யத் தொடங்கிவிட்டிருந்தால் எப்படி யானையால் பேச முடியும் என யோசித்தார். மந்திரம் எதிர்மறையாக வேலை செய்துவிட்டதோ என்றும் குழம்பினார். தன்னைச் சாகடிக்க நினைத்திருந்தால் அது சுழற்றி அடித்தோ காலால் இடறியோ கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி எதையும்செய்யவில்லை. வாய்க்கட்டு மந்திரம் அதன் குணத்தை எக்குத்தப்பாக மாற்றிவிட்டதோ என்றும் யோசித்தார். இருந்தும் அவருக்கு நுன்னிய அளவில் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. குனிந்து அதன் கால்களைப் பார்த்தார். கால்கள் தரையில் நன்றாக ஊன்றியிருந்தன. “ எதுவொன்னையும் பேயா இல்லையானு அது கால பார்த்தே சொல்லிடலாம் டா” என்று பாட்டி எப்போதோ கூறியதை வைத்து அவர் தன் சந்தேகத்தை போக்கிக்கொண்டார்.

“ஜனங்க போற வர வழிதானே, நடுவுல நின்னுகினு இப்படி பயமுறுத்தலாமா?” என்று யானையைப் பார்த்து அலட்சியமான குரலில் கேட்டார். யானை அவரை ஊடுருவிப் பார்த்தது. ஆலமரத்தின் இன்னொரு கிளையை முறித்து தின்றுகொண்டே “நாங்களா உங்க வழிய மறிச்சிகினு பயமுறுத்தறோம் ; நல்லா இருக்குது உன் பேச்சு” என்று அவரைப் பார்த்து அழுத்தம் திருத்தமாக சொன்னது. மணிக்கட்டை உயர்த்தி நேரத்தைப் பார்த்தார். பிறகு யானையைப் பார்த்தார். “டைம் ஆயிடுச்சா?” என்று அவரைக் கேட்டது. ஆமாம் எனத் தலையாட்டினார். “உன்ன விடறதா இல்லையானே இன்னும் முடிவாகல ; அதுக்குல்ல நீ டைம் ஆவுது ; கிளம்பனும்னு நெனக்கிறயே யானைனா அவ்ளோ குளிர்விட்டுப் போச்சா?” எனக் கேட்டது. “ஸ்கூலுக்கு நேரம் ஆவுது போகலனா பெரிய வாத்தியார் லீவ் போட்றுவார்” என்று அவர் யானையின் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னார். “ஓகோ உனக்கு உயிரவிட ஒரு நாள் லீவுதான் பெரிசா போச்சா?” என யானை மறுபடியும் கேட்டது. தான் அவசரப்பட்டு பேசியிருக்கக்கூடாதோ என்று அவர் நினைத்தார். வாயைக் கட்டியும் கூட யானைக்கு அதன் திமிர் கொஞ்சமும் குறையவில்லை என்று யோசித்து சிரித்துக் கொண்டார். “நீ யானையாக இருந்தால்தானே என்னை பயமுறுத்த முடியும்” என்று வார்த்தைகள் வெடித்துக் கிளம்பின .ஆனாலும் அவர் அப்படியே விழுங்கினார். வாயைக்கட்டி அதை பணிய வைக்க இவ்வளவு நேரமா தேவைப்படும் என்று புரிந்து கொள்ள முடியாமல் அவர் மனைவி தவித்துக் கொண்டிருந்தாள்.

“பஸ் வந்தா உன் பொண்டாட்டிய ஏத்தி அனுப்பு” என்று அது சொன்னது. “அப்ப நான்?” என்று யானையைப் பார்த்துக் கேட்டார். அசைந்து கொண்டு இருக்கும் அதன் காதுகள் ஒருவித அசூயையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. “என்னை இப்படியாக்கிட்டு நீ மட்டும் போனா எப்படி; நானும் வறேன். நடந்தே ஸ்கூலுக்கு போலாம்” என்று அது தீர்க்கமாக சொன்னதும் அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. “நான் என்ன உன்ன மாத்தினேன்?” என்று கேட்டார் அவர். “எல்லாம் எனக்கு தெரியும். நான் இப்ப யானையாவே இல்லைனும் எனக்கு தெரியும். நீ சாதுவானவன்னு நம்பிதான் உன்ன எதுவும் செய்யாம உன் கிட்ட வந்தேன்.ஆனா நீயும் சராசரி மனுஷன்னு நிருபிச்சிட்ட”என்று யானை சொன்னதைகேட்டு அவருக்கு பேச்சு எழவில்லை. ஒருவித குற்றவுணர்வுடன் அவர் அமைதியாக யானையைப் பார்த்துக்கொண்டிருந்தார். திரும்பவும் அதுவே பேசியது. “யானையா இருந்தாதான் காட்ல மரியாதை. அந்த தகுதி இல்லாம அங்க ஒத்த நிமிஷம் கூட இருக்க முடியாது. அந்த வலிலாம் உனக்கெங்க தெரியப் போவுது?” அதாலதான் நான் உங்கூடவே வந்திடறேன்னு சொல்றேன்” என்ன நடக்கப் போகிறதோ என்று புரியாமல் குழம்பி தன் மனைவியைப் பார்த்தார். “என்ன யோசிக்கிற” என திரும்பவும் கேட்டது. அவர் யானையை அன்னார்ந்து பார்த்தார். “இதுக்கு சம்மதிச்சா உன் மனைவியை ஸ்கூலுக்கு அனுப்பலாம். இல்லனா அவளும் நம்மோடவே நடந்து வரட்டும்” என்று சொன்னது. யானையால் எதுவும் செய்யமுடியாது என்று தெரிந்தாலும், அவள் ஏன் வெயிலில் நடந்துவர வேண்டும் என நினைத்தார்.

“வேற வழியே இல்லையா?” என்று அவர் கேட்டார்
“ஏன் இல்லை. இருக்கு”
“என்ன வழி, சொல்லு”
“முடிஞ்சா என்னையும் பஸ்ல கூட்டிட்டு போறதுனா கூட்டிட்டு போ” என்று மிகச் சாதாரணமாக சொன்னது யானை. அந்த நிலையிலும் அவருக்கு சிரிப்பு அடக்கமுடியாமல் பீரிட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். தங்களை படுத்தியெடுக்கும் நடத்துனர்களை யானைகளை அழைத்துக்கொண்டு போய் தான் சங்கடப்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசித்தார். முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “நீ பேசறதுலாம் உனக்கே சரின்னு தோனுதா?” என்று அதைப் பார்த்துக் கேட்டார். அது அமைதியாக நின்று கொண்டிருந்தது. அவருக்கும் தொடர்ந்து என்ன பேசுவதென்று புரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. டவுன் பஸ் வரும் நேரம்நெருங்கிக் கொண்டிருந்தது. மனைவியை மட்டுமாவது முதலில் விடுவிப்போம் என நினைத்துக் கொண்டே “சரி அவள மட்டும் பஸ்ல அனுப்பிட்டு நாம நடந்து போலாம்” என்று யானையைப் பார்த்துக் கூறினார். யானை தன் தலையை சந்தோஷமாக ஆட்டிக் கொண்டது. பேருந்து வந்ததும் மனைவியை அதில் ஏற்றிவிட்டு திரும்பி வந்தார். “நா அவ கூடவே பஸ்ல ஏறிப் போயிருந்தா என்ன பன்னுவ?” என்று யானையிடம் கேட்டார். “கண்டிப்பா நீ போகமாட்டேணு தெரியும்” என்று சொன்னது.

“எப்படி சொல்ற?”
“நான் உன்ன கொல்லப் போறதில்லைனு உனக்கு தெரிஞ்ச பிறகும், இங்க கிடக்கிற மோட்டார் சைக்கிளை விட்டுட்டு போறதுக்கு நீ என்ன முட்டாளா?” என்று திருப்பிக் கேட்டது. அதனிடம் கேட்டே இருக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
இருசக்கர வாகனத்தை அவர் தள்ளிக் கொள்ளவும், பின்னால் இருந்து தன் துதிக்கையால் அது வண்டியை உந்தித் தள்ளுவது என்றும் முடிவானது. சாலை நெடுகிலும் தர்பூசணியை லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். யானையைப் பார்த்ததும் முதலில் பீதியடந்தவர்கள் வண்டியை அது தள்ளிக் கொண்டு வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு ஒதுங்கினர். அனைவர் முகத்திலும் குழப்பத்தின் ரேகைகள் படிந்திருப்பதை உணர முடிந்தது. ஒரு சிலர் தர்பூசணி பழங்களை எடுத்து அதன் பார்வையில் படும்படி வைத்தனர். எதையும் சட்டை செய்யாமல் அமைதியாக வண்டியை தோதாகத் தள்ளிக் கொண்டிருந்தது. ஜல்லிகள் பெயர்ந்திருந்த சாலையில் அதன் செயல்பாடு, அவருக்கு பெரிதும் உதவியாகயிருந்தது. வண்டியை தள்ளுவதில் எந்த சிரமத்தையும் அவர் உணரவில்லை. “ஏன் அமைதியா வர?” என்று அவரைப் பார்த்து கேட்டது. என்ன பதில் சொல்வது என்று அவருக்கு புரியவில்லை. பேசாமல் நடந்தார். “நான் உன்கூட வருவது சங்கடமா இருக்கா?” என்று மறுபடியும் கேட்டது. “காட்ல நீ இருப்பது போல ஊருக்குள் இருக்க முடியாது தெரியுமா?” என்று திரும்பிப் பார்க்காமலேயே கேட்டார். “ஏன்?” என்று சந்தேகமாக கேட்டது அது. “அது அப்படி தான் ;உனக்கு புரியாது” என்று சொன்னார். “கொஞ்சம் புரியும்படி சொல்லேன்” என்று பொய்க்கோபத்தோடு கேட்டது. “ஊரில் உன்னைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவாங்க. எப்படியாவது அங்கிருந்து உன்னை துரத்தியடிக்கவே பார்ப்பாங்க. எல்லா வகையிலும் உனக்கு இடைஞ்சல் கொடுப்பாங்க. ஏன்டா இங்க வந்தோம்னு இருக்கும் உனக்கு. அப்புறம் நீயே துண்டகாணோம். துணிய காணோம்னு காட்டுக்கே தலை தெறிக்க ஓடிடுவ” என்று மடமடவென்று பேசித் தீர்த்தார்.

“இவ்ளோதான, நான் பார்த்துக்கறேன். இனி எப்படி நான் காட்டுக்குள்ள போக முடியும்? நானே விரும்பிதான வறேன். எப்படி நடந்துகிடறதுனு எனக்கு தெரியாதா? அப்புறம் இருசக்கர வாகனத்த தள்ளிக்கொண்டு வரும் யானையைப் பார்த்து எந்த ஊர்க்காரன் பயப்படப் போறான்?” என்று அவரைத் திருப்பிக் கேட்டது. அதனுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், வண்டியை தள்ளுவதிலேயே குறியாக இருந்தார். வெயில் கழுத்தில் பட்டு கசகசப்பை ஏற்படுத்தியது.
வயல்களில் வேலை செய்பவர்கள் அவரையும் யானையையும் விநோதமாக பார்த்தனர். யானையைக் காட்டி என்னவோ பேசிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. கொஞ்ச நேரம் கழித்து அதனிடம் பேச்சுக் கொடுத்தேன். “ஊருக்குள்ள அப்படி என்ன இருக்கு? ஏன் அங்க வரேன்னு நீ அடம் புடிக்கிற?”. அவர் முடிக்கும் முன்பாகவே “யானையா இருந்தாதான நான் திரும்ப காட்டுக்குள்ள போகமுடியும். நீதான் என்னை இப்படியாக்கி உன் வண்டிய தள்ள வச்சிட்டயே” என்று பதில் வந்தது. மறுபடியும் அதை சீண்டும் விதமாக கேட்டேன்: “இவ்வளவு அழுத்தம் திருத்தமாக பேச எங்க கத்துகின?”. “பதில் சொன்னாதான் கூட்டிட்டு போவியா?” என்று கேட்டு, “கிளிலாம் பேசனா ஒத்துக்குவிங்க. நாங்க பேசனா எங்க கத்துக்கின. எவங்கத்துக் கொடுத்தானு கேட்டுட்டு இருப்பீங்களா?” என்று சலிப்புடன் கேட்டது. அதன் வார்த்தைகளில் எரிச்சல் தென்பட்டது.

பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த வாதநாராயண மரத்தை அடைந்த போது, மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். “கிளாசுக்கு போங்கடா” என்று அவர்களை அதட்டி விட்டு யானையைத் திரும்பிப் பார்த்தார். ”நான் ஒன்னும் சொல்லலேயே. நீ எப்படி வேணாலும் நடக்கலாம். நான் யானை மாதிரி நடந்துக்கவே மாட்டேன். இனி அப்படி நடந்துக்கவும் முடியாது இல்லையா ” என்று மீண்டும் அவரிடம் அழுத்தம் திருத்தமாக சொன்னது.

அவர்கள் விளையாட்டு மைதானத்தை அடைந்தனர். அரசமரத்தின் கீழ் யானையைவிட்டு விட்டு, அவர் மட்டும் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றார். நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் அவரிடம் கூறினார். “ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை?” என்று சற்று குரல் உயர்த்திக் கேட்டு ஜன்னல் வழியாக யானையை அவர் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ”ஏற்கனவே ஊர்காரங்க பிரச்சனையை சமாளிக்க முடியல. இப்ப இது வேறயா?” என்று முனக ஆரம்பித்தார். தான் செய்தது தவறோ என்று மறுபடியும் அவர் யோசிக்கத் தொடங்கினார். மிருகத்தின் வாயைக்கட்டி முற்றிலுமாக மாற்றிவிடக் கூடிய மந்திரத்தை நாய்,காட்டுப்பன்றி மற்றும் குரங்கு போன்றவற்றின் மீது சோதித்ததோடு நிறுத்தியிருக்க வேண்டும் என்று உள்மனம் திரும்பத் திரும்ப அரித்துக் கொண்டே இருந்தது. நாய்,காட்டுப் பன்றி மற்றும் குரங்கு ஆகியவற்றின் வாயைக்கட்டியதும் அவை யானையை போல பேசவோ நடந்துகொள்ளவோ இல்லை. அவற்றின் வெறித்தனம் மட்டுமே மறைந்து போனது. ஆக்ரோஷத்தை இழந்து அவை இங்கும் அங்குமாக ஓடி, கடைசியில் காட்டிற்குள்ளேயே சென்றன. தவறு நடந்துவிட்டதோ என்று திரும்பத் திரும்ப அவர் மனதில் கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன. ஆனால் வாயைக்கட்டிய யானைக்கு பேச்சு எப்படி வந்திருக்கும் என குழம்பிக் கொண்டிருந்தார். தலைமை ஆசிரியர் அவரிடம் “மாஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டு உங்க கிளாஸ்கு போங்க. ஜே.டி.அம்மா மணம்பூண்டி ஸ்கூல்ல இருக்காங்களாம்” என்று எச்சரிக்கும் தோரணையில் கூறிவிட்டு நகர்ந்தார். அவர் படபடப்புடன் இருப்பதை உணரமுடிந்தது. இவரும் அறையில் இருந்து வெளியே வந்தார். மைதானம் முழுக்க யானையைச் சுற்றிலும் கூட்டம். மர நிழலில் யானை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அவர்களிடம் சென்று இவர் கூறினார். “களைந்து வீட்டுக்குப் போங்க. யானைக்கு மதம் புடிச்சா என்ன ஆவும் தெரியும் இல்ல?” அதற்கு கூட்டத்தில் இருந்த ஒருவன், “வாத்தியார் வண்டிய தள்ளிகினு வந்த யானைக்கு மதமா புடிச்சிருக்கும்?” என்று தன் பங்கிற்கு கூட்டத்தை உசுப்பேற்றினான். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் யானையின் வால் மீது ஏறி அழுத்திப்பார்த்தார். அது வலியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது. இவருக்கு அந்த வயதானவரின் மேல் கோபம் பீரிட்டுக் கிளம்பியது. “ஏன் யானை வாலை மிதிக்கிற. தைரியம் இருந்தா அது…….” என்று வார்த்தைகள் வெடித்துக் கிளம்பின. கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டார். கூட்டத்தை களைக்க லாரன்ஸ் சார் தான் சரியான நபர் என்று அவருக்குத் தோன்றியது. இதுபோன்ற சூழல்களை மிகவும் நேர்த்தியாக கையாள்வதில் அவர் தேர்ந்தவர். ஒரு பையனை அனுப்பி அவரை கூட்டிவரச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் அவர் வந்தார்; காவல்துறை ஆய்வாளரைப் போல, கூட்டத்திற்கு இடையே பேசினார் ; மெதுவான குரலில் எச்சரித்தார் ; ஒரு கட்டத்தில் விரட்டவும் செய்தார். கூட்டம் மெல்ல களையத் தொடங்கியது.

அனைத்து ஜன்னல்களிலும் மாணவர்களின் முகங்களாகவே தெரிந்தது. அனைவரது விழிகளும் யானையின் மீதே நிலைத்திருந்தன. ஒன்றாம் வகுப்பு பிள்ளைகள், சிறுநீர் கழிக்க போவதாக பொய் சொல்லிவிட்டு வெளியில் வந்து கொண்டே இருந்தனர். ஒரு சிலர் குத்துக்காலிட்டு அமர்ந்து யானையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
தலைமை ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களுக்கும் செய்தியை மெல்ல பரப்பிக் கொண்டிருந்தார். அந்தச் செய்தி பாலு சாருக்கு தெரியவந்த போது, அவர் பேண்டை இழுத்து விட்டுக்கொண்டு மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தார். ஆறாம் வகுப்பில் இருந்த கணித ஆசிரியரைப் பார்த்து கத்திச் சொன்னார். “கணக்கு வெளியில வாயா. நம்ம இங்கிலீஷ் ஒரு யானையை தள்ளியாந்திருக்காருயா”. அவர் கையாட்டிக் கூப்பிடவும், கணித ஆசிரியர் படியிறங்கி வந்து அவருடன் சேர்ந்து கொண்டார். பேனை பெருமாள் ஆக்குவதில் பாலு ஆசிரியர் சமர்த்தர். எவ்வளவு நெருக்கடியான சூழலாக இருந்தாலும், தன் வார்த்தைகளின் மூலமாக சிரிக்க வைத்து விடுவார்.

“கணக்கு நீயுந்தான கண்டாச்சிபுரத்தில இருந்து காட்டு வழியா வர. ஒரேயொரு பூனையையாவது கொண்டாந்திருப்பியா? இங்கிலீஷ பாரு யானையையே கொண்டாந்திட்டார்”. என்று சொல்லிக்கொண்டே அவரைப்பார்த்து “யோவ் நீ பெரிய ஆளுயா ”என்று முதுகில் தட்டினார்.

நாட்கள் நத்தையைப்போல நகர்ந்து கொண்டிருந்தன. அவரை விட பாலு சார் யானையை நன்கு பழக்கிவிட்டிருந்தார். பாலு சார் முழுக்க முழுக்க யானையை தன் வசமாக்கி கொண்டார். பாலு சாருடன் சேர்ந்து யானை உடலை இளைப்பதற்காக ஜிம்முக்கு போய் வரத் தொடங்கியிருந்தது. ஜிம்முக்கு போக முடிவெடுக்கத் தெரிந்த அதற்கு, பாலு சாருடன் டாஸ்மாக் மதுக்கடைக்கு போய் வருவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. மாலை வேளைகளில் இருவரும் ஒன்றாகவே வீரப்பாண்டிக்கு நடந்து சென்று மது அருந்திவிட்டு வருவதை முறைப்படுத்தி இருந்தனர். அன்று சனிக்கிழமை வேலைநாளாக இருந்தது. முதல் பாடவேலை முடிந்து சிறுநீர் கழிக்க இவர் சென்றார். ஐந்தாம் வகுப்பிற்கு பின்புறம் இருவர் பேசிக்கொண்டிருப்பதை கேட்க முடிந்தது. யாராக இருக்கும் என்ற ஐயத்தோடு மெல்ல நடந்து ஜன்னலுக்கு அருகே சென்று கவனித்தார். அங்கு கண்ட காட்சி அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. பாலு சாருக்கு சமமாக யானையும் ஸ்டைலாக நின்று பேசியபடி புகைத்துக் கொண்டிருந்தது. பாலு சார் அதனிடம் “ காட்ல செவனேன்னு இருந்த உன்ன இப்படி பன்னிட்டாரே இங்லீஷ் வாத்தியார்; அவர சும்மா விடாத” என்று யானையை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். பாலு சார் தன் வேலையைத் தொடங்கிவிட்டார் என அவர் நினைத்துக் கொண்டார். அவரால் நம்ப முடியாமல் இருந்தது. தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.

காட்டில் இருக்க வேண்டிய யானை ஊருக்குள் வந்து நான்கு வாரங்கள் கடந்த நிலையில் ஊடகத்தின் காதுகளை அத்தகவல் எட்டியது. அடுத்த நாளில் இருந்து, நிருபர்களின் படையெடுப்புத் தொடங்கியிருந்தன. அன்றிலிருந்து யானை தான் தலைப்புச் செய்திகளை நிரப்பிக் கொண்டிருந்தது. வட இந்திய செய்திச் சேனல் ஒன்று இருபத்தி நான்கு மணி நேரமும் யானையைப் பற்றிய செய்திகளை நேரலையாக வழங்கிக் கொண்டிருந்தது. அதன் பின் டாக்டர். தேஷ் பாண்டே தலைமையிலான விலங்குகள் நல அமைப்பினர் விஷயத்தை கையில் எடுத்தனர். உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அசாதாரண சூழலை தணிக்கும் பொருட்டு, அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

ஒரு வாரம் கழிந்து ஜாமினில் அவர் வெளியில் வந்தார். வெளியில் வரவே அசிங்கப்பட்டு வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தார். அதிகம் செலவு செய்த பிறகே மீண்டும் அவர் வேலையில் சேரவேண்டியிருந்தது. நான்கைந்து நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தார். பாலு சார் தொடர்ந்து யானையை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தார். “ உன்ன இப்படி பண்ணவர சும்மா விடாத” தன் வஞ்சத்தை எல்லாம் யானை அவர் மீது பிரயோகித்துவிட வேண்டும் என்று முடிவு செய்து காத்திருந்தது. வந்தவர் அதிர்ந்து போகும் விதமாக யானை அதீத போதையுடன் “என் வாயக்கட்டிய அந்த தேவிடியா பையன் எங்க போய்ட்டான்? அவன் மட்டும் எங்கையில கெடைச்சா.... ங்கோத்தா, அவன் கதைய இங்கயே முடிச்சிடுவேன்.... தேவிடியா பையன்... என்னை இப்படி பண்ணிட்டானே”.... என்று உரத்தக் குரலில் கத்திக் கொண்டிருந்தது. பிற ஆசிரியர்கள் வராண்டாவில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் நாக்கூசும் வார்த்தைகளை கேட்டு அவர் நடுங்கத் தொடங்கினார்.

“நா பன்னது தப்பு தான்… என்னை விட்டுடு… என்னை விட்டுடு” என்று அலறிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தார் அவர். அவர் அலறிக் கொண்டு எழுந்திருப்பதைப் பார்த்த நர்ஸ் ஓடிவந்தாள். என்ன நடக்கிறது என்று புரியாமல் சுற்றிலும் இருந்தவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவருக்கு தொப்பலாக வியர்த்திருந்தது. வாய் உலர்ந்து பேச சிரமப்பட்டார். டூட்டி டாக்டர் அவரிடம் வந்து “நீங்க தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்கிறீங்க. எல்லாமே பொய்னு முதல்ல நம்புங்க. ஒரு யானையால் பேச முடியுமா? என்று யோசித்து பாருங்க. அது சம்பந்தமா உங்க மனசுல இருக்கற எண்ணங்களை நீக்குங்க. ஒழுங்கா மாத்திரை சாப்ட்டா ஆறே மாசத்துல வீட்டுக்கு போயிடலாம்” என்று சொல்லி அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார். நர்ஸ்சை அழைத்து ஊசி போடச் சொல்லி விட்டு அருகில் இருந்த அடுத்த நோயாளியை பார்க்கச் சென்றார்.

அவர் அங்கு வந்து அன்றோடு ஐந்து மாதங்கள் கடந்திருந்தன. அன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாகவே இருந்தது. வழக்கமாக காலையில் வந்து பார்த்துவிட்டு செல்லும் டாக்டர் வர்கீஸ் அன்று மாலை நேரத்தில் வந்திருந்தார். இவர் அருகில் வந்து “ஒழுங்கா மருந்துலாம் சாப்பிடுறீங்களா? ஒருநாள் தூக்கத்துல அலண்டு எழுந்தீங்கனு நர்ஸ் சொன்னாங்க, எதுவும் நெஜம் இல்லை. எல்லாமே உங்க கற்பனைதான் மிருகங்க வாயலாம் கட்ட முடியாது என்று புரிஞ்சிக்குங்க. அது மாதிரி எண்ணங்களில் இருந்து மொதல்ல வெளிய வாங்க. சீக்கிரமே குணமாகி வீட்டுக்கு போயிடலாம்” என்று சொல்லிவிட்டு, அடுத்த வார்டுக்கு சென்றார். அவர் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் பக்கத்து அறையில் இருந்து அலறும் சத்தம் கேட்டது.

கூச்சல் அதிகரித்துக் கொண்டே இருந்தது பக்கத்தில் இருந்தவர் அனைவரும் அங்கே சென்றுவிட்டிருந்தனர். உள்ளே இருந்த நான்கு பேர் ஆளுக்கொரு திக்கில் பீதியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் மூன்று குரங்குகள் சீறிக்கொண்டிருந்தன. மயக்க நிலையில் கட்டிலில் ஒருவர் ஆழ்ந்திருந்தார். கட்டிலின் மீது ஒரு பிரட் பாக்கெட்டும், இரு ஆப்பிள் பழங்களும் இருந்தன. ஜன்னல் கம்பியைப் பிடித்து ஒரு குரங்கு தொங்கிக் கொண்டிருந்தது. அறையில் இருப்பவர்கள் அமைதியாக இருந்தால் அவை பிரட்டையும் ஆப்பிளையும் எடுத்துக்கொண்டு வந்த வழியே சென்று விடும் என்று ஒருத்தருக்கும் தோன்றவில்லை. படுத்திருப்பவரை கடித்துவிடுமோ என்ற அச்சமே அவர்களில் கூடியிருந்தது. அவர்களின் சிறிய அசைவிற்குகூட அவை சீறத்தொடங்கின.அவற்றின் கூரிய பற்கள் மேலும் பயத்தை அதிகரித்தன.கூச்சலும் குறைந்தபாடில்லை. சத்தம் கேட்டு டாக்டர் வர்கீசும் அங்கு வந்தார். என்ன தான் நடக்கிறது என்று புரியாமல் படுத்துக்கொண்டிருந்த இவரும் எழுந்து அங்கு சென்றார். மக்கள் குரங்கை உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர். பதிலுக்கு அவை சீறிக் கொண்டிருந்தன. யாராவது கொஞ்சம் அசைந்தால்கூட அவை பாய்ந்து கடித்து குதறிவிடும் என்றே தோன்றியது. எல்லோர் முகத்திலும் பயம் படர்ந்திருந்தது.

எல்லோரையும் விலக்கிக் கொண்டு இவர் நடந்து உள்ளே சென்றார். குரங்குகளைப் பார்த்தார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக குனிந்து தரையில் ஒரு வட்டத்தை வரைந்தார். குறுக்கும் நெடுக்குமாக அதில் இரண்டு கோடுகைள கிழித்தார். அதன் முனைகளில் சூலாயுதத்தை வரைந்தார். அவர் செய்வதையெல்லாம் டாக்டர் வர்கீஸ் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார். வட்டத்தின் உள்ளே கையால் ஒத்தி, குரங்குகளைப் பார்த்து மணிக்கட்டை இப்படியும் அப்படியுமாக மூன்று முறை சுழற்றினார். அவர் உதடுகள் வேக வேகமாக எதையோ உச்சரித்து முடித்தது. அவர் குரங்குகளை நோக்கி உள்ளங்கையை விரித்து ஊதினார். நெட்டி முறித்துக்கொண்டு எழுந்தார். அவரின் செயல்பாடுகளில் சீரான வேகம் இருந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குரங்குகளின் அசைவுகளில் தள்ளாட்டம் தெரிந்தது. அவற்றின் சீற்றம் முற்றாக நீங்கியிருந்தது. தங்களின் உடலை அவை வில் போல வளைத்து உதறிக்கொண்டன. அவற்றின் அருகில் சென்று காலால் எந்தித் தள்ளினார். அவை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், நகர்ந்து சென்றன. டாக்டர் வர்கீஸ் வைத்தக் கண் வாங்காமல் தன் கண் முன்னால் நடந்து கொண்டிருப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு குரங்கு மெதுவாக நடந்து வந்து அவரது கால்களை நக்கத் தொடங்கியது.




No comments:

Post a Comment