Sunday, January 1, 2012

புனைவுவெளியில் எப்போதும் துடித்தபடி இருக்கும் உதிரிகளின் மொழி

உலக இலக்கியப் பரப்பில் சிறுகதை எழுத்தின் வடிவங்களிலும் உள்ளடக்கத்திலும் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுள் சில வடிவங்கள் மட்டும் நிலைபெற்று கெட்டித்தட்டியும் போய்விட்டது. மேற்கின் அனைத்து இலக்கிய கூறுகளையும் உள்வாங்கி செரித்து தமிழின் கதைமொழி தீவிரத்தோடும் வீச்சோடும் இயங்கும் இந்நிலையில் ஜீ.முருகனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய காண்டாமிருகம் எனும் தொகுப்பை கசாப்புக் கடைக்காரனின் மனநிலையில் அணுகி என் மேதமையை நிலைநாட்டிக்கொள்ள வேண்டிய எந்த தேவையும் இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அதே நேரம் ஒரு எழுத்தாளனின் வேலை எழுதுவதோடு மட்டுமே முடிந்துவிடுகிறது என்பதை நம்பக்கூடியவனாகவும் இருக்கிறேன். ஆகவே ஜீ.முருகனின் எழுத்துக்களை கோட்பாட்டு ரீதியில் வைத்துப் பார்க்காமல் என் ரசனையின் அடிப்படையிலேயே பார்க்கிறேன்.

இன்றைய நிலையில் மதிப்புரை, விமர்சனங்கள் மீதெல்லாம் நான் பெரிதும் நம்பிக்கையற்றவனாக இருக்கிறேன். தொகுப்பில் இருந்து பத்து பதினைந்து கதைகளைக் குறிப்பிட்டு அதில் இருந்து சில வரிகளை உருவிப் போட்டு பின்னப்படும் மதிப்புரைகள், குறிப்பிட்ட அந்த நூலை வாசிக்க எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை என்பதே நாம் கண்கூடாக காணும் உண்மையாக இருக்கிறது.

ஜீ.முருகனின் தேர்ந்தெடுத்த கதைகளை ஒட்டு மொத்தமாக வாசிக்கும் போது அவரின் நுட்பமான படைப்பொழுங்கையும் படைப்பூக்கத்தையும் நின்று அவதானிக்கவும் , புனைவெழுத்துச் சார்ந்த அவரின் தேடலையும் ஆர்வத்தையும் சுலபத்தில் உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. தன் அக நெருக்கடிகள் சார்ந்து எழும் பல கேள்விகளை, தானே உருவாக்கும் புனைவுவெளியில் நிறுத்தி விசாரணையை மேற்கொள்ளும் ஜீ.முருகன் முடிவில் அதற்கான எந்த தீர்வையும் வழங்கி விடாமல் புனைவின் சரடை பட்டென்று அறுத்துக்கொண்டு விடைப்பெற்றுச் செல்கிறார். அநேக கதைகளில் இம்முறை செயற்படுத்தப்படுவதை அனுமானிக்க முடிகிறது. உண்மையில் புனைவின் சரடு அறுபடும் புள்ளியில் இருந்துதான் வாசகன் இயங்க வேண்டிய நுட்பமான பரப்பு விரிவு கொள்ளத் தொடங்குகிறது. வாசகனிடம் படைப்பு சார்ந்த தீவிரத்தை கோரும் புள்ளியாகவும் அவை இருக்கின்றன.

ஜீ.முருகனின் கதைகள் முழுக்க பல்வேறுபட்ட உதிரிகள் நடமாடும் களமாக இருக்கின்றன. பல பெண் கதாபாத்திரங்கள் உதிரிகளாகவே தொகுப்பு முழுக்கவும் உலவுகின்றனர். இன்றைய உலக இலக்கிய பரப்பில் உதிரிகளின் வாழ்வனுபவம் சார்ந்த எழுத்துக்களே பெரிதும் சிலாகிக்கப்படும் படைப்புகளாக இருக்கின்றன. உதிரிகள் சார்ந்து நம் மனம் படைப்பூக்க எழுச்சி கொள்ளும்போது, அது சார்ந்த அரசியலையும் பேச வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் தான் நம் நியாயவான்களின் குறுவாள்கள் மெல்ல நடுங்க ஆரம்பிக்கின்றன.

ஒரு நல்லப்பாம்பை தொட்டுணர்வதைப் போன்றது படைப்பாக்கத்தில் காமத்தை எதிர்கொள்வது. சிறிது பிசகினாலும் கூட எதிர்மறையாகப் புரிந்து கொள்ளப்பட்டு விடும். சார்த்தரின் இன்டிமசி கதை வாசகன் மனதில் மஞ்சள் புத்தகத்தை வாசிப்பது போன்ற உணர்வெழுச்சியை ஏற்படுத்துக் கூடிய சாத்தியத்தை கொண்டதாக இருக்கிறது. சார்த்தரை நாம் ஒருபோதும் காமக்கதைகள் எழுதுபவராக சொல்லிவிட முடியாது. போர்னோகிராபி வகை எழுத்து கூட ஒரு வகையில் தீவிர இலக்கியத்தின் வேறொரு பரிமானமே எனும் போக்கு மேற்கில் இன்று நிலை பெறத் தொடங்கிவிட்டது. ஆக காமத்தை எழுதுவதாலேயே ஒருத்தரை நாம் புறந்தள்ளிவிட வேண்டும் என்று எண்ண வேண்டியதில்லை. காமம் புனைவுப்பரப்பில் எவ்வாறு இயங்குகிறது; அது எவ்வித அரசியலைப் பேசுகிறது என்பதே நமக்கு மிக முக்கியமானது. அந்த வகையில் ஜீ.முருகனின் கதைகளில் பின்னப்பட்டிருக்கும் காமத்தின் சரடு நம்முடைய அந்தரங்கத்தின் மீது தொடர்ந்து காறி உமிழ்ந்தபடி இருக்கிறது. உண்மையில் மகோன்த மானவர்களின் அந்தரங்கம், தரையில் விடப்பட்ட மீனைப்போன்று ஜீ.முருகனின் புனைவுப் பரப்பு முழுக்க துடித்துக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளிலும் வடிவ நேர்த்தியை துல்லியமாக காண முடிகிறது. முதல் பிரதியை எழுதும் போதே ஜீ.முருகன் இதே துள்ளியத்துடன் தான் எழுதுகிறாரோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு. அந்தளவிற்கு கச்சிதமான உரையாடல்கள் மற்றும் விவரணைகள். ஆனால் நான், முதல் பிரதியை முழுமை செய்யும்வரை எடிட்டிங் குறித்து யோசிப்பதே இல்லை. என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் பிரதியில் பரப்பி வைத்துவிட வேண்டியது. அதன் பிறகான நிகழ்வாகவே நான் எடிட்டிங்கைப் பார்க்கிறேன். எடிட்டிங் மட்டுமே நுட்பமான படைப்பை தந்துவிடாது என்பது ஜீ.முருகனுக்கும் தெரிந்தே இருக்கும். படைப்பாக்கத்தின் உடன்நிகழ்வாக ஏற்படும் எடிட்டிங் குறித்த சிந்தனை கணினிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம். வடிவ ரீதியாக சில கதைகள் முற்றுப்பெற்றிருந்தாலும் கூட அது ஏற்படுத்தக்கூடிய மனவெழுச்சியை தோற்றுவிக்காமல் அப்படியே சரிந்து விடுகின்றன. விருந்தோம்பல் எனும் கதையின் அடித்தளம் மிகவும் அகன்றதாக ஜீ.முருகனால் கட்டமைக்கப்படுகிறது. அப்படித்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் வீச்சோடு சம்பவங்களை அடுக்க முடியும். ஆனால் இந்தக் கதை அதன் உச்சத்தை தொடாமல் அப்படியே நிற்கிறது. பகடி வகை எழுத்தின் முழு பரிமானமும் இந்தக் கதையை மேலும் வளர்த்தெடுப்பதிலேயே அடங்கி இருக்கிறது.

சாயுங்காலம் தொகுப்பை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் தொகுப்பில் உள்ள பிடித்தமான கதைகளின் பட்டியல் மாறிக்கொண்டே இருப்பதை என்னால் தெளிவாக உணரமுடிகிறது. வெகு சாதாரணமான கதை என்று தள்ளிவிட்டதை, இப்போது அழுத்தம் கொடுத்து வாசிக்க வேண்டியிருக்கிறது. காலம் மாற மாற பார்வைகளும் மாறத்தானே செய்யும். உண்மையில் காலம் தான் சாஸ்வதமான நீதிமான். நாம் அனைவரும் பாவனை செய்பவர்கள் மட்டுமே. புனைவில், குறியீடுகளின் பங்கு அலாதியானது. கோட்பாட்டு விமர்சனத்தில் குறியீடுகளுக்கு தனித்த இடம் உண்டு. ஆனால் ஜீ.முருகனின் கதைகளில் கிளைத்துக் கிடக்கும் குறியீடுகளை பாத்திரங்களாகவே கருதுகிறேன். அவை கதையை வேறொரு தளத்திற்கு நகர்த்துகின்றன. வெறுமனே கூடுதலான அர்த்தத்தை மட்டும் அளிக்காமல் குறியீடுகள் அப்புனைவை முழுமையாக பூர்த்தி செய்பவைகளாக இருக்கின்றன. ஆற்றோடு போனவன் கதையில் வரும் அந்த நாற்காலி, மாயக்கிளிகள் கதையில் அலைந்து திரியும் கிளிகள், குளோப் கதையில் வரும் பூமி உருண்டை, காண்டாமிருகம் கதையில் வரும் காண்டாமிருகம் ஆகிய குறியீடுகள் பன்முகப் பரிமாணம் கொண்டவையாகவும் அதிக அழுத்தம் பெற்றவையாகவும் விளங்குகின்றன. மேற்சொன்ன குறியீடுகளில் இருந்தே நாம் கதைக்கான இயங்குதளத்தை விரித்துக்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. வேறு பல கதைகளிலும் இதுபோன்ற குறியீடுகள் காணப்பட்டாலும் கூட அவை அப்படியே அந்தரத்தில் மிதப்பதாகவே தோன்றுகின்றன. நீளம் தாண்டுபவன் ஓடி வந்து கால்களை பூமியில் எந்தளவிற்கு அழுத்தமாக உதைத்து உந்தி மேல்நோக்கி எழுகிறானோ அப்படிப்பட்டதாக குறியீடுகள் கதையில் செயல்பட வேண்டும். தன்னியல்பாக அக்கணத்தில் படைப்பு தானே அடுத்தக் கட்டத்திற்கு தாவிவிட்டிருக்கும். அந்த நிலையில் நமக்குள் திறளும் மனவெழுச்சியை ஒருசில வார்தைகளில் விவரித்து விட முடியாது.

இறுதியாக கதைகள் அர்த்தம் கொடுப்பவையாக இருக்க வேண்டும் என்ற உரையாடல்களின் மென்னியை இறுக்கி நசுக்குபவையாகவே இருக்கின்றன ஜீ.முருகனின் கதைகள். கதைகள் என்பது அனுபவமும் அது சார்ந்த தரிசனமும் தானே. கதைகள் வாசிக்கப்படுகையில் அவை நம்மை சிலிர்ப்படையச் செய்கின்றன; வசீகரிக்கின்றன; ஆற்றுப்படுத்துகின்றன. அதுதான் எழுத்தின் வேலையும் கூட. அந்த வகையில் ஜீ.முருகனின் கதைகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. முன் முடிவுகளோடு அணுகும் எந்தவொரு வாசகனையும் பிரதிகள் தொடர்ந்து நிராகரித்தப்படியே இருக்கின்றன. ஆக எந்த கற்பிதங்களையும் மனதில் கொள்ளாது ஜீ.முருகனின் கதைகளை நாம் அணுகும்போது இதுவரை நமக்கு புலப்படாதிருந்த ஒரு பிரதேசத்தின் கதவு மெல்ல திறக்கத் தொடங்குவதை உணரலாம். அந்த பிரதேசம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது; அதை தாங்கிக் கொண்டிரக்கும் அரசியல் என்ன ; அந்த பிரதேசத்தின் மொழி என்னவாக இருக்கிறது என்பதெல்லாம் வாசித்து யூகிக்க வேண்டிய நுட்பமான விஷயங்கள் என்பதால் அவற்றை வாசகன் இயங்க தேவைப்படும் துவக்கப் புள்ளிகளாக விட்டுவிடுகிறேன். புனைவெழுத்து குறித்தான என் தேடலை தீவிரப்படுத்தியதில் ஜீ.முருகனின் எழுத்துகளுக்கும் இடம் உண்டு என்ற வகையில், காண்டாமிருகம் தொகுப்பை தீவிரமும் ஆக்ரோஷமும் கூடிய அடர்த்தியான தொகுப்பாகவே கருதுகிறேன்.

****************************************************************************
காண்டாமிருகம்.தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.ஜீ.முருகன்.
வெளியீடு: ஆதி பதிப்பகம்,15. மாரியம்மன் கோவில் தெரு,பவித்திரம்,திருவண்ணாமலை-606806. விலை ரூ.120

1 comment:

  1. என்னவளே
    மனசில் என்ன
    பெரிய கொம்பன் என்று
    நினைப்பா உனக்கு? என்கிறாய்

    அடடா
    மூக்குக்கொம்புக்காக
    கொல்லப்பட்டு அழிந்துபோன
    காண்டாமிருகத்தை நினைவூட்டுகிறாயோ?

    ReplyDelete