Showing posts with label உளவியல் கதை. Show all posts
Showing posts with label உளவியல் கதை. Show all posts

Tuesday, October 18, 2016

ஆண் குழந்தையை மட்டும் கருத்தரிக்கச் செய்யும் சூத்திரதாரியின் கதை

அவள் வயிறு பெருத்துக்கொண்டே போனது. எந்த நிமிடமும்  அவள் பிரசவித்து விடலாம் என்று தோன்றியது அவருக்கு. பிரசவ வலி எடுப்பதற்காக காத்திருக்கத் தொடங்கினார். காத்திருப்பு நீண்டு கொண்டே இருந்தது. பிரசவவலி வருவதற்கான எந்த அறிகுறியும் அவளிடத்தில் காண முடியவில்லை. மருத்துவர் கூறிய நாட்களும் கடந்தன. அவர் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார். எங்கேயும் நிலை கொள்ளாமல் அவர் சிந்தனை அலைந்து கொண்டே இருந்தது.
        ஒரு வாரம் கழிந்த நிலையில் பெருமழை தொடங்கி விடாது பெய்து கொண்டிருந்தது.தெருக்களை அடைத்து தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. தவளைச் சப்தம் விடாமல் கேட்கத் தொடங்கிய இரவு அவளுக்கு வலி கண்டது. வலி பொறுக்கமுடியாமல் துடித்தாள். தெருக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார். வானம் பிளந்து கொண்டு மழை ஊற்றிக்கொண்டிருந்தது. தெருத்திண்ணையில் மோதி சிக்கிக் கொண்டிருந்தது நைந்து பிய்ந்து போன பாய். காலால் அதைத் தள்ளி விட்டார். நீரின் போக்கில்  அது அடித்துச் சென்றது.
தெருக்கோடியில் இருந்த கோவில் இருளில் பூதாகரமானத் தோற்றத்தோடு நின்று கொண்டிருந்தது. தோட்டத்து காட்டுவா மரத்தில் இருந்த கோட்டான் ஒரு முறை கத்தி அடங்கியது. வெள்ளம் உயர்ந்து கொண்டே இருந்தது. பயம் மெல்ல கவியத் தொடங்கிய போது அவர் தெருக்கதவை அடித்துச் சாத்திவிட்டு கூடத்திற்கு வந்தார். வலி பொறுக்கமுடியாமல் அவள் கத்திக் கொண்டிருந்தாள். அவர் பின் பக்க கதவைத் திறந்து கொண்டு, குப்பு அக்காவை அழைக்க அவள் வீடு நோக்கி நடத்தார். இடுப்பளவு வெள்ளத்தில் நடந்து செல்வதே அவருக்கு சவாலாக இருந்தது. அவர் மனம் முழுக்க வீட்டிலேயே கிடந்தது.

குப்பக்காவை அழைத்துக் கொண்டு திரும்புகையில் இடுப்பளவைத் தாண்டி தண்ணீர் வந்து விட்டிருந்தது. சாளாவரத்தின் வழியாக அவர் வீட்டின் கூடத்திலும் தண்ணீர் மட்டம் உயரத் தொடங்கியது. குளிர் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. குப்பக்கா ஜானகியின் அருகில் சென்று அமர்ந்தாள். ஜானகியின் கால்களை நீட்டி பிடித்துக் கொண்டாள். வலி பொறுத்துக்க தாயி என்று சொல்லிக் கொண்டே ஜானகியின் அடிவயிற்றை நீவி விட்டாள். பற்களை கடித்துக் கொண்டு தன்னால் முடிந்த மட்டும் உந்தித் தள்ளினாள். கரிய உருண்டை வடிவில் இரத்தப் பிசுபிசுப்புடன் ஒரு உருவம் கீழே வந்து விழந்தது. அதைப் பார்த்த குப்பக்காவிற்கு வேர்த்து போனது. அவர் அருகில் வந்து பார்த்தார். பந்து போல  இருந்த அது பாறாங்கல்லைப் போன்றிருந்தது. அதை தொட்டுப் பார்த்தார். இரத்த பிசுபிசுப்பு கைகளில் அப்பிக் கொண்டது. கவிச்சை வாசனை ஈரக்காற்றில் கலந்து ஒருவித அசூயையை  ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் மீண்டும் அவளுக்கு வலி எடுக்கத் தொடங்கியது. குப்பக்கா அதீத எதிர்பார்ப்புடன் ஜானகியின் வயிற்றை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் பெருங்குரலெடுத்து கத்தியபடி பெரிய கரிய பாறாங்கல்லை பிரசவித்து தள்ளினாள். பார்த்துக் கொண்டருந்த இவருவரின் அடிவயிற்றையும் பயம் கவ்வத் தொடங்கியது. எதுவும் புரியாமல் அவர் குப்பக்காவை மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் சிறிது நேரத்திற்குள்ளாக இன்னொரு கரிய பாறாங்கல்லை பிரசவித்து தள்ளினாள். பயத்தினால் அவர்களுக்கு உடம்பு நடுங்கத் தொடங்கியது. தொடர்ந்து அவள் கற்களை பிரசவித்துக் கொண்டே இருந்தாள். கூடம் முழுக்க கற்கள் நிரம்பிக் குன்றுகளைப்போல காட்சி அளித்தது. அவள் தொடர்ந்து கற்களை பிரசவித்துக்கொண்டே இருந்தாள். தெரு நடைக்கு செல்லும் வழிகளிலும் கற்கள் குவிந்து வழியை அடைத்துக் கொண்டன. அவள் பிரசவிப்பது தொடர்ந்து கொண்டே இருந்தது. கற்கள் குவிந்தபடி இருந்தன.

கூடம் முழுக்க கற்கள் குவிந்து இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. இறுதியாக கற்கள் அவர்கள் இருவரையும் அழுத்தத் தொடங்கின. குப்பக்காவை ஒரு பெரிய கல் அழுத்த அவள் வாய் வழியாக ரத்தம் பொங்கி வழிந்தது.அதற்குள் இன்னொரு கல் அவள் முகத்தை மோதிச் சிதைத்தது. சதைகள் பிய்ந்து தொங்கின. அவருக்கு உடம்பில் நடுக்கம் அதிகரித்தது. மூச்சை நன்றாக இழுத்து விட்டபோது அவரது பாதத்தில் ஒரு பெருங்கல் வந்து விழுந்தது. பாதம் நசுங்கி அவர் கீழே சரிந்தார். மேலும் இரு கற்கள் அவர் முகத்திலும் வயிற்றிலும் விழுந்தன. வாயில் ரத்தம் பீரிட்டு பொங்கி நய்ந்து தொங்கிய சதைகளின் உடாக சொட்டு சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது. நாசித் துவாரங்கள் சிதைந்த நிலையில் வாயைத் திறந்து காற்றை இழுத்தார். அப்படியே இன்னொரு கல் இறங்கி வாயை அடைத்து நின்றது.

 “அய்யோ என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று கத்திக் கொண்டே அருகில் படுத்திருந்த தன் மனைவியைப் பிடித்து கீழே தள்ளினார். அவள் பயத்தில் அலறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.  “என்ன ஆச்சு?” என்றாள்.  “ஒரு கெட்ட கனவு” என்றார்.  “தண்ணி குடிச்சிட்டு எதையும் நெனச்சி பாக்காம தூங்குங்க” என்று சொல்லிவிட்டு ஒருக்களித்து படுத்துக் கொண்டாள். ஆண் குழந்தைக்கான சூத்திரத்தை தான் கண்டு பிடித்ததற்கும் இக்கனவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடுமோ என்று யோசித்து பார்த்தார். அந்த யோசனை அவரை மெல்ல புரட்டிப்போடத் தொடங்கியது. தன் பழைய நினைவுகளில் இருந்து ஒவ்வொரு துருப்புச்சீட்டாக அவர் வெளியே எடுக்கத்தொடங்கினார்.


திருவாளர் அங்கமுத்து வந்தடைந்திருக்கக்கூடிய இடம் ஒரு நாளில் அவருக்கு  சாத்தியப்பட்டதில்லை. அதற்காக  அவர் செலவிட்ட நேரத்தை வெற்று மனம் கொண்டு  ஒருவர்  கற்பனை செய்துகூட  பார்க்க முடியாது.பத்தாண்டு கால தொடர் உழைப்பை  அதற்காக ஒப்புக் கொடுத்திருக்கிறார். இடையறாத பயணங்கள், நீண்ட உரையாடல்கள்  மற்றும் நேர் சந்திப்புகள்;  நினைக்கவே மலைப்பானவை.  ஆண்குழந்தைகளை மட்டுமே கருத்தரிக்கச் செய்யும் சூத்திரத்தை கண்டுபிடிப்பதில் இவைதாம்  அவருக்கு உறுதுணையாக இருந்தன . ஒரு கட்டத்தில் கண்டாச்சிபுரம் நகரத்தின் அழுத்தமான அடையாளமாக  அவர் இப்படித்தான் மாறிப்போனார்.

 அவருக்கு முதல் குழந்தையே பெண்ணாக பிறந்தது. அப்போது அது குறித்து அவர் வருத்தப்படவில்லை.  ஆனால் அவர் மனைவி ஜானகி இரண்டாம் முறை கருத்தரித்தபோது  எல்லோரையும் போல  என்ன குழந்தையாக இருக்கும் என்ற ஆவல் அவரையும் தொற்றிக்கொண்டது.   “ஆணா இருந்தா இருக்கட்டும் இல்லனா வயித்த கழுவி, கூட்டிட்டு வாடா” என்றாள் அவருடைய  அம்மா. அதுவும்  ஒரு காரணமாக இருக்கலாம்.  ஜானகிக்கு  அது பற்றியெல்லாம் எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை.  கணவன் சொல்லே வேதவாக்கு  என்று அமைதியாகப் போகும் குணவதி அவள்.

அன்று திங்கள் கிழமை; பிரதோஷம்.  விடிய காலையில் எழுந்து முதல் பேருந்தில் பயணித்து கோவில் நகரத்தை அடைந்தபோது மணி பத்தரையாகியிருந்தது.  நகர் மத்தியில் பிரசித்தி பெற்ற அம்மருத்துவமனையை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. பரந்து விரிந்திருந்தது மருத்துவமனை. நவீன தொழில் நுட்பத்தின்   வேர் ஒவ்வொரு அங்குலத்திலும் படர்ந்திருந்தது.தன் மனைவியின் பெயரை அங்கிருந்த பணியாளரிடம் பதிந்துவிட்டு தங்களின் முறைக்காக  காத்திருந்தனர்.

சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு   “யாருமா ஜானகி?” என்று உரத்த குரலில்  கேட்டாள் ஒல்லியாக இருந்த பெண் பணியாளர். தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவர் உள்ளே நுழைந்தார். மருத்துவர் பார்ப்பதற்கு  லட்சுமிகடாட்சமாக இருந்தார்.  “சொல்லுங்க என்ன பிரச்சனை”  என்று மென்மையாக கேட்டார். ஆங்கில  தொனி அவ்வார்த்தைகளில் குழைந்திருந்தது. அவள் பேச எத்தனிப்பதற்குள்  அங்கமுத்து பேசினார்.  “இவளுக்கு பீரியட் தள்ளி போகுது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கு.  அதான்” என்று  வார்த்தைகள்  அதற்குமேல்  வெளிப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டார். மருத்துவர் சுலபத்தில் புரிந்துகொண்டார்.  நேரடியாகவே கேட்டார்.  “வயித்துல இருக்கறது ஆணா பொண்ணானு  தெரிஞ்சிக்கனும். இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே அவரை ஊடுருவிப் பார்த்தார்.  ஆமாம் என்பதுபோல அவர் தலையாட்டினார்.   “கருவுல இருப்பது ஆணா பொண்ணானு பார்த்து சொல்லவே கூடாது”  என்று மருத்துவர்  கூறினார். அதைக்கேட்டு அவர்  முகம் சுருங்கிப்போனது.  “ நீ அந்த ஹாஸ்பிடல்   போ டா.    அவங்க கரக்டா பாத்து சொல்லிடுவாங்க ” என்று  உடன் பணியாற்றும் சிவபாலன் உறுதியாக சொல்லியிருந்தார். அது அவருக்கு நினைவில் வந்து சென்றது. 

 “நீங்க தான் பெரிய மனசு பண்ணனும்மா” என்று சொல்லிக்கொண்டே மருத்துவரை  பரிதாபமாகப் பார்த்தார்.  அவர் சொல்வதைக் கேட்டு தலையாட்டிக்கொண்டே  ஜானகிக்கு  இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்.  மறுபடியும் அங்கமுத்துவே பேசினார்.  “உங்கள நம்பிதான் மா வந்திருக்கோம்”. இந்த முறை அவர் குரல் மிக சன்னமாக ஒலித்தது. சுலபத்தில் மருத்துவரிடமிருந்து இசைவான பதிலை பெற முடியாது என்று அவருக்கு புரிந்தது. கெஞ்ச வேண்டிய நேரத்தில் கெஞ்சுவதில் தவறில்லை என்றும் நினைத்தார்.    “சரி. சரி பார்த்து சொல்றேன். வெளியில தெரிஞ்சிடக் கூடாது” என்று  கடுமையாக எச்சரித்து   அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

  ஒரு கட்டிலில் ஜானகியை படுக்க வைத்தார். ஸ்கேன் இயந்திரங்கள் இயங்கத்தொடங்கின. மருத்துவர் அவளை நுட்பமாக பரிசோதிக்கத் தொடங்கினார். அங்கமுத்துவிற்கு படபடப்பாக இருந்தது.   “ஓகே. எழுந்துக்குமா”  என்று கூறிவிட்டு  அருகில் இருந்த கை அலம்பும் பாத்திரத்தில்  கைகளை கழுவி  துண்டில் துடைத்துக் கொண்டார்.  மருத்துவர் தன் இருக்கையில் வந்து அமர்ந்தபோது ஆடைகளை  சரிசெய்தபடி ஜானகியும் வந்து கொண்டிருந்தாள்.  அவள் வரும்  வரை காத்திருந்த  மருத்துவர்  “பெண் குழந்தைதான்மா”  என்று கூறினாள். அதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கமுத்து இடிந்து போனார். முகம் இருளடைந்தது. அந்த நொடி தன்னுடன் பணி புரியும்  முருகானந்தத்தின் மீது  ஆத்திரமாக வந்தது அவருக்கு.  “என் பேச்சை கேட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்தா ஆண் குழந்தை நிச்சயம்” என்று கூறி அவர்தான் அங்கமுத்துவை நாட்டு மருத்துவரிடம்  அழைத்து சென்றார். மருத்துவர்  தன் எதிரில் இருந்த  மருந்துச் சீட்டில்  எழுதத் தொடங்கியபோது அங்கமுத்துவின் மனதில் முன்னும் பின்னுமாக அலைவுறத் தொடங்கின.

அஞ்சா நாட்டு மருந்துகடை சாலையோரத்தில் ஒரு பெரிய புளிய மரத்தின் கீழ்  இருந்தது. தார்பாயைக்   கொண்டு தற்காலிக குடியிருப்பை உருவாக்கி இருந்தனர். ஒரு சிறிய மர ஸ்டூலில் தடித்த மீசையுடன்   நடுத்தர வயதுடைய ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரில் வரிசையாக கண்ணாடிப்  பாத்திரங்களில்  மூலிகைகள்  வைக்கப்பட்டிருந்தன. அவருக்கு சிறிது தள்ளி கல் உரலில்  மூலிகைகளை  போட்டு கடப்பாறையால்  இன்னொருவர் இடித்துக்கொண்டிருந்தார். மீசைக்காரருக்கு நேர் பின்னால்   மூன்றாமவர் அமர்ந்திருந்தார். இடிக்கப்பட்டு வரும் மூலிகைகளை  சல்லடையில் போட்டு சலிப்பது அவர் பணி.  கூட்டம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.முருகானந்தம் அங்கமுத்துவை அழைத்துக் கொண்டு  அங்கு சென்றபோது  இருட்டத்தொடங்கியிருந்தது.   அங்குபோய் நின்றதும்   முருகானந்தத்திற்கு   மூலிகை நெடி  தும்மலை ஏற்படுத்தியது. யார் தும்முவது என்று மீசைக்காரர் திரும்பி பார்த்தார். தன் காவிப் பற்களைக் காட்டி  “வா பைனான்ஸ் சார்” என்று அவருக்கு கேட்கும் விதமாக அழைத்தார்.  மூன்றாமவர் சலித்து முடித்துவிட்டு,  கூட்டத்தை அரை வட்ட வடிவில்  ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். தங்களுக்கு தோதான இடமாக பார்த்து இருவரும் நின்றனர். பெட்ரமாக்ஸ் விளக்கை மீசைக்காரர் ஏற்றினார். சூழலை வேறுவிதமாக மாற்றிக் காட்டியது அவ்வொளி. 
மீசைக்காரர் தன்னுடைய கட்டைக் குரலில் பேசத் தொடங்கினார்.   “நல்லா காது கொடுத்து கேளுங்க மக்களே. மாயமில்லை மந்திரமில்லை. கண்கட்டு வித்தையுமில்லை. நோய் புடிச்ச வீட்டுக்கு வந்து எடுக்கற  பில்லி சூன்யமும் இல்லை” என்று தொடர்ச்சியாகப் பேசிவிட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த  தண்ணீரை எடுத்து இரண்டு மிடர் அருந்தினார். தொண்டையை செருமிக் கொண்டார். மீண்டும் கூட்டத்தைப் பார்த்து பேசத்தொடங்கினார்.  “என்னடா இவன் இதுவும் இல்ல அதுவும் இல்லனு சொல்றானு பார்க்கறீங்க புரியுது. இது முழுக்க முழுக்க பழைய ஓலைச் சுவடிகள்ல இருந்து உருவான மருத்துவ முறை. இங்க பாத்தீங்கனா இமய மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகை இருக்கு; அப்புறம் நம்ம பழனிமலை; குற்றாலம் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகள் கொண்டுதான் மருந்து செய்யறோம்” என்று நிறுத்திவிட்டு ஆழ்ந்து மூச்செடுத்தார். சிறிது நேர ஆசுவாசத்திற்கு பிறகு மீண்டும் தொடர்ந்தார். “ இங்க நிக்கற பலபேருக்கு சொல்ல கூச்சப்படற வியாதிங்க இருக்கலாம். வெளியில தெரிஞ்சா மானம் போயுடும். கவரி மானுக்கு ரோமம் போச்சுதுன்னா உசுரு இல்ல. அதுமாதிரி மனுஷனுக்கு மானம். என்ன நான் சொல்றது சரிதானே” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார். இப்படி திடீரென்று அவர் கேட்டதும் கூட்டம் அமைதியானது.  அமைதியை களைக்கும் விதமாக  அவரே தொடர்ந்தார். “தூக்கமின்மை, சொப்பன ஸ்கலிதம், சீக்கிரம் விந்து வெளியாதல், விரைப்பின்மை, ஆகியவற்றுக்கு   மருந்து உங்க கண்ணெதிரிலேயே தயார் பண்ணி தறோம். ஒருமுறை வாங்கிப் பாருங்க. எல்லா  வியாதிகளும் குணமாவதை நீங்களே உணரலாம்” என்று சொல்லி ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு திரவத்தை ஊற்றினார். அதன் வாசனை குமட்டிக் கொண்டு வந்தது. கோழையைப்போல நீர்த்து வழு வழுப்பாக இருந்தது அது.அதை உள்ளங்கையில் ஊற்றி அனைவருக்கும் காட்டிவிட்டு  கீழே கொட்டினார். ஒரு திவலை கூட ஒட்டிக்கொள்ளாமல் அனைத்தும் கீழே விழுந்தது.  அனைவரும் வைத்தக் கண் எடுக்காமல் அவர் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர்.  “இப்படி தண்ணி மாதிரி  இருக்கும் விந்தால  எப்படி  குழந்தைய உருவாக்க முடியும்; எப்படி நீடிச்ச சந்தோஷத்தை கொடுக்க முடியும்” என்று  கூறிக்கொண்டே வேறொரு கண்ணாடி பாத்திரத்தை திறந்து  இரண்டு சிட்டிகை மூலிகைப் பொடியை எடுத்து அதில் தூவினார். அடுத்த நொடி அத்திரவம் இளம் நுங்கைப்போல கொழ கொழவென்று திரளத் தொடங்கியது. அவர் அதையும் உள்ளங்கையில் எடுத்து  எல்லோரிடமும் காட்டினார். பின்வரிசையில் இருந்தவர்கள் பார்ப்பதற்காக நெருக்கித்தள்ளினர்.   அவருக்கு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருந்தது.  ஆழ்ந்த யோசனையில் அவர் இருந்தார்.  “சின்ன வயசுல  தெரியாம செஞ்ச தப்பால இப்ப அல்லல்படும் இளைஞர்களைப்  பத்தி சொல்லபோறேன் கொஞ்ச நேரம் காது கொடுத்து கேளுங்க. ராத்திரில பொண்டாட்டிய பாத்தவுடன் சினம் கொண்ட நாகம் போல நிக்கும்  ஆண் குறி அடுத்த சில  நொடியில   புஸ்ஸூனு  காத்தெறங்கின பலூன் மாதிரி சிறுத்து  போய்டும்”  என்று  நிறுத்தி  “என்ன நான் சொல்றது நெஜமா இல்லையா” என்று கூட்டத்தைப் பார்த்து  கேட்டார்.  அவர் அப்படி கேட்டதும் சிலர் தலையை தாழ்த்திக்கொண்டனர்.  தன்னையே எல்லோரும் பார்ப்பதாக அங்கமுத்துவிற்கு தோன்றியது. மேலும் சிலர் பின்பக்கமாக நடந்து கூட்டத்தில் இருந்து நழுவிச் சென்றனர்.  எஞ்சியிருந்த கூட்டம் அமைதியாக இருந்தது.

   “உங்களுக்கு சொல்ல சங்கடமா இருக்கலாம்  ஆனா நெறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு” என்று சொல்லிகொண்டே ஒரு சூட்கேசை திறந்து பச்சை நிற ஃபைலை எடுத்து விரித்தார்.  அதில் ஒரு பக்கத்தை பிரித்து ஒரு புகைப்படத்தை  எடுத்து  கூட்டத்திடம் காட்டினார். கூட்டத்தில் இருந்தவர்கள் புகைப்படத்தைப் பார்க்க முண்டியடித்தனர். மீசைக்காரர் சப்தமாக பேசத் தொடங்கினார்.  “இவர் அம்பா சமுத்திரத்தில் பெரிய டாக்டர். இவருக்கும் இதே பிரச்சனை. பார்க்காத வைத்தியம் இல்லை. கடைசியாதான் நம்ப கிட்ட வந்தார். ஒரே மண்டலம் தான் மருந்து சாப்டார். அப்புறம்  அவருடையது கெஜகோல் மாதிரி நின்னுச்சி”  என்று பேசினார். வார்த்தைகள் அவர் வாயில் இருந்து சரளமாக வந்து கொண்டே இருந்தன.  அங்கமுத்துவிற்கு உள்ளுக்குள் நடுக்கமாக  இருந்தது. உற்று அந்த ஃபைலில்  இருந்த புகைப்படத்தையும் அதன் கீழ் அச்சாகியிருந்த விவரங்களையும் படிக்க முயற்சித்தார். குறைந்த வெளிச்சத்தில் அவை மங்கலாக தெரிந்தன.  மீசைக்காரர் வேறொரு  கண்ணாடி பாத்திரத்தில் இருந்த மூலிகையை  எடுத்துக்காட்டி  “இத ஒரு வேளை;  ஒரே வேளை சாப்டு பாருங்க .  உங்களதும் இரும்பு ராடு கணக்கா நிக்கும்” என்று  முஷ்டியை மடக்கி காண்பித்தார். முருகானந்தத்திற்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டார். இவருக்கு அந்த மருந்தை சாப்பிட்டு பார்க்கவேண்டும் போல இருந்தது. “நீங்க வெளிய இதே மருந்த வாங்க  பல ஆயிரங்கள்  கொடுக்க வேண்டியிருக்கலாம். ஆனா நாங்க  வெறும் சில நூறு  ரூபாய்க்கே தறோம் வேணுங்கிறவங்க வந்து வாங்கிக்கலாம்” என்று கோர்வையாக பேசிக்கொண்டிருந்தார். பலர் முண்டியடித்துக் கொண்டு வாங்க  அவசரம் காட்டினர். முருகானந்தம்  மீசைக்காரர் அருகில்  சென்றார். குனிந்து காதில்  சொன்னார்.   “அவர் என்  நண்பர். ஏற்கனவே  இரண்டு பெண்குழந்தை இருக்கு.  ஆண் குழந்தை வேணும்னு  நினைக்கிறார். நான் தான்  இங்க கூட்டியாந்தேன்”  என்று கூறினார். அவர் மீசையைத் தடவி விட்டுக்கொண்டார். ஆழ்ந்து யோசித்தார்.   “கொஞ்ச நேரம் இருங்க சார் ஒரு மருந்து ரெடி பண்ணி தறேன்  சாப்டு பாக்கட்டும்” என்று சொல்லிவிட்டு  ஒரு சிறிய சில்வர் பாத்திரத்தை எடுத்தார். அதில் பனை வெள்ளத்தை தூளாக்கி  போட்டார்.   தனக்கெதிரே இருந்த கண்ணாடி பாத்திரத்தில் இருந்து சில மூலிகைப் பொடிகளை  எடுத்து அதில் கொட்டினார். கொஞ்சம் மயிலிறகை எடுத்து தீயில் காட்டினார். நெருப்பில் பொசுங்கும் நாற்றம் எங்கும் பரவியது. இவர் மூக்கைப் பொத்திக்கொண்டார்.  பின் அதன் சாம்பலை சில்வர் பாத்திரத்தில் தட்டிவிட்டார்.  அருகில் இருந்த ஒரு கண்ணாடி சீசாவை எடுத்தார். அதில் முக்கால் அளவிற்கு தேன் இருப்பதை பார்க்க முடிந்தது. மூடியைத் திறந்துகொண்டே இவரை அழைத்தார்.  “உங்க நாக்க நீட்டுங்க சார்” என்று சொல்லி இரண்டு சொட்டு மலைத்தேனை நாவில் விட்டார்.  “எப்படி இருக்குனு சுவைச்சி பார்த்து சொல்லுங்க” என்றார். அவர் நன்றாக சுவைத்து சாப்பிட்டார்.   “இனிக்குது” என்றார்.  “நல்லா இனிக்குதா இல்ல லேசா இனிக்குதா” என்று அடுத்த கேள்வியை போட்டார். அவர் அப்படி கேட்டதும் இவருக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. நன்றாக யோசித்து பார்த்துவிட்டு  “லேசாதான் இனிக்குது” என்றார்.மீசைக்காரர் விடுவதாக இல்லை.  “இனிப்புகூடவே லைட்டா தொவுக்கரமாதிரி இருந்துச்சா?” என்று கேட்டார். இவர்  “ஆமாம்” என்பது போல தலையாட்டினார். மீண்டும் அவர் கேட்டார்.  “சிறுங்கசப்பா இருந்துச்சா”.  “இது என்னடா ரோதனையா போச்சி” என்று தனக்குள்ளாக புலம்பிக்கொண்டே நாவில் எஞ்சியிருந்த சுவையை மீண்டும் உருக்கூட்டினார். சிறுங்கசப்பாக இருந்ததுபோல தோன்றியது.  “சிறுங்கசப்பாக இருந்தது” என்று இவர் சொன்னவுடன் மீசைக்காரர் குலுங்கி குலுங்கி சிரித்தார். அவர் சிரிப்பதைப் பார்த்து அவரது உதவியாளர்களும் சிரித்தனர். முருகானந்தத்திற்கும் சிரிப்பு வந்தது. ஆனால் கட்டுப் படுத்திக் கொண்டார்.  எல்லோரும் சிரிப்பதைக் கண்டு இவருக்கு ஒருமாதிரியாக இருந்தது.  “ஏன் சிரிக்கிறீங்க” என்று புரியாமல் கேட்டார். அவர் சிரித்துக்கொண்டே  “தேன் எங்கயாவது கசக்குமா சார்?” என்று அவர் திருப்பிக்கேட்டார். அவர் அப்படி கேட்டதும் அங்கமுத்துவிற்கு சுருக்கென்று தைத்தது.  சிலநொடிகளில் தன்னை நொருங்கச் செய்த மீசைக்காரரை ஒருவித கோபத்தோடு பார்த்தார். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  அங்கமுத்து சங்கடப்படுவதை உணர்ந்த முருகானந்தம்  “நேரம் ஆவுது கொஞ்சம் சுருக்கா முடிங்க” என்று அவசரப் படுத்தினார்.  முருகானந்தம் அப்படி சொன்னதும் மீசைக்காரர்    தேனை அப்பாத்திரத்தில் ஊற்றினார்.  பேசிக்கொண்டே கையால்  அழுத்தமாக  அவற்றை ஒன்றுகூட்டி பிசைந்தார். அவை பாகு பதத்திற்கு வந்தபோது  வேறொரு சீசாவில் இருந்து  மூலிகை பொடியை இரண்டு சிட்டிகை அளவிற்கு சேர்த்தார்.  பாகுபோல இருந்த  அவை இறுகி லேகியமாக திரண்டு வந்தது. சிறிதளவு எடுத்து வாயில் போட்டு  சுவைத்துப்  பார்த்தார். பின் நெல்லிக்காய் அளவிற்கு சிறு சிறு  உருண்டைகளாக உருட்டி  ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு அவரிடம் கொடுத்தார்.  அங்கமுத்துவை அருகில் அழைத்து   “மாத விலக்கான ஆறாவது நாளில் இருந்து ஒரு மண்டலம் உள்ளுக்கு சாப்பிடச் சொல்லுங்க. ஒற்றைப்படை நாட்கள்ல மட்டும் கூடுங்க” என்று சொன்னார். முருகானந்தம் அவரிடம்  “எவ்ளோ?” என்று கேட்டார்.விரல்களை உயர்த்தி ஐநூறு என்று கூறினார். அங்கமுத்து  நானூறு ரூபாயை எடுத்து முருகானந்தத்திடம் கொடுத்தார்.  அவர் பணத்தை  வாங்கி எண்ணிப்பார்த்தார்.  “ ஃபைனான்ஸ்கார்ரா இருந்துகினு நூறை புடிச்சிகினு கொடுக்கறீயே சார்” என்றார்.  “இருக்கட்டம். அடுத்த மொற வரப்ப  பாத்துக்கலாம்” என்று சொன்னார். அவர் சரி  சார் என்று தலை ஆட்டினார்.  லேகியம் இருந்த கண்ணாடி சீசாவை எடுத்துக் கொண்டு நடக்கத்தொடங்கினர்.

மருத்துவர் மென்மையாக கனைத்துக் கொண்டபோது அங்கமுத்து பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தார்.
பெண்குழந்தையை கருவிலேயே  கலைப்பது மிகவும் சுலபமான வேலை என பேசித் திரிபவர்கள் மேல் அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இரண்டாவது  பெண் குழந்தையை  கலைக்க பெரும்பாடு படவேண்டியிருந்தது. இரண்டாவது முறை  கருத்தரித்தபோது கைகளை பிசைந்து கொண்டு நின்றார்.  சிவபாலன்தான்  இந்த மருத்துவமனையை சிபாரிசு செய்தார்.    என்ன குழந்தை என்று தெரிந்துவிட்டது. அடுத்து எப்படி கலைப்பது என்ற கேள்வி விஸ்வரூபம் கொண்டு நின்றது. “நீங்களே எதாவது பண்ணிடுங்க டாக்டர்” என்று கெஞ்சும் தொனியில் கேட்டார். அதற்கு அவர், “ என்ன வெளையாடுறீங்களா; நாலு மாச குழந்தையை கலைப்பது ஆபத்தானது. என்னால முடியாது” என்று திட்டவட்டமாக கூறினாள். தலைக்கு மேலாக சுழன்று கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தார். மனதில் கலவரம் பரவத்தொடங்கியது.  இந்தக் கருவை கலைப்பதற்கு இன்னும் என்னென்ன சிரமங்களை சந்திக்க வேண்டுமோ என்று அவர் மனம் தொடர்ந்து அசை போட்டுக்கொண்டே இருந்தது. வெறையூர் மருத்துவச்சியிடம் அழைத்துச் சென்றால் என்ன என்று அவருக்கு தோன்றியது. வீட்டிற்கு வரும் வரை அவர் அது தொடர்பாகவே யோசித்துக்கொண்டிருந்தார்.

அதே வாரத்தில் அமாவாசை கழித்து வந்த ஞாயிறன்று  தன் மனைவியை  அழைத்துக் கொண்டு வெறையூருக்கு சென்றார். சாதாரணமாகவே அங்கமுத்து  ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது வழக்கம். அதுவும் இதுபோன்ற விஷயங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய ஒருபோதும் விரும்பியதில்லை. நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்துப்பார்த்தார். செட்டியார் வீட்டு செல்வமும்  ஆறுதலாக பேசியது அங்கமுத்துவிற்கு தெம்பாக இருந்தது. “வெறையூருக்கு கூட்டிட்டு போ. வேலை கச்சிதமா முடிஞ்சிடும்” என்று சொன்னார்.    மருத்துவச்சி வீட்டை அடைந்தபோது  திண்ணையில் ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தனர்.  அங்கிருந்தவர்கள் அங்கமுத்துவையும்  அவர் மனைவியையும் உற்றுப் பார்த்தனர். அவர்களின் பார்வை இவருக்கு அருவருப்பாக இருந்தது. நத்தையைபோல காலம்  மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.  இவர்கள் முறை வந்ததும் எழுந்து உள்ளே சென்றார். மருத்துவச்சி எதிரில் உட்காருமாறு சைகை செய்தாள். இருவரும் எதிரில் அமர்ந்தனர்.  “எத்தனை மாசம் ஆவுது?” என்று ஜானகியிடம்  கேட்டாள். அங்கமுத்து விரல்களை உயர்த்தி நான்கு என்று காட்டினார்.   “நாளு மாசம் ஆயிட்டுதா ” என்று இழுத்தாள். அங்கமுத்துவிற்கு அடிமனதில்  திக்கென்று இருந்தது. சரி பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு தன் உதவியாளரிடம்  திரும்பி,  “எவ்ளோ ஆவும்னு சொல்லிட்டியா”  என்று  கேட்டாள். அந்தப் பணிப்பெண் சரி என்பது போல தலை ஆட்டினாள்.  சிறிய சில்வர் பாத்திரத்தில்  மூன்று விரல் கணத்தில் ரகம் வாரியாக எருக்கம் கழிகள் சீவி அடுக்கப்பட்டிருந்தன. உலர்ந்து போகாதபடிக்கு வெள்ளை ஈரத்துணியால் போர்த்தப்பட்டிருந்தது. மற்றொரு சிறிய பாத்திரத்தில்   இருந்த எருக்கம் பால்  தோய்ந்து போயிருந்தது.  இவர் அதை உற்றுப்பார்த்தார். எருக்கம் கட்டைகளின் மீது  பால் துளிர்த்து உலர்ந்து போயிருந்தது. அதிலிருந்து ஒன்றை எடுத்து  உருட்டிப் பார்த்தார்.

மறைப்பிற்கு பின்புறம் போடப்பட்டிருந்த விசுப்பலகையில் சென்று அவளை படுத்துக்கொள்ளச் சொன்னாள். அவளைத் தொடர்ந்து  மருத்துவச்சியும் சென்றாள். விசுப்பலகையின் மீது மல்லாந்து படுத்தாள். ஜானகியின் ஆடைகளை சுருட்டி  தொடைகளுக்கு மேலாக மடித்துவிட்டாள்.இரண்டு கைகளாலும் வயிற்றை தடவிப்பார்த்து சோதித்தாள்.பின் எருக்கங்கட்டையை உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து  மேலே தூக்கி கிழக்கு திசை நோக்கி கும்பிட்டாள். ஜானகி மேற்கூரையை  வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு  மருத்துவச்சி அக்கட்டையை ஜானகியுடைய பிறப்புறுப்பில் செருகத்தொடங்கினாள். வலி பொறுக்க முடியாமல்   “அம்மா வலி உசுர போகுதே” என்று கத்தினாள்.ஜானகியின்  கதறலை  காதில் வாங்கிகொள்ளாமல்   மெதுவாக உள்ளே செலுத்திக்கொண்டிருந்தாள்.  எருக்கம்பால் உள்ளுருப்புகளில் பட்டு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.அவள் தொடைகள்  நடுங்க ஆரம்பித்தன. பிறப்புறுப்புக்குள் நெருப்பை வாரிக் கொட்டியதைப்போல துடித்தாள் .”செத்த பொருத்துக்க  தாயி;  முடிஞ்சிடுச்சி”  என்று கூறிக்கொண்டே அக்கட்டையை முழுவதுமாக செருகி முடித்தாள். இடுப்பு மடிப்பில் முடிந்து வைத்திருந்த  விபூதியை எடுத்து மந்தரித்து ஜானகியின்  நெற்றியில் பூசினாள்.  “மெதுவா எழுந்து நில்லுமா” என்று சொன்னாள். ஜானகிக்கு  உடல் முழுக்க உஷ்ணம் அதிகரிக்கத் தொடங்கியது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. அரை மயக்க நிலையில் தள்ளாடியபடியே  வெளித்திண்னைக்கு வந்தாள். கைத்தாங்கலாக அவளை பிடித்து உட்கார வைத்தார். கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு அப்படியே தூணில் சாய்ந்து கண்களை  மூடிக்கொண்டாள். உள்ளே அலறல் சப்தம் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது. நேரம் கடந்து கொண்டிருந்தது.  அவளுக்கு வயிறை பிசைவது போல இருந்தது. சிறிது நேரத்திற்குள் துணி பிழிவதுபோல  வயிற்றை முறுக்க ஆரம்பித்தது.  வலியால் மறுபடியும் முனகினாள். பற்களைக் கடித்து மூச்சை இழுத்து விட்டாள். வயிற்றினுள் பெரிய நெருப்புகோளம் ஒன்று திரண்டு கீழ் நோக்கி சரிந்து  கொண்டிருந்தது.அவள் வயிறை  தடவிக்கொண்டே வலியால் துடித்தாள். திரண்டுவந்த அக்கோளம்  உடைந்து வெளியேறிய போது அவள் அம்மா என்று வீரிட்டு கத்தினாள். தொடைகளில் உதிரம் வழிந்து நசநசத்தது.கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது. உடம்பை இப்படியும் அப்படியுமாக அசைத்தாள். உதிரப்போக்கு தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது. வீட்டில் இருந்து கொண்டுவந்திருந்த பழைய துணிகளை அதன்மீது போட்டார். திட்டு திட்டாக உதிரம் திரிந்து உறையத் தொடங்கியது. அவள் அப்படியே திண்ணையின் சுவரில் சாய்ந்தாள். பிறப்புறுப்பில் செருகப்பட்ட கட்டை வழுக்கி கீழே விழுந்தது.  துணியை எடுத்து அவளுடைய உடம்பை துடைத்துவிட்டார். கவிச்சை நெடி அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.  “ மூலக் கடைக்கி போயி பாலும் பன்னும் வாங்கியாந்து குடுபா” என்று மருத்துவச்சி அவரிடம் சொன்னாள். அவர்  சிறிய சொம்பை எடுத்துக்கொண்டு  நடக்கத் தொடங்கினார். ரத்தம் தோய்ந்திருந்த  இடத்தில் ஈக்கள் மொய்க்கத் தொடங்கின.


 இதன் பிறகு ஆண்குழந்தைகள் மட்டுமே கருத்தரிக்கச் செய்ய  வேண்டும் என்பதற்காக அவர் பல்வேறு மருத்துவர்களைச் சென்று சந்தித்தார். பயன் ஏதும் இல்லாமல்  அச்சந்திப்புகள் முடிந்தன. சித்தா யுனானி ஆயுர்வேதம் என மருத்துவ முறைகளை மாற்றிப் பார்த்தார்.  அவற்றிலும் திருப்திகரமாக அவர் உணரவில்லை. கரு உருவான பிறகே கண்டு சொல்லும் தொழில்நுட்பத்தின் மீது அவருக்கு எரிச்சலாக வந்தது.அவருடைய கனவெல்லாம் கரு உருவாகும் போதே அது ஆணின் கருவாக உருவாகவேண்டும் என்பதாக இருந்தது. தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தும் கூட அவர் மனம் சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டார்.
 ஒரு கட்டத்திற்குமேல் தன் சொந்த  அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படத் தொடங்கினார். ஒவ்வொரு முறையும்  சூத்திரத்தின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. அக்காலக் கட்டத்தில் அவர் பல்வேறு இடர்களைக் கடக்கவேண்டியிருந்தது. தன் வாழ்க்கையை பணயம் வைத்து புது புது சூத்திரங்களை  உருவாக்கிக் கொண்டே இருந்தார்.நூறு சதவீதம் பொருத்தமான சூத்திரத்தை நோக்கி அவர் கவனம் குவிந்திருந்தது.
பெண் குழந்தைகள் இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அவருக்கு மேலும் எரிச்சலையே ஏற்படுத்தின. “மூதேவிங்க எனக்குனு  வந்து வாச்சிருக்கு பாரு” என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டார்.  அக்குழந்தைகளின் ஒரு அங்குல வளர்ச்சிகூட அவருக்கு ஆண் குழந்தையின் தீவிரத்தைக் கூட்டிக்கொண்டே இருந்தது.

கார்த்திகை முடிந்து மார்கழி தொடங்கியிருந்தது. பனி விலகாத ஒரு விடியலில் சூத்திரம் பூர்த்தியானதை அவரால் உணர முடிந்தது.கலவியை முடித்துக் கொண்டு அவர் புரண்டு படுத்தார். எழுந்து குளித்துவிட்டு சூரியோதையத் திசை நோக்கி விழுந்து வணங்கினார். பின் தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சூத்திரத்திற்கு உயிரூட்டத் தொடங்கினார். சூத்திரம் மெல்ல விரிவு கொண்டபடி இருந்தது. 
 கோடை வெயில் அனல்போல தகித்த ஒருநாள் அவர் சூத்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார். எந்தெந்த நாட்களில்; எந்தெந்த நேரத்தில்  கூட வேண்டும்; எந்த திசை நோக்கி படுக்க வேண்டும்; ஆகிய மூன்று காரணிகள் தான்  கரு, ஆணா பெண்ணா  என்பதை தீர்மானிக்கின்றன எனும் முடிவிற்கு வந்தார். அக்காரணிகளை உள்ளடக்கிய சூத்திரத்தை இறுதி செய்தபோது அவர் மனம் சந்தோஷத்தில் திளைத்தது. இனி கரு உருவாகும் போதே அது ஆண் குழந்தையின் கருவாக இருக்கும் என்று வெளியுலகிற்கு அறிவித்தார். புதிய சூத்திரத்தின் மூலம் தன்  மனைவியின் கருப்பையில் ஆண்குழந்தைக்கான ஒரு கருவை விதைத்து  நவீன மருத்துவத்திற்கு நேரடியாகவே சவால் விட்டார்.


  “ஆம்பள கொழந்தைதான் பொறக்கும்னு சொல்லி எங்கிட்ட பணம் வாங்கி ஏமாத்திட்டான் தேவிடியா பையன்” என்று குடித்துவிட்டு அங்கமுத்து வீட்டிற்கு  முன்பாக வந்து ம.க.போ.க கட்சியின் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி கத்திவிட்டு சென்ற மறுநாள் மருத்துவ துறையில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக கடந்த ஆண்டுக்கான டாக்டர்.எஸ்.பி.ஜோஷி விருதுக்கு திருவாளர் அங்கமுத்து அவர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட செய்தி அனைத்து தினசரிகளிலும் வெளியாகியிருந்தது.















 

Tuesday, January 5, 2016

வெய்ய உவர்க்கும்


                                                                                                                                                             கண்டாச்சிபுரம்   6.2.2014
அன்பினிய குந்தவைக்கு
நான் தான். நான் தான் என்று எழுதினாலேயே உன்னுள்   உருத்திரண்டுவிடமாட்டேனா? ரத்தமும் சதையுமாக எதிரில் வந்து நிற்கக்கூடியவனாகத் தானே இருக்கிறேன்?. ஆயிரமாயிரம் முறைகள் அப்படித்தானே எழுதியிருக்கிறேன். அதுவெல்லாம் ஒரு காலம். கனவையும் கற்பனையையும் குழைத்து குழைத்து கடிதமாக எழுதித்தள்ளிய காலம். முதல் கடிதத்தை எங்கு வைத்து கொடுத்தேன் தெரியுமா? மறந்துவிட்டாயா என்ன?. எல்லாவற்றையும் காலம் மறக்கடித்தும் இருக்கலாம். கோடியார்வீட்டு நெட்டிலிங்க மரத்தடியில் வைத்து தான் கொடுத்தேன். சாட்சியாக மரம் இன்றும் அங்கே கிளைப் பரப்பி  நின்றுகொண்டிருக்கிறது. கைபேசி வந்து எல்லாவற்றையும் அடித்து வீழ்த்தி விட்டது. எல்லாவற்றையும் என்றால் எல்லாவற்றையும் தான். விளக்கி சொல்ல வேண்டுமா என்ன? என்ன தான் எஸ்.எம்.எஸ் வந்துவிட்டாலும், கடிதத்தின் கவர்ச்சியையும் ஈர்ப்பையும் அதனால் ஒருபோதும் அடைந்து விடமுடியாது. நான் ஒரு மடையன். இப்போதெல்லாம் எனக்கு எதுவும் தெளிவாக விளங்கமாட்டேன் என்கிறது. நவீன வாழ்க்கை முறை  உன் கால்களிலும் சக்கரங்களை கட்டிவிட்டிருக்கக் கூடும். இப்போதைய  உன் வாழ்வில் கடந்த காலங்களையெல்லாம் அசைபோட்டுப் பார்க்க நேரம் இருக்கிறதா என்ன? பிறகெப்படி ஒருவார இதழிற்கு நானளித்த நேர்காணலைப் படிக்க முடிந்தது. படித்துவிட்டு கடிதம் எழுத தோனியிருக்கிறது? எதேச்சையாக நடந்துவிட்டதா? என் மொழி இன்னுமா உன்னை வசியம் செய்துகொண்டிருக்கிறது. என் எழுத்துகளை வாசிக்கும்போது உன் கண்களில் கிறக்கம் சொட்டுமே! இப்போது கூடவா?.
இன்று மேம்போக்காக காதல் செய்துகொண்டிருக்கும் இளைஞர்களை  பார்த்திருக்கிறாயா?.எல்லோரையும் அப்படி சொல்வதிற்கில்லை.  அவர்களுக்குப்  பதிலாகத் தான் அரசியல் கட்சிகள் காதலை தீவிரமாக கையாள்கின்றனர். அப்போது நாம் எவ்வளவு தீவிரமாக  இருந்திருக்கிறோம் என்பதை நீ மறந்துவிட்டிருக்க மாட்டாய்.  ஒருவேளை நாம்தான் தீவிரமாக இருப்பதுபோல நம்பிக் கொண்டிருந்தோமா? எல்லாம் மாயைதானோ? நொச்சியும் கொஞ்சியும் பூத்துக்கிடந்த காடு மேடெல்லாம் உன்னை அழைத்துக் கொண்டு திரிந்ததெல்லாம் வெறும் இனக்கவர்ச்சி மட்டுமேதானா? சுலபத்தில்  மறந்து விடக்கூடிய நாட்களா அவை? நினைக்க நினைக்க மனசு முழுக்க ஆண்டாசெட்டி குளத்து  இலுப்பை பூ வாசம் பெருகி மணக்கிறது அன்பே.

இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த இரவில் ஏன் இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று உனக்கு புரிகிறதா?. எனக்கும்கூட சரியான காரணம் எதுவுமே பிடிபடவில்லை. செல்வத்தின் வார்த்தைகள் என் மனதை அரித்துக்கொண்டே இருக்கின்றன. அதுதான் காரணமா என்பதையும் சொல்வதிற்கில்லை. இதேபோன்றதொரு கோடையில் தான் பிரிகிறேன் என சொல்லாமல்  நீ  நிரந்தரமாகப் பிரிந்து சென்றாய். நீதான் அப்படி நினைத்திருக்கிறாய். எளிமையாக நாம் காதலித்திருந்திருக்கிறோம். தெளிந்த நீரைப்போல அது இருந்தது.  சிறு கொய்யாவை   நீ கடித்துத் தந்தாய். அதை நான் ஆயிரம் கரங்கள் கொண்டு வாங்கியதை உன் விழிகள்  எப்படி ரசித்து உள்வாங்கியது தெரியுமா? ராட்சசி. இப்போது நினைத்தாலும் மனதில் சுளுக்கு விழுந்து விடுகிறது.

 நகரின் பிரதான துணிக்கடையில் வைத்து தற்செயலாக உன் மகளை கடந்த வாரத்தில் ஒருநாள் பார்க்க நேர்ந்தது. எந்த நாள் என்று உறுதியாகத் தெரியவில்லை. குந்தவை என்று கூட சப்தமிட்டு கூப்பிட்டும் விட்டேன்.  அந்தளவிற்கு மனம் பித்தேறிக் கிடந்தது. அச்சு அசலாக  அப்படியே உன்னை  உரித்து வைத்திருக்கிறாள்.  எதுவும் பேசாமல் அவள் திரும்பி  ஏறிட்டுப்பார்த்தாள். பிறகுதான் நான்  அருகில் சென்று விசாரித்தேன். அவளுக்கும் ஏன் தான் வார்த்தைகளை தேனில் குழைத்து குழைத்து பேசும் கலையை கற்றுக்கொடுத்திருக்கிறாயோ? நடை உடை பாவனை அனைத்திலும்  நீயேதான் அன்பே அவளுக்குள் நிறைந்திருக்கிறாய்.
இருபத்தி நான்கு வருஷங்கள் கடந்த பின்பு இது என்ன தொந்தரவு என்று உனக்கு தோன்றக்கூடும். உன் கடிதத்தைப் பார்த்த நொடியில் எனக்கும் அப்படிதான் இருந்தது.  இக்கடிதத்தை உன் கணவன் இருந்து  பார்க்க நேர்ந்தால்  ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கவலைப்படும் உன் மனதையும் நான் அறிவேன். அதுகூடவா எனக்கு புரியாது? காலத்தின் நுண்ணிய அலகிலாவது உன்னை நான் நேசித்திருக்கமாட்டேனா குந்தா! நீ உணராமலேயே சென்றுவிட்டாயோ?  அத்தகையப் பதற்றங்களையெல்லாம் புறமொதுக்கிவிட்டே , இக்கடிதத்தை என் நினைவுகள்  எழுத தொடங்கியிருக்கின்றன. இதை நான் எழுதுகிறேன் என்றா நினைக்கிறாய்? போக்கத்தவளே! உனக்கெப்படி புரியாமல் போகும்?. எல்லாம் தெரிந்த கள்ளி நீ. இத்தனை  வருஷங்களுக்குப் பிறகு ஏன் இவ்வளவு அழுத்தமாக உன் நினைவுகள் என்னைத் தழுவிக்கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. உன் மகளைப் பார்த்தது மட்டுமேவா காரணமாக இருந்துவிட முடியும்? எனக்கு அப்படித் தோன்றவில்லை. உன்னைப் பற்றிய செல்வனுடைய வார்த்தைகள் என் நினைவின் நதிக்குள் ஒரு மீனைப்போல இப்படியும் அப்படியுமாக நீந்திக்கொண்டே இருக்கின்றன. அவனுடைய வார்த்தைகள் தான் இயக்கிக்கொண்டிருக்கிறதோ?

 உனக்கு நீல நிறம் என்றால் ரொம்பவும் இஷ்டம். விஷம் கூட நீல நிறம் தான். இப்பவும்  அதே விருப்பத்தோடு இருக்கிறாயா? வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் திரும்ப திரும்ப உன்னை  என் மனதில் தீட்டிக்கொள்கிறேன் தெரியுமா? ஆழமாக யோசித்துப் பார்த்தால், கடந்து சென்ற காலங்களிலெல்லாம், உனக்கான வார்த்தைகளை தொடர்ந்து என்  மனதில் எழுதிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன் என்பதை தெளிவாக உணரமுடிகிறது.   ‘பைத்தியம் மாதிரி உளராத டா’ என நீ அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாய். இப்போதும் அதை  என்னால் கேட்கமுடிகிறது குந்தவை. ஒரு வகையில் யோசித்தால்  பைத்தியக்காரத்தனம் தானே எல்லாம்.  ‘வேம்பின் பைங்காய் என் தோழி தரினே’ எனும் சங்கப்பாடல் நினைவிருக்கிறதா? நினைக்கும்போதே ஆலமரத்து கிளிகள் மனதில் சிறகடிக்கத் தொடங்கிவிடுகின்றன. மறந்துவிடக்கூடிய வரிகளா அவை?.
தமிழ் ஐயாவின் குரல் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது. புங்கை மர நிழல். அங்கு தான் எப்போதும் தமிழ் வகுப்பு நடைபெறும். ஐயா நாற்காலியில் அமர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். கிணற்றடி ஆலமரத்தில் பறவைகள் சடசடத்துக் கொண்டிருந்தன. அன்று செய்யுள் வகுப்பு. எல்லோரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். குறுந்தொகையில் இருந்து ஒரு பாடலை வாசிக்கத் தொடங்கினார்.அவரது குரல் தெளிந்த நீரோடையைப் போல இருந்தது
.
 “வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் ; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
வெய்ய உவர்க்கும் என்றனிர்-
ஐய- அற்றால் அன்பின் பாலே”.

மறுபடியும் ஒருமுறை பாடலை ஏற்ற இறக்கத்தோடு படித்துக் காட்டிவிட்டு  அவர்களைப் பார்த்தார். அனைவரும் அமைதியாக அவரையே உற்றுக் கவனித்துக் கொண்டு இருந்தனர். ஆலமரத்தில் இருந்த காகம் பறந்து, மேற்கு பக்கமிருந்த கூரை கொட்டகையின் மேல் அமர்ந்தது. செட்டியார் வீட்டு செல்வம் தனக்கு முன்பாக இருந்த மண்ணைக் கூட்டிக் கூட்டி களைத்துக் கொண்டிருந்தான். செல்வத்தையே அவள்  பார்த்துக் கொண்டிருந்தாள். நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த ரவி அவளை கவனித்துக் கொண்டிருந்தான். ஐயா மறுபடியும்  பாடலை ரசித்துப் படித்துக் காட்டி,  அவர்களைப் பார்த்துக் கேட்டார்.  “யாருக்காவது அர்த்தம் விளங்குதாடா?” ஒருத்தரும் அசையவில்லை.  கடைசி வரிசையில் இருந்த அக்ரம்  “யாருக்கு புரியுதோ இல்லையோ ரவிக்கும் குந்தவைக்கும் கண்டிப்பா புரிஞ்சிருக்கும்”  மெதுவாகச்  சொல்லிவிட்டு கண் சிமிட்டினான். அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.  “இந்த கீழ்வெட்டு பேச்சிக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல பாய்” என்று அக்ரமை பார்த்து  அவர் சொன்னார். எப்போதும் அவர்கள் அப்படிதான். வழக்கமாக பதில் சொல்லும் குந்தவையை அவர்  நோக்கினார். மாணவர்கள் அமைதியாக இருந்தனர்.  “உங்களுக்கு விளக்கமா சொல்ல இதுல ஒண்ணுமில்ல. எல்லாமே நீங்க செய்யறது தான். என்னடா ரவி. சொல்றது சரிதான?” என்றார். அனைவரும் ரவியை  பார்த்தனர். குந்தவை அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.அவளையும் அவனையும் சுட்டிக்காட்டி செட்டியார் வீட்டுச் செல்வம் என்னவோ சொன்னான். அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. திரும்பவும் அவர்களிடம்  விளக்கத்தொடங்கினார். வார்த்தைகள் தொடர்ந்து பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தன.

 “எல்லாமே ஆரம்பத்தில் இனிப்பாகத்தான் இருக்கும். போகப்போகத்தான் கசக்க செய்யும். இததாண்டா  பாட்டா எழுதி இருக்கான். வேற ஒன்னும் இல்ல. எல்லாம் காதல பத்திதான்”. அவர் அப்படி சொன்னதும் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர்.   “லவ்னா தாண்டா  உங்க கிட்ட ஒரு பொலிவ பார்க்க முடியுது” என்று கிண்டலடித்தார். கோபி சேகரை சீண்டி மெல்லிய குரலில் சொன்னான்: “அந்த மேட்டர்ல ஐயாவும் படு கில்லாடி தெரியுமா?.  “எந்த மேட்டர் டா” என்று புரியாமல்  கேட்டான்.  “ உனக்கு எல்லாத்தையும் விலாவாரியா புட்டு புட்டு  சொல்லனும்டா” என்று அலுத்துக் கொண்டான். அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கவனித்த  ஐயா  “அங்க என்னடா சத்தம்?” என்று குரல் உயர்த்தினார்.    “புரியுற மாதிரி சொல்லுங்க ஐயா ” என்று  செல்வம்  கேட்டான்.  “போண்டா  உனக்கா புரியல?” என்றார் அவர். செல்வம் குண்டாக இருப்பான். போண்டா என்பது கணக்கு ஆசிரியர் வைத்த பெயர். நாளடைவில் அதுவே நிலைபெற்று விட்டது. அவன் உதட்டை பிதுக்கினான்.  விட்ட இடத்திலிருந்து அவர் கூறத் தொடங்கினார்.

 “தன் தலைவியின் கணவனைப் பார்த்து தோழி கூறுவது போன்று எழுதப்பட்ட பாடல் இது. நீங்கள் என் தலைவியை காதலிக்கத் தொடங்கிய காலத்தில் அவள் வேப்பங்காயைத் தின்னக் கொடுத்தால் அது கற்கண்டைப் போல இருக்கிறதென்றீர். ஆனால் இன்றோ, பறம்பு மலையின் சுனைநீரை அருந்தக் கொடுத்தால் கூட, துவர்க்கிறதாக கூறுகிறீர்கள். இதுதான் உங்கள் அன்பின் லட்சணமா? என்று கேட்கிறாள்.புரியுதா? புரிஞ்சு போச்சா?” என்று    சொல்லி முடித்தார். குந்தவை அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள். அவனைப் பார்த்து அவள்  சிரிப்பதை அவர்  பார்த்தார். அதன் பிறகு   “என்னமா உனக்காவது  புரியுதா?” என்று மையமாக கேட்டார். சேகரைப் பார்த்து கோபி கண்ணைச் சிமிட்டியபடி  சிரித்துவிட்டு  “இப்பவாவது உனக்கு புரியுதாடா? என்று கேட்டான்.

சாயுங்காலம் பள்ளிகூடம் விட்டு அவள் வீடுநோக்கி மெதுவாக  நடந்தாள். பாப்பான்குளச் சந்தை   நெருங்கியதும் அவனுக்காக அவள் காத்திருந்தாள். அவன் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்து அவளுடன் சேர்ந்து கொண்டான். அவளை உற்றுப்பார்த்தான். அவள் முகம் இனம் புரியாத வருத்தத்தில் இருப்பதை உணர முடிந்தது.  “ஐயா சொன்ன மாதிரி நான் உனக்கு போகப்போக புளிக்க ஆரம்பிச்சிடுவேனா?” என்று வெடுக்கெனக் கேட்டாள். கண்களில் நீர்திரளத் தொடங்கியது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது. அவள் கையைப் பிடித்து இழுத்து, உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டான்.  தலையை வருடிவிட்டான். பின் மெல்ல அவன் விரல்கள் அவள் கன்னத்தில் கோலமிட்டபடி கீழே இறங்கிக் கொண்டிருந்தன. திரும்பவும் சுற்றும் முற்றும் பார்த்தான். நடமாட்டம் இல்லாத சந்து அவனுக்கு தைரியத்தைக் கொடுத்தது.  உதட்டில் முத்தமிட அவளை இழுத்தப்போது  “ ஒனக்கு நேரங்காலமே இல்லடா” என்று சொல்லி அவனுடைய கையை தட்டி விட்டாள்.   “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா. இப்படி ஏதாவது பண்ணி என்ன பேசவிடாம பண்ணிடற” என்று அவள் அலுத்துக் கொண்டாள்.  அப்படிச் சொன்னதும் அவள் தலையில் கை வைத்துச் சத்தியம் செய்தான்.  “நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது. கடைசி வரை நான் உன் கூட இப்படியே இருப்பேன். போதுமா” என்று தலையை கோதிவிட்டான். பாதத்திற்கு கீழ் இருந்த நிலம் நழுவுவதைப்போல இருந்தது அவளுக்கு . சரி என்பது போல தலை அசைத்தாள்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது  நினைத்தாலும் நேற்று நடந்தது போலவே இருக்கிறது.  ஆச்சரியமாகவும் இருக்கிறது. கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்பவன் நான். இவ்வளவு உறுதியாகவா  பேசியிருக்கிறேன்? தலையில் அடித்து சத்தியம் வேறு செய்திருக்கிறேன். உண்மையிலேயே விசித்திரங்கள் நிறைந்ததுதானோ காதல்? காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது பார்த்தாயா? நம்மில் யார் மீறிச் சென்றிருக்கிறோம் என கடைசி வரை நீ உணரவே இல்லைதானே?
நம் வகுப்பில் ஆங்கிலத்திற்கு நீ மட்டும் தான் தனி வகுப்பிற்கு சென்றாய். அதன் பிறகே நான் சேர்ந்தேன். என் அப்பா லேசிலா என்னை சேர்க்க ஒப்புக்கொண்டார்?.  உன்னைப் பார்க்கத் தானே நான் தனிவகுப்பிற்கே வந்தேன். ஒரே வாரத்தில் ஆசிரியர் அதை உணர்ந்து கொண்டுவிட்டார்.  “டேய் நீ டியூஷன் படிக்க வந்தியா? இல்ல  சைட் அடிக்க வந்தியா?” என்று என்னைப் பார்த்து வெடுக்கென கேட்டார்.  நான் அசிங்கப்பட்டு தலை குனிந்து  நின்றேன். ஆனால் உனக்கு சிரிப்பு பீரிட்டுக் கிளம்பியது தெரியுமா? அதையும் தானேடி ரசித்தேன். இப்போது யோசித்தால் எல்லாமே பைத்தியக்கார செயல் போல்தான் இருக்கிறது. உன் பாட்டுக்கு நீ படிப்பில் முன்னேறிக் கொண்டே இருந்தாய். என்னுடன் பேசினாய். பதில்  கடிதமும்  கொடுத்தாய் எல்லாவற்றையும் தான் செய்தாய். அதையெல்லாம் அந்த நொடியில் மறந்து மூட்டைக் கட்டித் தூர வைத்துவிட்டு  படிப்பிற்கு தாவிச் செல்ல உன்னால் முடிந்திருக்கிறது.  இந்த நுட்பம் புரியாமல் உன் நினைவுகளில் ஊஞ்சல் கட்டி பள்ளி நாட்கள் முழுக்க நான்  ஆடிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதையே தாமதமாகத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

நீ இருக்கும் இடத்தில் டிசம்பர் பூக்கள் பூக்கிறதா? அவற்றைப் பறித்து    உன் நீள்சரக் கூந்தலில் சூடிக்கொள்கிறாயா அன்பே? டிசம்பர் பூ வைத்திருக்கும் பெண்களிலெல்லாம் என்னுள் இருக்கும் உன் முகத்தை எடுத்து பொருத்திப் பார்க்கும் வேலையையே மனம் ஒவ்வொரு மார்கழியிலும்  செய்து கொண்டிருக்கிறது. இப்போதைய யுவதிகளுக்கு டிசம்பர் பூவின் மகத்துவம் தெரிந்திருக்கவில்லை குந்தவை. அக்காலகட்டத்து  நினைவுகளின் சரத்தை டிசம்பர் பூக்களின்றி கோர்த்துவிட முடியுமா என்ன?  அந்த நேர்காணலில் கூட இக்கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். உணர்ந்தாயா?  செம்பருத்தி பூக்கள் கூட தங்கள்  இருப்பை வெகுவாக  குறைத்துக் கொண்டுவிட்டன. சூடிக்கொள்ள ரசனையானவர்கள் இருந்தால் தானே அவை பூக்கத் தொடங்கும்?.செம்பருத்தியை எதேச்சையாக எங்காவது பார்த்துவிட்டால் மனம் பூரிப்படைந்து விடுகிறது. இதழ் பிரித்து எப்போதோ நீ சிரித்த சிரிப்புகளில் அழகானதொன்றை தேடி எடுத்து  மனம் அதிலேயே லயிக்கத் தொடங்கிவிடுகிறது. அதுபோன்ற காலம் இனி திரும்ப வருமா குந்தவை? வாய்ப்பிருக்கிறதா என்ன? என் நம்பிக்கையின் வேர்கள்   தொடுவானத்திற்கு அப்பால் நீண்டு கொண்டிருக்கின்றன.

என்னை பிரிந்து சென்றிருக்க கூடாது என்று  இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையேனும் நினைத்துப் பார்த்திருக்கிறாயா? அந்தந்த காலத்திற்கேற்ப நம்முடைய நினைவுகள் தங்களின் வண்ணத்தையும் சுவாசத்தையும் மாற்றிக் கொண்டிருக்கின்றன  என்பதை உன்னால் உணர முடிகிறதா? காங்கரீட் கட்டடங்கள் நிறைந்திருக்கும் அங்கே பழைய நினைவுகளுக்கான தேவை இருக்கிறதா? நகரத்தின் அடுக்கு மாடி வீட்டில் உலவிக் கொண்டிருக்கும்  உன்னில் என் வீட்டுத்தோட்டத்து பூவரச மர ஊஞ்சல் இத்தனை ஆண்டுகளில் எத்தனை முறை   ஆடியிருக்கிறது? எதையுமே மறக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன். நினைவுகள் பின்னிப் பின்னி இறுக்கும்போது சிலநேரங்களில் மூச்சுதிணறவும்  செய்துவிடுகிறது.

நினைவுகள் உறைந்து பைத்தியம் போல மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டுக்கான கோடையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம்  கோடைக்காகவே மனம் காத்திருக்கும். வாசியம்மனுக்கு பொங்கலிட்டு கோடையை வரவேற்போம் நாம். உனக்கு நினைவிருக்கிறதா? கடுங்கோடையின் அடர்த்தியான வெயிலை ஒரு நண்பனைப்போலத்தானே எண்ணியிருந்திருக்கிறோம்.   இப்போதெல்லாம் கோடை தகித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெயில் மட்டும் கூடிக் கொண்டிருக்கிறது. மற்ற அனைத்தும் தங்களின் நிறங்களை உதிர்த்துக் கொண்டிருக்கின்றன. அனுபவித்துதான் சொல்கிறேன்.  நமக்கான கோடைகாலம் பங்குனி உத்திரத்தில் இருந்து தொடங்கிவிடும் என்பதை மறந்து விட்டாயா? பெங்களுரில் வசித்துக் கொண்டிருந்தாலும் உத்திரத்திற்கு வந்து  செல்வம்  காவடித் தூக்கிவிட்டுத்தான் செல்கிறான். அன்பு, சேகர் மற்றும் கோபி போன்றோர்  இல்லாமல்  எந்த ஆண்டும் உத்திரம்  நிகழ்ந்து விடவில்லை என்பது உனக்கு தெரியுமா?

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி உனக்கு ஞாபகம் இருக்கா? சுலபத்தில் மறந்துவிடக்கூடிய நாட்களா அவை? யாருக்காக வேண்டிக் கொண்டு அங்கே பால் கஞ்சி ஊற்றினாய் என்று இப்போது பால் கஞ்சி ஊற்றிக்கொண்டிருக்கும்  உன் மகளுக்கு தெரியுமா?. பதினெட்டு நாட்கள் நடைபெறும் பாரதக் கூத்திற்காக உன் பாட்டி கோயில் எதிரில் பாயைப்போட்டு இடம் பிடிப்பாள். கூத்து தொடங்கும் நேரம் பார்த்து நீ வந்து அமர்வாய். என் மனம் வேறொரு கூத்தை நடத்திக் கொண்டிருக்கும்.  எல்லாமே நீரடித்து விலகிய கோலமாகத்தானே மாறிவிட்டது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது குந்தவை. அந்த கோடையின்  அந்தியை மறந்துவிட முடியுமா என்ன? காலகாலத்துக்குமான பிரிவின் நிமித்தத்தை ஒவ்வொரு வார்த்தைகளாக நீ சொல்லச் சொல்ல என் பாதத்திற்கு கீழே இருந்த நிலம் மெல்ல நழுவிக் கொண்டிருந்ததை உணரமுடிந்தது. மனம் கனத்து வெடித்து விடும் போல இருந்தது. அந்நாட்களை இப்போது நினைத்தாலும் நடுக்கமாக இருக்கிறது குந்தவை.

                வளமோட்டு பாறைக்கு கிழக்கே குன்றுகளும் புதர்களுமாக இருந்தன. அவற்றிற்கு இடையே வறண்டு கிடந்தது ஓடை. அந்திக் கருக்கலில் பறவைகள் வாசியம்மன் கோயில் நோக்கிபறந்து கொண்டிருந்தன. கூடடைவதின் அவசரம் தெரிந்தது. அவனை ஏறிட்டு பார்க்காமலேயே அவள் பேசினாள்.குரலில் கலவரம் தெரிந்தது.  “ உன் மேல அன்பில்லாம இல்லடா. புரிஞ்சிக்க ரவி” அவன் அமைதியாக இருந்தான். மெல்ல தன்னை தவிர்க்கத் தொடங்கியிருக்கிறாய் என அவனால் உணர முடிந்தது. என்ன காரணம் என புரியாமல்தான் அல்லாடிக் கொண்டிருந்தான்.  வார்த்தைகளை  முற்றிலுமாக தொலைத்து விட்டிருந்தான் அவன், அவனுக்கு நடுக்கமாக இருந்தது. கண்களில் நீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. எந்நேரமும் அழுதுவிடக் கூடிய நிலையில்தான் இருந்தான்.

                 “ இப்படி அமைதியாவே  இருந்தா என்ன ரவி அர்த்தம்?” என்று திரும்பவும் கேட்டாள். நடுங்கிய குரலில்  “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு குந்தவை?” என்று கேட்டான்.  “எனக்கு என்ன பன்றதுனு தெரியல” என்று அவள் கூறியதைக்கேட்டபடி   அவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.  “இப்படியே  நிக்காத, எதாவது பேசு” என்று சொன்னாள்.

                சிறிது  நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்  இருந்தனர்.  நேரம் கடந்து கொண்டிருந்தது. வயலிலிருந்து மாட்டை ஓட்டிக் கொண்டு ஒருவர் வளமோட்டு பாறை சரிவில் இறங்கிக் கொண்டிருந்தார்.  “நேரம் ஆவுதுல்ல. எதாவது சொல்லுடா” என்றாள்.  “முடிவெடுத்துட்டு வந்து என் முன்னால்  நின்னா நான் என்ன பண்ண முடியும்?” என்று விரக்தியாக பதில் சொன்னான். குழப்பமாக இருந்தது. இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என புரியாமல் தவித்தான். திரும்பவும் அவளே பேசினாள்.  “அவரும் நல்லவர் தான்டா. நல்ல வேலையில வேற இருக்கார்.  அவரும் என்னை சின்ன வயசில இருந்து லவ் பண்றாராம் டா”. அவன் இடைமறித்து ஆத்திரத்தோடுக் கேட்டான். “லவ்வ அவரு இப்பதான் சொன்னாரா; இல்ல அப்பவே சொல்லிட்டாரா?”. அவனுடைய ஆத்திரம் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது. எதுவும் பேசாமல் சிறிது நேரம் இருந்தாள். அவனுக்கு மூச்சு வாங்கியது. பிறகு அவள் பயந்து பயந்து பேச்சை தொடர்ந்தாள்.  “அவர்னா வீட்ல சரின்னு சொல்லிடுவாங்க” என்றாள்.  “இது ஆரம்பத்திலேயே உனக்கு தெரியாதா?” என்று அவன் கேட்டான்.  “நானும் போராடித்தாண்டா பார்த்தேன்” என்றாள். “இப்ப சோர்ந்து போய்ட்ட இல்ல?” என்று தட்டையான குரலில் கேட்டான். அவள் அமைதியாக இருந்தாள்.  “அவனுக்கு  ஒரு முழம் பூவுக்கு ஐவேசி உண்டானு கேட்கிறாங்க டா நான் என்னடா சொல்றது”. அவள் பேச பேச இவனுக்கு உடம்பு  அதிகமாக நடுங்க  ஆரம்பித்தது. அவள் வார்த்தைகள் ஊசியைப் போல அவன் மனதை தைக்கத் தொடங்கின.  “அப்ப எல்லாமே பொய்தானா குந்தவை?” என்று நடுக்கத்துடன் கேட்டான். அவள் அதற்கும்  பதில் பேசாமல் இருந்தாள். பழைய நினைவுகளெல்லாம் அவன் மனதில் குமிழிட்டபடியிருந்தன. நன்கு இருட்டிவிட்டிருந்தது. அதற்கு மேல் அங்கு நின்று பேசுவது சரியில்லை என்று தோன்றியது அவனுக்கு.   “அப்பறம் பேசிக்கலாம் குந்தவை வீட்டுக்கு போ” என்று தளர்ந்துபோய்  சொன்னான்.  “என்னை மன்னிச்சிடுடா” என்று சொல்லிவிட்டு அவள்  மங்கலாகத் தெரிந்த பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.  விஷயத்தை பெரிது படுத்தி விடுவானோ என்று பயந்து கொண்டே பாதையைத் தேடி தேடி நடந்தாள். அதுவே அவளுடனான கடைசிசந்திப்பு என்பது தெரியாமல் தனக் கெதிராக  கறும்பாம்பென வளைந்து நீண்டிருக்கும் பாதையையே  உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் ஆந்தை கூவிக் கொண்டிருந்தது.

என் முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ளாமலேயே பிரிந்து சென்றுவிட்டாய். காலகாலத்திற்குமாக பிரிகிறோம் என அப்போது தெரிந்திருக்கவில்லை.  சொல்லிவிட்டுப் பிரிந்திருக்கலாம் அன்பே!.  அப்படியே மறந்துவிடக் கூடியவளாகவா நீ இருந்திருக்கிறாய்?.  எல்லாவற்றையும் ஒரு திட்டத்தோடுதான் செய்திருக்கிறாய் என்பதை கடைசி வரை நான் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேன். எவ்வளவு பெரிய முட்டாள் தனம்?.  பாதகி. நீ எல்லாவற்றையும் செய்யக் கூடியவள் தான். என்னை செருப்பால் அடிக்க வேண்டும். என்னை என்றால் என் புத்தியைத்தான். அதற்குதானே எதுவும் உறைக்க மாட்டேன் என்கிறது. இத்தனை ஆண்டுகளில் முகிழவே முகிழாத நினைவுகளை நான் தோண்டித் தோண்டி எடுத்துக்  கொண்டிருக்கிறேன். ஒரு சிறு  நப்பாசை தான்.

என் அன்பை   சட்டென்று உதறித் தள்ளும் முடிவுக்கு நீ வந்திருக்க மாட்டாய் எனத் தெரியும் குந்தவை. உன் கல்லூரிக்கே வந்து அவர்  எப்போது உன்னைச் சந்தித்தாரோ அந்த நிமிடமே நீ என்னிலிருந்து விலக நினைத்ததின் துவக்கப் புள்ளி.  நீயும் அவரும் உன் கல்லூரியில் இருந்து நடந்தே பேருந்து நிலையத்திற்கு வந்ததைப் பார்த்த நண்பர்கள் சொன்னார்கள். இந்த மனதை புரிந்து கொள்ளவே முடியவில்லை குந்தவை. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும்  ஏன் இப்படியெல்லாம் அது தாறுமாறாக யோசிக்கிறது என்று புரிவதில்லை. வயதாகிவிட்டது ஒரு காரணமா? . எதைப்பற்றியும் யோசிக்காமல்  உன்னுடன் சேர்ந்து காடு கழனி  சுற்றி வந்ததையும் வேப்பம் பூ உலுக்கியதையுமே  மனம்  சுற்றி சுற்றி  வருகிறது.

இடைப்பட்ட காலத்தில் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. உன் திருமணம். எந்த மனநிலையில் எனக்கு அழைப்பிதழை அனுப்பியிருப்பாய் என உணர முடியவில்லை. அப்பா அம்மாவின் மரணம். நான் முற்றிலுமாக நொறுங்கிக் கிடந்த நாட்கள். இருவரும் தற்கொலைதான் செய்து கொண்டனர். காரணம் அவர்களிருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.   பாட்டிக்கு வாய்ப்புற்று. கோரமான சாவு.  எதற்குமே சிறு அசைவுகூட உன்னிடமிருந்து வரவில்லை.  தகவல் தெரியாமலா இருந்திருக்கும்? எல்லாவற்றுக்கும் மனம் வேண்டும்தானே? நோய் தான் ஒருவனை மனிதனாக உணரச்  செய்கின்றன. சிறுகசிறுக  நோய் ஒருவனை  கரைக்கத் தொடங்கி விடுகிறது. கௌரவம், அகங்காரம், பதவி, ஆணவம், செல்வம் அனைத்தையும்  செதில்களைப்போல உதிர்த்து இறுதியில் தான் அவனை மனிதனாக  மாற்றுகிறது. என்ன பயன்? அதற்கு மேல்  அமைதியாக  காத்திருக்க  மரணத்திற்கும் அவகாசம் இருப்பதில்லை . அதனாலேயே சாவின் வாசலில் நிற்பவர்கள் குழந்தைகளாக தெரிகிறார்கள் போல. அதுபோன்ற முகங்களை நீ பார்த்திருக்கிறாயா? மரணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினால் மனம் அதிலேயே ஆழ்ந்து விடுகிறது.

இத்தனை ஆண்டுகளில் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். எதுவுமே நிலை இல்லை என்பதே அது. எல்லாம் சடுதியில் மாறிவிடக் கூடியதே. பாலைவிட வேகமாகத் திரிந்து விடுவதுதான். நீ கூட அப்படித்தானே?  கொஞ்ச நாள் வலிக்கச் செய்தது. பிறகு அதுவே வைராக்கியமாக மாறிவிட்டது. இல்லை என்றால் நானெல்லாம் எம்டெக் படிக்கிறவனா என்ன? உன்னால் தான் படிக்கவே ஆரம்பித்தேன்.  உன் மீதான கோபம் படிப்பின் மீது குவிந்தது. நான் முழுவதுமாக மாறத் தொடங்கியதே அப்போதுதான். காலம் எவ்வளவு விசித்திரமானது பார்த்தாயா? எனக்கு வாண்டர் வால்ஸ் விசையையும் நுண்கணிதத்தையும் சொல்லிக் கொடுத்தவள் நீ. அரூபமாக தொங்கிய கனவின் ஏணியைப் பற்றி  நான் மேலேமேலே சென்று விட்டேன். எப்படியெல்லாமோ ஆகவேண்டும் என நினைத்தவள் நீ. எப்படியாவது இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இருந்தாய். உறவினன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான்.நீயும் அனுமதித்தாய். அழகானவனாகவும் இருந்தான்தான் மறுப்பதற்கில்லை. நுனிநாக்கு ஆங்கிலம் வேறு. கல்லூரிக்கே வந்து உன்னை அழைக்கக் கூடிய துணிச்சல்காரனாகவும் அவன் இருந்திருக்கிறான். நவீன உலகத்தை உனக்கு பரிச்சயம் செய்யும் நுட்பம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. எத்தனை காலத்திற்கு வளமோட்டுப் பாறையையும் வாசியம்மனையும் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருக்க முடியும்?. ஒருவகையில் நீ செய்தது சரிதானோ என்றும் தோன்றுகிறது. எப்படிப்பார்த்தாலும் உன் பாதை மாற்றம் உன் கல்வியை காவு வாங்கியிருக்கிறது. நீயும் உடன்பட்டாய்.    அரைகுறையான கம்ப்யூட்டர்  கல்வியை உனக்கு கொடுத்த காலமே உன்னை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. நீ உயர உயரப்  பறந்திருக்க வேண்டியவள். நீயாகவே உன் சிறகுகளை வெட்டிக்கொண்டாய். இப்போதுகூட வலிக்கவில்லையா  குந்தவை?.

  .எம்.டெக் படிக்க ஒசூரைத் தாண்டி ஒரு கல்லூரிக்கு போகவேண்டிய நிர்பந்தம். அந்த கல்லூரிதான் முற்றிலுமாக என்னை மாற்றி அமைத்திருக்கிறது. அங்குதான் நான் எழுதவும் ஆரம்பித்தேன். தொடக்கத்தில் கவிதைகளில் இருந்துதான் தொடங்கினேன். ஒருகட்டத்தில் கவிதை சரிவராது என்று உணர முடிந்தது. பிறகு புனைவெழுத்துக்கு மாறிவிட்டேன்.  ஒருவேளை இப்போது இருப்பதுபோல அப்போது இருந்திருந்தால் என்னிலிருந்து விலகியிருக்க மாட்டாயோ என மனம் யோசிக்கிறது. அங்கும் உன்னைப்போல ஒருத்தி என் வழியில் வந்தாள். என்னிடம் புத்தகங்களை வாங்கிப் படித்தாள். கவிதைகள் எழுதி காட்டினாள். நான் தான் ஏற்கனவே பட்டு தெளிந்திருக்கிறேனே! அவளும் உன்னைப்போலவே விழுந்து விழுந்து காதலிப்பதாக சொன்னாள். முதலாண்டு முழுக்க எந்த தொந்தரவும் இருக்கவில்லை. இரண்டாம் ஆண்டின்  பிற்பகுதியில் தான் ஒரு புயலைப்போல மாறி   ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். எதிர்பார்க்காத நேரங்களிலெல்லாம் எதிர்படத் தொடங்கினாள். வலிய வந்து காதல் செய்து விட முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. அவள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தாள். வெற்றிக்கோட்டை எட்ட உரிய காலத்திற்காக அவள் காத்திருக்கத் தொடங்கினாள். விடுமுறை நாட்கள் என்றால்  கல்லூரியிலிருந்து ஒசூருக்கு சென்ற பிறகு தான் அவரவர் ஊர்களுக்கு பிரிந்து செல்ல முடியும. அப்படித்தான் அன்றும் நடந்தது. அந்த நாளை எதிர்பார்த்துதான் அவள் காத்திருந்திருக்கிறாள் என்பதை உணர முடிந்தது.  இப்போது நினைத்தாலும் அவ்வளவு துல்லியத்துடன் காட்சிகள் மனதில் குமிழிடுகின்றன
.
                ஒரு வாரம் தொடர்ந்தார்போல கல்லூரிக்கு விடுமுறை.  சாயுங்காலம்  கல்லூரி விட்டு அனைவரும் ஒசூருக்கு  வந்து சேர்ந்தனர். சூரியன் மேற்கு நோக்கி சரியத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருத்தராக அவரவர்களுக்கான பேருந்தை தேடி இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். சிலர் முன்கூட்டியே திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர். அதன்படி தான் அவர்கள் பயணத்திட்டம் அமையும். கும்பல் மெல்ல மெல்ல குறைந்து அவனும் அவளும் மட்டுமே இருந்தனர். அவள் திண்டிவனம் போக வேண்டும். இவனுக்கு விழுப்புரம் மார்க்கம். அவள் அவனிடம் தயக்கத்துடன் சொன்னாள்.  “ரவி திருவண்ணாமலை வரை ஒன்னா போகலாமே?”.  அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு அவன்  அமைதியாக நின்றான். பெருத்த சப்தத்தோடு பேருந்து ஒன்று அவர்களைக் கடந்து சென்றது.   “என்ன யோசிக்கற?” என்றாள். ஒன்றும் இல்லை எனும் விதமாக தலை அசைத்தான்.  “ஏன் ரவி விலகி விலகி ஓடர. புடிக்கலனா நேரா சொல்லிடு பிளீஸ்” என்று மெல்லிய குரலில் கெஞ்சலாக கேட்டாள்.  “அப்படிலாம் இல்ல” என்று சுருக்கமாக பதில் சொன்னான். திருவண்ணாமலை செல்லும் பேருந்து  வந்து நின்றது. நடந்து சென்று அவள் அதில் ஏறினாள். கூடவே வந்து அவனும் பேருந்தில் ஏற வேண்டும் என்று அவள் மனம் துடித்தது. அவள் உள்ளுணர்வும் ஏறிவிடுவான் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது. இருக்கையில் சென்று அமர்ந்தாள். அவனுக்காக ஜன்னல் ஓர இருக்கையை பிடித்து வைத்தாள்.எப்படியும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை. ஆனால் அவன் வந்து ஏறுவதாகத் தெரியவில்லை. எதிரில் அவித்த வேர்க்கடலை விற்றுக் கொண்டிருக்கும் இளம்பெண்ணையே அவன் முறைத்துப் பாரத்துக் கொண்டிருந்தான்.  ஒவ்வொரு நொடியும் வலி கொண்டதாக மாறிக் கொண்டிருந்த போது அவன் மெதுவாக  நடந்து வந்து பேருந்தில் ஏறினான். அவள் எங்கு உட்கார்ந்திருக்கிறாள் என  பார்வையால் துழாவினான். அங்கு சென்று, ஜன்னல் ஓரமாக அவளை நகர்ந்து உட்காரச் சொன்னான்.  சற்று இடைவெளிவிட்டு  பக்கத்தில் அவன் உட்கார்ந்து கொண்டான். அவளுக்கு படபடப்பாக இருந்தது. இதயம் தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது.  “இப்படி உட்கார்ந்து வர்றதுக்கு பதில் நீ வராமலே இருக்கலாம் ரவி” என்று குனிந்து  அவன் காதருகில் சொன்னாள்.  “அப்படிலாம் இல்ல சௌமி” என்றான்.  “ஆறாவது தடவயா  இதே  பதிலை சொல்ற. ஒரு சின்ன சந்தோஷம் என் பேரை சொல்லியிருக்க”. அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். கூட்டம்  பேருந்தைப் பிடிக்க அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது.  அவன் அருகே அவள் நெருங்கி உட்கார்ந்தாள். அவளின் நெருக்கம் அவனுக்கு என்னவோ போல இருந்தது. உடம்பில் உஷ்ணம் தகித்துக் கொண்டிருந்ததை உணரமுடிந்தது. எப்படி விலகிச் சென்றாலும் அவள் விடுவதாகயில்லை. ஆக்ரோஷமாக அவள் காதல் வலையை பின்னிக் கொண்டிருந்ததை சுலபத்தில் புரிந்து கொண்டான். மீனாக மாறி தான் அதில் சிக்க வேண்டியது மட்டுமே எஞ்சியிருப்பதாக உணர்ந்தான்.  “இப்ப நான் என்ன பண்ணனும்னு நெனைக்கிற” என்றான். அவன்  இப்படி  கேட்டது அவளுக்கு சந்தோஷத்தை அளித்தது.  “நீ எதுவும் செய்ய வேணாம். என்ன லவ் பண்ணு அது போதும்” என்றாள். அவன் அமைதியாக இருந்தான்  “மௌனம் சம்மதமா?” என்று அவனை நோக்கி வலையை  எட்டின தூரத்திற்கு  விசிறி எரிந்தாள். அவன் ஒரு மாதிரியாக தலையை ஆட்டினான். அவள் மெல்ல வலையை இழுக்கத் தொடங்கினாள்.

பேருந்து ஊத்தங்கரையை நெருங்கும் போது   அவன் மடியில் அவள்  படுத்தாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்கள் அவன் கைகளில் பட்டது. அவள் தூங்கவில்லை  என்பதை உணர்ந்து  அமைதியாக இருந்தான். தான் வலையில் சிக்கிக் கொள்ள வேண்டிய தருணம் நெருங்கி விட்டது என அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவனுடைய ஒரு கையை எடுத்து தன் இடுப்பைச் சுற்றி அவள் போட்டுக் கொண்டாள்.  தன்னை நோக்கி  வலையை  ஆவேசமாக இழுக்கத்  தொடங்கினாள். வலையின் கணமும் கூடிக் கொண்டே இருந்தது.

                 “திண்டிவனத்துக்கு வந்து என்னை  விட்டுட்டு தங்கி காலையில கிளம்பி விழுப்புரம் போடா” என்று  அவன் தோளில் சாய்ந்து கொண்டு சிணுங்கினாள். எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய  நிலையில் அவன் இருக்கவில்லை. அவன் மனமும் எதிர்ப்பைக் காட்டிடவேண்டாம் என்றே அவனை எச்சரித்தது. சன்னமான ஒலியளவில் பேருந்தினுள் எண்பதுகளின் திரை இசைப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

                பதினோறு மணிவாக்கில் அவர்கள் திண்டிவனத்தை அடைந்தனர். வீட்டில் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தன. நீண்ட நேரமாக கதவைத் தட்டிய பிறகே அவளுடைய  அம்மா எழுந்து வந்து கதவைத்திறந்தாள்.  “அம்மா இது ரவி” என்று  எளிமையாக  அறிமுகப் படுத்தினாள். மங்கலான வெளிச்சத்தில் அவனை தலையசைத்து அவள்  வரவேற்றாள்.  பிறகு  அவர்கள் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றனர். அவன் தெரு நடையில் படுத்துக் கொண்டான். அவளுடைய அப்பாவிற்கு  ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் இரவுப் பணி. தம்பி பரங்கிப்பேட்டையில் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். வீட்டில் அம்மா மட்டும் தான். தூக்கம் வராமல் அவன் புரண்டு புரண்டு படுத்தான். அவள் தொடர்ந்து கனைத்துக் கொண்டிருந்தாள்.அவனுக்கும் அது கேட்டது. பக்கத்தில் படுத்திருக்கும் அம்மா ஆழ்ந்து  உறங்கும் வரை அவள் காத்திருந்தாள். அவளிடம் இருந்து  குறட்டை சத்தம் வரத் தொடங்கியதும் இவள் எழுந்து தெரு நடைக்கு வந்தாள். காலால் அவனை சீண்டினாள். அவன் புரண்டு படுத்தான். திரும்பவும் காலால் அவனை அழுத்தமாக  சீண்டினாள்.  இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவள் உருவம் மங்கலாக தெரிந்தது.  “எழுந்து வா ரவி” என்று சன்னமான குரலில்  அழைத்து அவனை சமயலறைக்கு கூட்டிச்  சென்றாள். எஞ்சிய உணவின்  ஊசிப்போன நாற்றம் மூக்கை துளைத்தது. சமையல்  மேடையில் அவள்  சாய்ந்து நின்று கொண்டாள். அவன் மேடையில் கைவைத்து நின்றான். பிசு பிசுப்பாக இருந்தது. கால்களில் ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து கீழே உற்றுப் பார்த்தான். நறுக்கிய காய்கறிகளின் துண்டுகள் கிடந்தன.  ஜன்னல் துவாரம் வழியாக தெரு விளக்கின் வெளிச்சம் சிறு கீற்றாக உள் நுழைந்து பாத்திரங்கள் மீது பட்டு பிரதிபளித்துக் கொண்டிருந்தது.  சமையல் கூடம் அனலாக தகித்தது.   “உனக்கு எதுவுமே  தெரியாதா டா” என கேட்டுக்கொண்டே அவனை இறுக்கி அணைத்தாள். அவள் அணைப்பை முழுமையாக உணரத் தொடங்கினான். “இதுதான் லவ் பண்ற விதமா?” என்று அவளிடம் கேட்டான். அவள் எதுவும் பேசாமல் மேலும் இறுக்கினாள்.   அந்தநேரம் எங்கிருந்தோ வந்து அவன் மனதில் குந்தவை  சப்பனமிட்டு அமர்ந்தாள்.  “இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்” என அவன் காதைப் பிடித்து திருகினாள். அவள் நினைவுகளை பிய்த்தெறிந்துவிட்டு மறுபடியும் இவளிடம் கட்டுண்டுகிடந்தான்.    கரடு முரடான பாதைகளில்  இவள் அவனை வழி நடத்திக் கொண்டிருந்தாள். அவன் முன்னேறிச் செல்ல வேண்டிய கட்டம் வந்தது.  சடுதியில் எல்லாம் மாறிப் போனது. முனகல் சப்தங்கள் மோதிச் சிதறின. உணர்வுகளுக்கு இறக்கை முளைத்து உயர உயர  பறக்கத் தொடங்கின. பறத்தல் எல்லையற்று விரிந்தது. சூன்யம் நோக்கி உந்தித் தள்ளியது. அதற்குமேலும்  பறக்க சக்தி இல்லையென உணர்ந்து அவை சரிந்தபோது அவன் பிதற்றத் தொடங்கினான் .  “ இப்பயாவது திருப்தியா உணர்ந்தயா குந்தவை?”. அவன் அப்படிக்கேட்டதும் அவளுக்கு சுருக்கென்று இருந்தது.  மூச்சு வாங்கியபடி அவள் மீதே அவன்  துவண்டு கிடந்தான். “இது என்ன கேள்வி?” என்று அவன் கண்களை ஊடுருவியபடியே கேட்டாள். அவன் அமைதியாக இருந்தான். ஒரு புழுவைப்போல சங்கடம் அங்கே நெளிந்து கொண்டிருந்தது.   “எப்பவோ விட்டுட்டு போனவள இந்த நேரத்திலுமா  நெனச்சிக்கனும். நீ ஒரு மார்க்கமானவன் தாண்டா” என்று சொல்லிக் கொண்டே அவனை புரட்டிக் கீழே தள்ளி விட்டாள்.  எழுந்து கழிவறை நோக்கி நடந்து சென்றாள்.

 இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஒருவித குழப்பநிலையை உணர முடிகிறது குந்தவை. உண்மையில் நான் அவளிடம் உன்னைத்தான் தேடியிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. என்னை மறந்த நிலையில்  அப்படிக் கேட்டிருக்க கூடாதோ என்ற கஷ்டமும் வெகுநாட்களுக்கு இருந்தது. அதைத் தொடர்ந்தே அவள் என்னிடமிருந்து விலகத்தொடங்கினாள். அதன் பிறகுதான் என்னிடம் அவள் மிகுந்த  மரியாதையுடன்  நடந்துகொண்டாள். இன்றுவரை அந்த மரியாதைக்கான அர்த்தம் எனக்கு புரியாமலேயே இருக்கிறது. அவளிடமும் உன்னையேத் தேடும் எனக்கு அவள் எதற்கு என நானும் அமைதியாக இருந்துவிட்டேன். இப்போது யோசித்தாலும் அக்காட்சிகள் அதே துல்லியத்துடன் மனதில் தைல வண்ண ஓவியம் போல மிதந்தபடி இருக்கிறது. அனைத்து வகையிலும் சூழல் குரூரமாகவும் கேவலமாகவுமே இருந்து வந்திருக்கிறது. எவ்வளவோ கொடூரங்களை நாம் அமைதியாக கடந்து  கொண்டிருக்கிறோம். அவற்றின் வெப்பம் உன்னை தகித்துவிடாதபடி நீ வாழ பழகிக்கொண்டிருக்கிறாய். அதனால் தான் வார இதழில் வந்த என் நேர்காணலை வாசித்துவிட்டு  ஒற்றை வரியில் கடிதம் எழுத முடிந்திருக்கிறது. எவ்வளவு வறண்டு விட்ட மொழியால் நீ என்னை இத்தனை ஆண்டுகள் கழித்து அணுகி இருக்கிறாய் தெரியுமா? கன்னத்தில் அறைந்தது போல இருக்கிறது.
திரும்பவும்  என்னை தொடர்பு கொள்ள எது உன்னை தூண்டியது? நான் எதற்காக அந்த இதழிற்கு நம் ஊரைப் பற்றியும் நம் பால்யத்தைப் பற்றியும்  பேட்டி அளிக்கவேண்டும்.? அதை நீ ஏன் படித்திருக்க வேண்டும்? ஒன்றுக் கொன்று முன் தீர்மானிக்கப்பட்ட நிகழ்வா? எதுவுமே புரியவில்லை. அந்த நேர்காணலை என் மூலமாக  நீதான் அளித்திருக்கிறாயோ என எண்ணத் தோன்றுகிறது.  அந்த நேர்காணலின்  ஒவ்வொரு சொற்களும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மெல்ல  மேலெழுந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு தெளிவாக நான் உரையாடி இருக்கிறேன் என நினைக்கும்போது சிலிர்ப்பாக இருக்கிறது. நேர்காணலில் வேண்டுமென்றேதான் உன்னை சொல்லாமல் தவிர்த்தேன். அதை உன்னால் உணர முடிந்ததா? இப்போதும் அந்த வலி இருக்கவே செய்கிறது.   உன் மடியில் என்னை சாய்த்துக்கொண்டு குனிந்து என் காதில் அந்த நேர்காணலை நீ வாசித்துக் காட்டுவதுபோன்ற சித்திரம் மனதில் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டிருக்கிறது குந்தவை.  அதைப்பற்றி யோசிக்க  யோசிக்க அடி மனதில் தேங்கிக் கிடப்பதெல்லாம் பீரிட்டுக்கிளம்புகின்றன.   இத்தனை காலமும், என் மனதின் அடி ஆழத்தில் அப்படியே தான் இருந்திருக்கிறாய் ; அதே அடர்த்தியில் மஞ்சள் பூசி, நீல நிறச் சேலையில் அதே சிரிப்புடன் இத்தனை ஆண்டுகளும் இருந்திருக்கிறாய்.  படுபாவி. ஒரே ஒரு வினாடி யோசித்திருக்கலாம் இல்லையா நீ ; என்னை மறுபடியும் உனக்குள்  மீட்டுருவாக்கம் செய்யலாமா வேண்டாமா என்று? ஏன் தான்  அவசரப்பட்டாயோ? .உன் கணவரின் இறப்பு மீண்டும் என்னை உன்னுள் துளிர்க்கச் செய்திருக்கிறதா?

கணவரை இழந்த பிறகு தான் என்  நினைவு  வந்ததா என்று எழுதியதற்காக மன்னித்துவிடு குந்தவை. நீ துயரத்தில் இருக்கும் போது அப்படி கேட்டிருக்கக் கூடாது தான். அவர் இறந்துபோன தகவல் முதன் முதலில் அக்கா மூலமாக  தான் எனக்கு தெரியவந்தது. அப்போது நான் பணி நிமித்தமாக தென் அமெரிக்காவில் இருந்தேன். அன்று முழுக்க மனம் கலவரத்தால் நிரம்பி இருந்தது. நானே மரணம் அடைந்து விட்டதுபோல உணர்ந்தேன். இரண்டொரு தடவைதான் அவரை பார்த்திருக்கிறேன். என்றாலும் அவரின் முகம் அப்படியே மனதில் தங்கிவிட்டது. அவர் மரணம் உன்னை உடைந்து போகத்தானே செய்திருக்கும்? இவற்றையெல்லாம் பொய்யாக்குவதுபோல செல்வம் சில சங்கதிகளை சொன்னான். அவன் சொன்னது இன்னமும் என் மனதில் முள்ளாக உறுத்திக்  கொண்டிருக்கிறது.  உன்னிடம்   எப்படி  கேட்பது என்று புரியாமல்தான் இக்கடிதம் எங்கெங்கோ சுற்றிவருகிறது என்பதை உணர முடிகிறது. சட்டென்று உன்னைக் கை நீட்டி கேட்டுவிடக்கூடிய கேள்வியில்லை குந்தவை அது. பொங்கலுக்கு வழக்கம்போல குடும்பத்துடன் செல்வம் ஊருக்கு வந்திருந்தான். எப்போதும்போல  திருவண்ணாமலை சாலையில் ஒதுக்குபுறமாக இருக்கும் அந்த வழித்தட உணவகத்தில் தான் பொங்கல் நாட்களை கழித்தோம்.  காலை பதினோறு  மணிக்கு சென்று  மாலை ஏழு மணி வாக்கில்தான் திரும்பினோம். அதுவரை மதுவின் தள்ளாட்டதோடு ஊர்கதைகளை பேசிக்கொண்டே இருந்தோம். அந்தநாள்  எவ்வளவு குதூகலமாக தொடங்கியது தெரியுமா குந்தா? நினைக்கவே சிலிர்ப்பாக இருக்கிறது.

அன்று உணவகத்தை அடைந்த போது மணி பதினொன்றாகி இருந்தது. கட்டடத்தின் மேல் தகரக் கூரை வேயப்பட்டிருந்தது.  கிழக்கு பக்கமாக வளர்ந்திருந்த வேப்பமரத்தின் நிழல் கூரை முழுக்க பரவியிருந்தது.  உள்ளே  இருக்கையில் அமர்ந்து சிலர் மதுவருந்திக் கொண்டிருந்தனர்.  மேசை மீது திண்பண்டங்கள் இறைந்து கிடந்தன. பார்க்கவே அருவருப்பாக இருந்தது. இவர்கள் நேராக பின்பக்கம் சென்றனர். வழக்கமாக அங்கேதான் செல்வர்.  இவர்களை கவனித்த  பணியாளர் ஒருவர் வேப்ப மரத்தின் கீழே இருக்கைகளை தயார் படுத்தத் தொடங்கினார். வேப்ப மரத்தின் வடதிசையில் பாழடைந்த கிணறு புதர் மண்டிக்கிடந்தது. ஆறு பேரும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து கொண்டனர். வேம்பின் நிழல் குளுமையாக இருந்தது. பாலு உட்கார்ந்ததுமே புகைக்கத் தொடங்கி விட்டார். விரல் இடுக்கில் அவருக்கு சிகரெட் கனிந்து கொண்டேயிருக்க வேண்டும்.  வந்தவர்களில் வயதானவர் அவரே.  “சட்டுபுட்னு சரக்குக்கு சொல்லி விடுங்கப்பா” என்று ஆனந்தன் செல்வனின் முதுகைத் தட்டி  அவசரப்படுத்தினான். வேக வேகமாக குடித்துவிட்டு போதை தலைக்கேறி சரிந்துவிட வேண்டும் அவனுக்கு. அதற்கு செல்வம் தலையாட்டி ஆமோதித்தான். கடைசியாக இருந்தவன்,  “மாஸ்டரை  கூப்பிட்டு  சைடிஷ்கு  ஆர்டர்  கொடுடா ரவி. இப்ப சொன்னாதான் சரக்கு வரவும் இது ரெடியாகவும் சரியாக இருக்கும்”. பணியாளனை வரவழைத்து   உணவு வகைகளை சொல்லி கொண்டுவரச் சொன்னான் ரவி.

ஒரு மணிவாக்கில் ஜமா கலைக்கட்டத் தொடங்கியது. உள்ளே இயங்கிக்கொண்டிருந்த  தொலைக்காட்சியில்  ‘கத்தாழ கண்ணால..’ எனும் பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பணியாளனை கூப்பிட்டு  “பிரதர் இந்த பாட்டுக்கு மட்டும் கொஞ்சம் சவுண்ட் வைபா” என்று செல்வம் கேட்டுக் கொண்டான். ஒலியளவு கூட்டப்பட்டது. மதுவின் கிரக்கத்தில் அனைவரும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். தள்ளாடிக் கொண்டே செல்வம் எழுந்து  பாட்டிற்கு ஏற்ப  ஆடத் தொடங்கினான்.ஆரம்பத்தில் தள்ளாட்டம் தெரிந்தது. கைகளைத்தட்டி அவனை உற்சாகப்படுத்தினான் ஆனந்தன். மெல்ல ஆட்டத்தின் போக்கில் அவன் தீவிரம் கூடியபோது ஆனந்தனும் அவனுடன் சேர்ந்து கொண்டான்.  ஆனந்தன் ஆட எழுந்ததும் பாலு விசிலடித்து அவனை உற்சாகப் படுத்தினார். மெல்ல ஆட்டத்தின் உக்கிரம் கூடத் தொடங்கியது.  “ரவி நீயும் வாடா” என்று செல்வம் அவன் கைகளை பிடித்து இழுத்தான். இசையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப இருவரும் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். அதுவரை அவன் காவடி ஆடித்தான் பார்த்திருக்கிறார்கள். ஒரு திரைப்பாடலுக்கு நுணுக்கமாக அவன் ஆடிப் பார்ப்பது இதுவே முதல் முறை. பாட்டின் உக்கிரம் கூடி உச்சம் நோக்கிச் சென்று சட்டென முடிந்தது. உடல்தளர்ந்து இருவரும் ஒரே இருக்கையில் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்தனர். பிளாஸ்டிக் இருக்கை உடைந்து நொருங்கியது. இவர்கள் கீழே கிடந்தனர். பணியாளன் ஓடி வந்தான். அவன் எதுவும் கேட்கும் முன்பாகவே  “பிரதர் வொரி பண்ணாத ஒடைஞ்சதுக்கும் சேர்த்து பில் போட்ரு”  என்று சொல்லிக் கொண்டே தள்ளாடியபடி நடந்து இருக்கையில் அமர்ந்தான்.  தொடர்பில்லாமல் அவர்களின் உரையாடல் விரிந்து கொண்டிருந்தது. மது  முற்றிலுமாக அவர்களை தன் கரங்களில் ஏந்திக்  கொண்டிருந்தது.   
                    
 “சும்மா சொல்லக் கூடாது. இப்பதாண்டா  கும்னு  இருக்கா  மாப்ள!” என்று செல்வன் குழறியபடி பேசினான்.  “யார்ரா?” என்றான் ஆனந்தன்.  “நம்ம குந்தானி தான்” என்று செல்வம் சொல்லிவிட்டு எச்சிலைத் துப்பினான்.  குந்தவையைத்தான் அப்படிச் சொல்கிறானென்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. இருந்தும் அனைவரும் அமைதியாக இருந்தனர். மெதுவான குரலில் அவனைப் பார்த்து  “இப்ப எதுக்குடா அவள இழுக்கிற?” என்று ரவி கேட்டான்.  “அவள பத்தி பேசுனா தொரைக்கு  கோபம் வருதோ?” என்று நக்கலாக கேட்டான். இவன் அமைதியாக இருந்தான். மிதமிஞ்சிய மது அவர்களை தீவிரமாக ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. என்ன பேசுகிறோம் என்பதை மறந்திருந்தனர். வசவுகள் பெருகிக் கொண்டே இருந்தபோது செல்வம் பேசினான்.  “போன வாரம் கூட அவள ஒரு கல்யாணத்துல  பாத்தேன் . அம்சமா இருக்கா டா” அவன் பேச்சு ரவியால் சகித்து கொள்ளமுடியாமல் இருந்தது.  “டேய் அவ உன் தங்கச்சி மாதிரிடா” என்றான் இவன்.  “உன்னையே தலைமுழுகிட்டு போயிட்டா. அப்புறம் எனக்கெப்படிடா தங்கச்சியாவா?” என்று கேட்டுவிட்டு, பின் பக்கம் திரும்பி காறித்துப்பினான். சிறிது நேரம் அமைதியாக இருந்தான். மேலும் ஒரு கோப்பையில் மதுவை ஊற்றி நீர் கலந்து எடுத்து வெடுக்கென்று குடித்தான். அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. மறுபடியும் காரித்துப்பினான்.  “தங்கச்சியாம் இல்ல, தேவிடியா. நிக்க வச்சி அவளுதுல அப்படியே கொள்ளிக்கட்டய எடுத்து  சொருவனும் டா” என்று சத்தமாக பேசினான். ரவிக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தோடு எழுந்து சென்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். செல்வம் நிலை குலைந்து கீழே சரிந்தான். அவனுக்கும் கோபம் பீரிட்டுக் கிளம்பியது.  “நல்லா அடிடா.. .. புருஷனை சாகடிச்ச தேவிடியாவுக்காகவா பரிஞ்சிக்கினு வர.  நல்லா அடிடா” என்று பேசிக் கொண்டு அழ ஆரம்பித்தான். அவன் கூறிய  வார்த்தைகள் இவனுக்குள் இடியாக இறங்கிக் கொண்டிருந்தன. நடுமண்டையில் இரும்புத்தடியால் தன்னை யாரோ தாக்கியதைபோல உணர்ந்தான். நடுக்கமாக இருந்தது. அவன் நிமிர்ந்து பாலுவைப் பார்த்தான். அவரும் அமைதியாக இருந்தார். இவனுக்கு மயக்கம் வருவது போல இருக்கவே இருக்கையில் வந்து  உட்கார்ந்தான். சூழலை ஒருவித  இறுக்கம் வியாபித்திருந்தது.

பாலு, பணியாளனை அழைத்து எலுமிச்சை ஜூஸ் கொண்டுவரச் சொன்னார். செல்வனுக்கும் ஆனந்தனுக்கும்  ஜூஸை குடிக்கக் கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு இருவரும் திரும்பவும் படுத்துவிட்டனர். ரவி தூரத்தில் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.  நேரம்  நத்தையைப்போல ஊர்ந்து கொண்டிருந்தது. மணி நான்கைத்  தாண்டியிருந்தது. சூரியன் ஒட்டம்பட்டு மலைக்கும் மேலாக நிலை கொண்டிருந்தது. செல்வனை தட்டி எழுப்பினார் பாலு . அவன் புரண்டு படுத்தான். விடாமல் அவர் எழுப்பிக் கொண்டே இருந்தார். இவன் கண்களைக் கசக்கிக் கொண்டு  எழுந்து அமர்ந்தான்.  “உங்கிட்ட எத்தன தடவடா சொல்றது. அதிகமா குடிக்காதனு” என்று பாலு  அலுத்துக் கொண்டார்.   “ஏன் எதாவது பிரச்சனை ஆயிடுச்சா?” என்றான்.  “பின்ன குந்தவ தான் அவ வீட்டுக்காரன கொன்னுட்டான்னு  சொல்லிட்ட”. என்று பதிலளித்தார். “யார் கிட்ட சொன்னேன்?” என்று விடாமல் கேட்டான். “ரவிகிட்ட தாண்டா” என்று அவர் சொன்னதும் இவனுக்கு சுரீரென்று இருந்தது. பின் தலையில்  கைவைத்துக் கொண்டு பாழடைந்த கிணற்றை வெறித்துப் பார்த்தான். கை அசைத்து பாலுவை அருகில் அழைத்தான்.  “குந்தவைக்கும் அந்த கேபிள் டிவி காரனுக்கும் தொடர்பு. அதாலதான் அவுரு செத்தாருன்றதையும் உளறிட்டனா?” என்று  அவரிடம் மெதுவாகக் கேட்டான்.  “இன்னும் கொஞ்சம் அதிகமா உள்ள இறக்கியிருந்தா. அதுவும் தன்னால  வெளிய வந்திருக்கும்” என்று  நக்கலாகச்  சொன்னார்.
மலைக்குப் பின்புறமாக சூரியன் சரியத் தொடங்கியபோது அவர்கள் எழுந்து நடக்கத் தொடங்கினர். எதுவும் பேசிக்கொள்ளாமல் சிறிது தூரம் நடந்தனர். ஆனந்தின் நடையில் அப்போதும் தள்ளாட்டம் இருந்து கொண்டிருந்தது. பாலு சிகரெட்டை பற்றவைத்து புகைக்கத்தொடங்கினார். செல்வனுக்கு மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. தன்னையே அவன் நொந்து கொண்டான். இனி குடிக்கவே கூடாது என மறுபடியும் தீர்மானித்துக் கொண்டான்.  முன்னால் நடந்து சென்ற ரவியைச் சீண்டி  “என்னை மன்னிச்சிடுடா” என்று  சொன்னான்.  “பரவாயில்ல விடுடா” என்று சொல்லிவிட்டு அவனை உற்றுப் பார்த்துதான். பின் மெதுவான குரலில் அவனிடம் கேட்டான்.  “நீ சொன்னதுலாம் உண்மையா?” அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அமைதியாகவே நடந்து  கொண்டிருந்தான்.  அதற்கு மேல் இவனுக்கும் எதுவும் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை.

இப்போது  நினைத்தாலும் கூட  சங்கடமாக இருக்கிறது குந்தவை. அன்று செல்வம் அப்படிச் சொன்னதும் அவன் மேல் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. உடம்பு எப்படி நடுங்கியது தெரியுமா?. கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தேன். இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடியில்கூட  அன்று நடந்ததை  துல்லியமாக உணர முடிகிறது.  இதுநாள் வரை மனதை கீறிக் கொண்டிருந்த முள்ளை பிடுங்கி எறிந்து விட்டதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. முற்றிலுமாக எறிந்து விட்டேன் என்றும் சொல்வதற்கில்லை. அப்படி செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை.  நெருடல் இருக்கவே செய்கிறது. செல்வமும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படக் கூடியவன் இல்லை என்பது  உனக்கும் தெரியும் தானே?

ஒருபோதும் நீ அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாய் என்று தான் இந்த நிமிடம் வரை என் மனம்  நம்பிக் கொண்டிருக்கிறது. அப்படித்தானே யோசிக்க முடியும் நான்?.   பிரிந்து விட்டதாலேயே நாம் கொண்டிருந்த அன்பு இல்லையென்றாகிவிடுமா என்ன?

                                                                                                                                                                                                                                                                                                                                                                                   எப்போதும் போல உன்           
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        ரவி.