கண்டாச்சிபுரம் 6.2.2014
அன்பினிய குந்தவைக்கு
நான் தான். நான் தான் என்று எழுதினாலேயே உன்னுள் உருத்திரண்டுவிடமாட்டேனா? ரத்தமும் சதையுமாக எதிரில் வந்து நிற்கக்கூடியவனாகத் தானே இருக்கிறேன்?.
ஆயிரமாயிரம் முறைகள் அப்படித்தானே எழுதியிருக்கிறேன். அதுவெல்லாம் ஒரு காலம். கனவையும் கற்பனையையும் குழைத்து குழைத்து கடிதமாக எழுதித்தள்ளிய காலம். முதல் கடிதத்தை எங்கு வைத்து கொடுத்தேன் தெரியுமா? மறந்துவிட்டாயா என்ன?. எல்லாவற்றையும்
காலம் மறக்கடித்தும் இருக்கலாம். கோடியார்வீட்டு நெட்டிலிங்க மரத்தடியில் வைத்து தான் கொடுத்தேன். சாட்சியாக மரம் இன்றும் அங்கே கிளைப் பரப்பி நின்றுகொண்டிருக்கிறது. கைபேசி வந்து எல்லாவற்றையும் அடித்து வீழ்த்தி விட்டது. எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும் தான். விளக்கி சொல்ல வேண்டுமா என்ன? என்ன தான் எஸ்.எம்.எஸ் வந்துவிட்டாலும், கடிதத்தின் கவர்ச்சியையும் ஈர்ப்பையும் அதனால் ஒருபோதும் அடைந்து விடமுடியாது. நான் ஒரு மடையன். இப்போதெல்லாம் எனக்கு எதுவும் தெளிவாக விளங்கமாட்டேன் என்கிறது. நவீன வாழ்க்கை முறை உன் கால்களிலும் சக்கரங்களை கட்டிவிட்டிருக்கக் கூடும். இப்போதைய உன் வாழ்வில் கடந்த காலங்களையெல்லாம் அசைபோட்டுப் பார்க்க நேரம் இருக்கிறதா என்ன? பிறகெப்படி ஒருவார இதழிற்கு நானளித்த நேர்காணலைப் படிக்க முடிந்தது. படித்துவிட்டு
கடிதம் எழுத தோனியிருக்கிறது? எதேச்சையாக நடந்துவிட்டதா? என் மொழி இன்னுமா உன்னை வசியம் செய்துகொண்டிருக்கிறது. என் எழுத்துகளை வாசிக்கும்போது உன் கண்களில் கிறக்கம் சொட்டுமே! இப்போது கூடவா?.
இன்று மேம்போக்காக காதல் செய்துகொண்டிருக்கும் இளைஞர்களை பார்த்திருக்கிறாயா?.எல்லோரையும்
அப்படி சொல்வதிற்கில்லை. அவர்களுக்குப் பதிலாகத் தான் அரசியல் கட்சிகள் காதலை தீவிரமாக கையாள்கின்றனர். அப்போது நாம் எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறோம் என்பதை நீ மறந்துவிட்டிருக்க மாட்டாய். ஒருவேளை நாம்தான் தீவிரமாக இருப்பதுபோல நம்பிக் கொண்டிருந்தோமா? எல்லாம் மாயைதானோ? நொச்சியும் கொஞ்சியும் பூத்துக்கிடந்த காடு மேடெல்லாம் உன்னை அழைத்துக் கொண்டு திரிந்ததெல்லாம் வெறும் இனக்கவர்ச்சி மட்டுமேதானா? சுலபத்தில் மறந்து விடக்கூடிய நாட்களா அவை? நினைக்க நினைக்க மனசு முழுக்க ஆண்டாசெட்டி குளத்து இலுப்பை பூ வாசம் பெருகி மணக்கிறது அன்பே.
இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த இரவில் ஏன் இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று உனக்கு புரிகிறதா?. எனக்கும்கூட சரியான காரணம் எதுவுமே பிடிபடவில்லை. செல்வத்தின்
வார்த்தைகள் என் மனதை அரித்துக்கொண்டே இருக்கின்றன. அதுதான் காரணமா என்பதையும் சொல்வதிற்கில்லை.
இதேபோன்றதொரு கோடையில் தான் பிரிகிறேன் என சொல்லாமல் நீ நிரந்தரமாகப் பிரிந்து சென்றாய். நீதான் அப்படி நினைத்திருக்கிறாய். எளிமையாக நாம் காதலித்திருந்திருக்கிறோம். தெளிந்த நீரைப்போல அது இருந்தது. சிறு கொய்யாவை நீ கடித்துத் தந்தாய். அதை நான் ஆயிரம் கரங்கள் கொண்டு வாங்கியதை உன் விழிகள் எப்படி ரசித்து உள்வாங்கியது தெரியுமா? ராட்சசி. இப்போது நினைத்தாலும் மனதில் சுளுக்கு விழுந்து விடுகிறது.
நகரின் பிரதான துணிக்கடையில் வைத்து தற்செயலாக உன் மகளை கடந்த வாரத்தில் ஒருநாள் பார்க்க நேர்ந்தது. எந்த நாள் என்று உறுதியாகத் தெரியவில்லை. குந்தவை என்று கூட சப்தமிட்டு கூப்பிட்டும் விட்டேன். அந்தளவிற்கு மனம் பித்தேறிக் கிடந்தது. அச்சு அசலாக அப்படியே உன்னை உரித்து வைத்திருக்கிறாள். எதுவும் பேசாமல் அவள் திரும்பி ஏறிட்டுப்பார்த்தாள். பிறகுதான் நான் அருகில் சென்று விசாரித்தேன். அவளுக்கும் ஏன் தான் வார்த்தைகளை தேனில் குழைத்து குழைத்து பேசும் கலையை கற்றுக்கொடுத்திருக்கிறாயோ? நடை உடை பாவனை அனைத்திலும் நீயேதான் அன்பே அவளுக்குள் நிறைந்திருக்கிறாய்.
இருபத்தி நான்கு வருஷங்கள் கடந்த பின்பு இது என்ன தொந்தரவு என்று உனக்கு தோன்றக்கூடும். உன் கடிதத்தைப் பார்த்த
நொடியில் எனக்கும் அப்படிதான் இருந்தது. இக்கடிதத்தை உன் கணவன் இருந்து பார்க்க நேர்ந்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கவலைப்படும் உன் மனதையும் நான் அறிவேன். அதுகூடவா எனக்கு புரியாது? காலத்தின் நுண்ணிய அலகிலாவது உன்னை நான் நேசித்திருக்கமாட்டேனா குந்தா! நீ உணராமலேயே சென்றுவிட்டாயோ? அத்தகையப் பதற்றங்களையெல்லாம் புறமொதுக்கிவிட்டே , இக்கடிதத்தை என் நினைவுகள் எழுத தொடங்கியிருக்கின்றன. இதை நான் எழுதுகிறேன் என்றா நினைக்கிறாய்? போக்கத்தவளே! உனக்கெப்படி புரியாமல் போகும்?. எல்லாம் தெரிந்த கள்ளி நீ. இத்தனை வருஷங்களுக்குப் பிறகு ஏன் இவ்வளவு அழுத்தமாக உன் நினைவுகள் என்னைத் தழுவிக்கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. உன் மகளைப் பார்த்தது மட்டுமேவா காரணமாக இருந்துவிட முடியும்? எனக்கு அப்படித் தோன்றவில்லை. உன்னைப் பற்றிய செல்வனுடைய
வார்த்தைகள் என் நினைவின் நதிக்குள் ஒரு மீனைப்போல இப்படியும் அப்படியுமாக நீந்திக்கொண்டே
இருக்கின்றன. அவனுடைய வார்த்தைகள் தான் இயக்கிக்கொண்டிருக்கிறதோ?
உனக்கு நீல நிறம் என்றால் ரொம்பவும் இஷ்டம். விஷம்
கூட நீல நிறம் தான். இப்பவும் அதே விருப்பத்தோடு இருக்கிறாயா? வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் திரும்ப திரும்ப உன்னை என் மனதில் தீட்டிக்கொள்கிறேன் தெரியுமா? ஆழமாக யோசித்துப் பார்த்தால், கடந்து சென்ற காலங்களிலெல்லாம், உனக்கான வார்த்தைகளை தொடர்ந்து என் மனதில் எழுதிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன் என்பதை தெளிவாக உணரமுடிகிறது. ‘பைத்தியம் மாதிரி உளராத டா’
என நீ அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாய். இப்போதும் அதை என்னால் கேட்கமுடிகிறது குந்தவை. ஒரு வகையில் யோசித்தால் பைத்தியக்காரத்தனம் தானே எல்லாம். ‘வேம்பின் பைங்காய் என் தோழி தரினே’ எனும் சங்கப்பாடல் நினைவிருக்கிறதா? நினைக்கும்போதே
ஆலமரத்து கிளிகள் மனதில் சிறகடிக்கத் தொடங்கிவிடுகின்றன. மறந்துவிடக்கூடிய வரிகளா அவை?.
தமிழ் ஐயாவின் குரல் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது. புங்கை மர நிழல். அங்கு தான் எப்போதும் தமிழ் வகுப்பு நடைபெறும். ஐயா நாற்காலியில் அமர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். கிணற்றடி ஆலமரத்தில் பறவைகள் சடசடத்துக் கொண்டிருந்தன. அன்று செய்யுள் வகுப்பு. எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். குறுந்தொகையில் இருந்து ஒரு பாடலை வாசிக்கத் தொடங்கினார்.அவரது குரல் தெளிந்த நீரோடையைப் போல இருந்தது
.
“வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் ; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர்-
ஐய-
அற்றால் அன்பின் பாலே”.
மறுபடியும் ஒருமுறை பாடலை ஏற்ற இறக்கத்தோடு படித்துக் காட்டிவிட்டு அவர்களைப் பார்த்தார். அனைவரும் அமைதியாக அவரையே உற்றுக் கவனித்துக் கொண்டு இருந்தனர். ஆலமரத்தில் இருந்த காகம் பறந்து, மேற்கு பக்கமிருந்த கூரை கொட்டகையின் மேல் அமர்ந்தது. செட்டியார் வீட்டு செல்வம் தனக்கு முன்பாக இருந்த மண்ணைக் கூட்டிக் கூட்டி களைத்துக் கொண்டிருந்தான். செல்வத்தையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த ரவி அவளை கவனித்துக் கொண்டிருந்தான். ஐயா மறுபடியும் பாடலை ரசித்துப் படித்துக் காட்டி, அவர்களைப் பார்த்துக் கேட்டார். “யாருக்காவது அர்த்தம் விளங்குதாடா?” ஒருத்தரும் அசையவில்லை. கடைசி வரிசையில் இருந்த அக்ரம் “யாருக்கு புரியுதோ இல்லையோ ரவிக்கும் குந்தவைக்கும் கண்டிப்பா புரிஞ்சிருக்கும்” மெதுவாகச் சொல்லிவிட்டு கண் சிமிட்டினான். அனைவரும் கொல்லென்று சிரித்தனர். “இந்த கீழ்வெட்டு பேச்சிக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல பாய்” என்று அக்ரமை பார்த்து அவர் சொன்னார். எப்போதும் அவர்கள் அப்படிதான். வழக்கமாக பதில் சொல்லும் குந்தவையை அவர்
நோக்கினார். மாணவர்கள் அமைதியாக இருந்தனர். “உங்களுக்கு விளக்கமா சொல்ல இதுல ஒண்ணுமில்ல. எல்லாமே நீங்க செய்யறது தான். என்னடா ரவி. சொல்றது சரிதான?” என்றார். அனைவரும் ரவியை பார்த்தனர். குந்தவை அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.அவளையும் அவனையும் சுட்டிக்காட்டி செட்டியார் வீட்டுச் செல்வம் என்னவோ சொன்னான். அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. திரும்பவும் அவர்களிடம் விளக்கத்தொடங்கினார். வார்த்தைகள் தொடர்ந்து பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தன.
“எல்லாமே ஆரம்பத்தில் இனிப்பாகத்தான் இருக்கும். போகப்போகத்தான் கசக்க செய்யும். இததாண்டா பாட்டா எழுதி இருக்கான். வேற ஒன்னும் இல்ல. எல்லாம் காதல பத்திதான்”.
அவர் அப்படி சொன்னதும் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
“லவ்னா தாண்டா உங்க கிட்ட ஒரு பொலிவ பார்க்க முடியுது” என்று கிண்டலடித்தார். கோபி சேகரை சீண்டி மெல்லிய குரலில் சொன்னான்: “அந்த மேட்டர்ல ஐயாவும் படு கில்லாடி தெரியுமா?. “எந்த மேட்டர் டா” என்று புரியாமல் கேட்டான். “ உனக்கு எல்லாத்தையும் விலாவாரியா புட்டு புட்டு சொல்லனும்டா” என்று அலுத்துக் கொண்டான். அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்த ஐயா “அங்க என்னடா சத்தம்?” என்று குரல் உயர்த்தினார். “புரியுற மாதிரி சொல்லுங்க ஐயா ” என்று செல்வம் கேட்டான். “போண்டா உனக்கா புரியல?” என்றார் அவர். செல்வம் குண்டாக இருப்பான்.
போண்டா என்பது கணக்கு ஆசிரியர் வைத்த பெயர். நாளடைவில் அதுவே நிலைபெற்று விட்டது. அவன் உதட்டை பிதுக்கினான். விட்ட இடத்திலிருந்து அவர் கூறத் தொடங்கினார்.
“தன் தலைவியின் கணவனைப் பார்த்து தோழி கூறுவது போன்று எழுதப்பட்ட பாடல் இது. நீங்கள் என் தலைவியை காதலிக்கத் தொடங்கிய காலத்தில் அவள் வேப்பங்காயைத் தின்னக் கொடுத்தால் அது கற்கண்டைப் போல இருக்கிறதென்றீர். ஆனால் இன்றோ, பறம்பு மலையின் சுனைநீரை அருந்தக் கொடுத்தால் கூட, துவர்க்கிறதாக கூறுகிறீர்கள். இதுதான் உங்கள் அன்பின் லட்சணமா? என்று கேட்கிறாள்.புரியுதா? புரிஞ்சு போச்சா?” என்று சொல்லி முடித்தார். குந்தவை அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள்.
அவனைப் பார்த்து அவள் சிரிப்பதை அவர் பார்த்தார். அதன் பிறகு “என்னமா உனக்காவது புரியுதா?” என்று மையமாக கேட்டார். சேகரைப் பார்த்து கோபி கண்ணைச் சிமிட்டியபடி சிரித்துவிட்டு “இப்பவாவது உனக்கு புரியுதாடா? என்று கேட்டான்.
சாயுங்காலம் பள்ளிகூடம் விட்டு அவள் வீடுநோக்கி மெதுவாக நடந்தாள். பாப்பான்குளச் சந்தை நெருங்கியதும் அவனுக்காக அவள் காத்திருந்தாள். அவன் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்து அவளுடன் சேர்ந்து கொண்டான். அவளை உற்றுப்பார்த்தான். அவள் முகம் இனம் புரியாத வருத்தத்தில் இருப்பதை உணர முடிந்தது. “ஐயா சொன்ன மாதிரி நான் உனக்கு போகப்போக புளிக்க ஆரம்பிச்சிடுவேனா?” என்று வெடுக்கெனக் கேட்டாள். கண்களில் நீர்திரளத் தொடங்கியது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது. அவள் கையைப் பிடித்து இழுத்து, உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டான். தலையை வருடிவிட்டான். பின் மெல்ல
அவன் விரல்கள் அவள் கன்னத்தில் கோலமிட்டபடி கீழே இறங்கிக் கொண்டிருந்தன. திரும்பவும் சுற்றும் முற்றும் பார்த்தான். நடமாட்டம் இல்லாத சந்து அவனுக்கு தைரியத்தைக் கொடுத்தது. உதட்டில் முத்தமிட அவளை இழுத்தப்போது “ ஒனக்கு நேரங்காலமே இல்லடா” என்று சொல்லி அவனுடைய கையை தட்டி விட்டாள். “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா. இப்படி ஏதாவது பண்ணி என்ன பேசவிடாம பண்ணிடற” என்று அவள் அலுத்துக் கொண்டாள். அப்படிச் சொன்னதும் அவள் தலையில் கை வைத்துச் சத்தியம் செய்தான். “நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது. கடைசி வரை நான் உன் கூட இப்படியே இருப்பேன். போதுமா”
என்று தலையை கோதிவிட்டான். பாதத்திற்கு கீழ் இருந்த நிலம் நழுவுவதைப்போல இருந்தது அவளுக்கு . சரி என்பது போல தலை அசைத்தாள்.
இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது நினைத்தாலும் நேற்று நடந்தது போலவே இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்பவன் நான். இவ்வளவு உறுதியாகவா பேசியிருக்கிறேன்? தலையில் அடித்து சத்தியம் வேறு செய்திருக்கிறேன். உண்மையிலேயே விசித்திரங்கள் நிறைந்ததுதானோ காதல்? காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது பார்த்தாயா? நம்மில் யார் மீறிச் சென்றிருக்கிறோம் என கடைசி
வரை நீ உணரவே இல்லைதானே?
நம் வகுப்பில் ஆங்கிலத்திற்கு நீ மட்டும் தான் தனி வகுப்பிற்கு சென்றாய். அதன் பிறகே நான் சேர்ந்தேன். என் அப்பா லேசிலா என்னை சேர்க்க ஒப்புக்கொண்டார்?.
உன்னைப் பார்க்கத் தானே நான் தனிவகுப்பிற்கே வந்தேன். ஒரே வாரத்தில் ஆசிரியர் அதை உணர்ந்து கொண்டுவிட்டார். “டேய் நீ டியூஷன் படிக்க வந்தியா? இல்ல சைட் அடிக்க வந்தியா?” என்று என்னைப் பார்த்து வெடுக்கென கேட்டார். நான் அசிங்கப்பட்டு தலை குனிந்து நின்றேன். ஆனால் உனக்கு சிரிப்பு பீரிட்டுக் கிளம்பியது தெரியுமா? அதையும் தானேடி ரசித்தேன். இப்போது யோசித்தால் எல்லாமே பைத்தியக்கார செயல் போல்தான் இருக்கிறது. உன் பாட்டுக்கு நீ படிப்பில் முன்னேறிக் கொண்டே இருந்தாய். என்னுடன் பேசினாய். பதில் கடிதமும் கொடுத்தாய் எல்லாவற்றையும் தான் செய்தாய். அதையெல்லாம் அந்த நொடியில் மறந்து மூட்டைக் கட்டித் தூர வைத்துவிட்டு படிப்பிற்கு தாவிச் செல்ல உன்னால் முடிந்திருக்கிறது. இந்த நுட்பம் புரியாமல் உன் நினைவுகளில் ஊஞ்சல் கட்டி பள்ளி நாட்கள் முழுக்க நான் ஆடிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதையே தாமதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
நீ இருக்கும் இடத்தில் டிசம்பர் பூக்கள் பூக்கிறதா? அவற்றைப் பறித்து உன் நீள்சரக் கூந்தலில் சூடிக்கொள்கிறாயா அன்பே? டிசம்பர் பூ வைத்திருக்கும் பெண்களிலெல்லாம் என்னுள் இருக்கும் உன் முகத்தை எடுத்து பொருத்திப் பார்க்கும் வேலையையே மனம் ஒவ்வொரு மார்கழியிலும் செய்து கொண்டிருக்கிறது. இப்போதைய யுவதிகளுக்கு டிசம்பர் பூவின் மகத்துவம் தெரிந்திருக்கவில்லை குந்தவை. அக்காலகட்டத்து நினைவுகளின் சரத்தை டிசம்பர் பூக்களின்றி கோர்த்துவிட முடியுமா என்ன? அந்த நேர்காணலில் கூட இக்கருத்தைப்
பதிவு செய்திருக்கிறேன். உணர்ந்தாயா? செம்பருத்தி பூக்கள் கூட தங்கள் இருப்பை வெகுவாக குறைத்துக் கொண்டுவிட்டன. சூடிக்கொள்ள ரசனையானவர்கள் இருந்தால் தானே அவை பூக்கத் தொடங்கும்?.செம்பருத்தியை எதேச்சையாக எங்காவது பார்த்துவிட்டால் மனம் பூரிப்படைந்து விடுகிறது. இதழ் பிரித்து எப்போதோ நீ சிரித்த சிரிப்புகளில் அழகானதொன்றை தேடி எடுத்து மனம் அதிலேயே லயிக்கத் தொடங்கிவிடுகிறது. அதுபோன்ற காலம் இனி திரும்ப வருமா குந்தவை? வாய்ப்பிருக்கிறதா என்ன? என் நம்பிக்கையின் வேர்கள் தொடுவானத்திற்கு அப்பால் நீண்டு கொண்டிருக்கின்றன.
என்னை பிரிந்து சென்றிருக்க கூடாது என்று இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையேனும் நினைத்துப் பார்த்திருக்கிறாயா? அந்தந்த காலத்திற்கேற்ப நம்முடைய நினைவுகள் தங்களின் வண்ணத்தையும் சுவாசத்தையும் மாற்றிக் கொண்டிருக்கின்றன
என்பதை உன்னால் உணர முடிகிறதா? காங்கரீட் கட்டடங்கள் நிறைந்திருக்கும் அங்கே பழைய நினைவுகளுக்கான தேவை இருக்கிறதா? நகரத்தின் அடுக்கு மாடி வீட்டில் உலவிக் கொண்டிருக்கும்
உன்னில் என் வீட்டுத்தோட்டத்து பூவரச மர ஊஞ்சல் இத்தனை ஆண்டுகளில் எத்தனை
முறை ஆடியிருக்கிறது? எதையுமே மறக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன். நினைவுகள் பின்னிப் பின்னி இறுக்கும்போது சிலநேரங்களில்
மூச்சுதிணறவும் செய்துவிடுகிறது.
நினைவுகள் உறைந்து பைத்தியம் போல மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டுக்கான கோடையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் கோடைக்காகவே மனம் காத்திருக்கும். வாசியம்மனுக்கு பொங்கலிட்டு கோடையை வரவேற்போம் நாம். உனக்கு நினைவிருக்கிறதா? கடுங்கோடையின் அடர்த்தியான வெயிலை ஒரு நண்பனைப்போலத்தானே எண்ணியிருந்திருக்கிறோம். இப்போதெல்லாம் கோடை தகித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெயில் மட்டும் கூடிக் கொண்டிருக்கிறது. மற்ற அனைத்தும் தங்களின் நிறங்களை உதிர்த்துக் கொண்டிருக்கின்றன. அனுபவித்துதான் சொல்கிறேன். நமக்கான கோடைகாலம் பங்குனி உத்திரத்தில் இருந்து தொடங்கிவிடும் என்பதை மறந்து விட்டாயா? பெங்களுரில் வசித்துக் கொண்டிருந்தாலும் உத்திரத்திற்கு வந்து செல்வம் காவடித் தூக்கிவிட்டுத்தான் செல்கிறான். அன்பு, சேகர் மற்றும் கோபி போன்றோர் இல்லாமல் எந்த ஆண்டும் உத்திரம் நிகழ்ந்து விடவில்லை என்பது உனக்கு தெரியுமா?
திரௌபதி அம்மன் கோயில் தீமிதி உனக்கு ஞாபகம் இருக்கா? சுலபத்தில் மறந்துவிடக்கூடிய நாட்களா அவை?
யாருக்காக வேண்டிக் கொண்டு அங்கே பால் கஞ்சி ஊற்றினாய் என்று
இப்போது பால் கஞ்சி ஊற்றிக்கொண்டிருக்கும் உன் மகளுக்கு தெரியுமா?. பதினெட்டு நாட்கள் நடைபெறும் பாரதக் கூத்திற்காக உன் பாட்டி கோயில் எதிரில் பாயைப்போட்டு இடம் பிடிப்பாள். கூத்து தொடங்கும் நேரம் பார்த்து நீ வந்து அமர்வாய். என் மனம் வேறொரு கூத்தை நடத்திக் கொண்டிருக்கும். எல்லாமே நீரடித்து விலகிய கோலமாகத்தானே மாறிவிட்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது குந்தவை. அந்த கோடையின்
அந்தியை மறந்துவிட முடியுமா என்ன? காலகாலத்துக்குமான பிரிவின் நிமித்தத்தை ஒவ்வொரு வார்த்தைகளாக நீ சொல்லச் சொல்ல என் பாதத்திற்கு கீழே இருந்த நிலம் மெல்ல நழுவிக் கொண்டிருந்ததை உணரமுடிந்தது. மனம் கனத்து வெடித்து விடும் போல இருந்தது. அந்நாட்களை
இப்போது
நினைத்தாலும் நடுக்கமாக இருக்கிறது குந்தவை.
வளமோட்டு பாறைக்கு கிழக்கே குன்றுகளும் புதர்களுமாக இருந்தன. அவற்றிற்கு இடையே வறண்டு கிடந்தது ஓடை. அந்திக் கருக்கலில் பறவைகள் வாசியம்மன் கோயில் நோக்கிபறந்து கொண்டிருந்தன. கூடடைவதின் அவசரம் தெரிந்தது. அவனை ஏறிட்டு பார்க்காமலேயே அவள் பேசினாள்.குரலில் கலவரம் தெரிந்தது. “ உன் மேல அன்பில்லாம இல்லடா. புரிஞ்சிக்க ரவி”
அவன் அமைதியாக இருந்தான். மெல்ல தன்னை தவிர்க்கத்
தொடங்கியிருக்கிறாய் என அவனால் உணர முடிந்தது. என்ன
காரணம் என புரியாமல்தான் அல்லாடிக் கொண்டிருந்தான். வார்த்தைகளை முற்றிலுமாக தொலைத்து விட்டிருந்தான் அவன், அவனுக்கு நடுக்கமாக இருந்தது. கண்களில் நீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. எந்நேரமும் அழுதுவிடக்
கூடிய நிலையில்தான் இருந்தான்.
“ இப்படி அமைதியாவே இருந்தா என்ன ரவி அர்த்தம்?” என்று திரும்பவும் கேட்டாள். நடுங்கிய குரலில் “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு குந்தவை?” என்று கேட்டான். “எனக்கு என்ன பன்றதுனு தெரியல”
என்று
அவள் கூறியதைக்கேட்டபடி அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். “இப்படியே நிக்காத, எதாவது பேசு” என்று சொன்னாள்.
சிறிது
நேரம் இருவரும்
எதுவும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். நேரம் கடந்து கொண்டிருந்தது. வயலிலிருந்து மாட்டை ஓட்டிக் கொண்டு ஒருவர் வளமோட்டு பாறை சரிவில் இறங்கிக் கொண்டிருந்தார். “நேரம் ஆவுதுல்ல. எதாவது சொல்லுடா”
என்றாள். “முடிவெடுத்துட்டு வந்து என் முன்னால்
நின்னா நான் என்ன பண்ண முடியும்?” என்று விரக்தியாக பதில் சொன்னான். குழப்பமாக இருந்தது. இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என புரியாமல் தவித்தான். திரும்பவும் அவளே பேசினாள். “அவரும் நல்லவர் தான்டா. நல்ல வேலையில வேற இருக்கார். அவரும் என்னை சின்ன வயசில இருந்து லவ் பண்றாராம் டா”. அவன்
இடைமறித்து ஆத்திரத்தோடுக் கேட்டான். “லவ்வ அவரு இப்பதான் சொன்னாரா; இல்ல அப்பவே சொல்லிட்டாரா?”.
அவனுடைய ஆத்திரம் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. எதுவும் பேசாமல் சிறிது நேரம் இருந்தாள்.
அவனுக்கு மூச்சு வாங்கியது. பிறகு அவள் பயந்து பயந்து பேச்சை தொடர்ந்தாள். “அவர்னா வீட்ல சரின்னு சொல்லிடுவாங்க”
என்றாள். “இது ஆரம்பத்திலேயே உனக்கு தெரியாதா?”
என்று அவன் கேட்டான். “நானும் போராடித்தாண்டா
பார்த்தேன்” என்றாள். “இப்ப சோர்ந்து போய்ட்ட இல்ல?” என்று தட்டையான குரலில் கேட்டான்.
அவள் அமைதியாக இருந்தாள். “அவனுக்கு ஒரு முழம் பூவுக்கு ஐவேசி உண்டானு கேட்கிறாங்க டா நான் என்னடா சொல்றது”.
அவள் பேச பேச இவனுக்கு உடம்பு அதிகமாக நடுங்க
ஆரம்பித்தது. அவள் வார்த்தைகள் ஊசியைப் போல அவன் மனதை தைக்கத் தொடங்கின. “அப்ப எல்லாமே பொய்தானா குந்தவை?” என்று நடுக்கத்துடன் கேட்டான். அவள் அதற்கும்
பதில் பேசாமல் இருந்தாள். பழைய நினைவுகளெல்லாம் அவன் மனதில் குமிழிட்டபடியிருந்தன. நன்கு இருட்டிவிட்டிருந்தது. அதற்கு மேல் அங்கு நின்று பேசுவது சரியில்லை என்று தோன்றியது அவனுக்கு. “அப்பறம் பேசிக்கலாம் குந்தவை வீட்டுக்கு போ”
என்று
தளர்ந்துபோய் சொன்னான். “என்னை மன்னிச்சிடுடா”
என்று சொல்லிவிட்டு அவள் மங்கலாகத் தெரிந்த பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். விஷயத்தை பெரிது படுத்தி விடுவானோ என்று பயந்து கொண்டே பாதையைத் தேடி தேடி நடந்தாள். அதுவே அவளுடனான கடைசிசந்திப்பு என்பது தெரியாமல் தனக் கெதிராக
கறும்பாம்பென வளைந்து நீண்டிருக்கும் பாதையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் ஆந்தை கூவிக் கொண்டிருந்தது.
என் முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ளாமலேயே பிரிந்து சென்றுவிட்டாய். காலகாலத்திற்குமாக பிரிகிறோம் என அப்போது தெரிந்திருக்கவில்லை. சொல்லிவிட்டுப் பிரிந்திருக்கலாம் அன்பே!.
அப்படியே மறந்துவிடக் கூடியவளாகவா நீ இருந்திருக்கிறாய்?. எல்லாவற்றையும் ஒரு திட்டத்தோடுதான்
செய்திருக்கிறாய் என்பதை கடைசி வரை நான் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேன். எவ்வளவு
பெரிய முட்டாள் தனம்?. பாதகி.
நீ எல்லாவற்றையும் செய்யக் கூடியவள் தான். என்னை செருப்பால் அடிக்க வேண்டும். என்னை என்றால் என் புத்தியைத்தான். அதற்குதானே எதுவும் உறைக்க மாட்டேன் என்கிறது. இத்தனை ஆண்டுகளில் முகிழவே முகிழாத நினைவுகளை நான் தோண்டித் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறு நப்பாசை தான்.
என் அன்பை சட்டென்று
உதறித் தள்ளும் முடிவுக்கு நீ வந்திருக்க மாட்டாய் எனத் தெரியும் குந்தவை. உன் கல்லூரிக்கே
வந்து அவர் எப்போது உன்னைச் சந்தித்தாரோ அந்த
நிமிடமே நீ என்னிலிருந்து விலக நினைத்ததின் துவக்கப் புள்ளி. நீயும் அவரும் உன் கல்லூரியில் இருந்து நடந்தே பேருந்து
நிலையத்திற்கு வந்ததைப் பார்த்த நண்பர்கள் சொன்னார்கள். இந்த மனதை புரிந்து கொள்ளவே முடியவில்லை குந்தவை. இத்தனை
ஆண்டுகள் கடந்த பிறகும் ஏன் இப்படியெல்லாம் அது தாறுமாறாக யோசிக்கிறது என்று புரிவதில்லை. வயதாகிவிட்டது ஒரு காரணமா? . எதைப்பற்றியும் யோசிக்காமல் உன்னுடன் சேர்ந்து காடு கழனி சுற்றி வந்ததையும் வேப்பம் பூ உலுக்கியதையுமே மனம் சுற்றி சுற்றி வருகிறது.
இடைப்பட்ட காலத்தில் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. உன் திருமணம். எந்த
மனநிலையில் எனக்கு அழைப்பிதழை அனுப்பியிருப்பாய் என உணர முடியவில்லை. அப்பா அம்மாவின் மரணம். நான் முற்றிலுமாக
நொறுங்கிக் கிடந்த நாட்கள். இருவரும் தற்கொலைதான் செய்து கொண்டனர். காரணம் அவர்களிருவருக்கும்
மட்டுமே தெரிந்த ரகசியம். பாட்டிக்கு வாய்ப்புற்று.
கோரமான சாவு. எதற்குமே சிறு அசைவுகூட உன்னிடமிருந்து வரவில்லை. தகவல் தெரியாமலா இருந்திருக்கும்?
எல்லாவற்றுக்கும் மனம் வேண்டும்தானே? நோய் தான் ஒருவனை மனிதனாக
உணரச் செய்கின்றன. சிறுகசிறுக நோய் ஒருவனை கரைக்கத் தொடங்கி விடுகிறது. கௌரவம், அகங்காரம், பதவி, ஆணவம், செல்வம் அனைத்தையும்
செதில்களைப்போல உதிர்த்து இறுதியில் தான் அவனை மனிதனாக மாற்றுகிறது. என்ன பயன்? அதற்கு
மேல் அமைதியாக காத்திருக்க மரணத்திற்கும் அவகாசம் இருப்பதில்லை
.
அதனாலேயே சாவின் வாசலில் நிற்பவர்கள் குழந்தைகளாக தெரிகிறார்கள் போல. அதுபோன்ற முகங்களை நீ பார்த்திருக்கிறாயா? மரணத்தைப்
பற்றி யோசிக்கத் தொடங்கினால் மனம் அதிலேயே ஆழ்ந்து விடுகிறது.
இத்தனை ஆண்டுகளில் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
எதுவுமே
நிலை இல்லை
என்பதே அது. எல்லாம் சடுதியில் மாறிவிடக் கூடியதே. பாலைவிட வேகமாகத் திரிந்து விடுவதுதான்.
நீ கூட அப்படித்தானே? கொஞ்ச நாள் வலிக்கச் செய்தது. பிறகு அதுவே வைராக்கியமாக மாறிவிட்டது. இல்லை என்றால் நானெல்லாம் எம்டெக் படிக்கிறவனா என்ன? உன்னால் தான் படிக்கவே ஆரம்பித்தேன்.
உன் மீதான கோபம் படிப்பின் மீது குவிந்தது. நான் முழுவதுமாக மாறத் தொடங்கியதே அப்போதுதான். காலம் எவ்வளவு விசித்திரமானது பார்த்தாயா? எனக்கு வாண்டர் வால்ஸ் விசையையும் நுண்கணிதத்தையும் சொல்லிக் கொடுத்தவள் நீ. அரூபமாக
தொங்கிய கனவின் ஏணியைப் பற்றி நான் மேலேமேலே சென்று விட்டேன். எப்படியெல்லாமோ
ஆகவேண்டும் என நினைத்தவள் நீ. எப்படியாவது இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்துவிட வேண்டும்
என்ற தீவிரத்தில் இருந்தாய். உறவினன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான்.நீயும் அனுமதித்தாய்.
அழகானவனாகவும் இருந்தான்தான் மறுப்பதற்கில்லை. நுனிநாக்கு ஆங்கிலம் வேறு. கல்லூரிக்கே வந்து
உன்னை அழைக்கக் கூடிய துணிச்சல்காரனாகவும் அவன் இருந்திருக்கிறான். நவீன உலகத்தை உனக்கு
பரிச்சயம் செய்யும் நுட்பம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. எத்தனை காலத்திற்கு வளமோட்டுப்
பாறையையும் வாசியம்மனையும் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருக்க முடியும்?. ஒருவகையில் நீ
செய்தது சரிதானோ என்றும் தோன்றுகிறது. எப்படிப்பார்த்தாலும் உன் பாதை மாற்றம் உன் கல்வியை
காவு வாங்கியிருக்கிறது. நீயும் உடன்பட்டாய்.
அரைகுறையான கம்ப்யூட்டர் கல்வியை உனக்கு கொடுத்த காலமே உன்னை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. நீ உயர உயரப் பறந்திருக்க வேண்டியவள்.
நீயாகவே உன் சிறகுகளை வெட்டிக்கொண்டாய். இப்போதுகூட
வலிக்கவில்லையா குந்தவை?.
.எம்.டெக் படிக்க ஒசூரைத் தாண்டி
ஒரு கல்லூரிக்கு போகவேண்டிய நிர்பந்தம். அந்த கல்லூரிதான் முற்றிலுமாக என்னை மாற்றி
அமைத்திருக்கிறது. அங்குதான் நான் எழுதவும் ஆரம்பித்தேன். தொடக்கத்தில் கவிதைகளில்
இருந்துதான் தொடங்கினேன். ஒருகட்டத்தில் கவிதை சரிவராது என்று உணர முடிந்தது. பிறகு
புனைவெழுத்துக்கு மாறிவிட்டேன். ஒருவேளை இப்போது
இருப்பதுபோல அப்போது இருந்திருந்தால் என்னிலிருந்து விலகியிருக்க மாட்டாயோ என மனம்
யோசிக்கிறது. அங்கும் உன்னைப்போல ஒருத்தி என் வழியில் வந்தாள். என்னிடம்
புத்தகங்களை வாங்கிப் படித்தாள். கவிதைகள் எழுதி காட்டினாள். நான் தான் ஏற்கனவே பட்டு தெளிந்திருக்கிறேனே! அவளும்
உன்னைப்போலவே விழுந்து விழுந்து காதலிப்பதாக சொன்னாள். முதலாண்டு முழுக்க எந்த தொந்தரவும் இருக்கவில்லை. இரண்டாம் ஆண்டின் பிற்பகுதியில் தான் ஒரு புயலைப்போல மாறி ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். எதிர்பார்க்காத நேரங்களிலெல்லாம் எதிர்படத் தொடங்கினாள். வலிய வந்து காதல் செய்து விட முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. அவள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தாள். வெற்றிக்கோட்டை
எட்ட உரிய காலத்திற்காக அவள் காத்திருக்கத் தொடங்கினாள். விடுமுறை நாட்கள் என்றால்
கல்லூரியிலிருந்து ஒசூருக்கு சென்ற பிறகு தான் அவரவர் ஊர்களுக்கு பிரிந்து செல்ல முடியும. அப்படித்தான் அன்றும் நடந்தது. அந்த நாளை
எதிர்பார்த்துதான் அவள் காத்திருந்திருக்கிறாள் என்பதை உணர முடிந்தது. இப்போது நினைத்தாலும் அவ்வளவு
துல்லியத்துடன் காட்சிகள் மனதில் குமிழிடுகின்றன
.
ஒரு வாரம் தொடர்ந்தார்போல கல்லூரிக்கு
விடுமுறை.
சாயுங்காலம் கல்லூரி விட்டு அனைவரும் ஒசூருக்கு
வந்து சேர்ந்தனர். சூரியன் மேற்கு நோக்கி சரியத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருத்தராக அவரவர்களுக்கான பேருந்தை தேடி இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். சிலர் முன்கூட்டியே திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர். அதன்படி தான் அவர்கள் பயணத்திட்டம் அமையும். கும்பல் மெல்ல மெல்ல குறைந்து அவனும் அவளும் மட்டுமே இருந்தனர். அவள் திண்டிவனம் போக வேண்டும். இவனுக்கு விழுப்புரம் மார்க்கம். அவள் அவனிடம் தயக்கத்துடன் சொன்னாள். “ரவி திருவண்ணாமலை வரை ஒன்னா போகலாமே?”. அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு
அவன் அமைதியாக நின்றான். பெருத்த
சப்தத்தோடு பேருந்து ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. “என்ன யோசிக்கற?” என்றாள். ஒன்றும் இல்லை எனும் விதமாக தலை அசைத்தான். “ஏன் ரவி விலகி விலகி ஓடர.
புடிக்கலனா நேரா சொல்லிடு பிளீஸ்”
என்று மெல்லிய குரலில் கெஞ்சலாக கேட்டாள். “அப்படிலாம் இல்ல”
என்று சுருக்கமாக பதில் சொன்னான். திருவண்ணாமலை செல்லும் பேருந்து வந்து நின்றது.
நடந்து சென்று அவள் அதில் ஏறினாள். கூடவே வந்து அவனும் பேருந்தில் ஏற வேண்டும் என்று அவள் மனம் துடித்தது. அவள் உள்ளுணர்வும்
ஏறிவிடுவான் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது. இருக்கையில் சென்று அமர்ந்தாள். அவனுக்காக ஜன்னல் ஓர இருக்கையை பிடித்து வைத்தாள்.எப்படியும்
வந்துவிடுவான் என்ற நம்பிக்கை. ஆனால் அவன் வந்து ஏறுவதாகத் தெரியவில்லை. எதிரில்
அவித்த வேர்க்கடலை விற்றுக் கொண்டிருக்கும் இளம்பெண்ணையே அவன் முறைத்துப் பாரத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நொடியும் வலி கொண்டதாக மாறிக் கொண்டிருந்த போது அவன் மெதுவாக
நடந்து வந்து பேருந்தில் ஏறினான். அவள் எங்கு உட்கார்ந்திருக்கிறாள் என பார்வையால் துழாவினான்.
அங்கு சென்று,
ஜன்னல் ஓரமாக அவளை நகர்ந்து உட்காரச் சொன்னான்.
சற்று இடைவெளிவிட்டு பக்கத்தில் அவன் உட்கார்ந்து கொண்டான். அவளுக்கு படபடப்பாக இருந்தது. இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது. “இப்படி உட்கார்ந்து வர்றதுக்கு பதில் நீ வராமலே இருக்கலாம் ரவி”
என்று
குனிந்து அவன் காதருகில் சொன்னாள். “அப்படிலாம் இல்ல சௌமி”
என்றான். “ஆறாவது தடவயா
இதே பதிலை சொல்ற. ஒரு சின்ன சந்தோஷம் என் பேரை சொல்லியிருக்க”.
அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். கூட்டம்
பேருந்தைப் பிடிக்க அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. அவன் அருகே அவள் நெருங்கி உட்கார்ந்தாள். அவளின் நெருக்கம் அவனுக்கு என்னவோ போல இருந்தது. உடம்பில் உஷ்ணம் தகித்துக் கொண்டிருந்ததை உணரமுடிந்தது. எப்படி விலகிச் சென்றாலும் அவள் விடுவதாகயில்லை. ஆக்ரோஷமாக அவள் காதல் வலையை பின்னிக் கொண்டிருந்ததை சுலபத்தில் புரிந்து கொண்டான். மீனாக மாறி தான் அதில் சிக்க வேண்டியது
மட்டுமே எஞ்சியிருப்பதாக உணர்ந்தான். “இப்ப நான் என்ன பண்ணனும்னு நெனைக்கிற”
என்றான். அவன் இப்படி கேட்டது அவளுக்கு சந்தோஷத்தை அளித்தது. “நீ எதுவும் செய்ய வேணாம். என்ன லவ் பண்ணு அது போதும்”
என்றாள். அவன் அமைதியாக இருந்தான் “மௌனம் சம்மதமா?” என்று அவனை நோக்கி வலையை
எட்டின தூரத்திற்கு விசிறி எரிந்தாள். அவன் ஒரு மாதிரியாக தலையை ஆட்டினான். அவள் மெல்ல வலையை இழுக்கத் தொடங்கினாள்.
பேருந்து ஊத்தங்கரையை நெருங்கும் போது அவன் மடியில்
அவள் படுத்தாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்கள் அவன் கைகளில் பட்டது. அவள் தூங்கவில்லை என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தான். தான் வலையில் சிக்கிக் கொள்ள வேண்டிய தருணம் நெருங்கி விட்டது என அவனுக்கு
தெளிவாக தெரிந்தது. அவனுடைய ஒரு கையை எடுத்து தன் இடுப்பைச் சுற்றி அவள் போட்டுக் கொண்டாள். தன்னை நோக்கி வலையை ஆவேசமாக இழுக்கத்
தொடங்கினாள். வலையின் கணமும் கூடிக் கொண்டே இருந்தது.
“திண்டிவனத்துக்கு வந்து என்னை
விட்டுட்டு தங்கி காலையில கிளம்பி விழுப்புரம் போடா”
என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டு சிணுங்கினாள். எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய
நிலையில் அவன் இருக்கவில்லை. அவன் மனமும்
எதிர்ப்பைக் காட்டிடவேண்டாம் என்றே அவனை எச்சரித்தது. சன்னமான ஒலியளவில் பேருந்தினுள் எண்பதுகளின் திரை
இசைப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
பதினோறு மணிவாக்கில் அவர்கள் திண்டிவனத்தை அடைந்தனர். வீட்டில் விளக்குகள்
அணைக்கப் பட்டிருந்தன. நீண்ட நேரமாக கதவைத் தட்டிய பிறகே அவளுடைய
அம்மா எழுந்து வந்து கதவைத்திறந்தாள். “அம்மா இது ரவி” என்று எளிமையாக அறிமுகப் படுத்தினாள். மங்கலான
வெளிச்சத்தில் அவனை தலையசைத்து அவள் வரவேற்றாள்.
பிறகு அவர்கள் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றனர். அவன் தெரு நடையில் படுத்துக் கொண்டான். அவளுடைய அப்பாவிற்கு ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் இரவுப் பணி. தம்பி பரங்கிப்பேட்டையில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். வீட்டில் அம்மா மட்டும் தான்.
தூக்கம் வராமல் அவன் புரண்டு புரண்டு படுத்தான். அவள் தொடர்ந்து கனைத்துக்
கொண்டிருந்தாள்.அவனுக்கும் அது கேட்டது. பக்கத்தில் படுத்திருக்கும் அம்மா ஆழ்ந்து உறங்கும் வரை அவள் காத்திருந்தாள். அவளிடம் இருந்து குறட்டை சத்தம் வரத் தொடங்கியதும் இவள் எழுந்து தெரு நடைக்கு வந்தாள். காலால் அவனை சீண்டினாள். அவன் புரண்டு படுத்தான். திரும்பவும்
காலால் அவனை அழுத்தமாக சீண்டினாள். இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவள் உருவம் மங்கலாக தெரிந்தது. “எழுந்து வா ரவி”
என்று சன்னமான குரலில் அழைத்து அவனை சமயலறைக்கு கூட்டிச்
சென்றாள். எஞ்சிய
உணவின் ஊசிப்போன நாற்றம் மூக்கை துளைத்தது. சமையல்
மேடையில் அவள் சாய்ந்து நின்று கொண்டாள். அவன் மேடையில் கைவைத்து நின்றான். பிசு பிசுப்பாக இருந்தது. கால்களில் ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து
கீழே உற்றுப் பார்த்தான். நறுக்கிய காய்கறிகளின் துண்டுகள் கிடந்தன. ஜன்னல் துவாரம் வழியாக தெரு விளக்கின் வெளிச்சம் சிறு கீற்றாக உள் நுழைந்து பாத்திரங்கள் மீது பட்டு பிரதிபளித்துக் கொண்டிருந்தது. சமையல் கூடம் அனலாக தகித்தது. “உனக்கு எதுவுமே
தெரியாதா டா”
என கேட்டுக்கொண்டே அவனை இறுக்கி அணைத்தாள்.
அவள் அணைப்பை
முழுமையாக
உணரத் தொடங்கினான். “இதுதான்
லவ் பண்ற விதமா?” என்று அவளிடம் கேட்டான். அவள் எதுவும் பேசாமல் மேலும் இறுக்கினாள். அந்தநேரம் எங்கிருந்தோ வந்து அவன்
மனதில் குந்தவை சப்பனமிட்டு அமர்ந்தாள். “இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்” என அவன் காதைப்
பிடித்து திருகினாள். அவள் நினைவுகளை பிய்த்தெறிந்துவிட்டு மறுபடியும் இவளிடம் கட்டுண்டுகிடந்தான். கரடு முரடான பாதைகளில் இவள் அவனை வழி நடத்திக் கொண்டிருந்தாள். அவன் முன்னேறிச் செல்ல வேண்டிய கட்டம் வந்தது. சடுதியில் எல்லாம் மாறிப் போனது. முனகல் சப்தங்கள் மோதிச் சிதறின. உணர்வுகளுக்கு இறக்கை முளைத்து உயர உயர பறக்கத் தொடங்கின. பறத்தல்
எல்லையற்று விரிந்தது. சூன்யம் நோக்கி உந்தித் தள்ளியது. அதற்குமேலும் பறக்க சக்தி இல்லையென உணர்ந்து அவை சரிந்தபோது அவன் பிதற்றத் தொடங்கினான் . “ இப்பயாவது திருப்தியா உணர்ந்தயா குந்தவை?”. அவன் அப்படிக்கேட்டதும்
அவளுக்கு சுருக்கென்று இருந்தது. மூச்சு வாங்கியபடி
அவள் மீதே அவன் துவண்டு கிடந்தான். “இது என்ன
கேள்வி?” என்று அவன் கண்களை ஊடுருவியபடியே கேட்டாள். அவன் அமைதியாக இருந்தான். ஒரு
புழுவைப்போல சங்கடம் அங்கே நெளிந்து கொண்டிருந்தது. “எப்பவோ விட்டுட்டு போனவள இந்த நேரத்திலுமா நெனச்சிக்கனும்.
நீ ஒரு மார்க்கமானவன் தாண்டா”
என்று சொல்லிக் கொண்டே அவனை புரட்டிக் கீழே தள்ளி
விட்டாள். எழுந்து கழிவறை நோக்கி நடந்து சென்றாள்.
இப்போது நினைத்துப் பார்த்தாலும்
ஒருவித குழப்பநிலையை உணர முடிகிறது குந்தவை. உண்மையில் நான் அவளிடம் உன்னைத்தான் தேடியிருக்கிறேன்
என்பதை உணரமுடிகிறது. என்னை மறந்த நிலையில் அப்படிக் கேட்டிருக்க கூடாதோ என்ற கஷ்டமும் வெகுநாட்களுக்கு
இருந்தது. அதைத் தொடர்ந்தே அவள் என்னிடமிருந்து விலகத்தொடங்கினாள். அதன் பிறகுதான்
என்னிடம் அவள் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டாள். இன்றுவரை அந்த மரியாதைக்கான அர்த்தம்
எனக்கு புரியாமலேயே இருக்கிறது. அவளிடமும் உன்னையேத் தேடும் எனக்கு அவள் எதற்கு என
நானும் அமைதியாக இருந்துவிட்டேன். இப்போது யோசித்தாலும் அக்காட்சிகள் அதே துல்லியத்துடன்
மனதில் தைல வண்ண ஓவியம் போல மிதந்தபடி இருக்கிறது. அனைத்து வகையிலும் சூழல் குரூரமாகவும் கேவலமாகவுமே இருந்து
வந்திருக்கிறது. எவ்வளவோ கொடூரங்களை நாம் அமைதியாக கடந்து கொண்டிருக்கிறோம். அவற்றின் வெப்பம் உன்னை தகித்துவிடாதபடி நீ வாழ பழகிக்கொண்டிருக்கிறாய். அதனால் தான் வார இதழில் வந்த என் நேர்காணலை வாசித்துவிட்டு
ஒற்றை வரியில் கடிதம் எழுத முடிந்திருக்கிறது. எவ்வளவு வறண்டு விட்ட மொழியால் நீ என்னை இத்தனை ஆண்டுகள் கழித்து அணுகி இருக்கிறாய் தெரியுமா? கன்னத்தில் அறைந்தது போல இருக்கிறது.
திரும்பவும் என்னை தொடர்பு
கொள்ள எது உன்னை தூண்டியது? நான் எதற்காக அந்த இதழிற்கு நம் ஊரைப் பற்றியும் நம் பால்யத்தைப் பற்றியும்
பேட்டி அளிக்கவேண்டும்.? அதை நீ ஏன் படித்திருக்க வேண்டும்? ஒன்றுக் கொன்று முன் தீர்மானிக்கப்பட்ட நிகழ்வா? எதுவுமே புரியவில்லை. அந்த நேர்காணலை
என் மூலமாக நீதான் அளித்திருக்கிறாயோ என எண்ணத்
தோன்றுகிறது. அந்த நேர்காணலின் ஒவ்வொரு சொற்களும் என் மனதின் அடியாழத்தில் இருந்து
மெல்ல மேலெழுந்து
கொண்டிருக்கின்றன.
இவ்வளவு தெளிவாக நான் உரையாடி இருக்கிறேன் என நினைக்கும்போது
சிலிர்ப்பாக இருக்கிறது. நேர்காணலில் வேண்டுமென்றேதான் உன்னை சொல்லாமல் தவிர்த்தேன்.
அதை உன்னால் உணர முடிந்ததா? இப்போதும் அந்த வலி இருக்கவே செய்கிறது. உன் மடியில் என்னை சாய்த்துக்கொண்டு
குனிந்து என் காதில் அந்த நேர்காணலை நீ வாசித்துக் காட்டுவதுபோன்ற
சித்திரம் மனதில் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது குந்தவை. அதைப்பற்றி யோசிக்க யோசிக்க அடி மனதில் தேங்கிக் கிடப்பதெல்லாம் பீரிட்டுக்கிளம்புகின்றன. இத்தனை காலமும், என் மனதின் அடி ஆழத்தில் அப்படியே தான் இருந்திருக்கிறாய் ; அதே அடர்த்தியில் மஞ்சள் பூசி, நீல நிறச் சேலையில் அதே சிரிப்புடன் இத்தனை ஆண்டுகளும் இருந்திருக்கிறாய்.
படுபாவி.
ஒரே
ஒரு
வினாடி யோசித்திருக்கலாம் இல்லையா நீ ; என்னை மறுபடியும்
உனக்குள் மீட்டுருவாக்கம் செய்யலாமா
வேண்டாமா
என்று? ஏன் தான் அவசரப்பட்டாயோ? .உன் கணவரின்
இறப்பு மீண்டும் என்னை உன்னுள் துளிர்க்கச் செய்திருக்கிறதா?
கணவரை இழந்த பிறகு தான் என் நினைவு வந்ததா என்று எழுதியதற்காக மன்னித்துவிடு குந்தவை. நீ துயரத்தில் இருக்கும் போது அப்படி கேட்டிருக்கக் கூடாது தான். அவர் இறந்துபோன தகவல் முதன் முதலில் அக்கா மூலமாக தான் எனக்கு தெரியவந்தது. அப்போது நான் பணி நிமித்தமாக தென் அமெரிக்காவில் இருந்தேன். அன்று முழுக்க மனம் கலவரத்தால் நிரம்பி இருந்தது. நானே மரணம் அடைந்து விட்டதுபோல உணர்ந்தேன். இரண்டொரு தடவைதான் அவரை பார்த்திருக்கிறேன். என்றாலும் அவரின் முகம் அப்படியே மனதில் தங்கிவிட்டது. அவர் மரணம் உன்னை உடைந்து போகத்தானே
செய்திருக்கும்? இவற்றையெல்லாம்
பொய்யாக்குவதுபோல செல்வம் சில சங்கதிகளை சொன்னான். அவன் சொன்னது இன்னமும் என் மனதில் முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கிறது. உன்னிடம் எப்படி
கேட்பது என்று புரியாமல்தான் இக்கடிதம் எங்கெங்கோ சுற்றிவருகிறது
என்பதை உணர முடிகிறது. சட்டென்று உன்னைக் கை நீட்டி கேட்டுவிடக்கூடிய கேள்வியில்லை
குந்தவை அது. பொங்கலுக்கு வழக்கம்போல குடும்பத்துடன் செல்வம் ஊருக்கு வந்திருந்தான். எப்போதும்போல திருவண்ணாமலை சாலையில் ஒதுக்குபுறமாக இருக்கும் அந்த வழித்தட உணவகத்தில் தான் பொங்கல் நாட்களை கழித்தோம்.
காலை பதினோறு
மணிக்கு சென்று மாலை ஏழு மணி வாக்கில்தான் திரும்பினோம். அதுவரை மதுவின் தள்ளாட்டதோடு ஊர்கதைகளை பேசிக்கொண்டே இருந்தோம். அந்தநாள் எவ்வளவு குதூகலமாக தொடங்கியது தெரியுமா குந்தா? நினைக்கவே சிலிர்ப்பாக இருக்கிறது.
அன்று உணவகத்தை அடைந்த போது மணி பதினொன்றாகி இருந்தது. கட்டடத்தின் மேல் தகரக் கூரை வேயப்பட்டிருந்தது.
கிழக்கு பக்கமாக வளர்ந்திருந்த வேப்பமரத்தின்
நிழல் கூரை முழுக்க பரவியிருந்தது. உள்ளே
இருக்கையில் அமர்ந்து சிலர் மதுவருந்திக் கொண்டிருந்தனர். மேசை மீது திண்பண்டங்கள் இறைந்து கிடந்தன. பார்க்கவே அருவருப்பாக இருந்தது. இவர்கள் நேராக பின்பக்கம் சென்றனர். வழக்கமாக அங்கேதான் செல்வர். இவர்களை கவனித்த பணியாளர் ஒருவர் வேப்ப மரத்தின் கீழே இருக்கைகளை தயார் படுத்தத் தொடங்கினார். வேப்ப மரத்தின் வடதிசையில் பாழடைந்த கிணறு புதர் மண்டிக்கிடந்தது. ஆறு பேரும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து கொண்டனர். வேம்பின் நிழல் குளுமையாக இருந்தது. பாலு உட்கார்ந்ததுமே புகைக்கத் தொடங்கி விட்டார். விரல் இடுக்கில் அவருக்கு சிகரெட்
கனிந்து கொண்டேயிருக்க வேண்டும். வந்தவர்களில் வயதானவர் அவரே.
“சட்டுபுட்னு சரக்குக்கு சொல்லி விடுங்கப்பா” என்று ஆனந்தன் செல்வனின் முதுகைத் தட்டி
அவசரப்படுத்தினான். வேக வேகமாக குடித்துவிட்டு போதை
தலைக்கேறி சரிந்துவிட வேண்டும் அவனுக்கு. அதற்கு செல்வம் தலையாட்டி ஆமோதித்தான். கடைசியாக இருந்தவன், “மாஸ்டரை கூப்பிட்டு சைடிஷ்கு ஆர்டர் கொடுடா ரவி. இப்ப சொன்னாதான் சரக்கு வரவும் இது ரெடியாகவும் சரியாக இருக்கும்”. பணியாளனை வரவழைத்து உணவு வகைகளை
சொல்லி கொண்டுவரச் சொன்னான் ரவி.
ஒரு
மணிவாக்கில் ஜமா கலைக்கட்டத் தொடங்கியது. உள்ளே இயங்கிக்கொண்டிருந்த தொலைக்காட்சியில்
‘கத்தாழ கண்ணால..’ எனும் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பணியாளனை கூப்பிட்டு
“பிரதர் இந்த பாட்டுக்கு மட்டும் கொஞ்சம் சவுண்ட் வைபா” என்று செல்வம் கேட்டுக் கொண்டான். ஒலியளவு கூட்டப்பட்டது. மதுவின் கிரக்கத்தில் அனைவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். தள்ளாடிக் கொண்டே செல்வம் எழுந்து
பாட்டிற்கு
ஏற்ப ஆடத் தொடங்கினான்.ஆரம்பத்தில் தள்ளாட்டம் தெரிந்தது.
கைகளைத்தட்டி அவனை உற்சாகப்படுத்தினான் ஆனந்தன். மெல்ல ஆட்டத்தின் போக்கில் அவன் தீவிரம்
கூடியபோது ஆனந்தனும் அவனுடன் சேர்ந்து கொண்டான். ஆனந்தன் ஆட எழுந்ததும் பாலு விசிலடித்து
அவனை உற்சாகப் படுத்தினார். மெல்ல ஆட்டத்தின் உக்கிரம் கூடத் தொடங்கியது. “ரவி நீயும் வாடா” என்று செல்வம் அவன் கைகளை பிடித்து இழுத்தான். இசையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப இருவரும் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். அதுவரை அவன் காவடி ஆடித்தான் பார்த்திருக்கிறார்கள். ஒரு திரைப்பாடலுக்கு நுணுக்கமாக அவன் ஆடிப் பார்ப்பது இதுவே முதல் முறை. பாட்டின் உக்கிரம் கூடி உச்சம் நோக்கிச் சென்று சட்டென முடிந்தது. உடல்தளர்ந்து இருவரும் ஒரே இருக்கையில் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்தனர். பிளாஸ்டிக் இருக்கை உடைந்து நொருங்கியது. இவர்கள் கீழே கிடந்தனர். பணியாளன் ஓடி வந்தான். அவன் எதுவும் கேட்கும் முன்பாகவே
“பிரதர் வொரி பண்ணாத ஒடைஞ்சதுக்கும் சேர்த்து பில் போட்ரு” என்று சொல்லிக் கொண்டே தள்ளாடியபடி நடந்து இருக்கையில் அமர்ந்தான். தொடர்பில்லாமல் அவர்களின் உரையாடல் விரிந்து கொண்டிருந்தது. மது
முற்றிலுமாக
அவர்களை தன் கரங்களில்
ஏந்திக் கொண்டிருந்தது.
“சும்மா சொல்லக் கூடாது.
இப்பதாண்டா கும்னு இருக்கா மாப்ள!” என்று செல்வன் குழறியபடி பேசினான்.
“யார்ரா?” என்றான் ஆனந்தன்.
“நம்ம குந்தானி தான்” என்று செல்வம் சொல்லிவிட்டு எச்சிலைத் துப்பினான்.
குந்தவையைத்தான்
அப்படிச் சொல்கிறானென்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. இருந்தும் அனைவரும் அமைதியாக
இருந்தனர். மெதுவான குரலில் அவனைப் பார்த்து
“இப்ப எதுக்குடா அவள இழுக்கிற?” என்று ரவி கேட்டான்.
“அவள பத்தி பேசுனா தொரைக்கு கோபம் வருதோ?” என்று நக்கலாக கேட்டான். இவன் அமைதியாக இருந்தான். மிதமிஞ்சிய மது அவர்களை தீவிரமாக ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. என்ன பேசுகிறோம் என்பதை மறந்திருந்தனர். வசவுகள் பெருகிக் கொண்டே இருந்தபோது செல்வம் பேசினான்.
“போன வாரம் கூட அவள ஒரு கல்யாணத்துல பாத்தேன் . அம்சமா இருக்கா டா” அவன் பேச்சு ரவியால் சகித்து கொள்ளமுடியாமல் இருந்தது.
“டேய் அவ உன் தங்கச்சி மாதிரிடா” என்றான் இவன்.
“உன்னையே தலைமுழுகிட்டு போயிட்டா. அப்புறம் எனக்கெப்படிடா தங்கச்சியாவா?” என்று கேட்டுவிட்டு, பின் பக்கம் திரும்பி காறித்துப்பினான். சிறிது நேரம் அமைதியாக இருந்தான். மேலும் ஒரு கோப்பையில் மதுவை ஊற்றி நீர் கலந்து எடுத்து வெடுக்கென்று குடித்தான். அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.
மறுபடியும் காரித்துப்பினான்.
“தங்கச்சியாம் இல்ல, தேவிடியா. நிக்க வச்சி அவளுதுல அப்படியே கொள்ளிக்கட்டய எடுத்து சொருவனும் டா” என்று சத்தமாக பேசினான். ரவிக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தோடு எழுந்து சென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். செல்வம் நிலை குலைந்து கீழே சரிந்தான். அவனுக்கும் கோபம் பீரிட்டுக் கிளம்பியது.
“நல்லா அடிடா.. .. புருஷனை சாகடிச்ச தேவிடியாவுக்காகவா பரிஞ்சிக்கினு வர.
நல்லா அடிடா” என்று பேசிக் கொண்டு அழ ஆரம்பித்தான். அவன் கூறிய வார்த்தைகள் இவனுக்குள் இடியாக இறங்கிக் கொண்டிருந்தன. நடுமண்டையில் இரும்புத்தடியால்
தன்னை யாரோ தாக்கியதைபோல உணர்ந்தான். நடுக்கமாக இருந்தது. அவன் நிமிர்ந்து பாலுவைப் பார்த்தான். அவரும் அமைதியாக இருந்தார். இவனுக்கு மயக்கம் வருவது போல இருக்கவே இருக்கையில் வந்து உட்கார்ந்தான். சூழலை ஒருவித இறுக்கம் வியாபித்திருந்தது.
பாலு,
பணியாளனை அழைத்து எலுமிச்சை ஜூஸ் கொண்டுவரச் சொன்னார். செல்வனுக்கும் ஆனந்தனுக்கும் ஜூஸை குடிக்கக் கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு இருவரும்
திரும்பவும் படுத்துவிட்டனர். ரவி தூரத்தில் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேரம் நத்தையைப்போல ஊர்ந்து கொண்டிருந்தது. மணி நான்கைத்
தாண்டியிருந்தது. சூரியன் ஒட்டம்பட்டு மலைக்கும் மேலாக நிலை கொண்டிருந்தது. செல்வனை தட்டி எழுப்பினார் பாலு . அவன் புரண்டு படுத்தான். விடாமல் அவர் எழுப்பிக் கொண்டே இருந்தார். இவன் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.
“உங்கிட்ட எத்தன தடவடா சொல்றது. அதிகமா குடிக்காதனு” என்று பாலு அலுத்துக் கொண்டார்.
“ஏன் எதாவது பிரச்சனை ஆயிடுச்சா?” என்றான்.
“பின்ன குந்தவ தான் அவ வீட்டுக்காரன கொன்னுட்டான்னு
சொல்லிட்ட”.
என்று பதிலளித்தார். “யார் கிட்ட சொன்னேன்?” என்று விடாமல் கேட்டான். “ரவிகிட்ட தாண்டா”
என்று அவர் சொன்னதும் இவனுக்கு சுரீரென்று இருந்தது. பின் தலையில்
கைவைத்துக் கொண்டு பாழடைந்த கிணற்றை வெறித்துப் பார்த்தான். கை அசைத்து பாலுவை அருகில் அழைத்தான்.
“குந்தவைக்கும் அந்த கேபிள் டிவி காரனுக்கும் தொடர்பு. அதாலதான் அவுரு செத்தாருன்றதையும் உளறிட்டனா?” என்று
அவரிடம்
மெதுவாகக் கேட்டான். “இன்னும் கொஞ்சம் அதிகமா உள்ள இறக்கியிருந்தா. அதுவும் தன்னால வெளிய வந்திருக்கும்” என்று நக்கலாகச் சொன்னார்.
மலைக்குப் பின்புறமாக சூரியன் சரியத் தொடங்கியபோது அவர்கள் எழுந்து நடக்கத் தொடங்கினர். எதுவும் பேசிக்கொள்ளாமல் சிறிது
தூரம் நடந்தனர். ஆனந்தின் நடையில் அப்போதும் தள்ளாட்டம் இருந்து கொண்டிருந்தது. பாலு
சிகரெட்டை பற்றவைத்து புகைக்கத்தொடங்கினார். செல்வனுக்கு மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
தன்னையே அவன் நொந்து கொண்டான். இனி குடிக்கவே கூடாது என மறுபடியும் தீர்மானித்துக்
கொண்டான். முன்னால் நடந்து சென்ற ரவியைச் சீண்டி
“என்னை மன்னிச்சிடுடா” என்று சொன்னான்.
“பரவாயில்ல விடுடா” என்று சொல்லிவிட்டு அவனை உற்றுப் பார்த்துதான். பின் மெதுவான குரலில் அவனிடம் கேட்டான்.
“நீ சொன்னதுலாம் உண்மையா?” அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அமைதியாகவே நடந்து
கொண்டிருந்தான்.
அதற்கு மேல் இவனுக்கும் எதுவும் கேட்க வேண்டும்
என்று தோன்றவில்லை.
இப்போது நினைத்தாலும் கூட சங்கடமாக இருக்கிறது குந்தவை. அன்று செல்வம் அப்படிச் சொன்னதும் அவன் மேல் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. உடம்பு எப்படி நடுங்கியது தெரியுமா?. கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்
தவித்தேன். இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடியில்கூட அன்று நடந்ததை
துல்லியமாக உணர முடிகிறது.
இதுநாள்
வரை மனதை கீறிக் கொண்டிருந்த முள்ளை பிடுங்கி எறிந்து விட்டதாகத்தான்
நினைக்கத் தோன்றுகிறது. முற்றிலுமாக எறிந்து விட்டேன் என்றும் சொல்வதற்கில்லை. அப்படி செய்துவிட முடியுமா என்று
தெரியவில்லை. நெருடல் இருக்கவே செய்கிறது. செல்வமும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படக் கூடியவன் இல்லை என்பது உனக்கும் தெரியும் தானே?
ஒருபோதும் நீ
அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாய் என்று தான் இந்த நிமிடம் வரை என் மனம் நம்பிக் கொண்டிருக்கிறது. அப்படித்தானே யோசிக்க முடியும் நான்?.
பிரிந்து விட்டதாலேயே நாம் கொண்டிருந்த அன்பு இல்லையென்றாகிவிடுமா
என்ன?
எப்போதும் போல உன்
ரவி.
செம்ம....லப் யூ
ReplyDeleteWwwwwow
ReplyDeleteThaarumaaru
ReplyDelete